புதன், 3 ஏப்ரல், 2019

பீஹார் டைரி – விஷ்ணுபாத், கயா – பித்ரு கார்யங்களுக்கான இடம்


 

படம்: இணையத்திலிருந்து....

சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பீஹார் டைரி பதிவு! பீஹார் டைரி வரிசையில் இது கடைசி பதிவாகக் கூட இருக்கலாம்! இல்லாமலும் தொடரலாம்! விஷ்ணுவே அறிவார்! சரி இன்றைக்கு பீஹார் மாநிலத்தின் கயா பகுதியில் இருக்கும் ஒரு பிரபலமான விஷ்ணு கோவில் பற்றி பார்க்கலாம்.
 
Gகயா, Bபோத் Gகயா இரண்டுமே அருகருகே இருக்கும் இடங்கள் தான். Gகயா என்பது தான் முக்கியமான நகரம் என்றாலும் மஹாபோதி ஆலயம், போதி மரம் இருக்கும் இடமான Bபோத் Gகயா புத்த மதத்தினர் இடையே பிரபலம் என்றால் Gகயாவில் இருக்கும் விஷ்ணுபாத்dh கோவில் இந்துக்களிடையே மிகவும் பிரபலம். வாரணாசி வரை செல்லும் பலரும் இந்த Gகயாவிற்கும் வந்து தங்களது மூதாதையர்களுக்கு பிண்ட தானம் செய்யாமல் இருக்க மாட்டார்கள். பித்ரு கார்யங்கள் செய்ய மிகவும் உத்தமமான இடமாக இந்த Gகயா இருக்கிறது. விஷ்ணு பகவானின் பாதம் மீது அழகிய கோவில் அமைத்து இருக்கிறார்கள். இங்கே இருக்கும் அக்ஷய்வட் எனும் ஆலமரத்தின் கீழே தான் பித்ரு கார்யங்கள் நடக்கும். இந்த விஷ்ணுபாத்dh கோவில் பற்றிய சில தகவல்களையும் இங்கே சென்ற போது கிடைத்த அனுபவங்களையும் பார்க்கலாம்.


படம்: இணையத்திலிருந்து....

Gகயா – பீஹார் மாநிலத்தின் இரண்டாம் பழமையான நகரம். இந்த நகரத்தின் பெயரே ஒரு அசுரனின் பெயரிலிருந்து தான் உருவானது என்கிறார்கள். யார் அந்த அசுரன்? அவனுக்கு என்ன சிறப்பு? பார்க்கலாம்... Gகயாசுரன் என்பது அசுரனின் பெயர். எல்லா அசுரர்களைப் போலவே இவனும் இறைவனை நோக்கி கடும் தவம் புரிகிறான். மற்ற அசுரர்களைப் போல அல்லாது கொஞ்சம் நல்லவன் போலும்! தவத்தினை மெச்சி அவன் முன் தோன்றிய இறைவனிடம் அவன் கேட்ட வரம் அப்படி! மற்றவர்களை அழிக்க வரம் கேட்காமல், ”என்னை யார் யாரெல்லாம் காண்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் முக்தி தந்து உன் திருவடி நிழலில் இருக்கும் பாக்யத்தினை அருள வேண்டும் என்று கேட்கிறான்! கடவுளும் “அப்படியே ஆகட்டும் ஆகட்டும் டும்....” என்று தெனாலிராமன் வடிவேல் போல வரம் தந்து விட்டார்!


கோவில் வளாகத்தில் தசாவதாரச் சிற்பங்கள்...

அவரவர்கள் தங்கள் இஷ்டப்படி தவறுகள் பல புரிந்து பின்னர் Gகயாசுரனைக் கண்டு சந்தோஷமாக இருக்க ஆரம்பித்து விட்டார்கள். அடடா... இது என சோதனை என சிந்தித்த பிறகு சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரனின் காலில் விழுவதே மேல் என Gகயாசுரனிடம் வந்தார் விஷ்ணுபகவான். இப்படியே எல்லோரும் பாவ புண்ணியங்கள் படி பலன் கிடைக்காது போனால் அது சரி வராது. ஆகையால் உன்னை யாரும் காணாதபடி செய்து விடுகிறேன் என, Gகயாசுரனின் தலையில் தனது காலை வைத்து அழுத்தி பாதாள லோகத்திற்குள் தள்ளி விடுகிறார்! அவருடைய ஒரு பாதச்சுவடு இன்றைக்கும் இங்கே ஒரு பாறையின் மீது இருக்கிறது. சுமார் 40 செ.மீ அளவுள்ள அந்த பாதச் சுவடில் சங்கு, சக்கரம் ஆகியவையும் உண்டு.

இந்தப் பாறை இருக்கும் இடத்தில் தான் விஷ்ணுபாத்dh கோவில் அமைந்திருக்கிறது. அருகிலேயே இருக்கும் அக்ஷய்வட் எனப்படும் ஆலமரத்தின் கீழே தான் பித்ரு கார்யங்கள் நடத்துகிறார்கள். அதற்கும் ஒரு காரணம் உண்டு – Gகயாசுரனை பாதாளத்திற்குள் தள்ளும்போது, “ஐயா உணவுக்கு நான் என்ன செய்வேன்?” என்று கேட்க, அவருக்கு விஷ்ணுபகவான் ஒரு வரம் அளிக்கிறார் – மீண்டும் ஒரு வரமா? என்று தோன்றுகிறதல்லவா? இந்த தலத்தில் மக்கள் வந்து தங்களது மூதாதையர்களுக்கு பிண்ட தானம் அளிக்க அவை உனக்கு உணவாகும். கூடவே மூதாதையர்களுக்கு பித்ரு கார்யம் செய்தவர்களுக்கும் பலன் கிடைக்கும் என்று அருளினாராம். அதனால் தான் இன்றைக்கும் அங்கே பித்ரு கார்யங்களைச் செய்கிறார்கள். இங்கே செய்யப்படும் பிண்ட தானம் மிகவும் சிறப்பானது.

பொதுவாக இப்படிச் சொன்னாலும், இந்த Gகயாவில் தகப்பனாருக்கு கார்யங்கள் செய்வது சிறப்பு என்றும் தாய்க்கு கார்யங்கள் செய்யச் சிறந்த இடம் குஜராத் மாநிலத்தில் இருக்கும் சித்[dh]பூர்/சித்தாபூர் என்ற இடம் என்றும் சொல்வார்கள். பீஹாரில் இருக்கும் பித்ரு Gகயா என்றும் குஜராத்தில் உள்ள சித்[dh]பூர் மாத்ரு Gகயா என்றும் சொல்வதுண்டு. இந்த மாத்ரு Gகயா பற்றி முன்னரே எனது பதிவொன்றில் எழுதி இருக்கிறேன். நாங்கள் இந்தக் கோவிலுக்குச் சென்று விஷ்ணுபகவானின் பூரண அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என வேண்டிக் கொண்டோம். மிகவும் பழமையான இந்தக் கோவில் சென்ற போது அங்கே இருந்த சூழல் கொஞ்சம் மனதைக் கலங்க வைத்தது. அது என்ன சூழல் என்று தானே கேட்கிறீர்கள்?


சாலையோரக் குப்பைக்கூளத்தில் உணவு தேடும் பறவை...

இவ்வளவு சிறப்பான இடத்தினை பராமரிப்பதில் அங்கே உள்ள அரசாங்கமும் பொது மக்களும் இன்னும் கொஞ்சம் ஈடுபாடு காட்டலாம். செல்லும் வழியும், கோவிலுக்கு உள்ளேயும் அத்தனை அசுத்தம். பிசுபிசுவென எண்ணையும் தண்ணீரும் இருக்க, எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விட வாய்ப்பு இருக்கிறது. பித்ரு கார்யங்கள் செய்து வைக்க இருக்கும் பண்டாக்கள் பக்தர்களை இழுப்பதும் நடக்கிறது. ஏனோ அந்த இடத்தின் புனிதம் நம் மனதில் ஒட்டாமல் அங்கே இருக்கும் அசுத்தம் அதிகமாகத் தெரிகிறது. வெளியே வந்து சில படங்களை எடுத்துக் கொண்ட போது, அங்கே பார்த்த காட்சி இன்னும் வருத்தத்தினைத் தந்தது.

அந்தக் காட்சி – “ஒரு வாகனத்திலிருந்து கும்பலாக மக்கள் இறங்குகிறார்கள். கடைசியாக ஒரு மாற்றுத் திறனாளி கைகளை கீழே வைத்து, கால்களும், கைகளே கால்களுமாக நடக்கிறார். அந்த அசுத்தமான இடத்தில் இப்படிச் செல்வதைப் பார்த்தபோது மனதில் வலி. சுத்தமாக வைத்திருப்பது அரசாங்கம் மட்டுமல்ல, பொதுமக்களாகிய நமது கடமையும் அல்லவா? மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் செய்வதில் இன்னும் நிறைய முன்னேற்றம் நம் நாட்டில் தேவை என்பதும் மனதுக்குள் வந்து போனது. பெரு நகரங்களில் கொஞ்சமாவது இருக்கும் வசதிகள் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் கொஞ்சம் கூட இல்லை என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.


சாலையோரத்தில் எரிபொருள் விற்பனை...

இந்தக் கோவில் செல்லும் வழியில் பார்த்த இன்னுமொரு விஷயம் – சாலையோரத்தில் ஒரு டேபிள் மீது வைத்திருந்த பல பிளாஸ்டிக் பாட்டில்கள் – தண்ணீர் பாட்டில்களாக இருந்தவற்றில் விற்கப்படும் திரவம் என்ன தெரியுமா? பெட்ரோல், மண்ணெண்ணை மற்றும் டீசல்! சாலையோரத்தில் சர்வ சாதாரணமாக இப்படி பாட்டில்களில் வைத்து விற்கிறார்கள்! வேறு எங்கும் இப்படியான காட்சிகளைப் பார்க்க முடிந்ததில்லை! பீஹார் மாநிலத்திற்குச் சென்றால் இந்த விஷ்ணு பாத்dh கோவிலுக்கும் சென்று வாருங்கள்.


நட்புடன்

வெங்கட்
புது தில்லி

38 கருத்துகள்:

  1. காலை வணக்கம் வெங்கட்ஜி!

    அந்தக் கொக்கு கண்ணில் பட்டு விட்டது. நான் தினமும் நடைப்பயிற்ச்சி செல்லும் சாலையில் இங்கு பங்களூரிலும் சரி, சென்னையிலும் சரி இப்படிக் குப்பைக் கூளங்களில் ஒற்றைக் கொக்கு அல்லது ஒரு 4,5 (சென்னையில்) காணலாம். டஇங்கு தினமும் பார்க்கிறேன். ஜி

    முழுவதும் வாசிக்க அப்புறம் வருகிறேன் ஜி. பணிகள்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாஜி!

      இப்படி குப்பைக் கூளங்களில் கொக்கு இன்னும் சில இடங்களிலும் பார்த்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  2. //சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரனின் காலில் விழுவதே மேல் என//

    சண்டைக்காரனை காலால் அழுத்துவதே மேல் என இருக்கவேண்டுமோ!

    ஹா... ஹா.... ஹா...

    குட்மார்னிங்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம்.

      ஹாஹா... அப்படியும் சொல்லிக் கொள்ளலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. மாத்ரு கயாவா? ஓ... இப்படி தனித்தனியாய் கொடுக்க .வேண்டுமோ...

    மாற்றுத்திறனாளிகள் பற்றி நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்கள் மனதுக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாத்ரு கயா - கீழே கீதாம்மா இன்னும் விளக்கங்கள் தந்திருக்கிறார்.

      மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் - :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. என்னவோ எனக்காகவே இந்த நேரத்தில் இந்தப் பதிவுகள் வருவதுபோல மனதில் உணர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... அப்படி இருப்பதாகத் தோன்றவில்லை. இப்பதிவு எதேச்சையாகவே இப்போது வெளி வந்தது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. எனக்கு தோன்றியது என்னன்னா அடா ஸ்ரீராம் போகும் சமயம்..வெங்கட்ஜியின் கயா பதிவுகள் வருதே..ஸ்ரீரமுக்கு இப்ப.பயனுள்ளதாக இருக்கும் னு தோன் றியது...

      கீதா

      நீக்கு
  5. சென்ற வருடம் மாமியாரின் வருஷாப்திகம் முடிவடைந்ததும் மாத்ரு கயா சென்று வந்தோம். ஆனால் அதைக் குறித்து எதுவும் எழுதவில்லை. ஏனென்றும் தெரியலை! :) இந்த கயாவுக்கு நாங்கள் போனப்போ இவ்வளவெல்லாம் அசுத்தம் இல்லை. பொருட்களின் மீதே கவனம் வைக்கச் சொன்னார்கள். கையில் பணமும் இடுப்பில் கட்டிக்கொண்டு செல்லச் சொன்னார்கள். எல்லாத்துணிகள் மற்றும் கொண்டு போனவற்றைக் காசியில் தங்கின இடத்திலேயே வைத்து விட்டு ஒரே ஒரு மாற்றுத் துணியுடன் செல்லச் சொன்னார்கள். ஆனாலும் எங்களுக்கு தர்ம சங்கடங்கள் ஏதும் நிகழவில்லை. காசியிலிருந்து ரயிலில் செல்லும்போது மக்களுடன் பேசிக் கொண்டே சென்றோம். அவர்கள் உணர்வுகள் புரிந்தன. சோன் நதிப்பாலம் கண்ணையும் கருத்கையும் கவர்ந்தது. ஆனால் அப்போல்லாம் சுமார் 20 வருடங்கள் முன்னால் படம் எல்லாம் எடுக்கவில்லை. எழுத்தாளி ஆவேன்னு அப்போத் தெரியாதே! :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாயார் இருக்கும்போது தந்தைக்கு மட்டும் கயா ச்ராத்தம் செய்யலாமா? அது எழுத்தாளினி....ஹாஹா

      நீக்கு
    2. பயங்கரப் பேத்தலா இருக்கு நெல்லைத்தமிழரே. அம்மா இறந்து அப்பா இருந்தால் தான் தர்ப்பணம் போன்றவை செய்யக் கூடாது. அப்பா இருக்கும் வரையிலும்! ஆனால் அம்மாவுக்கு ச்ராத்தம் செய்யலாம். பிள்ளைகள் இருந்தால்பிள்ளைகள் தான் அம்மாவின் ச்ராத்தம் செய்வார்கள். அப்பா செய்ய மாட்டார் அதாவது மனைவிக்குக் கணவன்செய்வதில்லை. எங்க வீட்டில் அம்மா எண்பதுகளிலேயே போய் விட்டார். அண்ணா, தம்பி ச்ராத்தம் செய்து வந்தனர் அப்பா இருந்தபோதும். ஆனால் தர்ப்பணம் போன்றவை செய்ய மாட்டார்கள். அது அப்பா இல்லை எனில் தான் வரும்! அதே போல் அப்பா இறந்து அம்மா இருந்தால் அம்மாவையும் அழைத்துக் கொண்டு காசி, கயா போன்ற இடங்களுக்குச்சென்று பித்ரு காரியங்களைச் செய்வது வழக்கம். நாங்களும் அப்படியே செய்து விட்டு வந்தோம். கயாவில் அம்மா இல்லை எனில் பிண்டங்கள் அதிகம் போடணும் அம்மாவுக்கும் சேர்த்து. அம்மா இருந்தால் பிண்டங்கள் குறைவு! அதைத் தவிர்த்தும் நம் முன்னோர்கள் எல்லோருக்கும், சந்ததி இல்லாமல் இறந்த குடும்பத்து மூத்தோர், மாமனார்,மாமியார் இல்லை எனில் அவர்களுக்கு, சொந்த சகோதரனோ, ஒன்று விட்ட சகோதரனோ இல்லை எனில் அவர்களுக்கு, இரு வழித்தாத்தா, பாட்டிகள் அவர்களின் முன்னோர்கள், மாமா,மாமிகள், அத்தை, அத்தை கணவர், இன்னும் நம்ம வீட்டுச் செல்லங்கள், நாய்கள், பூனைகள், கிளிகள், பறவைகள் இவ்வுலகில் சந்ததி இன்றி ஒரு வாய்த் தண்ணீர் கூடக் கொடுக்க நாதியில்லாமல் இறக்கும் அத்தனை பேருக்கும் சேர்த்துக் கொடுக்கலாம். நாங்க எங்க மோதிக்குக் கூடக் கொடுத்தோம் மோதியின் பெயரைச் சொல்லி! அம்மா இறந்தால் தான் மாத்ருகயா போய் அம்மாவுக்குச் செய்யலாம். இல்லை எனில் செய்ய முடியாது. நாங்க கயா தவிர்த்து பத்ரிநாத்தில் பிரம்ம கபாலம், மற்றும் கயிலையில் மானசரோவரில் என்று கொடுத்திருக்கோம். அப்போ எல்லாம் மாமியார் இருந்தார். ஆகையால் அவருக்கு இப்போது போன வருடம் சென்ற மாத்ரு கயா மட்டுமே!

      நீக்கு
    3. தர்ப்பணம் தெரியும். ஆனால் கயா ச்ராத்தம் (அப்பா மற்ற முன்னோர்களுக்குச் செய்யும்போது), அம்மா உயிரோடு இருக்கும்போது செய்யக்கூடாதுன்னு நினைத்துக்கொண்டிருந்தேன். (அதாவது பெற்றோர் இருவரும் மறைந்தபிறகுதான் கயா ச்ராத்தம் செய்யணும்னு நினைத்தேன்)

      நீங்க அதனைப் பற்றி எழுதியிருக்கீங்களா? கயா ப்ரயாணம்... சுட்டி கொடுங்க.

      நீக்கு
    4. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா/நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    5. இருபது வருஷம் முன்னே காசி, கயா, பிரயாகை போனது நெல்லைத் தமிழரே. எல்லாத்துக்கும் சுட்டியும் படங்களும் இருந்தால் மட்டும் போதாது. இதெல்லாம் பித்ருகாரியங்கள் எப்படிச் செய்வது என்பதில் வருவன. நீங்க வைதிகஶ்ரீ புத்தகம் சந்தா கட்டி வாங்கிப் படிங்க. இல்லைனா ஶ்ரீவத்ஸ ஜெயராமசர்மாவின் சாஸ்திர சம்பிரதாயங்களும் பித்ரு காரியங்களும் செய்ய வேண்டிய முறை பற்றி வாங்கிப் படித்துப்பாருங்க! அயோத்யா மண்டபத்தில் கிடைக்கலாம். காஞ்சி மடம், ச்ருங்கேரி மடம் போன்றவற்றில் கிடைக்கலாம். சமீபத்தில் வாட்சப்பில், காஞ்சிப் பெரியவா வலைத்தளம், வாட்சப் குழுமங்கள் போன்றவற்றில் இத்தகை விஷயங்கள் செய்திகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

      நீக்கு
    6. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  6. சூழலும், மாற்றுத் திறனாளி நிலையும் வேதனை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது அரசு மட்டுமல்ல மக்களும்தான் இதை பலரும் உணர்வதில்லை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. வட இந்தியப்பயணத்தின்போது நாங்கள் சென்ற முதல் கோயில் இதுதான். எங்களது அனுபவத்தை நினைவூட்டியது இப்பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...

      நீக்கு
  9. இந்த மகத்துவம் மிகுந்த கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தது மகிழ்சியை அளித்தது.நீங்கள் கூறியபடி இந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  10. எரிபொருளை வெயிலில் வைத்தால் ஆவியாகிடாதா?!

    படங்கள் அருமை

    மாற்று திறனாளிகளை நாம் மதிப்பதே இல்லை. எந்த தனிப்பட்ட வசதியும் அவர்களுக்காக செய்து தரப்படுவதில்லை. இதை பலமுறை நானும் கண்டிருக்கிறேன். என்று திருந்துமோ இந்த அரசாங்கம். சுத்தத்துக்கு பொதுமக்கள்தான் பொறுப்பு. ஆனா, வசதிகளுக்கு அரசாங்கந்தான் பொறுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  11. சுவையான புதிய தகவல்கள்.

    பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அறிவிலிநம்பி....

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    அருமையான தகவல்கள். விஷ்ணு பாதம் பற்றியும், அசுரன் கதையும் தெரிந்து கொண்டேன். படங்கள் மிக அருமையாக உள்ளன. மாதா, பிதா இருவருக்கும் தனித்தனியே காரியங்கள் செய்யும் இடங்களையும், அதன் பெயர் வர காரணமாயிருந்தது கதைகளையும் அறிந்து கொண்டேன். தங்கள் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  13. அருமையான படங்களுடன் விவரமான பதிவு.பதிவின் விளக்கம் தெளிவு. கீதா சாம்பசிவம் அவர்களின் விசால ஞானம் பிரமிக்க வைக்கிறது. நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  14. படங்கள் விளக்கமான தகவல்கள் எல்லாமே அருமை ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  15. படம் நன்றாக இருக்கிறது ஜி.

    அந்த மாற்றுத் திறனாளி பாவம். நான் அப்படி கை ஊன்றி நடப்பவர்கள் கைகளுக்கும் செருப்பு போட்டு நடப்பதைப் பார்த்திருக்கேன் ஜி...ஆனாலும் பாவம்...நம்மூரை என்ன சொல்ல?!!

    பித்ரு கயா மாத்ரு கயா எல்லாம்தெரிந்து கொள்ள முடிந்தது. கீதாக்காவின் பதிலும் வாசித்துத் தெரிந்து கொண்டேஞ்சி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  16. ஒரு பித்ரு காரியங்களை செய்ய வேண்டும் என்று ஆவல். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....