வியாழன், 11 ஏப்ரல், 2019

வேணி தானம் – கதை மாந்தர்கள்


படம்: எங்கள் பிளாக் நண்பர்களுக்கு நன்றியுடன்...

”ஐயா பெரியவரே, உங்க சமையல் நல்லா இருந்தது. நீங்க சமைச்சு நாங்க சாப்பிடணும்னு இருக்கு. அதனால தான் இங்கே தங்க வேண்டியிருந்தது. இவ்வளவு சுவையா சமைச்சு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி” என்று சொன்னபோது பெரியவரிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே பதிலுக்குக் கிடைத்தது. அவரிடம் இப்படிப் பேசிக் கொண்டே அவர் குடும்ப விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் எங்களுக்கு! ஏன் என்பதைச் சொல்வதற்கு முன்னர் திரிவேணி சங்கமத்தில் செய்ய வேண்டிய வேணி தானம் பற்றிய தகவல்களைக் கொஞ்சம் பார்க்கலாம்.

திரிவேணி சங்கமத்தில் குளிக்க வேண்டுமெனில் கரையிலிருந்து படகு மூலம் தான் செல்ல வேண்டியிருக்கும். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடம் தான் திரிவேணி சங்கமம். இதில் கங்கையும் யமுனையும் இரு வேறு வண்ணங்களில் தெரிய, சரஸ்வதி மட்டும் கண்ணுக்குத் தெரிவதில்லை – “Gகுப்த்” என்று ஹிந்தியில் சொல்வார்கள் – கண்ணுக்குத் தெரியாமல் கலக்கிறாள் சரஸ்வதி! சமீபத்தில் கும்பமேளா முடியும் சமயத்தில் ப்ரயாக்ராஜ் சென்று, படகோட்டியோடு பேசி ஒரு படகில் ஏறி, த்ரிவேணி சங்கமத்திற்குச் சென்றோம். தம்பதிகளாக இந்த சங்கமத்திற்கு வருபவர்கள் குளிப்பதற்கு முன்னர், படகில் இருக்கும் பண்டாவின் உதவியோடு சங்கல்பம் செய்து தான் குளிக்க வேண்டும். கூடவே இந்த இடத்தில் வேணி தானம் செய்வது சிறப்பானது.

எங்கள் குழுவில் இருந்த தம்பதிகள் இங்கே சங்கமத்தில் குளித்து அப்படியே வேணி தானமும் செய்யலாம் என்ற உத்தேசத்துடன் வந்திருந்தார்கள். அதற்குத் தேவையான பொருட்களையும் தில்லியிலிருந்தே கொண்டு வந்திருந்தார்கள். வேணி தானம் செய்தார்களா என்று தெரிந்து கொள்வதற்கு முன்னால் வேணி தானம் என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.



வேணி தானம்...
படம்: இணையத்திலிருந்து...

வேணி தானம்: மனைவி தன் கணவரை மாதவனாகக் கருதி பூஜை செய்து ”கல்யாணம் ஆனது முதல் இதுவரை தான் புருஷனுக்கு செய்த அபசாரங்களை மன்னிக்கும்படி” கேட்க வேண்டும். அவரும் பெரிய மனதுடன் [வேற வழி என்று இங்கே சொன்னால் தனி கவனிப்பு வீட்டில் கிடைக்கலாம்!] அப்படியே அபசாரங்களை கருத்தில் கொள்ளாது, மன்னித்து மனைவியை த்ரிவேணியாக கருதி பூஜிக்க வேண்டும். கணவன் மனைவியை தன் மடி மீது அல்லது முன்னர் அமர்த்திக் கொண்டு மனைவிக்கு தலை வாரி, பின்னல் போட்டு புஷ்பம் வைத்து தலை முடியின் நுனியில் இரண்டு அங்குலம் கத்திரித்து மஞ்சள் குங்குமம் அக்ஷதை, சந்தனம், காதோலை கருகமணி வெற்றிலை பாக்கு இவைகளுடன் வைத்து மனைவியிடம் கொடுக்க அதை மனைவி பண்டாவிடம் கொடுக்க வேண்டும். பண்டா அதை கங்கையில் போடுவார். வெற்றிலை மாத்திரம் மிதந்து சென்று விடும். முடி மேலே மிதக்காமல் உள்ளே சென்று விடும்.



கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் காட்சி
முந்தைய பயணத்தில் எடுத்த படம்...


த்ரிவேணிக்கு மூங்கில் (வேணு) தானம் செய்தால் ப்ரியம். எனவே சிறிய முறத்தில் சீப்பு கண்ணாடி. குங்குமச் சிமிழ்; மஞ்சள் பொடி; அரிசி; வெற்றிலை; பாக்கு பழம்; ரவிக்கை; தக்ஷிணை இவைகளை வைத்து மற்றொரு முறத்தால் மூடி தானம் செய்ய வேண்டும். இந்த மாதிரி திரிவேணி சங்கமத்தில் வேணி தானம் செய்வது சிறப்பானது.  தலைமுடியை பின்னல் போடும்போது ஒரு விஷயம் கவனித்து இருக்கலாம். மூன்று கால்கள் எடுத்து பின்னல் போட்டாலும், பின்னி முடித்த பிறகு பார்த்தால், இரண்டு கால்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும் – மூன்றாவது கால் மறைந்தே இருக்கும். அதே போலவே தான் இங்கே கங்கையும் யமுனையும் கண்ணுக்குத் தெரிய, சரஸ்வதி தெரிவதில்லை.  

இப்படியான சிறப்பு மிக்க வேணு தானம் செய்யலாம் என நினைத்து சங்கமத்தில் இருந்த பண்டாவிடம் கேட்க, அவர் சொன்ன தொகை மலைக்க வைத்தது! ஒரு தம்பதிக்கு இரண்டாயிரம் ரூபாய் வேண்டும் என்றார்! அதுவும் தேவையான பொருட்கள் அனைத்தும் நாம் தான் தர வேண்டும்! தக்ஷிணை மட்டுமே ஒரு தம்பதிக்கு இரண்டாயிரம் என்று சொல்ல, வாங்கியிருந்த பொருட்களை யாருக்காவது தானமாகக் கொடுத்து விடலாம் என முடிவு செய்தார்கள். எங்கள் குழுவில் வந்திருந்தவர்கள் தானம் கொடுப்பதற்காகவே புடவை, வேஷ்டி மற்றும் தேவையான பொருட்களை தில்லியிலிருந்தே எடுத்துக் கொண்டு வந்ததால் இத்தனை அதிக தக்ஷிணை கொடுப்பதில் உடன்பாடு இல்லை.

இந்த பொருட்களை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்றபோது நாங்கள் தங்கிய இடத்தில் எங்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்த பெரியவர் நினைவுக்கு வந்தார். சரி தங்குமிடம் திரும்பியதும், பெரியவரிடம் பேச்சுக் கொடுத்து அவருக்கே வேஷ்டி, புடவை கொடுக்கலாம் என முடிவு செய்தோம். பெரியவரிடம் “உங்க சமையல் நல்லா இருக்கு பெரியவரே. நல்லா சாப்பிட்டோம். உங்களுக்கு நன்றி” என்று சொல்லி அவரிடம் அவரைப் பற்றியும் குடும்பம் பற்றியும் விசாரித்தோம். தானம் கொடுப்பதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வது ஒரு விதத்தில் நல்லது. மேலே சொல்லப்போகும் விஷயத்தினை படித்தால் இப்படிக் கேட்டது நல்லது எனப் புரியும். பெரியவரிடம் தொடர்ந்து பேசினோம்.

”பெரியவரே, உங்களுக்கு எவ்வளவு வயசு இருக்கும்?”

அது இருக்கும்பா எழுபதுக்கு மேலே! ஓடற ஓட்டம் எழுவது வயசாச்சு….

இராத்திரி நீங்க இங்கேயே தங்கிட்டீங்களே, வீட்டுக்குப் போகலையே? வீட்டுல யாரு இருக்கா?

எனக்குன்னு இப்ப யாரும் இல்லையே… வீட்டில் யாராவது இருந்தா போகலாம். யாரும் இல்லையே, அதனால போகல!

ஓ… எங்க இருக்காங்க எல்லோரும்? தனியா போய்ட்டாங்களா?

இல்லைப்பா, நானும் மனைவியும் மட்டும் தான்… இந்த ஊர் வேணு மாதவன் எங்களுக்கு பிள்ளைப் பாக்கியம் தரல! அவளுக்கு நான் குழந்தை, எனக்கு அவ குழந்தை…. இப்படியே ஓடிடுச்சு வாழ்க்கை. போன வருஷம் அவளும் என்னை விட்டுட்டு போய்ட்டா… இப்ப நான் ஒண்டிக்கட்டை. இருக்கற வரைக்கும் யாருக்காவது உதவியா இருக்கணும். அதான் இந்த கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்-ல வந்து தங்கறவங்களுக்கு சமைச்சு போட்டு, அப்படியே நானும் இங்கேயே தங்கிக்கிறேன். தங்குவதற்கு யாரும் வராத நேரங்களில் கங்கைக் கரை ஓரமா அமர்ந்து நினைவுகளில் மூழ்கிப் போகிறேன். அவளுடன் எப்போது சேரப் போகிறேன் என்ற கேள்வி என்னுள் மீண்டும் மீண்டும் வந்து போகிறது… சரிப்பா, நீங்க எல்லாம் கொஞ்சம் ஓய்வெடுங்க, இராத்திரிக்கு சாப்பிட்டு நீங்க தில்லிக்கு இரயில் ஏறணும் இல்லையா? சிம்பிளா ஒரு தாலும், ரொட்டியும் செய்துடறேன்….

அவர் சமையல் அறைக்குப் போக எங்கள் அனைவர் மனதிலும் அவர் வாழ்க்கைக் கதை நிறைந்திருந்தது. ஒரு விஷயம் எனக்குத் தோன்றியது – இங்கே யாருக்குமே யாருமே இல்லை! தனியாகவே வந்தோம், தனியாகவே போவோம்!

வேஷ்டி-புடவை கொடுத்தால் அவருக்கு எந்த வித பயனும் இருக்கப் போவதில்லை. அதை வேறு யாருக்காவது கொடுத்துவிடலாம். இவருக்கு பயனுள்ளதாக கொடுப்பது நல்லது என கொஞ்சம் பணம் கொடுத்து வந்தோம். மனிதர்கள்… எத்தனை எத்தனை மனிதர்கள். அவர்களுக்குள் எத்தனை எத்தனை கதைகள்… சந்திக்கும் பலரும் கதை மாந்தராகவே இருக்கிறார்கள் இல்லையா...

நாளை மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…


நட்புடன்

வெங்கட்
புது தில்லி

பின்குறிப்பு: பெரியவரின் படம் நான் எடுக்கவில்லை. அதனால் எங்கள் பிளாக் பக்கத்தில் பலரும் கதை எழுதிய ஒரு படத்தினை இங்கே பயன்படுத்தி இருக்கிறேன். படம் கொடுத்து உதவிய எங்கள் பிளாக் நண்பர்களுக்கு நன்றி.

50 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!!

    நான் முதலில் கதை என்றே நினைத்துவிட்டேன். ஜி ஆரம்பம் அட்டகாசமான ஆரம்பம். கதைக்கான ஆரம்பம்!! நீங்க இப்படியே இதை கதையாக எழுதியிருக்கலாமே ஜி! உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ஜி!

      கதை எழுத இங்கே நிறைய பேர் உண்டு ஜி! நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.... எழுதுபவர்கள் எழுதட்டும். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  2. வெங்கட்ஜி முடியை நதியில் போடுவது// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ரெண்டாவது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வேணி தானம்! சரி இப்ப இங்கு சொல்லலை....அது வேறு வடிவில் வரும்....ஹிஹிஹி ஆனா எப்பனு தான் தெரியலை....மிக்க நன்றி ஜி! இந்தத் தகவலுக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடி, பூ இவற்றை கங்கையில் சேர்ப்பது குறித்து நிறைய சொல்லலாம். சில நம்பிக்கை சார்ந்தது.

      உங்கள் சிந்தனைகளையும் எழுதுங்கள். காத்திருக்கிறோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    2. தி/கீதா, வேணிதானம் என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி கலக்கும் திரிவேணி சங்கமத்தில் செய்வது மிகச் சிறப்பானது. அதோடு கூட எல்லோருடைய மயிர்க்கற்றையும் முழுகாது எனவும் முழுகாதவர்கள் பாவம் அதிகம் செய்தவர்கள் என்னும் ஓர் நம்பிக்கையும் உண்டு. நாங்களும் வேணி தானம் செய்தோம். இப்போப் போயிருக்கும் ஸ்ரீராமின் மாமா, மாமியும் செய்திருக்கின்றனர். ஜவர்லால் படம் பகிர்ந்திருந்தார். மனைவிக்குக் கணவன் செய்யும் மிகச் சிறந்த சேவையாக இது கருதப் படுகிறது. இதைப் பற்றிப் பின்னொரு சமயம் விரிவாகப் பார்க்கலாம். கங்கையில் போடும் எதுவும் பாவம் இல்லை. இதனால் கங்கை அசுத்தம் ஆவதும் இல்லை. தன்னைத் தானே சுத்திகரித்துக்கொள்ளும் சக்தி கங்கை நீருக்கு உண்டு.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  3. வேணி தானம் தெரிந்து கொண்டேன்.

    திரிவேணி சங்கமத்திற்கு எங்களை படகு மூலம் கூட்டிப் போன இடத்தில் இந்த்க் காட்சிகளைப் பார்க்கவில்லை.

    எங்களை வேறு படகில் துரத்திக் கொண்டு வந்த பண்டா ஒருவர் சரஸ்வதிக்கு பூஜை செய், போஜனத்திற்கு காசு கொடு என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு கூடவே வந்தார்.
    அவர் கொடுத்த தேங்காயை, சின்ன சிவப்பு துணியை சங்கமத்தில் போட்டு விட்டு அவர் கேட்ட காசை கொடுத்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி இடங்களில் சிலர் தொல்லை தருவதை தடுக்க முடிவதில்லை. அனைத்திலும் ஏமாற்ற நிறைய பேர் இருக்கிறார்கள். பார்த்து சூதானமாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவும் மொழி தெரியாவிட்டால் நிறையவே ஏமாற்றுவார்கள். நம்பிக்கையையும் பயன்படுத்தி பயமுறுத்தவும் செய்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  4. பெரியவர் கதை வருத்தமாய் இருக்கிறது. வயதான காலத்தில் உழைத்து சாப்பிடும் மனதைரியத்தை பாராட்டவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உழைத்து சாப்பிடும் அவர் தைர்யம் பாராட்டுக்குரியது தான் மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. பெரியவர் கண்ணில் நீர் வரவழைத்துவிட்டார் ஜி!

    ரொம்ப அழகான பதிவு! மிகவும் ரசித்தேன் குறிப்பாக இறுதிப் பகுதி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவினை ரசித்ததில் மகிழ்ச்சி. கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு படிப்பினையை நமக்குத் தந்து செல்கிறார்கள் இல்லையா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. உண்மைதான் ஒவ்வாருவருக்குள்ளும் ஒரு பெருங்கதை இருக்கத்தான் செய்யும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பெருங்கதை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. இந்த செயலை செய்வதற்கு 2000 ரூபாயா ?

    இது அவசியமே இல்லை அவர் செய்வதை நாமே செய்து விடலாம் மந்திரம் ஓதுவதை தவிர்த்து, அது அவசியமில்லாத வார்த்தை.

    வரைமுறையற்ற, நியாயமில்லாத கூலி கேட்கும்போது அந்த மந்திரத்தில் உயிர் இல்லை.

    (நான் விதண்டவாதம் பேசவில்லை)

    இறை நம்பிக்கை உண்மையாக இருந்தால் நான் சொன்னபடியும் செய்யலாம் ஜி

    அவளுக்கு நான் குழந்தை, எனக்கு அவள் குழந்தை குழந்தை பெற்றவர்களின் நிலையைவிட இது உயர்வான வாழ்க்கையே...

    வறட்டு கௌரவத்துக்காக குழந்தை பெற்று காலம் முழுவதும் அழுது வாழ்வதைவிட இது கவலையில்லாத வாழ்வே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த செயலை செய்வதற்கு 2000 ரூபாயா ? // - நியாயமான சர்வீஸ் சார்ஜ் பெரும்பாலும் வாங்குவதில்லை. வடநாட்டில் பண்டாக்கள் தொல்லை மிகவும் அதிகம் என்று 1950ல் எழுதின புத்தகங்களில்கூட போட்டிருந்தார்கள்...... செண்டிமெண்ட் என்பதால் கொடுத்துடுவாங்க என்று நம்பும் கூட்டம்.

      நீக்கு
    2. பொதுவாக சுற்றுலாத் தலங்களில் இப்படியான ஏமாற்றுப் பேர்வழிகள் உண்டு கில்லர்ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. உண்மை. பல தலங்களில் இப்படிப் பார்த்திருக்கிறேன் - காசி, பூரி, ப்ரயாக்ராஜ், ஜம்மு, அஜ்மேர் தர்கா, அன்னை தெரசாவின் இல்ல வாயில் என பல இடங்களில் இப்படியான அனுபவங்கள் உண்டு. இதில் யாருமே விதிவிலக்கல்ல... ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    4. காசிக்குச்செல்பவர்கள் அங்கேயே பல்லாண்டுகளாகத் தங்கி சேவை செய்து வரும் தமிழர்கள் குறித்துத் தெரிந்து கொண்டு அவர்கள் மூலம் இத்தகைய காரியங்களைச் செய்யலாம். அவர்களே வேண்டிய உதவி செய்வார்கள். நாங்கள் ஹனுமான் காட்டில் இருக்கும்/இப்போதும் பிள்ளைகள் செய்து வருகின்றனர்.)ஸ்வாமிமலை கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் மூலம் வேண்டிய ஏற்பாடுகள் செய்து கொண்டு போனோம். தங்குமிடம் அவர்களே கொடுக்கின்றனர். அதற்கு அப்போது வாடகை வாங்கவில்லை. ஆனால் சாப்பாடு அவர் வீட்டிலேயே என்றாலும் சாப்பாடுக்குத் தனியாகப் பணம் கொடுக்கவேண்டும். சமையல்காரர்கள் இருந்தனர். அவர்கள் சமைத்துப் போடுவார்கள். ச்ராத்தம், பித்ரு கர்மா போன்றவை செய்யும்போது போடப்படும் சாப்பாடு எல்லாம் மொத்தக் கணக்கில் வந்து விடும். கயா செல்லுவது, கயாவாளி பிராமணனுக்குக் கொடுக்கும் தானம் எல்லாம் அவர்கள் மூலமே செய்தால் எமாற்றங்களைத் தவிர்க்கலாம். ப்ரயாகைக்கும் அவர்களே அழைத்துச் சென்று விடுவார்கள். நாம் ஊருக்குக் கிளம்பும்போது கையில் எடுத்துச் செல்லச் சாப்பாடு வேண்டும் எனில் அதுவும் தயாரித்துக் கொடுப்பார்கள். அதற்குத் தனியாகப் பணம்!

      நீக்கு
    5. அங்கேயே தங்கி விட்ட தமிழ்க்காரர்களை தொடர்பு கொண்டால் சிறப்பான ஏற்பாடுகள் செய்து தருவார்கள். வெகு சில தமிழ்க்காரர்கள் மட்டுமே இப்போது அங்கே இருக்கிறார்கள். தெலுங்குக்காரர்கள் நிறைய இருக்கிறார்கள். தமிழர்களை விட அங்கே வரும் தெலுங்கர்கள் எண்ணிக்கையில் அதிகம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  8. வேணி தானம் பற்றிய தகவல்கள் புதிது. பகிர்வுக்கு நன்றி.

    பெரியவரின் தனிமை வருத்தம் அளிக்கிறது. ஒவ்வொருவருக்கு உள்ளும் ஒரு துயர்மிகு கதை. ஆம், தானம் கொடுக்கும்போது பெற்றுக் கொள்கிறவருக்கு அது பயனளிக்குமா எனப் பார்ப்பது நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தானம் பெறுபவருக்குப் பயனுள்ளதா என்று பார்த்துக் கொடுப்பது தான் நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  9. //இங்கே யாருக்குமே யாருமே இல்லை! தனியாகவே வந்தோம், தனியாகவே போவோம்!// - மனதளவில் தனியாகவே வாழ்கிறோம் என்பதும் உண்மை...

    வீடுவரை உறவு...வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை... கடைசி வரை யாரோ.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி வரை யாரோ.... எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. கேள்விப்படாத தானம் இந்த வேணி தானம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  12. நாங்கள் திருவேணி சங்கமத்தில் குளித்தடே ஒரு அனுபவம் நிறிய வெள்ளம் இருந்தது படகினைநங்கூரம்பாய்ச்சி ஓரிடத்தில் நிற்க வைத்துஒரு மூக்கில்களின் நடுவே இன்னொரு மூங்கிலைக்கட்டி ஒரு ஊஞ்சல் போல் செய்கிறார்கள் அதில் நின்று க்லொள்ளச்செது நீரில் இறக்குகிறார்கள் நாங்கள்பண்டாவுக்கு அதிகக் காசு கொடுக்க வில்லை அலஹாபாதிலிருந்து திரிவேணி சஙமம் வந்து குளித்து மீண்டும் கொண்டு விட என்று அண்ணா பேசியிருந்தார் இந்தமாதிரி முடி கொடுக்க எங்கள் அண்ணி ஒப்பவில்லை முடி கொடுப்பது கைம்மை போலக் காட்டும் என்றார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  13. உங்கள் பதிவைப் படித்தவுடன் நான் எழுதி இருந்த நினைவடுக்குகளில் இருந்து ஒரு பயணம் நான்கு பதிவுகளில் எழுதி இருந்தேன்மூன்றாவது பதிவில் படங்களுடன் திருவேணி சங்கமக் குளியல் பற்றி எழுதி இருந்தேன் நாந்தவறாக காசியில் இருந்து சங்கமம் படகில் சென்றதாக எழுதி இருந்தே பின்னூட்டங்கள் மூலம் தவறு உணர்ந்தேன் அதன் சுட்டி இதோ / https://gmbat1649.blogspot.com/2014/12/3.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவின் சுட்டி தந்ததில் மகிழ்ச்சி. படித்த பதிவா என்பதை அங்கே சென்று பார்க்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
    2. //இந்தமாதிரி முடி கொடுக்க எங்கள் அண்ணி ஒப்பவில்லை முடி கொடுப்பது கைம்மை போலக் காட்டும் என்றார்.// நுனியில் தான் ஓரங்குலம் அளவுக்குக் கத்திரிப்பார்கள். அது ரொம்பவே விசேஷமானது. காசிக்குப் போயும் கர்மா தொலையவில்லை என்பது இதைத் தானோ? :)))))) எனினும் இது அவரவர் விருப்பம், கருத்தைச் சார்ந்தது என்பதையும் மறுக்க முடியாது!

      நீக்கு
    3. முன்னெல்லாம் தலை மயிர் வளருவதற்காக அமாவாசை அன்று நுனியைக் கத்திரித்து விடுவார்கள். நுனி சீராகவும் இருக்கும் என்பதோடு அமாவாசையிலிருந்து வளர் பிறை என்பதால் அதைப் போல் முடி வளரும் என்பதும் ஓர் நம்பிக்கை. எனக்கு என் அம்மா அடிக்கடி இப்படிச் செய்திருக்கிறார். பின்னால் கட்டுக்கடங்காமல் போகவே விட்டு விட நேர்ந்தது! :))))))

      நீக்கு
    4. சிலர் இப்படி செய்து கொள்ள விரும்பவதில்லை. அதில் நாம் சொல்ல ஒன்றுமில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    5. ஆமாம். எங்கள் மகளுக்குக் கூட இப்படி நுனி முடி கத்தரித்தது உண்டு - வளர்வதற்காக....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  14. வேணு கானம் கேள்விப்பட்டிருக்கிறேன். வேணு தானம் பற்றி இன்றுதான் தெரிந்துகொண்டேன். தகவலுக்கு நன்றி!

    நாம் சந்திக்கும் பலரும் கதை மாந்தராகவே இருக்கிறார்கள் என்பது உண்மைதான். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  15. ஒவ்வொரு மனிதர் பின்னாலும் எவ்வளவோ கதைகள். வேணு தானம் தகவல் புதியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  16. முதியவர் வாழ்க்கை பற்றி அறிந்து வருத்தம் அடைந்தேன்.திரிவேணி சங்கம் குறித்து அறிய தகவல்கள் வழங்கியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    அனைத்து தகவல்களும் எனக்குப் புதிது. திரிவேணி சங்கமத்தில் வேணு தானம் பற்றி விபரமறிந்து கொண்டேன். நன்றி..

    பின்னிய ஜடையையும், திரிவேணிகளான நதிகளின் சங்கமம் குறித்த தந்த பொருத்தமான உவமானத்தையும் மிகவும் ரசித்தேன்.

    தானம் நடத்தி வைக்க அங்குள்ளவர்கள் கேட்கும் தட்சணை அதிகந்தான். தானமும் யாருக்கு கொடுத்தால் பலனிருக்கிறது என்று தாங்கள் விளக்கியதும் உண்மைதான்.

    அந்தப் பெரியவரின் வாழ்க்கை வருத்தத்துக்குரியது. ஆனால், அவர் மன உறுதியுடன் இருப்பது பாராட்டுக்குரியது. அதை நீங்கள் இந்த படத்துடன் இணைத்து எழுதியது மிகப் பொருத்தமாக உள்ளது. நான் இந்த படத்துக்குதான் கதை எழுதியுள்ளீர்கள் என படிக்கவாரம்பித்தேன். மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  18. "உணர்ந்து" படித்தேன். ப்ரயாக்ராஜ் என்பதைதான் அவசரத்தில் பாக்யராஜ் என்று படித்துவிட்டேன். ஹி... ஹி... ஹி...

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம். பாக்யராஜ் - ப்ரயாக்ராஜ்! :))) எப்பவும் சினிமா நினைவு தான்.... ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. வேணி தானம் என்பது புதிய தகவல். நிறைய ஏமாற்று வேலைகள் இது போன்றவைகளில், பரிகாரம் என்று சொல்லப்படுவதில் எல்லாம் நடக்கிறதுதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  20. உழைத்துச் சாப்பிடும் பெரியவரின் மனோபலம் பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....