வெள்ளி, 6 மார்ச், 2020

அந்தமானின் அழகு – போர்ட் ப்ளேயரில் எங்கே தங்குவது



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பயணம் பற்றி படித்ததில் பிடித்த ரசனையான விஷயத்துடன் ஆரம்பிக்கலாமா?

விமானம்!
சிட்டுக் குருவி போல சின்னதாய் விமானம்
கண்களுக்குத் தோன்றிய காலம் அவை…
சைக்கிள் டயர் ஓட்டிக்கொண்டே
விமானம் விரட்டிய அந்த நாட்களில்
ஏனோ அதில் பயணிக்கும் ஆசை இருந்ததே இல்லை…
இந்த உலோகப் பறவையின்
பயணத்தின் ஜன்னல் வழியே
எத்தனை அழகு அதிசயங்கள்…




நெய்வேலியில் இருந்த வரை விமானத்தினை பார்த்ததே இல்லை.  எப்போதாவது நெய்வேலி நகரைக் கடந்து செல்லும் விமானத்தினை அண்ணாந்து பார்த்து கழுத்து வலி கண்டது தான் மிச்சம்.  எம்ஜிஆர் ஹெலிகாப்டரில் வருகிறார் என ஊரே திரண்டு சென்றபோது நான் செல்லவில்லை! ஒரே கும்பல் – தொலைந்து விடுவேன் என என்னை அழைத்துப் போகவும் இல்லை, அனுப்பவும் இல்லை! ஹாஹா… இப்போது அடிக்கடி விமானத்தில் பயணித்தாலும் பெரிதாக ஈர்ப்பதில்லை – சாலை வழிப் பயணம், இரயில் பயணம் போன்றவற்றில் இருக்கும் ஸ்வாரஸ்யம் விமானப் பயணத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். சரி தற்போதைய விமானப் பயணத்திற்கு வருகிறேன். சென்ற பகுதியில் சொன்னது போல எங்கள் விமானம் போர்ட் Bப்ளேயரின் வீர் சாவார்கர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது காலை மணி 10.50! வெளியே வந்து உடமைகளைப் பெற்றுக் கொண்டு பயண ஏற்பாடு செய்த சுமந்த் அவர்களைத் தொடர்பு கொண்டோம்.  இந்தத் தொடரின் மூன்றாம் பகுதியை படிக்க ஆரம்பிக்கும் முன்னர் முதல் இரண்டு பகுதிகளை படிக்காதவர்கள் கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!





எங்களுக்காக ஒரு டெம்போ ட்ராவலர் வண்டியுடன் காத்திருப்பதைத் தெரிந்து கொண்டோம்.  விமான நிலையத்தின் வெளியே வர எங்களுக்காக பதாகையுடன் ஒரு நபர் காத்திருந்தார் – ஒரு Xylo காரும் தயாராக இருந்தது – உடைமைகள் அனைத்தும் காருக்குப் போக, நாங்கள் அனைவரும் டெம்போ ட்ராவலருக்குச் சென்று அமர்ந்து கொண்டோம். ஓட்டுனர் தமிழர் – புஷ்பராஜ் – போர்ட் Bப்ளேயரிலேயே பிறந்து வளர்ந்தவர்.  போர்ட் Bப்ளேயர் மட்டுமல்லாது அந்தமானின் பல தீவுகளிலும் தமிழர்கள் நிறைந்து நீக்கமற இருக்கிறார்கள்.  தமிழர்களின் கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள், கோவில்கள் என அனைத்தும் அங்கே இருக்கிறது. ஒரு மினி தமிழகம் போலவே இருக்கிறது. தமிழர்களைப் போலவே மற்ற தென்னிந்தியர்களும் பெங்காலிகளும் நிறைய இருக்கிறார்கள். மேலதிக விவரங்களை தொடரின் மற்ற பகுதிகளில் அவ்வப்போது சொல்லிச் செல்கிறேன். புஷ்பராஜ் எங்களை நேராக போர்ட் Bப்ளேயரில் தங்கப் போகும் இடத்திற்கு அழைத்துச் சென்றார் – அந்த இடம் ஹோட்டல் கவிதா ரீஜெண்ட். நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த இந்த இடம் தான் பயணத்தின் முதல் இரண்டு இரவுகளும் கடைசி இரண்டு இரவுகளும் நாங்கள் தங்கப் போகும் இடம். 



தங்குமிட உரிமையாளர் கூட தமிழர் தான். வரவேற்பரையில் இருந்த நர்த்தன சிவபெருமான் வித்தியாசமாக இருந்தார்.  மொத்தம் ஏழு அறைகளை எங்களுக்காக ஒதுக்கி இருந்தார்கள் – நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு பெரிய அறையும், மற்றவர்களுக்கு நடுத்தர அளவிலான அறையும் கிடைத்தது. தனிக்காட்டு ராஜாவான எனக்கும் தனி அறை! அவரவர் அறையில் உடைமைகளை கொண்டு வைத்த உதவியாளருக்கு நன்றி சொன்னோம்.  எல்லோரும் அவரவர் அறைக்குச் செல்ல நான் வரவேற்பரையில் இருந்த பதிவேட்டில் பதிவு செய்த பிறகு எனது அறைக்குச் சென்றேன்.  குளித்து தயாரான பிறகு அன்றைக்கு பார்க்க வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.  புஷ்பராஜ் எங்களிடம் பயண நிறுவனத்தின் உரிமையாளர் சுமந்த் எங்களைப் பார்க்க, சிறிது நேரத்தில் வருவார் எனச் சொல்லி தயாராக இருக்கச் சொன்னார்.  கூடவே மதிய உணவினை தங்குமிடமான கவிதாவிலேயே முடித்துக் கொள்ளலாம் எனச் சொல்ல உணவிற்கான ஏற்பாடு செய்யவும் சொல்லி விட்டு எனக்கான அறைக்குச் சென்றேன்.



ஹோட்டல் கவிதா ரீஜெண்ட் – மொத்தம் 20 அறைகள் கொண்ட ஒரு தங்குமிடம். அருகிலேயே வீர ஆஞ்சனேயர் கோவில், கடைவீதி (அபெர்தீன் பஜார்), உணவகங்கள் என அனைத்தும் உள்ள இடம் – போர்ட் Bபிளேயர் நகரிலுள்ள, ராஜீவ் காந்தி நகர் என்ற பகுதியில் இருக்கிறது. நல்லதொரு இடம் – ஏதாவது தேவை எனில் பக்கத்திலேயே கடைவீதி இருப்பது நல்ல விஷயம்.  அதுவும் இந்த மாதிரி பயணம் வரும்போது நிச்சயம் குழுவினரில் யாராவது எதையாவது எடுத்து வர மறந்திருப்பார்கள் – பேஸ்ட், பிரஷ், சோப் என ஏதாவது மறந்திருக்கும்! கடை வீதி இல்லாத இடங்கள் எனில் அதற்காக நீண்ட தூரம் நடந்து செல்ல  வேண்டியிருக்கும். இந்த மாதிரி கடைவீதி அருகே தங்குமிடம் இருப்பது நல்லது.  ஏற்கனவே இந்தத் தங்குமிடத்தின் அருகே இருக்கும் ஒரு சாலையோர உணவகம் பற்றியும் அந்த உணவகத்தினை நடத்தும் உழைப்பாளியான திரு சிங்காரம் அவர்கள் பற்றியும் சிங்காரம் சரக்கு நல்ல சரக்கு என்ற தலைப்பு கொண்ட பதிவில் எழுதி இருக்கிறேன். நகரில் நிறைய தங்குமிடங்கள் உண்டு – குறைந்த பட்சம் நாள் வாடகையாக ஆயிரம் ரூபாயிலிருந்து அதிக பட்சமாக பதினைந்தாயிரம் வாங்கும் தங்குமிடங்கள் கூட இங்கே உண்டு. கவிதா ரீஜெண்ட் அறை ஒன்றிற்கு நான்காயிரம் வரை வாங்குகிறார்கள்.  எங்கள் குழுவினருக்காக மொத்தமாக பயண நிறுவனம் மூலமே முன்பதிவு செய்து விட்டதால் அறைக்கென்று தனியாக நாங்கள் தரவேண்டியதில்லை.



தங்குமிடம் பற்றிய தகவல்கள் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.  சிறிது நேரத்தில் சுமந்த் வந்து சேர, குழுவினர் அனைவரும் தங்குமிட வரவேற்பரையிலும் பக்கத்தில் இருந்த உணவகத்திலும் ஒன்று சேர்ந்தோம். அன்றைய திட்டத்தினையும், வரும் நாட்களுக்கான திட்டங்களையும் மீண்டும் ஒரு முறை எங்களுக்காக விளக்கினார். திட்டங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் முன்கூட்டியே சொல்லிவிடுவதாகவும் சொல்லியவர் எங்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லி அங்கிருந்து புறப்பட்டார்.  சுமந்த் அவர்களும் அரசு உத்தியோகத்தில் இருந்தவர் தான் என்றும் அதனை விட்டு இந்த பயண நிறுவனத்தினை துவங்கி அதை நடத்தி வருகிறார் என்பதையும், அவரது மனைவியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தான் என்பதும் கூடுதல் தகவல்.  சுவையான மதிய உணவினை முடித்துக் கொண்டு அனைவரும் தயாராக, எங்களுக்கான வாகனமும் வந்து சேர்ந்தது – அதே டெம்போ ட்ராவலர் தான்.



பதினெட்டு பேரும் ஒன்றாக பயணிக்க முடிந்தது நல்ல விஷயம் – முதலில் எங்களுக்கு  7 இருக்கைகள் கொண்ட மூன்று வண்டிகளைத் தருவதாகத் தான் சொல்லி இருந்தார்.  அப்படிச் செல்கையில் குழுவினர் தனித்தனியாக ஆகிவிடுவோம் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது – பயணத்தில் இப்படித் தனித்தனியாக இருப்பது அவ்வளவு சரியல்ல! மொத்த பயணமும் இரசிக்கும்படி அமைவதற்கு இப்படி ஒரே வண்டியில் பயணிப்பதே சாலச் சிறந்தது.  எங்கள் குழுவினர் உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்ற இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பதையெல்லாம் வருகின்ற பதிவில் சொல்கிறேன். அது வரை காத்திருக்கலாமே!

சரியா?  நண்பர்களே, இந்த நாளின் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

32 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான ஆரம்பம். தொடர்கிறேன்.

    விமானப்பயணம் - சின்ன வயதின் பல சுவாரஸ்யங்கள் பின்னர் மாறி விடுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ன வயதின் ஸ்வாரஸ்யங்கள் - மாறிக் கொண்டே இருக்கிறது விருப்பு வெறுப்புகளும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஒரே வண்டியில் பயணம் சிறந்தது... உண்மை... பதட்டம் இருக்காது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனித்தனி வண்டிகளில் செல்வதில் குழுவினர் பிரிந்து அவரவர் வழி செல்லும் வாய்ப்பு இருக்கிறது தான் தனபாலன். பதட்டம் இல்லா பயணம் நல்லது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஆம் ஒரே வண்டிதான் நல்லது சுவாரஸ்யமாக இருக்கிறது தொடர்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் ஸ்வாரஸ்யமாக உங்களுக்கும் இருப்பதில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. இனிமையான பயணத்தில் நீங்களும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  5. நானும் உங்களோட பயணிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் உடன் பயணிப்பதில் மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  7. உங்களுடன் இணைந்து பயணிக்கும் உணர்வு. அந்தமானைக் காணும் வாய்ப்பு உங்கள் மூலமாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடன் நீங்களும் இணைந்து பயணிப்பதில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. ஆஹா... நீங்களும் உடன் பயணிப்பதில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. வர வர தமிழ் டிவி சீரியல் மாதிரி பதிவு எழுத ஆரம்பிச்சிட்டீங்க. டெல்லியில் புறப்பட்டு பிளேனில் அந்தமான் செல்லவே மூன்று நாள் ( பதிவுகள்).  போதாதற்கு ஒவ்வொரு பதிவின் முடிவிலும் ஒரு ட்விஸ்ட். உதாரணம் என்ன சாப்பிட்டேன் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போமோ?  Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் சீரியல் மாதிரி பதிவு - ஹாஹா... பயணம் என்று செல்லும்போது பல விஷயங்களைச் சொல்லிச் செல்வது எனது வழக்கமாக இருக்கிறது.

      ”அந்தமான் சென்று நிறைய இடங்கள் பார்த்து வந்தேன்” என ஐந்தே வார்த்தைகளில் எழுத இது டிவிட்டர் இல்லை ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      விவரங்கள் சிலருக்காவது உதவும் என்பதால் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
  10. பயண அனுபவங்கல் மிக அருமை. நிறைய குறிப்புகள் பயணம் செய்பவர்களுக்கு வசதியாக கொடுத்து இருக்கிறீர்கள்.
    விமானம் சிறு வயதில் மகிழ்ச்சியை கொடுத்தது . இப்போதும் விமானசத்தம் கேட்டால் அன்னாந்து பார்ப்பது உண்டு. நீண்ட தூரம் பயணம் செய்ய முடியவில்லை, அலுப்பாக இருக்கிறது.

    பயணத்தை தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமானத்தில் நீண்ட தூர பயணம் அலுப்பானது தான். இப்போதெல்லாம் தில்லி சென்னை பயணம் கூட அலுத்து விடுகிறது கோமதிம்மா...

      பயணத்தில் நீங்களும் தொடர்வதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  11. எனக்கும் விமான பயணம் அத்தனை ரசிக்காது.
    தங்குமிடத்தைப் பற்றி விவரமாக பயணுள்ள குறிப்புகள் கொடுத்து நிதானமாக தொடங்கியிருக்கிறீர்கள். உங்களைத் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக் குறிப்புகள் சிலருக்காவது பயன்படுமே என்பதால் இங்கே பகிர்ந்து இருக்கிறேன் பானும்மா...

      பயணத்தில் நீங்களும் தொடர்வதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  12. விரிவான தகவல்களுடன் பயணம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் சிலருக்காவது பயன்படும் என்றே நம்புகிறேன் மாதேவி.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    நான் விமான பயணம் நான்கு தடவைகள் (போக வர என) இந்தியாவுக்குள் பயணிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது.( நீங்கள் சொன்ன மாதிரி சிறு வயதில் "உயரத்தில் பறக்கும் இந்த பயணம் நமக்கு கிடைக்குமா?" என்ற கனவுகளில் இருந்தேன்.) இப்போது போதுமென்று திருப்தி வந்து விட்டது.

    அழகான உபயோகமான விபரங்களுடன் பயணக்கட்டுரை அமைதியாக தங்கள் பாணியில் பயணிக்கிறது. உங்கள் கட்டுரையில் கவனம் செலுத்தி படிக்கும் போது உங்களுடன் நீங்கள் செல்லும் இடங்களுக்கு சென்று வந்த திருப்தியும் எனக்கு கிடைத்து விடும், அதனால் நானும் உங்களுடன் அந்தமான் சுற்றிப்பார்க்கப் போகிறேன். தொடருங்கள். தொடர்ந்து படித்திட ஆவலுடன் இருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் விமானப் பயணம் கொஞ்சம் ஆர்வத்துடன் இருந்தாலும், பயணிக்கப் பயணிக்க அலுக்க ஆரம்பித்து விடும் தான் கமலா ஹரிஹரன் ஜி. சமீப வருடங்களில் பல முறை விமானத்தில் பயணித்து விட்டேன். பயணம் பிடிக்கிறதோ இல்லையோ சில பயணங்களை செய்தே தீர வேண்டிய கட்டாயமும் எனக்கு இருக்கிறது.

      பயணத்தில் தொடர்ந்து நீங்களும் வருவதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  14. அட! வாவ்! ஆரம்பக் கவிதையே உற்சாக சிறகுகளை விரித்தது.

    நிஜமாலும் தான்! சைக்கிள் டயர் ஓட்டியபடியே விமானம் துறத்திய பருவம் நினைவில் மீண்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்பத்தில் தந்த கவிதை - படித்த போது மனதில் ஒட்டிக் கொண்டது - பொருத்தமாக இருக்கும் என்பதால் இங்கேயும் ஜீவி ஜி.

      சைக்கிள் டயர் ஓட்டிய பருவம் - அதில் தான் எத்தனை மகிழ்ச்சி இல்லையா!

      நீக்கு
  15. அது எதனாலோ தெரியவில்லை; சுமந்த் ஒரு கதாநாயகன் கெட்-அப்பில் மனசில் விரவியிருந்தார்.. ஒரு ஆள் தானே என்று லேசாக பால்மாறாமல் நாலாயிரம் வாடகை உள்ள தனி அறையை வேறு சுணங்காமல் ஏற்பாடு செய்திருக்கிறார்! அவரே உங்களுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும்.. அவரை முதன் முதலாகப் பார்க்கிறீர்கள்.. அந்த எதிர்பார்ப்பை நான் எதிர்பார்த்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுமந்த் ஒரு கதாநாயகன் கெட்-அப்பில்! :) நிறைய முறை அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம் - பயண ஏற்பாடு சமயத்தில்! பயண ஏற்பாடுகளில் யாரும் குறை சொல்லிவிடக்கூடாது என்பதில் தான் எங்கள் அதிக கவனமே இருந்தது ஜீவி ஐயா.

      திரு சுமந்த் அவர்களும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார். எல்லா இடங்களிலும் எதற்கும் நாங்கள் காத்திருக்கவோ, பதட்டம் அடையவோ தேவை இல்லை இந்தப் பயணத்தில் - அனைத்தும் திரு சுமந்த் அவர்கள் கவனித்துக் கொண்டதில் எந்தத் தடங்கலும் இல்லாமல் போனது.

      தொடர்ந்து பயணம் பற்றி மேலும் சொல்கிறேன்.

      நீக்கு
  16. தங்கும் இடம் மட்டும் நன்றாக அமைந்துவிட்டால் நன்றாக ஊர் சுற்றலாம்.. தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் மலையப்பன். தங்குமிடம் மிகவும் முக்கியம் - அதுவும் குடும்பத்துடன் செல்லும்போது அதி முக்கிய விஷயம் ஆகிறது!

      தொடரின் முதல் இரண்டு பகுதிகளை படித்து கருத்துரைத்தமைக்கு நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....