சனி, 21 ஏப்ரல், 2018

என்னதான் செய்ய முடியும் ஒரு அப்பாவால்…




எங்கள் அலுவலகத்தில் ஒரு ஓட்டுனர் – ஆந்திரா – தமிழகத்தின் எல்லை மாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்பதால் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளும் பேசுபவர் – தெலுங்கராக இருந்தாலும்! அவருடைய பணி ரொம்பவே கடுமையானது. அரசாங்க ஊழியர் தானே, எட்டுமணி நேரம் வேலை செய்தாலே பெரிய விஷயம் என்ற பொதுக் குற்றச்சாட்டு இவரைப் பொறுத்தவரை சொல்லவே முடியாது. நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் ஓய்வு கிடைத்தாலே பெரிய விஷயம். காலையிலேயே பணிக்கு வந்தால், இரவு வெகு நேரம் வரை – மிகவும் முக்கியமான பொறுப்பில் இருக்கும் அவருடைய அதிகாரி வீட்டுக்குச் செல்லும்வரை ஓய்வு கிடையாது – அத்தனை நேரமும் பணி நேரம் தான்.


அந்த ஓட்டுனருக்கு ஒரு மகன், ஒரு மகள். மகனுக்கு இப்போது இருபது வயதுக்கு மேல். தில்லி வாசியாக இருந்திருந்தாலும், தமிழகத்தின் ஒரு பொறியியல் கல்லூரியில் B.Tech சேர்ந்து படித்துக் கொண்டிருந்தார். இரண்டு வருடங்கள் வரை ஒழுங்காகத் தான் போனது படிப்பு – Arrears இல்லாமல் நல்ல மார்க் எடுத்து அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற அவருக்கு மூன்றாம் வருடம் என்ன ஆனதோ தெரியவில்லை. இனிமேல் இந்தப் படிப்பு எனக்கு வேண்டாம், நான் படிக்கப் போவதில்லை, இங்கே இருக்க முடியாது, தில்லிக்கு வந்து விடுகிறேன் எனச் சொல்ல, அவரின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பயங்கர அதிர்ச்சி. எத்தனையோ சொல்லியும் கேட்காமல், படிப்பை விட்டு தில்லிக்கு வந்து விட்டார்.

வீட்டில் இருந்து கொண்டு, அம்மாவுக்கு உதவி செய்வது, சின்னச் சின்ன வீட்டு வேலைகள் செய்வது, தொலைகாட்சியிலும், அலைபேசியிலும் மூழ்கிக் கிடப்பது என வேறு ஒன்றும் செய்வதில்லை. படிப்பு பாதியில் நின்றாயிற்று. சரி B.Tech தான் விட்டுவிட்டாய், பரவாயில்லை, ஒரு Graduation-ஆவது படி என்று சொன்னால் அதிலும் அஞ்சல் வழிக் கல்வியில் சேர்ந்துவிட்டு, படிப்பதும் இல்லை, தேர்வுகள் எழுதச் செல்வதுமில்லை. அப்பாவிடம் சரியாகப் பேசுவதும் இல்லை. அவரும் பல முயற்சிகள் எடுத்த பிறகு வேறு வழியில்லாமல் புலம்புவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்.

சரி வீட்டிலேயே இருந்தால் நல்லதல்ல, ஏதாவது வேலைக்குப் போகட்டும் எனக் கேட்டால், “எவ்வளவு சம்பளம் தருவாங்க, ஒரு இருபது, முப்பது கிடைக்குமா?” என்கிறாராம். வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் இந்த காலத்தில், மெத்தப் படித்தவர்களுக்கே நல்ல சம்பளத்தில், பிடித்த வேலை கிடைப்பது கடினமான இந்தக் காலத்தில், சரியான தகுதி இல்லாமல் எதையுமே கேட்க முடியாத இந்தச் சூழலில், இப்படி ஒரு கேள்வி கேட்பது எப்படி இருக்கிறது! நான் சும்மாவே தான் இருப்பேன் என்று சொல்லாமல் சொல்வது போலத்தான் இருக்கிறது. அதிலும் அந்த ஓட்டுனருக்கு அப்பாவாகத் தோல்வி தான். அம்மாவும் சொல்லிச் சொல்லிப் பார்த்து விட்டுவிட்டார்கள் போலும்.

ஒரு நாள் என்னிடம் வந்து மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார். என்ன செய்வது எனப் புரியவில்லை. உங்களால் என் மகனுக்கு ஒரு நல்ல வேலை வாங்கித் தரமுடியுமா? என்று கேட்க, என்ன பதில் சொல்வது எனப் புரியவில்லை எனக்கு. தற்காலிகமாக வேலை செய்யட்டும், என தெரிந்தவர் மூலம் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தேன். வேலையில் சேர்வதற்கு முன்னரே எவ்வளவு சம்பளம் என்று கேட்டபிறகு தான் வேலைக்குச் சேர்ந்தார். அவர் எதிர்பார்த்த அளவு கொடுக்க முடியாது என்றாலும் ஒரு அளவுக்கு சம்பளம் கிடைக்கிறது. கொடுத்த வேலையைச் சரியாகச் செய்து வருகிறார் என்றாலும் மேலே படிப்பது பற்றியோ, நிரந்தர வேலைக்காக முயற்சிப்பது பற்றியோ எந்த சிந்தனையும் இல்லாது இருக்கிறார்.

”அவன்கிட்ட கொஞ்சம் பேசுங்க சார், என்னதான் அவன் நினைக்கறான்னே புரியல!” என்று அந்த ஓட்டுனர் சொல்ல, ஒரு நாள் அவனிடம் பேசினேன். என்னதான் உனக்கு ஐடியா, ஏன் படிப்பை பாதியில் விட்டுவிட்டாய், என்னதான் அவனுடைய எதிர்பார்ப்பு என்பதைச் சொல்லும்படி சொன்னால், நிறைய ஆசைகள் இருக்கிறது. நல்ல வேலைக்குப் போகவேண்டும், கல்யாணம் செய்து கொள்ள வேண்டும், பிள்ளைகள் பெற வேண்டும் என பெரிய பட்டியலே இருக்கிறது மனதில்! ஆனால் இத்தனையும் வேண்டுமென்றாலும் ஏதாவது முயற்சி செய்ய வேண்டுமே என நான் சொல்ல அவனிடமிருந்து மௌனம் ஒன்றையே பதிலாகப் பெற முடிந்தது. அஞ்சல் மூலம் Graduation முடி, Shorthand கற்றுக்கொள், அரசுத் துறைப் பணிக்கான தேர்வுகள் எழுது எனச் சொன்னால் தலையாட்டிக் கொள்கிறானே தவிர முயற்சிப்பதில்லை.

Shorthand Practice செய்ய ஆரம்பித்து அதையும் பாதியில் விட்டு விட்டான். இப்போது பார்க்கும் வேலையே Permanent ஆகுமா எனக் கேட்கிறார்கள் – அப்பா, மகன் இருவருமே. நிச்சயம் இந்தப் பணியில் நிரந்தரமாக இருக்க முடியாது, எப்போது வேண்டுமானாலும் எடுத்துவிடுவார்கள் என நிதர்சனத்தினைச் சொல்லி இருக்கிறேன். வரும் சம்பளத்தில் நல்ல உடை வாங்கிக் கொள்வது, அலைபேசி வாங்குவது, அப்பாவிடம் அடம்பிடித்து வாங்கிக் கொண்ட இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவது என இதற்கே இங்கே கிடைக்கும் சம்பளம் போதாது – அப்பாவிடம் தான் கையேந்த முடியும். இதில் கல்யாணம், குழந்தைகள் என ஆசை வேறு! எல்லாமே அப்பா-அம்மாவின் உழைப்பிலேயே நடந்து விடும் என நினைக்கும் இளைஞர்கள் இப்போது நிறையவே இருக்கிறார்கள்.

நேற்று கூட ஒரு நிரந்தர வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன் – கொஞ்சம் பணம் கேட்கிறார்கள் – வேலை கிடைத்த பின் கொடுத்தால் போதுமாம், ஆனால் பணம் கொடுத்த பின் இவன் வேலையை விட்டுவிடுவானோ என்ற பயம் எனக்கிருக்கிறது, என்ன செய்ய – என்று என்னிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார். ஒரு வாரத்திற்கு வேலை செய்யட்டும், பிடித்திருந்தால் தொடரட்டும், இல்லையென்றால் இங்கேயே வேலை செய்யட்டும் – அதுவரை இப்போது வேலை செய்யும் இடத்தில் விடுமுறை வாங்கிக் கொடுங்கள் – என்று கேட்கிறார். நீங்களும் சொல்லுங்கள் எனச் சொல்லிச் செல்கிறார் – தளர்ந்த நடையில் அவர் செல்லும்போது பாவமாகத்தான் இருக்கிறது.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

24 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். ஷார்ட்ஹேண்ட் கற்றுக்கொண்டால் இப்பவும் வேல்யூ இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம். இருக்கிறது. இன்றைக்கும் அரசுத் துறையில் அதிகாரிகளின் உதவியாளர்கள் பதவிக்கு ஷார்ட் ஹேண்ட் முக்கிய தகுதி! Steno Grade D என்ற ஆரம்ப நிலை பதவிக்கு ஆரம்ப சம்பளமே முப்பத்தி ஐந்தாயிரத்திற்கு மேல்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இது மாதிரி இளைஞர்கள் நிறைய இருக்கிறார்கள். ஒரு மனநல கவுன்சிலிங்குக்கு அனுப்பலாம். நமக்கே இவளவு கஷ்டமாக இருக்கிறதே, அந்த தந்தைக்கு எப்படி இருக்கும்.. பாவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன நல கவுன்சிலிங் - ம்ம்ம்ம். செய்யலாம். ஆனால் அவர் ஒத்துக் கொள்ள வேண்டும். பாவமாகத் தான் இருக்கிறது. நேற்று கூட பத்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஏதாவது காதல் தோல்வியாக இருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் நானும் நினைத்தேன் - கல்லூரியில் ஏதாவது காதல் வலையில் சிக்கி இருப்பாரோ என!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. வெங்கட்... என் கேள்விக்கு பதில் இன்றைய செய்தித்தாளில்....!!!


    http://www.dinamalar.com/news_detail.asp?id=2004043

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... உடனேயே பதில் கிடைத்து விட்டது உங்களுக்கு. உண்மை தான். மத்திய அரசில் கூட நிறைய வேலைகள் உண்டு இந்த ஷார்ட் ஹேண்ட் தகுதிக்கு. கூடவே ஒரு Graduation Degree இருந்தால் இரண்டாம், மூன்றாம் நிலை பதவிகளுக்கு நேரடியாகக் கூட தேர்வாகலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. மனநல வைத்தியரிடம் அழைத்து செல்வதுதான் நல்லது... ஏதனாலோ பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதிப்பு மனதிற்கா என்பத தெரியவில்லை. பார்க்கும்போது புத்துணர்வுடன் தான் இருக்கிறார். சொல்லிப் பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  6. ஜி இதேநிலைப்பாடு பலரது வீட்டிலும் இருக்கிறது இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் உழைக்க தயாராவதில்லை.

    பள்ளி செல்லும்போதே ஒருவேளை உணவுடன் காலம் தள்ளும் குடும்பத்து குழந்தைகளுக்கே நல்ல சிந்தனை வளர்கிறது.

    குழந்தைகளை கஷ்டப்படுத்தகூடாது என்று நினைக்கும்போது... அந்த குழந்தை சோம்பேறியாகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளை கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைக்கும்போது அந்த குழந்தை சோம்பேறியாகிறது....

      நல்ல கருத்து. உண்மையானதும் கூட.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  7. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பொறுப்பினை உணரவைப்பதைவிட ஆரம்பம் முதலே குழந்தைகளுக்கு வீட்டு பிரச்னைகள், சூழல் ஆகியவற்றை மனதில் பதியும்படி செய்யவேண்டும். அப்போதுதான் அனைத்தும் சரியாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. மனநல மருத்துவரிடம் கூட்டி போகனும்... காதல் தோல்விக்குலாம் இம்புட்டு நாள்லாம் வறுத்திக்க மாட்டாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  9. சிறுவயதில் கண்டிப்பு காட்டாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் பலரும் பிற்காலத்தில் சோம்பேறிகளாகவே இருக்கிறார்கள் ஆனால் அந்தமகன் எந்தக் கட்சியிலும் தொண்டனாக இல்லை என்று தெரிகிறதுஇதெல்லாம் இல்லாதோரிருப்போரைப்பார்த்து அதுபோல் இருக்க முனைவதால் ஏற்படும் சங்கடங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  10. அந்த பையனின் அப்பா, பையனுக்கு ஏற்ற கல்வியைத் தேர்ந்தெடுக்காமல், தனது ஆசைக்கு ஏற்ப படிக்க வைத்ததே அடிப்படைக் காரணம். இப்போதும் அவனுடைய நண்பர்கள் வட்டாரத்தை தெரிந்து கொண்டால், சரி செய்து விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    சிலர் இப்படித்தான் போலும். வசதி வாய்ப்புகளால் செல்லம் குடுத்தாலும், இல்லை வீட்டின் நிலை சொல்லி வளர்க் காததாலும் சில இடங்களில் இப்படிபட்ட சூழ்நிலைகள் உருவாகி விடுகிறதோ? ஆனாலும் அவர் நன்கு படித்துக் கொண்டிருக்கும் போது பாதியில் படிப்பை விட்டு விட்டார் என குறிபிட்டிருந்தீர்களே.. அந்த தந்தையின் நிலையை அவர் என்று உணர்வார்? பாவம்..அவர். வேறென்ன சொல்ல... கடவுள்தான் நல்லதொரு சூழலை கொடுக்க வேண்டும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  12. அந்தப் பையனுக்குக் கண்டிப்பாக வேண்டியது மனநல கவுன்சலிங்க். சைக்காலஜிஸ்ட்டைப் பார்க்கச் சொல்லலாம். ஏதோ ஒன்று அவனைப் மிகவும் பாதித்துள்ளது போலத் தோன்றுகிறது. சில விஷயங்கள் நம் ஆழ் மனதில் பதிந்து நம்மை இயக்கும் ஆனால் அது தன் சுய ரூபத்தைக் காட்டாது. அதற்கான சூழலோ அல்லது நிகழ்வோ நிகழ்ந்தால் அது சில சமயங்களில் அசுரத்தனமாகக் கூட வெளிப்படலாம். எனவே கவுன்ஸ்லிங்க் சென்று தீர்வு காண்பது மிக மிக நல்லது ஜி.
    பொதுவாகவே பெற்றோர்கள் தாங்கள்தான் கஷ்டப்பட்டோம் பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது என்று கொஞ்சம் தாராளமாகச் செலவு செய்யவும் செல்லமாகவும் வளர்த்துவிடுகின்றனர். அதுவும் ஒரு காரணம். அவர்களுக்குச் சிறு வயதிலேயே உழைப்பு, பொருளாதாரம். சேமிப்பு, எது தேவையான செலவு எது அவசியமில்லாத செலவு என்பதைக் கற்றுக் கொடுத்துவிட்டால் நல்லது. கொஞ்சம் கஷ்டப்படவும் வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு வாழ்க்கையின் யதார்த்தம் புரிபடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய சொல்லி இருக்கிறேன் அந்தப் பையனுக்கும் - அவனுடைய அப்பாவுக்கும் - பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....