திங்கள், 23 ஏப்ரல், 2018

தியு போகலாம் வாங்க – கங்கேஷ்வர் – அலைகள் செய்யும் அபிஷேகம்



இரு மாநில பயணம் – பகுதி – 29

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


கங்கேஷ்வர் - அலைகள் செய்யும் அபிஷேகம்....


கங்கேஷ்வர் - கோவிலும் கடற்கரையும்....


கங்கேஷ்வர் - அலைகள் செய்யும் அபிஷேகம்.... 

நாகாவ் கடற்கரையிலிருந்து மனதே இல்லாமல் புறப்பட்ட நாங்கள் அடுத்ததாய்ச் சென்ற இடமும் ஒரு கடற்கரை தான் – அங்கே ஒரு கோவில்! கோவில் என்றால் நம்ம ஊர் கோவில்கள் மாதிரி கோபுரங்களுடன், மிகப் பெரிய அளவில் கட்டப்பட்ட கோவில் என நினைத்து விட வேண்டாம். மிகவும் சிறியதாக ஒரு குகை – அது தான் கோவில்! அந்தக் கோவில் பற்றிய காணொளி ஒன்றை இணையத்தில் பார்த்தபிறகு தான் இந்தப் பயணம் போக வேண்டும் என்ற எண்ணமே தோன்றியது என்பதையும் சொல்ல வேண்டும். அப்படி என்ன ஸ்பெஷல் அந்த இடம் – அந்த இடத்தில் நான் எடுத்த காணொளியில் நீங்களே பாருங்களேன்!
 



கங்கேஷ்வர் - படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றால் குகை......


கங்கேஷ்வர் - கோவில் அருகே கடற்கரை....


கங்கேஷ்வர் - அலைகள் வரும் வழி....


தியு நகரில் இருக்கும் மிகவும் பழமையான குகைக்கோவில் இது. கடற்கரை ஓரத்தில் சில படிகள் இறங்கிச் சென்றால் ஒரு குகை. அந்த குகைக்குள் ஐந்து சிவலிங்கங்கள். குகைக்குள்ளே இருக்கும் சிவலிங்கங்களுக்கு, தொடர்ந்து வந்து போகும் அலைகள் செய்யும் அபிஷேகம். பூஜிக்க வருபவர்கள் சிவலிங்கத்தின் மீது வைக்கும் பூக்களையும், வில்வ இலைகளையும் கடலுக்குள் கொண்டு சேர்க்கும்.  இப்படி தொடர்ந்து நடந்தபடியே இருக்கிறது. பெரிய அலைகள் வந்தால், குகைக்குள் நிற்பவர்களின் முட்டி அளவு தண்ணீர் வருகிறது! அங்கே இருக்கும் பூஜாரி – கோவில் பற்றிய கதையை வருபவர்கள் அனைவருக்கும் சொல்லிக் கொண்டு இருக்கிறார். அசராது வரும் அலைகள் போலவே அவரும் அலுப்பதில்லை. அது தானே அவருக்குப் பிழைப்பு.


கங்கேஷ்வர் - குகைக்குள் லக்ஷ்மி, பிள்ளையார், விஷ்ணு உருவங்கள்....


கங்கேஷ்வர் - குகையின் மேல் ஆதிசேஷன்....

கதை என்ன என்பதைப் பார்க்கலாம் – பஞ்ச பாண்டவர்கள் தங்களது அஞாத வாசத்தில் – அதாவது பிறர் அறியாத வண்ணம் வாழும் காலகட்டத்தில் இந்தப் பகுதி வழியாக வந்த போது உணவு உண்பதற்கு முன்னர் சிவபெருமானை வழிபட நினைத்தார்களாம். இந்த இடத்தினைப் பார்த்ததும் பிடித்ததால், அங்கேயே ஸ்தாபித்த பஞ்ச லிங்கங்கள் தான் இவை என்று ஒரு நம்பிக்கை. இந்த கோவில் ஒரு சிறு குகைக்குள் இருக்கிறது. குகையின் மேல் புறத்தில் சேஷ்நாக் – என அழைக்கப்படும் ஆதிசேஷனின் வடிவத்தினையும் வடித்திருக்கிறார்கள். குகைக்குள் லக்ஷ்மி/பார்வதி, பிள்ளையார் மற்றும் விஷ்ணு ஆகியோரின் சிலைகளும் உண்டு. இவை எல்லாம் பிற்காலச் சேர்க்கைகளாக இருக்கலாம்.


கங்கேஷ்வர் - பூஜை செய்யும் பக்தர்கள்....


கங்கேஷ்வர் - எங்கள் கால்களையும் நனைத்த அலைகள்....


கங்கேஷ்வர் - பூஜை செய்யும் பக்தர்கள்....

இவை நிஜமாகவே பாண்டவர்கள் ஸ்தாபித்த பஞ்ச லிங்கங்கள் தானா என்ற சந்தேகம் வரலாம் – உண்மையோ பொய்யோ அதைப் பற்றிய கவலை நமக்கெதற்கு. அழகான இடத்தில், சிறப்பாக அமைந்திருக்கிறது இந்த வழிபாட்டுத் தலம் – கடலலைகள் தொடர்ந்து சிவனை ஆராதிக்கும் காட்சி நமக்குக் காணக்கிடைக்கிறது என்பதை மட்டும் நாம் பார்த்தால் போதுமானது. நம்பிக்கை தானே வாழ்க்கை – இதை உறுதி செய்யும் வகையில் ஒரு பெரியவரை பார்க்க நேர்ந்தது – கடல் வெகு அருகே இருந்தாலும், குளித்து பல நாட்கள் ஆனது போல ஒரு கருமை அவரது முகத்தில்! ஆனால் மனதில் அப்படி ஒரு தன்னம்பிக்கை….


கங்கேஷ்வர் - கோவில் வாயிலில் இருந்த முதியவர்....

அவருக்கு அழகு சேர்க்கும் முகச் சுருக்கங்கள் அவரது அனுபவத்தினைச் சொன்னது. பார்த்த உடனேயே புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என பரபரத்தன எனது காமிராவும், காமிராவைப் பிடித்திருந்த கைகளும்…. அவருக்குத் தெரியாமல், சற்றே தொலைவிலிருந்து படம் எடுத்துக் கொண்டேன். அதற்குள் நண்பர்களும் அவரிடம் சில ரூபாய்த் தாள்களைக் கொடுத்தார்கள். நானும் சென்று அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தேன். வழக்கமாக பலரையும் நேர்காணல் காணும் கேரள நண்பர் இவரிடமும் பேச்சுக் கொடுத்தார். அவரிடம் சேகரித்த தகவல் – ”அவர் பெயர் Bபவன் – பெற்றவர்கள் இறந்து விட்டார்கள். இவர் மனைவியும் இறந்து விட, இவர் பெற்றவர்கள் இவரை கைவிட்டு விட்டார்கள் – அது நடந்து பல வருடம் ஆகிவிட்டதாம்!. ஏதோ என் வாழ்க்கையும் இது வரை ஓடிவிட்டது – இனியும் ஓடும் – உங்களைப் போன்ற சிலரின் தானத்தினால்!”


கங்கேஷ்வர் - கோவில் அருகே....

பெரியவர் Bபவன் அவர்களிடம் பேசிய பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே என்ன சிறப்பு என்பதை வருகின்ற பதிவில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

28 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். "அலைகளில் மிதக்குது... இறையொன்று குளிக்குது.. கைதொழு..." என்று பாடலாமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம். பாடலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. விஷ்ணு, பிள்ளையார், லட்சுமி, சேஷ்நாக் என்று லிங்கத்துடன் இன்னும் சில இறைகளும் இருப்பதால் 'இறையொன்று' என்றிருப்பதை 'இறை இங்கு' என்று மாற்றி பாடலாம்!!!! இந்தப் பாடல் டியூனில் சொல்கிறேன் என்று தெரிகிறதுதானே!!!! கடவுள் என்னை மன்னிக்கட்டும்!

      நீக்கு
    3. கடவுள் என்னை மன்னிக்கட்டும்! ஹாஹா.... உலக்கை நாயகனின் “அந்த ஒரு நிமிடம்” பாடலைத் தானே சொல்கிறீர்கள்!

      //அலைகளில் மிதக்குது,
      இறை இங்கு குளிக்குது,
      கை தொழு!//

      நல்லாத் தான் இருக்கு.....

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பெரியவரின் முகத்தில்தான் எத்தனை (வாழ்க்கை) அனுபவ வரிகள்! அவருக்குத் தெரிந்தே புகைப்படம் எடுத்திருந்தால் கூட ஒன்றும் சொல்லி இருக்க மாட்டார். முகத்தில் சற்றே நிழல் விழுந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிழல் - அவருக்கும் தேவையாக இருந்தது. சொல்லிவிட்டு எடுக்க மறுத்து விட்டால்... என்பதால் இப்படி எடுக்க வேண்டிய நிலை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில் கிளாஸ் மாதவி.

      நீக்கு
  4. அலைகள் அபிஷேகம்...அப்பப்பா. இப்படியான ஒரு காட்சியைப் பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யான் பெற்ற இன்பம்.... என்பது தான் எண்ணம் ஐயா......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. படங்களும் தகவல்களும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  6. அழகான இடம்.
    அலைகளின் சத்தம், அலைகள் வந்து இறைவனை வணங்கி செல்வது எல்லாம் அருமையாக இருக்கிறது.
    பார்க்க வேண்டிய கோவில்தான்.
    படங்கள், காணொளி எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ன கோவில் தான் என்றாலும் சிறப்பாக இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  7. கடலலைகள் அபிஷேகம் செய்யும் சிவலிங்கத்தை புகைப்படத்தில் பார்த்திருக்கேன். நான் கிராட்ஃபிக்ஸ்ன்னு நினைச்சேன். நிஜமாவே இருக்கா?!

    போக ஆசைப்படும் இடங்களில் இந்த ஊரையும் சேர்த்துக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிராஃபிக்ஸ் அல்ல - நிஜம் தான்! நல்ல இடம் தியு. பார்க்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  8. இந்தியாவிலேயே எவ்வளவு இடங்கள் பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் நாட்டிலேயே பல இடங்கள் இப்படி உண்டு கில்லர்ஜி! அனைத்தையும் பார்க்க ஆசையிருந்தாலும் இந்த ஒரு ஜென்மம் போதாது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. அத்தனையும் அருமை பார்த்ததிலே பெருமை.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    அழகான இடங்கள். அருமையான படங்களுடன் கங்கேஷ்வரர் தரிசனங்கள் நன்றாக இருந்தது. சிவலிங்க அபிஷேகம் செய்யும் கடலலைகள், காலை நனைத்து விட்டு செல்லும் கடலலைகள் என பார்ப்பதற்கு மிகவும் மகிழ்வாக இருக்கின்றது. எப்போது இங்கெல்லாம் செல்ல முடியுமோ என நினைக்கும் போது. தங்கள் பதிவின் மூலம் காண்பதும் ஒரு நிறைவை தருகிறது.

    வயதானவரின் தன்னம்பிக்கை அசர வைக்கிறது. அடுத்த தங்களின் அனுபவ பயணத்திற்கு காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போது இங்கெல்லாம் செல்ல முடியுமோ? முடிந்த போது சென்று வாருங்கள் ஜி...

      வயதானவரின் தன்னம்பிக்கை - பிரமிக்க வைக்கும் தன்னம்பிக்கை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  11. இந்தக் கோவிலைப்பற்றிய காணொளி முன்னமேயே கண்டிருக்கிறேன். நமக்குத் தெரிந்தவர் கோவிலுக்குச் சென்று அதைப் பற்றி விவரிக்கும்போது அதன் அழகே தனிதான்.

    'கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்' என்ற பாடல்தான் இந்தப் பெரியவரைப் பார்க்கும்போது தோன்றியது. இறை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரியான வாழ்க்கைப் பாதையைக் கொடுத்து அவர்களின் வயிற்றை நிரப்புகிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இந்த கோவில் பற்றிய காணொளி சில வருடங்களுக்கு முன்னர் ரொம்பவே சுற்றியது - வாட்ஸாப்பில்....

      கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் - அதே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  12. கங்கேஷ்வர் என் லிஸ்டில் உண்டு. பார்க்க மிகவும் ஆசைப்படும் இடம். கடற்கரையே ரொம்பப் பிடிக்கும்…அதுவும் அலைகள் வந்து வந்து செல்வது என்ன அழகு! மிக மிக அழகாக இருக்கின்றது ஜி. உ ங்கள் படமும் வீடியோவும் வித்தியாசமாக இருக்கின்றன.
    நான் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அந்த வெளிப்புறமாக அலைகள் வரும் இடம் என்று இருக்கிறது இல்லையா அந்த இடத்தில் நான் உட்கார்ந்துவிடுவேன்…ஹா ஹா ஹா… அப்புறம் படிகளும் கொஞ்சம் தெரிகிறதே….அந்த இடத்திலும் அமர்ந்து அந்த அனுபவத்தை ரசிக்க வேண்டும் போல் உள்ளது…பார்ப்போம். கூடுதலாக ஒரு
    அப்பெரியவரின் படம் நன்றாக இருக்கிறது ஜி. எத்தனை அனுபவங்களோ அவருக்கும்….பாவம் தான் அவர்.
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கங்கேஷ்வர் - எப்போது முடிகிறதோ அப்போது சென்று வாருங்கள் கீதா ஜி. கொஞ்சம் நேரம் அங்கே நின்று ரசித்து வாருங்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  13. இப்படியான இடம் சமீபத்தில் வாட்சப்பில் வந்தது. முதலில் அது வடக்குப் பகுதியில் அமர்நாத் என்றிருந்தது எப்படி அமர்நாத் இருக்க முடியும் என்று தோன்றி நெட்டில் பார்த்த போது தெரிந்தது. அழகான இடம். உங்கள் புகைப்படங்களும் வீடியோவும் மிக்வும் அழகாக இருக்கின்றன..பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுகிறது…. ஜி.
    அந்த முதியவரின் படம் நன்றாக இருக்கிறது
    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமர்நாத் - வாட்ஸாப்பில் வரும் அனைத்தும் நம்ப முடிவதில்லை. பல ஜிம்மிக்ஸ் செய்தவை. புகைப்படங்களும் ஃபோட்டோஷாப் செய்தவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....