என்னது உங்க
அலுவலகத்திற்கு காத்தாடி இராமமூர்த்தி வந்து இருக்காரா? அது எப்போ? என்று
தலைப்புப் பார்த்து நீங்கள் கொஞ்சம் குழப்பம் அடைந்து இருக்கலாம். உங்களுக்குத்
தெரியாதா என்ன? தலைநகரில் தில்லி தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலைஅரங்கில்
அவரது பல நாடகங்கள் அரங்கேறியது உண்டு. அப்படி வரும்போது எங்கள் அலுவலகத்திற்கும்
வர, நானும் அவரைச் சந்தித்தேன்…..
…என்று
சொன்னால் அது பொய்யான ஒரு தகவல்!
நான் சொல்ல
வரும் காத்தாடி இராமமூர்த்தி ஒரு காரணப் பெயர்! எங்கள் அலுவலகத்தில் நான்
வேலைக்குச் சேர்ந்த புதிது. 1991-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 – நான் அரசுப் பணியில்,
தலைநகர் தில்லியில் பணிக்குச் சேர்ந்த நாள்! இன்றோடு 28 வருடங்கள் முடிந்து
விட்டது! எனது வயது, 19 வருடம் ஒன்பது மாதம் 27 நாள் இருந்த நிலையில், கல்லூரி
படிப்பு முடிந்த பத்து நாட்களில் மத்திய அரசாங்கத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப
நலத் துறையில் தான் வேலைக்குச் சேர்ந்தேன். அதிலும் குறிப்பாக குடும்ப நலத்
துறையில் தான் பல வருடங்கள் இருந்தேன். ஒவ்வொரு இடத்திலும் கிடைத்த அனுபவங்கள்
எத்தனை எத்தனை – சில அனுபவங்கள் சுவையானவை. சில பொது வெளியில் சொல்ல முடியாதவை! அப்படி
கிடைத்த அனுபவங்கள் சிலவற்றை இங்கே எழுத எண்ணம்.
இன்றைக்கு
தலைப்பில் சொன்ன காத்தாடி இராமமூர்த்தி அவர்களைப் பார்க்கலாம்! நான் வேலைக்குச்
சேர்ந்த அன்றே என்னை ஒரு பிரிவில் பணிபுரிய வேண்டும் என அனுப்பி வைத்தார்கள் – 25
பேர் கொண்ட பிரிவு அது! ஒரே ஒரு மலையாளி மற்ற அனைவருமே வட இந்தியர்கள் –
பெரும்பாலானவர்கள் பஞ்சாபிகள்! அங்கே இருந்தவர்கள் பலரும் எனக்கு வேலைகளைச்
சொல்லிக் கொடுத்து என்னைச் செதுக்கியவர்கள்! கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட
மாதிரி இருக்கும் – ஹிந்தி மொழி தெரியாது, ஆங்கிலத்திலும் பெரிதாக புலமை இல்லை –
அரசுத்துறை பள்ளியில் படித்த எனக்கு அத்தனை சரளமாக ஆங்கிலத்தில் பேசுவது கடினம்
தான்! அப்படி இருந்த என்னை ரொம்பவும் கவனமாகக் கையாண்டார்கள். ஒரு தந்தையைப் போல
நடந்து கொண்டவர் திரு லால்!
அவரது முழுப்
பெயர் குஞ்ச் பீஹாரி லால்! பார்ப்பதற்கு காத்தாடி இராமமூர்த்தியைப் போலவே
இருப்பார் என்பதால் இப்போது இங்கே பதிவுகளில் வலம் வரும் பத்மநாபன் அண்ணாச்சி தான்
இந்தப் பெயரை அவருக்குச் சூட்டியவர்! நான் வேலைக்குச் சேர்ந்த போதே அவருக்கு
ஐம்பது வயதுக்கு மேல்! அந்தப் பிரிவில் என்ன வேலை என்பதையும் சொல்லி விடுகிறேன்.
இந்தியா முழுவதிலும் உள்ள மாவட்ட மருத்துவமனைகள், துணை மாவட்ட
மருத்துவமனைகளிலிருந்து குறிப்பிட்ட படிவத்தில் தகவல்கள் வரும் – அவற்றைச்
சேகரித்து, தொகுப்பது ஒரு ப்ரதான வேலை. அப்படி என்ன தகவல் வரும் என்றால் –
கருவுற்றிருக்கும் பெண்ணுக்குக் குழந்தை பிறந்த பிறகு, தாய்-சேய் இருவருக்கும்
கொடுக்கப்படும் தடுப்பூசிகள், மருந்துகள், சேவைகள் என பல விஷயங்கள் அந்த படிவத்தில்
தகவலாக வந்து சேரும்.
படிவத்தில்
வரும் தகவல்கள் எதைப் பற்றியது என்ற அறிவு கூட எனக்கு இல்லை என்பதையும் இங்கே
சொல்ல வேண்டும். கட்டம் கட்டமாக இருக்கும் தாளில் ஹிந்தியில் என்னென்னமோ எழுதி
இருக்க, அதன் எதிரே எண்ணிக்கையில் இருப்பது மட்டும் தான் தெரியும்! நமக்கு ஹிந்தி
வேற தெரியாது! ஆங்கிலத்தில் இருப்பதைப் படித்து தெரிந்து கொண்டாலும் ஹிந்தியில்
வருவதை என்ன செய்வது? தட்டச்சு செய்வது தான் பணி என்றாலும், கூடுதல் வேலைகளையும்
சொல்லிக் கொடுத்து என்னை அரவணைத்துச் சென்றவர் இந்தக் காத்தாடி ராமமூர்த்தி
அவர்கள். அவர் தனது வேலையை சிரத்தையுடன் செய்பவர். யாரேனும் அவர் பணியில் குறை
சொல்லி விட்டால் கோபம் வந்துவிடும். உடனே ஒரு சிகரெட்டினைப் பற்ற வைத்து கப், கப்
என இழுக்க ஆரம்பித்து விடுவார்! பிறகு என்னிடம் வந்து நான் பஞ்சாபி இல்லை என்பதால்
இவர்களுக்கு என் மீது வெறுப்பு என்று சொல்லி, ”இவங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகவே
இருக்கணும் நீ!” என்றும் சொல்வார்.
பல நாட்கள்
தன்னுடைய வீட்டில் செய்யும் சிறப்பான உணவுகளை எனக்கும் சேர்த்து எடுத்து வந்த நல்ல
மனிதர்! சில முறை அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று இரவு உணவு உண்டு
வந்ததுண்டு. சில விடுமுறை/பண்டிகை நாட்களிலும் என்னை அவரது இல்லத்திற்கு அழைத்து
நல்ல உணவளித்து அனுப்பி வைப்பார். அவரது இல்லத்தரசி, மகள் என அனைவருமே நன்கு
பழகுவார்கள். அந்தப் பிரிவில் இருந்த வேறு யாருடைய இல்லத்திற்கும் நான்
சென்றதில்லை. மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரைச் சேர்ந்த அவரது வீட்டிற்கு
மட்டுமே நான் சென்றிருக்கிறேன். சிறு வயதிலேயே ஒரு காது கேட்காமல் போனதால் காதில்
எப்போதும் அந்தக்கால கேள்விச் சாதனம் [Hearing Aid!] மாட்டி இருப்பார். தொலைபேசி
அழைப்பு வரும்போது அதை காதில் இருந்து எடுத்துவிட்டு பேசுவார் – அப்போது அச்
சாதனத்திலிருந்து வரும் பீப் ஒலி கடுமையாக இருக்கும்!
மிகவும் நல்ல
மனம் கொண்ட மனிதர், நான் அலுவலகத்தில் சேர்ந்த சில வருடங்களில் பணி ஓய்வு பெற்று
தனது சொந்த ஊரான போபால் நகருக்குச் சென்று விட்டார். அவரது மகள் திருமணத்திற்கு
அழைப்பு வந்தது. ஆனால் அச்சமயம் நான் தமிழகத்தில் இருந்ததால் என்னால் செல்ல
முடியவில்லை. கடிதங்கள் மூலம் தொடர்பில் இருந்தோம் என்றாலும், நேரில் பார்க்க
முடியவில்லை. சில வருடங்கள் கழித்து அவர் இறைவனடி சேர்ந்த செய்தி வந்தது. அவர்
மகள் பாசத்துடன் அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்து மடல் ஒன்று இன்றைக்கும் என்னிடம்
உண்டு! அவர் எங்கே இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வில்லை. இப்படி நம்
வாழ்க்கையில் முக்கியமான இடத்தில் இருந்த சிலர் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று
விடுவது தவிர்க்க முடியாத விஷயம் தான் இல்லையா? காலத்தின் ஓட்டத்தில் எத்தனை எத்தனை
நட்புகளை இப்படி இழந்திருக்கிறோம்.
வேறு சில ஸ்வாரஸ்ய
அலுவலக நினைவுகளை அவ்வப்போது எழுத விருப்பம் உண்டு. பார்க்கலாம் தொடர முடியுமா என!
நாளை மீண்டும்
சந்திப்போம்… சிந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குபடம் பார்த்ததும் முதலில் டக்கென்று காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் நினைவுதான் வந்தது ஆனால் தெரிந்துவிட்டது இது அவர் அல்ல என்று
அப்புறம் உங்கள் முதல் பாரா பார்த்ததும் உறுதியானது..ஆனால் டக்கென்று அவர் என்று சொல்லிவிடலாம்
கீதா
இனிய காலை வணக்கம் கீதா ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காத்தாடி ராமமூர்த்தி என்று பெயர் வைத்த அண்ணாச்சி ஹா ஹாஹ்ஹா..
பதிலளிநீக்குநாங்கள் கூட இப்படி யாரையேனும் அடையாளம் காண பெயர் வைத்துவிட்டால் அந்தப் பெயரே நிலைத்துவிடும் எங்கள் வட்டத்தில்.
லால் அவர்களைப் பற்றி சொல்லியது நெகிழ்ச்சி ஜி!
ஆமாம் நாம் பல நட்புகளை இப்படிப் பல சூழல்களில் இழக்கிறோம் தான்...
உங்கள் அனுபவமும் வியக்க வைக்கிறது. அனுபவம் வியப்பு என்றால் அதை எழுத்தின் வடிவில் இங்கு சொல்வது இன்னும் சிறப்பு.
அவரது மகள் உங்களுக்கு வாழ்த்து அனுப்பியிருப்பதும் சிறப்புதான். சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் கண்டுபிடிப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது இல்லையா?
கீதா
சிலரை மறக்க முடிவதில்லை - திரு லால் அவர்களும் அப்படி ஒருவர்.
நீக்குசமூக வலைத்தளங்கள் இருந்தாலும் சிலரை கண்டுபிடிக்க முடிவதில்லை தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
>>> காலத்தின் ஓட்டத்தில் எத்தனை எத்தனை நட்புகளை இப்படி இழந்திருக்கிறோம்..<<<
பதிலளிநீக்குமௌனம் தான் இதற்குப் பதில்...
மௌனத்திற்கு பல விஷயங்களை சொல்லாமல் சொல்லி விடும் சக்தி உண்டு தான்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
குட்மார்னிங்.
பதிலளிநீக்கு//என்று சொன்னால் அது பொய்யான ஒரு தகவல்!//
24 நாட்கள் லேட்டா சொல்றீங்களே!!!
இனிய காலை வணக்கம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
பத்தொன்பது வயதிலேயே பணியில் இணைந்து விட்டது சிறப்பு. என் மாமாக்களில் இருவர் boy service எனப்படும் தகுதியும் இருந்து ஒய்வு பெற்றவர்கள்.
பதிலளிநீக்குபத்தொன்பது வயதில் பணி - சில சமயம் நினைத்தால் பிரமிப்பாக இருக்கும்! நீண்ட பணி காலம் நினைத்தால் பிரமிப்பு தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஹியரிங் எயிட் எண்டே சொல்லி விடலாம்! அல்லது கேட்பான் கருவி என்று சொல்லலாமோ!!! ஹா... ஹா... ஹா...
பதிலளிநீக்குகேட்பான் கருவி - ஹாஹா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
எனக்கும் ஆரம்ப காலங்களில் இப்படி வேலை கற்றுக்கொடுத்த ஆசான்கள் உண்டு. உண்மையிலேயே மறக்க முடியாதவர்கள். அவர்களிலொருவர் மறைவுக்கு நான் செல்ல முடியாத நிலை வந்தபோது வருந்தினேன். இன்றும் அந்த குற்ற உணர்வு என்னிடம் இருக்கிறது.
பதிலளிநீக்குஇப்படி வேலை கற்றுக் கொடுத்த ஆசான்கள் மறக்க முடியாதவர்கள் தான் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான நினைவுகள். உங்களைப் போல் தான் நம்மவரும் பத்தொன்பது வயது முடியும் முன்னரே வேலையில் சேர்ந்தார். அவருக்கும் இப்படி ஒரு குருநாதர் உண்டு. தற்சமயம் எங்களுக்கும் அவருடன் தொடர்பு இல்லை. இப்படிப் பல நெருங்கிய நண்பர்களைக் காலம் நம்மிடம் இருந்து பிரித்து விடுகிறது.
பதிலளிநீக்குபல நெருங்கிய நண்பர்களைக் காலம் நம்மிடம் இருந்து பிரித்து விடுகிறது - உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
சுவாரஸ்யமாக படித்துக் கொண்டு வந்தேன் இறுதியில் அவர் மறைந்து விட்ட செய்தி மனதை கனக்க வைத்து விட்டது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குஆனால் ஒரு விஷயம் சொல்லியே ஆகணும். ஹிஹி, நாங்க சென்னையில் அம்பத்தூரில் இருந்து கும்பகோணம் செல்லும்போதெல்லாம் எங்களுடன் காத்தாடி ராமமூர்த்தி, காத்தாடி கிட்டு மற்றும் அவர்கள் மனைவியரோடு பயணித்திருக்கின்றனர். பல முறை பார்த்திருக்கோம். ஆனால் பேசினதில்லை. சில சமயங்களில் கும்பகோணத்தில் இருந்து பகல் விரைவு வண்டியில் வரும்போதும் பார்த்திருக்கோம்.
பதிலளிநீக்குஆஹா... நேரில் பார்த்தது அறிந்து மகிழ்ச்சி. ஆனால் இப்படி பார்க்கும்போதும் பேச முடிவதில்லை. தில்லி பயணங்களின் போது இப்படி சிலரைப் பார்க்க முடியும். ஆனால் பேசத் தோன்றியதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
//காலத்தின் ஓட்டத்தில் எத்தனை எத்தனை நட்புகளை இப்படி இழந்திருக்கிறோம்.//
பதிலளிநீக்குஉண்மைதான் வெங்கட்.
சிறு வயதிலிருந்து இப்போது வரை நட்புகளை நினைத்து பார்க்க வைத்து விட்டீர்கள்.
என் அம்மா அப்பாவுடன் ஊர் ஊராக போகும் போது பழைய அக்கம் பக்கத்து நட்புகளுடன் குடும்ப படம் எடுத்துக் கொள்வார்கள். கோவையில் 14 வீடுகள் குழு படம் பெரிது.
அந்த படங்கள் எல்லாம் இப்போது யாரிடம் இருக்கிறது என்று கேட்க வேண்டும் தம்பி, தங்கைகளிடம்.
அப்படி எத்தனை நட்புகள் எங்களுக்கும் இருந்தது.
சார் 21 வயதில் வேலைக்கு வந்தார்கள்.
உங்கள் நட்புகளையும் இப்பதிவு நினைக்க வைத்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நம் வாழ்க்கையில் நமக்குக் கை கொடுத்தவர்களை, உதவி செய்தவர்களை பிறகு நாம் நல்ல நிலைமையில் இருக்கும்போது சந்தித்து மனதார 'நன்றி' சொல்லக்கூட வாய்ப்பு கிடைப்பதில்லை.
பதிலளிநீக்குரசித்த அனுபவம் வெங்கட். எத்தனையோபேர் நம் வாழ்வில் ஏணியாக இருந்திருக்கிறார்கள். அவர்களை நினைப்பதும் பகிர்ந்துகொள்வதும் சுகம்தான்
/எத்தனையோ பேர் நம் வாழ்வில் ஏணியாக இருந்திருக்கிறார்கள். அவர்களை நினைப்பதும் பகிர்ந்து கொள்வதும் சுகம் தான்/ உண்மை நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
உண்மைதான் கால ஓட்டத்தில் பல நட்புகளையும் தொடர்புகளையும் ஒவ்வொருவரும் இழந்துதான் வந்திருக்கிறோம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅரிய நட்பு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஎன் மும்பை வாசத்திலும் இப்படி சில அரிய நட்புகள்.. மொழி அறியாமல் புது இடத்தில் திணறிய போது கை கொடுத்தவர்கள். மறக்க இயலாதவர்கள்.
பதிலளிநீக்குஇம்மாதிரி நல்ல மனிதர்கள் ஆங்காங்கே இருப்பதால்தான் மனிதம் உயிர்த்திருக்கிறது
//இம்மாதிரி நல்ல மனிதர்கள் ஆங்காங்கே இருப்பதால் தான் மனிதம் உயிர்த்திருக்கிறது// உண்மை ரிஷபன் ஜி!
நீக்குதிரு. குஞ்ச் பீஹாரி லால், மனத்தில் பதிந்து விட்டார்.
பதிலளிநீக்குபடிக்கும் எங்களுக்கே அவரது ஆழமான அன்பை அனுபவிக்க முடியும் பொழுது, அவருடன் பழகிய உங்களுக்கு எப்படி இருந்திருங்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தப் பகுதியைத் தொடர்ந்து எழுதுங்கள். தமிழகம் தாண்டி இருப்போரின் வாழ்க்கை முறைகளைத் தெரிந்து கொள்வதில் இப்பொழுதெல்லாம் ஆர்வம் கூடியிருக்கிறது. நன்றி, வெங்கட்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.
நீக்குஎழுது பொருள் கிடைத்து விட்டது இனி பிரயாண அனுபவங்களை மட்டும் நம்பி இருக்க வேண்டாம் பதிவு எழுத
பதிலளிநீக்கு//எழுது பொருள் கிடைத்து விட்டது. இனி பிரயாண அனுபவங்களை மட்டும் நம்பி இருக்க வேண்டாம் பதிவு எழுத// ஆஹா... உங்கள் மேலான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
பணியில் புதிதாய் சேருவோருக்கு யாரேனும் ஒரு ஆதரவாளர் (Godfather) அமைவதுண்டு. அதுபோல் தங்களுக்கு குஞ்ச் பீஹாரி லால் கிடைத்தார் போலும். தங்களின் அனுபவங்களை அறிய தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஆதரவாளர் - இப்படி கிடைத்தால் தான் நல்லது. இல்லாவிட்டால் ரொம்பவே திண்டாட்டம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
//உடனே ஒரு சிகரெட்டினைப் பற்ற வைத்து கப், கப் என இழுக்க ஆரம்பித்து விடுவார்!//
பதிலளிநீக்குஆமாம்! அவர் சிகரெட் புகையை கப் கப் என இழுத்து குப் குப் என வெளியே விடும் ஸ்டைலே தனி, இல்லையா! நினைவுகூர வேண்டிய நல்ல மனிதர்.
ஸ்டைலே தனி தான் பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஸ்வாரஸ்யமான பதிவு. காலத்தின் ஓட்டத்தில் இப்படிபட்ட நட்புகளை இழக்கிறோம். உண்மை.. ஆனால் நம் நினைவுகள் இருக்கும் வரை இந்த மாதிரி நட்பாகிய மனிதர்களை பற்றிய சிந்தனைகள் நம் மனதின் ஊடே ஓடிக் கொண்டேதான் இருக்கும் இல்லையா.. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குகால ஓட்டத்தில் நட்புகளும் மறைந்து கொண்டேயிருக்கின்றன....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உண்மையானவன்.
நீக்குஉங்களுடைய பழைய நினைவுகள் மிகவும் ரசிக்கும்படி இருந்த்து.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.
நீக்கு