அந்தமானின் அழகு – பகுதி 4
அனைத்து பதிவுலக
நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை, சுதந்திரம் பற்றி Bபாbபுராம் ஹரி என்ற
சுதந்திரப் போராட்ட வீரர் எழுதிய வரிகளுடன் ஆரம்பிக்கலாம்.
”ஓ, எனதருமைத்
தாயகமே, ஏனோ நீயும் அழுகிறாய்? இதோ முடியப் போகிறது அந்நியரின் ஆட்சியுமே! தமது மூட்டை
முடிச்சுகளை அவர்கள் கட்டிக்கொண்டிருக்கின்றனர். தேசிய அவமானமும் துரதிர்ஷ்டமும் நீடிக்காது
வெகுநாள்வரை இதோ, விடுதலைத் தென்றலும் இனிதே வீசத் தொடங்கியுள்ளது. பெரியவர், சிறியவர்,
அனைவருமே ஏங்குகின்றனர் விடுதலைக்கு. பாரதத்தின் அடிமைத்தளை அகன்ற பின்னர் இந்த ‘ஹரி’யும் அனுபவிப்பான் தனது
விடுதலையை!”
அந்தமான் என்றதும் நினைவுக்கு வருகின்ற விஷயங்களில் ஒன்று
அந்தமானின் சிறைச்சாலை – செல்லுலர் ஜெயில், காலாபானி என்ற பெயர்களினால் அழைக்கப்படும்
இந்த சிறைச்சாலை இன்றைய காலகட்டத்தில் சுற்றுலாத் தலமாக இருந்தாலும், இந்தியா சுதந்திரம்
அடைவதற்கு முன்னர் சுதந்திரப் போராட்ட வீரர்களை அடைத்து வைத்து கொடுமைப் படுத்திய இடமாக
இருந்த இடம். இன்றைக்கும் அந்த இடங்களில் அவர்கள்
கசையடி வாங்கிய போது வலியைத் தாங்கிக் கொண்டு எழுப்பிய “வந்தே மாதரம்…” கோஷங்களும்
“பாரத் மாதா கி ஜெய்!” என்ற கோஷங்களும், சற்றே கவனித்து, உணர்ந்து கேட்டால், நம் காதுகளில்
ரீங்கரிக்கக் கூடும். எத்தனை எத்தனை கஷ்டங்களை
அனுபவித்து இருக்கிறார்கள் நம் முன்னோர்கள் – அன்னிய நாட்டவரின் பிடியில் சிக்கிய நமது
தேசம் விடுதலை பெற நம் முன்னோர்கள் அடைந்த துக்கங்களும், துயரங்களும் சொல்லி மாளாதவை. எங்களது அந்தமான் பயணத்தின் போது நாங்கள் முதன்
முதலாகப் பார்க்கச் சென்றது அந்தமானின் சிறைச்சாலையை தான். தங்குமிடத்திலிருந்து வெகு அருகிலேயே சிறைச்சாலை
இருந்தாலும் பேருந்தில் சென்று செல்லுலர் ஜெயில் வாயிலில் இறங்கிக் கொண்டோம்.
அந்தமான் சிறைச்சாலை - நுழைவாயில்...
அந்தமான் சிறைச்சாலை - அணையா விளக்கு...
அந்தமான் சிறைச்சாலை - இரு பிரிவுகளுக்கு நடுவே...
இந்த சிறைச்சாலையை பார்வையிட நுழைவுக் கட்டணம் (ரூபாய்
30/-) மற்றும் காமிராவிற்கான கட்டணமும் உண்டு.
ஏற்கனவே இவை எங்கள் பயணத்திட்டத்தில் இருப்பதால் தனியாக நாங்கள் நுழைவுச்சீட்டு
வாங்க வேண்டியதில்லை – எங்களுடன் வந்திருந்த, திரு சுமந்த் அனுப்பியிருந்த நபர் பார்த்துக்
கொள்வார். நுழைவுச் சீட்டை சரிபார்த்து உள்ளே
அனுப்பிய பிறகு இடங்களை பார்வையிட்ட படியே செல்கிறோம். நாங்கள் அந்த இடங்களைப் பார்வையிட்டுக்
கொண்டிருக்கும் சமயத்தில் சிறைச்சாலை பற்றிய சில தகவல்களை உங்களுக்குச் சொல்லி விடுகிறேன்
– சிப்பாய் கலகத்தினை அடுத்து 1857-ஆம் ஆண்டிலேயே இந்த அந்தமான் தீவுகளுக்கு சிறைக்கைதிகளை
அனுப்பி வைக்க ஆங்கிலேயர்கள் ஆரம்பித்து விட்டாலும், இந்த செல்லுலர் சிறை அமைக்கப்பட்டது
பல வருடங்களுக்குப் பிறகு தான் – 1896-ஆம் ஆண்டு துவங்கிய கட்டுமானப் பணி 1906-ஆம்
வருடம் முடிவடைந்தது – பத்து ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த சிறைச் சாலையை கட்டியது யார்
தெரியுமா – அந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்படப் போகும் கைதிகளே! தனக்கான சிறைச்சாலையை
தானே அமைப்பது எவ்வளவு கொடுமை!
அந்தமான் சிறைச்சாலை - ஒரு பிரிவு... நடுவே தண்டனை மேடை...
அந்தமான் சிறைச்சாலை - இரு பிரிவுகளுக்கு நடுவே...
சிப்பாய்க் கலகத்தில் ஈடுபட்ட பலரை உள்ளூரிலேயே மரண தண்டனை
அளித்து மேலுலகத்திற்கு அனுப்பி வைத்த கொடூரர்கள் 200 கைதிகளை ஆயுள் கைதிகளாக்கி –
மரணத்திற்கு ஈடாக – அந்தமான் தீவுகளுக்கு அனுப்பி வைத்தார்கள் – அங்கிருந்து தப்பி
வருவது என்பது இயலாத காரியம் – தீவுகளிலிருந்து கடல் வழி தவிர்த்து வேறு எப்படி தப்பிக்க
முடிந்திருக்கும்? அப்படியும் கடலில் குதித்து நீந்தித் தப்பித்து விடலாம் என முயற்சித்து
மடிந்தவர்கள் பலர் உண்டு. இரண்டாவது குழுவில்
216 பேர். அடுத்தடுத்து நாடு முழுவதிலிருந்தும் அந்தமான் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள்
ஆயிரக் கணக்கில். அத்தனை பேரும் அந்தமான் தீவுகளில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்
பட்டார்கள். வேலை செய்ய மறுத்தவர்களுக்கு கசையடி, செக்கிழுத்தல் போன்ற கொடூர தண்டனைகள்
பலவும் உண்டு. தப்பித்துப் போக முயன்று கடலிலேயே
மடிந்தவர்கள் தவிர, பிடிபட்ட பலரும் உடனுக்குடன் தூக்கிலடப்பட்டார்கள். அவர்களைப் பார்த்த மற்றவர்கள் தப்பித்துப் போகவே
அஞ்சினர். ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பல கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அந்தமான் சிறைச்சாலை - இரு பிரிவுகளுக்கு நடுவே கண்காணிப்பு கோபுரம்...
அந்தமான் சிறைச்சாலை - மூன்று மாடிகள் கொண்ட ஒரு பிரிவு...
தீவுகளுக்கு அனுப்பாமல், உள்ளூரிலேயே அனைவரையும் சிறையில்
அடைத்தால் அவர்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து விடுவார்கள் எனவும், புரட்சிக் கருத்துகளை
பரப்ப முடியும் என்றும் கருதிய ஆங்கிலேயர்கள் அந்தமான் தீவுகளில் கொடுமையான செல்லுலர்
சிறைச்சாலையை அமைக்க முடிவு செய்தார்கள். அதுவும்
தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கைதிகளே அந்த சிறைச்சாலையை அமைக்க வேலை வாங்கப் பட்டார்கள். மொத்தம் 693 தனித்தனி (அ)சிறைகள் – ஒரு அறையில்
இருக்கும் நபர் அடுத்த அறையில் இருக்கும் நபரிடம்
தொடர்பு கொள்ள முடியாது! ஒவ்வொரு அறையும் 4.5 மீட்டர் X 2.7 மீட்டர் அளவு கொண்டவை.
மூன்று மீட்டர் உயரத்தில் ஒரு சிறு துவாரம்.
பலமான கம்பிக் கதவுகள் – நாதாங்கியைத் தள்ளவே தனியாகச் சாப்பிட வேண்டும் – அவ்வளவு
பெரிய நாதாங்கி – அப்படியென்றால் இரும்புக் கதவைத் திறக்க எவ்வளவு கடினமாக இருக்கும்
என்று யோசித்துப் பார்க்கலாம்.
அந்தமான் சிறைச்சாலை - அறைகளுக்கு வெளியே பாதை...
அந்தமான் சிறைச்சாலை - இரும்புக் கதவுகள்...
அந்தமான் சிறைச்சாலை - நாதாங்கி அமைப்புக்கான இடம்...
நட்ட நடுவே ஒரு பெரிய கோபுரம் – கோபுரத்திலிருந்து ஏழு
கம்பிகளைப் போல ஏழு கட்டிட வரிசைகள் – ஒவ்வொன்றிலும் மூன்று மாடிகள் – கோபுரத்திலிருந்து
அத்தனை வரிசைகளில் உள்ள அறைகளையும் கண்காணிக்க முடியும். சிறைக் கைதிகள் ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்வது என்பது நினைத்தும் பார்க்க முடியாத விஷயம் – பேசிக் கொள்வதே முடியாத
பட்சத்தில் சிறையில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை எப்படித் தெரிந்து கொள்ள முடிந்திருக்கும்
– சாவர்கர் சகோதரர்களான பாபாராவ் சாவர்கர் மற்றும் விநாயக் தாமோதர் சாவர்கர் ஆகிய இருவருமே
அதே சிறையில் இருந்தாலும் சுமார் இரண்டு வருடங்கள் வரை அவர்களுக்குத் தாங்கள் ஒரே சிறைச்சாலையில்
வெவ்வேறு அறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே தெரியாது! பல விதமான தண்டனைகள் சிறைக்கைதிகளுக்கு
வழங்கப்பட்டன என்று சொல்லி இருந்தேன். இந்த
செல்லுலர் சிறை அமைக்கும் முன்னர் தீவில் இருந்த ராம்Bபன் வகை புற்களைத் திரித்து கயிறு
செய்ய வேண்டும் – அமிலத் தன்மை கொண்ட அந்தப் புற்கள் கைகளில் பட்டவுடன் அரிப்பு துவங்கி
ஒரு நிலையில் ரத்தம் வரும்வரை சொரிந்து கொள்ள வேண்டியிருக்கும் – ரத்தமே வந்தாலும்
கயிறு திரித்தலை நிறுத்தி விட முடியாது!
அந்தமான் சிறைச்சாலை - காற்றுக்கான வழிகள்...
அந்தமான் சிறைச்சாலை - மேற்புறத்திலிருந்து கடல்...
அந்தமான் சிறைச்சாலை - மேற்புறத்திலிருந்து பாதை...
மலையைத் தகர்த்து சாலை அமைப்பது, சதுப்பு நிலங்களை சரி
செய்வது, செங்கல் சூளை வேலை என பல வேலைகள் – அத்தனையும் கடுமையான வேலைகள் தான். சிறைச்சாலையில் இருந்தாலும் சிறைக்கைதிகளுக்கு சுதந்திர
தாகம் அடங்கவில்லை. சிறைச்சாலையில் இருந்தபடியே போராட்டங்களும் நடந்தன – கொடுமையான
தண்டனைகளை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் இருந்த மஹாவீர் சிங் (பகத் சிங் உடன் இருந்தவர்)
அவர்களுக்கும் தண்டனைகள் – உண்ணாவிரதத்தினை கைவிடச் சொல்லி தண்டனைகள் – எதற்கும் கட்டுப்படாத
மஹாவீர் சிங் அவர்களுக்கு ஆங்கிலேயர்கள் கட்டாயப்படுத்தி பாலை வாயில் விட – அவருக்கு
அதுவே மரணத்தினை வரவைத்தது – கட்டாயப்படுத்தி கொடுத்த பால் அவரது நுரையீரலுக்குள் நுழைய
மூச்சடைத்து இறந்தார் மஹாவீர் சிங் – அவருக்கு அந்திமக் கிரியைகள் கூட நடத்த விடவில்லை
ஆங்கிலேயர்கள் – இறந்தவரின் உடலை அப்படியே கடலில் தூக்கி வீசி விட்டார்களாம்! எத்தனை
கொடுமைகள் இது போல!
அந்தமான் சிறைச்சாலை - மேற்புறத்திலிருந்து பாதையும் சிறைச்சாலையின் ஒரு பகுதியும்...
அந்தமான் சிறைச்சாலை - கடலில் மிதக்கும் படகு - சிறைச்சாலை மேலிருந்து...
அந்தமான் சிறைச்சாலை - கைகள் கம்பிக்குள் இருக்க கசையடி!
தற்போது சுற்றுலாத் தலமாக விளங்கும் இந்த இடத்தில் ஜெயிலின்
மேல் பகுதிக்கும் கோபுரத்தின் மேல் பகுதிக்கும் சென்று வர முடியும். மேற்புரத்திலிருந்து தெரியும் கடல் பகுதிகள் வெகு
அழகு. ஆரம்ப காலத்தில் இருந்த ஏழு பிரிவுகளில்
சில பகுதிகள் இயற்கைச் சீற்றத்தில் அழிந்து போய்விட இப்போது மூன்று பிரிவுகள் மட்டுமே
நிலைத்திருக்கின்றன. நாங்களும் கோபுரத்தின்
குறுகிய படிக்கட்டுகள் வழி மேல் பகுதிக்குச் சென்று கடலையும் இயற்கை எழிலையும் படங்களாக
சிறைபிடித்து வந்தோம். குறுகிய படி வழி இறங்கும்போது குழுவில் ஒருவர் தடுமாறி படிக்கட்டுகளில்
சரிந்து விழ சில நிமிடங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி. நல்ல வேளையாக அவருக்கு, பெரிதாக அடி எதுவும் படவில்லை. பயணத்தின் ஆரம்ப நாளிலேயே அவருக்கு அடி பட்டிருந்தால்
மொத்த சுற்றுலாப் பயணத்திலும் சிரமப்பட்டிருப்பார் – அவரால் சுற்றுலாவினை நன்றாக ரசித்திருக்க
முடியாது. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பயணம்
நல்லபடியாக முடிவடைய துணையிருந்த எல்லாம் வல்லவனுக்கு நன்றி!
அந்தமான் சிறைச்சாலை - எதிர்புற பூங்காவில் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் முழு உருவச் சிலை...
அந்தமான் சிறைச்சாலை - சிறைச்சாலையின் மேல்புறத்தில் நான்!
சிறைச்சாலைக்கு எதிரே வீர் சாவர்கர் பூங்காவும் உண்டு.
அங்கே சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான சிலைகள் வைத்திருக்கிறார்கள். பூங்காவிலிருந்து
சிறைச்சாலையையும், கடலையும் பார்க்க முடியும். சிறைச்சாலை நோக்கி அமர்ந்தால் சிறை பற்றிய
விவரங்கள் மனதில் அலைமோத, கடல் பக்கம் நோக்கி அமர்ந்தால் உண்மையான அலைகள் கரையில் மோதி
திரும்புவதைப் பார்க்கலாம். சிறைச்சாலை பற்றிய
மேலதிக விவரங்கள் உண்டு, அவை வேறு ஒரு பதிவில் தருகிறேன். நீண்ட நேரம் சிறைச்சாலையில் இருந்து நிழற்படங்கள்
எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம் – மீண்டும் சிறைச்சாலைக்கு ஒரு பயணம் உண்டு
– அதற்குரிய நேரம் அப்போதில்லை என்பதால் நடுவில் இருக்கும் நேரத்தில் வேறு ஒரு இடத்தினைப்
பார்த்து விட வேண்டும் என்பது எங்களுக்கான திட்டமாக இருந்தது. அந்த இடம் என்ன? அங்கே
என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
நண்பர்களே, இந்த
நாளின் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும்
ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
எவ்வளவு கொடுமையான ஒரு சிறைச்சாலை. என் சகோதரர் இந்த சிறைச்சாலை பற்றிய ஒரு உதகம் சமீபத்தில் வாங்கிப்படித்துக் கொண்டிருக்கிறார். அவர் படித்த பிறகு அதை நான் படிக்கவேண்டும்.
பதிலளிநீக்குசிறைச்சாலை பற்றிய புத்தகங்கள் சில உண்டு ஸ்ரீராம். நானும் ஒரு புத்தகம் படித்தேன். நீங்களும் படித்த பிறகு புத்தகம் பற்றிச் சொல்லுங்கள். கிடைத்தால் நானும் வாங்கிப் படிக்கிறேன்.
நீக்குகமெண்ட் மாடரேஷன்? ஏன்?
பதிலளிநீக்குசென்ற வாரத்தில் நிறைய ஸ்பேம் கருத்துரைகள் - அதனைத் தவிர்க்கவே மாடரேஷன். சில நாட்கள் காத்திருந்து எடுத்துவிடுவேன் ஸ்ரீராம்.
நீக்குவணக்கம் ஜி
பதிலளிநீக்குசிறைச்சாலை விடயங்களை படிக்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.
சகோதரர்கள் இருவருமே ஒரே இடத்தில் இருப்பது தெரியாமல் வாழ்ந்தது எவ்வளவு கொடுமை ?
அப்படி கஷ்டப்பட்டு பெற்ற சுதந்திரத்தை இன்று சொகுசாக அனுபவிப்பது அரசியல்வாதிகள் மட்டுமே மக்கள் அல்ல!
சசிகலாவை இன்றும் தியாகத்தலைவி என்று சொல்கிறவர்களை என்ன சொல்வது ?
//சசிகலாவை இன்றும் தியாகத்தலைவி என்று சொல்கிறவர்களை என்ன சொல்வது ?// - என்ன செய்வது என்று கேட்டால் என்னிடம் பதில் இருக்கிறது கில்லர்ஜி... இடிபாடுகளால் அழிந்துபட்ட சிறைச்சாலைப் பகுதிகளை மீட்டெடுக்கச் சொல்லலாம். இது, சுதந்திரத்தின் அருமை புரியாத அனைவருக்கும் பொருந்தும்.
நீக்குசிறைச்சாலை விஷயங்கள் கனமானவை - மனதுக்குக் கஷ்டம் தருபவையே கில்லர்ஜி.
நீக்குஒரே இடத்தில் சகோதரர்கள் இருவருமே - ஒருவருக்கொருவர் தெரியாமல் இருப்பது கொடுமை தான்.
சொகுசாக அனுபவிப்பது அரசியல்வாதிகள் மட்டுமல்ல கில்லர்ஜி - நிறைய மக்களும் அப்படி இருக்கிறார்கள் - தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் - அது என் சுதந்திரம், பிறப்புரிமை என பேசிக் கொண்டு இருப்பவர்கள், செயலில் காண்பிப்பவர்கள் மக்களிலும் நிறைய உண்டு கில்லர்ஜி.
தியாகத் தலைவி - தலைவர்கள் இருபாலாரும் நிறையவே.
இடிந்துபட்ட சிறைச்சாலைப் பகுதிகளை மீட்டெடுக்கச் சொல்லலாம்! ஹாஹா... அப்படி செய்யாமல் இருப்பது என் பிறப்புரிமை, சுதந்திரம் என்று சமாளிக்க அவர்களுக்கு நன்றாகவே தெரியும் நெல்லைத் தமிழன். இங்கே உரிமை மட்டுமே பேசப்படும் பொருள் - கடமை என்பதை சுலபமாக மறந்து போனவர்கள் நம் மக்கள்.
நீக்கு
பதிலளிநீக்குமிகவும் சிறப்பான அழகான முக்கியமான பதிவு இது. ஏற்கனவே அந்தமான் சிறை குறித்து முழுமையாக படித்து உள்ளேன். உங்கள் மூலம் என் வட இந்திய சுற்றுப் பயண ஆசைகளுடன் அந்தமான் பயணமும் ஏற்கனவே திட்டமிட்டு வைத்துள்ளேன்.
கட்சி, கொள்கை என்று சொல்லிக் கொண்டு எழுதிக் கொண்டிருப்பவர்களை எல்லாம் ஏன் எழுத்து மூலம் வெளுத்துக் கொண்டிருக்கின்றேன் என்பதற்கு இது போன்ற புத்தகங்கள் தான் காரணம்.
எத்தனை துன்பங்கள். நம்மால் நினைத்தே பார்க்க முடியாத துயரங்களைக் கடந்து தான் நமக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. படங்கள் தெளிவாக நேர்த்தியாக வந்துள்ளது.
அருமை நாகராஜ்.
சிறை குறித்து புத்தகங்கள் - நானும் சில புத்தகங்களை படித்தேன் ஜோதிஜி.
நீக்குவட இந்திய/அந்தமான் தீவுகளுக்கான பயணம் - முடிந்த போது நிச்சயம் சென்று வாருங்கள் ஜோதிஜி. இந்தியாவின் உள்ளேயே பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உண்டு.
உங்கள் எழுத்து மூலம் பலரையும் வெளுத்துக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள்.
பல துன்பங்களை கடந்தே சுதந்திரம் பெற்றுள்ளோம் - ஆனால் பலரும் இதனை புரிந்து கொள்வதில்லை.
படங்கள் நன்றாக வந்திருப்பதாக நீங்களும் சொன்னதில் மகிழ்ச்சி.
அழகான படங்களுடன் மிக விரிவாக அந்தமான் சிறைச்சாலை பற்றி அறியத் தந்தீர்கள் அண்ணா.
பதிலளிநீக்குஅருமை.
இப்பதிவின் மூலம் சில விஷயங்களை உங்களுக்கும் சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சி குமார்.
நீக்குமிகவும் முக்கியமான இடுகை.
பதிலளிநீக்குசரித்திர இடங்களைப் பார்ப்பதற்கு முன்பு, அங்கு நடந்த நிகழ்வுகளைத் தெரிந்துகொண்டு பார்த்தால் அது நமக்கு நிறைய விஷயங்களைச் சொல்லும். கண்ணை மூடிக்கொண்டு அந்த இடத்தில் இருந்தால், நீங்கள் சொல்வதுபோல கைதிகளின் கூக்குரல்கள், சுதந்திர தாகம், கொடுமையின் வெப்பம் நமக்கும் கேட்டால், உணர்வு வந்தால் ஆச்சர்யம் இல்லை.
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் - பாடல்தான் நினைவுக்கு வருகிறது
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் - நல்ல பாடல். பலருக்கு இப்பாடல் நினைவில் வருவதே இல்லை.
நீக்குஇந்தப் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
சுதந்திரம் என்பது எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை அறிய, இது ஒரு பொக்கிச பகிர்வு...
பதிலளிநீக்குஇது போன்ற படங்கள் உங்களால் மட்டுமே எடுக்க முடியும்...
பொக்கிஷப் பகிர்வு - மிக்க மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குபடங்களை பாராட்டியமைக்கு நன்றி.
எத்தனை இடங்களுக்குப் பயணித்த அனுபவம் உங்களுக்கு. அங்கெல்லாம் சிறிய காணொளி எடுத்து வைத்துக்கொண்டீர்களா? நாமே படங்கள் எடுக்கும்போது, அந்த இடங்களில் நம்மையும் படமெடுக்க யாரையாவது கேட்டுக்கொள்வீர்களா இல்லை நண்பர்கள்தான் உதவுவார்களா?
பதிலளிநீக்குசில இடங்களில் காணொளியும் எடுப்பதுண்டு.
நீக்குபெரும்பாலும் கூட வரும் நண்பர்கள் என்னையும் படமெடுத்து விடுவார்கள். நானாக எப்போதும் கேட்பதில்லை நெல்லைத் தமிழன்.
எவ்வளவு இன்னல்களை அனுபவித்து சுதந்திரம் வாங்கி தந்து இருக்கிறார்கள்!
பதிலளிநீக்குஇந்த அந்தமான் சிறையைப் பற்றி கதைகளில் படித்தும் சினிமாவில் பார்த்தும் இருக்கிறேன்.
உங்கள் பதிவின் மூலம் நேரே பார்த்த அனுபவம் கிடைத்தது.
தண்டனைகளை காட்சி வடிவில் பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது.
எத்தனை எத்தனை இன்னல்கள் - அங்கே சென்று பார்க்கும்போது அவர்கள் பட்ட கஷ்டங்கள் மனக்கண் முன்னே விரிவது நிச்சயம்.
நீக்குதண்டனைகளை காட்சி வடிவில் பார்க்கும்போது வேதனை தான் கோமதிம்மா...
படங்களுடன் விவரித்தவிதம் நேரில்பார்க்கிற அனுபவத்தையும் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தையும் தூண்டிப் போகிறது...வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஅந்தமான் நேரில் பார்க்கும் ஆவல் - முடிந்த போது சென்று வாருங்கள் ரமணி ஜி.
நீக்குசிறைச்சாலையின் கண்ணீர் கதைகள் நெஞ்சை தொடுகின்றன.
பதிலளிநீக்குநெஞ்சைத் தொட்ட கதைகள் - தங்கள் கருத்தினுக்கு நன்றி மாதேவி.
நீக்குஅந்தமான் சிறைச்சாலைப் பற்றியச் செய்திகளையும் படங்களையும் பார்க்கப் பார்க்க மனம் பதறுகிறது ஐயா
பதிலளிநீக்குசெய்திகளும் படங்களும் பதற்றம் தந்தன - நேரில் பார்க்கும்போது அங்கே சிறைபட்டவர்கள் பற்றிய சிந்தனை இன்னும் அதிகம் இருந்தது கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குவலைத் திரட்டி உலகில் புதிய புரட்சி, வந்தது : வலை ஓலை எனும் புதிய செய்தி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது அந்தமானின் அழகு – பகுதி 4 பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், விரைவில், அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
வலை ஓலை - வாழ்த்துகளும் பாராட்டுகளும் சிகரம் பாரதி.
நீக்குகொடுமையான நினைவுகளைத் தாங்கி நின்றாலும் அந்தக் காலத்தின் வியக்க வைக்கும் கட்டுமானத்தின் ஒரு சாட்சியாக இது இருப்பதையும் மறுக்க முடியாது.
பதிலளிநீக்குஅந்தக் கால கட்டுமானத்தில் மௌனசாட்சி இக்கட்டிடம் என்பதும் மறுக்க முடியாத உண்மை சிகரம் பாரதி.
நீக்குஇச்சிறையை சில திரைப்படங்களில் பார்த்ததுண்டு. வரலாற்றின் கருப்புப் பக்கங்கள். நேரில் பார்த்து அதன் வலியை உணர்ந்து விவரித்திருக்கிறீர்கள். படங்களும் தகவல்களும் மனதைக் கனக்கச் செய்தது.
பதிலளிநீக்குதிரைப்படங்களில் நானும் பார்த்ததுண்டு ராமலக்ஷ்மி. நேரில் பார்க்கும்போது இன்னும் அதன் கொடுமையை அதிகம் உணரமுடிகிறது.
நீக்குஎன்னங்க இது?.. மகா சித்து வேலையாக இருக்கிறதே! உங்கள் காமாராவிற்குள் அம்மாம் பெரிய சிறைச்சாலையையே உள்ளாற புடிச்சுப் போட்டுட்டீங்களே!
பதிலளிநீக்குபடங்களைப் பார்த்த பிரமிப்பு இன்னும் மீளவில்லை.
சித்து வேலை - ஹாஹா... படங்கள் உங்களுக்கு பிரமிப்பு தந்தன என்றறிந்து மகிழ்ச்சி ஜீவி ஜி.
நீக்கு//சிறைச்சாலை நோக்கி அமர்ந்தால் சிறை பற்றிய விவரங்கள் மனதில் அலைமோத, கடல் பக்கம் நோக்கி அமர்ந்தால் உண்மையான அலைகள் கரையில் மோதி திரும்புவதைப் பார்க்கலாம். //
பதிலளிநீக்குஎன்ன கவித்துவமான மனோபாவாம்! சிறையை நோக்கி அமரும் பொழுது துயர சரித நிகழ்வுகளில் மனம் மூழ்கி அந்த பிர்மாண்ட சிறையே நடந்ததற்கெல்லாம் சாட்சியாய் கண் முன்னே மறுக்க முடியாத காட்சியாய் நிற்கிறது..
கடலை நோக்கி அமர்ந்தால், ஓவென்ற பேரிச்சலுடன் அலைகள் எழுந்து வீழ்ந்து அந்த துயர நிகழ்வுகளை ஒரு கணம் மறக்க மாற்றாய் மருந்தாய் திகழ்கிறது
சிறைச்சாலை சரித்திர நிகழ்வுகளின் மௌன சாட்சியாக இன்றைக்கும் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை தான் ஜீவி ஐயா.
நீக்குஉங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
அந்தமான் சிறைச்சாலை - ஒரு மாதிரி உருவம்...என்ன ஒரு கட்டமைப்பு
பதிலளிநீக்குநம் மக்களை வேதனைப்படுத்த , வலியை கொடுக்க என ..
மனம் பதறும் இடம் ...
மனம் பதறும் இடம் தான். நம் சரித்திரம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் அனுப்ரேம் ஜி.
நீக்குஇந்தக் கொடுமைகளை நினைத்தாலே மனமும் உடலும் பதறுதே... ஐயோ....
பதிலளிநீக்குஉண்மை தான் துளசி டீச்சர். நமது தியாகிகள் பட்ட அவதிகள் இன்றைக்கு ஒருவரும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை என்பதிலும் வருத்தம் உண்டு.
நீக்கு