வியாழன், 26 மார்ச், 2020

கொரோனா டைரிக் குறிப்புகள்…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

கடைசி காலத்திற்குத் தேவைப்படும் என்று ஓடி ஓடி உழைக்கிறோம் – எது கடைசி காலம் என்று தெரியாமலேயே…


***

வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்…

எங்கே பார்தாலும் கொரோனா பற்றிய செய்திகள் தான் – அங்கே இப்படி ஆயிடுச்சு, இங்கே அப்படி ஆயிடுச்சு என எதையாவது பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள் – முகநூல், வாட்ஸப் என பல வழிகள் செய்திகள் வந்த வண்ணமே இருக்கிறது.  நான் மிகவும் குறைவான வாட்ஸ் அப் குழுக்களில் தான் இருக்கிறேன் – பெரும்பாலான குழுக்களில் சென்ற சில நாட்களாகவே இந்த தகவல்கள் தான் அதிகம் வருகின்றன – அதுவும் ஒரே செய்தியை பலரும் பல்வேறு குழுக்களுக்கும் அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள் – செய்தியின் நம்பகத் தன்மை பற்றிய கவலையே யாருக்கும் இல்லை – உண்மையாக இருக்கும் என்று நம்பி, எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்! முகநூலிலும் மெத்தப் படித்தவர்கள் கூட செய்தி உண்மையா பொய்யா என்பது தெரியாமல் தகவல்களை பரிமாறிக் கொண்டே இருக்கிறார்கள்.  வீட்டில் சும்மா இருங்கள் என்று சொன்னால், உலகம் முழுவதும் இணைய வழி சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள் – தில்லி நகரில் இப்படி நடந்தது என்று எனக்கே சில தகவல்கள் வந்தது – அதுவும் எங்கள் பகுதியிலேயே – அப்படி ஒன்று நடக்கவில்லை என்று சொன்னாலும் நம்புவதில்லை – “வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்” என்ற சினிமா நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது! கொஞ்சம் நாளைக்கு வாட்ஸ் அப் பார்க்காமலேயே இருக்கணும் போல இருக்கு!

எங்க பொழைப்பு எப்படி இருக்கப் போகுதோ?

இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு திங்கள் அன்று அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது – எங்களுக்கு விடுமுறை இல்லை – 50 சதவீதம் பேர் வந்தால் போதும் என்று சொன்னாலும் எங்கள் அமைச்சகம் அதனை அனுமதிக்க தயாராக இல்லை – மெட்ரோ, பேருந்துகள், ஆட்டோ எதுவும் 31 மார்ச் வரை இயங்காது என்று அறிவித்திருந்தாலும் எங்களுக்கு விடுமுறை இல்லை.  காலையில் 07.30 மணிக்கே, அலுவலக அதிகாரியின் அழைப்பு வேறு! அலுவலகம் வந்து இந்த இந்த வேலைகளை முடிக்க வேண்டும் எனக் கட்டளை!  காலையில் கொஞ்சம் காத்திருந்த பிறகு கிடைத்த ஆட்டோவில் ஏறிக் கொண்டு அலுவலகம் சென்றேன் – ”ஆட்டோ ஓட்டக் கூடாதுன்னு அரசாங்கம் சொல்லிடுச்சு… சி.என்.ஜி. கிடைக்குமோ கிடைக்காதோன்னு இன்னிக்கு ஃபில் பண்ண வந்தேன் – வண்டியை வீட்டில் நிறுத்தி வைச்சுருந்தா பேட்டரி டவுன் ஆகிடும். அப்புறம் அதுக்கு வேற செலவு பண்ணனும்… பத்து நாளைக்கு வண்டி ஓடாதுன்னா நாங்கள்லாம் என்ன பண்ணறதுன்னு தெரியல! ஒவ்வொரு நாளும் வண்டி ஓட்டினா தான் சாப்பாடு! அரசாங்கம் எங்க கணக்குல ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் போட்டா நல்லாருக்கும்! வேலை செய்யாம வீட்டிலேயே இருந்துடுவோம்…”  என்ன பதில் சொல்வது என்று எனக்கு புரியவில்லை. எங்களையே வீட்டுல இருக்கச் சொன்னா இருந்துடுவோம்! ஆனா போய் தானே ஆக வேண்டியிருக்கு!

சுத்தமான கைகள் சுகாதாரத்திற்கு வழிவகுக்கும்…



முடிந்த வரை வெளியே செல்லாமல் வீட்டுக்குள் இருப்பது நல்லது. அப்படியே வெளியே சென்று வந்தால் உடனடியாக கைகளையும் கால்களையும் சுத்தம் செய்து கொள்வது நலம்.  ஒரு குளியல் போட்டு விடுவது அதனினும் நலம்.  இந்தச் சமயத்தில் மகள் வரைந்த ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு! கூடவே சுத்தமான கைகள் பற்றிய விளம்பரம் இரண்டு – பல வருடங்களாகச் சொல்லி வந்தாலும் நம் மக்களுக்குப் புரிவதே இல்லை! பாருங்களேன் – ஐந்து வருடங்களுக்கு முன்னரே இந்த விளம்பரங்கள் வந்திருக்கின்றன – ஆனாலும் இதைச் செயல்படுத்துபவர்கள் குறைவு என்பதை வருத்தத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.






மாமு எங்கே சுத்தறீங்க?

திங்கள் அன்று அலுவலகம் சென்று செவ்வாய் ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்துக் கொண்டேன் – அதற்குள் அலுவலகத்தில் அறிக்கை – எங்களுடைய அலுவலகப் பணி – அத்தியாவசியப் பணி என்பதால் விடுமுறை எடுக்கக் கூடாது என்று உத்தரவு. இன்று விடுமுறையில் இருப்பதால் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கி வைத்து விடலாம் என அரசு நடத்தும் Kendriya Bhandar கடைக்குச் செல்ல வீட்டை விட்டு இறங்கினேன்.  வீதியில் எங்கும் நிசப்தம்.  சில காவல்துறை நண்பர்களும் பாரா மிலிட்டரி ஊழியர்களும் காவலில் ரோந்துப் பணியில் இருக்கிறார்கள்.  கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்த சிலரை துரத்தி அடித்தனர்.  நான் பையுடன் நடந்து கொண்டிருந்தேன் – எதிரே வந்த பாராமிலிட்டரி ஊழியர் “என்ன மாமா… ஊரடங்கு உத்தரவு இருக்கே, இப்படி வெளியே சுத்தறீங்களே?” என்று சிரித்தபடியே கேட்க, பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்புவேன் என்று சொன்னதோடு, ”உங்களைப் போலவே எங்களுக்கும் பணி உண்டு – நாளை முதல் அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் இந்த முன்னேற்பாடு!” என்று சொல்ல, சீக்கிரம் வீட்டுக்கு போங்க, நாளை என்ன நடக்குமோ பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பினார்.  திரும்பி வரும்போது ஒரு சர்தார்ஜி – பாராமிலிட்டரி காவலர் – அவரும் பேசினார் – இந்தப் பிரச்சனை விரைவில் தீரட்டும் என்று.   

அலுவலகம் சென்று வருகிறேன் – வேறு வழியில்லை – பிரச்சனைகளுக்கு இடையில் இப்படி ஊழியம் செய்து தான் ஆக வேண்டும் – நம் தேசத்தின் மிகப் பெரிய பிரச்சனையை நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம் – விரைவில் பிரச்சனைகள் விலகட்டும் – பிரார்த்தனை செய்வதைத் தவிர இப்போதைக்கு செய்ய முடிந்தது – வீட்டிற்குள் இருப்பது – எங்களைப் போன்றவர்களை விடுங்கள் – வீட்டில் இருக்க முடிந்தவர்கள் கண்டிப்பாக வெளியே வர வேண்டாம்! இது உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் நல்லது, அனைவருக்கும் நல்லது! 

***

நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

40 கருத்துகள்:

  1. வாசகம் அருமை.   எங்களுக்கும் பணி உண்டு.  அதே போக்குவரத்துப் பிரச்னை இங்கு பெரிய பிரச்னை.  அரசு விடும் பொது ஊர்தியின் நேரம் ஒத்துவரவில்லை.  ஒருநாளைக்கு சென்று வரும் செலவே ஆயிரத்தைத் தொடும் போல இருக்கிறது.  லீவும் எடுக்கக் கூடாது என்கிற கட்டளையும் வந்திருக்கிறது.  குறைந்த ஊழியரை வைத்து வேலை செய்யலாம் என்றால் கூடுதல் செயலாளர் வரக்கூடும் என்று பயமுறுத்துகிறார்கள்.  அரசாங்கமே அறிவுறுத்துவதுதானே எனும் கேள்விக்கு விடையில்லை.  நீங்கள் ஆட்டோக்காரரிடம் சொல்வது போல வீட்டிலேயே இருந்துவிடுங்கள் என்றால் மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக இருந்துவிடலாம்தான்.  பயத்துடன் நகரப்போகும் நாட்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      ஆமாம் உங்களுக்கும் பணி உண்டு என்று யோசித்தேன். போக்குவரத்து பிரச்சனையாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் அலுவலகத்தில்! நேற்று பெரிய பட்டியல் வந்தது - வாட்ஸப் வழி. வந்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள் சிலரை. இன்றைக்கு அலுவலகம் போகப் போவதில்லை. அழைப்பு வந்தால் போகலாம் என வீட்டில் இருக்கிறேன்.

      இதுவும் கடந்து போகும் எனும் நினைவோடு நாட்கள் மெல்ல மெல்ல நகர்கின்றன. நலமே விளையட்டும். நீங்களும் கவனமாக இருங்கள்.

      நீக்கு
    2. எனக்கு டாக்டர்ட்ட போகணும். அதுக்கே இன்று போக முடியலை. என்ன மாதிரியான செக்கிங் வழில இருக்கும் என்ற uncertaintyதான். ஓலா ஊபர் லாம் சர்வீஸ் கிடையாது. எங்க வளாகத்துக்குள்ள காய்கறிகள் பழங்கள் வாரமிருமுறை வருது. இப்போ காய் வாங்கி பில் போட கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகிறது. (ஒவ்வொருவரும் ஒரு மீட்டர் இடைவெளில நின்னு.... பில் போடறவன் மெதுவா போட்டு... பயத்துல நிறைய பேர் அதிகமா பர்சேஸ் பண்ணி என்று)

      நீக்கு
    3. மருத்துவரிடம் போவதில் பிரச்சனை இருக்காது என்றே தோன்றுகிறது. வளாகத்திற்குள் வருபவரிடம் காய்கறி வாங்கிக் கொள்வது நல்லது. எங்களுக்கு கொஞ்சம் தூரம் நடந்து சென்று தான் வாங்க வேண்டும் - அரசு நடத்தும் கடை உண்டு. அதிகமாக வாங்குபவர்கள் - இங்கேயும் உண்டு - நேற்று ஒரு ஆள் 25 கிலோ கோதுமை மாவு வாங்கினார்! ரேஷன் நடைமுறை வந்து விடும் எனத் தோன்றுகிறது நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    4. வெங்கட் - நானும் ஆட்டா மாவு பிராண்டட் என்ன இருக்குன்னு அருகில் இருக்கும் டெலிவரி கடையில் போன் பண்ணினபோது, அவர், 10 கிலோ பாக்கெட்தான் இருக்கு என்றார். அப்புறம் 5 கிலோ பாக்கெட் இரண்டு வேறு ஒரு கடையில் வாங்கினேன் (மார்ச் ப்ரொடக்‌ஷன் தேதி என்பதால்).

      மனசுக்குள் மெலிதான பயம்... சாமான்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்று... வெளியில் போய் வாங்க முடியுமோ முடியாதோ, தட்டுப்பாடு வருமோ என்றெல்லாம் தோன்றுகிறது. விஷயம் தெரிந்தவர்களுக்கே இந்த எண்ணம் இருக்கும்போது சாதாரண ஜனங்களுக்கு கூடுதல் பயம் இருக்கும்.

      இங்கு 10 ரூபாய் அல்லது 12 ரூபாய்தான் 1 வாழைக்காய். கடைகளில் கிலோ 50 ரூபாய் இருக்கும். நேற்று, ஒரு வாழைக்காய் 20 ரூபாய், அனேகமா எந்தக் காயும் 1/4 கிலோ 15-20 ரூபாய் என்று விற்றார்கள் (செளசெள போன்றவை கிலோ 20 ரூபாய்தான். ஆனால் இப்போ விலை அதிகமாகிவிட்டது). வியாபாரிகளும் இதான் சாக்கு என்று லாபம் சம்பாதிக்கப் பார்க்கிறார்கள்.

      ஒருவருக்கு 2 கிலோதான் என்று சொல்லிவிட்டால், பயத்தில் விராட்டி எனக்கும் 2 கிலோ கொடுத்துவிடு என்று எல்லோரும் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

      நீக்கு
    5. இன்று இப்பொழுது தான் கடை வீதிக்குச் சென்று காய்கறி, ஆட்டா போன்றவை வாங்கி வந்தேன். இன்றைக்கும் சிலர் நிறைய நிறைய வாங்கிக் கொன்ண்டு இருக்கிறார்கள். எல்லோரும் ஒரு வித பயமுடன் தான் இருக்கிறார்கள். காய்கறி விலை குறைவாகவே, எப்போதும் போலவே இருக்கிறது - கால் கிலோ 10 ரூபாய் என்ற விலையில் கிடைக்கிறது. இன்றைக்கு எனக்கு கேரட், வெள்ளரி, சுரைக்காய், கோஸ், உருளை, வெங்காயம் போன்றவை கிடைத்தது. தினமும் காலை இரண்டு மணி நேரமும் மாலை இரண்டு மணி நேரமும் காய்கறி கடைகள் திறந்திருக்கும் என தெரிந்தது.

      காலை, மாலை நேரங்களில் பால், தயிர் போன்றவையும் கிடைக்கிறது. இதுவரை பிரச்சனை இல்லை நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    6. ஸ்ரீராம் உங்களுக்கு கன்வேயன்ஸ் எதுவும் அரசு ஏற்பாடு செய்யாதா? அல்லது அதற்கு எக்ஸ்ற்றா செலவுக்கேனும்? போக்குவரத்து இல்லாமல் என்ன செய்ய முடியும்? அதுவும் இப்போதைய சூழலுக்கு 4 5 பேர் சேர்ந்து செல்லவும் முடியாதே...வாரத்தில் சுழற்சி முறையில் கூட வரச் சொல்லலாம் இல்லையா? முடியாதோ? கஷ்டமோ எசென்ஷியல் செர்வீஸ் என்பதால்..

      கஷ்டம் தான்.

      வெங்கட்ஜிக்கும் இதே கேள்வி..

      கீதா

      நீக்கு
    7. ஏரியா வாரியாக ஓரொரு பஸ் விட்டிருக்கிறார்கள்.  அது கிளம்பும் நேரம் நமக்கு ஒத்துவராது.  அது மட்டுமல்லாது அதில் ஏறும் கூட்டத்தைப் பார்த்தால் நமக்கு மனதுக்குள் பயம் வருகிறது.  போலீஸின் கெடுபிடி கொஞ்சம் ஓவராகவும் இருக்கிறது சில இடங்களில்.

      நீக்கு
    8. சுழற்சி முறையில் வரச் சொல்லலாம் - அப்படித்தான் சில அலுவலகங்களில் - ரோஸ்டர் போட்டு இருக்கிறார்கள். எங்கள் அலுவலகத்திலும் அதையே செய்யச் சொன்னோம். ஆனால் சில பிரிவுகளின் ஊழியர்களை முழுவதும் அழைத்திருக்கிறார்கள் கீதாஜி. வாகன ஏற்பாடு செய்யலாம் - ஆனால் அனைவருக்கும் அனுப்ப மறுக்கிறார்கள். 25% பேருந்துகள் ஓடுகின்றன என்பதால் அதில் வரலாமே என்கிறார்கள்.

      நீக்கு
    9. இங்கே அரசின் பேருந்துகள் 25% ஓடுகின்றன ஸ்ரீராம். பெரும்பாலும் காலியாகவே இருக்கிறது. ஆனால் வரும் நேரம் தெரியாததால் நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருக்கிறது - அதற்குள் நான்கு ஐந்து முறையாவது ரோந்து செல்லும் காவலர்கள் கேள்வி கேட்கிறார்கள். கேட்காமல் நேரடியாக பலம் பிரயோகித்தால் என்னாவது என்ற எண்ணமும் மனதுக்குள் வராமல் இல்லை.

      நீக்கு
  2. அரசு முடிந்த அளவு வேலை செய்கிறது ஆனால் மக்களின் ஒத்துழைப்பு 80% இல்லை ஜி

    இதன் விபரீதங்கள் இன்னும் புரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலருக்கு இது ஏதோ விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது - எரிகிற கொள்ளியில் பீடி பற்ற வைக்கப் பார்க்கும் அரசியலும் நடக்கிறது இங்கே! மக்கள் ஒத்துழைத்தால் அன்றி இந்தப் பிரச்சனை விலகப் போவதில்லை - பிரச்சனையின் தீவிரம் உணர்ந்து நடந்து கொள்ளாத போது அடி உதை தான் மேல் என காவல்துறை நினைத்துவிட்டால் விபரீதம் அதிகரிக்கும்.

      நலமே விளையட்டும் கில்லர்ஜி.

      நீக்கு
  3. மக்களுக்கு விபரீதம் இன்னும் புரியவில்லை.பயத்துடன் நகருகிறது நாட்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயத்துடன் நகரும் நாட்கள் - சரியாகச் சொன்னீர்கள் ரமணி ஜி.

      நலமே விளையட்டும் - நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு
  4. //சீக்கிரம் வீட்டுக்கு போங்க, நாளை என்ன நடக்குமோ பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பினார். // - உண்மை. ஒவ்வொரு தினமும் என்ன நடக்குமோ, எந்த மாதிரியான சூழல் ஏற்படுமோ என்ற எண்ணத்திலேயே வாழ வேண்டியிருக்கு. எங்கு போய் முடியும் என்று தான் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி உண்மையானவன்.

      எங்கு போய் முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பார்க்கலாம் என்ன தான் நடக்கும் என!

      நீக்கு
  5. இங்கும் வெளியில் சர்வசாதாரணமாக செல்கிறவர்களைப் பார்த்தால், பயம் அதிகமாகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - அவர்களுக்கு இப்போது இருக்கும் சூழல் புரியவே இல்லையோ? அல்லது புரிந்தும் அசட்டு தைரியத்தில் சுற்றுகிறார்களா?

      அவர்களால் மற்றவர்களுக்கும் தொல்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டால் தான் உண்டு தனபாலன்.

      நீக்கு
  6. //ஆட்டோ ஓட்டக் கூடாதுன்னு அரசாங்கம் சொல்லிடுச்சு… சி.என்.ஜி. கிடைக்குமோ கிடைக்காதோன்னு// - இவங்க பாடு கஷ்டம்தான். 'வயிறு' என்று ஒன்று இருக்கும்போது மக்களுக்கு கொரோனாவா வேற ஏதோ..... அதைப்பற்றிக் கவலை எப்படி வரும்? (என்று எனக்குத் தோன்றுகிறது).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயிறு என்று ஒன்று இருக்கும் போது - அதே தான் நெல்லைத் தமிழன். அரசாங்கம் நிறைய விஷயங்களை இங்கே செய்து வருகிறது. விரைவில் எல்லா பிரச்சனைகளும் தீர வேண்டும்.

      நீக்கு
  7. காலை பால் மட்டும், காய்கறி வாங்க மட்டும் வெளியில் போகிறார்கள் சார். அப்புறம் வீடுதான்.
    வீட்டுவேலை செய்ய வருபவர்களை குடியிருப்பு வளாகத்தில் உள்ளே விடுவதில்லை.

    நம்மை விட வெளியில் ஆட்டோ ஓட்டினால் தான் உணவு, ரிக் ஷா ஓட்டினால்தான் சாப்பாடு என்பவர்கள் நிலை நினைத்துப் பார்க்கவே கஷ்டமாய் இருக்கிறது.

    சோப்பால் கை கழுவும் விளம்பரம் நீங்கள் சொல்வது போல் பல காலமாக வருகிறது. இரண்டு காணொளியும் பார்த்தேன்.

    கண்டிப்பாய் வேலைக்கு வர வேண்டும் என்பவர்களுக்கு ஏதாவது போக்கு வரத்து வசதி , நேரத்தில் சலுகை கொடுக்கலாம்.

    மகள் வரைந்த ஓவியம் பயனுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியிலிருந்து வீட்டு வேலை செய்ய வருபவர்களை வளாகத்தில் விடுவதில்லை - ஆமாம் கோமதிம்மா... பல குடியிருப்பு வளாகங்களிலும் இப்படித்தான் நடக்கிறது.

      பலருடைய நிலை கவலைக்கிடம் தான். விரைவில் பிரச்சனைகள் தீர வேண்டும்.

      போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் - தரலாம் - ஆனால் அத்தனை பேருக்கும் அவர்களால் செய்ய இயலவில்லை என்று சொல்கிறார்கள்.

      மகள் வரைந்த ஓவியம் - மகிழ்ச்சி மா..

      நீக்கு
  8. கட்டாயம் வேலைக்கு வர வேண்டும் என்று இருப்பவர்களை அடையாளம் காட்ட அவர்களுக்கு டனி அடையாளச்சீட்டு வழங்கலாமோ நம்மவர்கல்ள் இடுக்கண் வருங்கால் நகுக என்பது போல் நகைச்சுவை யாகவே நாட்களைக்கழிக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடையாள அட்டை - கர்ஃப்யூ பாஸ் என்று ஒன்றை தலைநகரில் அளிக்கிறார்கள். அதை வழங்குவது தில்லி காவல் படை. கூடவே அடையாள அட்டையும் கட்டாயம்.

      இடுக்கண் வருங்கால் நகுக - அதுவே பலருடைய எண்ணமுமாக இருக்கிறது ஜி.எம்.பி.ஐயா.

      நீக்கு
  9. ஜிஎம்பி சார் சொல்வது போல அடையாள அட்டை கொடுக்கலாமே.
    ஸ்ரீராம், உங்களுக்கெல்லாம் ஆட்டோ செலவு வேற ஆகிறது.
    பிரார்த்தனையியத் தவிர வெறு வழி இல்லை.
    ஓவியமும், விளம்பரப் படங்களும் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடையாள அட்டை ஏற்கனவே இருக்கிறது வல்லிம்மா... கூடவே இப்போது கர்ஃப்யூ பாஸ் என்ற ஒன்றினையும் அலுவலகம் வாங்கித் தருகிறது. அதனால் கொஞ்சம் பயமின்றி அலுவலகம் செல்ல முடிகிறது. இன்றைக்கு நான் வீட்டில் தான் இருக்கிறேன் - எப்போது அழைப்பு வருமோ என்ற எண்ணத்துடன்!

      பிரார்த்தனையைத் தவிற வேறு வழியில்லை - அதே தான் மா... நலமே விளையட்டும்.

      நீக்கு
    2. காசு ஆகிறது என்பதைவிட, பணிக்கு செல்லவேண்டுமே என்கிற கவலை அதிகமாக இருக்கிறது அம்மா...  அத்தியாவசியப்பணி...  சென்றும் ஆகவேண்டும்.  ஆட்டோ அனுமதி கிடையாது.  சொந்த வாகனம் கிடையாது.  அலுவலகத்தில் ஆட்டோவுக்கு, அல்லது சொந்த வாகனம் அல்லாதவைகளுக்கு போனபைட் சர்டிபிகேட் கிடையாதாம்...   பின் எப்படி பணிக்குச் செல்வது?

      நீக்கு
    3. பணிக்குச் செல்ல வேண்டுமே என்ற கவலை - அதே தான் ஸ்ரீராம். நடுநடுவே அலுவலகத்திலிருந்து வரும் சில அறிக்கைகள் இன்னும் கவலை அடைய வைக்கின்றன. இங்கே கர்ஃப்யூ பாஸ் கொடுக்கிறார்கள் என்றாலும் சொந்த வாகனத்திற்கு மட்டுமே அனுமதி. பணிக்குச் செல்வதற்கு கஷ்டம் தான். ஆனாலும் அழைத்தால் சென்றே ஆக வேண்டிய நிலை. ஒன்றும் செய்வதற்கில்லை ஸ்ரீராம்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. கவனமாகவே இருக்கிறேன் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  11. சென்னையில் ஒரு கிலோ வெண்டைக்காய் 200 ரூபாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஆ மயக்கம் வந்துவிட்டது ஸ்ரீராம்....யம்மாடியோவ்...இங்கு பரவாயில்லை...20,30,40 ரூ கிலோ என்று கிடைக்கிறது. கீரை 10, 15, 20 என்று கிடைக்கிறது. இதுவரை. so far so good...

      கீதா

      நீக்கு
    2. இங்கே பரவாயில்லை ஸ்ரீராம். நேற்று காய்கறி மார்க்கெட் சென்ற போது கிடைத்த காய்கள் அனைத்தும் கிலோ 40 ரூபாய்க்குள் தான். கிடைத்த வரை லாபம் சம்பாதிக்க நினைக்கும் மனிதர்கள் - என்ன செய்ய? அவர்களும் லஞ்சம் கொடுத்து கடை வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் விலையை உயர்த்தி இருக்கலாம்!

      நீக்கு
    3. ஆஹா பெங்களூரிலும் பரவாயில்லையே... தில்லியிலும் இது வரை பிரச்சனை இல்லை கீதாஜி.

      நீக்கு
  12. வெங்க்ட்ஜி இந்த கொரோனா கோவிடியட்ஸ் அடங்கினால் மட்டுமே சீக்கிரம் அதுவும் அடங்கும்.

    நல்லபழக்கவழக்கங்கள் இருந்தவைதானே தற்போதுதான் எல்லாமே தலைகீழ். காணொளிகள் மிக மிக பயனுள்ளவை தற்போதைய சூழலுக்கு.

    ஆமாம் ஜி வெளியில் மருந்து வாங்க சென்று மருந்துக் கடையில் நின்ற போது போலீஸ் ஜீப் ரோந்து வந்தது. ஆனால் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. என்னை ஒன்றும் கேட்கவில்லை. இது வீடுகள் உள்ள பகுதியில் இருந்த சிறிய மெயின் ரோடு என்பதாலோ என்னவோ. இங்கும் காய்கள், வீட்டுக்குத் தேவையான சாமான்கள் எல்லாம் இப்போது வரை கிடைக்கிறது. ஒரு வேளை அரசு போகப் போக அளவு ரெஸ்ற்றிக்ட் செய்யுமோ என்னவோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிடியட்ஸ் அடங்க மறுக்கிறார்கள் என்பதே இப்போதைய பெரும்கவலை கீதாஜி.

      வீடுகள் உள்ள பகுதியில் அத்தனை பிரச்சனை இல்லை - அலுவலகம் சென்று வரும்போது நிறைய கேள்விகள் உண்டு கீதாஜி. இதுவரை எல்லாம் நலமே...

      நீக்கு
  13. வாசகம் அருமை, ரோஷ்னியின் படமும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் ஓவியமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      நீக்கு
  14. இந்த நேரங்களில் ஊடகங்களில் வரும் செய்திகளை பார்காமல் இருப்பதே நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் இராமசாமி ஜி. ஊடகங்களில் வரும் செய்திகளை பார்க்காமல் இருப்பது தான் நல்லது.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....