திங்கள், 22 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி பதினான்கு - சிக்கிம் தங்குமிடம் - Monastery உலா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி பத்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


LIFE IS A JOURNEY WITH PROBLEMS TO SOLVE AND LESSONS TO LEARN BUT MOST OF ALL… EXPERIENCES TO ENJOY. 


******


பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  


பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்


பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்


பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்


பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


பகுதி ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்


பகுதி எட்டு - டைகர் ஹில் - சூரிய உதயம்


பகுதி ஒன்பது - காலை உணவு - சிவப்பு பாண்டா


பகுதி பத்து - Himalayan Mountaineering Institute


பகுதி பதினொன்று - தேயிலைத் தோட்டங்கள் - Passenger Ropeway அனுபவம்


பகுதி பன்னிரண்டு - மலை இரயிலில் ஒரு பயணம்


பகுதி பதிமூன்று - LOVERS MEET VIEWPOINT


******



சிக்கிம் தலைநகரில் நாங்கள் தங்கிய இடம்…


தங்குமிடத்தில் இருந்த சில சிலைகள்…


தங்குமிட வரவேற்புப் பகுதி…


மேற்கு வங்கத்தில் இருக்கும் டார்ஜிலிங் நகரிலிருந்து புறப்பட்டு சிக்கிம் தலைநகர் Gகாங்டாக் வரை வந்து சேர்ந்தது குறித்தும், வழியில் பார்த்த ரங்கீத் மற்றும் தீஸ்தா நதிகளின் சங்கமம் குறித்தும் சென்ற பகுதியில் பார்த்தோம்.  சுமார் 115 கிலோ மீட்டர் தொலைவினை சாலை வழி பயணித்து நாங்கள் சிக்கிம் தலைநகர் வந்ததும் நேராகச் சென்றது எங்களது இந்தப் பயணத்தில் இரண்டாம் தங்குமிடமாக அமைய இருந்த Lemon Tree Hotel தான். நகரின் பிரதான பகுதியான MG Marg என்ற இடத்திலிருந்து 10 நிமிட பயணத்தில் அமைந்திருக்கும் இந்த தங்குமிடம் மிகவும் அழகான சிக்கிம் பாணி கட்டிடமாக அமைத்திருக்கிறார்கள்.  இந்தப் பகுதியில் வரவேற்பு  ஒரே மாதிரி தான் இருக்கிறது.  தங்குமிடத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் மெல்லிய ஒரு வெள்ளை அங்கவஸ்திரம் போன்ற ஒரு துணியை தோளில் மாலை போல போட்டு தான் வரவேற்கிறார்கள்.  ஏற்கனவே டார்ஜிலிங் தங்குமிடத்தில் இதே போன்ற ஒரு வரவேற்பு எங்களுக்கு கிடைத்திருந்தது  என்பதால் இரண்டாம் முறை எங்களுக்கு அது வித்தியாசமாக தெரியவில்லை.  முந்தைய தங்குமிடத்தினை விட இது சற்றே பெரியதும் வசதியானதாகவும் இருந்தது. 


எங்கள் குழுவினர் அனைவருக்கும் சேர்த்து Bulk Booking என்பதால் எங்களுக்கான தங்குமிட வாடகை எவ்வளவு என்பது தெரியாது.  இன்றைய நிலவரப்படி நாள் ஒன்றிற்கு, இரண்டு பேர் தங்கக்கூடிய அறைக்கு  வாடகை, அவர்களது இணைய தளத்தின் தகவல் படி ரூபாய் 7862/- மட்டும்!  அடடா இவ்வளவு அதிகமா என்று மலைக்க வேண்டாம்.  இது குறைக்கப்பட்ட வாடகையாம்! 13500/- ரூபாய் வாடகையிலிருந்து குறைத்திருக்கிறார்களாம்! இந்த ஊரில் தங்குமிட வாடகை கொஞ்சம் அதிகம் தான் என்றாலும், குறைந்த பட்சமாக  நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் என்ற அளவிலும் தங்குமிடங்கள் கிடைக்கின்றன. இது தவிர நீங்கள் மத்திய/மாநில அரசில் பணி புரிபவராக அல்லது மத்திய/மாநில அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவராக இருந்தால் நீங்கள் தங்குவதற்கு மத்திய அரசின் ஒரு சில தங்குமிடங்களும் உண்டு.  அவற்றில் ஒன்று CPWD Holiday Home.  இந்த இடத்திற்கு, இந்த தளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொண்டு தங்கலாம்.  ஆனால் இது மத்திய/மாநில அரசு பணியாளர்களுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்க!  தனியார் தங்குமிடங்களும் நிறையவே உண்டு என்பதால் கவலை இல்லை.  


நாங்கள் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றோம்.  முந்தைய இடத்தில் இருந்த எனது Room Partner வேறு ஒரு நண்பருடன் சென்றுவிட, என்னுடன் தங்கியது ஒரு interesting personality! வாயைத் திறந்தால் மூடாத பேர்வழி.  எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொண்டே இருப்பவர்.  நான் அங்கே தங்கி இருந்த இரண்டு நாட்களில் நான் அவருடன் பேசிய வார்த்தைகள் மிக மிகக் குறைவு! கேட்டது தான் அதிகமாக இருந்தது. இடைவிடாமல் பேசிக்கொண்டே இருக்கிறார்.  பெரிய பெட்டியில் என்னென்னவோ கொண்டு வந்து அவ்வப்போது எதையாவது சாப்பிடுவதும், வீட்டினருக்கு வீடியோ காலில் அழைத்து இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருக்கிறார்.  அதிலும் சில சமயம் அலைபேசியை எடுத்துக் கொண்டு Bathroom வரை சென்றபோது எனக்கு ஒரே அதிர்ச்சி! “அடேய்… வேலையை முடிச்சுட்டு அப்புறம் வீடியோ கால் பண்ணுடா!” என்று சொல்லத் தோன்றியது!  நாங்கள் தங்கிய அறையில் இருந்த attached bathroom - இல் Bathtub இருந்தது! அதை தங்கள் வீட்டினருக்குக் காண்பிக்கவே அங்கே சென்றார் என்று தெரிந்த பின் கொஞ்சம் நிம்மதி! 🙂


எங்கள் உடைமைகளை வைத்து விட்டு எங்களுக்காக காத்திருந்த மதிய உணவினை உண்பதற்காக தங்குமிடத்தில் தரைத் தளத்தில் இருந்த உணவகத்திற்கு சென்றோம்.  நாங்கள் சென்ற அன்று ஏதோ ஒரு நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகளுக்கான சந்திப்பு இருந்தது போலும்! அவர்கள் அனைவரும் உணவகத்திற்கு அதே நேரத்தில் வந்து விட அதிக அளவில் மக்கள் கூட்டம்.  ஒரே நேரத்தில் அத்தனை பேரும் அங்கே அமர்ந்து சாப்பிட வசதியாக இல்லை.  எனக்கான உணவை எடுத்துக் கொண்டு கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டேன். சைவம், அசைவம் என இரண்டுமே அந்த உணவகத்தில் இருந்ததால் பெரும்பாலானோர் அசைவத்தையே நாடினர்.  சைவத்தினை நாடிச் சென்ற என்னைப்போன்ற நபர்கள் மிகவும் குறைவு.  பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டவர்கள் அனைவருமே அசைவத்தினை நாடி, “சர் புர்ரென்று உறிந்தும் கடக் முடக்கென கடித்தும் அதகளம் செய்து கொண்டிருந்தார்கள்.  அவர்கள் அசைவம் சாப்பிடுவதில் எனக்கு பிரச்னை இல்லை என்றாலும் இது போன்ற ஒலிகளை எழுப்பி சாப்பிடுவது - அது சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி மனதுக்கு ஒப்புவது இல்லை! விறுவிறுவென எனது உணவை முடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.  


Monastery நுழைவாயில்…


Monastery...


பளபளக்கும் சிலை ஒன்று…


மதிய உணவிற்குப் பிறகு சற்றே ஓய்வு எடுத்துக் கொண்டு எங்களது அன்றைய தினத்தின் அடுத்த இலக்கு நோக்கி பயணிக்க அனைவரும் தங்குமிடத்தில் நுழைவாயில் அருகே இருக்கும் Lobby பகுதியில் ஒன்று கூடினோம்.  ஒவ்வொருவராக வந்து சேர்ந்த பிறகு சிறு சிறு குழுவாக பிரிந்து ஐந்து வாகனங்களில் பயணித்தோம்.  சிக்கிம் மாநிலத்தில் பல புத்தமத வழிபாட்டுத் தலங்களான Monastery எனும் இடங்கள் உண்டு.   அவற்றில் சில மிகவும் பிரபலமானவை என்றாலும் எல்லா இடங்களுக்கும் ஏதேனும் ஒரு சிறப்பு உண்டு.  சில பிரம்மாண்டமானவை என்றால் சில சிறியதாக இருந்தாலும் சிறப்பானவை.  இங்கே இருக்கும் Monastery-கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்றால் கூட உங்களுக்கு நிறைய நேரம் தேவையாக இருக்கும்.  எங்களிடம் இருந்த குறைந்த நேரத்தில் எங்களால் ஒன்றிரண்டு வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே பார்க்க இயலும். அப்படி ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு தான் நாங்கள் பயணிக்க இருந்தோம்.  அந்த இடம் எது? பல இடங்களின் பெயர்கள் வாயில் நுழைவதில்லை! அதிலும் தமிழில் எழுதுவதென்றால் கடினம் என்பதால் இப்படியான இடங்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே எழுதுகிறேன். 



மற்றுமொரு அழகான சிலை…


அப்பகுதியிலிருந்து மலைகளும் வீடுகளும் - ஒரு காட்சி…


Monastery பகுதியில் சில நண்பர்கள்…


நாங்கள் சென்ற வழிபாட்டுத்தலத்தின் பெயர் Tingkey Gonjang Monastery என்பதாகும்.  Tashi View Point என்ற பிரபலமான சுற்றுலா தலத்தின் அருகே அமைந்திருக்கும் இந்த வழிபாட்டுத்தலம் மேதகு பத்தாம் Tingkey Gonjang Tulku என்பவரால் அமைக்கப்பட்டது.  மேதகு தலாய் லாமா அவர்கள் 1981-ஆம் வருடம் இந்த வழிபாட்டுத் தலத்திற்கு வருகை தந்து இந்த தலத்தினையும் அங்கே உள்ளவர்களையும் ஆசீர்வதித்தார் என்று இங்கே தகவல்கள் இருக்கிறது.  இந்த வழிபாட்டுத்தலத்தில் எட்டாம் நூற்றாண்டில் திபெத் பகுதியில் புத்த மதத்தினை நிறுவிய மூன்று மதகுருமார்களின் சிலைகள் அமைத்திருக்கிறார்கள்.  நாங்கள் சென்ற சமயம் அங்கே ஏதோ பிரார்த்தனை கூட்டம் போன்ற நிகழ்வு நடந்து கொண்டிருந்தது.  பலரும் அமர்ந்து எதோ மந்திரங்களை  உச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.  ஒரே நேரத்தில் அனைவரும் மந்திரங்களை உச்சரித்தது கேட்க மனதுக்கு மிகவும் பிடித்து இருந்தது.  அந்த மந்திரங்கள் தந்த அதிர்வுகள் மனதுக்குள் ஒரு வித அமைதியை உருவாக்கியது என்று சொல்வது மிகையாகாது.  மற்ற நண்பர்கள் அங்கே சில நொடிகள் இருந்த பிறகு வெளியே சென்று விட, நான் அங்கேயே அமர்ந்து அவர்களது மந்திர உச்சாடனம் கேட்டுக்  கொண்டிருந்தேன். 



Bakthang Waterfalls…


மிகவும் அழகான சூழலில் அமைந்து  இருக்கிறது இந்த வழிபாட்டுத் தலம்.   சுற்றிலும் மலைப்பிரதேசம், அங்கே ஒலிக்கும் மந்திர உச்சாடனம், மணியின் ஒலி என அனைத்தும் கேட்கவும், பார்க்கவும் மிகவும் பிடித்திருந்தது.  சில நிமிடங்கள் உள்ளே அமர்ந்து இருந்த பிறகு வெளியே வந்து அங்கே நண்பர்களுடன் சில படங்களை எடுத்துக் கொண்டோம்.  சில நிமிடங்கள் அங்கே இருந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.  அன்றைய தினம் பார்க்க முடிந்த இடம் புத்தமத வழிபாட்டுத் தலம் மட்டுமே! பார்க்க நிறையவே விஷயங்கள் இருந்தாலும் மாலை நேரம் சூரியன் விரைவில் அஸ்தமனம் ஆகிவிடுவதால் எங்கேயும் அழைத்துச் செல்ல முடியாது என்று சொல்லி விட்டார் எங்கள் பயண ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட விஷால்.  அங்கிருந்து புறப்பட்டு வழியில் இருந்த ஒரு அருவி அருகே வாகனங்கள் நின்றன.  தமிழகத்திலும், வேறு மாநிலங்களிலும் பெரிய பெரிய அருவிகளை பார்த்திருந்த எனக்கு, Bakthang Waterfalls என்ற பெயர் கொண்ட அந்த சிறு அருவி அத்தனை ஈர்க்கவில்லை. அந்த இடத்தில் சில நிமிடங்கள் நின்ற பிறகு நாங்கள் நேரடியாகச் சென்ற இடம் எது? அது குறித்த தகவல்கள் என்ன போன்றவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன் நண்பர்களே. 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

18 கருத்துகள்:

  1. கண்கவரும் இடங்களின் அழகிய புகைப்படங்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன.  சுவாரஸ்யமான விவரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஶ்ரீராம். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  2. பெயரில்லா22 மே, 2023 அன்று 5:36 AM

    அறியாத இடம்..படங்களுடன் பகிர்ந்த விதம் புரிந்து இரசிக்க முடிந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நண்பரே. தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  3. பெயரில்லா22 மே, 2023 அன்று 5:57 AM

    புகைப்படங்கள் அழகு. தங்குமிடத்திற்கான கட்டணம் மிக அதிகம். நெல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிழற்படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத்தமிழன். அறை வாடகை அதிகம் தான் - ஸ்டார் ரேட்டிங் பெற்ற தங்குமிடம் என்பதால் அதிகமாக இருக்கும். குறைந்த கட்டணத்தில் கூட அங்கே தங்குமிடங்கள் உண்டு.

      தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  4. தகவல்கள் மிக அருமை சார்.
    உங்கள் புது ரூம் பார்ட்னர் இங்கயும் வந்து பின்னூட்டங்களை அள்ளி வழங்கினால் மகிழ்ச்சியாக இருக்குமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த தங்குமிடத்தில் இருந்த புதிய ரூம் பார்ட்னர் வட இந்தியர் அரவிந்த். அதனால் இங்கே வர வாய்ப்பில்லை. தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. Bakthang Waterfalls பசுமையான மலை மீது வெள்ளை கொசுவலை விரிந்தது போல அழகாய் இருக்கிறது. படங்கள் எல்லாம் அருமை.
    மலைகளும், வீடுகளும் பார்க்க அழகு.

    அங்கே ஒலிக்கும் மந்திர உச்சாடனம், மணியின் ஒலி கேட்க நன்றாக இருக்கும்.
    மன அமைதியை தரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. இது போன்ற இடங்கள் மனதுக்கு மிகவும் உகந்தவை தான். எனக்கும் பிடித்தவை. தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. அழகான படங்கள், வெங்கட்ஜி! சிலைகள், அருவி என்று எல்லாமே அழகு.

    மலையும் வீடுகளும் பார்க்கும் போது இங்கு இருந்துவிடலாமா என்று தோன்றும். அப்படியான இடம் என்று தோன்றுகிறது அதுவும் நீங்கள் விவரித்திருக்கும் Monastery மந்திர உச்சாடனம் அந்த மலையின் அமைதி எல்லாமே மனதைக்கவர்கின்றன.

    அருமையான இடம்.

    உங்களுடன் தங்கிய நபர்!!!!!!

    வாசகம் பொருத்தமாகிப் போனதோ!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  8. புகைப்படங்கள் மிக அழகு! பயணப்பதிவும் இனிமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா.

      நீக்கு
  9. Bakthang Waterfalls ...வாவ் ..அழகான இடங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனு ப்ரேம் ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....