புதன், 18 ஏப்ரல், 2018

தியு போகலாம் வாங்க – அய்யா குடி அம்மா குடி – இரவு உணவு



இரு மாநில பயணம் – பகுதி – 27

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!



தங்குமிடம் சென்று உடைமைகளை வைத்து குளித்த பிறகு இரவு உணவிற்காக விசாரித்த போது, ”முதலிலேயே சொன்னால் தான் கிடைக்கும் – நீங்கள் வந்ததே நேரம் கழித்து என்பதால் வெளியே சாப்பிடுங்கள், நிறைய உணவகங்கள் உண்டு” என்று சொல்லி விட்டார் தங்குமிடச் சிப்பந்தி. சரி வெளியே சென்று சாப்பிடலாம் என தங்குமிடத்திலிருந்து முக்கிய வியாபார வீதிக்கு வந்தோம். வீதியே களை கட்டியிருந்தது. சுற்றுலா வந்தவர்களும், அண்டை மாநிலமான குஜராத்திலிருந்து வாரா வாரம் இங்கே வருபவர்களும் என கடை வீதியே களை கட்டியிருந்தது. குஜராத்திற்கும் தியுவிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு – அது மதுவிற்கான தடை.




குஜராத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டு இருக்க, தியுவில் எங்கெங்கும் மது – அய்யா குடி அம்மா குடி கதை தான்! தியுவில் நிறைய மதுக் கடைகள் – ஒவ்வொரு இரண்டாவது கடையும் மது விற்பனை செய்கிற கடையாக இருக்கிறது. மதுக்கடை அதிகம் என்பதால் அசைவ உணவுக்கான உணவகங்களும் அதிகமாகவே இருக்கிறது. சைவ உணவு மட்டுமே சாப்பிடும் எனக்குக் கொஞ்சம் திண்டாட்டம் தான்! குஜராத்தில் இருந்த வரை மது அருந்தாமல் இருந்த கேரள நண்பர்களுக்கு, இப்படி இங்கே நிறைய மதுக் கடைகளைப் பார்த்தவுடன் சரக்கடிக்கும் ஆசை வந்து விட்டது. இந்த முறை வந்திருந்த கேரள நண்பர்கள் தினம் குடிப்பவர்கள் அல்ல! எப்போதாவது குடிப்பவர்கள்! அதனால் இந்தப் பயணத்தில் இது வரை அவர்கள் குடிக்காமல் இருந்தார்கள்.

ஓட்டுனர் முகேஷ்-உம் சேர்ந்து கொள்ள, சரக்கு வாங்கிக் கொண்டார்கள். ஒன்பது மணிக்கு கடை அடைத்து விடுவார்கள் என்பதால், உட்கார்ந்து குடிக்க இடம் இல்லை! வாகன நிறுத்தத்திலேயே வாகனத்தின் உள்ளே அமர்ந்து சரக்கடித்தார்கள் – தொட்டுக்கொள்ள பக்கத்து தள்ளு வண்டிகளில் ஆம்லேட் வகையறாக்கள் – இப்படியான தள்ளு வண்டிக் கடைகள் ரொம்பவே இருக்கின்றன இங்கே! எங்கே பார்த்தாலும் சாராய பாட்டில்கள்! சாலையோரங்களில் இருக்கும் சாராய பாட்டிலை எடுத்து விற்றாலே நல்ல சம்பாத்தியம் பார்க்க முடியும் எனத் தோன்றுகிறது! கொட்டிக் கிடக்கிறது பாட்டில்கள்! அவர்கள் சரக்கடிக்கும் வரை நானும் நண்பர் ப்ரமோத்-உம் தியு நகர வீதிகளில் உலா வந்தோம்.

தியு ஒரு தீவு என்பதால் ஆங்காங்கே நீர் நிலைகள், அலங்காரங்கள் என அழகாய் இருக்கிறது. எங்கே பார்த்தாலும், ஆண்களும் பெண்களும் கைகளில் குப்பிகளோடு இருந்தார்கள். பதினைந்து இருபது நிமிடம் சுற்றி வந்த பிறகு கார் நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். நண்பர்களும் அதற்குள் சரக்கடித்து முடித்திருந்தார்கள். அடுத்தது இரவு உணவுக்கான தேடல்! எங்கே பார்த்தாலும் அசைவ உணவு தான். சைவம் என்று கேட்டாலே மேலும் கீழும் பார்க்கிறார்கள்! சரி வேறு வழியில்லை! இன்று பட்டினி தான் என்று நினைத்துக் கொண்டேன்! நண்பர்கள் நுழைந்த இடம் பிஸ்மில்லா ரெஸ்டாரெண்ட் – சப்பாத்தி, ஃபிஷ், மட்டன், சிக்கன் என எல்லா வகைகளும் சொல்ல, சைவம் ஒன்றும் இல்லை! சரி நீங்கள் சாப்பிடுங்கள், நான் வேறு ஏதாவது உணவகம் இருக்கிறதா எனத் தேடுகிறேன் என வெளியே வந்தேன்.

ஒரு கடையில் மிக்ஸ் வெஜிடபிள் மற்றும் chசாச்ch என அழைக்கப்படும் மோர் மட்டும் கிடைத்தது – தவா ரொட்டியும்! சரி நல்லதாகப் போயிற்று என அங்கேயே சாப்பிட்டேன் – சிறிய உணவகம் என்றாலும் நன்றாகவே இருந்தது. பெரும்பாலானவர்கள் சரக்கடித்து அசைவம் மட்டுமே சாப்பிடுவதால், சைவ உணவுக்கு இங்கே அத்தனை ஆதரவு இல்லை என்று சொன்னார் உணவகச் சிப்பந்தி. நான் நிதானமாகச் சாப்பிட்டு முடித்து சில நிமிடங்கள் கழித்து நண்பர்கள் வெளியே வந்தார்கள். தியு தூங்கா நகரம் – உணவுக் கடைகள் – தள்ளு வண்டிக் கடைகள் வெகு நேரம் வரை திறந்திருக்கின்றன. சரக்கடிப்பவர்கள் ஒரு பக்கம் என்றால் சுற்றுலாப் பயணிகள் ஒரு பக்கம். ஜே ஜேவென்று இருக்கிறது.



சரி தங்குமிடம் வரை நடக்கலாம் என்று புறப்படும்போது ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் என்று ஆசை வந்தது. தியுவில் என்ன ஐஸ்க்ரீம் கிடைக்கும் எனப் பார்த்த போது புதியதாக, இது வரை கேள்விப்பட்டிருக்காத ஒரு Brand தான் கிடைத்தது – Havmor – அஹமதாபாத் [குஜராத்] தயாரிப்பாம்! தில்லியில் முன்பெல்லாம் கிடையாது. இப்போது தான் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. Havmor ஐஸ்க்ரீம் அவரவர்களுக்குத் தேவையான சுவையில் வாங்கிக் கொண்டு அதைச் சுவைத்தபடியே நடந்தே திரும்பினோம். முகேஷ் வாகனத்தினை எடுத்துக் கொண்டு தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தார்.

தங்குமறைக்கு வந்து அன்றைய கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு படுக்கும்போது இரவு 11.30. அடுத்த நாள் காலையில் எழுந்து அறையைக் காலி செய்து கொண்டு, தியு சுற்ற வேண்டும்.  கொஞ்சம் உறங்கலாம்! நீங்களும் வேலைகளை முடித்துக் கொண்டு காத்திருங்கள். உங்களை தியு அழைத்துச் செல்கிறேன்!
  

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

34 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட் ஜி...ப்ரெசெண்ட்....

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஓட்டுநரும் சேர்ந்து சரக்கடிப்பது ஆபத்தில்லையோ? தெரியாமல் போனால் எப்படி வாகனம் ஓட்டுவார்?!!!

    குட்மார்னிங் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தெரியாமல் போனால் எப்படி வாகனம் ஓட்டுவார்?!!!//

      தயவு செய்து 'தெளியாமல் போனால்' என்று படிக்கவும்!!!!!!

      நீக்கு
    2. சரக்கடித்தது இரவு தான். அதன் பிறகு அடுத்த நாள் காலை வரை ஓய்வு. தெளிந்து விடும் - இவர்கள் பழக்கப்பட்டவர்கள்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. தெரியாமல், தெளியாமல்! :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ராத்திரி நேரத்தில் ஐஸ்க்ரீமா! தொண்டை என்ன ஆவது?!! நான் பகலில் கூட ஐஸ்க்ரீம் சாப்பிடுவதில்லை. பிடிப்பதில்லை. வயிறு திம்முனு ஆகிவிடுவது போல தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி வந்த புதிதில் தினம் இரவு நேரத்தில் - குளிர்காலத்தில் கூட - ஐஸ்க்ரீம் சாப்பிடுவேன்! இப்போது கடந்த ஆறேழு மாதமாக ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை தவிர்த்து வருகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. தியு சுற்றரெடி ஜி. குறிப்பாக எனக்கு அந்தக் கடல் அலைகள் மோதும் பாறைக்குள் சிவலிங்கக் கோயில் உங்கள் வழி அறிய வேண்டும் என்று அவா...

    உணவு எதிர்பார்த்தேன் இப்படித்தான் இருக்கும் என்று ...ஆனால் குடி எதிர்பார்க்கலை. பாண்டிச்சேரி கூட இப்படித்தான் அடுத்தடுத்து குடி கடைகள் தான். அங்கும் குடிக்காதவர்கள் என்பது மிகவும் குறைவு என்று சொல்லுவார்கள். சென்னையிலிருந்து வீக் என்ட் இதற்கென்றே பயணம் செய்பவர்கள் உண்டு பாண்டியில் இதன் விலை பயணம் செய்து போனாலும் குறைவு என்று...ஹும்...

    எப்படியோ உங்களுக்கு உணவு கிடைத்ததே! ஹப்பா...

    குழுவில் செல்லும் போது...குடி, புகை என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விஷயம் என்றாலும் குழு என்று வரும் போது தவர்க்கலாமே/மோ என்று தோன்றும். மற்றவர்களுக்குத் துன்பம் வராத வகையில் பயணம் இருக்க வேண்டும் இல்லையா அதனால்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவு குடி என பிடித்தவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். தியு அருகில் இருக்கும் குஜராத் மாநிலத்தவர்கள் இதற்கென்றே இங்கே வருகிறார்கள்.....

      குழுவில் செல்லும்போது பல விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என்றாலும் அவர்களுக்குப் புரிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. ஓட்டுநரும் சேர்ந்து சரக்கா...ஆஆஆஆஆஆ....பயமாக இருக்கிறதே ஜி! ஆனால் உங்களுக்கும் இதெல்லாம் பார்த்து பழகியிருக்கும்.....பல பயணங்கள் மேற்கொள்வதால்...உண்மையான ஒரு விஷயம் பயணமே பல கற்றுக் கொடுக்கும் நமக்கு அப்படி இருக்க இபப்டிக் குழுவில் பயணம் செய்வது நாம் பல விஷயங்கள் கற்க முடிகிறது. பொறுமை, சகிப்புத் தன்மை வித விதமான மனிதர்களை அட்ஜஸ்ட் செய்து போவது என்று பல....

    சூப்பர் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க வீட்டு ஒட்டுனரும்(மதுரைத்தமிழன்) நண்பர்கள் வீட்டுக்கு பார்ட்டிக்கு சென்றால் இரவு வரும் போது அவர்தான் கார் ஒட்டி வருவார். காரணம் இரவு வேளைகளில் குடித்தாலும் நிதானமாக ஒட்டி வருவார்

      நீக்கு
    2. அதற்குப் பிறகு பயணம் இல்லை - ஐந்து நிமிடத்தில் தங்குமிடம் வந்து சேர்ந்து விட்டால் போதும். அடுத்த நாள் தான். கொஞ்சமாகத் தான் குடித்திருந்தார் என்பதால் பிரச்சனை இல்லை. நான்கு நாட்கள் குடிக்காமல் இருந்தாரே அதுவே பெரிய விஷயம்!

      இந்த மாதிரி பயணங்களில் சகிப்புத் தன்மை ரொம்பவே அதிகம் தேவை. அப்படி இல்லை எனில் பயணிக்கவே முடியாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    3. நல்ல ஓட்டுனர் - குடித்தாலும் நிதானமாக ஓட்டுகிறாரே - உங்க வீட்டு ஓட்டுனர் - நீங்க தான்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
    4. மதுரை ஹா ஹா ஹா ஹா..நல்ல ஓட்டுநர் தான் போங்க...!!

      கீதா

      நீக்கு
    5. ஹாஹா... நான் எப்பவும் ஸ்டடியா இருப்பேன் என்று சிலர் சொல்வதுண்டு அது ஏனோ நினைவுக்கு வருகிறது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. குஜராத்தில் மதுவிலக்கா ?
    தமிழ்நாட்டிலும் பி.ஜே.பி. ஆட்சி வந்தால் நல்ல'தூ ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குஜராத்தில் நீண்ட காலமாகவே மதுவிலக்கு அமலில் உள்ளது. சில இடங்களில் திருட்டுத் தனமாக கிடைக்கும் என்றாலும் விலை அதிகம் - பாமர மக்களால் வாங்க முடியாது என்பதால் குடிகாரர்கள் நடமாட்டம் குறைவு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
    2. கில்லர்ஜி குஜராத்தில் வெங்கட்ஜி சொல்லியிருப்பது போல் மதுவிலக்கு பல வருடங்களாகவே இருக்கே....குஜராத்தில் மதுவிலக்கு என்பது பிஜெபி என்பதால் மட்டுமில்லை. காந்திஜியின் ஊர் என்பதால்...மட்டுமல்ல இப்போது இன்னும் மதுவிலக்குச் சட்டம் வலுவாகியுள்ளது. அங்கு...

      கீதா

      நீக்கு
    3. மதுவிலக்கு நிறைய வருடங்களாகவே இருக்கிறது. எல்லைப் பகுதிகளில் ரொம்பவே கெடுபிடியாக இருக்கும். முன்பெல்லாம் இரயில் நிலையங்களில் கூட சோதனைகள் - சரக்கு பாட்டில்களுக்காக இருக்கும். இப்போதும் உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. ஐஸ்க்ரீம் எப்படி இருந்ததென்று சொல்லவே இல்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாகவே இருந்தது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Bandhu ஜி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. அடிக்கலாம் - இரவு பணி முடிந்த பிறகு! சரக்கடித்து உறங்கினால் நலம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  9. ஐஸ் க்ரீம் சாப்பிடலாம் என்ன பிறகு சிறிது வென்னீர் குடிக்க வற்புறுத்துவார் என் மனைவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐஸ்க்ரீம் சாப்பிட்டு வென்னீர் குடிப்பது நல்லது தான். ஆனால் அப்படிச் செய்ய பிடிப்பதில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  11. தியு தீவைப் பற்றி அறிய ஆவலுடன் தொடர்கிறேன் வெங்கட்ஜி. சமீபத்தில் வாட்சப்பில் ஒரு வீடியோ வந்தது. முதலில் அமர்நாத் லிங்கம் கஷ்டப்பட்டு எடுத்த படம் என்று வந்தது ஆனால் கடல் அலை சிவலிங்கம் வரை வந்து வந்து செல்கிறது. அமர்நாத்தில் கடல் ஏது என்று தோன்றவும் மொபைல் நெட்டில் தேடிப் பார்த்தால் அது தியு என்று அறிய நேர்ந்தது. இப்போது நீங்களும் அந்த இடம் சென்றிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தொடர்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த குகைக்கோவிலுக்கும் சென்றோம். வரும் பதிவுகளில் எழுதுவேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  12. முதலில் என்னடா ஐஸ்கிரீம் விளம்பரம் வருதே என்று பார்த்தால், இடுகையில் போட்டதற்கு நீங்கள் படத்தைப் போட்டிருக்கிறீர்கள். எத்தனையோ ஐஸ்கிரீம்கள் சாப்பிட்டாச்சு.

    உணவு, அட்ஜெஸ்ட்மெண்ட் - கலக்கறீங்க வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனையோ ஐஸ்க்ரீம்கள் சாப்பிட்டாச்சு - தில்லியிலும் நிறைய Choice/Options உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    செல்லுமிடங்களில் சைவ உணவு கிடைக்காமல் அலைவது சிரமம்தான்.. ஐஸ்கிரீம் பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது. சாப்பிடுகிற காலத்தில் குழந்தைகளுக்காக சாப்பிட முடியவில்லை.. இப்போது சாப்பிடுவதில்லை. தியு‌ தீவை சுற்றிப்பார்க்க நானும் காத்திருக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைவ உணவு - சில மாநிலங்களில் சிரமம் அதிகம் தான்.....

      ஐஸ்க்ரீம் இப்போது நானும் சாப்பிடுவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....