நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
உனக்கு எது பிடிக்கவில்லையோ அதனிடமிருந்து விலகி நில். அது உறவானாலும் சரி, பொருளானாலும் சரி. அதனையே நினைத்து வருந்தி உடலையும் மனதையும் வருத்திக் கொள்ளாதே! அதனால் பாதிக்கப்படுவது நீ மட்டுமே.
ஊரடங்கு-1 – மேட்சிங் மாஸ்க் - 15 மே 2020:
மேட்சிங் மேட்சிங்!!!
இரண்டு மாதமாக வெளியே எங்கும் செல்லாததால் மாஸ்க் தேவைப்படலை. சில நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள மருந்துக்கடைக்கு அலைபேசி வழியே சொல்லி மாத்திரைகள் வாங்கும் போது எதற்கும் இருக்கட்டும் என்று மருத்துவ மாஸ்க் வாங்கி வைத்திருந்தேன்.
நேற்று அதை அணிந்து கொண்டு தான் வெளியே சென்றோம். எல்லோரும் கலர் கலராக அணிந்திருக்க நாங்கள் மட்டும் வித்தியாசமாய்!! அதனால் தான் எங்களைக் கண்டதும், மாஸ்க்கே அணியாத ஒருசிலரும் முகத்தை வேகமாக மூடிக் கொண்டார்கள் போலும் :) தொற்று இருக்குமென நினைத்து விட்டார்களோ :)
நேற்றைய ஊர்சுற்றலில் வாங்கியது. 10 ரூ. பனியன் துணியில். வியர்வைக்கு ஏற்றதாகவும், புடவை அல்லது சுடிதாருக்கு மேட்சிங்காகவும் இருக்கும் :) இனி இவையில்லாமல் வெளியே செல்ல முடியாது என்ற போது வாங்குவது ஒன்றும் தப்பில்லையே :) எல்லாவற்றையும் இன்று துவைத்து அலமாரியில் எடுத்து வைத்தேன்.
ரோஷ்ணி கார்னர் - 19 மே 2020:
மகள் சமீபத்தில் வரைந்த
ஓவியம் ஒன்று.
ஊரடங்கு – 2: – 21 மே 2020
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
வீட்டுக்குள்ளேயே இருக்கவும் பழகிப் போய் விட்டது. லன்ச் பாக்ஸ் கட்டாமலே, யூனிஃபார்ம் துவைக்கும் வேலையில்லாமலே ஆன்லைன் மூலம் பள்ளி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது..
..........................
ஹாய்ப்பா!
நான் இன்னிக்கு காலையிலேயே சீக்கிரம் எழுந்து, குளித்து தலை பின்னி, டிபனும் சாப்ட்டுட்டு கிளாஸ் அட்டெண்ட் பண்ணினேனே!! அம்மா தான் இன்னும் குளிக்கவே இல்ல :) Bad girl!!
ஓ! அப்படியா! சரி தலைமுடியை நீயே பின்னிண்டயா??
அம்மா தான் பின்னி விட்டா!
டிபன் உனக்கு எப்படி கெடைச்சது?
அம்மா தான் பண்ணித் தந்தா :)
!!!!!!!!!!!!!
நேற்று அம்மாவும், மகளும் வார்த்தை விளையாட்டில் (word building) நேரத்தை செலவிட்டோம். ஆங்கிலத்திலும், தமிழிலிலும்.
அம்மாமாமா!!!!! என்னை விட உனக்கு தான் நிறைய தெரிஞ்சிருக்கு! நீ தான் நிறைய சொல்ற! என்றாள் மகள்...:)
...….…............................
இருவரும் சமையல் பற்றி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அடிப்படை கேள்விகளுக்கு பதில் சொன்னாள். நான் என்னென்ன வாங்குவேன்! எந்த அரிசியில் சமைப்பேன்! பருப்புகளில் வித்தியாசம் எல்லாம் தெரிந்திருந்தது! பரவாயில்லை :)
சரி கண்ணா! இன்னிக்கு நீயே சாய் ( Tea ) போடேன்! அம்மா டேஸ்ட் பண்றேன்??
போம்மா! இன்னிக்கு லீவ்!!!!!!!
ஹா...ஹா...ஹா...
கிச்சனுக்கெல்லாம் லீவ், ஊரடங்கு, ஸ்ட்ரைக் எதுவும் கிடையாது:) அம்மா லீவ் போட்டா உனக்கு எப்படி கிடைக்கும் சொல்லு!!
............................
இப்படித்தான் எங்கள் ஊரடங்கு நாட்கள் செல்கிறது.
ஆதியின் அடுக்களையிலிருந்து – மாம்பழ புளிசேரி - 21 மே 2020:
நம்ம Vidya Subramaniam மேம்
பதிவில் மாம்பழ புளிசேரியைப் பற்றி படித்ததிலிருந்தே செய்யணும்னு முடிவு பண்ணிட்டேன் :)
நம்ம Tulsi Gopal டீச்சரும் அவங்க பங்குக்கு அவங்க வீட்டு 'மாங்காயில்' புளிசேரி பண்ணி பகிர்ந்திருந்தாங்க :)
நேற்றே செய்ய எண்ணியிருந்தேன். தயிர் சாப்பிடாத மகளைக் கூட convince பண்ணி வைத்திருந்தேன். ஆனால் மாம்பழம் நறுக்கிய பின்னர் தான் Monthly power shutdown என்று தெரியவந்தது :) அடடா! குழம்புக்கு அரைக்க முடியாதே! புளிசேரி கனவு பாழாய் போச்சே! என்று கலக்கமாய்ட்டேன் :)
விடுவோமா!!! இன்று செய்து விட்டேன் :) பப்படம் இல்லாததால் அப்பளத்துடன் சுவைத்தோம். சுவை யம்மி!! யம்மி!!
கேரள உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும், என் பிறந்த வீட்டில் கேரள சாயல் இருக்கும் என்றாலும் இந்த மாம்பழ புளிசேரியை இதுவரை சுவைத்ததில்லை. ரெசிபியை பகிர்ந்து கொண்ட வித்யா மேடத்திற்கு அன்பான நன்றி.
ஆதியின் அடுக்களையிலிருந்து – உக்காரை - 22 மே 2020:
உக்காரை/ஒக்கோரை!
பாட்டிம்மா காலத்து இனிப்பு இது. திருநெல்வேலி பகுதிகளில் இந்த இனிப்பைச் செய்வார்களாம். என் பாட்டி செய்து கொடுத்து என் அப்பா விரும்பி சாப்பிட்ட இனிப்பு. பாட்டி திருநெல்வேலி சங்கரன் கோவிலைச் சேர்ந்தவர்.
வீட்டில் இருக்கும் கடலைப்பருப்பு, வெல்லம், நெய் போன்றவற்றை வைத்து செய்திருக்கிறார்கள். ஒரு தீபாவளி சமயத்தில் முதல்முறையாக செய்து என்னவருக்குத் தந்தேன். அவர் அதுவரை கேள்விப்பட்டதில்லை :)
மகள் இரண்டு நாட்களாக செய்து தரச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தாள். விரும்பியதை கேட்டு ரசித்து சாப்பிடும் வயது:) நானும் என் அம்மா இருந்தவரை தான் ரசித்து சாப்பிட்டேன். அப்புறமெல்லாம் காலி பண்ணனுமே என்றும் சீக்கிரம் சாப்பிடணும் என்றும் தான் செல்கின்றன :)
செய்முறை எளிது தான். சுவை அபாரம்.
செய்முறை இதோ - உக்காரை
****
மணநாள் – 19-ஆம் வருடத்தில் அடியெடுத்து – 24 மே 2020:
ஊரடங்கால் மட்டுமல்ல பொதுவாகவே இந்த நாளுக்காக என்று ஷாப்பிங், கோவில், சினிமா, ஹோட்டல் என்று சென்றதில்லை. பெரும்பாலும் ஒரே ஊரிலேயே இருவரும் இருந்ததில்லை :)
என் கணவருக்கு பயணங்கள் செய்வது மிகவும் பிடித்தமானது. எனக்கு சிறுவயதிலிருந்தே ஒத்துக் கொள்ளாதது :) எனக்கு sentiments நிறைய உண்டு! அவருக்கு sentiments, formalities எதுவும் கிடையாது :) இது தான் கடவுள் போடும் முடிச்சு :)
இவை எல்லாவற்றையும் கடந்து இருவருக்குள்ளும் நிறைய நம்பிக்கையும், அக்கறையும், புரிதலும் இருக்கு. எனக்கு என்ன பிடிக்குமென்று அவருக்குத் தெரியும். அவர் எந்த சந்தர்ப்பத்தில் என்ன சொல்வார்! என்ன நினைப்பார் என்று எனக்குத் தெரியும் :)
கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை இல்லாமலா???! அது போன்ற சந்தர்ப்பங்களில் வெளியே கிளம்பி போய்விடுவார் :) அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு எவ்வளவு தான் பேசினாலும் பதிலாக one word answer தான் வரும் :)
இத்தனை வருடங்களும் இவரால் தான் எத்தனையோ சந்தர்ப்பங்களை தைரியத்துடன் எளிதில் என்னால் கடந்து வர முடிந்தது. நல்லதொரு நண்பர், வழிகாட்டி, நலம் விரும்பி! கண்டிப்புடன் அவ்வப்போது அறிவுரைகளும் தருவார். இதுவரை அவர் வார்த்தையை நானும் மீறியதில்லை :)
மணநாள் – வாழ்த்துகளுக்கு நன்றி – 25 மே 2020:
ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதிலளிக்க முடியாததற்கு மன்னிக்கவும்...லைக் மட்டும் தெரிவித்து அதன் மூலம் வாழ்த்துச் சொன்னவர்கள், லைக்கோடு பின்னூட்டமும் தந்து வாழ்த்தியவர்கள் என அனைவருக்கும் சரிசமமாக எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்!
காலை எழுந்ததும் முதல் வேலையாக என்னவருக்கு அழைத்து வாழ்த்துகளைச் சொன்னேன்! 18 வருடங்கள் ஆச்சு என்பதைத் தவிர என்னிடம் அதைப் பற்றிய விஷயம் ஏதுமில்லை என்று சொல்லி தன்னுடைய வலைப்பூவில் (blog) வழக்கமாக பதிவிடும் ஏதோ ஒரு குறும்படத்தை பகிர்ந்திருந்தார்... அதைப் பார்த்து விட்டு என் வழக்கமான வேலைகளைத் தொடர்ந்தேன்... இதுவே நிதர்சனம்...))
இன்றைய நாள் அனைவருக்கும் இனியதொரு நாளாக அமையட்டும்!
****
என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!
மீண்டும் சந்திப்போம்…
சிந்திப்போம்…
நட்புடன்
ஆதி வெங்கட்.
ஒன்றைத்தவிர மற்றவை பேஸ்புக்கில் படித்திருந்தேன். சுவையான கதம்பம். அங்கு படித்திராத அம்மா மகள் உரையாடலை மிகவும் ரசித்தேன். ரோஷ்ணிக்குப் பாராட்டுகள். வாசகம் வழக்கம் போலவே அருமை.
பதிலளிநீக்குஅனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
நீக்குமணநான் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகதம்பம் வழக்கம் போல அழகு
மாம்பழ புளிசேரி கேரள பாணியில் இருக்கிறது எனக்கு கேரள சமையல் பிடிக்கும்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி..உங்களுக்கும் கேரள சமையல் பிடிக்கும் என்பதில் மகிழ்ச்சி..தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகதம்பம் அருமை. வாசகம் நன்றாக இருந்தது. பொதுவாக விலகியிருந்தால் தானாகவே விரும்பி வரும். (வா ராஜா வா படம் மாத்ரி.)
மாஸ்க் விதவிதமாக மேட்சிங் பார்த்து வந்து விட்டது. இனி போடும் டிரஸ் உடனேயே, புடவையுடன் பிளவுஸ் பிட் இணைந்திருப்பது போல் மாஸ்க்கும் இணைந்து வந்து விடும்...:)
அம்மா, மகள் உரையாடல் நன்றாக அன்பு இழையோட இருந்தது.
தங்கள் மகள் வரைந்துள்ள ஓவியம் அழகாக உள்ளது. ரோஷ்ணிக்கு எனது அன்பான வாழ்த்துகள்.
மாம்பழ புளிச்சேரி உக்காரை எல்லாமே அழகாக ருசியுடன் உள்ளது. உக்காரை முக்கால்வாசி நான் தீபாவளிக்கு கண்டிப்பாக செய்வேன்.
உங்களுக்கு எனது அன்பார்ந்த இனிய மணநாள் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//உக்காரை முக்கால்வாசி நான் தீபாவளிக்கு கண்டிப்பாக செய்வேன்.// - பாத்திரத்தில் மீதி கால்வாசி என்ன செய்வீங்க்ன்னு கேட்டு டென்ஷனாக்க மாட்டேன் கமலா ஹரிஹரன் மேடம்.
நீக்குநெல்லைக்காரங்க, உக்காரை என்று ஒரு நாளும் சொல்லமாட்டாங்க. ஒக்கோரைதான். 'உக்காரை' என்று சொல்வது செட்டிநாட்டு வழக்கம். இல்லையா?
/உக்காரை முக்கால்வாசி நான் தீபாவளிக்கு கண்டிப்பாக செய்வேன்.// - பாத்திரத்தில் மீதி கால்வாசி என்ன செய்வீங்க்ன்னு கேட்டு டென்ஷனாக்க மாட்டேன் கமலா ஹரிஹரன் மேடம்./
நீக்குஹா.ஹா.ஹா. ரசித்தேன். ஆமாம்...! இதில் டென்ஷனாக என்ன இருக்கிறது?. பாத்திரத்தில் முக்கால்வாசி செய்தால்தான் எடுத்து சாப்பிட வசதியாக இருக்கும். முழுதும் நிரப்பி வைத்தால், எடுத்து சாப்பிடும் போது சிந்தி சிதறி விடாதோ? எதற்கும் முக்காலமும் உணர்ந்த அதிரா சகோதரி வந்தால், முக்கால்வாசியின் தத்துவம் புரிந்து விடுமென நினைக்கிறேன். இல்லையா? ஹா.ஹா.ஹா.
நாங்கள் அம்மா வீட்டிலெல்லாம் உக்கரை என்போம். உக்கரை இங்கு மருவி எல்லாவிடத்திலும் ஒக்காரையாக வந்திருக்கிறது என நினைக்கிறேன். சரியான பேச்சு வழக்கு அறிந்ததில்லை. நீங்கள் தந்த தகவலுக்கும் நன்றி.
புடவையுடன் மேட்சிங் மாஸ்க்..:) வரலாம்..
நீக்குஅனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கமலா மேடம்..
கதம்பம் ரசிக்கும்படி இருந்தது. மாம்பழ கேசரி செய்முறை பார்க்கணும்.
பதிலளிநீக்குரொம்ப நாளா ஒக்கோரை செய்யணும்னு நினைத்திருக்கிறேன். சந்தர்ப்பம் வாய்க்கலை.
மணநாளுக்கு வாழ்த்துகள். கருத்து வேறுபாடுகளே வரக்கூடாதுன்னா இரண்டு மரக்கட்டைகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சால்தான் சாத்தியம்.
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்..
நீக்குமாம்பழ புளிசேரிக்கு லிங்க் தரலையா?
பதிலளிநீக்குலிங்க் தரலை..தேங்காய், ப.மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து மோரில் விட்டு கலந்து வெந்த மாம்பழத்துடன் சேர்க்க வேண்டியது தான்..தாளித்தும் விடணும்..
நீக்குஅருமையான கதம்பம்... ஓவியம் அழகு... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தனபாலன் சகோ..
நீக்குஆதி, வெங்கட் இருவருக்கும், திருமண நாளுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்! அனைத்து வளங்களுடன் அனுதினமும் மங்களகரமாக மகிழ்வுடன் நிறைய வாழ்த்துக்கள்! உக்காரையும் அருமையான, பொருத்தமான இனிப்பு!
பதிலளிநீக்குமகளின் ஓவியம் அழகு!
வாழ்த்துகளுக்கும் அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மனோம்மா..
நீக்குமணநாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.
நீக்குஇங்கு கேரளத்தில் கல்யாண விருந்தில் பைன் ஆப்பிள் புளிசேரி கட்டாயம் உண்டு. தற்போது சீசன். பைன் ஆப்பிள் 5 கிலோ 100 ரூபாய். செய்து பாருங்கள். உங்களுடைய சமையல் எல்லாம் படம் பார்க்கும்போது அழகாக உள்ளன. உக்காரை ஒரு விதம் மோதகத்து பூரணத்தை நினைவு படுத்தியது.
பதிலளிநீக்குJayakumar
5 கி 100ரூபாயா!!!! மோதகம் பூரணம் போல் தான்..:)
நீக்குஅனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஐயா..
அனைத்தும் முகநூலில் படித்தேன்.
பதிலளிநீக்குரோஷ்ணி படம் அருமை.
கதம்பம் மிக அருமை.
வாழ்த்துக்கள் ஆதி வெங்கட்.
அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கோமதிம்மா..
நீக்குஇன்றைய கதம்பம் அருமை...
பதிலளிநீக்குநலம் வாழ்க...
அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி துரை செல்வராஜ் சார்.
நீக்குகதம்பம் அருமையாக இருக்கிறது. மகளின் உரையாடலை ரசித்தேன். மகளின் ஓவியத்தையும் ரசித்தேன். பாராட்டுகள். நாங்களும் மாஸ்க் பயன்படுத்துகிறோம் வெளியில் செல்லும் போது.
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோதரி
துளசிதரன்
அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி துளசிதரன் சார்.
நீக்குவாசகம் மிக மிக அருமை ஆதி. நல்ல வாசகம்.
பதிலளிநீக்குஆஹா புளிசேரி, ஒக்கோரை. நம் வீட்டில் இதெல்லாம் இல்லாமல் இல்லையே. மாங்காய் புளிசேரியும் உண்டு மாம்பழ புளிசேரியும்....
//கேரள உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும், என் பிறந்த வீட்டில் கேரள சாயல் இருக்கும் என்றாலும்//
ஹைஃபைவ் ஆதி!! அதே அதே...ரொம்ப நல்லா வந்திருக்கு இரண்டுமே. எங்கள் வீட்டில் ஒக்கோரை இல்லாமல் தீபாவளி இருககது. மற்ற நாட்களிலும் கூடச் செய்வதுண்டு. என் பாட்டி கொஞ்சம் துவரம் பருப்பும் சேர்த்துச் செய்வார். துவரம் பருப்பு கடலைப்பருப்பு அதுவும் செம டேஸ்டியா இருக்கும்
ரோஷினி ராக்ஸ் வழக்கம் போல். ரொம்ப நல்லா வரைஞ்சிருக்கா. பாராட்டுகள் வாழ்த்துகள்.
உங்கள் உரையாடலை வாசித்துச் சிரித்துவிட்டேன். ரோஷினி வித் வெங்கட்ஜி, ரோஷினி அண்ட் நீங்கள்.
மாஸ்க் ஹா ஹா இங்கு கல்லூரிக்கு வரும் பெண் ஆசிரியர்கள் சிலர் தங்கள் உடைகளுக்கு ஏற்ப அதே நிறத்தில் மாஸ்க் போட்டுக் கொள்கிறார்களாம்.
நாங்களும் மாஸ்க் வாங்கி மாற்றி மாற்றி துவைத்துப் பயன்படுத்துகிறேன்.
எல்லாமே அருமை
கீதா
துவரம்பருப்பு சேர்த்து அடுத்த முறை செய்து விடுகிறேன்..அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கீதா சேச்சி..
நீக்குஎங்கள் வீட்டில் விசேஷங்களில் பைனாப்பிள் புளி செரி கண்டிப்பாக இருக்கும் அது போல பைனாப்பிள் பச்சடியும்
பதிலளிநீக்குகீதா
பைனாப்பிள் புளிசேரி சுவைத்ததில்லை..வாய்ப்புக் கிடைத்தால் செய்து பார்க்கிறேன்..
நீக்குகதம்பம் உணவுகளுடன் சுவைக்கிறது .மகளின் ஓவியம் அருமை.
பதிலளிநீக்குஅனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மாதேவி..
நீக்குதிருமணநாள் வாழ்த்துக்கள் வெங்கட் ஜி. கதம்பம் அருமை. ரோஷ்ணி ஒவியம் பிரமாதம்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கும் அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி இராமசாமி ஜி..
நீக்குஇனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்! செல்வி ரோஷிணியின் ஓவியம் மிக அருமை. பாராட்டுகள்!
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கும், ஓவியத்தை பாராட்டியமைக்கும் மிக்க நன்றி நடனசபாபதி சார்..
நீக்கு"உனக்கு எது பிடிக்கவில்லையோ அதனிடமிருந்து விலகி நில். அது உறவானாலும் சரி, பொருளானாலும் சரி. அதனையே நினைத்து வருந்தி உடலையும் மனதையும் வருத்திக் கொள்ளாதே! அதனால் பாதிக்கப்படுவது நீ மட்டுமே"
பதிலளிநீக்குஆகா எதோ ஒரு புண்ணியவான் அனுபவிச்சு பார்த்து இந்த கைப்புள்ளைக்காகவே சொல்லப்பட்ட தத்துவம் போல் தெரிகிறதே !!!
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிவா.
பதிலளிநீக்கு