செவ்வாய், 2 மே, 2023

தலைநகர் நோக்கி ஒரு பயணம் - சில அனுபவங்கள் - முதல் விமானப் பயணம் - பகுதி ஒன்று - ஆதி வெங்கட்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட மதிய உணவும் MONASTERY அனுபவமும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“DON'T SETTLE FOR AVERAGE. BRING YOUR BEST TO THE MOMENT. THEN, WHETHER IT FAILS OR SUCCEEDS, AT LEAST YOU KNOW YOU GAVE ALL YOU HAD.” - ANGELA BASSETT.

 

******



 

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! ஏப்ரல் எட்டாம் தேதி பயணத்துடன் துவங்கியது! ஆம்!  'தல'யுடன் தலைநகரை நோக்கி பயணித்தோம். மகளின் பொதுத்தேர்வுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் அடுத்த கட்டத்துக்கு அவள் செல்வதற்குள் சில நாட்கள் தலைநகர வாசம்! பதினோரு வருடங்களுக்கு முன் அவருடன் திருவரங்கத்துக்கு வந்தோம்! மீண்டும் இப்போது தான் மூவரும் சேர்ந்து தலைநகருக்கு பயணிக்கிறோம்! 

 

******

 

பல்லவன் ரயிலுக்காக திருவரங்கம் இரயில் நிலையத்தில் காத்திருந்த போது…

 

“அந்தப் பையில பார்த்தியா?? எங்க தான் வெச்ச??

 

நேத்து கூட பார்த்தேனே! 100 ரூ இருந்தது!

 

என்னமோ போ! ஒண்ணும் நன்னா இல்ல!”

 

நடைமேடையில் ஒரு தாத்தா பாட்டியிடம் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்! அவர்கள் எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள்!

 

நம்ம திருவரங்கத்தில் வெளி ஆண்டாள் சன்னிதி அருகே  தள்ளு வண்டியில் பஜ்ஜி போட்டு விற்கும் மாமி ரயிலுக்கு காத்துக் கொண்டிருக்கையில் புன்னகையுடன் 'ஹாய்' சொல்லி விட்டுச் சென்றார்.

 

பாவம்! அடுப்பு சூட்டுல தினமும் தான்  வெந்து போறா! இன்னைக்காவது சந்தோஷமா வெளிய போயிட்டு வரட்டுமே! என நினைத்துக் கொண்டேன்.

 

இந்தப் பக்கமா வெயிலா இருக்கு! அந்தப் பக்கமா வேணா போய் நிற்போமா? என என்னவரிடம்  சொல்ல நிழலாக என்னை மறைத்துக் கொண்டிருந்தார்.. 

 

“உனக்கென்னமா? கேட்டா  உங்க ஊரே (கோவை) ஃப்ரிட்ஜ் மாதிரி இருக்கும்னு சொல்லுவ!! உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்னு கேட்ப!!” என்று மகள் என்னை கலாய்த்துக் கொண்டிருந்தாள்..

 

******

 

இரயில் சிநேகமும் எங்கள் சம்பாஷணைகளும்….

 

இந்த வயசானவங்க எல்லாம் சட்டுனு பக்கத்துல இருக்கிறவங்களோட பேசி எல்லாத்தையும் சொல்லிக்கிறாங்க இல்ல! நாம கூட வயசானா அப்படித்தான் இருப்போமோ??

 

அதுல என்ன சந்தேகம்! யாராவது பேசக் கெடச்சா 'இவளோட ரோதனையா போச்சு'ன்னு கொற சொல்லிண்டு இருப்பீங்களோ என்னமோ...

 

நீயும் தான் அப்படி சொல்லலாம்..

 

******

 

முதல் விமானப் பயணம்:


 

எவ்வளவு வருடங்களாக நிறைய யோசித்து, நிறைய பயந்து, நிறைய நிறைய சந்தேகங்களை எழுப்பி, எல்லோரையும் கேள்விக்கணைகளால் குடைந்து, 8 ஏப்ரல் 2023 அன்று எனது முதல் விமானப் பயணம் சாத்தியமானது… அது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது!  எத்தனையோ முறை என்னவர் என்னை அழைத்த போதும் என் டேஷ் பிரச்சினையை மனதில் கொண்டு வர மறுத்திருக்கிறேன். சென்ற வருடம் ஹைதராபாத்தில் நடந்த wings expo படங்களை என் கடைக்குட்டி மாமா அனுப்பிய போது ஏற்பட்ட ஈடுபாடு தான் என்னை இன்று பறக்க வைத்திருக்கிறது என்று சொல்லலாம்! கூடிய சீக்கிரம் விமானத்தில் பயணம் செய்து செல்ஃபி எடுத்து அனுப்புகிறேன் என்று மாமாவிடம் சொல்லியிருந்தேன்!

 

அன்று முதல் விமானத்தில் முதல்முறையாக பயணம் செய்தவர்களின் அனுபவங்களை சேகரிக்கத் துவங்கினேன். இதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு என்னை நானே உற்சாகப்படுத்திக் கொண்டேன். டேஷ் பிரச்சினையால் முதன்முறையாக பயணிக்கப் போகும்  எனக்கும் மகளுக்கும் எந்த வித இடையூறும் வந்துவிடக்கூடாது என்பதில் முன்னெச்சரிக்கையாக  இருந்து கொண்டேன்.. சென்னையில் எங்கள்  நட்பு வட்டத்தில் உள்ள தோழியும் அவரது கணவரும் எங்கள் மூவருக்கும் எலுமிச்சை சாதம், தயிர்சாதம், உருளைக்கிழங்கு கறி, தட்டுகள், ஸ்பூன்கள் என்று எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சென்றார்! பிரதமரின் வருகையால் அவர்களால் எங்களுடன் உடனிருக்க இயலவில்லை!

 

காலையில் திருவரங்க ரயில் நிலையத்தில் வாங்கி உண்ட  இட்லிகளுடன் இன்றைய பொழுது உணவை முடித்துக் கொள்ளலாம் என்று தான் இருந்தேன்...  மதியம் தோழி கொடுத்த உணவில் அவர்கள் இருவரும் சாப்பிட நான் உண்டது மூன்று ஸ்பூன் தயிர்சாதமும், இரண்டு துண்டு உருளைக்கிழங்கு கறியும்.. அவ்வளவு ஜாக்கிரதை... தலைவலி உட்பட எந்தவிதத்திலும் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்று மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன்.. இனியென்ன! விமானத்தில் பறக்க வேண்டியது தான். பதிவு நீண்டு விட்ட காரணத்தால் அதன் பின்பான அனுபவங்களை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

14 கருத்துகள்:

  1. நான் இதுவரை ஒரே ஒருமுறை விமான பயணம் செய்துள்ளேன். உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யம். கவலை : அந்த வயதான தம்பதிக்கு காணாமல் போன அந்த நூறு ரூபாய் கிடைத்ததா இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலை...... பணம் கிடைத்திருக்கும் என்றே தோன்றுகிறது. காரணம் சிறிது நேரத்திற்குப் பிறகு தேடுவதை விட்டுவிட்டார்கள்......

      தங்கள் அன்பிற்கு நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. உங்களது முதல் பயண அனுபவத்தை தெரிந்து கொள்ள ஆவல்.

    பிரதமர், முதல்வர் வருகையால் சாதாரண மக்களின் வாழ்வில் எவ்வளவு பிரச்சனை இதை அரசு உணர்வதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பிற்கு நன்றி கில்லர்ஜி. சில பிரச்சனைகள் தவிர்க்க முடியாதவை.

      நீக்கு
  3. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். மகளுக்கு நல்ல மேற்படிப்பு அமையட்டும்.

    89ல் 24 மணி நேர டைம் என்று தெரியாமல், அதிகாலை விமானத்தில் முதன்முறை துபாய் செல்லும் நண்பனுடன் நாங்கள் சென்னை விமானநிலையம் மதியம் சென்றதும், பிறகு அவனுக்கு மறுநாள் விமானத்திற்கு நேரம் மாற்றிக்கொடுத்ததும் நினைவுக்கு வருது.

    2018க்குப் பிறகு விமானத்தில் செல்லவில்லை, விருப்பமும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  4. பத்து வருடங்களுக்குமுன் வாழ்ந்த இடம், சென்ற கடைகள், படித்த பள்ளி...மாறுதல்கள் . உணர்ச்சிகரமான பயணமாக உங்கள் வீட்டாருக்கு இருக்கும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. நிர்மலா ரெங்கராஜன்2 மே, 2023 அன்று 2:11 PM

    சுவாரஸ்யமாக உள்ளது.
    பதிவு நீண்டு விட்டது என்று நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது😄

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா2 மே, 2023 அன்று 3:47 PM

    இன்னும் தொடரட்டும் விமானம் அனுபவம்!)))

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா2 மே, 2023 அன்று 3:51 PM

    பேசாமல் இருப்பதே சிறப்பு விமானம் பயணத்தில் தூங்குவது பயணத்தில் மட்டுமே!)தொடருங்கள் பயண அனுபவத்தை.

    பதிலளிநீக்கு
  8. இன்னும் தொடரட்டும் விமானம் அனுபவம்!)))

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முதல் விமான பயணம் என்றால் கொஞ்சம் படபடப்பாகத்தான் இருக்கும் என் முதல் விமான பயணம் பெங்களூர் To சென்னை கொஞ்சம் டென்ஷனாக இருந்தது. சகோதரியின் விமான பயண அனுபவத்தை தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....