செவ்வாய், 31 மார்ச், 2020

கதம்பம் – நேரம் – வாசிப்பனுபவம் – ஊரடங்கு - கிருமி



நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

நேரம் போய்க்கொண்டே தான் இருக்கும். எனவே நீ செய்யவேண்டியதை செய். அதுவும் இப்போதே செய். காத்திருக்காதே…




வாசிப்பனுபவம் -  17 மார்ச் 2020:



அத்திமலைத் தேவன் பாகம்- 2! - காலச்சக்கரம் நரசிம்மா!

அத்திமலைத் தேவனுடனான மிகப்பெரிய சரித்திரத்தின் முதல் பாகத்தை சில நாட்களுக்கு முன் வாசித்து பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம்.

மகாபாரதத்தின் அஸ்வத்தாமா அத்தியூருக்கு வந்து தவம் செய்ததில் ஆரம்பிக்கும் அத்திமலைத் தேவனின் கதையில், சாணக்கியர் மவுரிய சாம்ராஜ்யத்தை தோற்றுவித்த வரலாறு போன்றவை முதல் பாகத்தில்.

இதில் கரிகாலன் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்ட வரலாறு, கல்லணையை கட்டியதன் பின்னணி. குப்த சாம்ராஜ்யத்தை தோற்றுவித்த சமுத்ரகுப்தன், ஸ்வேத ஹூனர்கள், கடம்பர்கள், காம்போஜ அரசர்கள் என இவர்களின் காஞ்சிப் பயணம்.

பல்வேறு விதங்களில் தேவ உடும்பரத்தால் ஆன அத்திமலையானை தங்கள் நாட்டுக்குச் எடுத்துச் செல்ல முயற்சி நடக்கிறது.‌ரங்கராட்டினத்தில் ரங்கனுக்கு நேர்ந்தது போல தான் இங்கு அத்தி வரதரின் நிலையும் எனப் புரிகிறது.

பல்லவ மன்னனான சிம்ம வர்மனின் மகன்களில் ஒருவனான ஜெயவர்மன். அவரே பின்னாளில் போதி தர்மா!!! ஜெயவர்மன் சீனத்துக்குச் சென்றதன் பின்னணி என்ன?? சீனத்துக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்பு?

அத்தியூரானுக்கு ஒவ்வொரு சைத்ர ஹஸ்த நட்சத்திரத்தில் குபேர புரியில் உள்ள யக்ஷ தடாகத்தில் கிடைத்த யக்ஷ நேத்திரங்களால் ஆன ஸ்ரீதள மணியை அணிவிக்கும் போது அதன் ஒளி கடல் கடந்து சென்றதால் நேர்ந்தது என்ன?

‌634 பக்கங்களைக் கொண்ட இந்த நூலிலும் நிறைய கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் ஆங்காங்கே முன்கதையை உரையாடலிலேயே சுருக்கமாகச் சொல்வதால் நம்மால் நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறது.
அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாக இங்கு ஏராளமான வரலாற்று நிகழ்வுகள் நடந்தேறி உள்ளன. அதன் சான்றுகளுடன் வாசிக்கும் போது மனம் பதைபதைப்பது உண்மை. பாராட்டுகள் சார். மகளும் எனக்கு முன்பே வாசித்து விட்டாள். விரைவில் மூன்றாம் பாகத்தை வாசித்து பகிர்ந்து கொள்கிறேன்.
வடாம் கச்சேரி – 18 மார்ச் 2020:



இன்று முதல் கச்சேரி ஆரம்பம் ஆனது!

தொடரட்டும் சுய ஊரடங்கு – 23 மார்ச் 2020

தனித்திருத்தலே சிறப்பு. அனாவசியமாக வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம்.

உங்களால் மற்றவர்க்கும் அவர்களால் உங்களுக்கும் தொற்று பரவாமல் இருக்க தனித்திருத்தல் அவசியம்.

நேற்றைய கை தட்டலையே பல இடங்களில் தவறாக புரிந்து கொண்டு, பட்டாசு வெடித்தும், ஊர்வலமாகவும் சென்றும் உள்ளார்கள். கும்பலே கூட வேண்டாம் என்று சொல்லியும் :(

முடிந்த வரை சுகாதாரமாகவும், கடவுள் பக்தியுடனும் இருங்கள். அரசின் அறிவுரைகளுக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.

முகப்புத்தகத்திலும், வாட்ஸப்பிலும் நல்ல விஷயங்களை பகிர்ந்திடுங்கள். அது பரவினால் நல்லது தான். நல்லதே நடக்கும்!

நோய்த்தொற்று என்னும் சங்கிலி அறுபட்டு மேலும் பரவாமல் இருக்க வழிவகை செய்வோம்.

அவரவரின் மனதுக்கு நெருக்கமான கடவுளிடம் தன்னலம் பாராமல் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம்.

சுத்தம், சுகாதாரம், சுயக் கட்டுப்பாடு, பக்தி இவை தான் நம்மை மேன்மைபடுத்தும் வழிகள். நம்மால் மற்றவர்களுக்கு தீங்கு நேரக்கூடாது.

வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவோம். குடும்பத் தலைவிகளின் வேலைகளை அனைவரும் பங்கிட்டு செய்வதால், இறுக்கமான சூழல் மாறி மகிழ்ச்சி ஓங்கும்.

ஒன்றுபட்டு செயல்பட்டு கொரோனாவை விரட்டுவோம்.

கிருமி என்னக்கா இப்படி பண்ணுதே – 23 மார்ச் 2020:

அவசியமாக வேண்டிய பொருட்கள் சிலவற்றை வாங்குவதற்காக அருகே இருக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸுக்குச் சென்றிருந்தேன். நாளை மாலையோடு கடை கிடையாதாம்.

அங்கு பணியிலிருந்த பெண்மணி, "நான் 4000க்கு மளிகை சாமான் வீட்டுல வாங்கிப் போட்டுட்டேன்க்கா!!”

ஏம்ப்பா!!

இரண்டு பொட்டப் புள்ளைங்க வீட்டுல இருக்கு! அதுகளுக்கு ஏதாவது செஞ்சு தரணுமில்ல. ஸ்கூல் வேற கிடையாது!!

என்னக்கா இந்தக் கிருமி இப்படி பண்ணுது?? பயமாத் தானிருக்கு!

ஆமாம்ப்பா! எல்லாரும் முடிஞ்சவரை வீட்டிலயே இருக்கணும்! நம்மளால யாருக்கும் கெடுதல் வரக்கூடாது இல்லையா??

ஆமாக்கா!

அப்படி எல்லாரும் நினைச்சா கிருமி கொறஞ்சிடும். நல்லாயிடுவோம்! "

சரிக்கா!!!

__________________

எங்கள் குடியிருப்பிலும் செகரட்டரி சார் நோட்டீஸ் போர்டில் கொரோனா விழிப்புணர்வாக, மாடிப்படி கைப்பிடிகளையும், லிஃப்ட் பட்டன்களையும் தொட நேர்ந்தால் டெட்டால் போன்ற கிருமி நாசினியால் உடனே கைகளை சுத்தம் செய்யுமாறு எழுதியிருந்தார்.

நாங்களும் வீடு திரும்பியவுடன் முதலில் கைகளை சுத்தம் செய்து கொண்டு, அப்படியே குளியலையும் போட்டு உடைகளை மாற்றிக் கொண்டோம். (திருச்சி வெயிலாச்சே!!)

முடிந்த அளவு, கண்ணுக்குத் தெரிந்த அளவு சுத்தமாக இருப்போம். அப்புறம்!! கடவுளின் கையில். நல்லதே நடக்கும் என நம்புவோம்.

ரோஷ்ணி கார்னர் – 24 மார்ச் 2014



பள்ளி விடுமுறை காரணமாக வீட்டிலேயே இருப்பதால், மகள் முதல் நான்கு நாட்களிலேயே 744 பக்கங்கள் கொண்ட அத்திமலைத் தேவன் மூன்றாம் பாகத்தை முழுமூச்சாக வாசித்து முடித்து விட்டாள். இருவரும் நூலைப் பற்றி நிறைய பேசிக் கொண்டோம்.

அவளுக்கு வேலை எதுவும் பெரிதாக இல்லாததால் தொடர்ந்து வாசிக்க முடிகிறது :) என்னால் மூன்றாம் பாகத்தை இன்னும் துவக்கவே முடியவில்லை.

இந்த ஆர்வமும், வேகமும், சமையல் கொஞ்சம் கற்றுக் கொள்ளவும், தலைமுடியை பின்னிக் கொள்ளவும் இருக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.

32 கருத்துகள்:

  1. வாசகம் நன்று.   ஒன்றே செய், நன்றே செய், அதை இன்றே செய் என்பார்களே, அது போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  2. அத்திமலைதேவன் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள்.  கொரோனா விழிப்புணர்வு எல்லோருக்கும் வந்தால் நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்திமலைத் தேவன் - முடிந்த போது வாசியுங்கள் ஸ்ரீராம். அம்மாவும் பெண்ணும் வாசித்து முடித்த பிறகு தான் நான் வாசிக்க வேண்டும் - அதுவும் தமிழகம் வரும்போது!

      கொரோனா விழிப்புணர்வு அனைவருக்கும் வர வேண்டியது அவசியம் - பலருக்கு இது பற்றிய புரிதல் இல்லை என்பதே நிதர்சனம்.

      நீக்கு
  3. கதம்பம் வழக்கம் போல நன்று.
    கொரானா உலக மக்களை விட்டு விலகட்டும் இறையருளால்....
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      கொரோனா விரைவில் விலக வேண்டும் என்பதே அனைவருடைய பிரார்த்தனையும்.

      நலமே விளையட்டும்.

      நீக்கு
  4. கதம்பம் ரசித்தேன்.

    ராஜா காது கழுதைக்காது.... புதிதாக ராணி காது........ பகுதியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      ராணி காது - :))))

      நீக்கு
  5. பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  6. முடிந்த அளவு, கண்ணுக்குத் தெரிந்த அளவு சுத்தமாக இருப்போம். அப்புறம்!! கடவுளின் கையில். நல்லதே நடக்கும் என நம்புவோம்......ஆம்


    அத்திமலைத் தேவன் ...நாளுக்கு நாள் ஆவல் அதிகரிக்கிறதே ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளின் கையில்.... நிதர்சனம்.

      அத்திமலைத் தேவன் - முடிந்த போது படியுங்கள் அனுப்ரேம் ஜி.

      நீக்கு
  7. அத்திமலைத் தேவன் அவசியம் படிக்க வேண்டிய நூல் என்பதை அறிந்தேன்
    நன்றி அவசியம் வாங்கிப் படிப்பேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்திமலைத்தேவன் - முடிந்த போது வாங்கிப் படியுங்கள் கரந்தை ஜெயக்குமார் ஐயா. நல்லதொரு புத்தகம் - மொத்தம் ஐந்து பாகங்கள்.

      நீக்கு
  8. //இந்த ஆர்வமும், வேகமும், சமையல் கொஞ்சம் கற்றுக் கொள்ளவும், தலைமுடியை பின்னிக் கொள்ளவும் இருக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.// ஹாஹா! அம்மாக்கள் எப்போதும் அம்மாக்கள்தான். சுவையான கதம்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாக்கள் எப்போதும் அம்மாக்கள் - ஹாஹா... அதே தான் பானும்மா...

      கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  9. பொழுது வாசிப்பின் மூலம் நிச்சயம் பயனுள்ள பொழுதாகவே கழியும்..தொடர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பு நல்லது. இப்போது தில்லியிலும் வாசிப்பு தான் பிரதான வேலை ரமணிஜி!

      நீக்கு
  10. கதம்பத்தை ரசித்தேன்.
    "//இருவரும் நூலைப் பற்றி நிறைய பேசிக் கொண்டோம்.//" - இப்படி படிக்கவே மிகவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  11. அழகான கதம்பம் ஆதி. உங்கள் வாசிப்பு அபாரம். அழகாகப் பகிர்கின்றீர்கள். பரிவை சே குமார் ஒருவிமர்சனப் போட்டி பற்றிய தகவல் ஒன்று பகிர்ந்திருந்தார். வெங்கட்ஜி எபி க்ரூப்பில் வந்ததே. ஆதி நீங்களும் அதில் கலந்து கொள்ளலாம்.

    கொரோனா விழிப்புணர்வு மக்கள் ஒழுங்காகக் கடைபிடித்தால் நலம்.

    ரோஷிணிக் குட்டியும் வாசிப்பது நல்ல பழக்கம். குடோஸ் ரோஷினி!

    வாசகம் செம. அருமை

    வெங்கட்ஜி போல நீங்களும் காதைத் தீட்டி வைச்சுருக்கீங்கன்னு சொல்லுங்க!!! ஹா ஹா ஹா நல்ல விஷயம்!

    வடாம் ஆஹா!! தொடங்கிட்டீங்க!! ஆமாம் நல்ல வெயில். இங்கும். போட நினைத்துள்ளேன்.

    //இந்த ஆர்வமும், வேகமும், சமையல் கொஞ்சம் கற்றுக் கொள்ளவும், தலைமுடியை பின்னிக் கொள்ளவும் இருக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.// டிப்பிக்கல் அம்மா!!! பரம்பரை பரம்பரையாய் ஒவ்வொரு வீட்டிலும் தொடர்வது!!!

    எனக்குப் பையன் என்றாலும் கூட நான் அவனிடம் சமைக்கக் கற்றுக் கொள்ளணும், உன் பொருளை அழகா நேர்த்தியா வைச்சுக்கணும் உன் துணியை நீயேதான் துவைக்கணும் அட்லீஸ்ட் உள்ளாடைகளை. மெஷின் தான் பயன்படுத்த வேண்டும் என்ற சூழல் வந்தால் உள்ளாடைகளை நன்றாக அலசிவிட்டு மெஷினில் போடணும் என்று பல சொல்லியிருக்கிறேன். இப்போது தனியாகத்தானே இருக்கிறான். நன்றாக மேனேஜ் செய்து கொள்கிறான். ரோஷினியும் நன்றாகச் செய்வாள் ஆதி. necessity is the mother of invention என்பது போல...

    எல்லாம் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பத்தின் அனைத்து பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      Necessity is the mother of all inventions - உண்மை. நேரம் வரும்போது எல்லாம் தெரிந்து கொள்வார்கள்.

      காது தீட்டிக் கொள்வது - ஹாஹா.... என்னிடமிருந்து தொற்றிக் கொண்டது போலும்!

      நீக்கு
  12. கதம்பம் வழக்கம் போல் அருமை.
    ரோஷ்ணி எல்லாம் கற்று கொள்கிறாள், சமையல்ம் மற்றும் தலைமுடி பின்னிக் கொள்வதும் என்ன கற்றுக் கொள்ள முடியாதா?
    இப்போது மகிழ்ச்சியாக புத்தகம் வாசித்துக் கொண்டு இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      இப்போது மகிழ்ச்சியாக புத்தகம் வாசித்துக் கொண்டு இருக்கட்டும் - :) நடுவில் கொஞ்சம் வரையட்டும்! மாற்றி மாற்றி செய்து கொண்டிருக்கலாம்!

      நீக்கு
  13. இந்த ஆர்வமும், வேகமும், சமையல் கொஞ்சம் கற்றுக் கொள்ளவும், தலைமுடியை பின்னிக் கொள்ளவும் இருக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.//ரொம்பப் பிடித்தது இதுதான். ஆதி சொல்வது உண்மையே. மணமாகிக் கூட சரியாகப் பின்னிக் கொள்ள வராமல் கூந்தலை முடிக்கக் கற்றுக் கொண்டேன்.
    அம்மா மாதிரி வராது. அன்பு ஆதிக்கு வாழ்த்துகள்.
    அத்திமலை தேவன் வாங்க ஆசை .எப்படி என்று தான் தெரியவில்லை.
    வெய்யில் வருவதற்கு முன் வடாம் போடச் சொல்லவும்.
    தலைவலி வந்துவிடும். கதம்பம் ஜோர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மணமாகிக் கூட சரியாக பின்னிக் கொள்ள வராமல்// ஹாஹா... பலருக்கும் இந்தப் பிரச்சனை உண்டு வல்லிம்மா...

      அம்மா மாதிரி வராது - உண்மை மா...

      உங்கள் ஊருக்கு அனுப்பி வைப்பார்களா எனக் கேட்க வேண்டும்.

      கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மா...

      நீக்கு
  14. அத்திமலைத்தேவன் படிக்க நினைச்சு படிக்காமயே இருக்கும் புத்தகம்..

    கொரோனா ஒழிப்பில் அரசாங்கம், மருத்துவர், காவலர், தூய்மைப்பணியாளரோடு நாமும் ஒத்துழைக்கனும். ஆனா, இது பலருக்கு புரியவே இல்லை. தெருவில் இன்னமும் தேவையற்ற நடமாட்டம் இருக்கத்தான் செய்யுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவையற்ற நடமாட்டம் - உண்மை தான். பலருக்கும் இது புரிவதில்லை. ஒரு இளைஞர் நாய் வேடம் போட்டுக் கொண்டு உலா வந்தாராம் - மதுரையில்! வீட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பது இத்தனை கடினமா என்ன!

      நீக்கு
  15. How can anyone be bored at home? Reading is best, as Roshini does.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிப்பது நல்லதொரு பொழுது போக்கு தான் கயல் இராமசாமி மேடம். தங்கள் வருகை மகிழ்ச்சி அளித்தது.

      நீக்கு
  16. ரோஷ்ணியின் வாசிக்கும் ஆவல் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....