ஞாயிறு, 14 மே, 2023

தலைநகர் நோக்கி ஒரு பயணம் - ஹரித்வார் அனுபவங்கள் - பகுதி ஆறு - ஆதி வெங்கட்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஐந்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


EVERY MORNING IS A SYMBOL OF REBIRTH OF OUR LIFE, SO FORGET YESTERDAY’S ALL BAD MOMENTS AND MAKE TODAY THE MOST BEAUTIFUL DAY OF YOUR LIFE.


******


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஒன்று 


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி இரண்டு  


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி மூன்று 


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி நான்கு 


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஐந்து


கங்கா மைய்யா கி ஜெய்!


ஹரித்வார் இரயில் நிலைய வாயிலில்…


இரயில் நிலையம் உள்ளே மக்கள் கூட்டம்…

மூன்று நாட்களை ஹரித்வாரில் இனிமையாக செலவிட்டு மீண்டும் டெல்லியை நோக்கி சதாப்தியில் பயணித்தோம்! இந்த மூன்று நாட்களும் மனதிற்கு இதமான நாட்களாய் இருந்தது!


தங்கிய இடமும் மிகவும் அமைதியான சூழலாக மரங்கள் அடர்ந்து பூக்களும், பறவைகளும் நிறைந்த இயற்கையான சூழலில் இருந்தது! அங்கு தரப்பட்ட உணவுகளும் மிகவும் சாத்வீகமான முறையில் உப்பு, காரம், மசாலா, எண்ணெய் என்று அதிகமில்லாமல் வயிற்றுக்கு கெடுதல் இல்லாத விதமாக நன்றாகவே இருந்தது! இங்கு வெங்காயமும், பூண்டும் கூட சேர்ப்பதில்லையாம்! இப்படியான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்!


******


தலைநகர் இற்றைகள்!



பகல் நேரங்களை பெரும்பாலும் புத்தக வாசிப்பிலும், அலைபேசியில் சற்று நேரம் உலாவுவதிலும் செலவிடுகிறேன். அப்படி படித்த ஒரு புத்தகம் - ஆதித்ய கரிகாலனின் அறியப்படாத வரலாறை சொல்லும் கூடலழகி. சோழ சாம்ராஜ்யத்தின் கதைகள் பிரமிப்பாகவும், சற்று திகிலாகவும் நினைக்க வைக்கிறது! படித்த இன்னுமொரு புத்தகம் தேவ ரகசியம். தேவ ரகசியம் குறித்த இடுகை….


தேவ ரகசியம்! - ஆசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா



ஒரு இளம் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்! கோமாவில் இருந்த முதலமைச்சருக்கு திடீரென விழிப்பு ஏற்பட அப்போது அந்தப் பிரிவில் சுத்தம் செய்து கொண்டிருக்கும் பணியாளர் ஒருவரிடம் உதவி கேட்கிறார்! 


ஸ்மைல் டிவியின் செய்தி ஆசிரியரான ஆத்மிகா அவினாஷ்! துடிப்பான இளம் பெண்! அவளுக்கென்று அந்த டிவியில் தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவள்! உண்மைகளுக்காக என்றுமே பாடுபடுபவள்! அவளின் பால்யத்தோழன் தான் இந்த  முதலமைச்சர்!


நோயின் பிடியினால் மறைந்து போகும் தன் பால்யத்தோழனின் இறப்பில் மர்மங்கள் இருப்பதாகத் தோன்றவே அதை நோக்கி பயணிக்கிறாள் ஆத்மிகா! அந்த பயணத்தில் அவள் தெரிந்து கொண்ட நிஜங்களும், நிழல்களும் என்னவென்பதே தேவ ரகசியம்! 


சமீபத்தில் நான் வாசித்த புத்தகம் தான் இந்த தேவ ரகசியம்! விறுவிறுப்புக்கு சற்றும் பஞ்சமில்லாத இந்த நூலில் அரசியல், சினிமா என்ற களங்களில் பயணித்து உண்மைக் கதைகளை உரக்க சொல்கிறது! 


ஆசிரியர் திரு காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் நூல்களை விரும்பி வாசிக்கும் வாசகியாக என்னுடைய கருத்து என்னவெனில் அவருடைய நூலில் கிடைக்கும் செய்திகள் மிகுந்த ஆச்சர்யமூட்டுவதாய் இருக்கும்! விறுவிறுப்போடும் அதேசமயம் எடுத்தால் கீழே வைக்க மனமில்லாத விதமாய் இருக்கும்! 


இந்த புத்தகமும் அப்படித்தான்! யாரும் எதிர்பார்த்திராத முடிவு! மனதில் நெடுநேரம் சுழன்று கொண்டிருந்தது! ஆங்காங்கே தென்படும் எழுத்துப்பிழைகளை தவிர்த்தால் இன்னும் சிறப்பாக அமையும்!


******


ஆம்புலன்ஸ் அலறல்!


அருகே பிரபலமான மருத்துமனை ஒன்று இருக்க காலை எழுந்தது முதல் இரவு வரை இங்கு ஓயாத ஆம்புலன்ஸ் ஒலி! அதை கேட்டு கேட்டு மனதை பிசைய வைக்கிறது! யாருக்கு என்னவோ?? என்னாச்சோ? என்ற யோசனைகளை தடுக்க முடியவில்லை!


மண்வாசனை!





ஓர் மாலையில் மண்வாசனை மூக்கை நெருடவே ஜன்னலைத் திறந்து பார்த்தால் மழை தூறிக் கொண்டிருந்தது! அதனைத் தொடர்ந்து பலமான இடியும், மின்னலும்! புழுதியை சுத்தம் செய்தாற் போல சாலையை நனைத்த பின்னே மழையும் நின்று போனது! இந்த மழை வெப்பத்தை மேலும் அதிகரிக்க வைக்கலாம்! இரண்டு மூன்று நாட்களாக எங்குமே வெளியில் செல்லாததால் நேற்று இரவு அப்படியே ஒரு உலா வந்து இரவு உணவையும் வெளியிலேயே முடித்துக் கொண்டோம்! மண் குவளைகளில் சில்லென்று ருசித்த லஸ்ஸி வயிற்றை குளிர்வித்தது!


தலைநகர் பயணக் குறிப்புகள் தொடரும். 


******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

16 கருத்துகள்:

  1. வெங்காயம் பூண்டு விரத காலங்களில்சேர்க்கலாகாது என்று சொல்லலாம்.  ஆனால் அதைத் தவிர்த்தால் ஆரோக்கியம் என்பது தவறு.  

    காலச்சக்கரம் நரசிம்மாவின் இரு நூல்கள் பற்றிய அறிமுகம் நன்று.  படிக்கத் தூண்டுகிறது.

    ஆம்புலன்ஸ் அலறல் ஒருவகை என்றால் சத்திரத்துக்கு அருகே இருந்தால் இடைவெயிடாத மேளச்சத்தமும் படுத்தும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்காயம், பூண்டு சேர்ப்பது பற்றி நான் எழுதவில்லை சார். இரண்டுமே உடலுக்கு நன்மை செய்யக்கூடியது. மிதமான உப்பு, காரம், மசாலா என்று சாத்வீக உணவை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்ற அர்த்தத்தில் தான் எழுதியிருந்தேன்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் நன்றாக உள்ளது. தங்களது ஹரித்துவார் பயணம் நன்றாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி.

    தாங்கள் அறிமுகப்படுத்திய அறிமுக புத்தகங்கள் படிக்கத் தூண்டுகிறது.

    ஆம்புலன்ஸ் சத்தம் மனதில் ஒரு பீதியை ஏற்படுத்துவது உண்மை. சென்ற பககுதிகளையும் படிக்கிறேன். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! ஆம்புலன்ஸ் அலறலால் மனதில் பதட்டம் இருந்து கொண்டே இருந்தது.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் கமலா ஜி.

      நீக்கு
  3. காலச்சக்கரம் நரசிம்மாவின் நாவலைப் பற்றி விமர்சனம் இருந்தாலும், அதில் நிறைய செய்திகள் உண்டு. அவரின் உழைப்பு அதில் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். நிறைய தகவல்களைப் பெறலாம்

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் நெல்லைத் தமிழன் சார்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் தனபாலன் சகோ.

      நீக்கு
  5. மண் வாசனை படங்கள் அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ராமசாமி ஜி.

      நீக்கு
  6. வெங்காயம் பூண்டு விரத காலங்களில் சேர்க்கலாகாது என்பது சரி...

    இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கு பூண்டு அரும் மருந்து!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். இரண்டுமே உடலுக்கு நன்மை செய்யக்கூடியது. அவற்றை சேர்ப்பது குறித்து நான் எழுதவில்லை. மிதமான உப்பு, காரம், மசாலா என்று சாத்வீக உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்ற அர்த்தத்தில் தான் எழுதியிருந்தேன்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  8. நூல் அரிமுகங்களுக்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....