ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 22
இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது
ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது.
அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
அடுத்த நாள் காலையில் – எங்கள் பயணத்தின்
கடைசி நாள் காலையில் தங்குமிடத்தில் குளித்துத் தயாராகி – அப்போதே அறையையும் காலி
செய்து உடைமைகளை வாகனத்தில் வைத்துக் கொண்டு புறப்பட்டோம். அன்றைக்கு முழுவதும் ஜோத்பூர்
சுற்றுவது தான் திட்டம். ஜோத்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகம் – ஆனால் எங்களிடம்
இருந்தது ஒரே ஒரு நாள். அன்றைக்கு இரவுக்குள் புறப்பட்டு அடுத்த நாள் காலைக்குள்
தில்லி சென்று சேர வேண்டும் – அடுத்த நாள் அலுவலகமும் செல்ல வேண்டும்! அதனால்
காலையிலேயே புறப்பட்டு விடுவது நல்லது என புறப்பட்டோம். முதல் நாள் ஜோத்பூரில்
செய்த ஒரு விஷயம் விட்டுப் போனது. அது ஷாப்பிங்…. ஜோத்பூரில் இருக்கும் National
Handloom Mall – நான்கு மாடிகள் கொண்ட அந்த இடத்தில் ஒன்றரை இரண்டு மணி
நேரத்திற்கு ஏதேதோ வாங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் நண்பர் ஒருவரும்
வாகனத்திலேயே இருந்து விட்டோம்.
ஜோத்பூர் அய்யப்பன் கோவில் திருவிழா சமயத்தில்...
முதல் நாள் இரவே அய்யப்பன்
கோவிலில் காலையில் நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும் எனச் சொல்லி
இருந்தார்கள். அதனால் நிச்சயம் பூஜைகளில் கலந்து கொண்ட பிறகு தான் ஊர் சுற்றல்
என்று சொல்லி விட்டார் நண்பர். காலையில் சீக்கிரம் புறப்பட்டதற்கு அதுவும் ஒரு
காரணம். தங்குமிடத்திலிருந்து வெகு அருகில் தான் அமைந்திருந்தது ஜோத்பூர்
அய்யப்பன் கோவில். அதனால் முதலில் சிலர் கோவிலுக்கு நடந்து சென்றுவிட, நானும்
இரண்டு நண்பர்களும் தங்குமிடத்தினைக் காலி செய்து அறைச் சாவிகளைக் கொடுத்து
கட்டணம் கொடுத்ததற்கான ரசீது பெற்றுக் கொண்டு வாகனத்துடன் கோவிலுக்குச் சென்று
சேர்ந்தோம்.
ஜோத்பூர் அய்யப்பன் - இணையதள முகப்பு....
முற்றிலும் பக்தர்கள் கைங்கர்யத்தில்
தான் கோவில் நடந்து கொண்டிருக்கிறது. ஜோத்பூர் வாழ் மலையாள அன்பர்கள் சேர்ந்து 1976-ஆம்
ஆண்டே இங்கே ஒரு அய்யப்பன் கோவில் தேவை என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். 1981-ல் சங்கம்
உருவாக்கி பக்தர்களிடம் பணம் பெற்று, தற்போதைய கோவில் இருக்கும் இடத்தினை வாங்கி
இருக்கிறார்கள். தற்காலிக கொட்டகையில் செயல்பட்டு வந்த கோவில், முழுமையாக கோவிலாக
உருவானது 1996-ஆம் ஆண்டு! 15 மார்ச் 1996 அன்று கும்பாபிஷேகம் நடத்தப் பட்டது. மீண்டும்
15 ஜனவரி 2016-ல் புன: பிரதிஷ்டா நடைபெற்றதாம். இந்தத் தகவல்கள், படங்கள் கோவிலின்
இணையதளத்திலிருந்து!
கோவிலுக்கு முகநூல் பக்கம் கூட இருக்கிறது! சபரிமலையின் முதன்மை தந்த்ரி தான்
இங்கே கும்பாபிஷேகம் செய்து வைத்திருக்கிறார்.
தாள வாத்தியமில்லா திருவிழாவா?
ஜோத்பூர் அய்யப்பன்....
காலை நேரத்தில் அய்யப்பனின் திவ்ய
தரிசனம். அப்போது தான் அன்றைய பூஜைகள் முடிந்து அய்யப்பனின் தரிசனம்
ஆரம்பித்திருந்தது. கோவிலில் இருந்த ஒவ்வொரு சன்னதியிலும் [பிள்ளையார், சிவன்,
கிருஷ்ணர், முருகன், நாகராஜா, புவனேஷ்வரி] சென்று தரிசனம் கண்டு களித்தோம். அந்தக்
காலையிலும் சிலர் அங்கே தொண்டு செய்து கொண்டிருந்தார்கள். தரிசனம் செய்து
முடித்தபோது அங்கே தொண்டு செய்து கொண்டிருந்த ஒருவர் எங்கள் குழுவிலிருந்த பெண்களிடம்
பாட்டுப் பாடச் சொன்னார்கள். இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். தில்லி திருமலா
திருப்பதி தேவஸ்தான கோவிலில் இவர்கள் அனைவரும் பாட்டுப் பயிற்சி எடுத்துக்
கொள்கிறார்கள். அதனால் உடனே அமர்ந்து பாட்டுப் பாடத் துவங்கினார்கள். ஒன்றிரண்டு
பாடல்களுக்குப் பிறகு எங்கள் அனைவரையும் அழைத்து காலைச் சிற்றுண்டி [மலையாளத்தில்
பக்ஷணம்] சாப்பிடச் சொன்னார்கள்.
ஜோத்பூர் அய்யப்பன்....
தலியா என ஹிந்தியில் அழைக்கப்படும்
கோதுமை ரவையில் உப்புமா, வாழைப்பழம், தேநீர் என சுகமான சிற்றுண்டி! Use and throw தட்டுகளில்
கொடுப்பதில்லை. எவர்சில்வர் தட்டுகள் நிறைய வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும்
அதனைப் பயன்படுத்தி விட்டு சுத்தம் செய்து வைக்க வேண்டும் – நல்ல விஷயம். குப்பைகளைத்
தவிர்ப்பது பாராட்டுக்குரிய விஷயம். அனைவருக்கும் தேவையான அளவு உப்புமா
கொடுத்தார்கள். திவ்யமாகச் சாப்பிட்டு முடித்தோம். அய்யப்பன் அருளால் காலைச்
சிற்றுண்டி திவ்யமாக முடிந்தது. தாங்கள் பாட்டுப் பாடியதால் தான் எல்லோருக்கும்
உப்புமா கிடைத்தது என குழுவில் இருந்த பெண்மணிகள் சொல்லிக் கொண்டார்கள் [சுதா ஜி! நீங்க சொன்ன மாதிரியே சொல்லிட்டேன்!]
பாட்டுப் பாடி பரிசில் பெறுவது வழக்கமாயிற்றே – இங்கே பாட்டுப் பாடி பெற்றது
உப்புமா!
காலை
உணவுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஜோத்பூரில் குடியிருந்த மலையாளி மக்கள் வர
ஆரம்பித்தார்கள். வரிசையாக பூஜைகள் நடந்தபடியே இருந்தது. எல்லா பூஜைகளிலும் கலந்து
கொள்ளலாம் என்றால் மாலை வரை அங்கேயே இருக்க வேண்டியது தான். எங்களுடன் பேசிக்
கொண்டிருந்த கோவில் நிர்வாகத்தினரும் எங்கள் திட்டம் பற்றிக் கேட்டதோடு மதியம்
நிச்சயம் இங்கேதான் மதிய உணவாக பிரசாதம் பெற வரவேண்டும் எனக் கேட்டுக்
கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி கோவிலிலிருந்து புறப்பட்டோம்.
அய்யப்பன் அருளால் காலைச் சாப்பாடும் சுவையான தேநீரும் முடிந்தது. பிறகு என்ன
ஜோத்பூர் சுற்ற வேண்டியது தான். அய்யப்பன் கோவில் உண்டியலில் கொஞ்சம் காணிக்கையைச்
செலுத்தி மீண்டும் அய்யனைத் தரிசித்த பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். அன்றைய
பொழுது சிறப்பாக அமைந்திட அய்யன் அருள் புரியட்டும்.
அன்றைய
பொழுதில் ஜோத்பூரில் என்ன பார்த்தோம், அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை வரும்
பதிவில் சொல்கிறேன்.
பயணம் நல்லது! ஆதலினால் பயணம்
செய்வோம்!
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
குட்மார்னிங் வெங்கட். படங்கள் அழகு. பின்னர் வருகிறேன். பூஜை மும்முரம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅருமை... தகவல்கள் பலருக்கும் உதவும்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஉப்புமாக் கச்சேரி என்று சொல்லி, உங்க நண்பர் எழுதச் சொன்னதற்கு அர்த்தமே இல்லாமப் பண்ணிட்டீங்களே வெங்கட்.ஹா ஹா
பதிலளிநீக்குஹாஹா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
அழகான படங்கள்.
பதிலளிநீக்கு//
அய்யப்பன் அருளால் காலைச் சாப்பாடும் சுவையான தேநீரும் முடிந்தது.//
அய்யப்பன் அருளால் பயணமும் நன்றாக இருந்து இருக்கும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குமைலையாளிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஸ்ரீ அய்யப்பன் கோவில்கள் உதவும்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குபடங்கள் அனைத்தும் அருமை. செண்ட மேளத்தை வீடியோ எடுத்திருக்கலாம்
பதிலளிநீக்குபடங்கள் - கோவில் தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. நாங்கள் சென்றபோது படங்கள் எடுக்கவில்லை - கோவிலில் படம் எடுக்க அனுமதி இல்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நாங்க 90 ஆம் ஆண்டே ராஜஸ்தானை விட்டுக் கிளம்பி குஜராத் போயாச்சு. அதனால் இந்தக் கோயில் பற்றி அறிந்திருக்கவில்லை. மேலும் ஜோத்பூர் வெஸ்டர்ன் கமான்டில் வருது. நம்ம ரங்க்ஸ் இருந்தது சதர்ன் கமான்ட்! :) ஆகவே வாய்ப்பும் இல்லை.
பதிலளிநீக்குஇடம் கிடைத்தாலும் கோவில் அமைந்தது 1996-ல். அதற்கு முன்னர் டெண்ட் கொட்டகையில் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
முன்னெல்லாம் அம்மா கோதுமை ரவையில் உப்புமா பண்ணும்போது கோபமாக வரும். இப்போப் பண்ண நினைச்சாலும் பண்ண முடியலை. ரங்க்ஸுக்குக் கோபமா வருது! இஃகி , இஃகி, இஃகி. :)
பதிலளிநீக்குஹாஹா... உப்புமா என்றாலே ஒரு அலறல் தான் - அது எதில் செய்தாலும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...