அந்தமானின் அழகு – பகுதி 8
வீர ஹனுமான் கோவில், போர்ட் Bப்ளேயர்.
அனைத்து பதிவுலக
நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை, பயணம் பற்றிய நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.
பயணம்
உங்கள் மனதை விசாலமாக்குகிறது. குறுகிய மனப்பான்மை இல்லாமல் இருக்க உதவுகிறது. உங்கள்
வாழ்க்கையில் மற்றவர்களுக்குச் சொல்லக் கூடிய அனுபவங்களையும், கதைகளையும் உருவாக்கித்
தருகிறது. ஆதலினால் பயணிப்போம்!
வீர ஹனுமான் கோவில், போர்ட் Bப்ளேயர்.
அந்தமான் தீவுகளுக்கான எங்கள் பயணத்தில் முதல் நாள் அன்று
கிடைத்த அனுபவங்களை இதுகாறும் உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. படித்த உங்களுக்கும்
சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள இந்தப் பதிவுகள் உதவி இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இன்று முதல் இப்பயணத்தின் இரண்டாம் நாள் அனுபவங்களை
உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இரண்டாம் நாள் காலையிலேயே எழுந்து காலைக் கடன்களை
முடித்துக் கொண்டு எங்கள் தங்குமிடத்தின் அருகிலேயே இருக்கும் வீர ஹனுமான் கோவிலுக்குச்
சென்று திவ்யமான தரிசனம். அப்போது தான் ஹனுமனுக்கு
திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது. அங்கே அமர்ந்து முழுவதும் தரிசித்த பிறகு கோவிலில்
”பட்டர் பேப்ப”ரில் வைத்து பிரசாதமாக அளித்த எலுமிச்சை சாதத்தை சாப்பிட்டேன். அங்கிருந்து வெளியே வந்து கோவிலின் பின்புறத்தில்
இருக்கும் தமிழர் சிங்காரம் அவர்களின் கடையில் சுவையான தேநீர் மற்றும் மெது வடை! அவரிடம்
பேசியபடி சில நிழற்படங்களையும் எடுத்துக் கொண்டேன். சிங்காரம் அவர்களைப் பற்றி ஏற்கனவே
இப்பக்கத்தில் எழுதி இருக்கிறேன் – படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம்!
திரு சிங்காரம், போர்ட் Bப்ளேயர்.
தங்குமிடம் திரும்பி அறையில் காத்திருந்தேன். குழுவினர் அனைவரும் புறப்பட்டு தங்குமிடத்தில் காலை
சிற்றுண்டியை முடித்துக் கொண்டு தயாராக இருந்தோம். சரியான நேரத்தில் எங்களுக்கான டெம்போ
ட்ராவலர் வண்டி வந்தது. இன்றைக்கு வேறு ஒரு ஓட்டுனர் – அவரும் தமிழரே. பெரும்பாலான ஓட்டுனர்கள், உதவியாளர்கள் என அனைவரும்
தமிழர்களே. அதனால் ஒரு சௌகரியம் சில சிக்கல்கள்! சௌகரியம் என்னவெனில் சுலபமாக அவர்களிடம்
நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லி விடலாம்! அவர்களுக்குத் தெரியாமல் எதையாவது குழுவினருடம்
பேச வேண்டுமெனில் முடியாது என்பது சிக்கல்! ஆனால் பொதுவாக இப்பயணத்தில் கவனித்த விஷயம் பயண ஏற்பாடுகள்
ரொம்பவே சிறப்பாக இருந்தது என்பதால் அவர்களைக் குறை சொல்ல எங்களுக்கு வாய்ப்பே இல்லை!
செல்லங்களுடன் சிறு கொஞ்சல்கள்...
எதுக்குடா இவ்வளவு சோகம் உன் முகத்தில்...
இரண்டாம் நாளின் திட்டத்தில் இரண்டு தீவுகளுக்கு நாங்கள்
பயணிக்க இருந்தோம். போர்ட் Bப்ளேயரிலிருந்து சிறு படகுகள் மூலம் தீவுகளுக்குப் பயணிக்க
வேண்டும். தங்குமிடத்திலிருந்து “ஜெட்டி” என அழைக்கப்படும் படகுத் துறைக்கு வந்து சேர்ந்தால்
படகுகள் இயங்குமா இயங்காதா என்பதில் குழப்பம்.
முதல் நாளில் கார்பின்’ஸ் கோவ் கடற்கரைக்குச் சென்றபோதே Bபுல்Bபுல் புயல் தாக்கத்தால்
கடற்கரையில் சில கட்டுப்பாடுகள் விதித்ததைச் சொல்லி இருந்தேன். இரண்டாம் நாளும் புயலின் தாக்கத்தினால் படகுகள்
இயங்குமா இயங்காதா என்பதைப் பொறுத்தே எங்கள் தீவுப் பயணம் முடிவாகும். இங்கே இயக்கப்படும்
படகுகள் அனைத்துமே இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டிற்குள் – படகுகள் தனியார் வசம்
என்றாலும், படகுகளை கடலுக்குள் அனுமதிக்கலாமா கூடாதா என்பதை இந்திய கடற்படையே முடிவு
செய்யும். ஒவ்வொரு படகும் அவர்களிடம் பதிவு
செய்யப் பட்டிருக்க வேண்டும். போலவே எல்லா படகுகளுக்கும் பெயரும் உண்டு. வாக்கி டாக்கி வழி ஒவ்வொரு படகின் ஓட்டுனரும் கடலில்
பயணிக்கப் போவதை இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்க வேண்டும்.
பூங்காவில் மலர்கள்...
பூங்காவில் ஒரு பறவை...
Bபுல்Bபுல் புயல் காரணமாக இரண்டாம் நாள் அன்றும் மூன்றாம்
எண் கொடி ஏற்றப்பட்டிருந்தது. படகுகள் இயங்குவதற்கு இந்திய கடற்படை இன்னும் அனுமதி
தரவில்லை – அதனால் சற்று நேரம் காத்திருக்க வேண்டும் என்று சொல்லி எங்கள் பயண வழிகாட்டி
சொல்லி மேலதிகத் தகவல்களைப் பெறச் சென்றார்.
நாங்கள் காத்திருந்த இடத்தில் பூங்காவும், சிற்றுண்டி சாலையும் உண்டு. பூங்கா அருகே நிறைய படங்கள் எடுத்துக் கொண்டு ஒருவரை
ஒருவர் கிண்டலடித்துக் கொண்டு நேரத்தை போக்கிக் கொண்டிருந்தோம். சில நிமிடங்கள் இப்படியே கழிந்தது. படகுப் பயணம் நாள் முழுவதும் ரத்தாகி விட்டால் இரண்டாம்
திட்டத்தினை யோசித்து வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஏனெனில் இப்படி படகுகள்
ரத்தாவது அவ்வப்போது நடக்கும் விஷயம் என்பதால் சுற்றுலா ஏற்பாடு செய்த திரு சுமந்த்
அவர்களுக்கு நிச்சயம் மாற்றுத் திட்டம் இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். அதே போலவே எங்களுடன் வந்த பயண வழிகாட்டி திரு சுமந்த்
அவர்களை தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.
படகுப் போக்குவரத்து உண்டா இல்லையா என்பதைத் தெரிந்த கொண்டு முடிவு செய்ய காத்திருந்தோம்.
பூங்காவில் இட்லிப் பூ என அழைக்கப்படும் பூக்கள்...
ஓய்வெடுக்கும் நண்பர்!
நாங்கள் காத்திருந்த ”ஜெட்டி” இருந்த செல்லங்களுடன் விளையாடுவதும்,
நிழற்படங்கள் எடுப்பதும் என ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது எங்கள் குழு. காலையிலேயே எழுப்பி விட்டதால் பாதி உறக்கத்தில்
இருந்த நண்பர் ஒருவர் மர நிழலில் அமைந்திருந்த மேடையில் படுத்துக் கொள்ள அவரை கிண்டலடித்துக்
கொண்டு இருந்தோம். பயணம் முழுவதும் அவரை அவருக்குத்
தெரியாமல் படம் எடுப்பதே எங்களில் பலருக்கு வேலையாக இருந்தது! தெரிந்தால் “என்னை அழகாக படம் எடுங்கள்” என்று கட்டளையிடுவார்
அவர்! குழுவில் இப்படி மகிழ்ச்சியும் குதூகலமும்
பயணத்தில் இருப்பது நல்ல விஷயம். குழுவாகப்
பயணிக்கும்போது ஒருவரை ஒருவர் புரிந்திருப்பது நல்லது. குழுவிற்குள் ஒற்றுமை இல்லையெனில்
இப்படியான பயணங்கள் நன்றாக அமையாது. சில சந்தர்ப்பங்களில்
குழுவாக பயணித்த போது கசப்பான அனுபவங்கள் கிடைத்ததுண்டு. இந்தக் குழுவில் யாரும் அப்படி இல்லை என்பதில் எங்கள்
அனைவருக்குமே கொஞ்சம் நிம்மதி!
இலைகளா, பூக்களா?.
ஊஞ்சலாடி மகிழும் நண்பர் தனக்கு பன்னிரெண்டு வயதுக்கும் குறைவு தான் என சத்தியம் செய்கிறார் - ஊஞ்சலில் விளையாட அதிக பட்ச வயது 12!
ஜெட்டி எனப்படும் படகுத் துறைக்குப் பெயர் என்ன தெரியுமா?
ராஜீவ் காந்தி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ். அங்கே
மீண்டும் விசாரித்து, அப்போதைக்கு படகுப் போக்குவரத்து கிடையாது என்பதை உறுதி செய்து
கொண்ட எங்கள் வழிகாட்டி பக்கத்திலேயே இருக்கும் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லலாம்
என முடிவு செய்தார். மீண்டும் டெம்போ ட்ராவலர்
வந்து சேர அதில் அனைவரும் ஏறிக் கொண்டோம். பயணம் அதிக தூரம் இருக்குமோ என நினைத்தால்
ஏறி அமர்ந்து சில மீட்டர்கள் சென்ற பிறகே இறக்கி விட்டு விட்டார்கள்! நடந்தே சென்று
இருக்கக் கூடிய தூரம் தான்! அங்கே வாயிலில் ஒரு பெரியவர் (தமிழர்) விதம் விதமான தொப்பிகளை
விற்றுக் கொண்டிருக்க, அவரிடம் குழுவில் உள்ள பலரும் தொப்பிகளை வாங்கிக் கொண்டோம். அந்தமான் தீவுகளில் எல்லா நாட்களிலுமே
சூடாகவே இருக்கும். அதனால் தீவுகளுக்குப் பயணிக்கும்போது
இது போன்ற தொப்பிகள், கண்களுக்கு கூலர்ஸ் ஆகியவற்றை பயன்படுத்துவது நல்லது! போலவே கடற்கரைக்குச்
செல்லும்போது அணிந்திருப்பது தவிர கூடுதலாக ஒரு செட் உடையையும் எடுத்துச் செல்வது நல்லது.
கடலில் குளித்தால், ஈர உடையுடன் பயணிக்க எந்த வாகனத்திலும் அனுமதி கொடுப்பதில்லை –
அவர்கள் வாகனம் அசுத்தமாகி விடும் என்பதால்!
தொப்பி வாங்கலையோ தொப்பி!
எல்லா படத்திலேயும் காமிராவும் கையுமாக இருப்பேன்னு வேண்டுதலா என்ன?
நாங்கள் அப்படிப் பார்த்த இடம் என்ன? அந்த இடத்தில் என்ன
பார்த்தோம் போன்ற தகவல்களை அடுத்த பதிவில் சொல்கிறேன். பயணம் என்னதான் திட்டமிட்டுச்
சென்றாலும், இயற்கையின் திட்டத்தினை யார் அறிவார்? இயற்கை வேறு வகையில் திட்டமிட்டுவிட்டால்
உங்கள் திட்டங்கள் அனைத்தும் மாற்றத்தான் வேண்டியிருக்கிறது. நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை
பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
வீரஹனுமான் கோவில், பட்டர் பேப்பரில் எலுமிச்சை சாதம்.... பரவாயில்லையே....
பதிலளிநீக்குகடைசிப் படத்தில் மேலே தொப்பிக்கார்ரிடமிருந்து ஒரு தொப்பி வாங்கி அணிந்து போஸ் கொடுத்திருந்தால் இன்னும் ஆப்ட் ஆக இருந்திருக்குமோ?
பட்டர் பேப்பரில் எலுமிச்சை சாதம் - அங்கே இருந்த நாட்களில் இரண்டு மூன்று முறை இப்படி பிரசாதம் கிடைத்தது நெல்லைத் தமிழன்.
நீக்குதொப்பியுடன் படம் - ஹாஹா... அதுவும் இருக்கிறது! பிறிதொரு சமயத்தில் வெளியிடுகிறேன்.
புளியோதரை கிடைக்கவில்லையாக்கும்! நம்ம ராசிதான் உங்களுக்கும் போல!
பதிலளிநீக்குபுளியோதரை - ஹாஹா... திருவரங்கத்தில் அடிக்கடி ருசித்திருக்கிறேன் - அந்தமான் கோவிலில் கிடைக்கவில்லை ஸ்ரீராம்.
நீக்குபயண அனுபவங்கள் சிறப்பு, சுவாரஸ்யம். தொப்பி விற்பவர் எங்கோ பார்த்த முகமாய் இருக்கிறது. செல்லங்கள் படம் எப்போதுமே அழகு.
பதிலளிநீக்குபயண அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதொப்பி விற்பவர் பார்த்த மாதிரி இருக்கிறாரா? :) உலகம் ரொம்பவே சின்னது என்று பல சமயங்களில் உணரச் செய்து விடுகிறது சில சந்திப்புகள்.
செல்லங்கள் - அழகு தான்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்லதொரு சிந்தனை அருமை. காலையில் வீரஹனுமான் தரிசனம் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். ஹனுமான் நம் எல்லோர் துயரங்களையும் துவம்சமாக்கி நலம் தர வேண்டும் எனவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
எதிர்பார்த்த படகு சவாரி இல்லையென்றாலும், கொஞ்சம் வருத்தந்தான் வரும். ஆனால் இயற்கையின் சக்திக்கு முன் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆக வேண்டுமென, மாற்று ஏற்பாடு செய்திருக்கும் திரு சுமந்த் அவர்களின் திட்டச் செயல்பாடு பாராட்டுக்குரியது.
படங்கள் அழகாக இருக்கின்றன. செல்லங்கள் படங்கள், "நான் பூவா, இலையா" என கேள்வி கேட்கும் படம் அனைத்தும் அழகாக உள்ளது .
"தனித்திருந்து பறக்கலாமா, இல்லை இன்னும் சிறிது நேரம் இப்படியே அமர்ந்து இயற்கையை ரசிக்கலாமா என யோசிக்கும், பறவை" படம் மிக அழகு.
குழுவினருடன் செல்லும் போது, வரும் எந்தவொரு பேச்சுக்களையும் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொள்வது, இருப்பதென்பது பெரிய விஷயம். உங்கள் கருத்து சரியே..!
பதிவு நன்றாக உள்ளது. அடுத்து தாங்கள் சென்றவிடம் என்ன என்ற ஆவலில் நானும் அடுத்தப் பதிவுக்கு காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இன்றைய சிந்தனை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குகாலையில் வீர ஹனுமான் தரிசனம் - போர்ட் Bப்ளேயர் நகரில் இருந்த நாட்கள் அனைத்திலும் காலை நேரம் அங்கே சென்று தரிசனம் கண்டேன். மனதில் மகிழ்ச்சியும் அமைதியும்.
படகுச் சவாரி இல்லை என்றாலும் வேறு ஏற்பாடுகள் செய்தது நல்ல விஷயம் தான் கமலா ஹரிஹரன் ஜி.
// குழுவாகப் பயணிக்கும்போது ஒருவரை ஒருவர் புரிந்திருப்பது நல்லது //
பதிலளிநீக்குஇரட்டிப்பு மகிழ்ச்சி பெருகுவதே இதனால் தான்...
சரியான புரிதல் எல்லா விஷயங்களிலும் அவசியம் தான் தனபாலன். குறிப்பாக நட்பிலும், உறவிலும் சரியான புரிதல் ரொம்பவே அவசியம்.
நீக்குதொடர்ந்து தங்களது தளத்துக்கு வரமுடியாத சூழ்நிலை...
பதிலளிநீக்குஅழகான படங்களுடன் தகவல் களஞ்சியமாகப் பதிவு....
அன்பின் நல்வாழ்த்துகளுடன்...
முடிந்த போது வாருங்கள் துரை செல்வராஜூ ஐயா. கொரானோ எல்லா இடத்திலும் பிரச்சனைகளை கொண்டு வந்துள்ளது. விரைவில் எல்லாம் சரியாகட்டும். நலமே விளையட்டும்.
நீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
பயணம் மனதை விசாலமாக்கும் உண்மையே வழக்கம்போல பயண விபரங்கள் அழகாக சொன்னீர்கள் ஜி
பதிலளிநீக்குபூக்களின் படங்கள் அழகு
பயண விவரங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குபயணம் ஏற்பாடு செய்பவர்கள் கட்டணம் குறித்தும் எழுதுங்க.
பதிலளிநீக்குபயணம் ஏற்பாடு செய்பவர்கள் கட்டணம் குறித்து கடைசியில் சொல்கிறேன் ஜோதிஜி.
நீக்குபயணம் உங்கள் மனதை விசாலமாக்குகிறது. குறுகிய மனப்பான்மை இல்லாமல் இருக்க உதவுகிறது. உங்கள் வாழ்க்கையில் மற்றவர்களுக்குச் சொல்லக் கூடிய அனுபவங்களையும், கதைகளையும் உருவாக்கித் தருகிறது. ஆதலினால் பயணிப்போம்!....
பதிலளிநீக்கு...................உண்மை
பூங்காவில் ஒரு பறவை....கவர்கிறது
வாசகமும் பறவை படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.
நீக்குபயணக் காட்சிகளும் படங்களும் அழகோ அழகு
பதிலளிநீக்குகாட்சிகளும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபயணங்கள் மனதை விசாலமாக்கும் என்பது உண்மை தான்!!
பதிலளிநீக்குபயணக்கட்டுரையும் படங்களும் மிக அருமை!!
பயணம் பற்றிய இந்தப் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குகாட்சிகள் இதம்.
பதிலளிநீக்குபதிவின் வழி சொன்ன காட்சிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்கு//குழுவாகப் பயணிக்கும்போது ஒருவரை ஒருவர் புரிந்திருப்பது நல்லது. குழுவிற்குள் ஒற்றுமை இல்லையெனில் இப்படியான பயணங்கள் நன்றாக அமையாது. //
பதிலளிநீக்குஉண்மைதான்.
படங்கள் எல்லாம் அழகு.
செல்லங்கள் அழகு.
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...
நீக்குஅன்பு வெங்கட்,
நீக்குபயணம் பற்றிய வாசகம் இந்து.
பயனுள்ளது.
பயணம் செய்யும் உங்களது கட்டுரைகள்
மனதிற்கு ஊக்கம்.
செல்லங்களின் படம்மிக அழகு. அந்த சோகச் செல்லம்
மனதை சங்கடப் படுத்துகிறது.
பாவம் பசியோ.
கடலில் புயல் நேரத்தில் போகாமல் இருப்பதும் நன்றே,
டீக்கடைக் காரரின் டீ ஆற்றும் பணி இனிது.
அனுமன் கோயில் பிரசாதம் அருமை. எங்கெங்கும் காணும் தமிழ் வாழ்க.
பயணம் பற்றிய வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...
நீக்குபுயல் நேரத்தில் கடலில் பயணிப்பது சரியில்லை தான்.
தொடர்ந்து வருகை தருவதில் மகிழ்ச்சி வல்லிம்மா.
பகுதி ஒன்னிலிருந்து படித்துவிட்டு வருகிறேன் சார்
பதிலளிநீக்குமுடிந்த போது தொடரின் விடுபட்ட பகுதிகளையும் படித்து உங்கள் கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள் மலையப்பன்.
நீக்கு//”பட்டர் பேப்ப”ரில் வைத்து பிரசாதமாக அளித்த எலுமிச்சை சாதத்தை //
பதிலளிநீக்குதமிழ் நாடாக இருந்தால், பட்டர் பேப்பரில் வைத்து பட்டர் அளித்த என்று சொல்லியிருக்கலாம்!
எழுதும்போதே இப்படி எழுதலாம் என நினைத்தேன் ஜீவி ஐயா. ஆனால் எழுதவில்லை.
நீக்குஒருவழியாக ஜெட்டிக்கு பெயர்க் காரணம் தெரிந்தது!
பதிலளிநீக்கு//அவர்கள் வாகனம் அசுத்தமாகி விடும் என்பதால்!//
அவர்கள் வாகனம் கழுவி விட்டாற் போல ஆகிவிடும் என்று நான் நினைத்தால்?..
ஜெட்டிக்கான காரணம் - :)
நீக்குவாகனம் கழுவி விட்டாற் போல - இல்லை ஜீவி ஐயா. அனுமதிப்பதே இல்லை. உப்பு நீரால் வாகனம் கெட்டுவிடும் என்பதால் அனுமதிப்பதில்லை.
தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 15 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பதிலளிநீக்குதற்போது, தங்களது அந்தமானின் அழகு – இரண்டாம் நாள் – உண்டா இல்லையா குழப்பம் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
வலை ஓலை - வாழ்த்துகள்.
நீக்குசிங்கப்பூர் கோவில்களிலும் பட்டர் பேப்பரில்தான் பிரஸாதம் வழங்குவார்கள். சில சின்ன உணவுக்கடைகளில், டேக் அவே பார்ஸலும் பட்டர் பேப்பரில்தான். ஆஞ்சி கோவில் அருமை. செல்லங்கள் சூப்பர் !
பதிலளிநீக்குபட்டர் பேப்பரில் தருவது நல்ல விஷயம் தான் டீச்சர். இலைகள் இல்லாத இடங்களில் இப்படித் தரலாம்.
நீக்குசெல்லங்கள் - :) உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.