ஞாயிறு, 28 மே, 2023

வாசிப்பனுபவம் - மாயங்கள் செய்திடும் மான் - மியாழ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் மியாழ் அவர்கள் எழுதிய “மாயங்கள் செய்திடும் மான்” எனும் மின்னூல். மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 


வகை: நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 223

விலை: ரூபாய் 300/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


மாயங்கள் செய்திடும் மான் (Tamil Edition) Kindle Edition


******* 



எதிரெதிர் வீடுகளில் உள்ள இரு குடும்பங்கள். ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் மகள்.  மற்ற குடும்பத்தில் அப்பத்தா, அவரது மகன், மருமகள் மற்றும் பேரன்.  இரண்டு குடும்பங்களுக்கும் தொழில் விவசாயம்.  இரு வீடுகளில் இருக்கும் நபர்களுக்குள்ளும் நல்ல நட்பு.  ஆனால் நாயகியான அஸ்விதா மற்றும் நாயகன் ஆதி என்கிற ஆதித்தியன் ஆகிய இருவருமே எப்போதுமே சண்டைக்கோழிகளாக இருக்கிறார்கள்.  முதல் அத்தியாயமே நாயகி அஸ்விதா, வாசல் தெளிக்கும்போது நாயகன் ஆதியின் மீது சாணி தெளிப்பதில் ஆரம்பிக்கிறது.  எப்போதுமே சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் அவர்கள் இருவரும்.  நாயகனுக்கு எப்போதுமே அவனது அப்பத்தா துணைக்கு வருகிறார். 


இவர்கள் இருவருக்கும் இடையே இருப்பது நட்பா இல்லை வேறு ஏதாவதா என்பது கதை வளர்ந்து வரும்போது தெரியலாம்.  அஸ்விதா படிக்கும் அதே கல்லூரியில் ஆதி வாத்தி(யார்) அதாவது ப்ரொஃபசர்.  விவசாயக் கல்லூரியில் படித்து அங்கேயே ப்ரொஃபசராகவும் இருக்கிறார் ஆதி. தந்தைக்கு உதவுவதோடு ஊர் மக்களுக்கும் விவசாயத்தில் உதவுகிறார்.  எல்லாம் சுமுகமாகவே போய்க் கொண்டிருக்கிறது.  கதையில் திருப்பம் வேண்டுமே! இல்லை என்றால் ஏது ஸ்வாரஸ்யம்?  நாயகியின் தாயார், கோவிலுக்குச் சென்று மகளுக்கு திருமணம் வைக்கலாமா என்பதைத் தெரிந்து கொள்ள பூசாரி மூலம் பூப்போட்டுப் பார்க்கச் செல்கிறார்.  கூடவே நாயகனின் தாயாரும்.  பூசாரி அவர்கள் குடும்பத்திற்கு பேரிடி ஒன்று வரப்போகிறது என்று சொல்லி, கோவிலில் தொடர்ந்து விளக்குப் போடும்படி சொல்கிறார்.  அப்படி என்ன பேரிடி வந்தது? 


குலதெய்வம் கோவிலுக்குச் செல்லும் நாயகியின் பெற்றோர் விபத்தில் சிக்கி அந்த இடத்திலேயே உயிரிழக்கிறார்கள். யாரும் இல்லாத தனி மரமாக நிற்கிறார் நாயகி அஸ்விதா. அதன் பிறகு என்ன நடக்கிறது. இதற்கிடையே ஆதி மீது காதல் கொள்ளும் கல்லூரி பெண் நந்தினி கேரக்டர் ஒன்று வருகிறது.  அந்த நந்தினி உண்டாக்கும் குழப்பங்கள், தவிர கல்லூரியில் விரிவுரையாளராக வரும் கவிதா கதாபாத்திரம், இவர்களுக்கும் ஆதி - அஸ்விதா ஆகியோருக்கும் நடக்கும் குழப்பங்கள், என தொடர்ந்து கதையில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லை.  ஆதி - அஸ்விதா நட்பு என்ன ஆகிறது, நந்தினி என்ன ஆகிறாள் போன்ற தகவல்களை விறுவிறுப்பான “மாயங்கள் செய்திடும் மான்” கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளலாமே!


நூலாசிரியருக்கு வாழ்த்துகள். வாசிக்கப் போகும் உங்களுக்கு பாராட்டுகள்.


*******


எங்களது இல்லத்திலிருந்து, நான், எனது இல்லத்தரசி மற்றும் நண்பர் சுப்ரமணியன் என மூவரும் எழுதி இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...


மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….

14 கருத்துகள்:

  1. விமர்சனம் சிறப்பாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  2. மியாழ் - எழுத்தாளரின் பெயரே வித்தியாசமாக அழகாக இருக்கிறது!

    கதைச் சுருக்கம் சுவாரசியமாக இருக்கிறது.

    அறிமுகத்திற்கு நன்றி, இணையத்தில் இப்படி அறிமுகமாகும் கதைகளைக் குறித்து வைத்துக் கொள்கிறேன். எப்போது வாசிக்க வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது வாசிக்கலாம் என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பு அனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  3. ஒரு சிறப்பான காதல் திறைப்படமாக வளரக்கூடிய கதையாக தோன்றுகிறது சார்.
    அரிமுகம் செய்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அரவிந்த்.

      நீக்கு
  4. அருமையான வாசகம்.
    கதை விமர்சனம் நன்றாக இருக்கிறது. முடிவு யூகிக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  5. பதிவின் துவக்கத்தில் இடம் பெற்றிருக்கும் வாசகம் அருமை! நூல் விமர்சனமும் சிறப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் நூல் விமர்சனமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....