ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 14
இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது
ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது.
அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
ஜக்தீஷ் மந்திர், Gகங்gகௌர் gகாட்
ஆகிய இடங்களைப் பார்த்த பிறகு இரண்டு ஷேர் ஆட்டோக்களில் எங்கள் வாகனத்துடன்
ஓட்டுனர் ஜோதி இருந்த இடத்திற்குச் சென்று சேர்ந்தோம். அப்போதே மாலை நேரம்
ஆகியிருந்தது. அதன் பிறகு எங்கே செல்ல வேண்டும் எனக் கேட்க, உதய்பூர் நண்பர்
கஜேந்திரா அவர்கள் பிச்சோலா ஏரியில் நீங்கள் படகுச் சவாரி செய்யவில்லையே அதனால்
உதய்பூர் நகரின் இன்னுமொரு ஏரியான ஃபதேசாகரில் படகுப் பயணம் செய்யலாம் எனச்
சொன்னார். ஏரியைச் சுற்றி ஒரு வழிப்பாதை செல்வதில் வண்டியில் போகலாம் நன்றாக
இருக்கும் என்று சொல்ல, சரி போகலாம் என அவரையும் அவர் நண்பரையும் அழைத்தோம்.
கஜேந்திரா தனக்கு அலுவலகத்தில்
சிறு வேலை இருப்பதாகவும் அங்கே சென்ற பிறகு சேர்ந்து கொள்வதாகவும் சொல்ல, நானும்
கஜேந்திராவும் அவரது இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்திற்குச் சென்றோம். அதற்குள்
மற்ற நண்பர்களும் கஜேந்திராவின் மற்ற நண்பரும் வாகனத்தில் ஃபதேசாகர் ஏரி நோக்கி
சென்றார்கள். ஃபதேசாகர் பகுதியில் குறுகிய சாலைகள் என்பதாலும், ஒரு வழிப்பாதை
என்பதால் பெரிய வண்டிகளுக்கு அங்கே செல்ல அனுமதியில்லை என்றும் சொல்லிக்
கொண்டிருந்தார் நண்பர். சரி பார்த்துக் கொள்ளலாம் என அவர்கள் செல்ல, நானும் நண்பர்
கஜேந்திராவும் அலுவலகம் சென்று வேலைகளை முடித்த பிறகு ஃபதேசாகர் ஏரி நோக்கிச்
சென்றோம்.
ஃபதேசாகர் ஏரி என்பது இயற்கையான
ஏரி அல்ல – செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி – தன் மக்களின் தண்ணீர் தேவைக்கு இப்படி
ஒரு ஏரி தேவை என்று உணர்ந்த ராஜாக்கள் இருந்திருக்கிறார்கள். மஹாராணா ஜெய் சிங்
அவர்கள் ”மோத்தி மாக்டி”
மலையடிவாரத்தில் பிச்சோலா ஏரிக்கு வடக்கே ஒரு பெரிய ஏரியை உருவாக்கினார். ஏரியை உருவாக்கியது
மஹாராணா ஜெய் சிங் என்றாலும், உதய்பூர் நகரின் இரண்டாவது பெரிய ஏரியான இந்த ஏரிக்கு
பெயர் ஃபதேசாகர் ஏரி! உருவாக்கியது ஜெய் சிங் என்றாலும், இந்த ஏரியில் பல
மாற்றங்கள் செய்த மஹாராணா ஃபதே சிங் அவர்களின் பெயரில் தான் இந்த ஏரியை
அழைக்கிறார்கள். அடப்பாவமே, ஜெய் சிங் பெயரை நிலை நாட்ட முடியவில்லையே என
நினைப்பவர்களுக்கு…. அவர் பெயரிலும் ஒரு ஏரி உண்டு!
உதய்பூர் நகரிலிருந்து 48
கிலோமீட்டர் தொலைவில் கோமதி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்ட போது ஒரு பெரிய
செயற்கை ஏரியை உருவாக்கினார் மஹாராணா ஜெய் சிங் அவர்கள். அந்த ஏரி மஹாராணா
ஜெய்சிங் அவர்களின் பெயரிலேயே ஜய்சமந்த் ஏரி என அழைக்கப்படுகிறது. உதய்பூர் நகரிலும்,
நகரினைச் சுற்றிலும் இப்படி பிச்சோலா ஏரி, ஃபதேசாகர் ஏரி, ஜெய்சமந்த் எரி,
ராஜ்சமந்த் ஏரி, உதய்சாகர் ஏரி, தூத் தலாய், ஜீயான் சாகர், ஸ்வரூப் சாகர் என பல
ஏரிகள் உண்டு. ஒவ்வொரு ராஜாவும் போட்டி போட்டுக்கொண்டு செயற்கை ஏரிகளை உருவாக்கி
இருக்கிறார்கள். மக்களின் தண்ணீர் தேவையைப் புரிந்து கொண்ட ராஜாக்கள்/அரசாங்கம்
இருப்பது மிகவும் நல்ல விஷயம்.
சரி ஃபதேசாகருக்கு வருவோம்.
ஃபதேசாகர் நோக்கிச் செல்லும் வழியில் நானும் நண்பர் கஜேந்திராவும் இரு சக்கர
வாகனத்தில் சென்று அங்கேயிருந்த போக்குவரத்துத் துறை காவலரிடம்/அதிகாரியிடம்
எங்கள் வண்டியை அனுமதிக்க வேண்டும் என்பதற்காக, அங்கே இருக்கும் அரசு மாளிகை
ஒன்றிற்குச் செல்ல வேண்டும் எனச் சொல்ல, அவரும் வழியில் எங்கும் நிறுத்தக் கூடாது
என்ற கட்டளையோடு அனுமதி அளித்தார். எங்கள் வாகனத்தினை ஒருவழிப்பாதையில் இருந்த ஒரு
அலுவலகத்தின் உள்ளே சென்று, அங்கிருந்த காவலரிடம் சொல்லி நிறுத்தினோம்.
வாகனத்திலிருந்து இறங்கி படகுத் துறைக்குச் சென்றால் பயங்கரக் கூட்டம். சுற்றுலா
பயணிகள் தவிர உள்ளூர் மக்களும் மாலை நேரமானால் ஏரிக்கரைக்கு வந்து விடுகிறார்கள்.
சாதா படகு வரும் வரை டிக்கெட்
தரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் நுழைவுச் சீட்டு தருபவர். ஆறு மணிக்கு மேல்
படகுச் சவாரிக்கு அனுமதி கிடையாது என்பதால் சீட்டு தரமாட்டேன் என்று சொல்ல, அங்கே
காத்திருந்தவர்களுக்கும் சீட்டு கொடுப்பவர்களுக்கும் பயங்கர வாக்குவாதம். எங்கள்
குழுவினர் அனைவருக்கும், ஏரியில் படகு உலா சென்று வர ஆசை இருந்தது. காத்திருந்த
பிறகு படகுச் சவாரி கிடையாது எனச் சொன்னால் மனதிற்குக் கஷ்டம் ஆகிவிடும். என்ன
செய்யலாம் என யோசித்தபோது – சாதா படகுக்கு சீட்டு கொடுக்கவில்லை என்றாலும் ஸ்பீட்
போட்-டுக்கு சீட்டு கிடைக்கும் என்று சொன்னார் அந்த சிப்பந்தி. சாதா மோட்டார் படகில்
சுமார் 45 நிமிடங்கள் வரை சவாரி என்றால், ஸ்பீட் போட்டில் மொத்தமே 10 நிமிடங்கள்
தான்!
துடுப்புப் போட்டுச் செல்லும்
படகும் உண்டு என்றாலும் அவையும் இல்லை. துடுப்புப் போட்டுச் செல்லும் படகிற்கான
கட்டணம் ரூபாய் 30/-, மோட்டார் படகில் ரூபாய் 100, ஸ்பீட் போட் எனில் 200 ரூபாய்
கட்டணம். உதய்பூர் நண்பர்கள் இருவரும் படகில் வரவில்லை என்று சொல்லி விட, எங்கள்
குழுவில் இருந்த 13 பேரும் ஸ்பீட் போட் பயணம் செய்ய நுழைவுச் சீட்டு வாங்கினேன்.
ஒரு ஆளுக்கு 200 ரூபாய் கட்டணம். ஒரு ஸ்பீட் போட்டில் ஆறு பேர் தான் பயணிக்க
முடியும் - இரண்டு படகுகளில் – ஒன்றில் ஆறு பேரும் மற்றதில் ஏழு பேரும்
பயணிக்கலாம் என சொல்லி விட்டார் படகுத் துறை சிப்பந்தி. படகுகளில் வைத்திருந்த
பாதுகாப்பு உடைகளை [Safety jackets!] அணிந்து கொண்டு தயாராக படகோட்டிகள் இருவர்
எங்கள் நுழைவுச் சீட்டுகளை வாங்கிக் கொண்டார்கள். அந்த உடைகளை அவ்வப்போது தோய்த்து
வைத்தால் குறைந்தா போய்விடுவார்கள் எனத் தோன்றியது!
சாதாரணமான படகில் சென்றாலே
தத்தளித்த படி செல்லும் படகில் படம் எடுப்பது கடினமான விஷயம். இதில் ஸ்பீட்
போட்டில் சென்றபடியே படம் எடுப்பது முடியாத காரியம். தண்ணீர் கேமராவில் பட்டுவிடுமோ
என்ற எண்ணமும் வந்தது. கூடவே கேமரா பேட்டரி தீர்ந்து போக, அலைபேசி மூலம் மூன்று
நிமிட காணொளி எடுக்க முடிந்தது. அந்த காணொளி கீழே. பத்து நிமிட சவாரி என்று சொன்னாலும் சில
நிமிடங்கள் பாதுகாப்பு உடை அணிவதிலும், அமர்ந்து கொள்வதிலும் போய்விடுகிறது. சவாரி
என்று பார்த்தால் ஐந்து நிமிடங்கள் தான் இருக்கும். ஆனாலும் அந்த அனுபவம் அலாதியாக
இருந்தது. சூரியன் மறையும்போது
ஏரிக்கரையிலும் மலைப்பிரதேசங்களிலும் வானத்தில் வர்ண ஜாலம் – பார்த்துக் கொண்டே
இருக்கலாம் – அப்படி ஒரு வர்ண ஜாலத்தினை இந்தப் படகுப் பயணத்தில்
அனுபவித்தோம்.
படகுச் சவாரி முடிந்து, பாதுகாப்பு உடைகளைக் களைந்து வெளியே வந்தோம். ஆளொன்றுக்கு இருநூறு ரூபாய் கொடுத்தாலும் மிகவும் ரசனையான காட்சிகளைக் காண ஒரு வாய்ப்பு. சென்ற பகுதியில் பார்த்த நட்சத்திர விடுதிகளான சில மாளிகைகளையும் படகுப்பயணத்தில் பார்க்க முடிந்தது. அழகான காட்சிகள் மனதை விட்டு அகலாத காட்சிகள் அவை. அவற்றை படம் எடுக்க முடியவில்லையே என்ற எண்ணமும் அவ்வப்போது வந்து தொந்தரவு செய்தது. படகு சவாரி முடிந்த பிறகு என்ன செய்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
பயணம் நல்லது! ஆதலினால் பயணம்
செய்வோம்!
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
குட்மார்னிங் வெங்கட்... ஃபதேசாகர் ஏரி அழகாய் இருக்கிறது.
பதிலளிநீக்குகாலை வணக்கம் ஸ்ரீராம். ஆமாம் ரொம்பவே அழகான ஏரி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ராஜாக்கள் உணர்ந்திருந்ததை இன்றைய ஆட்சியாளர்கள் உணரவில்லை. அவர்கள் கட்டிய அணைகள் நீர்தேக்கங்களே போதும் என்று விட்டு விடுகிறார்கள்.
பதிலளிநீக்குராஜாக்கள் உணர்ந்திருந்ததை இன்றைய ஆட்சியாளர்கள் உணரவில்லை. உண்மை.
நீக்குநீர்த்தேக்கங்கள் எவ்வளவு பயன் தரும் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை. இவர்கள் குறிக்கோள் வேறு...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
எப்போது யு டர்ன் அடித்தது என்று தெரியாமல் திரும்பி இருக்கிறது படகு! எதிரில் அமர்ந்திருப்பவர் அந்தப் பயண சுகத்தை இழக்கிறார் என்று தோன்றியது. வண்டி செல்லும் திசைக்கு முதுகு காட்டி அமர்ந்திருப்பது பற்றிச் சொல்கிறேன். 200 ரூபாய் அதிகமோ என்று தோன்றினாலும் பயணம் முடியும்போது அது மனதில் இருந்திருக்காது என்று தோன்றுகிறது. விளக்கு வைக்கும் நேரம் என்பதால் அருகாமை சாலைகளில் வாகனங்களின் விளக்குகள் பார்வைக்குக் கவர்ச்சியாய் இருந்தன.
பதிலளிநீக்குவண்டி செல்லும் திசையில் அமர்வது தான் சரியான இடம். ஆனால் முன்னர் இருந்த இருக்கை பெரும்பாலும் கொஞ்சம் குண்டாக இருப்பவர்களுக்கு ஒதுக்கி விடுவதாகத் தெரிகிறது! படகுச் சவாரிகளில் ஆள் பார்த்து தான் உட்கார வைக்கிறார்கள்.
நீக்குவிளக்குகள் ஒளியில் நகரம் ரொம்பவே அழகாக இருந்தது - ஏரிக்கரையிலிருந்து பார்க்கும்போது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
காணொளி கண்டேன் ஜி
பதிலளிநீக்குகரையில் நின்று மற்ற படகுகளை எடுத்தீர்களோ ?
படங்கள் எடுக்க இயலவில்லை - கேமரா பேட்டரி தீர்ந்திருந்தது. பெரும்பாலும் அலைபேசியில் எடுத்த படங்கள் குழுவினர் படங்கள் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
//சூரியன் மறையும்போது ஏரிக்கரையிலும் மலைப்பிரதேசங்களிலும் வானத்தில் வர்ண ஜாலம் – பார்த்துக் கொண்டே இருக்கலாம் – அப்படி ஒரு வர்ண ஜாலத்தினை இந்தப் படகுப் பயணத்தில் அனுபவித்தோம். //
பதிலளிநீக்குவர்ண ஜாலம் மிக அருமை. படகு சவாரி மிக மிக அருமை.
மாலை நேரம் படகு சவாரி அழகுதான்.
விளக்குகள் ஜொலிக்கும் போது இன்னும் அழகு.
வர்ண ஜாலம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
படங்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குதண்ணீர் ததும்பி வழியும் காட்சியைக் காணவே மனம் மகிழ்கிறது ஐயா
பதிலளிநீக்குஅருமை
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபடகு சவாரி மிகவும் அருமை...கேமரா பேட்டரி தீர்ந்து போனது வருத்தம்...
பதிலளிநீக்குசில சமயங்களில் இப்படி நேர்ந்து விடுவதுண்டு. இரண்டு பேட்டரி வைத்துக் கொள்வது அவசியமாகிறது சில முறை! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
ஏரியும் அதில் பயணமும் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குபதேசாகர்... பள்ளியில் படித்த நினைவு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குநீரின் அருமை தமிழகத்தில் தெரியலைனே சொல்லணும். பதிவு விவரணை அருமையாக உள்ளது. காணொளி இதோ போய்ப் பார்க்கணும்.
பதிலளிநீக்குநீரின் அருமை புரிந்து கொள்ளாத அரசு - மனிதர்கள்.... என்ன சொல்ல.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
காணொளியும் அருமையாக இருக்கிறது. ஃபதேசாகர் நாங்க போகலை!
பதிலளிநீக்குஆஹா... நீங்கள் ஃபதேசாகர் பார்த்ததில்லையா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
காணொளியும் பதிவும் அருமை. கேமராவில் சார்ஜ் இல்லை, தண்ணீர் படும் அபாயம் உள்ளன என்பதால் படங்கள் எடுக்க சாத்தியமில்லாமல் போனது. ஆயினும் ஒரு தகவலுக்காக.., இது போன்ற சமயங்களில் விரையும் ஊர்தியிலிருந்து எடுக்கும் போது ஷட்டர் ஸ்பீடை அதிகரித்து எடுத்தால் தெளிவான படங்கள் கிடைக்கும்.
பதிலளிநீக்குஷட்டர் ஸ்பீட் அதிகரித்து எடுத்தால் தெளிவான படங்கள் கிடைக்கும் - உபயோகமுள்ள தகவல். முயற்சித்து பார்க்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபயன அனுபவமும், ஏரியில் பயணித்த அனுபவமும் அருமை. உண்மையில் அந்த நேரத்தில் பயணம் கண்களுக்கு விருந்தாக மிகவம் அருமையாக இருக்கும். காணொளியும் கண்டு ரசித்தேன். படங்களும் மிகவும் நன்றாக இருக்கிறது. பயணத்தில் தொடர ஆவலுடன் இருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குதுளசிதரன் : ஏரி அழகாக இருக்கிறாது அதுவும் மலை பேக் க்ரவுண்டில் படம் வெகு அழகு....விவரணம் தகவல்கள் அறிந்தோம் ஜி. தொடர்கிறோம்.
பதிலளிநீக்குகீதா: பதிவை வாசித்த போது...அட வாசித்திருக்கிறோமே என்று நினைத்துக் கொண்டே வந்தால் ஆம் மொபைலில் வாசித்தேன் ஆனால் வலைப்பக்கம் வராத சமயம் என்ப்தால் கருத்து இட வில்லை...
ஃபதேசாகர் ஏரி செம அழகு. எவ்வளவு ஏரிகள்!! நன்றாகவும் இருக்கின்றன. ஆனால் இத்தனையும் அவசியம் தான் அந்த ஊர் மக்களுக்கு. போட்டிங்க் விவரங்களும் அறிந்துகொண்டோம் ஜி. போட்டிங்க் செமையா இருந்திருக்கும் இல்லையா...நிறைய க்ளிக்ஸ் எடுட்திருப்பீர்கள்..அருமை தொடர்கிறோம் ஜி
இங்கே நிறைய ஏரிகள் மற்றும் மலைகளும் இருப்பதால் கொஞ்சம் குளிர்ச்சியான பகுதியாக இருக்கிறது. இப்படியான இடங்களில் இருப்பது மகிழ்ச்சியான விஷயம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!