படத்தில் தெரிவது நண்பர் பத்மநாபன் இல்லை...
திருவரங்கத்தில் தேரோட்டம் சமயத்தில் எடுத்த படம்...
ஹாய்…. வணக்கம். நான் பத்மநாபன்,
தில்லிவாசி! உங்கள் அனைவரையும் இப்பதிவு மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி!
ஒரு முப்பது வருஷத்துக்கு முந்தைய
கதைய இப்போது சொல்லட்டுமா?
விதி வலிது. இல்லாவிட்டால் வெங்கட்
இந்த கதையை கேட்டு, அவரது வலைப்பூவில் இரவலாக கொஞ்சம் இடம் தருவாரா!
அப்போது எங்கள் ஊரில்
தெற்குத்தெருவில் ஒரு கோயில் விழாவில் கருத்தரங்கம் நடந்தது. தலைப்பு (1) அரசியல்
பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்; (2) ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்; (3) உரைசால்
பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
கருத்தரங்கம் அருமையாக முடிந்தது.
ராத்திரி ரொம்ப நேரம் ஆயிற்று. எங்க வீடு வடக்குத்தெருவில். நல்லவேளை, கூடவே
நண்பன் பிரேம்குமார் இருந்தான். வழியில் பிரேம்குமார் கேட்டான்! ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் அப்படின்னா
என்னடே! சிலப்பதிகாரத்தில் யார் செய்த ஊழ்வினை எல்லோரையும் ஒரு வழி ஆக்கியது!
இல்லை, அவரவர் ஊழ்வினை அவரவரை பற்றியதா என்று எங்கள் அறிவுக்கு எட்டியது போல
பேசிக்கிட்டே வீட்டுக்கு வந்து விட்டோம். சின்னவயசுல அம்மாவின் புடவைத்தலைப்பை
பிடித்து நடந்தால் ஒரு தைரியம் கிடைக்கும் அல்லவா, அதுபோல நாங்கள் இந்த தலைப்பை
பிடித்துகொண்டு நடுராத்திரி பயப்படாமல் வீடு சேர்ந்தோம். இல்லாவிட்டால்
தெற்குத்தெருவில் இருந்து வடக்குத்தெரு வருவதற்குள் ரண்டுதடவை ஒண்ணுக்கு வரும்.
ரண்டுதடவை மண்டை பயத்தில் வியர்க்கும். ஊருல தெருவிளக்கு வேற எரிந்து தொலைக்காது.
இந்தப்பய பிரேம்குமார் வேற சும்மா இருக்க மாட்டான். திடீர்னு ஏதோ சத்தம்
வருதுல்லாம்பான். இல்லேன்னா ஏதோ முடிகரிஞ்ச வாஸனை வருதுல்லாம்பான். அவன் அப்படி
கேட்டதற்கு பின் மயான அமைதியா இருந்தால் கூட சத்தம் கேட்பது மாதிரி இருக்கும்.
கரிஞ்சமுடி வாஸனை கூடவே மல்லிகைப்பூ வாஸனையும் சேர்ந்து அடிப்பது மாதிரி
இருக்கும். அன்னைக்கு ஊழ்வினை தலைப்பு புண்ணியத்தில் வீரமாக வீடு வந்து
சேர்ந்தோம்.
சரி, அந்த கதை இருக்கட்டும்.
இப்படித்தான் அப்போது நான் விவேகானந்தா கேந்திரா வள்ளியூர் கிளையில் கொஞ்சநாட்கள்
கேந்திர தொண்டராக பணியாற்றிய போது கிடைத்த ஒரு அனுபவம் நினைவு வந்தது. எனக்கு
ஒதுக்கப்பட்டு இருந்த பணி கிராமங்களில் இளைஞர்கள் பண்பாட்டு முகாம் அமைத்து நல்ல
காரியங்கள் செய்ய அந்த ஊர் இளைஞர்களை ஊக்குவிப்பது. குற்றாலத்தில்
முகாமிட்டிருந்தோம். ஐந்தருவியில் இருந்து சற்று தொலைவில் முகாம். நான்கு நாட்கள் முகாம் நல்லபடியாக முடிந்து
மூட்டை முடிச்சுகளை எல்லாம் கட்டி தயாராக வைத்து விட்டு வள்ளியூரில் இருந்து வரும்
கேந்திர ஜீப்பிற்கு நானும் அந்தப்பகுதி கேந்திரத்தொண்டர் நண்பர் சிவராஜனும்
காத்திருந்த நேரம் நண்பரின் வாயில் இருந்து ஊழ்வினை உருத்து வந்து ஊட்டியது.
ஜீப் வருவதற்கு நேரமாகும் போல
இருக்கு. அருவியில் அழகாக தண்ணீர் விழுது. ஒரு எட்டு போய் குளித்துவிட்டு வந்து
விடுவோம்ன்னு ஆசையை கிளப்பி விட்டார். மனுக்ஷன் ஆழ்வார்குறிச்சிகாரர். சீசன்
சமயத்தில் வாரத்துக்கு இரண்டு தடவையாவது குற்றாலக்குளியல் போட்டு விடுவார். நானும்
சரின்னு சொல்லி கிளம்பினோம். அருவி இன்னால்லா இருக்கு. வேட்டி சட்டையெல்லாம்
எதுக்கு. நாம துண்டு மட்டும் கட்டிக்கிட்டு போய் குளியல் போட்டுக்கொண்டு
வந்திருவோம்னு சொல்ல, ஆஹா! அப்படியே ஆகட்டும் என்று வழி மொழிந்து குளிக்கச்
சென்றோம். கூட்டம் இல்லை. அருமையான குளியல். நேரம் போனதே தெரியவில்லை. என்ன
சிவராஜன், ஒரு ஒண்ணரை மணிக்கூர் குளியல் போட்டுருப்பமா!
ஒருவழியா முகாம் வந்து பார்த்தால்
மூட்டை முடிச்சு ஒண்ணும் காணோம். வெறும் ஈரத்துண்டோடு வெடவெடன்னு நடுக்கத்திலும்
வியர்த்துப்போச்சு. நல்ல வேளையாக பக்கத்தில் இருந்த பெட்டிக்கடைக்காரர், சார்,
உங்க கேந்திர ஜீப் வந்து சாமான்களையெல்லாம் எடுத்துட்டு போய் விட்டது. கொஞ்ச நேரம்
காத்திருந்து பார்த்து விட்டு அவசரமாக திரும்பி போகவேண்டுமாம். உங்களை பஸ்ஸில்
வள்ளியூர் போய் விடச் சொன்னார். அதெல்லாம் சரிதான். அவசரத்தில் எங்களுடைய உடைமைகள்
இருந்த பெட்டியும் சேர்த்து எடுத்து போனதுதான் கொடுமை!
கையில காசு வேற இல்லை. இடுப்பில்
உள்ள ஒத்த துண்டு. கூடவே நண்பரும் அதே நிலையில். அடுத்து என்ன. அந்த காலத்தில்
செல்போன கண்டமா, இல்லை சிவலோகம் கண்டமா! அப்படியே நடந்துகிட்டே யோசிப்போம் என்று
நடக்க ஆரம்பித்தோம். நண்பர் சொன்னார் எப்படியாவது கடையம் போய்விட்டால் கடையம்
பகுதி கேந்திர நண்பர் சபாபதியை சரணடையலாம். சபாபதியை சரணடைய நடராஜாவே துணையென
நடக்க ஆரம்பித்தோம்.
வெறும் இடுப்புத்துண்டுடன் இரண்டு
பேர் குற்றாலத்தில் இருந்து கடையம் நோக்கி பயணம். வழியில் இதே கோலத்தில்
இன்னொருவர் சேர்ந்து கொண்டார். எங்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம்
என்னவென்றால் நாங்கள் குற்றாலக் குளியல் போட்டு வந்தவர்கள். அவரோ மாதக்கணக்கில்
குளிக்காதவர். எங்களிடம் இடுப்புத்துணியைத் தவிர வேறொன்றும் இல்லை. அந்த மனிதரிடம்
இடுப்புத்துண்டுடன் கையில் ஒரு அலுமினிய தட்டும், நாய் விரட்ட ஒரு கம்பும்
கூடுதலாக.
அந்த மனிதருக்கு சந்தோஷமான
சந்தோஷம். பின்னே ஒண்ணுக்கு ரெண்டாக கம்பெனி கிடந்தால் சும்மாவா. நாங்களோ அவரிடம்
இருந்து விலகி விரைய அவரோ கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் கூடவே வந்து விட்டு பின்
என்ன நினைத்தாரோ விலகி விட்டார். நல்ல வேளையாக வழியில் உள்ள ஒரு சிறிய கிராமம்
ஒன்றில் நண்பர் சிவராஜனுக்கு தெரிந்தவர் தட்டுப்பட அவரிடம் ஐந்து ரூபாயோ பத்து
ரூபாயோ பெற்று பஸ் பிடித்து கடையம் வந்து
சேர்ந்தோம். இந்த நிகழ்விற்குப்பின் நானும் சிவராஜனும் மிக நெருங்கிய நண்பர்கள்
ஆகிவிட்டோம்.
இந்த நடைபயணத்தின் போது நண்பர்
சிவராஜனிடம் கேட்ட கேள்வி- ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் அப்படின்னா என்ன
என்று. அவர் திருப்பிக் கேட்டார், நீங்கள்
எப்போதாவது யாருடைய ஆடையையாவது உருவி ஓடவிட்டிருக்கிறீர்களா? என்று.
நட்புடன்
இரா.ஈ. பத்மநாபன்
பின்குறிப்பு:
என்னுடைய காஃபி வித் கிட்டு பதிவில் சொன்ன ஒற்றைத்துண்டுடன் கதை இது. இந்த சனிக்கிழமை
இரவுதான் எழுதி அனுப்பினார். தனியாக வலைப்பூ ஆரம்பித்து எழுதவில்லை என்றாலும்
அவ்வப்போது இங்கே எழுதும் படிச் சொல்லி இருக்கிறேன். அவர் சந்தித்த கதை மாந்தர்கள்
பற்றி வெகு சுவையாக சொல்வார் – அது பற்றியும் எழுதச் சொல்ல வேண்டும். – வெங்கட்.
குட்மார்னிங் வெங்கட்... புதிய முயற்சி...
பதிலளிநீக்குமுன் கதை அறிமுகக்கதையா? அதிலிருந்தே தொடர்வரியை உருவிக் கொள்கிறார் நண்பர் பத்மநாபன்...
காலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குஇதற்கு முன்னரும் அவரது கவிதைகள் சில என் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறேன். தொடர்ந்து எழுத வேண்டும் எனச் சொல்லி இருக்கிறேன் - பார்க்கலாம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
சுவாரஸ்யமான அனுபவம்தான். ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார் நண்பர். அப்போது அந்த அனுபவம் எப்போது ஒரு முடிவுக்கு வரும் என்று நினைக்க வைத்திருக்கும்.... இப்போது மறக்க முடியாத புன்னகை அனுபவமாகிவிட்டது!
பதிலளிநீக்குஆமாம். இந்த நிகழ்வு பற்றி சில நாட்களுக்கு முன்னர் சொன்ன போது நாங்கள் இருவரும் அப்படிச் சிரித்தோம். நடந்த போது கஷ்டமான அனுபவமாகத் தான் இருந்திருக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
எனக்கும் டவுனுக்கு போய்விட்டு துண்டுடன் வீடு வந்த அனுபவம் ஒன்று உண்டு. சுருக்கமாக எங்கள் தளத்தில் முன்பு சொல்லி இருந்தேன்! அது தஞ்சையில், பல வருடங்கள் முன்பு....
பதிலளிநீக்குஆஹா... உங்களுக்கும் இப்படியான அனுபவம் உண்டா? படித்த நினைவில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நண்பரிடம் ஐந்து ரூபாயோ பத்து ரூபாயோ பெற்றார், சரி, உடைக்கு என்ன செய்தார்?!!!!
பதிலளிநீக்குநண்பர் அலுவல் விஷயமாக ஜம்மு சென்றிருக்கிறார். வந்ததும் பதில் சொல்வார் என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து துண்டுடன் தான் பேருந்து பயணமும் என நினைக்கிறேன். கடையத்தில் உறவினர் வீட்டில் வேஷ்டி வாங்கிக் கொண்டார் என்று சொன்னதாக நினைவு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
முடிவில் நல்ல கேள்வி...! ஹா... ஹா...
பதிலளிநீக்கு"சற்று முன் தானே எங்கள் Blog சென்று வந்தேன்... மறுபடியும் ஒரு பதிவா...?" என்று ஒரு நொடி நினைத்து விட்டேன்... பிறகுதான் "Side Gadgets" ஞாபகம் வந்தது... ஹிஹி...
சற்று முன் தானே எங்கள் பிளாக் சென்று வந்தேன்... மறுபடியும் ஒரு பதிவா... :))))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
ஆகா, திருநெல்வேலிக்காரரா? பேச்சு நயத்துடன் சொல் நயமும் சேர்ந்து கொண்டது. அருமையான நிகழ்வைக் கதையாகச் சொல்லி இருக்கார். முன்னெல்லாம் இவர் பின்னூட்டங்களைப் பார்த்த நினைவும் இருக்கு. இன்னும் சொல்லச் சொல்லுங்க! எ.பியில் கேட்டு வாங்கிப் போடும் கதை போலச் செவ்வாய்க்கிழமை உங்க வலைப்பக்கமும் கேட்டு வாங்கிப்போடும் கதை! :)
பதிலளிநீக்குநாகர்கோவில் அருகே உள்ள ஊர் - இராஜாக்கமங்கலம் தான் அவர் ஊர். என் பதிவில் பின்னூட்டங்களும், சில கவிதைகளும் எழுதி இருக்கிறார். இப்போதெல்லாம் நேரப் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து பின்னூட்டங்கள் தர இயலவில்லை. தொடர்ந்து எழுதச் சொல்லி இருக்கிறேன். பார்க்கலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
இதிலே சொன்ன தலைப்புகளிலே சிலப்பதிகாரப் பட்டிமன்றங்கள் பள்ளியிலும் திரு குன்றக்குடி அடிகளாராலும் நடத்தப்பட்டுப் பங்கு பெற்றும் பங்கு பெறாமல் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்திருக்கிறேன். அது ஒரு கனாக்காலம்! :)
பதிலளிநீக்குஆஹா... பட்டமன்றங்களில் அதுவும் குன்றக்குடி அடிகளாரின் பட்டிமன்றங்களில் பேசி இருக்கிறீர்களா... அனுபவங்களை எழுதுங்களேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
பேச்சு நயத்துடன் "எழுத்து" நயமும் சேர்ந்து கொண்டது என வந்திருக்கணும். :) சிலருக்குப் பேச வரும், எழுத வராது. இவருக்கு இரண்டும் கைவந்த கலையாக இருக்கு!
பதிலளிநீக்குநல்ல திறமைசாலி - அவரிடம் இருக்கும் திறமைகள் நிறையவே. தொடர்ந்து எழுதச் சொல்லி இருக்கிறேன் பார்க்கலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
என் கணவரின் தாத்தா வசித்த ஊர் ஆழ்வார்குறிச்சி.
பதிலளிநீக்குஅதனால் சொந்த ஊர் எது என்று கேட்டால் என் மாமனார் ஆழ்வார்குறிச்சி என்று தான் சொல்வார்கள்.
ஊர் அழகு. இயற்கை அழகு. பரமகல்யாணி கோவில் அழகு.
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது உண்மையே!
கதை நன்றாக இருக்கிறது. அனுபவ கதை இல்லையா!
எங்கள் அலுவலகத்தில் ஒரு ஆழ்வார்க்குறிச்சிக் காரர் முன்பு இருந்தார். பிறகு வேலையை விட்டு, வேறு வேலைக்குச் சென்றார். உங்கள் கணவரின் தாத்தாவின் ஊரும் ஆழ்வார்க்குறிச்சி தானா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
சுவாரஸ்யமான சொல் நடை!! பிச்சைக்காரரரரின் துணை நகைச்சுவை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.
நீக்குஉண்மை தான்..
பதிலளிநீக்குஊழ்வினை மீண்டும் வந்து கணக்கை சரி செய்தே தீரும்!...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குஅருவி இன்னால்லா - அருவி இன்னால - இதோதானே, இங்கனக்குள்ள இருக்கு என்று அர்த்தம். திருநெவேலி பாஷைல அனுபவம் படிக்க நல்லா இருந்தது.
பதிலளிநீக்குநம்ம இப்போ கேட்க ஆச்சர்யமா இருக்கே தவிர, சட்டையில்லாமல் பயணிப்பது அபூர்வம் இல்லை. ஈரத் துண்டுடன் நடராஜா பயணம் அபூர்வம்தான். மொழிநடை நல்லா வந்திருக்கு. குற்றாலம், ஆழ்வார்குறிச்சி நினைவில். வந்துபோனது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குமுதலில் இது என்ன இன்னொரு எபி யா என்று நினைக்கத் தோன்றியது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்கள் நண்பரின் அனுபவத்தை நகைச்சுவையாக,கருத்தரங்க தலைப்பை மேற்கோள் காட்டி அவர் விவரித்து எழுதியது மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் வெறும் துண்டுடன் வெகுதூரங்களை கடந்த அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் அந்த பொழுது மட்டுமின்றி, வாழ்நாள் முழுதும் அனுபவ பாடமாக இருக்கும். ஆக எது நடக்க வேண்டுமென்று உள்ளதோ அது கண்டிப்பாக நடந்து விடுகிறது. தவிர்க்க இயலவில்லை. விதி என்றுமே வலியதுதான்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குஎங்கள் தம்பி பத்மநாபனுக்கு பள்ளிப் பருவத்திலிருந்தே இலக்கிய ஆர்வம் அதிகம். - சுப்புலட்சுமி
பதிலளிநீக்குதங்களது முதல் வருகை. மிக்க மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்புலக்ஷ்மி கண்ணன் ஜி.
//நண்பரிடம் ஐந்து ரூபாயோ பத்து ரூபாயோ பெற்றார், சரி, உடைக்கு என்ன செய்தார்?!!!!//
பதிலளிநீக்குபாதி தூரம் நடை பயணம். பாதி தூரம் அதே ஒற்றை துண்டுடன் பஸ் பயணம். பஸ் பயணத்தில் யாரும் வித்தியாசமாக பார்த்ததாக நினைவில்லை. தில்லை சபாபதி கையில் உடுக்கை இருப்பது போல இங்கே நெல்லை சபாபதி பையில் உடுக்கை இருக்கும் என்ற நம்பிக்கை பொய்க்கவில்லை. கடையம் வந்ததும் நண்பர் சபாபதியின் வேட்டியும் தொள தொள சட்டையும் கிடைத்தது.
வேட்டியும், தொளதொள சட்டையும்! ஹாஹா... நீங்க என்றும் இருபத்தி எட்டு ஆச்சே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
ஹா ஹா ஹா அண்ணாச்சி!! (இனி எங்களுக்கும் நீங்க அண்ணாச்சியேதான்!!!) உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே ண்பர் சபாபதி!!! செம உங்களின் இந்த வார்த்தை இங்கு சொல்லாடலாய் பயன்படுத்தியதை மிகவும் ரசித்தேன்!!!
நீக்குஉங்களின் டப்பு டப்பு மாமாவையும் பார்த்து பழகியாச்சு.. அடுத்த கதைக்கு வெயிட்டிங்க்...
கீதா
அண்ணாச்சி - நான் அவரை அண்ணாச்சி என்று சொல்ல, அவரும் என்னை அப்படியே அழைப்பார் சில சமயங்களில் - என்னைவிட பெரியவராக இருந்தும் - இந்த சொல் எங்களுக்கு பழகி விட்டது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
பதிவிட வாய்ப்பளித்த நண்பர் வெங்கட் அவர்களுக்கும், பின்னூட்டத்தில் நம்பிக்கையூட்டிய அனைவருக்கும் நன்றிகள் பல.
பதிலளிநீக்குஅண்ணாச்சி - என் மனதில் மட்டுமல்ல, வலைப்பூவிலும் உங்களுக்கு இடம் உண்டு! எப்போது வேண்டுமானாலும் இங்கே நீங்கள் எழுதலாம். தொடர்ந்து எழுதுங்கள். விரைவில் உங்கள் அடுத்த பதிவினை எதிர்பார்த்து....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
ஓ அண்ணாச்சியா!!! அதான்ச் ஸ்ரீராமும் அப்படிச் சொல்லியிருந்தாரா?!!! அண்ணாச்சி ரொம்ப நல்லா எழுதறீங்க...நிறைய எழுதுங்க...
நீக்குஉங்கள் பின்னூட்டங்கள், கவிதைகள் இங்குவ் வெங்கட்ஜியின் தளத்தில் வாசித்திருக்கிறோம். நாகர்கோவில் வழக்கைக் கேட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது உங்கள் வழி கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
கீதா
தொடர்ந்து எழுதச் சொல்லி நானும் கேட்டிருக்கிறேன். தொடர்ந்து எழுதுவார் என்று நம்புவோம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
அட தங்கள் நண்பர் திரு பத்மநாபன் நாகர்கோவில்காரரா? ராஜாக்கமங்கலம் அழகான ஊர். கிராமம்.கடற்கரை அருகில் உள்ளது கடல் நீர் உள் வாங்கி ஒரு ஏரி யும் உண்டு. ராஜாக்கமங்கலம் துறையில் கடற்கரையும் உண்டு. அவர் கல்லூரி படிப்பு எல்லாம் நாகர்கோவில் தானா?
பதிலளிநீக்குரொம்ப நன்றாக எழுதியிருக்கிறார். நகைச்சுவை உணர்வுடன். அதுவும் கடைசி பாரா சிரித்தே விட்டோம்...அருமை
கீதா: அதே எங்கள் கருத்துடன் கல்லூரி ஹிந்துக் கல்லூரியில் படித்தாரா?
ஆமாம் கடற்கரையோர ஊர் தான். அந்த ஊர் மக்கள் பற்றியும், அந்த கிராமிய சூழல் பற்றியும் நிறையவே பேசுவார். சுவையாகச் சொன்ன பல விஷயங்களை எழுதவும் சொல்லி இருக்கிறேன். பார்க்கலாம்....
நீக்குஹிந்து கல்லூரியில் படித்தாரா... தெரியவில்லை. கேட்டுச் சொல்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!