வெள்ளி, 19 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி பதிமூன்று - LOVERS MEET VIEWPOINT


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி எட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


"The road is there, it will always be there. You just have to decide when to take it." - Chris Humphrey. 


******


பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  


பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்


பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்


பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்


பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


பகுதி ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்


பகுதி எட்டு - டைகர் ஹில் - சூரிய உதயம்


பகுதி ஒன்பது - காலை உணவு - சிவப்பு பாண்டா


பகுதி பத்து - Himalayan Mountaineering Institute


பகுதி பதினொன்று - தேயிலைத் தோட்டங்கள் - Passenger Ropeway அனுபவம்


பகுதி பன்னிரண்டு - மலை இரயிலில் ஒரு பயணம்


******


ஹிமாலயன் மலை இரயிலில் பயணித்த அனுபவங்களுடன் தங்குமிடம் திரும்பிய எங்களுக்கு அன்றைய தினம் வேறு எந்தத் திட்டமும் இருக்கவில்லை.  எங்களில் சிலர் மட்டும் டார்ஜிலிங் நகரில் இருக்கும் மால் ரோடு பகுதிக்கு மீண்டும் சென்று விட்டார்கள்.  திரும்பும் சமயம் அவர்களாகவே வண்டிகளை ஏற்பாடு செய்து கொண்டு தங்குமிடம் திரும்புவோம் என்று சொல்லி விட்டார்கள்.  குழுவாக பயணிக்கும்போது இப்படி சிலர் நடந்து கொள்வதை தடுக்க முடிவதில்லை.  முடியாது என்று கட்டாயப்படுத்தி எங்களுடன் அழைத்து வர அந்த நபர்கள் ஒன்றும் சிறுவர்கள் அல்லவே! எல்லாம் வளர்ந்தவர்கள் என்பதால் எது நடந்தாலும் அதை அவர்களாகவே சமாளித்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயமாக சொல்லி விட்டு அங்கிருந்து எங்கள் பயிற்சியாளரும் நாங்களும் திரும்பினோம்.  ஒன்றிரண்டு பெண்களும் சில ஆண்களும் என டார்ஜிலிங் மால் ரோடில் சுற்றச் சென்று தங்குமிடம் திரும்பிய போது மணி இரவு ஒன்பதுக்கு மேல்! வரவில்லையே என்று பயிற்சியாளர் தான் தவித்துக் கொண்டிருந்தார்.  


இரவு உணவிற்குப் பிறகு நான் எனது அறைக்குச் சென்று உறங்க ஆரம்பித்தேன்.  அடுத்த நாள் எழுந்து, காலை உணவிற்குப் பிறகு நீண்டதொரு பயணம் இருந்தது! ஆனாலும் எங்கள் குழுவினரில் சிலர் அந்த இரவிலும் நீண்ட நேரம் விழித்து இருந்து பாட்டும் நடனமும் என கூத்து அடித்துக் கொண்டிருந்தனர் என்று அடுத்த நாள் காலை அவர்கள் அனைவரும் தாமதமாக வந்தபோதே தெரிந்து கொள்ள முடிந்தது. இரவு மற்றும் காலை உணவுகள் விதம் விதமாக இருந்தாலும் தெரிந்த சிலவற்றை மட்டுமே உண்ண முடிந்தது. அன்றைய தினம் நீண்டதொரு பயணமும் இருந்ததால் குறைவாகவே சாப்பிட்டேன்.  இந்தப் பயணத்தில் ஏனோ எனக்கு தனிமையே அதிகம் பிடித்திருந்தது.  சக பயணிகள் அனைவரிடமும் அத்தனை பழகவோ, பேசவோ பிடிக்காமல் இருந்தது. சாப்பிடும்போதும் சரி, பயணிக்கும் போதும் சரி நான் தனியாகவே இருந்தேன்.  நான் தனியாகவே இருந்ததை கவனித்த எங்கள் பயிற்சியாளர் எப்போதும் என்னுடன் வந்து அமர்ந்து கொண்டதோடு, மாலை நேரங்களில் என்னுடன் நடைப்பயிற்சிக்கு வந்து கொண்டிருந்தார்.  தினம் தினம் நீண்ட நேரம் அலுவலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டபடியே நடந்தோம்.  














அன்றைய தினம் எங்கள் பயணம் எந்த இடம் நோக்கி?  நாங்கள் எங்கள் பயணத்தின் ஒரு பகுதியை நிறைவு செய்திருந்தோம்.  அதாவது டார்ஜிலிங் பகுதியை நிறைவு செய்து, அடுத்த இடமான சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் Gகாங்டாக் நோக்கி பயணிக்க இருந்தோம். கிட்டத்தட்ட 115 கிலோமீட்டர் தூரம் தான் என்றாலும் மலைப்பாதை அதிகம் என்பதால் சற்றேறக்குறைய நான்கரை மணி நேரத்திற்கும் மேல் இந்தப் பயணம் நீடிக்கும்.  நடுவில் எங்காவது நிற்க வேண்டியிருந்தால் இன்னும் அதிக நேரம் எடுக்கலாம்.  நாங்கள் நடுவில் ஒரு இடத்தில் நின்றோம்.  அந்த இடம் KALIMPONG அருகே இருக்கும் LOVERS MEET VIEWPOINT என்கிற இடம்.  இந்த இடத்தில் அப்படி என்ன இருக்கிறது?  இந்தப் பகுதியில் ஓடும் மிகப் பெரிய நதியான Teesta நதி Rangeet நதியுடன் சங்கமிக்கும் இடம் தான் இந்த இடம்.  மிகவும் அழகான இடம்.  ஒரு மலைப்பகுதியில் இருக்கும் VIEWPOINT-லிருந்து இரண்டு நதிகளும் சங்கமிக்கும் காட்சியை உங்களால் பார்த்து ரசிக்க முடியும்.  அந்த இடத்தில் சில கடைகளும் உண்டு!


அந்தக் கடைகளில் விதம் விதமான பழங்கள், தேநீர் போன்றவை விற்பனை நடக்கிறது.  மலைப்பகுதி நிறைய பேருக்கு அது ஒத்துக் கொள்வதில்லை என்பதால் இந்த இடங்களில் நிறைய புளிப்பு மிட்டாய் போன்றவையும் விற்பனை செய்கிறார்கள்.  அப்படி பார்த்த ஒரு மிட்டாய், ஒரு சிறு குச்சியின் முனையில் கெட்டியாக இருந்த புளி!  அன்னாசி பழமும் இங்கே நிறையவே கிடைக்கிறது.  சுவை மிகவும் நன்றாகவே இருந்தது.  இங்கே கிடைத்த இன்னும் ஒரு பொருள் - மிளகாய் ஊறுகாய். சிறிய சிவப்பு மிளகாய் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஊறுகாய் Fireball என்றும் அழைக்கப்படுகிறது என்பதிலிருந்தே எத்தனை காரம் இருக்கும் என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.  இந்த ஊறுகாய் வைத்துக்கொண்டே சிலர் சாப்பாடு சாப்பிடுகிறார்கள்.  பார்க்கும்போதே உடல் முழுவதும் எரிவது போன்ற ஒரு உணர்வு எனக்கு.  சிறு பாட்டில்களில் இந்த ஊறுகாய் விற்பனைக்கு வைத்திருந்ததை எடுத்து ஒரு படம் எடுத்துக் கொண்டதோடு சரி.  இந்த மிளகாயை Dalle என்று அழைக்கிறார்கள் அந்த ஊரில்.  


அந்த இடமே மிகவும் அழகாக இருந்தது.  பெரிய பெரிய மரங்கள், நடுவே இருக்கும் சாலை, சாலை ஓரக்கடைகள், கீழே ஓடும் நதி, சுற்றிலும் இருக்கும் மலைகள் என மிகவும் அமைதியான ஒரு இடம்.  நிச்சயம் அங்கே சில மணித்துளிகள் தங்கி இயற்கை அன்னையின் எழிலை மனதுக்கும், கண்களுக்கும் ஒரு விருந்தாக மாற்றிக்கொண்ட பிறகே அந்த இடத்தினை விட்டு நகரலாம் - அதுவும் மனமே இல்லாமல்.  இந்தப் பகுதியில் River Rafting வசதிகளும் இருக்கிறது என்பதால் உங்களுக்கு விருப்பமிருந்தால், நேரம் இருந்தால் அதனையும் நீங்கள் இங்கே முயற்சித்து நல்லதொரு அனுபவத்தினை பெறலாம்.  சங்கமம் குறித்து இன்னும் ஒரு விஷயமும் சொல்லலாம்.  இணைத்திருக்கும் படங்களில் தெள்ளத்தெளிவாக அடர் பசுமையாக இருக்கும் நீரைக்கொண்ட நதி Rangeet. மற்றது Teesta.  இந்தப் பகுதியில் நாங்கள் VIEWPOINT வழியே தான் நதிகள் சங்கமிக்கும் அழகினைப் பார்த்தோம்.  உங்களுக்கு நேரம் அதிகம் இருந்தால் சங்கமிக்கும் இடத்தினை வாகனம் வழி கீழே இறங்கிச் சென்று பார்க்க முடியும். அங்கே River Rafting தவிர Camping வசதிகளும் உண்டு என்பதால் நதிக்கரையில் கூடாரங்கள் அமைத்து தங்கியும் வரலாம்.  


தற்போது பல இடங்களில் இந்த மாதிரி கூடாரங்களில் தங்குவது அதிகமாகி வருகிறது.  கங்கை நதியின் கரையோரங்களில் கூட இது போன்ற கூடாரங்கள் அதிகமான அளவில் ஏற்படுத்தி வருகிறார்கள்.  எனக்கு இருக்கும் ஒரே கவலை இயற்கை அன்னையின் எழிலை, இது போன்ற இடங்களில் தங்குபவர்கள் கெடுக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை தான். ஏற்கனவே பல வனப்பகுதிகளில் நம் மக்கள் சென்று மது அருந்தி பாட்டில்களை உடைத்துப் போடுவதோடு, பிளாஸ்டிக் கழிவுகளையும் ஆங்காங்கே போட்டு வன விலங்குகளுக்கு  கெடுதல் செய்து கொண்டிருப்பதோடு, இயற்கை அன்னையின் எழிலையும் கெடுத்து வருகிறார்கள்.  நதிப்படுகைகள் இப்படி வீண் ஆவதை தடுக்க வேண்டும் என்பதை அரசாங்கங்கள்  மட்டுமல்லாது ஒவ்வொரு சுற்றுலா பயணியும், அங்கே இருக்கும் மனிதர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.  இல்லை என்றால் இவையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும் அபாயம் இருக்கிறது.  


அந்த இடத்தில் ஒரு மணி நேரம் இருந்த பிறகு அங்கிருந்து மீண்டும் எங்கள் பயணம் தொடங்கியது. காலை உணவுக்குப் பிறகு Darjeeling அருகே நாங்கள் தங்கிய Ghum-லிருந்து Gangtok வந்து சேர்ந்தபோது மதிய உணவுக்கான நேரம் ஆகியிருந்தது. எங்களுக்கு Gangtok நகரில் தங்குவதற்கு எந்த இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்?  வசதிகள் எப்படி இருந்தன, அங்கே சென்ற பிறகு அன்றைய தினம் என்ன செய்தோம் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அது வரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன் நண்பர்களே.


   


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


14 கருத்துகள்:

  1. அந்த மிளகாய் ஊறுகாய் மனதில் நிற்கிறது! சுவைக்க ஆசை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு காரம் பிடிக்குமா? சுவைத்துப் பார்க்க விருப்பம் இருந்தால் இணைய வழி வாங்கலாம். Amazon தளத்தில் இருக்கிறது.

      தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. தனியாக அல்லது ஒத்த உணர்வுள்ள நண்பர்களோடு பயணிக்கும்போது டிசிப்பிளின் இருப்பதால் பயணத் திட்டம் தடைபெறாது. குழுவோடு பயணித்து, அதில் சிலர் இஷ்டப்படி நடந்துகொண்டால் பயணத்தை ரசிப்பது கடினம். டென்ஷன்தான் அதிகமாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான சிலர் குழுவில் இருந்தால் கடினம் தான். உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் கிடைத்திருக்கும் இல்லையா?

      தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. கூடாரம் + தவறான பயன்பாடு, வருத்தம் தரும் தகவல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தமான விஷயம் என்பதில் சந்தேகமில்லை தனபாலன். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  4. வெங்கட்ஜி இரு நதிகள் இணையும் அப்பகுதி Mesmerizing! நீங்கள் எடுத்திருக்கும் கோணமும் அழகு! ரசித்துப் பார்த்தேன. அந்த இடமே கொள்ளை அழகு. இயற்கையின் எழில். நடுவில் பாதை சுற்றிலும் காடு....குரங்கார் ஆஹா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. அந்த இயற்கையான சூழலை விட்டு விலக மனதே வரவில்லை. தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  5. இப்படிக் குழுவாகப் பயணிக்கும் போது ஒத்த அலைவரிசை இல்லை என்றால் கஷ்டமாகத்தான் இருக்கும். நாம் தனியாக இருக்க வேண்டி வரும்தான். அதுவும் குழுவில் ஒழுங்கின்மை நபர்கள். புரிந்து கொள்ள முடிகிறது.

    River rafting ஆவ்ல் உண்டு. ஆனால் அங்கு தங்குவது என்பது இயற்கையை நேசிப்பவர்கல் என்றால் சரி ஆனால் குப்பை ஆக்குபவர்கள் என்றால் தங்கும் வசதிகள் இல்லாமல் இருப்பதே மேல். நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தை டிட்டோ செய்கிறேன்

    மிளகாய் ஊறுகாய் சுவைத்துப் பார்க்க ஆசையாக இருக்கு என்றாலும் கூடவே பயமும். நம் வீட்டிலோ உப்பு காரம் மிகவும் குறைவு. அப்படியே பழகிவிட்ட்டு இந்தக் காரம் பயமுறுத்துகிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒத்த அலைவரிசை கொண்டவர்களுடன் பயணிப்பது தான் நல்லது கீதா ஜி. பெரிய குழுவாக இணைந்து செல்லும் சமயம் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

      தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  6. //தற்போது பல இடங்களில் இந்த மாதிரி கூடாரங்களில் தங்குவது அதிகமாகி வருகிறது. கங்கை நதியின் கரையோரங்களில் கூட இது போன்ற கூடாரங்கள் அதிகமான அளவில் ஏற்படுத்தி வருகிறார்கள்.//

    அவர்கள் சுற்றுபுறத்தை அசுத்தம் செய்தால் தடை செய்யலாம். இயற்கை எழிலை நசம் செய்ய அனுமதிக்க கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கை எழிலை நாசம் செய்வதை அனுமதிக்கவே கூடாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். வசதிகளை அரசு வழங்கும் போது, அதனை பராமரிக்க மக்களும் உதவ வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்வதே இல்லை.

      தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....