திங்கள், 29 ஏப்ரல், 2019

என்ன அடிக்காதீங்க…


என்ன அடிக்காதீங்க… என்ன அடிக்காதீங்க….

ஐயோ என்ன அடிக்காதீங்க… தலையில ரத்தம் வருது…


இப்படியான ஒரு கூக்குரல், ஓலம் தொடர்ந்து கேட்டது. யாரோ ஒரு பெண் தபதபவென கூக்குரல் இட்டபடிய ஓடும் சப்தம். இந்த ஓலத்தினைத் தவிர வேறு எந்த குரலும் இல்லை. ஊரே நிசப்தமாக இருக்கிறது. தெரு நாய்களின் குரைக்கும் சப்தம் கூடக் கேட்கவில்லை. இந்த அலறல் மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

நான் எங்கே இருக்கிறேன், யார் இப்படி அழுவது, யார் யாரை அடிக்கிறார்கள் என்பது ஒன்றுமே புரியவில்லை. காண்பது கனவா இல்லை நனவா என ஒன்றுமே புரியாமல் அழுகைச் சப்தம் மட்டும் தொடர்ந்து கேட்டபடி இருக்கிறது. திடுக்கிட்டு விழித்து படுக்கையில் எழுந்து அமர்கிறேன். அழுகைச் சப்தம் தொடர்கிறது. ஓ… கனவில்லை. நிஜத்தில் தான் யாரோ ஒரு பெண் அழுகிறாள். பக்கத்து மேஜை மீது இருக்கும் அலைபேசியை எடுத்து திரையைத் தொடுகிறேன். நடு ஜாமம் – பன்னிரெண்டு மணி ஒரு மணி நிமிடம் என்கிறது ஒளிர்ந்த அலைபேசி! இந்த நேரத்தில் எங்கே, யார் வீட்டில் பிரச்சனை எனத் தெரியவில்லையே. பாவம் அந்தப் பெண். என்ன பிரச்சனை என்று புரியவில்லையே. எதற்காக அடிக்கிறார்கள்?

அறையில் மின்விளக்கை பயன்படுத்தாமல் படுக்கை அருகே இருக்கும் ஜன்னல் வழியே வெளியே பார்க்கிறேன். ஒரு பெண் தலையில் முக்காடிட்டு ஓடுகிறாள். அடிப்பவரிடம் இருந்து தப்பித்து விட்டாள் போலும். யாரும் அவளைத் தொடரவில்லை. ஊரே நிசப்தமாக இருக்கிறது. என்னைப் போலவே, அவரவர் வீட்டு ஜன்னலில் இருந்து வேறு சிலரும் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனாலும் யாரும் கீழே இறங்கி வரவில்லை. அடுத்தவர் வீட்டு பிரச்சனைகளில் நாம் தலையிடுவது சரியில்லை என்பதே எல்லோருக்கும் இருக்கும் எண்ணமாக இருக்கலாம். எனக்கும் அதே எண்ணம். மேலும், ஓடும் பெண்மணி யாரென்றும் எனக்குத் தெரியவில்லை. எதற்காக அடிக்கிறார்கள், அங்கே அவர்களுக்குள் என்ன பிரச்சனை என எதுவும் தெரியாமல் அவர்களுக்குள் சமரசம் செய்து வைக்க நான் யார்.

சிறிது நேரம் கழித்து இன்னும் ஒரு பெண்ணின் குரல். இந்த இராத்திரி நேரத்தில் எங்கே போகிறாள் அவள், ஒழுங்காக அவளை அழைத்து வா என வேறொரு பெண் குரல் – கொஞ்சம் மூத்த வயதினராக இருக்கலாம். பனியனும் பேண்டும் போட்ட ஒரு ஆள் இப்போது தபதபவென ஓடுகிறான். சில நிமிடங்களில் அவன் ஓடிய பெண்ணை அழைத்து வருகிறான். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஏதேனும் சமாதானம் சொல்லி அழைத்து வந்து விட்டான் போலும். சிறிது நேரத்தில் ஊர் மீண்டும் உறங்கத் துவங்கியது. சண்டை நடந்த வீடும் நிசப்தமானது. நள்ளிரவில் எழுந்த எனக்கு மட்டும் உறக்கமில்லை. கொஞ்சம் தண்ணீர் குடித்து படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். பாவம் அந்தப் பெண், ஏன் அடிபடுகிறார் என்ற சிந்தனையிலேயே உறக்கம் வரவில்லை. ஒரு மணிக்குப் பிறகு தான் உறங்கி இருக்க வேண்டும்.

காலையில் அலுவலகம் செல்லும் போது கீழே இருந்த வீட்டில் சாதாரண நிலை தான். எந்த சப்தமும் இல்லை. சரி எல்லாம் சரியாகிவிட்டது போலும் என்று அலுவலகம் சென்று விட்டேன். இரண்டு மூன்று நாட்கள் எல்லாம் சரியாகவே இருந்தது. மூன்று நாட்கள் பிறகு மீண்டும் அலறல்! இந்த முறை கேட்டது பெண் குரல் அல்ல! மாறாக ஆண் குரல்! அதே வீட்டிலிருந்து! மீண்டும் விழித்து எழும்போது மணி பன்னிரெண்டுக்கு மேல்! குரலைக் கேட்கும்போதே சரக்கின் பாதிப்பில் இருக்கிறார் என்பது புரிந்தது! ’என்னையா அடிக்கறீங்க? நீயும் அவளுமா சேர்ந்து என்னை அடிக்கறீங்களே?” என்று அலறல்.  “இதோ இரு, இப்பவே போய் இன்னும் கொஞ்சம் சரக்கு அடிச்சுட்டு வரேன்! வந்து உங்களை என்ன செய்யறேன் பார்!” என்று குரல் விடுகிறார். டம் டமால் என சப்தம்… யாரோ அடிக்கிறார்கள் போலும். இப்போது “என்னை அடிக்காதீங்க என்னை அடிக்காதீங்க” என கூக்குரல் அந்த ஆணிடமிருந்து!  

அன்றைக்கும் உறக்கம் போனது! Tit for Tat! இன்றைக்கு அந்தப் பெண் ஆணை அடித்து நொறுக்கிவிட்டார் போலும்! என்ன சண்டையோ? எத்தனை நாள் இந்தப் பிரச்சனைகள் தொடருமோ? இன்னும் எத்தனை இரவுகளில் நான் விழித்து எழ வேண்டுமோ? இப்படி அடிக்கடி சரக்கு அடித்து சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களை என்ன செய்ய? எங்கள் குடியிருப்பில் இவர்கள் குடும்பமே இப்படித்தான். அடிக்கடி சண்டை போடுகிறார்கள் – ஒரு நாள் அப்பாவுக்கும் பையனுக்கும் சண்டை, ஒரு நாள் அம்மாவும் மருமகளும் சண்டை போடுகிறார்கள், ஒரு நாள் மகனும் மருமகளும் சண்டை! தினம் தினம் சண்டை தான் – ஒரே வீட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள் போலும். குடியிருப்பில் இருக்கும் பலருக்கும் இந்த குடும்பச் சண்டைகள் தொந்தரவு என்றாலும் யாருமே அவர்களிடம் கேட்பதில்லை! ஏனெனில் என்னைப் போலவே, அவர்களிடம் யாரும் பேசுபவது இல்லை!

ஒரு சில சமயங்களில் அவர்களாகவே 100-க்கு அழைக்க காவல்துறையினர் வந்து விடுவது உண்டு. ஆனாலும் சில நாட்களில் மீண்டும் சண்டை சச்சரவு தான். இப்படி சண்டை போடுவது அவர்களுக்கு வாடிக்கையாகிப்போக யாருமே இவர்களை கண்டு கொள்வதில்லை. ”நமக்கேன் வம்பு?” என்று விலகியே செல்கிறார்கள். நானும் அப்படியே… என்ன குடும்பமோ? சரக்கு அடித்து சண்டை போடுவது இன்னும் தொடர்கிறது! இன்னும் எத்தனை இரவுகளில் இப்படி விழிக்க வேண்டுமோ?

நாளை மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…


நட்புடன்

வெங்கட்
புது தில்லி

26 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    இதுபோன்ற சம்பவங்களில் இரவுகளில் சும்மா உள்ளே இருப்பதே நலம். சில சமயங்களில் நம்மை திசைதிருப்பி விட்டு திருடும் முயற்சியாகக் கூட இருக்கலாம். ஆனால்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம்.

      சும்மா உள்ளே இருப்பதே நலம். உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஆனால் இங்கு பிரச்னை குடிப்பிரச்னை என்று தெரிகிறது. இவர்களைத் திருத்த முடியாது. தானாயத் திருந்தினால்தான் உண்டு. அதற்கு பெரிய அனுபவனால், பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். பின்னர்தான் திருந்துவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடி - அவர்களாகத் திருந்தினால் தான் உண்டு. ஆனால் கிடைப்பது கிடைக்காமல் போனாலும் நல்லது தான்! ஆனால் அதில் தானே பலரும் லாபம் அடைகிறார்கள் - அரசு உட்பட! அதனால் கிடைக்காமல் இருக்காது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. சில வருடங்களுக்கு முன்னாலெண்கள் குடியிருப்பில் கீழ் வீட்டில் இதேபோல ஒரு சம்பவம் நடந்தது. நான் தலையிட முயற்சிக்கவே இல்லை. ஆனாலும் நானும் அந்த சம்பவத்தில் உள்ளே நுழைக்கப்பட்டேன். சில தூங்கா உறவுகளையும், நிம்மதியற்ற பகல்களையும் சந்தித்த நாட்கள் அவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... உங்களுக்கு ஏற்பட்ட தொல்லை வேதனையானது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. இதற்கு அடிப்படையே டாஸ்மாக்தான் ஜி
    அரசுதான் சற்று கவனம் கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயாரிப்பது நின்றால் குடிப்பதும் நிற்கும் - உண்மை. அரசு தயாரிப்பதை நிறுத்தினாலும் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை நிறுத்துவதில்லை. குடிப்பவர்களும் திருந்த வேண்டும்! சரியான நிர்வாகமும் வேண்டும்.... இதெல்லாம் எப்போது நடப்பது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. சிகிந்தராபாதில் இருந்தப்போ முதலில் குடி இருந்த வீட்டில் இப்படித் தான் ஒரு நபர் குடித்துவிட்டு தினம் தினம் இரவில் ரகளை செய்வார். பல இரவுகள் தூங்க முடிந்ததில்லை. அக்கம்பக்கம் எல்லோரையும் அழைத்து நியாயம் கேட்பார். அதன் பின்னர் வேறே வீடு பார்த்துப் போனோம். அங்கே ராணுவக் குடியிருப்பு இருந்தது. ஆனாலும் ஊரில் வாசம் செய்யணும் என்னும் நினைப்பு நம்மவருக்கு! எனக்கு அவ்வளவா ரசிக்கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு இடத்திலும். குடிகாரர்கள் பிரச்சனை - என்றைக்கு தீரும்.... அவர்களது தாகம் தீராத தாகம் தான்! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  6. என்ன சொன்னாலும் திருந்தாத குடிகாரர்களை நாம் திருத்த முடியாது. அவர்களாய்ப் பார்த்துத் தான் திருந்தணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது - இது குடிக்கும் பொருந்தும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  7. ஸ்ரீராம் அவர்கள் சொல்லியிருப்பது போல
    இரவில் நிகழும் இது போன்ற சம்பவங்களில் சும்மா உள்ளே இருப்பதே சுகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா இருப்பதே சுகம்! அதே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  8. இவர்களால் இரவில் தூக்கம் கெடுகிறதென்றால் நம்மால் முடியவிட்டாலும் பொலீசில் புகார் கொடுக்கலாம் அவதிப்படுவது ஒரு குடும்பம் மட்டுமில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில முறை போலீஸ் வந்து மத்தியஸ்தம் செய்தது உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  9. நான் கேட்டு வாங்கி போட்ட கதை என்றே நினைத்தேன். குடி என்றாலே அடி. தடி எடுக்காதது தான் பாக்கி.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை அல்ல நிஜம்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. ராஜாத்தி சல்மாவின் கவிதை வரிகள் நினைவில் வருகின்றன
    //யாரோ ஒருவர் கொலையாகும்
    சாத்தியத்தொடு
    ஒரே அறையில் உறங்குகிறோம்//
    நினைவில் இருந்து எழுதியதால் சிறிய மாற்றங்கள் இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரிரங்கன்.

      நீக்கு
  11. நான் முதலில் கதை என்று நினைத்தேன். எழுதியவிதம் அப்படி இருந்தது.
    குடும்ப உறவுகள் குடியினால் சீரழிவு ஏற்படும் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை அல்ல நிஜம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  12. தண்ணி அடிக்காதீங்க! தண்ணி அடிக்காதீங்கன்னு கத்தணும் போல இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  13. முதலில் கதை என்று நினைத்தேன். நிஜம் என்று பின்னர் தெரிந்தது. நல்ல நரேஷன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....