நடக்கவா – சாப்பிடவா?
காலை நேரம் பூங்காவில் நடப்பது
பற்றி எழுதி இருந்தேன். ஒவ்வொரு நாளும் ஏதேனும் புதிய விஷயம் பார்க்க/கேட்க
கிடைக்கிறது. ஒரு நாள் பார்த்தால், பூங்காவினுள் தேநீர்/சமோசா விநியோகம் நடந்து
கொண்டிருந்தது. இரண்டு மூன்று குழுக்கள் இங்கே நடப்பதுண்டு – குழுவில் உள்ளவர்கள்
அனைவருமே ஒரே சமயத்தில் பூங்காவிற்கு வந்து நடப்பது வழக்கம். ஒரு குழிவின்
உறுப்பினர்கள் எல்லோரும் ஒரு இடத்தில் கடை வைத்திருப்பவர்கள் என்றால், மற்றொரு
குழுவினர் வக்கீல்கள்! இந்த குழுவினர் அனைவருமே நடந்து முடித்த பிறகு, பூங்காவில்
அமர, சமோசா/தேநீர் விநியோகம் நடக்கிறது. காகிதத் தட்டுகளில் சமோசா, நெகிழி
கோப்பைகளில் தேநீர்! சாப்பிட்டு, குப்பையை போட்டுப் போகிறார்கள். எனக்கு ஒரு சந்தேகம் – இவங்க நடக்க வந்தாங்களா
இல்லை சாப்பிட வந்தாங்களா?
வேலை செய்யவே மாட்டேன்!
அலுவலகத்தில் புதியதாக ஒருவர்
சேர்ந்திருக்கிறார் – தினமும் வருவது 12 மணிக்கு தான்! மாலையில் ஏழு மணி வரை
அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் என்றாலும், பல வேலைகள் நிலுவையில்! எத்தனை முறை
சொன்னாலும், எந்தவித முன்னேற்றமும் இல்லை! இத்தனைக்கும் நல்ல அறிவாளி. விஷயம்
தெரிந்திருந்தாலும், வேலை செய்யக்கூடாது என்ற முடிவுடன் இருக்கிறார் போலும்.
இரண்டு மூன்று முறை எச்சரிக்கை கடிதம் கொடுத்திருக்கிறார்கள்! வேலை
கிடைக்கவில்லையே என பலரும் இருக்க, கிடைத்த வேலையை ஒழுங்காகச் செய்ய மறுக்கும்
இவரை என்ன சொல்ல! சேர்ந்த சில மாதங்களிலேயே இப்படியான நடவடிக்கை என்றால் இன்னும்
கொஞ்சம் வருடங்களில் எப்படி இருப்பாரோ....
என்ன பார்த்து இப்படி ஒரு கேள்வி ஏன்!
தொடர்ந்து இரண்டு நாட்களாக ஒரே
கேள்வி என்னை நோக்கி வந்தது! முதல் நாள் கேட்டவர் ஒரு தெலுகு தேசத்தவர்! இரண்டாம்
நாள் ஒரு மறத் தமிழர்! வீட்டின் அருகே இருக்கும் தரம்ஷாலாவில் தங்கி ஊர் சுற்ற
வந்திருப்பவர்கள்! அப்படி என்னதான் அவங்களுக்கு வேணுமாம்..... விடிகாலையில்
எழுந்து முகத்தைத் தடவியபடியே, என்னைப்
பார்த்து "இங்க முகச்சவரம் பண்ணிக்க கடை இருக்கா?" கேட்ட நேரம் காலை ஏழு
மணி! அவங்க கேட்ட நாட்களில் நான் முழு தாடியுடன் இருந்தேன்! "அது ஏன்யா
என்னப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டீங்க?" "காலையில இங்கே கடை
திறக்க மாட்டாங்க, எட்டு மணி ஆகும்!" என்று சொல்ல, "பஸ்
புறப்பட்டுடுமே" என்கிறார் ஒருவர்! நல்ல வேளை "நீங்க செஞ்சுவிடுங்கன்னு"
சொல்லல!
அலைபேசி = தொல்லை!
Financial Year – Closing Time! –
வேலைகள் நிறையவே இருக்கும். அந்த மாதிரி சமயங்களில் பல அலுவலகங்களில் Tempers Run
High! கதை தான். எனக்கும் இந்தச் சமயத்தில் Work Pressure கொஞ்சம் அதிகம்! அப்படி
கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் அலைபேசியில் அழைப்பு –
தெரியாத ஒரு எண்ணிலிருந்து! பொதுவாக தெரியாத எண் என்றால் பொதுவாக எடுப்பதில்லை!
என்றாலும் ஏதோ வேலை சம்பந்தமான அழைப்பாக இருக்கப் போகிறது என எடுத்தால், அந்தப்
பக்கத்தில் ஒரு பெண் குரல் – வழக்கமான வணக்கம், பதில் வணக்கத்திற்குப் பிறகு கேட்ட
கேள்வி – “சார்,
உங்களோட பழைய வண்டியை விற்கணுமா? நாங்க வித்துத் தரோம்! இந்த விஷயத்தில்
நாங்கள் தான் நம்பர் 1 நிறுவனம்!” – அடக் கொடுமையே!
“பத்து வருஷம் கழிச்சு ஃபோன் பண்ணும்மா, நான் பழைய
வண்டியை விக்கணும்னா, அதுக்கு முதல்ல வண்டி வாங்கணும், அது பழசாகணும்…
இதுக்கெல்லாம், ஒரு பத்து வருஷம் ஆகும்!”னு சொல்ல,
அந்தப் பெண் சிரித்தபடியே இணைப்பைத் துண்டித்தார். இவங்க தொல்லை தாங்கலப்பா!
செல்லச் செல்வங்கள்
தினமும் பூங்காவில் நடக்கச்
செல்லும் போது, பூங்காவின் வாயிலில் நிறைய செல்லச் செல்வங்கள் [கீதாஜியின்
பாஷையில்] பார்க்க முடியும். நடக்க வருபவர்கள் இவர்களுக்கும் ஏதாவது தீனி கொண்டு
வருவது வழக்கமாக வைத்திருக்கிறார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட – குட்டி, பெரியது
என கலந்துகட்டி, வாலை ஆட்டியபடி ஒவ்வொருவர் பின்னும் செல்லும் காட்சியை ஒவ்வொரு
நாளும் பார்க்க முடிகிறது. கொஞ்சலும், கெஞ்சலும் பார்க்கவே நன்றாக இருக்கும். ஒரு
சிலர் தினம் தினமும் கொடுப்பவர்கள் – அவர்கள் வாகனம் வரும்போதே இவர்களுக்குத்
தெரிந்து ஓடுகிறார்கள். எங்கள் பக்கம் ஒன்றும் வருவதில்லை – "கைகளைக் காலியாக
வைத்துக் கொண்டு, வீசி நடக்கும் இவன்கிட்ட என்ன பேச்சு..." என்ற எண்ணம்
செல்லச் செல்வங்களின் மனதில் ஓடுமோ?
அம்ருத்ரஸ் – பச்சைப் பசேலென!
பூங்காவின் வாயிலில் தினமும்
இரண்டு கடைகள் போடுகிறார்கள் – ஒருவர் முதியவர், இரண்டாமவர் நடுத்தர வயதுக்காரர்.
இருவருமே போடும் கடை – அம்ருத்ரஸ் – புதினா, அருகம்புல், இஞ்சி, என பல இலைகளை
அரைத்து பச்சைப் பசேலென ஜூஸ், அங்கேயே தயாரித்து விற்கிறார்கள். பேட்டரி வைத்துக்
கொண்டு, அதன் மூலம் மிக்ஸியில் அரைத்துத் தயாரித்துத் தருகிறார்கள். காலையில்
மட்டுமே இந்த விற்பனை. பூங்காவில் நடக்க வரும் பலரும் இவர்களில் ஒருவரிடம் தினமும்
அம்ருத்ரஸ் வாங்கிப் பருகிறார்கள். நமது ஊர் போல தண்ணீர் நிறைய கலப்பதில்லை.
Thick-ஆக இருக்கும் இந்த ஜூஸ் இதுவரை குடித்துப் பார்க்கத் தோன்றவில்லை! அதனால்
விலையும் தெரியாது. இந்த அம்ருதமான ரஸத்தைக் [அம்ருத்ரஸ்!] அருந்தினால், எவ்வளவு
விலை, எப்படி இருந்தது என்பதைச் சொல்லுகிறேன்! நடக்க வருபவர்களுக்கு நல்ல வசதி,
இரண்டு குடும்பங்களும் பிழைக்கின்றன!
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புதுதில்லி.
பின் குறிப்பு: படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து!
நடப்பதனால் ஆன பயனென்கொல் சமோசா
பதிலளிநீக்குபஜ்ஜி தேநீர் சாப்பிடின்!
:)))
குட் மார்னிங் வெங்கட்!
ஹா ஹ் ஆ ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் கலக்கல்
நீக்குகீதா
ஹா... ஹா... ஹா.... நன்றி கீதா!
நீக்குநடப்பதால் கிடைக்கும் பலன் - ஹாஹா.... நல்ல சொன்னீங்க!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஎங்கள் அலுவலகங்களிலும் இப்படிச் சிலர் உண்டு. மேலும் திறமையான ஒருவர் குடித்துக்குடித்துக்குடித்துக்குடித்துகுடித்துக் குடித்தே சென்ற வாரம் மறைந்தார். :(
பதிலளிநீக்குஇவருக்கும் குடிப்பழக்கம் இருப்பதாகத் தெரிகிறது. இந்த இளம் வயதிலேயே குடித்து தன்னைக் கெடுத்துக் கொள்கிறார். அளவோடு இருந்தால் பரவாயில்லை. என்ன செய்ய!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
தாடியுடன் இருப்பவர்கள் அந்தப் பக்கம் அதிகம் போகாதவர்கள் என்கிற லாஜிக் தெரியாதவர்கள்! விடுங்க வெங்கட்...
பதிலளிநீக்குவிடுங்க வெங்கட்! விட்டாச்சு.... சும்மா இங்கே எழுதுவதால் ஒரு ரிலாக்சேஷன் அவ்வளவு தான்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
//பொதுவாக தெரியாத எண் என்றால் பொதுவாக எடுப்பதில்லை!//
பதிலளிநீக்குபொதுவாக இரண்டு பொதுவாக ஒரேநேரத்தில் அல்லது பொதுவாக ஒரே வார்த்தையில் போடமாட்டார்கள் என்று நினைக்கிறேன்!!!
:)))
பழைய வண்டி! ஹா... ஹா... ஹா...
பொதுவாக - பொதுவாக இப்படி நடந்து விடுகிறது அவ்வப்போது!
நீக்குபழைய வண்டி - :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நாலுகால் செல்லங்கள் கூடியிருப்பது அழகு.
பதிலளிநீக்குநாலு கால் செல்லங்கள் - படத்திலிருப்பதை விட பூங்காவில் நடமாட்டம் அதிகம். பொதுவாக அங்கே படம் பிடிப்பதில்லை என்பதால் இந்தப் பதிவில் படங்கள் இணையத்திலிருந்து....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அமிர்தரசம் நிச்சயம் காஸ்டலியாகத்தான் இருக்கும். இங்கு சென்னைக்கு கடற்கரைகளில் ஆன் பெண்கள் அருகம்புல், இன்னும் என்னென்னவோ ஜுஸ்கள் வேண்டுமா என்று கேட்டபடியே நெருங்குவார்களாம். இடுப்பைச் சுற்றிக் கயிறு கட்டி அதில் இரண்டு லிட்டர் பாட்டிலில் அவற்றை எடுத்து வந்திருப்பார்களாம். வியாபார புத்திசாலிகள்!
பதிலளிநீக்குவியாபாரத்தில் பல யுக்திகளைக் கடைபிடிக்க வேண்டியிருக்கிறது - இது போட்டிகள் நிறைந்த உலகம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஹா ஹா ஹா நடகக் வரவங்க இப்படிச் செய்யறத பார்த்ததுண்டு...நடந்துட்டு நல்லா சாப்பிட்டுட்டும் போவாங்க. இங்க பெசன்ட் நகர் பீச், மெரினா பீச் பக்கத்துல வாக்கிங்க் வரவங்களுக்கு அருகம்புல் ஜூச் சூப், வெஜ் சூப் மூலிகை சூப் வெயிட் லாஸ் சூப் இப்படி விற்கிறதா கேள்விப்பட்டதுண்டு...
பதிலளிநீக்குகீதா
எல்லாம் வியாபாரமயமாகிவிட்டது. புதிது புதிதாய் கண்டுபிடிக்கிறார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
ரொம்ப அறிவாளியோ? ரொம்ப அறிவாளியாக இருந்தால் வேலை செய்வார்கள் ஆனாலும் செய்வதில் அவர்களுக்கு ஏனோ யதார்த்தத்துடன் ஒத்துப் போக முடியாமல் அவர்கள் மனம் ஐடியலிஸ்டிக்காக இருக்கும் அதனால் யதார்த்தத்துடன் ஒத்துப் போக சில சமயங்களில் அடம் பிடிக்கும் என்று வாசித்ததுண்டு...
பதிலளிநீக்குகீதா
ரொம்ப அறிவாளியோ? இருக்கலாம்! ஆனால் என்னதான் அறிவாளியாக இருந்தாலும் சில விஷயங்கள் பொதுவில் செய்ய முடிவதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
இப்படி அறிவாளியாக இருந்து யதார்த்தத்டுடன் போக முடியாமல் பிரச்சனைகள் வருவதை விட சாதாரண அறிவுத் திறனுடன் யதார்த்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதே மேல்....
பதிலளிநீக்குகீதா
யதார்த்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதே மேல்! 100% உண்மை
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
அலைபேசி அழைப்புகள் ஹையோ அந்தத் தொல்லை ரொம்பவே...10 வருடம் கழித்து பழைய வண்டி ஹா ஹா ஹா அது சரி...
பதிலளிநீக்குகீதா
இவர்கள் தரும் தொல்லையைத் தாங்க முடியவில்லை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
அலைபேசி அழைப்புகள் தொல்லை தான். இந்தச் சாறுகள் இங்கேயும் கிடைக்கின்றனவே. என்ன பெயர் தான் வேறே இருக்கும்னு நினைக்கிறேன். செல்லச் செல்வங்கள் அழகோ அழகு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்கு[கீதாஜியின் பாஷையில்]// ஹா ஹா ஹா ஹா நன்றி நன்றி...ஜி!
பதிலளிநீக்குவெங்கட்ஜி இந்த லிஸ்டில் நம்ம ஸ்ரீராம், ஏஞ்சலும் அடக்கம்!!
செல்லங்கள் எல்லாம் ஏதோ மீட்டிங்க் போலருக்கே! ஆனால் பரவாயில்லை எல்லாம் கர் உர் என்று சொல்லாமல் கூடியிருக்கே சண்டையில்லாமல்..!!! உணவு வரும்னு காத்திருத்தல் போல...ஹா ஹா ஹா ஹா..ரொம்ப அழகா இருக்கு ஜி. ரசித்தேன் ரொம்பவே...
// "கைகளைக் காலியாக வைத்துக் கொண்டு, வீசி நடக்கும் இவன்கிட்ட என்ன பேச்சு..." என்ற எண்ணம் செல்லச் செல்வங்களின் மனதில் ஓடுமோ?// ஹா ஹா ஹா ஹா...
கீதா
ஆமாம் ஸ்ரீராம் - கீதாம்மா, ஏஞ்சல், மதுரைத் தமிழன் - என நிறைய பேர் உண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
அம்ருத ரஸ் என்றதும் நான் ஆம்கா பன்னா என்று நினைத்துவிட்டேன்...இது இங்கும் பீச்களில் விற்கிறாங்க...ஏமாற்றுதலும் உண்டு இதில் இங்கு..
பதிலளிநீக்குகீதா
ஆம்கா பன்னா - விரைவில் - வேறு ஒரு கதம்பம் பகிர்வில்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நடக்கவா சாப்பிடவா - ரசித்தேன். நான் கலோரி கணக்கு வைத்துக்கொள்வேன். 1 மணி நேரம் நடந்தால் 400 கிராம் குறையும், 400-500 கலோரி. 1 பேரீட்சை 35 கலோரி, 1 ஆரஞ்சு 100-150 கலோரி. டீ/காபி நிறைய கலோரி-ஆனால் நான் சாப்பிடுவதில்லை. நடந்துட்டு ஹோட்டலில் சாப்பிட்டால் கொஞ்சம்கூட பிரயோசனம் இல்லை.
பதிலளிநீக்குஅம்ருத்ரஸ்-பச்சையாக இந்த மாதிரி ஜூஸ், வெளியில் சாப்பிடுவது நல்லதில்லை. கீரை போன்றவற்றில் நிறைய பூச்சி இலைக்குக் கீழ் இருக்கும். இவங்க அலம்பறதுக்கும் மோசமான தண்ணீர் உபயோகப்படுத்தறாங்க. வீட்டில் சாப்பிடுவதுதான் நல்லது.
கீரை போன்றவற்றில் நிறைய பூச்சி இலைக்குக் கீழ் இருக்கும் - தண்ணீரும் சரியில்லை - இருக்கலாம். எனக்கு பார்க்கும்போதே பிடிக்காத உணர்வு. அதனால் அருகே செல்வதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
கதம்பம் அருமை ஜி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் ஜி!
நீக்குதொலைபேசி தொல்லை உங்கள் பழைய வண்டி உங்கள் பதிலை ரசித்தேன் வெங்கட்ஜி.
பதிலளிநீக்குஎங்கள் ஊர்ப்பக்கங்களில் நகரத்தைப் போல் வாக்கிங்க் எல்லாம் இல்லை... நானுமே போவதில்லை.
அம்ருத்ரஸ்! புதியதாக இருக்கிறது.
துளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்குவாக்கிங் போய் கரைச்ச கலோரிகளை சமன்படுத்த சமோசா சாப்பிடுறாங்க போல!
பதிலளிநீக்குஎல்லாம் சரி, அந்த காலை நேரத்தில் சமோசா கிடைக்குமா?!
பூங்காவில் கிடைக்காது - வருபவர்கள் வரும்போதே கடையில் வாங்கி வருகிறார்கள்... சில கடைகள் திறந்திருக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!