வெள்ளி, 12 ஏப்ரல், 2019

சக்கைப் பழமும் பின்னே ஞானும் – பகுதி இரண்டு - பத்மநாபன்…



அக்கா வீட்டிற்கு சக்கைப் பழம் எடுத்துக் கொண்டு போன கதையை சென்ற பகுதியில் பாதியில் நிறுத்தினேன்! படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம்! வாங்க மேலே பயணிக்கலாம்!

என் கற்பனை ஓடிய வேகத்தில் பாளையங்கோட்டை பஸ்ஸ்டாண்டும் சீக்கிரம் வந்து விட்டது. எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது, வாய்க்கால்பாலம் அடுத்த நிறுத்தமா, இல்லை அதற்கு அடுத்ததா என்று. என் பக்கத்தில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் அமர்ந்து இருந்தார். அவரிடம் கேட்க, தம்பி! நானும் அங்கதான் இறங்குதேன் என் கூட இறங்கிக்கொள் என்று சொல்லி இறங்க ஆயத்தமானார். நானும் சக்கைப்பழச் சாக்கை தூக்கிக் கொண்டு வாய்க்கால்பாலம் நிறுத்தத்தில் இறங்கினேன். சக்கப்பழத்தை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். பேன்ட் ஷர்ட்டோட தோளில்   சக்கைப்பழத்துடன் நடந்ததை நினைத்தால் கொஞ்சம் காமெடியாத்தான் இருக்கும்.  

உடன் இறங்கிய பெரியவர் கூடவே நடந்து பேச்சு கொடுத்தார். "என்ன தம்பி! பலாப்பழமா. உங்க மாவட்டத்துப் பழம் நல்ல ருசியா இருக்கும்.  திருநெல்வேலியிலேயும் முந்தியில்லாம் நிறைய பலாமரம் நின்னுதுல்லா. இப்ப ஜனநெருக்கடி கூடிப் போச்சு. வீடு கட்டுதேன், கடையைக் கட்டுதேன், ஓட்டலக் கட்டுதேன்னு உள்ள மரத்தையெல்லாம் வெட்டித் தள்ளியாச்சு. இப்போ பலாமரத்தப் பாக்கதுக்கு குத்தாலத்துக்கும் செங்கோட்டைக்கும்தான் போகணும் போல இருக்கு. தம்பி! முன்னாலேயெல்லாம் இந்த வாய்க்கால்ல நல்ல     மழைக்காலத்தில நொப்பும் நுரையுமா வெள்ளம் பாய்ஞ்சு ஓடும். இதைப் போல இன்னும் நிறைய வாய்க்கால்கள் தண்ணியை கொண்டு போய் தாமிரபரணியில சேர்க்கும். இப்பம் மழையும் குறைஞ்சு போச்சு. வாய்க்கால் ஒண்ணையும் காங்கலை. நீ பலாப்பழம் தூக்கிக்கிட்டு வருவதைப்பார்த்ததும் எனக்கு வண்ணாரப்பேட்டை பக்கம் இருந்த ஒரு வாய்க்கால் ஞாபகம் வருது தம்பி.



மழைச்சமயத்தில அந்த வாய்க்காலில் வெள்ளத்தில பெரிய பெரிய பலாப்பழமெல்லாம் மிதந்து போகும். நீச்சல் தெரிஞ்ச பயலுகளெல்லாம் வாய்க்காலில் குதிச்சு பலாப்பழத்தை எடுத்துகிட்டு வீட்டுக்குப் போவான். இப்படித்தான் ஒரு தடவை நல்ல மழை பெய்து ஓய்ஞ்சிருந்தது. வாய்க்கால் நிறஞ்சு தண்ணி ஓடுது. ஒரு பெரிய பலாப்பழம் வாய்க்கால் கரையோரமா மிதந்து வருது. அப்பப் பார்த்து ஒரு பொம்பள இடுப்புல கைப்புள்ளையோடு போகுது. அவ கண்ணுல அந்த பெரிய பலாப்பழம் தட்டுப்பட்டு விட்டது. கைக்கெட்டுக அளவில் ஓரமா அது மிதந்து வருது. அவளுக்கு அந்த பலாப்பழத்தை விட்டு விட மனசில்லை. சுத்திமுத்தி பார்த்தா ஒரு மனுஷனக் காங்கலை. பழம் கிட்டக்க வந்துட்டு. இடுப்பில இருந்த பிள்ளையை கரையில கொஞ்சம் தள்ளி இறக்கி வச்சா. கரையில இருந்த ஒரு சின்ன மரத்தை ஒரு கையில் பிடிச்சுக்கிட்டே அடுத்தக் கையால பலப்பழத்தை கரையில இழுத்துப் போட்டதும் அவளுக்கு ஒரே சந்தோஷம். தலைகால் புரியல்ல.

நல்ல கனத்த சக்கைப்பழம். தூக்கி இடுப்புல வச்சுக்கிட்டு வீட்டப் பாத்து நடந்தாள்.  வீட்டில் மாமியார்க்காரி, பலாப்பழம் ஏதுன்னு கேட்க, இவ பெருமையா வாய்க்கால்ல போன பலாப்பழத்தை கஷ்டப்பட்டு எடுத்து வந்த கதையைச் சொல்லி முடிச்சா. மாமியார்க்காரி கேட்டாள், இடுப்பில் பிள்ளையோடு போனே.  திரும்பி வரும்போது இடுப்புல சக்கப்பழத்தோட வாரயே.  கைப்புள்ளைய எங்கேன்னு கேட்க அப்பத்தான் இவளுக்கு புள்ளைய வாய்க்கால் கரையோரமா இறக்கி வச்ச நினைப்பு வருது. கண்ணீரும் கம்பலையுமா ஓடுகா வாய்க்காலப் பார்த்து. அங்க தண்ணியில அடிச்சுக்கிட்டு போக இருந்த புள்ளையை நல்லவேளையா அந்தப் பக்கமா போன நல்ல மனுஷன் தூக்கி வச்சுக்கிட்டு அம்மாவைத் தேடுகையில இந்த பொம்பள வாயிலயும் வயித்திலயும் அடிச்சுக்கிட்டு வருது. இன்னைக்கும் அந்த ஓடைக்குப் பேரு புள்ளையைப் போட்டு பலாப்பழம் எடுத்த ஓடைதான்." அப்படீன்னு கதையைச் சொல்லி முடிச்சாரு. ஒத்தைப் பலாப்பழத்திற்காக பெற்ற பிள்ளையையே மறந்த உலகமடா இது!

அப்புறம் இந்த சக்கைப்பழம் என்றதும் எனக்கு கூடவே என் சித்தப்பா மகன் குமாரு ஞாபகத்துக்கு வந்து விடுவான். நானும் அவனும் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு ஒன்றாய்ப் படித்தோம். பரீட்சை நேரங்களில் அவ்வப்போது காலை வேளைகளில் அவன் வீட்டிற்கு சேர்ந்து படிக்கலாம் (?) என்று செல்வதுண்டு. அவன் வீட்டின் பின்புறம் பெரிய தென்னந்தோப்பு. அதன் இடையே இரண்டு பெரிய பலாமரங்கள். அதில் ஒன்று நல்ல வருக்கை. அந்த மரத்தினடியில் இருந்து படிக்கலாம் என்று ஆரம்பிக்கும் போது பலாப்பழம் பழுத்த வாசனை வரும். அப்புறம் குமாருக்கு இருப்பு கொள்ளாது. அப்படியே மேலே பார்த்து கண்களால் துளாவினால் ஏதாவது ஒரு பழம் நல்ல பழுத்து அணில் கடித்தோ இல்லை வேறு பறவை கொத்த ஆரம்பித்த நிலையில் தட்டுப்படும். அப்புறம் எங்க படிப்பு.

குமார் ஓடிப்போய் கயிறும் வெட்டுக்கத்தியும் எடுத்துக்கிட்டு வந்தான். பெரிய பலாமரத்தில் இருந்து பலாப்பழம் வெட்டி கீழே விழாமல் இறக்குவது என்பது பெரிய கலை. மற்ற பழங்களைப் போல் மேலே இருந்து வெட்டி அப்படியே போட முடியாது. பழம் சிதைந்து போய்விடும். குமார் வெட்டுக்கத்தியை இடுப்பில் செருகிக் கொண்டும் கயிறின் ஒருமுனையை வாயில் கவ்விக் கொண்டும் மளமளவென்று மரத்தின் மேல் ஏறினான். கயிறின் பாதி பகுதி என் கையில். நல்ல பெரிய மரம். நன்கு ஓங்கி உலகளந்த உத்தமன்போல் நிற்கும் நெடுமரம். பழமிருந்த கிளையின் மேல் வசதியாக அமர்ந்தான். பழத்தைச் சுற்றி கயிறால் பதமாக கட்டினான். பின்னர் பழத்தின் காம்பை பக்குவமாய் வெட்டிவிட நான் கொஞ்சம் கொஞ்சமாக கயிறை விட பழம் மெதுவாக இறங்கி வருகிறது. குமாருக்கு அவசரம். பழம் கீழே வருவதற்கு முன் மளமளவென்று கீழே இறங்கினான்.

பழம் தரையைத் தொடுமுன் அதைப்பிடிக்க எண்ணி அதன் கீழ் நின்று கொண்டு அண்ணாந்து பார்த்துக் கொண்டே இரு கைகளையும் விரித்துக் கொண்டு நிற்கிறான். இன்னும் ஒரு நாலடி ஐந்தடி உயரத்தில் பழம் வருகிறது. நான் கொஞ்சம் பொறுமையாகவே கயிறை விட்டுக் கொண்டிருக்கிறேன். அப்போதுதான் அது நிகழ்ந்தது. பழத்தை கட்டியிருந்த கயிறு அவிழ்ந்து அந்த ஐந்தடி உயரத்தில் இருந்து பொதுக்கடீர் என்று கீழே குமாரின் முகத்தோடு உரசிக் கொண்டு விழ, குமார் விட்டானில்லை. பழத்தை கையில் தாங்கி நெஞ்சோடு சேர்த்து அணைத்து கீழே வைத்து நிமிர்ந்தான். அவனது வெள்ளை முஞ்சியில் நெற்றியில் இருந்து நாடி வரை செக்கச் செவேல் என கன்னிப்போன சக்கைப்பழக் கோடுகள்.  அந்தக் கோடுகளெல்லாம் அவன் முகத்தில் இருந்து மறைய இரண்டு நாட்கள் ஆச்சு. ஒத்தைப் பலாப்பழத்திற்காக பவுடரை பக்குவமாய் பூசி பாதுகாத்த அழகையே மறந்த உலகமடா இது.  

இப்படித்தான் ஒரு தடவ நாரோல்ல இருந்து ஊருக்கு போறதுக்கு பஸ்ஸுல இருக்கேன். திடீர்னு நல்ல பலாப்பழ வாசனை மூக்கைத் துளைக்குது.  சட்டை போடாமல் வேஷ்டி மட்டும் கட்டிய பெரியவர் ஒருவர் ஒரு நல்ல பலாப்பழத்தை தலையில் சுமந்து கொண்டு பஸ்ஸில் ஏறி எனது பக்கத்து இருக்கையை நோக்கி வந்து தலையிலிருந்த பலாப்பழத்தை ஒரு நிறைகுடத்தை பக்குவமாய் தளும்பாமல் இறக்குவதைப் போல் இறக்கி காலுக்கடியில் வைத்தார். தலையில் சுருட்டி வைத்திருந்த துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டார். நல்ல பழம். வாசனையே எச்சிலூற வைத்தது. சீட்டில் அமர்ந்ததும் ஒரு ராஜபார்வை. நான் கேட்காமலேயே ஆரம்பித்தார், "நல்ல செம்மையான சக்கைப்பழம். வடசேரி சந்தையில வசமா கிடைச்சு பாத்துக்கிடுங்க." என்று சொன்னதொடு நிற்காமல் அதில் சுளை அடர்த்தி பார்க்க சிறிய சதுரமாக வெட்டி வைத்திருந்த பகுதியை எடுத்து பழத்தின் உள்ளே காட்டி விட்டு திரும்பி மூடிவிட்டார். வாஸனை இன்னும் தூக்கிற்று. 

"மேலக்கோணத்தில மக வீட்டுக்காக்கும் வாஞ்சுட்டு போறேன் பாத்துக்கிடுங்க."  அப்போது ஒரு பையன் அவர் பக்கத்தில் காலியாக இருந்த இருக்கை நோக்கி வர "பார்த்து புள்ளோ! காலுக்கு கீழ சக்கப்பழம் இருக்கு. சவுட்டிப்புடாத." பெத்த புள்ளையக்கூட இப்படி பக்குவமா பார்த்துக் கொள்வாரா தெரியவில்லை. பஸ்ஸும் கிளம்பிற்று. அவரும் இண்டு நிமிடத்திற்கு ஒருமுறை பழத்தை தொட்டு தொட்டுப் பார்த்துக் கொண்டார். மேலக்கோணமும் வந்தது. பஸ்ஸில் இருந்து பழத்தை பக்குவமாய் எடுத்து கீழே இறங்கினார். தரையில் பழத்தை வைத்தார். தோள் துண்டை எடுத்து தலையில் சும்மாடு ஆக்கினார். குனிந்து இரண்டு கைகளாலும் பழத்தை தூக்கி தலையில் வைக்கவும் அவரது வேஷ்டி அவிழ்ந்து காலடியில் விழவும் சரியாக இருந்தது.

மனுக்ஷன் வெறும் கோவணத்துடன் தலையில் இரண்டு கைகளாலும் சக்கைப்பழத்தை இறுகப் பிடித்துக் கொண்டு கோவணம் கட்டிய பாகுபலி போல நிற்கிறார். நான் நினைத்தேன் சக்கைப்பழத்தை கீழே போட்டு விட்டு மானத்தைக் காத்துக் கொள்வார் என்று. ம்ஹூம். சக்கைப்பழமே காப்பாற்றப்பட்டது. அவர் கவலையே படாமல் சக்கைப்பழத்தை பூப்போல தலையிலிருந்து இறக்கி கீழே வைத்து விட்டு வேஷ்டியை எடுத்து கட்டிக் கொண்டு பழத்துடன் நடையைக் கட்டினார். 

ஒத்தைப் பலாப்பழத்திற்காக வேட்டி கட்டிக் காத்த மானத்தையே மறந்த உலகமடா இது. வாழ்க சக்கைப்பழம்!

வேறு சில நினைவுகளோடு மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…


நட்புடன்

பத்மநாபன்
புது தில்லி

42 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி! அண்ட் அண்ணாச்சி!

    அட! அப்போவே இப்படி //திருநெல்வேலியிலேயும் முந்தியில்லாம் நிறைய பலாமரம் நின்னுதுல்லா. இப்ப ஜனநெருக்கடி கூடிப் போச்சு. வீடு கட்டுதேன், கடையைக் கட்டுதேன், ஓட்டலக் கட்டுதேன்னு உள்ள மரத்தையெல்லாம் வெட்டித் தள்ளியாச்சு. இப்போ பலாமரத்தப் பாக்கதுக்கு குத்தாலத்துக்கும் செங்கோட்டைக்கும்தான் போகணும் போல இருக்கு. //

    பேசத் தொடங்கிட்டாங்களா!!!

    நாகர்கோவில் பலாப்பழம் ரொம்ப நல்லாருக்கும் எவ்வளவு தின்னுருக்கேன் அங்க இருந்தவரை!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாஜி!

      நாரோவில் பலாப்பழம் சாப்பிட்டதில்லை. மலைப்பகுதி பழங்கள் சுவைத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  2. சக்கைப் பழக் கதைகள் செம...வாய்க்கால் பேரும் அதோட பெயருல....

    சக்கைப் பழம்னாலே எங்க வீட்டுலயும் ஹையோ ஒரே பர பரப்பா இருக்கும். எங்க வீட்டுக் குடும்பத்துக்கு ஒரு பழம் போதாது. பெரிய கூட்டுக் குடும்பம். திங்கறதுக்கு ஒண்ணு, வரட்டி, சக்கையப்பம், பிரதமன் செய்ய இன்னொண்ணுனு தான் வாங்குவாங்க...

    அந்தக் காலம் பொன்னான காலம். அப்பவே வாய்க்கால்ல தண்ணி இல்லைனு புலம்பல் இருந்துருக்கு போல!!!
    கஷ்டம்தான் இல்லையா...நாரோயில்ல கூட பழையாறு முன்ன போல இல்லைனு கேள்விப்பட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாச்சியின் பதிவு உங்களுக்கும் பழைய நாரோயில் நினைவுகளை மீட்டு எடுக்க உதவியதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  3. பதிவு கொள்ளாம்!!!!

    அண்னாச்சி உங்க வழியா நாரோயில் பாஷை கேட்டு ஒரே சந்தோஷம் எனக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு கொள்ளாம்! ஓஓஓ... மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  4. பழத்திற்காக குழந்தையை மறந்தது அதிர்ச்சியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிர்ச்சியான விஷயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. குழந்தையை விட்டதும் பதறி விட்டேன் நல்லவேளை யாரோவொருவர் காப்பாற்றி விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை குழந்தையைக் காப்பாற்றினார்கள். சில சமயங்களில் இப்படி ஆசை பல இழப்புகளைத் தந்து விடுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பலாப்பழத்தை பற்றிய இருபகுதிகளும், பலாப்பழ சுவையை விட மிக இனிப்பாக இருந்தது. வார்த்தைகளின் நடையோட்டம் அருமையாக இருந்தது. மிகவும் நகைச்சுவையாக எழுதியிருக்கும் சகோதரர் பத்மநாபன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    இனிப்பான பழத்திற்காக எதையெல்லாம் விட்டிருக்கிறார்கள்.. குழந்தையின் நினைவைக்கூட.. நல்லவேளை.! அதை காப்பாற்றியவரை கடவுளாக பார்த்து அங்கு அனுப்பி வைத்திருக்கிறார்..பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசை பலருக்கு பின்விளைவுகளை உண்டாக்கி விடுகிறது.!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  7. பழத்திற்காக குழந்தையை மறந்தது அதிர்ச்சிதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. படிக்காதவர்கள் 'இங்கே' படிக்கலாம்... 'எங்கே?", ஆனால் நான் ஏற்கனவே படித்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுட்டியைச் சேர்த்து விட்டேன். வாட்ஸப் தகவலுக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. பலாப்பழத்துக்காக குழந்தையை பறிகொடுத்தது நெல்லை பக்கம் இருக்கும் (குறுக்குத்துறை) தாமிரவருணியில்னா...

    பலாப்பழத்தை கொண்டு சேர்த்தாரான்னு இன்னும் சொல்லலையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலாப்பழம் பாதுகாப்பாகவே வீடு சேர்ந்தது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. கேரளாவிலிருந்து பலாப்பழம் அந்த ஊருக்கு (வெளிநாடு) வரும். பலாப்பழம் பார்த்த உடனே இது தேறுமா தேறாதான்னு கண்டுபிடிச்சுடுவேன். அந்த ஊரிலேயே முழுப்பழம் வாங்கி சுளை உரித்து சாப்பிடுவேன்.

    பத்மநாபபுரம் அரண்மணைக்குப் பக்கத்தில் சீசன் முடிந்த சமயத்தில் 20 பலாப்பழங்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். நான் அதில் ஒன்றை 100 ரூபாய்க்கு வாங்கினேன், ஆனால் அவர்கிட்ட பலாப்பழம் உரித்துத் தந்தால், அதிகமான ரூபாய் தருகிறேன் என்றேன் (6-7 வருடங்களுக்கு முன்). அவர், உங்களுக்காக நாலா வெட்டித் தர்றேன்... சுளையா எடுத்துத் தரணும்னா 200 ரூபாய் கொடுத்தாலும் முடியாது என்றார்.. எனக்கு பலாப்பழம் அவ்வளவு ஆசை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலாச்சுளைகளை எடுப்பது ஒரு கலை! :) எப்போது பலாப்பழம் வீட்டில் இருந்தாலும் இப்படி சுளை எடுப்பது என் வேலை! ரொம்பவே பொறுமை வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  11. பலாப்பழ கதைகள் திகைக்க வைக்கிறது.
    மாயவரத்தில் பலாபழ சீஸனில் ஓவ்வொரு வீட்டிலிருந்தும் எங்களுக்கு கொடுத்து விடுவார்கள்.
    ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. அன்பாய் கொடுத்து விட்டதால் மேலும் ருசியாக இருக்கும்.
    வருடபிறப்புக்கு முக் கனிகள் முக்கியமாக வைப்போம். அந்த சமயம் பலாவின் பெருமை பொருத்தம்.
    பாளையங்க்கோட்டை, வண்ணாரப்பேட்டை நினைவுகள் வந்து போகிறது.தாத்தா வீட்டுக்கும் அத்தைவீட்டுக்கும் விடுமுறைக்கு போய் வருவோம். இரண்டு வருடம் அங்கு இருந்தேன் சின்ன வயதில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ வண்ணாரப் பேட்டையில் இருந்திருக்கிறீர்களா.... அங்கே ஒரு வார காலம் அலுவலக வேலையாக 90-களில் தங்கி இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. குட்மார்னிங். அவசரமாக இரண்டு பதிவுகளையும் படித்து விட்டேன். நேரமில்ல பாருங்க... இனிய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் பதிவுகள் படிப்பது கொஞ்சம் கடினம் தான். பயணம் முடியப் போகும் தருணம் அல்லவா... சென்னை திரும்பி ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. சாகசம்.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. எனக்கு பலாப்பழம் பிடிக்கும் என்பது என் உறவுகள் பலருக்கு தெரியும் ஆனால் முழுசக்கையில் உள்ளே இருக்கும் சுளை சுவையாக இருக்குமா என்றுபார்க்கத் தெரியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலாச்சுளை சுவையாக இருக்குமா என்று சாப்பிடாமல் சொல்ல முடியாது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  15. ஒரு படி அரிசிக்காக தன் குழந்தையை வெள்ளத்தில் பலி கொடுத்த தாயை நேரில் பார்த்ததுதான் தன் முதல் கதையை எழுத வைத்தது என்று எழுத்தாளர் சிவசங்கரி கூறியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு படி அரிசிக்காக குழந்தையை வெள்ளத்தில் பலி கொடுத்த தாய் - அதிர்ச்சி...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்ம்மா...

      நீக்கு
  16. பலாப்பழத்தை தட்டிப் பார்க்கும் பொழுது அது எழுப்பும் ஓசை, மற்றும் பழத்திலிருந்து வரும் வாசம் இவைகளை வைத்து உள்ளிருக்கும் சுளையின் தரத்தை தெரிந்து கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலாப்பழம் தட்டிப் பார்த்து தான் வாங்குவது வழக்கம். வாசமும் காட்டிக் கொடுக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா...

      நீக்கு
  17. முதல் படத்தில் உள்ளது போல சகல லட்சணங்களும் பொருந்திய சக்கைப்பழம் ஒண்ணு கிடைச்சுதுன்னா நல்லாத்தான் இருக்கும்.ஒன்பது பேரு ஒரு மாசத்துக்கு வச்சு தின்னலாம் போல இருக்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே கிடைப்பதில்லை. கிடைத்தால் நன்றாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  18. பதில்கள்
    1. நண்பர் பத்மநாபனிடம் உங்கள் பாராட்டுகளைச் சொல்கிறேன் அம்பி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. பலாப்பழத்துடன் பல நினைவுகளையும் கொட்டி இருக்கிறீர்கள். அந்த வண்ணாரப் பேட்டை தண்ணீர் எனக்கு ஐந்து வருடங்கள் வாய்த்தது.
    அருமை மிக அருமை வெங்கட்.
    என்ன ஒரு எளிமை. பலாப்பழம்சாப்பிடாதவர்கள் இருக்க முடியது.
    வேட்டி வைபவமும் குழந்தையை விட்டு வந்த அதிர்ச்சியும் நினைவில் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே பலாப்பழமாக சாப்பிட மாட்டார்கள். பிஞ்சில்/காயில் சப்ஜி செய்வார்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  20. பலாப்பழம் எத்தனை எத்தனை விஷயங்களையெல்லாம் மறக்கடிக்கறது . பொல்லாத பழம் தான் இது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொல்லாப் பழம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  21. பலாப்பழம் மிகவும் பிடித்தமானது என்றாலும் அப்பா வீட்டில் இருந்தவரை வாங்கவே மாட்டார். எப்போதேனும் பெரியப்பா வீட்டில் இருந்து கொடுத்து அனுப்புவார்கள். அதைச் சாப்பிடவே அப்பாவின் அனுமதி லேசில் கிடைக்காது. :) ஆனால் என் தாத்தாவெல்லாம், (அப்பாவின் அப்பா) பலாப்பழத்திலேயே திளைத்தவர் என அம்மா சொல்லிக் கேட்டிருக்கோம். எங்களுக்கு எல்லாப் பழ வகைகளுக்கும் தடா! :)))) கல்யாணம் ஆகி வந்ததும் மாமனார் வீட்டில் முழுப் பலாப்பழம் வாங்கிக் கொண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டே இருந்ததைப் பார்த்து மயக்கம் வராத குறைதான்! ஆனால் அங்கே எடுத்துச் சாப்பிடத் தயக்கமாக இருக்கும். கொடுக்கும்போது வாங்கிப்பேன். பின்னர் சென்னையில் பழக்கடைகளில் வாங்கும் சுளைகள் தான். அம்பத்தூரில் இருந்தவரைக்கும் என் பெரியப்பா பெண் வீட்டில் காய்த்துப் பழுக்கப் போகும் பலாப்பழத்துக்கு மார்ச் மாசமே முன் பதிவு செய்வோம். அப்போல்லாம் மாமனார் இருந்தார். அவருக்குப் பின்னரே தின்பண்டங்களோ, இம்மாதிரிப் பழங்களோ வாங்குவது குறைந்தே போனது. இப்போ எப்போவானும் சுளைகள் வாங்குவது உண்டு, அதுவும் எனக்காக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெய்வேலியில் இருந்த வரை நிறைய பலா சாப்பிட்டதுண்டு. இப்போதெல்லாம் சாப்பிடுவது குறைந்து விட்டது. தில்லியில் கிடைக்கவே கிடைக்காதே... ஊருக்கு வரும்போது சீசன் சமயமாக இருந்தால், நெய்வேலியிலிருந்து யாரையாவது கொடுத்து அனுப்பச் சொல்வதுண்டு. சென்ற வருடம் தான் பல வருடங்களுக்குப் பிறகு முழுப் பழமாக வந்ததை நறுக்கி சுளைகளை எடுத்து தட்டு நிறைய வைத்துக் கொண்டு வேண்டிய அளவு சாப்பிட்டேன்! :) அதிகம் சாப்பிட்டால் வயிறுவலிக்கும் என்று சொல்லி அதற்காக அடுத்த நாள் பலாக்கொட்டை சாம்பார் வைத்து சாப்பிட்டால் வயிறு வலிக்காது என்றும் சொல்வார்கள்! ஹாஹா... நினைவுகள்... இனிய நினைவுகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....