வெள்ளி, 27 மார்ச், 2020

அந்தமானின் அழகு – நீர் விளையாட்டுகள் – கண்ணாடி படகில் பயணம் - நார்த் பே தீவு

அந்தமானின் அழகு – பகுதி 12



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

Travel is more than seeing something new, it is also about leaving behind something that’s old.  Whether that be your past, your misconceptions, your comfort level or your anxieties, the next time you head down a new path, realize that there’s no better time to be the new you!



Bபோஸ் தீவிலிருந்து புறப்பட்டு அடுத்ததாக நாங்கள் சென்ற தீவு – North Bay Island என அழைக்கப்படும் தீவு.  போர்ட் Bப்ளேயரிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தத் தீவிற்கு படகு வழி பயணித்தால் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். வழியில் இருக்கும் போஸ் தீவிலிருந்து நாம் பயணிப்பதால் சுமார் 35-40 நிமிடங்களில் இந்த தீவிற்குச் சென்று விடலாம்.  போர்ட் Bப்ளேயரிலிருந்து நம்மை அழைத்து வந்த அதே படகில் ஏறிக் கொண்டு நாம் இந்த அடுத்த தீவிற்குச் சென்று விடலாம். முதல் தீவில் நம்மை விட்டு விட்டுச் சென்று படகு இடைப்பட்ட இந்த நேரத்தில் இன்னும் சிலரை அழைத்துக் கொண்டு வருவதில் இயங்கிக் கொண்டிருக்கும். அதனால் தொடர்ந்து படகுப் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நார்த் Bபே தீவில் என்ன இருக்கிறது?  இங்கே தான் பவளப் பாறைகள் அதிக அளவில் இருக்கின்றன.  அதனால் இங்கே தான் நிறைய நீர் விளையாட்டுகள் இருக்கின்றன – ஸ்கூபா டைவிங், ஸ்னார்க்ளிங், ஸீ வாக், கண்ணாடிப் படகில் உலா என நிறைய விஷயங்கள் இங்கே உண்டு. 



முன்னரே இந்த விளையாட்டுகளுக்கான கட்டணங்களை சொல்லி இருக்கிறேன் – ஸீ வாக் மட்டும் உங்களுக்குச் சொல்லவில்லை – ஏனெனில் நாங்கள் சென்றபோது இந்த விளையாட்டினை தடை செய்திருந்தார்கள்.  எங்கள் குழுவில் இருந்த குழந்தைகள் ஸ்கூபா டைவிங் செய்ய பணம் கட்டியிருந்தார்கள் – பெரியவர்களை அனுமதிக்கவில்லை – எங்களில் சிலர் பணம் கட்டியிருந்தும் அனுமதி தரவில்லை – படகுத் துறைக்கு திரும்பி செல்லும் சமயத்தில் முன்பணத்தினை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள் – வயதும், உருவமும் காரணமாக எங்களை அனுமதிக்கவில்லை. அதில் எங்கள் அனைவருக்கும் வருத்தம் தான் – ஏண்டா நமக்கு ஒண்ணும் இல்லையே, ஏன் விட மாட்டேன் என்கிறார்கள் என வருத்தம்.  இருந்தாலும் சும்மா இருக்க முடியாதே! ஸ்கூபா டைவிங் செய்யப் போகிறவர்கள் தவிர மற்றவர்கள் முதலில் கண்ணாடிப் படகுகளில் பயணம் செய்யலாம் என முடிவு செய்தோம்.



டால்ஃபின் என்ற கண்ணாடிப் படகில் பயணம் செய்வதாக ஏற்பாடு செய்து முன்பணமும் கட்டிய பிறகு தீவிற்கு வந்து பார்த்தால் அந்தப் படகில் ஏதோ கோளாறு. அதனால் படகு இயங்காது என்று தெரிவித்து விட்டார் எங்கள் படகோட்டி. ஆனால் கவலைப் பட வேண்டாம் – வேறு சிறு படகுகள் உண்டு – அவையும் கண்ணாடிப் படகுகள் தான் – அவற்றில் நீங்கள் சுற்றி வரலாம் – கட்டணமும் குறைவு தான் – நீங்கள் முன்பணம் செலுத்தியதை திரும்பி வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி, அதற்கு நீங்கள் தயார் என்றால் படகு ஏற்பாடு செய்து விடலாம் என்று சொல்ல, சரி என்று சொல்லி விட்டோம். சிறிய படகுகள் – பத்து பேர் வரை சுற்றி அமர்ந்து கொள்ள படகின் நடுவில் கீழ்புறம்  பூதக்கண்ணாடி -  கண்ணாடி வழியே கடலின் அடியே இருக்கும் விஷயங்களைப் பார்க்க முடியும். டீசல் இஞ்சின் மூலம் இயங்கும் இப்படகினை இயக்குவது ஒரே ஒருவர் தான். பயணிகள் அனைவருக்கும் பாதுகாப்பு உடைகள் அணிவித்து படகினை இயக்குகிறார் அந்த படகோட்டி.  சற்று தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. தினம் தினம் இங்கே படகோட்டுவதால், பவளப் பாறைகள் எந்த இடத்தில் இருக்கும் என்பது இவர்களுக்கு அத்துப்படி.



சரியான இடத்திற்குச் சென்றவுடன் படகினை நிறுத்தி விடுகிறார் படகோட்டி.  பூதக் கண்ணாடி வழியே நாம் காணும் காட்சி நம்மை மயக்குகிறது – எத்தனை அழகான பவளப் பாறைகள் – பல வண்ணங்களில், பல வடிவங்களில் – பார்க்கப் பார்க்க பரவசம். பவளப் பாறைகள் இருக்கும் இடங்களில் இருக்கும் வண்ண வண்ண மீன்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.  பதினைந்து இருபது நிமிடங்கள் அந்தப் பகுதியில் படகினை அங்கேயும் இங்கேயுமாக திருப்பி பல விஷயங்களை நமக்குச் சொல்கிறார் படகோட்டி – ஒவ்வொரு பவளப் பாறையின் பெயர், அதன் தன்மை என பலவும் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார் படகோட்டி!  நாம் படகின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு, நன்கு குனிந்து பூதக்கண்ணாடி வழியே கடலின் கீழே இருக்கும் அனைத்து விஷயங்களையும் ரசிக்க முடிகிறது.  ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்னார்க்ளிங் விளையாட்டுகள் மூலம் கடலுக்குள் சென்று பார்ப்பதற்கும் இந்த மாதிரி பூதக்கண்ணாடி வழி பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு என்றாலும் கடலுக்குள் செல்ல முடியாதவர்கள் இந்த மாதிரி பார்த்தாலும் நன்றாகவே இருக்கும். 



படகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டே சிலர் அலைபேசி வழி காணொளிகளும் எடுத்தார்கள் என்றாலும் அத்தனை நன்றாக வரவில்லை.  சரி இன்னும் அருகே சென்று எடுக்கலாமே என நண்பர் ஒருவர் கீழே படுத்துக் கொண்டு எடுக்க முயற்சிக்க, படகோட்டி அலறி விட்டார்.  ”என்ன பண்ணீங்க, முதல்ல உட்காருங்க, அத்தனை பேரும் கடலுக்குள் விழுந்துடுவோம்!” என்று சற்றே பயந்து போக, நண்பரை ஒருவழியாக இருக்கையில் அமர வைத்தோம்! நாங்கள் அனைவரும் புன்னகைத்தாலும் அந்த படகோட்டியின் முகம் போன போக்கிலிருந்து எத்தனை பெரிய தவறை அவரைச் செய்திருக்கிறார் என்று புரிந்தது.  நல்லவேளை எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை!  என்னதான் பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்தாலும் கடலுக்குள் விழுந்து விட்டால் வரும் பிரச்சனைகள் அதிகம் தானே!  படகோட்டியையும் தாஜா செய்து, சற்று நேரம் அந்தப் பகுதியில் இருந்து எல்லா விவரங்களையும் அவரிடம் கேட்டுக் கொண்டு மீண்டும் நார்த் பே கடற்கரை பகுதிக்கு வந்து சேர்ந்தோம். ஸ்கூபா டைவிங் செய்யச் சென்றவர்கள் அவர்களுக்கான பயிற்சியை முடித்து டைவிங் செய்ய தயாராக இருந்தார்கள். 



எங்கள் படகு திரும்பியதும், மற்றொரு படகில் குழுவின் மற்ற உறுப்பினர்களையும் கண்ணாடிப் படகில் அனுப்பி வைத்தோம். அவர்கள் சென்ற படகு அதே இடத்திற்குச் சென்று அவர்களுக்கும் பவளப் பாறைகளைக் காண்பித்த பிறகு திரும்பியது.  இரண்டாம் படகில் சென்ற சிலருக்கு டீசல் இஞ்சினின் புகை ஒத்துக் கொள்ளாமல் போனதால் அதிக நேரம் அவர்களால் பவளப் பாறைகளைக் கண்டு ரசிக்க முடியவில்லை என்று சொன்னார்கள். சிலருக்கு படகுப் பயணங்கள் ஒத்துக் கொள்வதில்லை – அதிலும் சிறு படகு, இயந்திரத்தின் புகை போன்றவை ஒத்துக் கொள்ளாது! பொதுவாக படகு, கப்பல் பயணங்களில் நீரில் ஆட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் – பலருக்கும் இந்த ஆட்டம் ஒத்துக் கொள்வதில்லை – ஒவ்வாமை காரணமாக டேஷ் – வாந்தி பிரச்சனைகள் வந்து விடும்.  படகுப் பயணம் செல்லும்போது கைவசம் அதற்கான மாத்திரை எடுத்துக் கொள்வது நலம்.  முடிந்தால் கையில் எலுமிச்சை வைத்து முகர்ந்து கொள்ளலாம். அல்லது நார்த்தங்காய் கூட வாயில் அடக்கிக் கொள்ளலாம்! எங்கள் குழுவினர் நார்த்தங்காய் வைத்திருந்தார்கள். படகுப் பயணங்களில் அது அதிகம் உதவியது. 



தொடரின் இந்தப் பகுதியில் கண்ணாடிப் படகுகள் வழி பவளப் பாறைகளை பார்த்து ரசித்தது பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. அடுத்த பகுதியில், இந்தத் தீவில் பார்த்து, ரசித்து, அனுபவித்த மற்ற விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் 
புது தில்லி

பின்குறிப்பு: இந்தப் பகுதியில் இணைத்திருக்கும் படங்கள் இணையத்திலிருந்து... கண்ணாடிபடகுப் பயணத்தில் படங்கள் எதுவும் எடுக்க முடியவில்லை.

36 கருத்துகள்:

  1. அதென்ன டேஷ்?   படுத்துக்கொண்டு படம் எடுக்க முயற்சித்தவர் அப்புறம் நினைத்து நினைத்து சிரித்திருப்பார்...   நல்ல அனுபவங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம்.

      வாந்தியை டேஷ் என்றும் சொல்வதுண்டு ஸ்ரீராம்.

      படம் எடுத்தவர் சிரித்தாரோ இல்லையோ, குழுவில் உள்ள அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தோம். பயணம் முழுவதும் இப்படியான அனுபவங்கள் நிறையவே உண்டு.

      நீக்கு
    2. நான் கூட டேஷ் – வாந்தி என்றவுடன்...

      வாந்தி - முன்னே வருவது,
      டேஷ் - வயிற்றை கலக்குவதால் டேஷ்
      என்று நினைத்தேன்...

      நீக்கு
    3. டேஷ் என்றாலே வாந்தி தான் தனபாலன்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை.சுமார் 40 நிமிடங்கள் பவளப் பாறை இருக்குமிடம் வரை படகில் பயணிப்பதே ஒரு அனுபவம்தான்.

    கண்ணாடி படகு பயண அனுபவங்கள் பற்றிய தொகுப்பு நன்றாக இருந்தது. நீரில் செல்லும் போது அந்த அதிர்வுகள் சிலருக்கு கொஞ்சம் ஒவ்வாமை வரும்.முன்பெல்லாம் அதிக தூரம் பஸ்ஸிலேயே சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் போகும். பலர் எலுமிச்சை பழத்தை முகர்ந்து கொண்டு வருவதை முன்பெல்லாம் நான் பார்த்திருக்கிறேன்.

    இணையத்திலுருந்து எடுத்த படங்கள் நன்றாக உள்ளன. படகில் படுக்கும் போது உடலின் பளு காரணமாக படகு ஒரு பக்கமாக சரிந்து விடும் அபாயம் வரும் போலிருக்கிறது. பாவம் அந்த நண்பர்.. அப்போதைக்கு அவருக்கும் ஏதோ தவறு செய்து விட்டோம் என ஒரு டென்ஷன் வந்திருக்கும். அடுத்து வரும் பகுதிக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம்.

      படகுப் பயணம் சுகமான அனுபவம் தான் கமலா ஹரிஹரன் ஜி. ஒத்துக் கொள்ளாதவர்கள் கொஞ்சம் கஷ்டப்படுவார்கள்.

      சில சமயங்களில் நாம் செய்வது தவறு என்று நமக்குப் புரிவதில்லை!

      விரைவில் அடுத்த பதிவுடன் வருவேன்.

      நீக்கு
  3. படகின் தரைப்பாகம் கண்ணாடி சீட் என்றால் உட்காரும் ஸீட் ஸைடில் அந்தரத்தில் பிட் செய்து இருக்குமோ ஜி

    இந்த கேரமா படுத்தும்பாடு மனிதனை சுலபமாக மண்ணைக் கவ்வ வைக்கிறது.

    பதிவு வெகு சுவாரஸ்யம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கில்லர்ஜி.

      பக்கவாட்டில் இருக்கும் இருக்கைகள் - சாதாரண படகில் சரியான உயரத்தில் தான் இருக்கிறது. டால்ஃபின் வடிவ படகில் கொஞ்சம் உயரம் அதிகம்.

      கேமரா படுத்தும் பாடு! ஹாஹா..

      நீக்கு
  4. படங்கள் குறைவாக இருந்தாலும், உள்ளவை தான் எத்தனை அழகு...

    படகோட்டி அலறிய சம்பவம் திக்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி - இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை தனபாலன்.

      படகோட்டி - ரொம்பவே பாவம் அவர்... பதறி விட்டார். இப்போது நினைத்தால் சிரிப்பாக இருந்தாலும் அந்த நேரத்தில் அவர் பதட்டம் அடைந்தது உண்மை.

      நீக்கு
  5. படங்கள் அழகு. அசையும் படகில் அசையாமல் இருந்து கீழே உள்ள கண்ணாடி வழியே போகஸ் செய்து ஆங்கிள் சரியாக, பிரேமும் சரியாக போட்டோ எடுப்பது மிகக் கடினம். பாராட்டுக்கள். 
     உங்களுக்கு இன்றுஅலுவலகம் செல்லும் உத்தேசம்  இல்லை என்று தோன்றுகிறது. Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் பின் குறிப்பு படிக்கவில்லை போலும்! படங்கள் இணையத்திலிருந்து என பின்குறிப்பில் எழுதி இருக்கிறேன்! அசையும் படகில் படம் எடுப்பது கடினம் தான். நான் கேமராவினை வெளியே எடுக்கவேயில்லை!

      இன்றைக்கு அலுவலகம் செல்லப் போவதில்லை ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  6. மிகவும் அருமையான பதிவு. நாங்களும் கண்ணாடி படகில் சென்று ரசித்தொம். மறக்கமுடியாத அனுபவம் இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்க முடியாத அனுபவம் தான் இராமசாமி ஜி. நீங்களும் ரசித்திருப்பதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  7. மற்ற பகுதிகளை எல்லாம் படித்து விட்டு வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது மற்ற பகுதிகளையும் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  8. படகு பயணத்தில் குனிவது, நிற்பது,தண்ணீரில் கை வைப்பது எல்லாம் ஆபத்தை தரும் தான்.
    எல்லோருக்கும் படகோட்டி பயந்து பதறியது நிலைமையின் தீவிரத்தை சொல்கிறது.
    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தண்ணீரில் கைவைப்பது நல்லதல்ல. கடலுக்குள் என்ன இருக்கும் என்பதை சொல்ல முடியாது. ஆனாலும் பலர் படகோட்டி சொல்வதைக் கேட்பதில்லை கோமதிம்மா...

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
  9. தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

    தற்போது, தங்களது அந்தமானின் அழகு – நீர் விளையாட்டுகள் – கண்ணாடி படகில் பயணம் – நார்த் பே தீவு பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    இந்த நிலையில், அடுத்த கட்டமாக தமிழுக்காக ஒரு அகராதியையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த அகராதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். அகராதி---->>> சொல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல புதிய முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் சிகரம் பாரதி. உங்கள் முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துகள்.

      நீக்கு
  10. பவளப்பாறை பயணம் - எனக்கு இந்தோநேஷியாவில் கடலுக்கு அடியில் நின்று பவளப்பாறைகளைப் பார்த்ததும், கடலில் மிதக்கும் உடுப்புகளோடு படுத்துக்கொண்டு பார்த்ததும் நினைவுக்கு வந்தது. அது ஒரு தனி அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பவளப் பாறைகள் பயணம் - நிச்சயமாக நல்லதொரு அனுபவம் தான் நெல்லைத் தமிழன். நிச்சயம் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டிய ஒரு விஷயம்.

      நீங்களும் இந்த விஷயங்களை அனுபவித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  11. வழக்கம்போல் படங்கள் அருமை..

    படகினுள் செல்லும்போது வழிகாட்டி சொல்வதுப்போல் கேட்டு நடக்க வேண்டும். ஒக்கேனக்கலில் படகோட்டியின் அறிவுறையை கேளாமல் அலைப்பேசியில் செல்பி எடுக்க படகோடு கவிழ்ந்ததை நேரில் பார்த்திருக்கிறென். அன்றிலிருந்து படகில் செல்லவே பயம் எனக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராஜி.

      ப்டகினுள் செல்லும்போது நிச்சயம் படகோட்டி சொல்வது போல நடந்து கொள்ள வேண்டும். படகில் செல்வதில் தவறில்லை.

      நீக்கு
  12. இந்தப் பகுதியை பவளப் பாறைகள் ஸ்பெஷல் என்று சொல்லலாம். நல்ல அனுபவங்கள். போனது தான் போகிறோம் எல்லாவற்றையும் தீர்க்கமாக பார்த்து விட வேண்டும் என்ற ஆவலும் மனத் துணிவும் உங்களுக்கு இருப்பது நீங்கள் பெற்ற வரம்.

    எல்லாவற்றையும் நீங்கள் நிதானமாகச் சொல்வது ஆழ்ந்து புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் எந்த விஷயத்தையும் விடாது சொல்வது மட்டுமல்லாமல் பிறர் பயணம் மேற்கொள்ள நினைப்பார்கள் என்று அதற்கான ஆலோசனைகளையும் இடையிடையே புகுத்திச் சொல்வது மிக சிறந்த பயணக் கட்டுரை எழுத்தாளராக உங்களை எங்களுக்குக் காட்டுகிறது.

    என்னால் இப்படி முடியாது. அதிகம் எழுத்தில் பெற்ற உணர்வைக் காட்டுகிற ஆசாமி. பயணக் க்ட்டுரைகளுக்கு அது அவ்வளவு பிறருக்கு உதவிகரமாக இருக்காது என்று தெரிந்து கொண்டேன். நன்றி, வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பின்னூட்டம் எனக்கு ஊக்கம் அளிக்கிறது ஜீவி ஐயா. முடிந்தவரை தகவல்களை சொல்ல முயற்சிக்கிறேன்.

      செல்லும் இடங்களில் என்ன விஷயம் இருக்கிறதோ அவற்றை முடிந்தவரை பார்த்துவிடுவது உண்டு. எது ஒத்து வருமோ அதைச் செய்து விடுவது வழக்கம் ஐயா.

      நீக்கு
  13. வெங்கட்ஜி படங்கள் என்ன அழகு! கடலுக்கடியில்தான் எத்தனை அழகு ஒளிந்திருக்கிறது. ரகசியங்கள்!

    நண்பர் படுத்துக் கொண்டு// ஹா ஹா ஹா ஹா கண்டிப்பாக இனி அந்தப் படகோட்டி அடுத்து ட்ரிப்பில் யாரும் படுத்துக் கொண்டு ஃபோட்டோ எடுக்கக் கூடாது என்று எச்சரிப்பார் என்று நினைக்கிறேன். ஹா ஹா ஹா

    நல்ல அனுபவங்கள் ஜி உங்களூக்கு. விவரணம், விளக்கங்கள் அருமை. டால்ஃபின் போட் அழகாக இருக்கிறது.

    திருவனந்தபுரம் கோவளம் பீச்சில் 2 கிலோமீட்டர் தொலைவு கட்டமர்ன் ல் சென்ற அனுபவம் உண்டு. ஹையோ திரில். படகு ஒவ்வொரு அலைக்கும் மேலெழும்பி, கீழே சென்று தண்ணீர் உள்ளே வர அதை படகோட்டி அவ்வப்போது எடுத்து வெளியில் விட...நாம் தண்ணீரைத் தொட்டுக் கொண்டே செல்லலாம். கொஞ்ச தூரம் சென்றதும் போட் கொஞ்சம் அமைதிப்படும் என்றாலும் ஏற்றம் சரிதல் எல்லாம் இருக்கும். வயிற்றில் அட்ரினல் சுரந்தது உண்மை. அதோடு சேர்த்து எஞ்சாய் செய்தோம்..

    அப்போது திரும்பி வரும் போது பாறைகளைச் சுற்றி இருந்த தண்ணீரின் ஆழத்தில் கலர் கராகச் செடிகளும் மீன்களும் பவளப் பாறை என்று அவர் சொல்லிக் காட்டினார்...செம அழகு. தெளிந்த நீர் எனவே பார்க்க முடிந்தது.

    பதிவை மிகவும் ரசித்தேன் ஜி.

    வாசகம் மிகப் பொருத்தமான ஒன்று. அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயிற்றில் அட்ரினல் சுரந்தது - உண்மை தான். பலருக்கும் இந்த படகுப் பயணங்கள் ஒத்துக் கொள்வதில்லை கீதாஜி.

      உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      வாசகம், பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  14. படகின் கீழ்புறம் கண்ணாடியா
    ஆகா அற்புதமாகக் கடலைப் பார்க்கலாமே
    அருமையானப் பயணம் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கண்ணாடியால் ஆனது படகின் கீழ்ப்புறம் - அதுவும் பூதக்கண்ணாடி - கடலின் அடியில் இருப்பவற்றை நன்றாக பார்க்க முடியும். அது ஒரு ஆனந்த அனுபவம் தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  15. கண்ணாடிப் படகுகள் வழி பவளப் பாறை...ஆஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

      நீக்கு
  16. படங்கள் நன்று.பவளப்பாறைகளையும் மீன்களையும் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்தான். என்றாலும் அந்தமானை பார்க்க நமக்கு கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் உங்களுக்கும் அந்தமான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திடட்டும் மாதேவி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....