சென்ற வாரத்தில் ஒரு நாள் புதிய
பதிவுகள் ஒன்றும் நான் தொடர்பவர்களின் வலைப்பூக்களில் இல்லாததால் என்ன செய்யலாம்
என யோசித்தபோது சரி ஏதாவது புத்தகம் படிக்கலாம் எனத் தோன்றியது. இப்போதெல்லாம்
அச்சடிக்கப்பட்ட புத்தகங்களைப் படிப்பதை விட ஏனோ மின்புத்தகங்களைப் படிக்கப்
பிடித்திருக்கிறது. சில நூல்களை தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன். அப்படி
தரவிறக்கம் செய்து வைத்த நூல்களில் ஒன்று தான் சுழலில் மிதக்கும் தீபங்கள். திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்களின் நாவல்
இது. WWW.FREETAMILEBOOKS.COM
தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த
நாவல் A4 அளவில் 100 பக்கங்கள் தான் [அனைத்தும் சேர்ந்து]. சில நிமிடங்களில்
படித்து விட முடியும் நூல் தான். கதைக்களன் நான் இருக்கும் தில்லி என்பதால்
இன்னும் கொஞ்சம் ஈடுபாடுடன் படிக்க முடிந்தது. திருமணமாகி 17 வருடங்கள் ஆனபின்பும்
தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாத குடும்பத்தலைவி கிரி என்கிற கிரிஜா,
பழமையில் மூழ்கிக் கிடக்கும் மாமியார், மனைவியை ஒரு வேலை செய்யும் மெஷினாகவே
பார்க்கும் கணவன், இரண்டு மகள் ஒரு மகன் என குடும்பம் – இவர்களுக்காகவே உழைத்து
தன் படிப்பு, திறமை எல்லாவற்றையும் மறந்திருக்கும் கிரிஜா பற்றிய கதை. இந்தச்
சுழலிலிருந்து விடுபட்டாரா என்பதைத் தான் கதையாகச் சொல்லி இருக்கிறார்.
வீட்டுக்கு வரும் மாமியாரின் உறவினர்,
மாமியாருக்குப் பிடிக்கவே பிடிக்காத ரத்னா எனும் பெண்ணும், அவருடன் படிக்கும்
அபுவும் கிரிஜாவிற்கு சில படிவங்களைக் கொடுத்து – அவர்களது ஆராய்ச்சிக்கான கேள்விகள்
உடைய படிவம் கொடுத்து அவரது பதில்களை எழுதச் சொல்கிறார்கள். பத்து வருடங்கள்
ஆசிரியராக இருந்து நல்ல விதமாக பல மாணாக்கர்களை முன்னேற்றிய ஆசிரியராக இருந்த
கிரிஜா இப்படி குடும்பத்தின் வேலைகளில் மூழ்கி தன்னை இழந்து விட்டாரே எனச் சொல்லி
வருத்தப்பட அவரும் யோசிக்கிறார். மனதுக்குள் மூடி வைக்கப்பட்டிருந்த வருத்தங்கள்,
கணவனின் கோபத்தால் வெளிப்பட, வீட்டை விட்டு யாருக்கும் சொல்லாமல் வெளியேறுகிறார்.
“கூட்டுக்குள்
இருப்பதை உணர அவகாசமில்லாமல், உணராமல் இயங்குவது சுமையில்லை. நீ கூட்டுக்குள்
இருக்கிறாய் என்ற உணர்வு அறிவுறுத்தப் பெற்ற பிறகு, ஓரிரண்டு நாட்களேனும் அந்த
விடுதலையை அனுபவித்தாக வேண்டும்”.
கங்கையின் ஓட்டத்தைப்
பார்த்துக் கொண்டே, கடந்த காலம், நிகழ்காலம் கட்டுபடுத்தாத விடுதலையில் அவள்
அமைதியாக இருந்த பின், தெளிந்து தன் பிரச்சனைக்கு முடிவு காணலாம். அவசரப்பட்டு
எந்த முடிவையும் எடுக்க இயலாது. குடும்பம்…. மெல்லிய இழைகளால் மக்களையும்
சுற்றத்தையும் இணைக்கும் நிறுவனம். இது காலம் காலமாக வந்த மரபில் பின்னப்பட்டது.
இன்று இராட்சத முட்புதராக அது பெண்ணினத்தை வருத்துகிறதென்றால்….? முதலே தவறா?
ஒரு பேருந்தில் ஏறி பேருந்து
நிலையம் சென்று ஹரித்வார், செல்கிறார். பேருந்தில் சந்தித்த தமிழ்நாட்டின் முதிய
தம்பதிகளுக்கு துணையாக அவர்களுடனேயே ஹரித்வார் செல்கிறார்கள். பெண்மணி வாயோயாமல் பேசிக்கொண்டே
வருவது கிரிஜாவிற்கு இதமாக இருக்கிறது. ”இப்ப
பொட்டிப்பாம்பாக, சாதுவாட்டம் உட்கார்ந்திருக்காரேன்னு நினைக்காதேம்மா! வச்சிண்டே
சொல்றேன். விறகுக் கட்டையால அடிச்சிருக்கார்…. ஒரு கஷ்டமா இரண்டு கஷ்டமா?”
ஹரித்வார் சென்று சேர்ந்ததும் அவர்கள் தங்கிய ஆஸ்ரமத்திலேயே தங்குகிறார்.
பொங்கிக் கொண்டு ஓடும் கங்கையைப்
பார்த்தபடியே அமர்ந்திருப்பது மனதுக்குப் புத்துணர்வு தரும். கிரிஜாவிற்கும்
கங்கையில் இறங்கிக் குளிக்க ஆசை. ”மூழ்கு…! மூழ்கு….! கங்கை… கங்கையே இது என்ன புத்துணர்வு?
இது தான் பேரின்பமோ? எல்லாத் துன்பங்களையும், எல்லாக் குழப்பங்களையும் அடித்துச்
சென்று தெளிவும் துலக்கமும் தரும் இந்த ஓட்டம்.” ரிஷிகேஷுக்குக்கும்
செல்கிறார். அங்கேயும் ஒரு தமிழ்
மூதாட்டியைச் சந்திக்கிறார். அந்த மூதாட்டி இவருக்கு உணவளிக்கிறார். மூதாட்டியிடம்
பேசிக் கொண்டிருந்ததில் கொஞ்சம் மன அமைதி கிடைக்கிறது. மூதாட்டி சொன்னதாகச் சில
வரிகள்….
”லோகமே பணத்துல
இருக்கு. அதனால, பெண்ணாகப் பிறந்தவள் அதிகம் கஷ்டப் படுகிறாள். இவளுக்குப் பணமும்
சம்பாதிக்கணும்னு கடமை வந்து சுமக்கிறாள். இல்லாட்டா, அத்தனையும் சதையாக
மாப்பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணிண்டு கார்ல போறா.
”பிரச்னை, பிரச்னைன்னு
நினைச்சிண்டே இருந்தா குழம்பிண்டே இருக்கணும். பொறுக்கலன்னா எழும்பிப் போராடு;
தெளிந்து கொள், இரண்டிலொண்ணு, முடிவு செய்துடனும், அந்த முடிவைப் பத்தி பிறகு
அலட்டிக்கக் கூடாது. அப்படி, பிரச்னை, பிரச்னைன்னு, சிக்கலிலிருந்து விடுபட
நமக்குச் சக்தி இருக்குன்னு தைரியமில்லாமலேயே உசிரை மாய்த்துக்கிறதே, ரொம்ப
கோழைத்தனம்.”
சென்று ஐந்து நாட்கள் ஆன பிறகு,
“அடடா, நம் குடும்பத்தினை விட்டு வந்துவிட்டோமே” என திரும்ப வர, அவர் பெரிய
குற்றம் புரிந்துவிட்டதாக, கெட்டுப் போய்விட்டதாக தகாத வார்த்தைகள் சொல்லி வீட்டை
விட்டுத் துரத்தப்படுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது, குடும்பத்தினருடன்
சேர்ந்தாரா இல்லையா என்பதை புத்தகத்தினை தரவிறக்கம் செய்து படிக்கலாமே!
இந்தப் புத்தகம் படித்தபிறகு
ஹரித்வார் சென்று சில வருடங்களாயிற்றே என்று தோன்றுகிறது. சனி, ஞாயிறில்
முடிந்தால் சென்று வர வேண்டும்…. முதுகுச் சுமையோடு தனிமையாக ஒரு பயணம் போகலாமா என
யோசிக்கிறேன்!
மீண்டும் வேறொரு புத்தக வாசிப்பனுவத்தோடு
ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
குட் மார்னிங் வெங்கட்.
பதிலளிநீக்கு//சென்ற வாரத்தில் ஒரு நாள் புதிய பதிவுகள் ஒன்றும் நான் தொடர்பவர்களின் வலைப்பூக்களில் இல்லாததால்//
என்ன அநியாயம்... தினம் ஒரு பதிவு போடறோமே நாங்க வெங்கட்...!!!
ஹாஹா... படித்த பதிவுகள் தவிர புதியவை ஒன்றும் இல்லாததால்! :))))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
//இப்போதெல்லாம் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களைப் படிப்பதை விட ஏனோ மின்புத்தகங்களைப் படிக்கப் பிடித்திருக்கிறது. //
பதிலளிநீக்குஎனக்கு அப்படியே உல்டா!
உங்களுக்கு உல்டா! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
/இரண்டிலொண்ணு, முடிவு செய்துடனும், அந்த முடிவைப் பத்தி பிறகு அலட்டிக்கக் கூடாது. அப்படி, //
பதிலளிநீக்குஎண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு!
எண்ணித் துணிக.... அதே தான்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
துரத்தப்பட்டவருக்கு என்ன ஆச்சு? மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்தாரா? என்று தெரிந்துகொள்ள, சத்தியமாக நான் தரவிறக்கம் செய்து படிக்கப் போவதில்லை. எனவே எனக்கு மட்டும் 1 2 1 ல முடிவைச் சொல்லிடுங்க வெங்கட் ப்ளீஸ்...!!! சரியான காரணம், சமாதானம் இல்லாமல் அவர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்திருக்க முடியாது. ஏனென்றால் முன்னரை விட அதிகமான வார்த்தைகளால் அவமானப் படுத்தியிருக்கிறார்களே...
பதிலளிநீக்குஹாஹா உங்களுக்கு மட்டும் முடிவைச் சொல்லணுமா? நீங்களே சரியாகத்தான் யூகிச்சு இருக்கீங்க....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
முள்ளும் மலரும் இவரது கதைதான். இவர் பூர்ணம் விஸ்வநாதனுக்கு... மன்னிக்கவும் அப்படிச் சொல்லக் கூடாது.. இவர்தான் மூத்தவர்... பூர்ணம் விஸ்வநாதன் கூட இவருக்கு உறவு என்று நினைவு. குழந்தைகள் இல்லாத இவர், விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில் வாழ்ந்து, ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார். அவரது உடலை அந்த மருத்துவமனை மாணவர்களின் ஆராய்ச்சிக்கே எழுதிக் கொடுத்திருந்தார் என்று படித்த நினைவு.
பதிலளிநீக்குசமீபத்தில் கீதாம்மா கூட இவர் பற்றி சொல்லி இருந்தார் என்று நினைவு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
தரவிறக்கம் செஞ்சுக்கப்போறேன். எனக்கும் மின்நூல்கள் பிடிச்சுருக்கு!
பதிலளிநீக்குதரவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள் டீச்சர்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
I'm going to download! Thanks
பதிலளிநீக்குReminds me of magalir mattum 2 cinema somewhat...
தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.
முன்பு படித்து இருக்கிறேன், மீண்டும் படிக்க ஆவல்.
பதிலளிநீக்குஹரித்வார் சென்று வாருங்கள், தனிமையில் இனிமையாக பயணம் அமையட்டும்.
முடிந்தால் மீண்டும் படித்துப் பாருங்கள்....
நீக்குஹரித்வார் செல்ல வேண்டும் - எப்போது என்பது தான் பெருங்கேள்வி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
படிக்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. பார்ப்போம் எப்போது வாய்ப்பு வருகிறதென்று.
பதிலளிநீக்குவாய்ப்பு கிடைத்தால் படித்துப் பாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
தெரிந்தவர்கள் எழுதுவதையே படிக்க முடிவதில்லை தரவிரக்கமா எனதுநான்கு நூல்கள் மின்னூலாக வெளி வந்திருக்கிறதே யாரும்தரவிரக்கம் செய்ததுபோல் இல்லையே
பதிலளிநீக்குசரி தான் நேரம் ஒரு பிரச்சனைதான்.
நீக்குபுஸ்தகாவில் வெளியிட்ட புத்தகங்களில் சில பிரச்சனைகள் உண்டு. எனது ஒரு புத்தகமும் அப்படித்தான் தரவிறக்கம் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தான்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நானும் எனது நூலை மின்நூவாக்க வேண்டும்.
பதிலளிநீக்குவிரைவில் செய்யுங்கள் கில்லர்ஜி. ஏதேனும் உதவி வேண்டுமெனில் சொல்லுங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடித்து பார்க்க வேண்டுமென்ற ஆவலை தங்களது பதிவு தூண்டி விட்டது. நல்லகதை. எழுத்தாளரின் வேறு சில படைப்புகளை படித்ததாக நினைவிருக்கிறது. அவருடைய் எழுத்துக்கள் நன்றாக இருக்கும். நானும் முடிந்த போது இந்த கதையை படிக்கிறேன்.மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முடிந்த போது படித்துப் பாருங்கள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
வெங்கட்ஜி நான் இந்தக் கதையை வாசித்திருக்கிறேன். கொஞ்சம் வாசித்ததுமே மனம் என்னவோ செய்தது…..முடிவு தெரிந்துவிட்டது ஏனென்றால் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் சிந்தனைகள் ஓரளவு தெரியும். எனவே நேரே முடிவுக்குச் சென்றால் எதிர்பார்த்த முடிவுதான்.
பதிலளிநீக்குஉங்களுக்கும் தெரிந்திருக்கும். சமூகப் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட கதைகள், கதாமாந்தர்கள், அவர்களுடனேயே வாழ்ந்து எழுதியவர் என்றும் வாசித்ததுண்டு.
அவர் சில கதைகளுக்காக ஜெயில், கதைக்களமான கிராமங்க்ளுக்கே கூடச் சென்றிருக்கிறார். அதுவும் குதிரை வண்டியில், அப்புறம் தரையில் படுத்து என்று….வட இந்தியாவில் என்று வாசித்த நினைவு. அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவருடைய பணம் எல்லாம் நம்பிக்கையான உறவினராலேயே பறிபோனது. சென்னை விஸ்ராந்தியில் இருந்தார் இறுதிக் காலத்தில். இறந்தது ராமச்சந்திரா ஹாஸ்பிட்டல் என்று நினைவு.
கீதா
ராஜம் கிருஷ்ணன் அவர்கள் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குநான் இப்போது தான் இந்தக் கதையை வாசிக்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!