செவ்வாய், 10 மார்ச், 2020

வீடு…



நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

நாம் வாழும் வீட்டில் எத்தனை வசதி இருக்கிறது என்பது முக்கியமல்ல. எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதே முக்கியம்!

 
வாடகை வீடு -  3 மார்ச் 2020:



அப்பா அரசு ஊழியர் என்பதால் நான் பிறந்ததிலிருந்தே ஏறக்குறைய இருபது வருடங்கள், அதாவது எனக்கு திருமணமாகும் வரை அரசுக் குடியிருப்பில் தான் இருந்திருக்கிறேன். அது ஒரே ஒரு அறை கொண்ட மிகச்சிறிய வீடு. படுக்கையறை, சாப்பாட்டு அறை என்பதெல்லாம் இருக்காது.

ஆனாலும் அந்த வீட்டிற்குத் தான் எத்தனை எத்தனை விருந்தினர்கள் வந்துள்ளனர்!! வசதி வாய்ப்புகள் இல்லா விடினும் சந்தோஷமாக வாழ்ந்த வீடு அது. எனக்குப் பிடித்த வீடு என்று சொல்லலாம்.

பின்பு திருமணமாகி டெல்லிக்குச் சென்றது 'என்னவர்' வாங்கி வைத்திருந்த சொந்த வீட்டிற்கு. என்னவரும் அரசு ஊழியர் என்பதால் அலுவலகத்துக்கு சென்று வர வசதியாக இருக்கும் என சில வருடங்களுக்குப் பிறகு அரசுக் குடியிருப்பு 'அலாட்' ஆன போது மாறினோம்.

இங்கே திருவரங்கத்திலும் மூன்று வருடங்கள் வாடகை வீட்டில் வசித்த பிறகே சொந்த வீட்டிற்கு மாறியுள்ளேன்.

இந்த கதையெல்லாம் எதற்கு என்கிறீர்களா? எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாய் எந்த வீட்டில் வசித்தாலும் அந்த வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தான் வைத்துக் கொண்டு வருகிறேன். ஆடம்பரத்திற்காக பொருட்களை வாங்கி நிரப்பி அதில் அழகு காண்பதை விட காலியாக இருந்தாலும் சுத்தமாக இருந்தால்?

நேற்று காலி செய்த வீடு ஒன்றைப் பார்த்ததும் அதிர்ந்து தான் போனேன். பொதுவாக வாடகைக்கு இருப்பவர்கள் ஏகப்பட்ட ஆணி அடிப்பார்கள், சுவற்றில் எதையாவது ஒட்டுவார்கள் என்றெல்லாம் தான் சொல்வார்கள். இரண்டே வருடங்கள் வாடகைக்கு இருந்தாலும், குடி வந்த நாளிலிருந்தே பெருக்கி, துடைத்து, ஒட்டடை அடித்து என்று எதற்காகவுமே மெனக்கெட்டிருக்க மாட்டார்கள் போலிருக்கிறது :( எங்கும் குப்பையும், அழுக்கும், ஒட்டடையும் :(

வாடகைக்கு இருந்தாலும் நாம் வசிக்கும் வரை நம்ம வீடு போல தானே! வீடு என்பது வசதி வாய்ப்பும், அழகும், சந்தோஷமும் நிறைந்திருக்கும் இடம் மட்டும் அல்ல. சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருந்தால் மட்டுமே நம் உடல்நலனும் காக்கப்பட்டு அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியும் இல்லையா!

படத்தில் இருப்பது ஐந்து வருடங்கள் கடந்த எங்கள் வீட்டின் ஒரு அறை. சுவற்றில் அனாவசியமாக ஆணி அடிப்பதோ, ஒட்டுவதோ, சுவற்றை அழுக்கு செய்வதோ இல்லை. எல்லா அறைகளிலுமே இப்படித் தான் இருக்கும்.

முகநூலில் இதனை எழுதிய போது கிடைத்த சில கருத்துரைகள்:

Rishaban Srinivasan: வீட்டைப் பராமரிப்பது ஒரு கலை. அது சிலருக்கே வாய்க்கிறது.

Mahi Arun: I second Rishaban sir. I try my best to keep it clean. but not happening. hopefully when my little one grows up I can try better.

Shana Shana: சில வீடுகளைப்பார்க்கும் பொழுது இதில் எப்படித்தான் வாழ்கின்றார்களோ என்று முகம் சுளிக்க வைக்கின்றது. சில வீடுகளை பார்க்கும் பொழுது மனம் பரவசமாகின்றது. எனக்கும் உங்களையொத்த மனநிலைதான். அதிக அடைசல் இன்றி வீடு பளிச்சென்று இருக்க வேண்டும்.   டைனிங் டேபிளில் சில வீடுகளில் சாப்பாட்டை வைத்து சாப்பிடக்கூட இடம் இருக்காது. எங்கள் வீட்டில் சாப்பாட்டு நேரம் தவிர இதர நேரங்களில் ஒரு செல்போனை வைக்ககூட அனுமதிக்க மாட்டேன். கிச்சன் மேடையும் அப்படியே.

Sujatha Sambamurthy:  ஆணி விஷயத்தில் நான் ரொம்ப தாராளம் இவர் கத்துவார் பெரியவளின் கைவண்ணத்தில் போட்டோஸ் சின்னவள் கை வண்ணத்தில் பெயிண்டிங்க்ஸ்.  No one can control suja the pidaari!

Aatchi Aatchi: நான் இந்த பக்கம் வரலை!

Tulsi Gopal: உங்க வீட்டு சுத்தம் + அழகுக்கு நான் சாட்சி !!!

Geetha Mathi: நானும் சாட்சி :)

Revathy Venkat: நானும் சாட்சி.

Kalai Kalaiarasi: Very good policy and maintenance, super.

என்ன நண்பர்களே, இந்த நாளின் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.

34 கருத்துகள்:

  1. சொந்த வீடிடோ, வாடகை வீடோ அதை கோவில் போல் உணர வேண்டும் பிறகு சுத்தம் கிடைத்து விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டை கோவில் போல உணர வேண்டும் - உண்மை தான் கில்லர்ஜி. நாம் இருக்குமிடமே கோவில்!

      நீக்கு
  2. அரசுக்குடியிருப்பில் இருபத்தாறு வருஷங்கள் இருந்த நாங்கள் அளவாகவே ஆணிகள் அடித்து இருந்தோம்.  முடிந்தவரை சுத்தமாக இருக்கப் பார்த்தோம்.  பதிவை பேஸ்புக்கிலும் படித்த நினைவு இருக்கிறது.

    வாசகம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      அரசுக்குடியிருப்பு - நானும் நெய்வேலி நிறுவனத்தின் குடியிருப்பில் தான் தில்லி வரும் வரை இருந்தேன். தில்லி வந்த பிறகும் கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக அரசு குடியிருப்பு தான். முடிந்தவரை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் - அரசின் வீடோ, வாடகை வீடோ அல்லது சொந்த வீடோ - எதுவாக இருந்தாலும்!

      நீக்கு
  3. ஒரு டிக்கெட் எடுத்து கொடுத்தால் வந்து பார்த்து நானும் சாட்சி சொல்வேன்னல்லவா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிக்கெட் தானே மதுரைத் தமிழன் - எடுத்துக் கொடுத்தால் போயிற்று!

      நீக்கு
  4. ஒரு வகையில் உடல் போலத்தான் வீடும்..உடலை நன்குப் பராமரித்தால் ஆரோக்யம் வசமாகிறது..வீட்டை நன்கு பராமரித்தால் ஆனந்தம் வசமாகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல் போலத்தான் வீடும் - சரியான ஒப்பீடு ரமணி ஜி. பராமரிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் ஆனந்தமும் ஆரோக்கியமும் நம் வசம்.

      நீக்கு
  5. வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வது ஒரு கலை மட்டுமல்ல தொடர்ந்த கவனம் தேவைப்படும் வேலை அது. அதற்கு எல்லோரது ஒத்துழைப்பும் அவசியம் என்றாலும், அதன் முதல் படி, சாமான்களை வாங்கும் சேர்க்கும் எண்ணமே வரக்கூடாது. அப்படி வாங்கினால் கடந்த ஒரு வருடத்தில் உபயோகிக்காதவற்றை தூக்கி எறியும் மனம் வேண்டும். மிகவும் கடினமான வேலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள தொடர்ந்த கவனம் தேவை - தேவையில்லாதவற்றை தூக்கி எறியும் மனம் வேண்டும் - ஹாஹா... இந்த விஷயத்தில் நான் ரொம்பவே தாராளம் நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. அழகான வீடு சுத்தமான வீடு மனதில் மகிழ்ச்சியை கொடுக்கும் வீடு, அழகு.
    நீங்கள் சொன்னது மற்றவர்கள் சொன்னவை எல்லாம் அருமை.
    நெல்லைத்தமிழன் சொல்வதை கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுத்தமான வீடு மனதில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் வீடு - 100% உண்மை கோமதிம்மா...

      நீக்கு
    2. நீங்க வேற கோமதி அரசு மேடம். சொல்றதுதான் சுலபம். கடைபிடிப்பது கடினம். சின்ன மளிகை கடை பில்லையே தூரப் போடாமல் எப்போது என் கப்போர்ட் ட்ராயர் மெஸ்ஸி ஆகிறதோ அப்போதுதான் ஒண்ணொண்ணாப் பார்த்து தூரப் போடுவேன். சென்னை டு பெங்களூரு பேக்கிங்கில் நான் தூரப்போட்டவை (பாத,திரங்கள், உபயோகப்படும் எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக்ஸ் ) மிக மிக அதிகம்.

      சாமான்களைத் தூரப் போடாமல் மேலும் மேலும் சேர்ப்பது, அந்தப் பொருட்கள் மீது நாம் வைக்கும் அட்டாச்மென்ட் என்றே நினைக்கிறேன்.

      நீக்கு
    3. அட்டாச்மெண்ட் - உண்மை. சிலருக்கு சில பொருட்கள் மீது ரொம்பவே அட்டாச்மெண்ட் உண்டு. சிலவற்றை தேவையே இல்லை என்றால் வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

      சொல்வது சுலபம் - கடைபிடிப்பது ரொம்பவே கஷ்டம் தான்.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. எனக்கு தற்போதைய பிரச்சினை வேண்டாம் என்று கழித்து கட்டிய பொருட்களை தூக்கிப்போட இடம் இல்லை, எடுக்கவும் ஆள் இல்லை. முக்கியமாக 2 டிவி (ஒன்று பழைய மாடல், மற்றது led), லேப்டாப், மற்றும் பாட்டரிகள், உடைந்த சோபா, பழைய மெத்தை, உடைந்த நாற்காலி, பழைய போட்டோக்கள், 2 சீலிங் பேன்கள் மற்றும் பழைய டீயூப் லைட்கள். கார்பொரேஷன் குப்பை எடுத்து 10 வருடங்கள் ஆகி விட்டன. காரணம் அவர்களுக்கு குப்பை கொட்ட இடம் இல்லை. எனக்கும் மனைவிக்கும் வயசாகி விட்டது.பிள்ளைகள் அடுத்து இல்லை. தினப்பாடே கஷ்டமாக இருக்கும் போது இவைகளைக் கொண்டு எங்கே சேர்ப்பது என்றும் புரியவில்லை. ஆக குப்பைகள் பரணில். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் இருந்தால் மார்க்கமுண்டு! வீட்டுக்கு வேலை செய்ய ஆட்கள் வருகிறார்களா? உங்களுக்குத் தேவையில்லாத பொருட்கள் மற்றவர்களுக்குத் தேவையாக இருக்கலாம். என் வீட்டுக்கு குப்பை எடுக்க வரும் நபருக்கு நான் எனது பழைய வாஷிங் மெஷின் கொடுத்தேன் - காவலாளிக்கு தொலைக்காட்சி பெட்டி - இப்படி சொல்லிக் கொண்டு போகலாம். கேளுங்கள் - வாங்கிக் கொள்பவர்கள் வாங்கிக் கொள்ளட்டும் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  9. ம்ம்.... ஊரில் சொந்த வீடு இருந்தாலும் அதை வாடகைக்குக் கொடுத்துவிட்டு இப்போது தலைநகரில் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய நிலை. தொழில் தான் காரணம். ஆனாலும் கிடைத்ததை வைத்து திருப்தி கொள்வது தானே வாழ்க்கை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொந்த வீடு இருந்தாலும் அங்கே தங்க முடியாமல் இருப்பது கடினம் தான் சிகரம் பாரதி.

      நீக்கு
  10. வலைத்திரட்டி உலகின் புதிய புரட்சி: வலை ஓலை .
    நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது வீடு… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலை ஓலை - தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். வெற்றி பெற வாழ்த்துகள்.

      நீக்கு
  11. பளிச் பளிச் வீடு ...வெகு அழகு ...இப்படி தான் நானும் பராமரித்துக் கொண்டு இருக்கிறேன்..


    ஆனாலும் சில தேவையில்லாத பொருட்களை உடனடியாக தூக்கி போடும் பழக்கம் மட்டும் இன்னும் வரவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவையில்லாத பொருட்களை தூக்கிப் போடுவது கொஞ்சம் கடினம் தான் - பழகப் பழக வந்து விடும் இந்த விஷயம் அனுப்ரேம்.

      வீட்டை அழகாகப் பராமரிக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

      நீக்கு
  12. ஆகா... இப்படித்தான் இருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  13. கும்பகோணத்தில் எங்கள் சொந்த வீடு பெரியது. பகுதி பகுதியாக வாடகைக்கு விட்டிருந்தார்கள். பெரியவர்கள் அடுத்தடுத்து இறந்தபின்னர்தான் குடியிருப்போரை எதிர்கொள்வதை சிரமமாக உணர்ந்தோம். மாடியில் அறை கட்டி வாடகைக்கு விடலாம் என்று சிலர் கூறும்போதும் அதனை முற்றிலும் மறுத்துவிட்டேன், சொந்த வீட்டில் பட்ட அனுபவங்கள் காரணமாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடு வாடகைக்கு விடுவதில் கஷ்டங்கள் உண்டு - சிலர் ரொம்பவே படுத்துவார்கள். ஒரு சில வீட்டு உரிமையாளர்கள் படுத்துவதும் உண்டு.

      உங்கள் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  14. வாழ்துகள்.நானும் உங்கள் கட்சிதான் :)
    எங்கள் ஒரு வீடு ஏறத்தாழ நூறு வருடங்கள் பழையது திருத்தித்தான் வைத்துள்ளோம் இருந்தும் பராமரிப்பதில் சிரமம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய வீடு பராமரிப்பதில் கடினம் இருந்தாலும், அந்த வீடு பல விஷயங்களை நம் நினைவுக்குக் கொண்டு வருமே... அது ஒரு தனி சுகம் தான் மாதேவி.

      நீக்கு
  15. மிக அருமையான பதிவு.
    நானாவது கொஞ்சம் நிதானமாக இருப்பேன். சிங்கம் சட்டு
    சட்டென்று சரிப்படுத்துவர்.
    எங்கள் பசங்க சுத்தமான வீட்டை அழகாக
    ப் பேணுகிறார்கள்.
    என்னால் சேர்ந்த பழைய பொருட்கள் என் அறையில்
    அதிகம்.
    கடிதங்கள்,புத்தகங்கள், போட்டோக்கள் என்று பெரிய உலகம் அது.
    ஆதியின் அழகு வீடு அருமை. அவளைப் போலவே நேர்த்தி.

    நிறை வாழ்வு அனைவரும் வாழ வேண்டும். சொந்தமோ வாடகையோ
    மனமகிழ்ச்சி தான் முக்கியம்.
    நன்றாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொந்தமோ வாடகையோ மனமகிழ்ச்சி தான் முக்கியம். நூற்றுக்கு நூறு உண்மை வல்லிம்மா.

      நீக்கு
  16. அருமை
    வீடு இப்படித்தானே இருக்க வேண்டும்
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடு இப்படித்தான் இருக்க வேண்டும் - உண்மை தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....