புதன், 1 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சிட்டி பேலஸ் – எதை விட எதைச் சொல்ல…



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 12

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


சிட்டி பேலஸ் உதய்பூர், வெளிப்புறத் தோற்றம்






 சிட்டி பேலஸ் உதய்பூர், வெளிப்புறத் தோற்றம்



சிட்டி பேலஸ் உதய்பூர்,  பிச்சோலா ஏரிக்கரையில்....

அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ளே நுழைந்த பிறகு ஒவ்வொரு இடமாகப் பார்த்தபடியே வந்தோம். நான் என்னுடைய DSLR-ல் 255 mm zoom lens கொண்டு படங்கள் எடுக்க, நண்பரின் மகள் 18-135 mm zoom lens கொண்டு படங்கள் எடுத்தார். அருகே இருக்கும் வேண்டிய படங்களை அவரும், நன்கு zoom செய்ய வேண்டிய படங்களை நானும் எடுக்க வேண்டும் என முன்னரே திட்டமிட்டோம். ஒவ்வொரு முறையும் லென்ஸ் மாற்றி எடுப்பதென்றால் – ஒன்று நேர விரயம், மற்றொன்று சிரமம் – எத்தனை முறை மாற்ற வேண்டும்! வெளிநாட்டவர் சிலர் இரண்டு கேமராக்களைக் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததுண்டு! ஒரு கேமராவில் 18-55 லென்ஸும், மற்றதில் அதிக zoom வசதி கொண்ட லென்ஸும் போட்டு வைத்திருப்பார்கள்.


சிட்டி பேலஸ் உதய்பூர்,  சிறு பீரங்கி... 


சிட்டி பேலஸ் உதய்பூர், வெளிப்புறத் தோற்றம்


சிட்டி பேலஸ் உதய்பூர், வெளிப்புறத் தோற்றம்

மாளிகை முழுவதுமே மார்பிள் மற்றும் கிரானைட் கொண்டு கட்டி விட்டார்கள் போலும். எங்கும் மார்பிள், எதிலும் க்ரானைட் என்று சொல்லலாம். மேவார் இன ராஜாக்கள் இந்த அரண்மனையின் உள்ளே அமைத்திருக்கும் கட்டிடங்களில் பல வெளிநாட்டு கட்டிடக் கலை நிபுணர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் – இந்திய நிபுணர்கள் தவிர, சீனா, பெர்ஷியா போன்ற நாடுகளிலிருந்து வந்த நிபுணர்களைக் கொண்டு ஒவ்வொரு பகுதியையும் இழைத்திருக்கிறார்கள். விட்டங்களில் கூட வேலைப்பாடுகள், ஓவியங்கள் என பிரமிக்க வைக்கிறது ஒவ்வொரு பகுதியும். இந்த மாளிகைகளில் கடைசி மேவார் மன்னர்களிடம் இருந்த வரை வைத்திருந்த கலைப்பொருட்கள் அனைத்தையும் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.


சிட்டி பேலஸ் உதய்பூர் - மார்பிளில் இறைவி...


சிட்டி பேலஸ் உதய்பூர் - வாள்கள்....


சிட்டி பேலஸ் உதய்பூர் - ஆயுதங்கள்....

அருங்காட்சியகம் பார்க்கும்போதே கொஞ்சம் அரசியலும் பார்க்கலாம்! Land Ceiling Act, கொண்டு வந்த போது, பல ராஜாக்களின் சொத்துகள், அரண்மனைகள் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் ஆபத்து வந்தது. இந்த சொத்துகள் எல்லாம் அரசாங்கத்தின் கையில் சென்றால் ராஜாக்களின் வாரிசுகள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆடம்பர வாழ்க்கைக்கு கேடு வந்து விடுமே என்ற எண்ணத்தில் இந்தியாவின் பல ராஜாக்களும் செய்த வேலை – சொத்துகளை Trust ஒன்று அமைத்து அதன் பெயரில் மாற்றுவது! Trustee ஆக ராஜகுடும்பத்தினர்களே இருப்பார்கள்! சொத்து தங்களை விட்டு எங்கேயும் வெளியே போகாது! அப்படி அமைக்கப்பட்ட Trust-கள் மூலம் சொத்துக்கள் அனைத்தையும் நிர்வகிக்க முடியும்! இது தான் அந்த Via Media! பெரும்பாலான ராஜாக்கள் சுதந்திர இந்தியாவில் அரசியலிலும் இருந்தார்கள் என்பதும் ஒரு காரணம்!


சிட்டி பேலஸ் உதய்பூர் - குதிரைக்கு யானை வேஷம்...


சிட்டி பேலஸ் உதய்பூர் - அரசரின் உடற்கவசம்... 


சிட்டி பேலஸ் உதய்பூர் - மார்புக் கவசம்...

அரசியல் போதும், கொஞ்சம் ராஜாக்களைப் பற்றியும் பார்க்கலாம். மேவார் ராஜாக்களில் ரொம்பவே பிரபலமான ராஜா என்றால் மஹாராணா பிரதாப் தான். அவரைப் பற்றி பல பிரமிப்பான தகவல்களை இப்போதும் சொல்வதுண்டு. ஏழு அடி ஐந்து அங்குல உயரம் கொண்டவர் – அதாவது சராசரி உயரத்தினை விட மிக அதிகம்! அவரது கையில் வைத்திருக்கும் ஈட்டி மட்டுமே 80 கிலோ எடை கொண்டது, கத்திகள் ஒவ்வொன்றும் 25 கிலோ, அவர் அணிந்திருக்கும் கவசங்களின் எடை 72 கிலோ, காலணிகள் ஒவ்வொன்றும் ஐந்து கிலோ என்றும் சொல்கிறார்கள். போரில் எதிரி வீரர் மற்றும் வீரரின் குதிரை இரண்டையும் ஒரே வெட்டில் சாய்த்து விடும் திறம் படைத்தவர் என்றும் அவர் ஹல்தி Gகாட்டி போரில் காட்டிய வீர தீரம் பற்றியும் நிறைய கதைகள் உண்டு.


சிட்டி பேலஸ் உதய்பூர், வெளிப்புறத் தோற்றம்


சிட்டி பேலஸ் உதய்பூர் - கண்ணாடியிலும்  கலைவண்ணம்....


சிட்டி பேலஸ் உதய்பூர் - விட்டத்திலும் ஓவியம்...

மஹாராணா ப்ரதாப் மட்டுமல்ல அவரது குதிரையான சேதக் பற்றியும் நிறைய கதைகள் உண்டு. இன்றைக்கும் உதய்பூரில் ஒரு சாலை சந்திப்பில் சேதக் குதிரையின் சிலை ஒன்று கம்பீரமாக நிற்கிறது! அந்த சாலை சந்திப்பின் பெயரே சேதக் சர்க்கிள்! ஒரு போரில், தனது யானைப்படையினை அதிகமாகக் காட்ட, மஹாராணா ப்ரதாப் செய்த ஒரு யுக்தி – குதிரைகளுக்கு முகத்தில் நீண்ட தும்பிக்கை போன்று துணி கொண்டு அமைத்தது தான்! தனது வீரம் மட்டுமல்லாமல் இப்படியான யுக்திகளாலேயும் பல போர்களை வென்றவர் மஹாராணா ப்ரதாப். இப்போதும் இந்த காட்சியை நினைவு படுத்தும் விதத்தில் அருங்காட்சியகத்தில் ஒரு குதிரைச் சிலையில் கறுப்புத் துணி கொண்டு தும்பிக்கை மாதிரி செய்து வைத்திருக்கிறார்கள்.


சிட்டி பேலஸ் உதய்பூர் - குளிக்க இப்படி ஒரு அக்கப்போரா....


சிட்டி பேலஸ் உதய்பூர் - என்ன ஒரு வேலைப்பாடு... 


சிட்டி பேலஸ் உதய்பூர் - உப்பரிகை வெளிப்புறத்தில்....

அவர் அணிந்திருந்த இரும்புக் கவசமும் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். மேவார் இன ராஜாக்கள், ராணிகள் பயன்படுத்திய பல்லக்குகள், ஆயுதங்கள், Gகதை, சூலங்கள் என அனைத்தும் பார்த்தபடியே சுற்றி வந்தோம். சில இடங்களில் இருக்கும் உப்பரிகைகளில் நாங்களும் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். உப்பரிகைகளின் வெளிப்புறங்களில் கூட மார்பிள் கற்களில் அலங்காரங்கள் செய்து வைத்திருக்கிறார்கள். பெர்ஷியன் கண்ணாடிகள் கொண்டு செய்திருக்கும் அலங்காரங்கள் மிகவும் அழகாகவும் கண்களைக் கவரும் விதமாகவும் இருக்கின்றன. அலங்கார தொங்கு விளக்குகள், வெல்வெட் படுக்கைகள், வெள்ளியால் ஆன கைவினைப்பொருட்கள், அலங்கார ஆபரணங்கள், தங்க ஆபரணங்கள் என அனைத்தும் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.


சிட்டி பேலஸ் உதய்பூர் - யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட கதவு....


சிட்டி பேலஸ் உதய்பூர் - கண்ணாடி அறை...

ஒவ்வொரு பகுதியாக பார்த்தபடியே வந்தால் கொஞ்சம் ஓய்வு தேவை என கால்கள் கெஞ்சுகிறது. ஆனால் அமர்ந்து கொள்ள பெரிதாக வசதிகள் ஒன்றுமில்லை. போலவே முதியவர்களும், மாற்றுத் திறனாளிகளும் இங்கே சுற்றி வர போதிய வசதிகள் இல்லை. இந்த அருங்காட்சியகத்தினை பராமரிக்கும் ராஜ குடும்பத்தின் ட்ரஸ்ட் இந்த வசதிகளையும் செய்ய வேண்டும். ஆனால் பராமரிக்க செலவு நிறைய ஆகிறது என்கிறார்கள். அரசாங்கம் உதவி செய்தால் நல்லது என்று சொல்லிக் கொண்டு இருந்தார் ஒருவர்! ஒவ்வொரு இடமாக பார்த்துக் கொண்டே வெளியே வந்தது அரண்மனையின் வேறொரு வாசல் வழியே. அரண்மனைக்குள் உள்ளே செல்லும் வாசலும், வெளியேறும் வாசலும் வேறு வேறு என்பதால் வரும்போதே எல்லா இடங்களையும் பார்த்துக் கொண்டு வருவது நல்லது. அப்புறம் பார்க்கலாம் என்றால் முடியாது!


சிட்டி பேலஸ் உதய்பூர் - ஒரு ஆட்டம் போடலாம் வரீங்களா?


சிட்டி பேலஸ் உதய்பூர் - அலங்கார தொங்கு விளக்குகள்...

அரண்மனை வளாகத்தில் இருக்கும் மானேக் சௌக் பகுதியில் மாலை நேரத்தில் Light and Sound Show உண்டு – The Legacy of Mewar என்ற பெயர் கொண்ட அந்த ஷோவிற்கும் தனியே கட்டணம் உண்டு. ஆங்கிலம், ஹிந்தி என இரண்டு மொழிகளில் தனித்தனியான நேரங்களில் ஷோ இருக்கிறது. அரண்மனையை ஒட்டி இருக்கும் பிச்சோலா ஏரியில் படகு சவாரி செய்து லேக் பேலஸை ஒரு சுற்று சுற்றி வர வசதிகள் உண்டு. இந்தப் படகுச் சவாரிக்கான கட்டணமும் அதிகமாகத் தான் தெரிந்தது. காலை ஒன்பது மணி முதல் மதியம் மூன்று மணி வரை செல்லும் படகுச் சவாரிக்கு 300 ரூபாய் கட்டணமும், மாலை மூன்று மணி முதல் ஏழு மணி வரை செல்லும் சவாரிகளுக்கு 500 ரூபாய் கட்டணமும் வாங்குகிறார்கள். ஏன் இப்படி? மாலை நேரத்தில் சூரியன் மறையும் காட்சியைப் பார்க்க அதிகக் கட்டணம்! தனியே படகுகள் வேண்டுமெனில் கட்டணம் அதிகம். சில சார்டர்ட் படகுகளுக்கு கட்டணம் இருபதாயிரம் ரூபாய் வரை உண்டு! இந்த கட்டணங்கள் அனைத்தும் ஒரு மணி நேர படகுப் பயணத்திற்கு மட்டுமே!


சிட்டி பேலஸ் உதய்பூர் - உப்பரிகை வேறு கோணத்தில்...


 சிட்டி பேலஸ் உதய்பூர் - மார்பிளிலும் வேலைப்பாடு...

சொல்ல விட்டுப் போன இன்னுமொரு கட்டணம் – பார்க்கிங் கட்டணம்! நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 250/- பார்க்கிங் ரொம்பவே குறைவு என்பதால் பேருந்துகளுக்கு இங்கே இடமில்லை. சற்று தூரத்தில் தான் பார்க்கிங். அங்கிருந்து ஷேர் ஆட்டோக்களில் தான் வர வேண்டும் – அதற்கு தனிக்கட்டணம் என்று சொல்ல வேண்டியதில்லை!  சரி இந்த சிட்டி பேலஸ் பற்றி சொல்லும் போதே Jஜக்g மந்திர் என அழைக்கப்படும் லேக் பேலஸ் பற்றியும் சொல்லி விடுகிறேன். அங்கே தற்போது ஒரு நட்சத்திர ஹோட்டல் செயல்படுகிறது என்று சொன்னேன் அல்லவா? அங்கே ஓரிரவு தங்குவதற்கு கட்டணம் – தங்கும் நாளைப் பொறுத்து தான் – அக்டோபர் 16 Check in 17 Check Out ஆக கட்டணம் பார்த்தேன் - அதிகமில்லை லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் – இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் தான்! உங்களுக்கு ஆசையாக இருந்தால் – இங்கே முன்பதிவு செய்து கொள்ளலாம்!


சிட்டி பேலஸ் உதய்பூர் - ஒரு ரவுண்டு போலாமா....

என்ன நண்பர்களே, சிட்டி பேலஸ் பற்றிய தகவல்கள் அறிந்தீர்களா? இன்னும் அதிகமான தகவல்கள் தேவையெனில், இந்த இடங்களை நிர்வகிக்கும் ட்ரஸ்ட் உடைய இணையதளத்தில் பார்க்கலாம். அத்தனை சரியான முறையில் தளம் அமைக்கப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. பாருங்களேன்… இதற்கு முந்தைய பகுதியில் சொன்னபடியே உதய்பூர் சிட்டி பேலஸ்-ல் எடுத்த படங்கள் அனைத்தும் கூகிள் ஃபோட்டோஸ்-ல் சேமித்து இருக்கிறேன். பார்க்க விருப்பம் இருந்தால் பார்க்கலாம்! அதற்கான சுட்டி கீழே..


பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

32 கருத்துகள்:

  1. கேமிரா வசதி பற்றிய விவரங்கள் உபயோகமானது. குட்மார்னிங் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. படங்கள் அந்த இடத்தின் அழகைச் சொல்கின்றன.

    மஹாராணா பிரதாப் உயரம் பிரமிக்க வைக்கிறது. உயரமானவர்கள் எப்போதுமே எனக்கு பிரமிப்பானவர்கள். ராணா பிரதாப்சிங் என்று இவரைப்பற்றி வரலாற்றில் படித்திருக்கிறோமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரமிக்க வைக்கும் உயரம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. 25,000 ரூபாய்தான்... எவ்வாவு சீப்? ஹா.... ஹா.... ஹா... படாடோபமான அரண்மனை. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பவே சீப் தான்! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பார்த்த ஞாபகங்கள் மனதில் வந்து போயிற்று. உண்மையிலேயே ராணா பிரதாப் பற்றிய தகவல்கள் பிரமிப்பானவை தான். அதே போல் ப்ருத்வி ராஜ் சௌகான், ராணி சம்யுக்தை பற்றியும் வட ராஜஸ்தானில் சொல்வார்கள். அங்கெல்லாம் ஜெயசந்திரன் என்னும் பெயரே வைச்சுக்க மாட்டாங்க என்றும் சொல்வார்கள். முதல்முதல் அந்நியரை உள்ளே வர வைச்சது ஜெயசந்திரன் (ராணி சம்யுக்தையின் அப்பா) என்று கோபமாகச் சொல்வார்கள். வேலைப்பாடுகள் எல்லாம் அசத்த வைக்கும். அந்தக் காலங்களில் எத்தனை திறமை வாய்ந்த சிற்பிகள் இருந்திருக்காங்க! இப்போ இப்படி ஒன்றைச் செய்ய நம்மிடம் ஆள் இருக்கா என்பது சந்தேகமே! கற்றுக் கொடுக்கவும் ஆட்கள் இருந்தால் அதிசயமே! இப்படி எத்தனை திறமைகள் மறைந்து ஒழிந்து போயிருக்கின்றன! ஆனாலும் நாம் நம்மைப் பற்றியும், நம்முடைய வேலைத்திறன்கள், நாட்டின் திறமை வாய்ந்தவர்கள் பற்றி இன்னமும் மட்டமான கருத்தே கொண்டிருக்கோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில ராஜாக்களின் கதை ரொம்பவே பிரபலம். வடக்கில் இருந்த ராஜாக்கள் பற்றி நிறையவே பிரமிப்பான கதைகள் உண்டு. ஹிந்தியில் படித்த சில விஷயங்கள் பிரமிக்க வைத்திருக்கின்றன.

      நம் திறமைசாலிகள் பற்றிய மட்டமான கருத்துகள் - ம்ம்ம்ம்... நமக்கு எப்போது வெளிநாட்டு திறமைசாலிகள் பற்றிய மோகம் அதிகம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  5. படங்கள் ஒவ்வொன்றும் வியப்பை ஏற்படுத்துகின்றன ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. ஒரு இனிய சுற்றுலா சென்ற உணர்வு அண்ணா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

      நீக்கு
  7. எதைவிட எதைச்சொல்ல...அனைத்தும் அடங்கிவிட்டது. உங்களுடைய பதிவுகளும் புகைப்படங்களும் ஒன்றை ஒன்று போட்டி போட்டு முன்னுக்கு இட்டுச்செல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

      நீக்கு
  8. ராஜாக்களின் வாரிசுகள் ஆடம்பர வாழ்க்கைக்கான யோசனைகள் ஆச்சர்யமூட்டுகிறது.

    டிரஸ்ட்களில் இப்படியொரு வசதி இருக்கிறதோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு திரவ உண்டு என்பது இது தானோ.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. கலை நுணுக்கத்தின் பிரமிப்பு/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன் ஜி.

      நீக்கு
  10. டிரஸ்ட் - என்னவொரு புத்திசாலித்தனம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. ஐய்ய்யோ! எத்தனை அழகு?! உங்க படமும், இடமும் அங்க போகனும்ன்னு ஆசையை தூண்டுது..

    ஆனா கட்டணங்களின் பட்டியல்தான் மலைக்க வைக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டணங்களின் பட்டியல் மலைக்க வைப்பது உண்மை தான். ஆனால் எப்போதாவது ஒரு முறை என்பதால் செல்லலாம் - தயக்கமின்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  12. நல்லதொரு பகிர்வு. கட்டிடக் கலை நுணுக்கங்கள் வியக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  13. உதய் பூர் நகரில் ஏழைகளும் இருக்கிறார்கள் என்பதை சைக்கிள் ரிக்‌ஷாக்கள் காட்டுகின்றன25000 ரூபாய் கொடுத்தும்தங்க ஆட்கள் இருக்கிறார்களே எப்படி ஏழைகளால் முடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைக்கிள் ரிக்‌ஷா.... ? படத்தில் காட்டியிருப்பது ராஜாவின் குதிரை வண்டி. அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. கட்டிடங்களின் பிரமாண்டம் வியக்க வைக்கிறது , எத்தனையோ வேற்று நாட்டினர் படையெடுப்பு உல் நாட்டுப் போர்கள் கலவரங்களையும் தாண்டி .... நிஜமாகவே வியக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரமிக்க வைக்கும் இடங்கள் தான். இப்படி ஒவ்வொரு இடமும் பார்க்கும்போது வியப்பு மேலிடுவதை தவிர்க்க முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    அழகான கட்டிடங்கள். அதன் வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. பீரங்கியும், மேல் விதானத்தில் ஓவிய வேலைப்பாடுகளும், தொங்கும் அலங்கார விளக்குகளும், ஒவ்வொரு இடத்திலும் கட்டிட கலை நுணுக்கங்களும் மிக அருமையாக இருந்தது.

    தங்களது ஒவ்வொரு வரிகளும், சரித்திர காலத்திற்கே சென்று வந்த மாதிரி இருந்தது. நல்ல விபரமாக பயணக்கட்டுரை யாக தொகுத்து கூறியிருப்பது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் கட்டண விபரங்கள் பயமுறுத்துகிறது. வசதியும் வாய்ப்பும் கிடைத்தால் சென்று ரசித்து விட்டு வரும் ஆவலைத் தூண்டுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி. பயணத்தை தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  16. துளசிதரன்: பிரமிப்பான தகவல்கள் வெங்கட்ஜி. பார்க்கிங்க், போட்டிங்க் செலவுகளே மிஞ்சிவிடும் போலத் தெரிகிறது. படங்களும் அருமையாக இருக்கின்றன. உங்கள் மூலம் சுற்றிப் பார்த்து வருகிறேன்.

    கீதா: மேவார் ராஜா பற்றிய தகவல் ஹையோ எப்படி இத்தனை வெயிட் போட்டுக் கொண்டு நடந்தாரோ? அப்போ உடலில் அத்தனை பலம் இருந்திருக்கும். உங்க உயரமே நான் கொஞ்சம் கழுத்தை நிமிர்த்தித்தான் பார்த்து பேசணும் ஹா ஹா ஹா ஹா....அப்படியிருக்க அவர் உயரம் சொன்னதும் நாலடியாரான நான் ஏணி போட்டுத்தான் அவர் முகம் பார்க்க முடியும் பேச முடியும் போல இருந்திருந்தார்னா ஹா ஹா ஹா ஹா...

    வடக்கத்திய அரண்மனைகள் எல்லாம் பெரும்பாலும் மார்பிள் என்றே தோன்றுகிறது மட்டுமல்ல பெர்ஷிய கலை பெரும்பான்மையான இடங்களில் என்று அறிய முடியும். அழகாக இருக்கிறது பேலஸ் கலைவடிவம் எல்லாம். ஏரி என்பது கூடுதல் சிறப்பாக இருக்கிறது. தொடர்கிறோம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....