திங்கள், 30 ஏப்ரல், 2018

தியு போகலாம் வாங்க – கோட்டையும் சிறைச் சாலையும்



இரு மாநில பயணம் – பகுதி – 32

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


பார்வை போகும் தூரம் வரை கடல்.....
தியு கோட்டையிலிருந்து....

தேவாலயத்தினையும் மேரி மாதாவினையும் தரிசித்த பிறகு நாங்கள் சென்ற அடுத்த இடம் தியுவின் கோட்டை. கடலை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோட்டை மிகவும் அழகிய கோட்டை. கடலை கோட்டை மேலிருந்து பார்ப்பது ஒரு அற்புதக் காட்சிதானே…. அங்கே தான் இப்போது நாம் போகப் போகிறோம். தியு கோட்டை போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை மற்ற அரசாங்கங்களால் எடுக்கப்படும் படையெடுப்புகளை – தடுக்க, தங்களை தற்காத்துக் கொள்ள கட்டப்பட்ட கோட்டை. 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை எனத் தெரிகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து சில வருடங்களுக்குப் பிறகு வரை கூட போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்திருக்கிறது இந்தப் பகுதி.



யாரங்கே....  கோட்டைக் கதவுகள் திறக்கப் படட்டும்.....

தியு கோட்டையிலிருந்து....
 

1961-ஆம் ஆண்டு Operation Vijay மூலம் தான் போர்த்துகீசியர்களை வெளியேற்றி, தியு பகுதியை இந்தியாவுடன் இணைத்துக் கொண்டார்கள். அந்தக் காலத்திய கோட்டையின் ஒரு பகுதி இப்போது தியு நகரின் சிறைச்சாலையாக செயல்படுகிறது – கோட்டையினை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறைச்சாலை பகுதியில் சுற்றிப்பார்க்க அனுமதி இல்லை! சிறைக்கு செல்லும்படி ஏதாவது செய்தால் மட்டுமே பார்க்க முடியும்! அரேபியன் கடலின் முக்கிய வியாபார ஸ்தலம் – கடல்வழி வியாபாரங்கள் இப்பகுதி வழியே தான் மிகவும் பரபரப்பாக நடந்த காலம்.


குண்டு போட்டுத் தாக்க வசதி.....

தியு கோட்டையிலிருந்து....


கோட்டையில் சிதிலங்கள்... 
பராமரிப்பு இன்னும் கொஞ்சம் இருக்கலாம்!
தியு கோட்டையிலிருந்து....



1509-ஆம் ஆண்டு போர்த்துகீசியர்களுக்கும் இப்பகுதியை ஆண்ட மன்னர்களுக்கும் போர். ஒவ்வொரு போரிலும், போர்த்துகீசியர்களுக்குத் தோல்வி – 1513, 1521, 1523 மற்றும் 1531 ஆகிய வருடங்களில் தொடர்ந்து படையெடுப்பு – தியு பகுதியை ஆக்கிரமிக்க நடந்தாலும், போர்த்துகீசியர்களால் இப்பகுதியை தங்களுடையதாக்கிக் கொள்ள முடியவில்லை. 1535 – அச்சமயத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த குஜராத்தின் பகதூர் ஷாவுக்கு தில்லியிலிருந்து பிரச்சனை. அதைச் சரிகட்ட, போர்த்துகீசியர்களோடு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். தியு கடற்கரையோரம் கோட்டை கட்டிக் கொள்ள போர்த்துகீசியர்களுக்கு அனுமதி தருகிறார்.


பீரங்கிப் பார்வை!

தியு கோட்டையிலிருந்து....
 

என்னதான் போர்த்துகீசியர்களுக்கு அனுமதி கொடுத்தாலும், அவர்களை முழுமையாக நம்ப முடியவில்லை பகதூர் ஷாவால். அனுமதி கொடுத்த பிறகு சிந்தித்து என்ன பயன்? முதலிலேயே யோசித்திருக்கலாம். போர்த்துகீசியர்களுடன் போர் புரிகிறார். அந்தப் போரில் உயிர் துறக்கிறார் பகதூர் ஷா. போர்த்துகீசியர்கள் அவரது உடலை கோட்டையிலிருந்து கடலுக்குள் தூக்கி வீசுகிறார்கள்! மீன்களுக்கு உணவாகப் போனார் ஒரு அரசர்! அதன் பின்னர் பகதூர் ஷாவின் மருமான் மூன்றாம் மஹ்மூத் ஷா அப்பகுதியை ஆட்சி செய்கிறார் – போர்த்துகீசியர்களின் அனுமதியோடு. 1961-ஆம் ஆண்டு வரை போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்திருக்கிறது இந்த கோட்டை.


பானிகோட்டா கோட்டை.....

தியு கோட்டையிலிருந்து....


அழகான கோட்டை – மூன்று பக்கங்களில் கடலால் சூழப்பட்ட கோட்டை – Sandstone வகைக் கற்களால் கட்டப்பட்டிருக்கும் கோட்டையின் மேல் பகுதியில் பீரங்கிகள் – அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இப்போதும் இங்கே வைத்திருக்கிறார்கள். இந்தக் கோட்டையிலிருந்து எதிரே கடலுக்குள் இன்னுமொரு கோட்டையும் இருக்கிறது – பானிகோட்டா கோட்டை என அழைக்கப்படும் அந்தக் கோட்டை ஒரு கப்பலைப் போலவே வடிவமைக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. தியு கோட்டையிலிருந்து பானிகோட்டா கோட்டையை படம் மட்டும் எடுத்துக் கொண்டோம். அங்கே செல்வதற்கு படகுகள் இருப்பதாகத் தெரிகிறது. அங்கே சென்றிருந்தால் தியு கோட்டையையும் படம் பிடித்திருக்கலாம்!


கடலும் பானிகோட்டா கோட்டையும்.....

தியு கோட்டையிலிருந்து....


கோட்டை முழுவதும் சுற்றி வந்ததில் அலுப்பு வரத்தான் செய்கிறது. இது போன்ற கோட்டைகளைச் சுற்றி வர நிறைய தெம்பு வேண்டும்.  காலையிலிருந்து சுற்றுக் கொண்டே இருந்ததால் எங்கள் நடை ரொம்பவே மெதுவாகத் தான் இருந்தது. சில இடங்களில் மேடான பாதைகளும், படிக்கட்டுகளும் உண்டு என்பதால் இங்கே வரும் முதியவர்கள் ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். சுற்றுலாத் துறை இவர்களுக்காக ஏதாவது வசதிகள் செய்து கொடுக்கலாம். கோட்டை என்பதால் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு மேல் இங்கே இருக்க வேண்டியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய வசதிகள் செய்து கொடுப்பதில் கவனம் காட்டலாம் தியு அரசு.


என்ன ஏம்லே ஃபோட்டோ புடிக்கிற!

தியு கோட்டையிலிருந்து....
 

கோட்டை முழுவதும் சுற்றி, ஆங்காங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு கீழே வந்தோம். கோட்டையின் வாயிலிலும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட பிறகு வாகன நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். முகேஷ் நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு தயாராக இருந்தார். மீண்டும் குஜராத் நோக்கி பயணப்பட வேண்டும். அன்றைக்கு இரவு தங்க குஜராத்தில் தான் ஏற்பாடு செய்திருந்தோம். அதனால் இரவுக்குள் அங்கே சென்று சேர்ந்துவிடத் திட்டம்.  என்ன செய்தோம், மதிய உணவு எங்கே சாப்பிட்டோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். மதிய உணவில் என்ன ஸ்பெஷல் என்பதையும் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

26 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி....

    முதல் படமே மனதை ஈர்க்கிறது. வாவ்! போட வைத்தது பதிவுவாசித்து வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ஜி! - மதியத்தில் சொல்ல முடிகிறது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. படங்க ;தகவல்க ரொம்பவே சிறப்பு. ஏன் ஜி பானிக்கோட்டா கோட்டைக்குப் போகமுடியலையோ? அது இன்னும் அழகாக இருக்குமோ வெளியில் பார்க்க அழகாக இருக்கிறதே. படகுகளும் செல்வது போல் இருக்கிறதே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானிக்கோட்டா கோட்டைக்கு படகுகள் மூலம் செல்ல முடியும். நாங்கள் தான் செல்ல வில்லை. அன்று மாலைக்குள் குஜராத் திரும்ப வேண்டியிருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. ஹை நான் த ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ அண்ட் செகண்டூஊஊஉ ஹா ஹா ஹாஹா...

    பீரங்கி படமும் அழகாக இருக்கு...அந்தக் கோட்டை க்ளோஸப் படம் அழகா இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பதிவுகளைப் பொறுத்தவரை நீங்களோ ஸ்ரீராமோ தான் எப்பவும் ஃபர்ஸ்ட்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. அந்நியர்கள் நம் நாட்டில் கட்டிய பெரும்பான்மையான கோட்டைகளின் பகுதிகள் சிறைச்சாலைகளாகத்தான் பயன்படுத்துகின்றனர் போலும்...தப்பிப்பது கடினம் என்றிருக்குமோ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பல கோட்டைகள் சிறைச்சாலைகளாகவே பயன்படுத்தப் படுகின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. குட்மார்னிங் வெங்கட்... முதல் படமே அழகான காட்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம் - மதிய நேரத்தில் சொல்கிறேன்! ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. //சிறைக்கு செல்லும்படி ஏதாவது செய்தால் மட்டுமே பார்க்க முடியும்!//

    ஹா... ஹா... ஹா... பார்க்க முடியும், ஆனா திரும்பி உடனே வரமுடியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ரசித்ததை எழுதி விட்டீர்கள் ஸ்ரீராம்ஜி

      நீக்கு
    2. ஆனா உடனே திரும்பி வர முடியாது! ஹாஹா... அதே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. ஹாஹா.. நீங்களும் இந்த விஷயத்தினை ரசித்தீர்களா? நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. ஆமாம். ரொம்பவே அழகு. நிறைய படங்கள் எடுத்திருந்தேன் இந்த இடத்தினை மட்டுமே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. படங்கள் அனைத்தும் அழகு.

    "மருமான்" பகதூர்ஷாவின் மருமகன்தான் இப்படி எழுத்துப் பிழையோ ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருமகனை மருமான் என்றும் சொல்வதுண்டு கில்லர்ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. ஜலதீபம் கதையில் வருமோ இந்த கோட்டை?
    பார்க்கவே மிக அருமையாக இருக்கிறது.
    நேரில் பார்க்க ஆசை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜலதீபம் கதையில் வருமோ இந்த கோட்டை = தெரியலையேம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    படங்கள் தகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தது. சரித்திரத்தில் படித்தது நினைவுக்கு வந்தது..சரித்திரம் படிப்பது எனக்கு பிடிக்கும் நிறைய கதைகளாக வரும். பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வதுதான் கொஞ்சம் சிரமம். தியு கோட்டை, தாக்குதலுக்கு தயாராக இருக்கும் பீரங்கி, கடலும், பானிக்கோட்டை கோட்டை அனைத்தும் மிக அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் இன்னும் நிறைய உண்டு என்றாலும் வரலாற்றுப் பாடம் எடுத்தது போலாகும் எனத் தரவில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  11. சில நாட்கள் முன்பு என்மச்சினன் சென்று வந்தான் ஆனால் அது பற்றிதகவல் ஏதும்சொல்லவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  12. கேள்விப்படாத செய்தி. இந்தக் கோட்டை பற்றியும் தெரியாது. புதிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி. எல்லாப் படங்களும் வழக்கம் போல் அழகு, அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....