ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

அப்பா – 80!






22 ஏப்ரல் – இந்த நாள் எங்கள் குடும்பத்தினருக்கு ஒரு முக்கியமான நாள் – எங்கள் குடும்பத்தின் தலைவரான அப்பாவின் பிறந்த நாள். இன்றைக்கு அவருக்கு 80-வது பிறந்த நாள். இந்த நாளும் வரும் எல்லா நாட்களிலும் அவர் மகிழ்ச்சியுடன் இருக்க எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
 
ஏழு வருடங்கள் முன்னர் அப்பா, இதே போன்று பிறந்த நாள் அன்று தில்லி வருகை தர, அவர் வாழ்வில் முதல் முறையாக கேக் வெட்டி, அவரது பிறந்த நாளைக் கொண்டாடினோம். அன்றைக்கு ஒரு பதிவு கூட வெளியிட்டு இருக்கிறேன் – இந்தப் பதிவினை எழுதும்போது மீண்டுமொரு முறை அதைப் படித்தேன். இதோ அந்தப் பதிவு…..


இந்த முறை நான் தில்லியில் அவர் தமிழகத்தில். அதனால் இணைய வழியாகத் தான் பிறந்த நாள் கேக்! இதோ அப்பாவுக்கும், இங்கே வலைப்பூவிற்கு வருகின்ற அனைவருக்குமாக பிறந்த நாள் கேக்…..



அப்பா…. எனது இருபது வயது வரை மட்டுமே நெய்வேலியில் குடும்பத்துடன் இருந்தேன். அப்போது ஏனோ அப்பாவிடம் ஒரு பயம் கலந்த மரியாதை. என் மகள் என்னிடம் பழகுவது போல, அன்றைக்கு அப்பாவிடம் எங்களால் பழக முடிந்ததில்லை. இப்போது தலைநகர் வந்து கிட்டத்தட்ட இருபத்தேழு வருடங்கள் ஆன பிறகு அவரை விட்டு வெகு தூரம் வந்து விட்ட உணர்வு. இப்போது கூட ஏதோ பேசிக் கொள்கிறோமே தவிர, அவர் என்னிடமோ, நான் அவரிடமோ மனம் விட்டுப் பேசிக் கொண்டதில்லை. செய்ய வேண்டியவற்றைச் செய்து கொண்டிருந்தாலும் என்றைக்கு மனம் விட்டுப் பேசியிருக்கிறோம் என்று யோசிக்கிறேன். நெய்வேலியில் இருந்தவரை எது வேண்டுமென்றாலும் அம்மா வழியாகத் தான் அப்பாவிடம் எங்களுக்கு வேண்டியதைச் சொல்லி இருக்கிறோம்.  

சிறு வயதில் அப்பா என்றாலே ஒரு பயத்துடனேயே இருந்துவிட்டோம். இப்போது அலைபேசி மூலம் பேசிக் கொண்டாலும், நேரில் செல்லும்போதும் அவ்வளவாக பேசிக் கொள்வது இல்லை – என்ன எப்படி இருக்கீங்க, என்ன விஷயம் என்று சில பல கேள்விகள், பதில்கள் தவிர எந்த விஷயத்தினையும் நண்பரைப் போல பேசிக் கொண்டதில்லை. சில வீடுகளில் அப்பாவும் மகனும் பேசிக் கொள்வதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும் – நானும் அப்பாவும் இப்படி இருந்ததே இல்லை என…. சிறு வயதில் அப்பாவைப் பார்த்தாலே ஒரு பயம் இருக்கும்! அவருக்கு வரும் கோபம் காரணமாக இருந்திருக்கலாம். கோபம் இருக்கும் இடத்தில் தான் பாசமும் இருக்கும் என்பது புரியாத வயது…. எங்களுக்காகவே உழைத்தவர். எங்களின் நல்லதை மட்டுமே யோசித்தவர். தனக்கென்று பெரிதாக எதையும் கேட்காதவர்…..

எப்படியும் அலைபேசி வழியே பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லத்தான் போகிறேன். இருந்தாலும், இங்கேயும் அப்பாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்…..

மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா….. உங்கள் ஆசி என்றும் எங்களுக்குக் கிடைத்திடட்டும்….

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

38 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். அப்பாவுக்கு நமஸ்காரங்கள். எங்கள் வாழ்த்துகளையும் சொல்லி, ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      நிச்சயமாக - அப்பா இன்றைய பதிவினை படித்து விட்டார். சில நிமிடங்கள் முன்னர் அவருடன் பேசினேன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அப்பாவைப் பற்றிய உங்கள் உணர்வுகளில் சில எனக்கும் உண்டு. அந்நாளில் இது வழக்கம். இன்று என் மகன்கள் என்னிடம் அப்படி இல்லை. எளிதாகப் பழகுவது போலவே பழக்கி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எளிதாகப் பழகுவது நல்லது தான். அப்போதைய சூழல் அப்படி. மாற்றம் செய்வதில் தவறில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அப்பாவை வணங்கி கொள்கிறேன் ஜி.

    இன்று எங்களது வீட்டிலும் ஒரு பிறந்தநாள் உண்டு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா இன்று உங்கள் வீட்டிலும் பிறந்த நாளா? மகிழ்ச்சி. பிறந்த நாள் கொண்டாடுபவருக்கு வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. தங்களின் அன்புத் தந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் வணக்கங்களும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. உங்கள் தந்தைக்கும், தாய்க்கும் எங்கள் நமஸ்காரங்கள். அநேகமாய் எல்லார் வீடுகளிலும் அப்பாவை விட அம்மாவே மனதுக்கு நெருக்கம் என்பார்கள். ஆனால் எங்க வீட்டில் இப்போதெல்லாம் நேர்மாறாக இருக்கிறது. சின்ன வயசில் என் மூலமே அப்பாவிடம் தொடர்பு கொண்ட பெண்ணும், பிள்ளையும் இப்போதெல்லாம் அப்பாவிடமே நேரடியாகப் பேசிக் கொண்டு தொடர்பு கொண்டு எல்லாவற்றையும் சொல்லுகின்றனர். ஒரு வகையில் இந்த மாற்றம் ஏற்கத் தக்கதே! ஆகவே நானும் பெரிசாக் கண்டுக்கிறது இல்லை! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் மாற்றம் - நல்லது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  6. அன்பு வெங்கட், அப்பாவுக்கு இனிய பிறந்த நாள்
    வாழ்த்துகள். அவரது ஆசிகளும் வேண்டும்.

    கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.
    அப்பா என்றால் பயம் கலந்த மரியாதைதான்.

    கொஞ்சம் வயதான பிறகுதான் அது குறையும். நீண்ட நெடும்
    நல் வாழ்வு அப்பா பெற என் பிராத்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  7. உங்கள் அப்பாவிற்கு எங்கள் வணக்கங்கள்.
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    இறைவன் அருளால் உடல்நலத்தோடு இருக்க பிரார்த்திக்கிறேன்.
    என் அப்பாமூலம் தான் எனக்கு வேண்டியதை கேட்டுப் பெறுவேன், அம்மா என்றால் கண்டிப்பு. நான் அப்பா செல்லம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான வீடுகளில் பெண் குழந்தைகள் அப்பாவுடன் ஒட்டுதலாகவும், ஆண் குழந்தைகள் அம்மாவுடன் ஒட்டுதலாகவும் இருப்பது பார்த்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    தங்கள் தந்தையாருக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்.

    இன்று போல் என்றும் சிறப்பாக வாழ எல்லாம் வல்ல இறைவனை மனதாற பிரார்த்திக்கிறேன்.

    அப்பா என்றாலே ஒருவித பயங்கலந்த பாசமான மரியாதைதான். அது அந்த காலத்தில் இயல்பாகவே அனைவருக்கும் இருந்தோ என்னவோ.. நானும் அப்படித்தான். அம்மா அப்பா இருவரிடமே மரியாதையாகத்தான் யழகியிருக்கிறேன்.
    ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி இருவரிடமும் உரிமையுடன் பேசிப் பழகுபவர்களை கண்டால், நாம் ஏன் இப்படி இருக்கவில்லை என்ற சின்ன ஏக்கம் வந்து மறையும். பகிர்வுக்கு மிக்க நன்றி. அதனால் என் மனதில் தோன்றியதையும் சொல்ல முடிந்தது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  9. உங்கள் தந்தைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள் அந்த நாளிலேயே என் தந்தையும்நானும் நண்பர்கள் போலவே பழகினோம் இன்று என் மக்களும் அது போலவே அவருக்கு நான் எழுதி இருந்தமுதுமை பரிசு என்னும் பதிவைப்படித்துக்காட்டுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதுமை பரிசு பதிவு - ஊருக்குச் செல்லும் போது படிக்கத் தருகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  10. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  11. தங்கள் தந்தைக்கு என் அன்பு வணக்கங்கள்!
    நன்னலத்துட‌னும் மன மகிழ்வுடனும் அவர்கள் இனிதே வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  12. உங்கள் தந்தைக்கு எங்களின் அன்பு வாழ்த்துகளும் ஆசிகளும். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சி அம்மா....

      நீக்கு
  13. பெரியவர் ஆசீர்வாதம் தங்கள் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  14. ஆயிரம் பிறை கண்ட உங்கள் அப்பாவிடம் நான் ஆசி கேட்கிறேன்.

    ஆவலாகப் படித்தேன். உள்ளதை எழுதியிருக்கிறீர்கள். பொதுவா அப்பா கிட்ட ஒரு டிஸ்டன்ஸ் இருக்கத்தான் செய்கிறது. என் பசங்களுக்கும் அப்படியே. ஆனால் என் மனைவிட்ட ரெண்டுபேரும் நல்ல நண்பர்களாகப் பேசறாங்க.

    இப்போவும், பசங்க ரெண்டும், ஏதேனும் எனக்குன்னு வாங்கிட்டு வருவாங்க. சமயத்துல எனக்கு அதில் பிடித்தம் இருக்காது (நான் கன்சர்வேடிவ். எனக்குன்னு சில உணவுகள்தான் பிடிக்கும். அதை மாற்றிக்கொள்ள மாட்டேன்). ஆனாலும் அவங்க கொடுக்கும்போது அந்த உணர்வே தனி. இப்போகூட, வெளிநாட்டிலிருந்து சென்னை வந்தபோது, என் பையன் சின்ன கடிதமும், அத்துடன் நந்தினி பால்கோவாவும் வைத்திருந்தான் (அவன் முந்தைய நாளே அவன் கல்லூரிக்குச் சென்றுவிட்டான்). அத்தகைய அன்பு கொடுக்கும் திருப்திக்கு விலை இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  15. மிகவும் அருமையான பகிர்வு நண்பரே. உண்மையிலேயே நமது வீடுகளில் அப்பா என்றால் ஒரு மரியாதையும் பயமும் உண்டு. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. ஆயிரம் பிறை கண்ட உங்கள் அப்பாவுக்கு நமஸ்கரங்கள். அவர் மேலும் பல்லாண்டுகள் வாழ இறைவனை ப்ரார்திக்கிறேன். நிஜமாகவே என் மனதை தொட்ட பதிவு.
    விஜயராகவன்/தில்லி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  16. மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  17. அப்பாவுக்கு நமஸ்காரங்கள். வாழ்த்துகள். பிரார்த்தனைகளும். ஜி
    எங்கள் இருவரது கமெண்டையும் அன்று போட முடியவில்லை…எனவே தாமதமான வாழ்த்துகளாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  18. துளசி: உங்களைப் போலவே தான் எனக்கும் என் தந்தைக்குமான உறவு இருந்தது. அப்புறம் அவர்கள் என்னுடனேயே இருந்ததால் வயதான போது கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம். இப்போதும் கூட என் குழந்தைகள் என்னுடன் பேசுவதை விட என் மனைவியிடம் பேசுவதுதான் அதிகம். என்றாலும் என்னிடம் பேசுவதில் அவர்களுக்குத் தயக்கம் எதுவும் இல்லை. ஒரு வேளை நான் இத்தனை வருடங்கள் பாலக்காட்டில் இருந்து கொண்டு வீக் என்ட் மற்றும் லீவு தினங்களில் மட்டுமே வீட்டிற்குச் சென்று வந்ததால் இருக்கலாம். இப்போது ரிட்டையர் ஆகி வீட்டருகேயே கல்லூரியில் வேலைக்குச் சேர்வதாக இருப்பதால் என் குழந்தைகளுடனான நெருக்கமும் கூடலாம்…

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களையும் சொன்னதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  19. கீதா: நான் என் அப்பாவிடமும் அம்மாவிடமும் ரொம்பவே உரிமையோடு பழகுவேன் ஜி. தயக்கம் எப்போதுமே இருந்ததில்லை. அவர்கள் செய்தது தவறு என்றால் அதைச் சுட்டிக் காட்டியதிலும் தயக்கம் இருந்ததில்லை…...என் மகனும் எங்களிடம் அப்படியே……நான் தவறு செய்தால் சொல்லிவிடுவான். நானும் கரெக்ட் செய்துகொள்வேன். அது போலவே அவனையும் நான் சொல்ல முடியும்….நட்புடனான அன்பு…

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....