சனி, 27 மே, 2023

காஃபி வித் கிட்டு - 171 - கௌன் திஷா மே - கப்பலில் பயணிக்கும் வாகனங்கள் - The Silent Shift - ஐஸ்க்ரீம் - கோடைத் தெருக்களில்… - அசட்டு தைரியம் - சந்திப்பு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட MG Marg Gangtok - மார்க்கெட் உலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் ரசித்த பாடல் : கௌன் திஷா மே…


பழைய சினிமா பாடல்களை புதிய பாடகர்கள் பாடுவது காலம் காலமாக நடக்கும் விஷயம் தான்.  சினிமாவில் மட்டுமல்லாது ஆல்பம் என்ற பெயரிலும் இப்படியான பழைய பாடல்களை புதிய பாடகர்கள் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.  புதியதாக பாடும்போது, பழைய கால இசைக்கருவிகள் இல்லாமல் கணினி மூலம் இசை கோர்க்கப்படும் போது இன்னும் சிறப்பாக இருப்பது போல தோன்றும் எனக்கு.  சமீபத்தில் ஒரு பழைய ஹிந்தி பாடலை புதிய பாடகி பாடுவதைக் கேட்டேன்.  1982-ஆம் வருடம் வெளி வந்த “நதியா கே பார்” என்ற படத்தில் இருந்த பாடல், இப்போது ஒரு ஆல்பம் பாடலாக வந்திருக்கிறது.  எனக்கு பிடித்திருந்தது.  நீங்களும் கேட்டுப் பாருங்களேன் - உங்களுக்கும் பிடிக்கலாம். 


 

மேலே உள்ள காணொளி வேலை செய்யாவிடில் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம். 


Kon Disa Mein - Full Song | Ravindra Jain | Varsha Singh Dhanoa | Maddy Sharma | Guru Dhanoa - YouTube

 

******


பழைய நினைப்புடா பேராண்டி : அந்தமானின் அழகு – நீலாம்பூர் – கப்பலில் பயணிக்கும் வாகனங்கள்


2020-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - அந்தமானின் அழகு – நீலாம்பூர் – கப்பலில் பயணிக்கும் வாகனங்கள் - இரயில் பயணம் குறித்த அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


அக்கரையிலிருந்து வந்த மனிதர்களும் வண்டிகளும் இறங்குவதற்குள் இக்கரையிலிருக்கும் மனிதர்களுக்கும் வாகனங்களும் பொறுமை இல்லை.  வேகவேகமாக உள்ளே பயணிக்கிறார்கள் – சிலர் மட்டும் கப்பலுக்குள் மேற்கூரை இருக்கும் பகுதிக்குச் செல்ல மற்றவர்கள் கப்பலின் ஓரங்களில் நின்று கொள்ள வேண்டும். நடுவே கொஞ்சம் கொஞ்சமாக வாகனங்கள் ஏறுகின்றன – வாகனங்களில் வந்த பயணிகளும் இறங்கி கப்பலின் ஓரங்களில் தான் நிற்க வேண்டும்! எரிபொருள் கொண்டு வரும் லாரியைக் கூட இந்தக் கப்பலில் ஏற்றி விடுகிறார்கள் என்றால், எத்தனை எடையைத் தாங்கும் கப்பலாக இருக்க வேண்டும் என்பது உங்களுக்குப் புரியும். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அனைவரும் கப்பலுக்குள் ஏறிக் கொண்டு, வாகனங்களும் மேலே ஏற்றிக் கொண்ட பிறகு, இரும்புப் பாலம் மீண்டும் தூக்கப் படுகிறது.  பார்க்கும்போது, சக்கரங்களைச் சுழற்றி மிகச் சுலபமாக தூக்கிவிடுவது போலத் தெரிந்தாலும் அந்தச் சக்கரங்களைச் சுழற்றுவது அப்படி ஒன்றும் எளிதல்ல!


டீசல் மூலம் இயக்கப்படும் இந்தக் கப்பலில் செல்லும்போது ஏதோ மிதந்து கொண்டு இருக்கும் உணர்வு தான் நமக்கு. பயணிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் இருப்பது போல இருந்தாலும், நாமும் கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கூடவே வாகனங்களும்.  இப்படிப் பயணிக்கும் நமக்கும் வாகனத்திற்குமான கட்டணம் வசூலிக்க நம் பேருந்து நடத்துனர் போலவே ஒருவர் கைப்பையுடனும் பயணச் சீட்டுடனும் கப்பலில் இருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே புகுந்து புறப்பட்டு வருகிறார்! அவரிடம் பயணச் சீட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் – முன்னரே வாகன ஓட்டுனர் மார்ஷல் எங்களிடம் பயணச் சீட்டு கேட்கும்போது – மார்ஷல் உடன்  வந்திருக்கிறோம் என்று சொல்லச் சொன்னார்.  கட்டணம் ஒன்றும் அதிகமில்லை ஜெண்டில்மேன் – ஒருவருக்கு பத்து ரூபாய் மட்டும்!  கேரளாவின் காலடி அருகே இப்படி ஒரு படகுப் பயணத்தில் ஒரு ரூபாய் கொடுத்தது இன்னமும் நினைவில்.  இங்கே பத்து ரூபாய்.  வாகனங்களுக்கு சற்று அதிகம்.  முப்பது ரூபாய்/ஐம்பது ரூபாய் என வாகனத்திற்குத் தகுந்த மாதிரி கட்டணம்.


முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!


******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : The Silent Shift 


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக நாம் பார்க்க இருப்பது SHELL COMPANY விளம்பரம் ஒன்று. நீங்களும் பார்த்து ரசிக்கலாமே! 


 

மேலே உள்ள சுட்டி வழி பார்க்க இயலவில்லை என்றால், கீழே கொடுத்திருக்கும் YOUTUBE சுட்டி வழி நேரடியாக பார்க்கலாம்! 


The Silent Shift - YouTube

 

******


இந்த நாளின் தகவல் - உலகின் விலை உயர்ந்த ஐஸ்க்ரீம்... :  



சமீபத்தில் படித்த ஒரு தகவல் - ஜப்பானில் விற்கப்படும் ஐஸ்க்ரீம் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படும் ஐஸ்க்ரீம் ஆம்! ஒரு Serving ஐஸ்க்ரீம் ஐந்து லட்ச ரூபாயாம்! அப்படி என்ன அதில் ஸ்பெஷல்? தகவல் தெரிந்து கொள்ள ஆசையாக இருந்தால் கீழே உள்ள சுட்டி வழி படித்துப் பாருங்களேன்! 


Japanese Brand Sells World's Most Expensive Ice Cream, Costs Over Rs 5 Lakh Per Serving (msn.com)

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த கவிதை - கோடைத் தெருக்களில்… : 


எத்தனை பேருக்கு சிறு வயதில் வாங்கித் தின்ற 25 பைசா பால் ஐஸ் நினைவில் இருக்கிறது? ஒரு பால் ஐஸ் வாங்க அம்மாவிடம் மன்றாடி, அதை வாங்கிக் கொண்டு வருவதற்குள் உருகிவிடும் என்று டம்ளர் எடுத்துக் கொண்டு ஓடிய அனுபவம் உங்களுக்கு உண்டா? அந்த அனுபவம் உங்களுக்கும் இருந்தால் அனிதா கோகுலகிருஷ்ணன் அவர்கள் சொல்வனம் தளத்தில் எழுதிய கோடைத் தெருக்களில் என்ற கவிதை உங்களுக்கும் பிடிக்கும்.  படித்துப் பாருங்களேன். படிக்க சுட்டி கீழே!


கோடைத் தெருக்களில் – சொல்வனம் | இதழ் 294 |14 மே 2023 (solvanam.com)


*****


இந்த வாரத்தின் சிந்தனைகள் - நெஞ்சு கரிக்குது, சோடா கிடைக்குமா? : 


இரண்டு நாட்களுக்கு முன்னர் எங்கள் வீட்டின் அருகே இருக்கும் Mother Dairy பாலகத்திற்குச் சென்று திரும்பும் போது ஒரு தமிழ் மூதாட்டியைச் சந்தித்தேன்.  வீட்டின் அருகே இருக்கும் தங்குமிடம் ஒன்றில் குழுவாக தங்கி இருக்கிறார்கள் - கோயம்புத்தூரிலிருந்து சுற்றுலா வந்திருக்கிறாராம் அந்த மூதாட்டி.  ஒருவருக்கும் ஹிந்தி தெரியாது! அந்த மூதாட்டி, எதிரே பார்க்கும் அனைவரிடமும் “நெஞ்சு கரிக்குது, சோடா கிடைக்குமா?” என்று தமிழில் கேட்டுக் கொண்டிருந்தார்.  ஒருவருக்கும் அவரது தேவை என்ன என்று புரியவில்லை - தமிழில் கேட்டால் இங்கே உள்ள வட இந்தியர்களுக்கு எப்படி புரியும்?  அவர் அருகே நான் வந்த போது, என்னிடமும் அதே கேள்வி தான்! அவரை பக்கத்தில் இருந்த கடைக்கு அழைத்துக் கொண்டு சென்று, நான் ஹிந்தியில் பேசி அவருக்குத் தேவையான சோடாவை வாங்கிக் கொடுத்தேன். அவர் சொன்ன ஒரு விஷயம் அதிர்ச்சியை உண்டாக்கியது! “இங்கே எல்லாரும் கன்னடத்துல பேசறாங்க, தமிழ் தெரியாது போல!”. 


என்ன எண்ணத்தில் இங்கே வருகிறார்கள், எது வந்தாலும் சமாளித்து விடலாம் என்ற அசட்டு தைரியமா? தமிழ் மட்டுமே வைத்துக் கொண்டு எங்கேயும் சென்று வரலாம் என்ற எண்ணமா? ஆனால் பல முறை இப்படி அசட்டு தைரியத்தில் வந்து திண்டாடிய நபர்களை நான் பார்த்ததுண்டு.  ஒரு முறை காசியில் தன்னிடம் இருந்த பணம், அலைபேசி, உடைமைகள் என எல்லாவற்றையும் தொலைத்து “சேலம் போகணும்” என்று தமிழில் பேசியபடி, கதறி அழுத ஒரு முதியவரை குறித்து அறிந்த போது எந்த தைர்யத்தில் இவர் இப்படி சுற்றிப் பார்க்க வந்தார் என்று மனதில் எண்ணங்கள் தோன்றியது.  பல இடங்களில் இவர் போல மொழி தெரியாதவர்கள், வீடு திரும்ப வழியில்லாமல், தங்களுடைய வாழ்க்கையைத் தொலைத்து அங்கேயே பிச்சை எடுத்துக் கொண்டு திரிந்த கதைகள் உண்டு.  ஆனாலும் இப்படியனாவர்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். சுற்றிப் பார்த்து திரும்புகிறார்கள்.  பிரச்சனைகள் ஏதுமின்றி இவர்களைப் போன்றவர்கள் தமிழகம் திரும்ப வேண்டும் என்று எப்போதுமே மனதில் வேண்டிக்கொள்வேன். 


******

 

இந்த வாரத்தின் சந்திப்பு - முகநூல் நட்புகள் : 



முகநூலில் இருக்கும் மத்யமர் குழுவில் என்னையும் சேர்த்து விட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன.  அவ்வப்போது அதில் சில பதிவுகளை படிப்பதோடு சரி. நான் இதுவரை அங்கே ஒன்றுமே எழுதியது இல்லை.  அந்தக் குழுவில் இருக்கும் சரவணன் என்பவருடன் கடந்த மார்ச் மாதம் சதுரகிரி பயணம் சென்று வந்தேன்.  அவர் மூலமாக திருமதி கமலா கிருஷ்ணமூர்த்தி என்பவருடனும் அறிமுகம் ஆயிற்று.  இந்த வாரம் அவர்கள் இருவரும் ஒரு பெரிய குழுவினருடன் வட இந்திய சுற்றுலா வந்திருக்கிறார்கள்.  தில்லி, ஹரித்வார், ரிஷிகேஷ், ஆக்ரா, மதுரா, குருக்ஷேத்திரா என மொத்தம் ஒன்பது நாட்கள் பயணம். அப்படி வந்திருந்தவர்களை சென்ற திங்கள் அன்று எங்கள் வீட்டின் அருகே இருக்கும் Bபிர்லா மந்திர் நடத்தும் தங்குமிடத்தில் சந்தித்தேன்.  அவர்களை TTD நிர்வாகத்தில் இயங்கும் பெருமாள் கோவிலுக்கும் அழைத்துச் சென்று வந்தேன்.  அவர்களுடன் எடுத்துக் கொண்ட ஒரு நிழற்படம் மேலே! 

 

******

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….

 

14 கருத்துகள்:

  1. நதியா கே பார் படத்தின் இந்தப் பாடலை நான் கேட்டதில்லை.  25 பைசாவா...  பத்து பைசாவுக்கு வாங்கித் தின்ற பால் ஐஸின் சுவையைப் போல் இன்று வரை எங்கும் கண்டதில்லை.  இப்போது கிடைப்பதும் இல்லை!  விளம்பரம் நெகிழ வைத்தது.  மொழி பற்றி கவலைப்படாமல் வந்து மாட்டிக் கொண்டவர்கள் சம்பவங்கள் சோகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. இந்த வாரம் தகவல்கள் அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வாரத்தில் பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய காஃபி வித் கிட்டு பதிவு நன்றாக உள்ளது சிறு வயதில் ருசித்த பால்ஐஸை மறக்க முடியுமா? அதைப்பற்றிய கவிதை நன்றாக உள்ளது. பழைய பதிவையும் படித்தேன். விளம்பரம் நெகிழ்ச்சியாக இருந்தது. மொழி தெரியாமல் மாநிலம் விட்டு வந்து ஒரு இடத்தில் அவதி பெறுகிறவர்களின் நிலை மனதை கலங்கச் செய்கிறது. தங்கள் முகநூல் நட்புகளின் சந்திப்புக்கு மகிழ்ச்சி. வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  4. ஹிந்திப் பாடல் கேட்டதில்லை ஜி. இப்போதுதான் முதல் முறையாகக் கேட்கிறேன். இவ்வளவுதானா இசைக்கருவிகள்!? இப்படி இசை அமரிக்கையாக இருக்கும் பாடல்கள் நன்றாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறைவான இசைக் கருவிகள் கொண்டு பாடல்கள் பாடும்போது நன்றாகவே இருக்கின்றன கீதா ஜி. தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  5. பழைய பதிவு வாசித்த நினைவு ஆனால் கருத்திட்டிருக்கவில்லை இப்போது அங்கு கருத்து இட்டுவிட்டேன் ஜி.

    விளம்பரம் - என்னைப் போன்றவர்களுக்கு ஏற்ற ஒன்று!!!!!! ரொம்பப் பிடித்திருந்தது,

    யம்மாடியோவ்! ஐஸ்க்ரீம் - சாப்பிட முடியாத பொருள் என்றாலும் என்ன அப்படி என்று பார்க்கும் ஆவலில் போய்ப்பார்த்தா வாயில் நுழையாத பெயர்கள்! ஐஸ்க்ரீம் வாயில் நுழைந்தால் போதுமே!

    ஜி 25 பைசா ஐஸ் 10 பைசா ஐஸ் கூடச் சாப்பிட்டிருக்கிறேன். ஹையோ அதற்கு ஈடு இணை என்ன இருக்கு?!!! கோடைத் தெருக்களில் - கவிதை ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தும் குறித்த தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. ஆமாம் மொழி தெரியாமல் இப்படி மாட்டிக்கொண்டு கஷ்டம்தான்....அந்தக் குழு நல்லபடியாக ஊர் திரும்ப வேண்டும். கூட tour operator/guide கூட யாரும் இல்லை போல. //“இங்கே எல்லாரும் கன்னடத்துல பேசறாங்க, தமிழ் தெரியாது போல!”. // ஆ ரொம்பவே அதிர்ச்சி ஹிந்தி மொழி என்பது கூடத் தெரியாமல் கஷ்டம்தான் இல்லையா....எப்படி இப்படி!!?

    இந்த வாரத்தின் சந்திப்பு - முகநூல் நட்புகள் - உலகம் கையளவு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன மொழி இங்கே பேசுகிறார்கள் என்று கூடத் தெரியாமல் இருப்பது அதிர்ச்சி தரும் விஷயமாகவே எனக்கும் பட்டது. தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. இரண்டு காணொளிகளும் அருமை. பாடல் இனிமை.
    முகநூல் நண்பர்கள் சந்திப்பு நன்று.

    பால் ஐஸ் 10 காசு , அப்புறம் 25 காசு . மறக்கவே முடியாது. முக்கோண வடிவில் ரோஸ்கலரில் ரோஸ் மில்க் ஐஸ் முன்பு 15 காசு, அப்புறம் 80ல் 50 காசு எல்லாம் நன்றாக இருக்கும். எத்தனை விதமான ஐஸ்கள் . பள்ளி பருவம் அருமையானது.

    சொல்வன கவிதை அருமை.
    கவிதையில் இடம்பெற்ற சோடா கடைசி பகுதியில் இடபெற்று விட்டதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பால் ஐஸ் நினைவுகள் உங்களுக்கும்..... மகிழ்ச்சி கோமதிம்மா. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....