திங்கள், 15 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி பதினொன்று - தேயிலைத் தோட்டங்கள் - Passenger Ropeway அனுபவம்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஆறு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


“I must drink lots of tea or I cannot work. Tea unleashes the potential which slumbers in the depth of my soul.” Leo Tolstoy.


******


பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  


பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்


பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்


பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்


பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


பகுதி ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்


பகுதி எட்டு - டைகர் ஹில் - சூரிய உதயம்


பகுதி ஒன்பது - காலை உணவு - சிவப்பு பாண்டா


பகுதி பத்து - Himalayan Mountaineering Institute


******









Himalayan Mountaineering Institute  சென்றபோது கிடைத்த அனுபவங்களை சென்ற பகுதியில் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  அந்த இடத்திலிருந்து புறப்பட்ட நாங்கள் சென்று சேர்ந்த இடம் ஒரு தேயிலைத் தோட்டம்.  சாலையிலிருந்து கீழ் நோக்கி இறங்கிச் சென்றால் தேயிலைத் தோட்டம் முழுவதும் ஒரு உலா வரலாம்.  துளிர்த்து இருக்கும் தேயிலை பார்க்கும் போதே ஒரு வித மகிழ்ச்சி மனதுக்குள் வந்தாலும் இந்த தேயிலை நம்மில் பலரை அடிமையாக்கி வைத்திருக்கிறதே என்ன எண்ணமும் தோன்றாமல் இல்லை.  சிலருக்கு தேநீர் இல்லை என்றால் நாளே தொடங்காது! ஒரு சிலருக்கு காஃபி! தேனீரோ, காஃபியோ ஏதோ ஒன்றிற்கு அடிமையாக மாறிவிட்டோம்.  தேயிலைத் தோட்டத்தின் வெளியேயும் இங்கே கிடைக்கும் தேயிலை பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.  கொஞ்சம் விலை அதிகம் தான்.  அதிலும் பல வித வகைகளில் தேயிலைத் தூளும், இலைகளும் கிடைக்கின்றன.  ஒரு சில வகைகளின் விலை கிலோ மூவாயிரம் என்றெல்லாம் கூட இருக்கிறது.  எங்கள் குழுவில் இருந்த சிலர் இங்கேயும் தேயிலை வாங்கிக் கொண்டார்கள்.  நான் அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இது தவிர தேயிலை எப்படி பதப்படுத்தப்படுகிறது என்பதையும் உங்களால் பார்த்து ரசிக்க முடியும். 



இந்தப் பகுதியில் இன்னுமொரு வசதியும் இருக்கிறது.  அந்த வசதி - Passenger Ropeway என்பது!  ஆதி காலத்தில் மலைப்பிரதேசத்தில் ஒரு தேயிலைத் தோட்டத்திற்கும் அடுத்த தோட்டத்திற்கு இடையே செல்வதற்கு சாலை வழி சென்றால் நீண்ட நேரம் ஆகும் என்பதால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு போக்குவரத்து வசதி தான் இந்த Passenger Ropeway . என்னதான் சரிவுகளில் மட்டுமே தேயிலைத் தோட்டங்கள் இருக்கும் என்றாலும் சில சமயங்களில் அவற்றின் இடையே நடந்து செல்வது கொஞ்சம் கடினமான வேலை தான். மலையேற்றம், இறக்கம் என தொடர்ந்து செய்தால் கடினமாகவே இருக்கும் அல்லவா? அதனால் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த வசதி.  ஆனால் பின்னர் சுற்றுலா பயணிகள் ஒரு பறவையின் பார்வையில், பசுமையான தேயிலைத் தோட்டங்களையும், காடுகளின் குறுக்கே ஓடும் ரங்கீத் மற்றும் ரம்மன் ஆறுகளையும், சிற்றருவிகளையும் பார்த்து ரசிக்கலாம்.  ஒரு பறவையின் பார்வையில் இது போன்ற இயற்கை எழிலை ரசிப்பதற்கு நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  



ஹிந்தியில் “உடன் கட்டோலா” என்று அழைக்கப்படும் இந்த வசதி 1968-ஆம் ஆண்டு டார்ஜிலிங் நகரில் தொடங்கப்பட்டது.  முதலில் ஒரே ஒரு பெட்டியுடன் துவங்கப்பட்டாலும் பின்னர் 16 பெட்டிகள் கொண்டு இயங்கத் தொடங்கியது.  தற்போது 12 பெட்டிகள் மட்டுமே இயங்குகின்றன.  இதில் ஒரு சிக்கலும் உண்டு.  குறைவான பெட்டிகள், அதிக அளவில் வரும் சுற்றுலாப் பயணிகள் என இருப்பதால் இந்த வசதியைப் பயன்படுத்த நீண்ட ஒரு வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.  காலை நேரத்திலேயே இங்கே சென்று விட்டால் சற்று சுலபம்.  அதாவது காலை 10 மணிக்கு இந்த வண்டிகள் இயங்கத் தொடங்கும்போதே சென்றுவிட்டால் நல்லது. மாலை நான்கு மணி வரை தான் இந்த வசதி உண்டு என்பதால் காலை நேரத்திலேயே சென்று விடுவது நல்லது.  மொத்தம் ஐந்து கிலோ மீட்டர் இந்த வாகனத்தில் பயணிக்க முடியும்.  மேலிருந்து கீழே சென்று மீண்டும் அங்கேயிருந்து உங்களை மேலே அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள்.  மொத்தம் 45 நிமிடங்கள் இந்த பயணத்திற்கு ஆகும்.  கட்டணம் பெரியவர்களுக்கு 200 ரூபாய், சிறுவர்களுக்கு 100 ரூபாய்.  


சென்று வருவது மிகச் சிறப்பான ஒரு அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.  டார்ஜிலிங் சென்றால் நிச்சயம் இந்த Passenger Ropeway வசதியை பயன்படுத்தி இயற்கை எழிலை பறவைப்பார்வையில் பார்த்து ரசிக்க வாழ்த்துகள்.  இந்த இடங்களில் எல்லாம் சுற்றி வந்த பிறகு நாங்கள் மீண்டும் எங்கள் வாகனங்களில் புறப்பட்டு எங்கள் தங்குமிடமாக இருந்த Ghum வரையான எட்டு கிலோ மீட்டர் தொலைவினை வாகனங்களில் கடந்தோம்.  மதிய உணவு எங்களுக்காக காத்திருக்கும் என்பதால் இந்தப் பயணம். உணவுக்குப் பிறகு மீண்டும் டார்ஜிலிங் வர வேண்டும்!  எங்கள் பயண ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட விஷால் அவர்களிடம் இந்த மாதிரி ஒவ்வொரு முறையும் பயணித்தால் நிறைய நேரம் விரயம் ஆகிறது என்று சொல்ல, டார்ஜிலிங் பகுதியில் நல்ல உணவு கிடைக்காது பரவாயில்லையா என்று எங்களிடமே கேள்வி கேட்டார்.  பிறகு அவரிடம் நல்ல உணவுக்காக மீண்டும் மீண்டும் இப்படி பயணிப்பதால் ஒரு பலனும் இல்லை என்று சொன்னதோடு, அடுத்த முறையேனும் இந்த மாதிரி செய்யாமல் இருங்கள் என்று கடிந்து கொண்டோம்.  


Ghum வரை பயணிப்பதில் போக்குவரத்து நெரிசல் வேறு இருந்ததால் வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டார் எங்களது வாகன ஓட்டி . தங்குமிடத்தில் இருந்த உணவகத்தில் விதம் விதமான உணவு வகைகள் இருந்தன.  இரண்டு  ரொட்டியும் மூன்று வித சப்ஜியும் எடுத்துக் கொண்டு, குடிப்பதற்கு லஸ்ஸியும் கிடைக்க எனது மதிய உணவு சிறப்பாக முடிந்தது. சற்றே ஓய்வுக்குப் பிறகு மீண்டும் டார்ஜிலிங் நோக்கிய பயணம் தொடங்கியது. எதற்காக இந்தப் பயணம், அங்கே மீண்டும் சென்று என்ன அனுபவங்களை பெற்றோம், என்ன இடங்கள் பார்த்தோம் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.  பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன்.  


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

8 கருத்துகள்:

  1. தொங்கு வண்டிப் பயணம் திகில் கலந்த சுவாரஸ்யமாக இருக்கும்!  நான் மிகச்சிறிய பயணம் அதில் செய்திருக்கிறேன்...  தஞ்சையில் சிவகங்கைப் பூங்காவில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொங்கு வண்டிப்பயணம் - நன்றாகவே இருக்கும் - திகில் கலந்த ஸ்வாரஸ்யம் - உண்மை ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. இலையின் படம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. பயணம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. தொங்கு வண்டிப் பயணம் அருமை சார்.
    நல்ல உணவு கிடைக்காது என்றால், காலையிலேயே உணவை பேக் செய்து கொண்டு வந்திருக்கலாம்.
    எங்களை டுபாய் அழைத்துச் சென்ற ஸ்ரிஶக்தி டிராவெல்ஸ் அதைத்தான் செய்ததால் பலரின் வயிருகள் கெடாமல் பயணம் இனித்தது.
    நான் காப்பிக்கும் காம்பிளேனுக்கும் அடிமையானதால் உடம்பு சிறு வயதிலேயே மிகவும் பெருத்துவிட்டது.
    அதை வெகு காலம் களித்தே உணர்ந்து சரி செய்ய முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொங்குவண்டி பயணம் ஸ்வாரஸ்யமானது அரவிந்த். உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....