செவ்வாய், 23 ஜூன், 2020

கதம்பம் - மனிதம் - கல்வி - மாற்றங்கள் - பாலடை பிரதமன் - Brunch - பால்கனி செடிகள்

நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்ள அடுத்தவரைக் கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும், நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது…

 

மனிதம் எங்கே? - 4 ஜூன் 2020:


மனிதநேயத்தை தொலைத்து விட்ட மனிதர்கள்! கொடூரமான எண்ணம் கொண்ட மனிதர்கள்! சிலநேரம் மிருகத்தனமா நடந்து கொள்வது என்று மனிதர்களை சொல்வார்கள்! இங்கே காட்டு யானையான மிருகம் சாத்வீகமா யாரையும் துன்புறுத்தாமல் ஆற்று நீரில் உயிர்த் தியாகம் செய்துள்ளது...

உலகம் இப்போதுள்ள சூழ்நிலையிலும் கூட மனிதாபிமானமற்ற முறையில் ஒரு உயிரை துன்புறுத்தியிருப்பது மனதை கலங்கடிக்கிறது...:(( அவ்வளவு வக்கிரம்!! தனக்கும் தன் குழந்தைக்கும் உணவு கிடைக்குமா என்று தேடியிருக்கிறது...:((

இந்த கேடுகெட்ட மனிதர்களை விட உயிரை விடுவதே உத்தமம் என்று எண்ணியுள்ளது...:((

வியாபாரமான கல்வி - 05 ஜூன் 2020:


வெள்ளிக்கிழமையும், பெளர்ணமியும் ஆன இன்று வழக்கம் போலவே செம்மண் கோலமும், தெய்வங்களிடம் பிரார்த்தனை, கிடைத்த தாம்பூலம், சிறுகீரை மசியலுடன் உணவு என இன்றைய நாள் இனிதாக செல்கிறது. 


உலக சுற்றுச்சூழல் தினம்!


நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது நம் அனைவரின் கடமை..பிளாஸ்டிக்கை தவிர்த்தல், மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்த்தல், நீர்நிலைகளை பராமரித்தல், காற்று மாசடையாமல் பாதுகாத்தல் என ஒவ்வொருவரும் நினைத்தால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்..ஊரடங்கால் பூமி மாசடைவது குறைந்திருக்கிறதாம்.. பூமியை பாதுகாப்போம்!


கல்விக் கட்டணம்!!!


நேற்று இரவு 9 மணியிருக்கும்...அலைபேசியில் வகுப்பு ஆசிரியரிடமிருந்து அழைப்பு.. கல்விக் கட்டணமும், பள்ளிச்சீருடைக்கான பணமும் செலுத்தணும் என்று சொன்னார்! எல்லா தரப்பு மக்களும் பயிலும் பள்ளியில் இந்த ஊரடங்கில் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையிலும் கல்விக் கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் சரியென்று தெரியவில்லை??? நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் பள்ளிகளை திறப்பது என்பது கேள்விக்குறி தான்...ஆனாலும் கல்வியை வியாபாரமாக பார்க்கும் மனிதர்கள்...நல்லதே நடக்கும்!


ஊரடங்கினால் மாற்றங்கள் - 6 ஜூன் 2020:


ஊரடங்கில் வாகனங்கள் குறைவாக ஓடியதால் காற்று மாசடைவது குறைந்திருக்கிறது..அது போல 'வேலை வேலை' என்று ஓடியவர்களும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகின்றனர்.. பாரம்பரிய விளையாட்டுகளை மீண்டும் துவங்கியுள்ளனர் என்று பல விஷயங்களை கேள்விப்படுகிறோம்.. நானும் இந்த ஊரடங்கில் பல வருடங்களாக தொடர்பு விட்டுப் போனவர்களை முடியும் போது அழைத்து பேசி வருகிறேன்.. இழப்பு, கசப்பு என்று எல்லாவற்றையும் மறந்து பேசும் போது அவர்களும் மகிழ்கின்றனர்.. அப்பா, அம்மாவை நினைத்துக் கொண்டு, நாங்கள் நன்றாக இருப்பதில் சந்தோஷம் கொள்கின்றனர்.. அதே சமயம் ஒரு சிலர், " நீயெல்லாம் எங்களை மறந்துட்ட! நல்லது கெட்டதுக்கு சொல்லணும்! கூப்பிடணும்னு தோணல! அடிக்கடி வந்து பார்க்கணும்! நீ அப்பவே அப்படித்தான்! பெரியவங்க நாங்க! என்றும் சொல்கின்றனர்...வாஸ்தவம் தான்!!

ஆனால் அவர்களுக்கும் 'அப்பா அம்மா இல்லாத பொண்ணு! தானே தன் வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறாள்! யாரையும் எந்த விதத்திலும் தொந்தரவு செய்வதில்லை! நாமளும் கூப்பிட்டுப் பேசினதே இல்ல! பரவாயில்ல! இப்போ நல்லா இருக்கா சந்தோஷப்பட்டுப்போம்! என்று தோன்றியிருக்கலாம்...அப்பாவும் அம்மாவும் யாரையும் விட்டுக் கொடுத்ததில்லை...முடிந்தவரை எல்லோரையும் சந்தித்து உறவை வளர்த்துக் கொண்டார்கள்...அதே போல் என் தம்பியும்! ஆனால் அது போல் என்னால் முடியலை என்பது தான் உண்மை! சந்தர்ப்பம்,சூழ்நிலை, நடைமுறை வாழ்க்கை, உடல்நிலை என்று பல விஷயங்கள் இருக்கலாம்!!

பரவாயில்ல! பரவாயில்ல! எல்லோராலும் எல்லாருக்கும் நல்லவர்களா இருக்க முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்...



ஆதியின் அடுக்களையிலிருந்து - 6 ஜூன் 2020:



பாலடைப் பிரதமன்!


இன்று ஒரு மாறுதலுக்காக இனிப்புடன் உணவு!  இது ஈஸி வழியில் செய்த பிரதமன் தான்... ரெடிமேட் பாலடை கடையில் கிடைக்கும்.. அதை வேகவைத்து பால் சேர்க்க வேண்டியது தான்..


Sunday special brunch - 7 ஜூன் 2020: 



பூரி கிழங்கும்! மசால் தோசையும்! தேங்காய் சட்னியுடன்... (Two in one)

மசால் தோசை!


8 × 8 அடுக்களையில் மண்ணெண்ணெய் ஸ்டவ்வை வைத்துக் கொண்டு அம்மா வார்த்துப் போடப் போட தம்பியும் நானும் போட்டி போட்டு சாப்பிட்டிருக்கிறோம்...கண்ணு பட்டுடுமாம்..) அதனால் அடுக்களை உள்ளேயே அமர்ந்து...)


இப்ப ஒண்ணோ, இரண்டோ சாப்பிடுவதே பெரிய விஷயம்...


ஊரடங்கு-1 - 8 ஜூன் 2020: 




இன்று கொஞ்சம் அத்தியாவசிய வேலையாக வெளியே சென்று வரும் வேலை இருந்தது..மகளின் பள்ளிக்கு, சாம்பார்பொடி அரைப்பதற்கு, போஸ்ட் ஆஃபீசுக்கு என்று எல்லாமே முக்கியமான வேலைகள்...

இரண்டு நாட்களாக மிளகாயும், மல்லியும், பருப்புகளும் காயவைத்து எடுத்தாயிற்று..இன்று முதல் வேலையாக அதை மிஷினில் அரைக்கக் கொடுத்து விட்டு பள்ளிக்குச் செல்லலாம் என கொடுத்து விட்டேன்..


மகளின் பள்ளியில் தெர்மல் ஸ்கேனிங் செய்து கைகளை சேனிடைஸ் செய்யச் சொல்லி தான் உள்ளே அனுமதிக்கிறார்கள்! கட்டணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பினோம்..


போஸ்ட் ஆஃபீசில் வரிசையில் நின்றது நான்கைந்து பேர் தான்..ஆனால் என்னுடைய முறை வருவதற்கு முக்கால் மணிநேரம் காத்திருக்க வேண்டியதாக இருந்தது....ஒவ்வொருவரும் டெபாசிட் செய்ய நான்கைந்து பாஸ்புக்குகளை வைத்திருந்தனர்.. சிஸ்டத்தில் அப்டேட் செய்ய, பாஸ்புக்கில் பதிவு செய்ய என்று நேரம் ஆனது..எனக்கு ஒரு speed post அனுப்ப வேண்டிய வேலை தான்..


அரைக்கக் கொடுத்த சாம்பார் பொடியை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம்..வழக்கம் போலவே சாலையில் பாதிப்பேருக்கு மேல் கவசங்களே இல்லாத முகங்கள் தான்! நடைபாதையில் துப்பிய எச்சில்! முகக்கவசத்தின் அர்த்தம் புரியாமல் பொது இடத்தில் விழுந்த முகக்கவசத்தை எடுத்து அணிந்து கொண்ட படித்த பெண்!


பால்கனியில் எங்களுக்கு வெயிலே வராது! அதனால் செடிகள் பிழைப்பதில்லை! ஆசையில் வாங்கி வைத்த தொட்டிகளை எல்லாம் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து விட்டேன்..இப்போது மீண்டும் ஆசை வந்து வெந்தயமும், கொத்தமல்லியும் விதைத்திருக்கிறேன்.. வெந்தயம் பிழைத்திருக்கிறது..மல்லி அழுத்தமாக இருக்கிறது! நம்பிக்கை இருக்கின்றது பார்க்கலாம்!


என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…


நட்புடன்


ஆதி வெங்கட்.

46 கருத்துகள்:

  1. நல்லதொரு வாசகம். சமயங்களில் நம்மை நாமே அப்படிச் சொல்லி சமாதானப் படுத்திக் கொள்கிறோம் என்றும் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. யானைச் சம்பவம் வேதனை. அடைப்பிரதமன், பூரி மசாலா ஸூப்பர். பள்ளிக் கட்டணம் அவர்கள் கொள்ளையை அவர்கள் அடித்துக்கொண்டே இருக்கிறார்கள்!

    அனைத்தையும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  4. பொதுவாகவே வேடம்/ வேஷம் என்பது கலைவதற்காகவே!...

    கழுதை சுண்ணாம்பில் புரண்டு வெள்ளையாய்த் திரிந்த மாதிரி தான்...

    பதிலளிநீக்கு
  5. சுத்தம் சுகாதாரம் இவற்றில் படித்தவர்களுக்கே தடுமாற்றம் எனும் போது பாமரர்களையும் மூடர்களையும் என்னவென்று சொல்வது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  6. கதம்பம் ரசிக்கும்படி இருந்தது.

    மாஸ்க் பயன்பாடு - இது எல்லோருக்கும் பிடிபடுவதில்லை. அணிந்திருப்பதும் அசௌகரியம். பாவம் மக்கள்.

    பூரிக்கிழங்கும் தோசையும். ஹா ஹா ஹா. Wrong combinatinஓ? எங்க பத்தாம் வகுப்புவரை இருந்த ஹாஸ்டல்ல, புதன் அன்று ஆளுக்கு இரண்டு பூரிக் கிழங்குகளும், 4-5 இட்லிகளும் காலை உணவுக்குப் போடுவார்கள். அது நினைவுக்கு வந்தது. (வெள்ளிக்கிழமை ஆளுக்கு 7 சப்பாத்திகள். அதுக்கு மேல கிடையாது. ஆனால் சிலருக்கு அது போதவில்லை)

    குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது உண்மை என்றாலும் நண்பர்களைப்போல் freeness, மன்னிக்கும் குணம் அங்கு வருவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூரிக்கும் தோசைக்கும் ஒரே மசாலா என்பதால் இது தான் சரியெனத் தெரிகிறது..:)தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  7. இன்றைய வாசகம் மனதில் எண்ண அலையைத் தட்டி எழுப்புகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் தேர்ந்தெடுப்பது, பதிவிடுவது எல்லாமெ என்னவர் தான்..:)

      நீக்கு
  8. மனித நேயம் என்றோ தொலைந்து விட்டது... கல்வி வியாபாரமாகி பல காலம் ஆச்சி...

    Two in one Super...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ..தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ..

      நீக்கு
  9. எல்லாருக்கும் நல்லவர்களாய் இருக்க முடியாது என்பது உண்மைதான். யானையின் இறப்பு வேதனை. என் பால்கனியிலும் வெய்யில் இல்லை. வெந்தயக் கீரை இரு இலையோடு நீண்டுகொண்டே போகிறது.

    அடைப் பிரதமன், பூரி கிழங்கு, மசால் தோசை அருமை. மகளுடன் பத்திரமாக இருக்கவும். அன்பும் ஆசியும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு வெந்தயக்கீரை மடிந்து விட்டது..மீண்டும் விதைக்கலாம் என மண்ணை காய்கறி கழிவுகள் கொண்டு தயார் செய்கிறேன்..தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தேனம்மை மேம்.

      நீக்கு
  10. //முகக்கவசத்தின் அர்த்தம் புரியாமல் பொது இடத்தில் விழுந்த முகக்கவசத்தை எடுத்து அணிந்து கொண்ட படித்த பெண்//

    ஆம் இவைகளை நானும் பார்த்து வருந்தி இருக்கிறேன். கதம்பம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  11. மிகச் சிறந்த வாசகம்.
    மற்றவர்களை இகழ்ந்துகொண்டே என்னை பாராட்டுபவர்களிடமிருந்து முடிந்தவரை விலகியே இருக்க முயல்கிறேன்.
    வீட்டில் சூம் தளத்தில் பாடம் படிக்க ஏன் சீருடை கட்டனம்? புரியலை.
    அடைப்பிரதமன், சக்கப்பிரதமன் எல்லாண் என் ஃபேவரட்.
    முக கவசம் குறித்து விழிப்புணர்வு இன்னும் குறைந்திருப்பது வேதனை.
    கதம்பம் அருமை. னன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளி எப்போது வேண்டுமானாலும் திறக்கலாமாம்..அப்போது அணிந்து கொள்ள தான் சீருடை..தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அர்விந்த் சகோ.

      நீக்கு
  12. கதம்பரத்தை ரசித்தேன்.
    The Hindu நாளிதழை சுமார் 45 வருடங்களாக வாசித்து வருகிறேன். புதிய அல்லது வித்தியாசமான சொல்லை அவ்வப்போது பார்த்து பயன்படுத்துவேன். அவ்வாறு நான் பார்த்து, பயன்படுத்திய சொல்லை இப்பதிவில் பார்த்தேன். Brunch. முதன்முதல் இச்சொல்லை The Hindu நாளிதழில் பார்த்தேன். The light food taken between Breakfast and Lunch என்றவாறு அதன் பொருளைப் படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் உண்பது தான் Brunch..தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. சமூக பரவலா மாறி இருக்கும் இந்த நாளிலும் மாஸ்க் அணியாம சுத்துறதும், கண்ட இடங்களில் எச்சில் துப்புறதும், நெருங்கி நின்னு பேசுறதுமா பொறுப்பில்லாம இருக்காங்க. தான் போகும்போது கூடவே நாலு பேரை கூட்டிக்கிட்டுதான் போவீங்களன்னு எங்க ஊரு கலெக்டர் கோவமா டிவியில் பேசியும் திருந்தின பாடில்லை..

    வெயில் பட்டாலும் எனக்கும் தொட்டிச்செடி பிழைச்சதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் செடி மடிந்து விட்டது...:( மீண்டும் காய்கறி கழிவுகள் கொண்டு மண்ணைத் தயார் செய்திருக்கிறேன்..தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  14. கதம்பம் அருமை சார். ஆரம்ப வாசகமே அசத்தல். பூரி கிழங்கு மசால் தோசை வித்தியாசமாக ிருக்கு. வியாபாரமான கல்வி, சோகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஃபெர்ணாண்டொ ஜி.

      நீக்கு
  15. ஆதி, யானை நிகழ்வை நான் இங்கும் பார்க்கலை அப்படியே கடந்துவிட்டேன். மனம் மிக மிக வேதனை அடைகிறது.

    அடைப்பிரதமன் யும்மி!! பூரி மசாஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பாஅ. ரெண்டும்..நாவூறல்...

    வாசகம் மிக மிக மிக அருமை. நிறைய தாட்ஸ் வருது!!!!!!!!!!

    கல்விக்கட்டணம் என்ன சொல்ல?!! நம் கல்வியில் நிறைய மாற்றம் வர வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்துப் பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கீதா சேச்சி..

      நீக்கு
  16. ஆதி கொத்தமல்லி விதையை நன்றாகத் தேய்த்துப் போட்டீங்களா? அப்படிப் போடச் சொல்லுவாங்க.

    வெந்தயக் கீரை நன்றாகவே வந்துவிடுகிறது. நானும் அது மட்டும் அடிக்கடி போட்டுவிடுவது.

    என் அப்பா எல்லோருடனும் தொடர்பில் இருப்பவர். எனக்கும் அந்தப் பழக்கம் கொஞ்சம் உண்டு. அவரைப் போல முழுவதும் முடியவில்லை என்றாலும். நீங்கள் சொல்லியிருப்பது போல் சூழல் என்று ஏதோ ஒரு காரணம். என்றாலும் கூடியவரை எல்லோருடனும் டச்சில் இருக்க நினைப்பதுண்டு.

    எல்லாமும் ரசித்தேன் ஆதி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொத்தமல்லியும், வெந்தயமும் பிழைக்கவில்லை..மீண்டும் முயன்றுப் பார்க்கலாம் என நினைத்திருக்கிறேன்..என் அப்பாவைப் போல என் தம்பி எல்லோருடனும் தொடர்ப்பில் இருக்கிறான்..

      நீக்கு
  17. யானை நிகழ்வு மனதை வருத்திய ஒன்று.

    ஆமாம் கொரோனாவினால் கொஞ்சம் சுற்றுப்புறம் தூய்மை ஆகியிருப்பதாகத்தான் தெரிகிறது.

    வாசகம் அருமை. எனது தொடர்பும் நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான். அதிகம் தொடர்பில் இருக்க முடிவதில்லை //ஆனால் அது போல் என்னால் முடியலை என்பது தான் உண்மை! சந்தர்ப்பம்,சூழ்நிலை, நடைமுறை வாழ்க்கை, // ஆம் இதுவேதான்.

    கதம்பம் நன்றாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  18. தொடக்க வாசகம் மனதை தொட்டது. யானையை கொன்ற சம்பவம் அதிகம் எழுத படிக்கதெரிந்த கேரளாவில் நடந்திருப்பது வேதனையை அளிக்கின்றது.பொது இடத்தில் விழுந்த முகக்கவசத்தை எடுத்து அணிந்து கொண்ட படித்த பெண் வருத்தத்தை அளித்தாலும் அதை குப்பை கூடையில் போடாமல் தூக்கி எறிந்தவர் மேல் கோபம் வருகின்றது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பெண்ணே தான் கீழே போட்டு அதை எடுத்து அணிந்து கொண்டார்..பொது இடம் என்பதால் கிருமிகள் இருக்கலாம் அல்லவா!! தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  19. கதம்பம் அருமை.
    யானை செய்தி படித்து மனம் வருந்தினேன்.
    முகநூலில் படித்த செய்திகள். இங்கும் படித்தேன்.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    இன்று உறவினர் ஒருவர் இறந்தற்கு போய் வந்தேன் ஆட்டோவில். நல்லவேளை இன்று ஆட்டோ போகிறது நாளை என்றால் இல்லை. வயதானவர்கள் எங்கும் போக வேண்டாம் என்று சொல்கிறார்கள் ஆனால் உறவுகள் நம்மை எதிர்ப்பார்க்கிறது. நான் மட்டும் போய் வந்தேன். சார் வரவில்லை என்று பேசுவார்கள் என்ன செய்வது எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க முடியாதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  20. வெங்கட்,

    சிறுகீரை மசியல் கண்ணில் பார்த்தே வெகுநாட்களாகிவிட்டன.

    மரக்கன்றுகளை நடுவது மட்டுமல்ல பராமரித்து வளர்க்கவும் வேண்டும் என சொல்லி இருப்பது சிறப்பு.

    கல்விக்கு கட்டணம் என்பதே இழிவு அதிலும் ஊரடங்கு , கொடிய நோய் , வாழ்வாதார பாதிப்பு சூழலில் கட்டாயப்படுத்துவது மிக மிக இழிவு, என்ன செய்வது, வியாபாரத்தில் இதையெல்லாம் பார்க்க முடியுமா?

    நானும் எல்லோருடனும் சகஜமாக அடிக்கடி பேசமுடியாத சூழ்நிலையில்தான், இருந்தாலும் சில சமயங்களில் எல்லோரையும் நினைப்பதுண்டு.

    பாலடை பிரதமன் - இன்றுவரை கேள்விப்படாத ஒரு இனிப்பு, பார்க்கும்போது நாக்கில் எச்சில் ஊறுகிறது.

    வீட்டிலிருந்தே வேலை செய்யும் இந்த காலகட்டத்தில் பெரும்பான்மையான நாட்கள் brunch தான் நமக்கு.

    இங்கே மாவு புளிப்பதே அபூர்வம் இதில் எங்கே மசால் தோசை சாப்பிடுவது.. இருந்தாலும் எப்போவாகிலும் செய்வதுண்டு. துபாயில் சாப்பிட்ட மினி breakfast நினைவிற்கு வருகிறது.

    இங்கும் கொஞ்சம் கொத்தமல்லியும் வெந்தயமும் வளர்த்தோம் , சாகுபடிக்குமுன்னே அவை சாகும்படி ஆனது, போதிய வெய்யில் இல்லாததால்.

    speedpost என்றாலும் வரிசையில் நின்று, நிதானமாக ஊர்ந்து சென்றுதான் அனுப்ப வேண்டும்போல் இருக்கின்றது.

    அருமையான செய்தி தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி ஜி..

      நீக்கு
  21. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அபிநயா ஜி.

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கயல் ஜி.

      நீக்கு
  23. //ஆனால் அது போல் என்னால் முடியலை என்பது தான் உண்மை! சந்தர்ப்பம்,சூழ்நிலை, நடைமுறை வாழ்க்கை, உடல்நிலை என்று பல விஷயங்கள் இருக்கலாம்!!// உண்மை! ஒரு சிலரால் தான் தொடர்பை நீட்டித்துக் கொண்டிருக்க முடிகிறது. அவங்களுக்குப் பேச விஷயமும் இருக்கு! :) என் கடைசி நாத்தனார் காலை எழுந்ததும் கையில் எடுக்கும் மொபைலை இரவு பத்து மணிக்கு அரை மனசாகக் கீழே வைப்பார். மொபைலைக் காதுக்குக் கீழே கொடுத்துத் தலையால் இடுக்கிக் கொண்டே பேசுவார். கீழே விழுந்துடப் போகிறதேனு நான் பயப்படுவேன். :)))) அவங்க அப்படிப் பேசிக் கொண்டே சாப்பிடுவார்; காய்கள் நறுக்கித் தருவார். (நான் தான் வேண்டாம்னுடுவேன், எங்கேயானும் கையை நறுக்கிக் கொண்டால்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்..தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா மாமி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....