வியாழன், 16 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஸ்ரீநாத்ஜி – கடைத்தெருவில் – பாப்டா, காலை உணவு



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 18

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


சாரிசாரியாக நடந்து செல்லும் பக்தர்கள்...
எங்கே செல்கிறார்கள்?


வரீங்களா.... சைக்கிள்ல ஒரு ரவுண்ட் ஜிவ்வுன்னு போயிட்டு வரலாம்....


ஸ்ரீநாத்ஜியின் திவ்ய தரிசனத்திற்குப் பிறகு கோவிலை விட்டு வெளியே வந்தால் இருக்கும் இடத்தில் சின்னச் சின்ன தெருக்கள். தெருவோரம் முழுவதும் கடைகள் – பல்வேறு பொருட்களை விற்கிறார்கள் – கிருஷ்ணனுக்கு விதம் விதமாக அலங்காரம் செய்ய வேண்டிய பொருட்கள் இங்கே கிடைக்கும். கோவில்களுக்கு வாங்கி அளிக்கலாம், அல்லது நம் வீட்டில் நடத்தும் பூஜைகளில் வைக்கும் பொம்மைகளுக்கு அலங்காரம் செய்யவும் பயன்படுத்தலாம்.  எங்கள் குழுவினரில் இருந்த பலருக்கும் இங்கே சில அலங்காரப் பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது. கடைத்தெருவில் அனைவரும் உலா வர நானும் அப்படியே அவர்களுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தேன். ஒவ்வொருவரும் சில பொருட்களை வாங்கிக் கொண்டார்கள்.


இப்படியான வண்டிகளிலும் பக்தர்கள்...


குழுவில் இருந்த ஒருவருக்கு நினைத்த மாதிரி ஸ்ரீநாத்ஜி படம் – பரிசளிக்க ஏதுவாக இருப்பது – நிறைய எண்ணிக்கையில் கிடைக்கவில்லை. அவர் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தார். கைகளில் காண்பித்து இவர் கேட்பது கடைக்காரருக்குப் புரியவில்லை, இல்லை என்றால் அங்கே இல்லை. விடாது கருப்பு மாதிரி நிறைய கடைகளில் ஏறி இறங்கிய பிறகு ஒரு வழியாக ஒரு கடையில் அவர் வேண்டியபடியே, வேண்டிய எண்ணிக்கைகளில் கிடைக்க, அவர் மனது நிம்மதியாயிற்று. எல்லோரும் ஓவியங்கள், பூஜை பொருட்கள், அலங்காரப் பொருட்கள் என நிறைய வாங்கிக் கொண்டார்கள். நானும் மகளுக்கு காதணி, கழுத்தணி வாங்கிக் கொண்டேன்.


வித்தியாசமான வண்டி...
கல்யாணத்திற்கும் உண்டு - கடைசி சவாரிக்கும் உண்டு!



சாரிசாரியாக நடந்து செல்லும் பக்தர்கள்...
கொடி, முதுகுச் சுமையுடன் நீண்ட நடை....


காலையில் தேநீர் குடித்தபிறகு எதுவுமே சாப்பிடவில்லை. ஸ்ரீநாத்ஜி கோவிலில் கிடைத்த லட்டு பிரசாதம் எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டோம். ஆனாலும் காலை உணவாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று பார்த்தால், சாலையோர கடைகளில் போஹா மற்றும் பாப்டா விற்றுக் கொண்டிருந்தார்கள். போஹா உதய்பூர் நகரில் பார்த்ததோடு சரி. இங்கே சுவைக்கவும் செய்தோம். போஹா தவிர வேறு சில உணவு வகைகளும் அங்கே கிடைத்தது. பாப்டா எனும் பஜ்ஜி போன்ற பதார்த்ததினை மிக அழகாக செய்து கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தபடியே அந்தக் காட்சியை காணொளியாக எடுத்தேன். அந்தக் காணொளி கீழே….




பாப்டா செய்வது எப்படி? 
தட்டில் போஹாவும் இருக்கிறது!

அனைவரும் போஹாவை வாங்கி காலை உணவாக சாப்பிட்ட பிறகு நாத்th dhதுவாரில் கிடைக்கும் சிறப்பான தேநீர் பற்றிய பேச்சு வர தேநீர் ருசிக்கலாம் என நினைத்தோம். கடைத்தெருவிலேயே நிறைய கடைகள் உண்டு என்றாலும், நாத்துவார் கோவில் நடத்தும் தங்குமிடத்தில் இருக்கும் ஒரு தேநீர் கடையில் தேநீர் ரொம்பவே நன்றாக இருக்கும் என்பதால் அங்கேயே சென்று தேநீர் குடிக்கலாம் என அந்த இடம் நோக்கி நடந்தோம். ஏற்கனவே நானும் நண்பரும் சென்றிருந்ததால் கடைத்தெரு வழியாகவே சென்றோம். கடைத் தெருவில் இன்னும் சில விடுபட்ட பொருட்களை வாங்கிக் கொண்டார்கள். பொடி நடையாக நடந்து அந்த இடத்தினை அடைந்தோம். கடையில் இருந்தவரிடம் பேச்சுக் கொடுக்க, நாங்கள் சென்றபோது இருந்தவரின் தம்பி என்று சொன்னார். அண்ணன் வேறு இடத்திற்குச் சென்று விட்டார் என்று சொன்னார்.


பாரம்பரிய உடையில் சாலையோரத்தில் நடக்கும் பெண்....


பெரிய பாத்திரத்தில் குழுவினர் அனைவருக்குமான தேநீர் தயாரானது. மிகவும் ருசியான தேநீரை, ரசித்து ருசித்து பருகிய பிறகு எங்கள் வாகனம் நிறுத்தி இருக்கும் இடத்தினை நோக்கி நடந்தோம். இந்த மாதிரி கோவில்களுக்கு அருகில் இருக்கும் சாலைகள் மிகவும் குறுகியவை – குறிப்பாக வட இந்தியாவில். இந்தச் சாலைகளில் மனிதர்கள் நடக்க மட்டுமே ஏதுவான பாதைகள் இருக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் பிருந்தாவன், காசி போன்ற இடங்களுக்குச் சென்றிருப்பவர்களுக்குத் இந்தக் குறுகிய சாலைகளின் அனுபவங்கள் கிடைத்திருக்கும். அந்தச் சாலைகளில் நடப்பது பெரிய விஷயம் – மனிதர்களைத் தவிர மாடுகளும் நம்மை இடித்துத் தள்ளிக் கொண்டு செல்லும்! அந்த பாதைகளில் நடப்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான்.


ஆடு மேய்க்கலாம் வாங்க...



இரு சக்கர வாகனங்களிலும்...




அப்படியான பாதைகள் வழியே நடந்து எங்கள் வாகனம் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். ஓட்டுனர் ஜோதி நிம்மதியான உறக்கத்திற்குப் பிறகு எங்களுக்காகக் காத்திருந்தார். அடுத்து நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தின் அடுத்ததாகப் பார்க்க திட்டமிட்டிருந்த இடம் - ஜோத்பூர் செல்வதாக எங்கள் திட்டம். ஜோத்பூர் நோக்கிச் சென்ற பாதையெங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும், ட்ராக்டர்களிலும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். பெரும் தூரத்தினை நடந்தே கடந்து எங்கே செல்கிறார்கள், எதற்காக இந்தப் பயணம் என்று புரிந்து கொள்ள முடியவில்லை! நீண்ட தூர நடைப்பயணம் – அதுவும் நூற்றுக்கணக்கான மக்கள் – நெடுஞ்சாலை முழுவதுமாகவே இப்படியான மக்களைப் பார்க்க முடிந்தது. 


மரத்தின் விழுதுகளில் ஊஞ்சலாடும் பள்ளி சிறுவர்கள்...
ஹேய்... அங்க பாரு நம்மள தான் ஃபோட்டோ புடிக்கிறாங்க!



பயணத்தில் - வண்டிக்குள் நடனம்...
மேலே முட்டிக்காம இருந்தா சரி!

எங்கே நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மூலம் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள், பயணத்தில் கிடைத்த அனுபவங்கள், மதிய உணவுக்கான தேடல் அனுபவங்கள், எங்கே, என்ன சாப்பிட்டோம், வழியில் கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை எல்லாம், அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

30 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். கடைத்தெருவில் நீங்கள் ஒன்றும் வாங்கவில்லையா? இந்தப் (சில) படங்களை இப்பயணக் கட்டுரையின் அறிமுகப்பதிவில் பார்த்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம். சில படங்கள் வந்திருக்கலாம் .முதல் படம் முகப்புப் படமாக சில நாட்கள் இருந்தது.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஓ... காதணி, கழுத்தணி... ஓகே ஓகே...

    வித்தியாசமான வண்டி ரொம்பவே வித்தியாசம்! நம்மூர்களில் பார்க்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதணி கழுத்தணி.... ஓகே தான்!

      வித்தியாசமான வண்டிதான். நிறைய ஜிகினா வேலைகள் இருக்கும்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பாரம்பரிய உடையில் இருக்கும் அந்தப் பெண்ணை படம் எடுத்ததற்கு அவர் ஆட்சேபிக்கவில்லையா? நேருக்கு நேராய் எடுத்திருக்கிறீர்களே... தூரத்திலிருந்து ஜூம் செய்யப்பட்டதோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி படங்கள் பலவும் சாலையில் பயணித்தபடியே எடுக்கும் படங்கள் மட்டுமே. அவருக்கு நேரே நின்று எடுத்தவை அல்ல...

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. நடனமாடுவது நீங்களா? அடடே... தனியாய் ஒரு நடனம் ஆடி காணொளியாய்க் கொடுக்கலாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நானேதான். காணொளி - உங்கள் தைர்யம் பாராட்டுக்குரியது. ரிஸ்க் எடுப்பது உங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போலவா? ஹாஹாஹா.....

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அருமையாய் நடனம் ஆடி இருக்கீங்க. :) என் தம்பி அலுவலக நண்பர்கள் அவன் கல்யாணத்தின்போது அவனை ஆட வைச்சு அவன் மனைவியைப் பார்க்க வைச்சாங்க! எல்லாக் கல்யாணங்களிலும் இப்படி ஓர் விளையாட்டு உண்டு என்று அவர் சொன்னார். :) அது நினைவில் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா அக்காவின் கமெண்ட் பார்த்ததும் காணொளியை புகைப்படம் என்று நினைத்துக் கடந்து விட்டேனோ என்று மறுபடி வந்து பார்த்துச் செல்கிறேன்!

      நீக்கு
    2. என்னுடைய தம்பி (ஒன்று விட்ட) கல்யாணத்திலும் (சேலத்தில் நடந்தது) இது போல நடனமும், தாண்டியா நடனமும் ஆடினார்கள் - என் தம்பி உட்பட.

      அவன் வடநாட்டில் வேலை பார்த்து, இப்போது அரபு நாட்டில் இருக்கிறான்!

      நீக்கு
    3. ஹாஹா. படம் பார்த்தே என் நடனம் பற்றி உங்களுக்குத் தெரிந்து விட்டதே! :)) ஆஹா உங்கள் தம்பி நடனம் ஆடுவாரா.... மகிழ்ச்சி. நண்பர்கள் கூட்டத்தில் இப்படி பல விஷயங்கள் நடப்பது தான் - ஒருவரை ஒருவர் இப்படிச் செய்வது மகிழ்ச்சி தானே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    4. நடனம் - காணொளியாக இல்லை. ஆனால் பாப்டா செய்வது காணொளியாக இருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    5. இப்போது அரபு நாட்டில் - மகிழ்ச்சி.

      என்னுடைய நண்பர் ஒருவர் எந்த விழாவாக இருந்தாலும் ஆடி விடுவார்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. பாந்தணி புடைவைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் ராஜஸ்தானில் நன்றாக இருக்கும். துணியைச் சுருட்டி வைச்சிருப்பாங்க. நாம் நிறம், டிசைன் பார்த்துச் சொன்னதும் நமக்கு நேரே பிரிச்சுத் துணியை நன்றாகத் தேய்த்துப் புதிதாக்கிக் கொடுப்பாங்க! ம்ம்ம்ம், இங்கே ஏதோ தப்பாய்ச் சொல்றேனோ? அதே போல் மெல்லிய ஜார்ஜெட் புடைவைகளும் அருமையா இருக்கும். ஒரு வகைப் பருத்திப் புடைவையை ஓர் மோதிரத்துக்குள் நுழைச்சுக் காட்டுவாங்க. கட்டுவதற்கே அருமையா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாந்தனி துணிகள், குஜராத்தின் பாட்டண் நகரத்திலும் புகழ்பெற்றவை. ராஜஸ்தான் மற்றும் குஜராத் கைவேலைகள் ரொம்பவே சிறப்பாயிற்றே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  7. அழகான பயணம்,அழகான படங்கள்
    அருமை அண்ணா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

      நீக்கு
  8. பள்ளி பருவத்தில் சுற்றுலா செல்லும் போது மாணவிகள் நாங்களும், ஆசிரியர்களும் பஸ்ஸில் ஆடியது நினைவுக்கு வருது.

    இப்போது கல்யாணவீடுகளில் மாலை இடம்பெறும் நலுங்கில் மாப்பிள்ளை, பெண், உறவினர்கள்( சிறியவர் முதல் பெரியவர்கள் ஆடுவது நடைபெறுகிறது. பெண்ணின் மாமியார் ஆடினார்அழகாய், பாடினார் இனிமையாய்.

    ரோஷ்ணிக்கு காதணி, கழுத்தணி வாங்கியது படித்ததும் என் அப்பாவின் நினைவு வந்து விட்டது.

    என் அப்பா எங்கு போனாலும் பாசி மாலைகள் வித விதமாய் வாங்கி வருவார்கள்.

    காணொளி அருமை.
    அப்பளபூ தேய்ப்பது போல் தேய்க்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளிப்பருவ ஆட்டம் - இப்போது கல்லூரி நண்பர்கள் மே மாதத்தில் சந்தித்த போது ஒரு நண்பர் தெலுங்கு பாட்டு ஒன்றிற்கு நடனமாடினார்..... பள்ளி/கல்லூரி நாட்கள் - அந்த மகிழ்ச்சிக்கு ஈடேது!

      ஆமாம் இந்தக் கால கல்யாணங்களில் - குறிப்பாக வடக்கில் நடக்கும் திருமணங்களில்/வரவேற்பு நிகழ்ச்சிகளில் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்! :)

      பதிவு உங்கள் அப்பாவினை நினைவூட்டியதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

      நீக்கு
  9. காணொளி மிக அருமை.... அதில் உள்ள பேசுக்களும் சுவாரஸ்யம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. வணக்கம் நண்பரே
    தங்களின் பயணத்தில் கலந்து கொண்டது போன்னற அனுபவம் கிடைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி சோலச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. sசுவாரசியம் சேர்க்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    படங்களுடன் பயணம் அருமை. பாஃப்டா பஜ்ஜி செய்முறை நன்றாக இருந்தது. தேய்த்து போடுவது கடலை மாவா? போஹா என்பது அவல் உப்புமாதானே... அடுத்து எந்த இடம் என்பதை அறிய ஆவலுடன் பயணிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேய்ப்பது கடலை மாவு என்று தான் நினைக்கிறேன். ஆமாம் அவலே போஹா என்று தான் அழைக்கிறார்கள் வடக்கே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி kஅமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....