அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை எப்போது வருகிறதோ அப்போது தான் நாம் பயம் என்ற உணர்விலிருந்து விடுபடமுடியும்.
*****
வாழ்க்கை – “இந்தப் பொறப்பு எதுக்கு எனக்கு?” என்று புலம்பும் பலரை பார்த்திருக்கிறேன். எவ்வளவு தான் பணம் இருந்தாலும், நல்லதொரு குடும்பம் இருந்தாலும் எதையோ நினைத்துக் கொண்டு, அடுத்தவர்களோடு ஒப்பீடு செய்து கொண்டு இருக்கும் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருப்பவர்கள் நிறைய பேர். தினம் தினம் எதையாவது குறையாகச் சொல்லிக் கொண்டு புலம்புவார்கள் – அலுவலகத்தில் ஒரு நபர் – நல்ல சம்பளம், திருமணம் ஆகி ஒரு ஆண் மகவும் உண்டு. பெரிதாக தொல்லைகள் இல்லை. குடும்பத்தில் உள்ள பெரியவர்களும் நல்லவிதமாகவே இருக்கிறார்கள். பிரச்சனைகள் என்று பார்த்தால் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை! ஆனாலும் ஏதோ ஒரு வெறுப்பு வாழ்க்கையின் மேல்! எப்போதும் தன்னைப் பற்றியும் தனது சூழல் பற்றியும் புலம்புவார். எப்போதும் போல, அந்த அலுவலக நபருக்கும் இந்தப் புலம்பல்களைக் கேட்டு ஆறுதல் சொல்வதே எனக்கு வேலை! எப்போதுமே நமக்கும் மேலே உள்ளவர்களை, அவர்களது சம்பாத்தியத்தினை நம் உடன் ஒப்பீடு செய்வது நல்லதல்ல! அவர்களிடமிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன்.
‘நமக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்ற பாடல் வரிகளை அவருக்குச் சொல்லிப் புரியவைப்பது உண்டு. சில நாட்கள் மகிழ்ச்சியுடன் உலவுவார். நல்லதையே பேசுவார். பிறகு வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடும்! என்னதான் சொன்னாலும், மனதிற்குள் அந்த மாதிரி எண்ணங்களை எப்போதுமே ஒரு ஓரத்தில் பாதுகாத்து வைத்திருப்பதால் உண்டாகும் மனக் கிலேசங்கள், அவ்வப்போது இப்படி எட்டிப் பார்க்க, தனது நிலை பற்றி சோகமாகச் சொல்ல ஆரம்பித்து விடுவார். நான் மட்டும் தான் வேலை செய்கிறேன் – அவர் வேலை செய்வது இல்லை, இந்த நாட்டில் எதுவுமே சரியில்லை! எல்லோரும் திருந்த வேண்டும் என்று அரசியல்வாதிகள், அதிகாரிகள் என யாரையும் விடுவதில்லை. என்னோட மூளைக்கும், திறமைக்கும் நான் பெரிய அதிகாரியாக இருந்திருக்க வேண்டும் – ஏனோ என் விதி இங்கே இந்த அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்பார். சில முயற்சிகள் செய்தாலும், அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. மேலும் மேலும் முயற்சிக்க வயதும், வேலைக்கான விதிகளும் ஒத்து வர வேண்டும் – கடைசி முயற்சியாக இந்த அலுவலக வேலைக்கான தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்டு வேலைக்கும் சேர்ந்து விட்டார் – சில வருடங்களும் ஆகிவிட்டன. ஆனாலும் அவருக்கு திருப்தி இல்லை. நினைத்தது கிடைக்கவில்லை எனில் கிடைத்ததை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அவர் புரிந்து கொள்ள இன்னும் சில காலம் ஆகலாம்!
அந்த நபரின் குணாதிசயங்களை, எங்கள் அரசுக் குடியிருப்பின் பராமரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சில உழைப்பாளிகளின் குணாதிசயங்களுடன் ஒப்பீடு செய்து பார்க்க முடிந்தது! இரண்டு ஆண்கள், ஒரு பெண், அந்தப் பெண்ணின் கைக்குழந்தை – நான்கு பேரும் தினம் தினம் காலையிலிருந்து வந்து விடுகிறார்கள். இரும்புக் குழாய்களால் சாரம் கட்டி மேலே ஏறி, அந்த ஆண்கள் இருவரும் வேலை செய்ய, அந்த பெண் எடுபிடி வேலைகளைச் செய்கிறார். கைக்குழந்தை கீழே கட்டாந்தரையில் ஒரு கிழிந்த சாக்கில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறது. சிறு கிண்ணத்தில் எதையாவது உண்ணக் கொடுத்தால், மேலும் கீழும் போட்டு, மண்ணில் பிரட்டி அதுவாகவே சாப்பிடுகிறது. உறக்கம் வந்தால் அதே பாயில் உறக்கம். மதிய வேளையில் இப்போது அடிக்கும் நல்ல வெய்யிலில் குழந்தை வாயைத் திறந்தபடி நல்ல உறக்கம்! மேலிருந்து இரும்புக் குழாய்கள் போடும்போதெல்லாம் எனக்கு மனது பதறுகிறது! சற்று தள்ளியே குழந்தை படுத்திருந்தாலும் அடிபட்டு விடுமோ என்ற பயம் எனக்கு எப்போதும் வரும்.
சாரம் கட்டி மேலே ஏறியிருக்கும் அந்தப் பெண்ணின் கணவன் நல்லபடியாக கீழே இறங்க வேண்டும் என நாம் நினைக்க, அந்தப் பெண் சாதாரணமாக குழந்தையைக் கொஞ்சியபடி, வேலைகளிலும் ஈடுபட்டு, பகல் வேளைகளில் கண்ணயர்ந்து, என மிகச் சாதாரணமாக இருக்கிறார்! நேற்று கூட மதிய நேரத்தில் எந்தவித கவலையும் இன்றி மதிய நேரத்தில் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள் – நல்ல வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது! வீட்டிற்குள் எல்லா வசதிகள் இருந்தாலும் தூங்காமல் புரண்டு கொண்டிருக்கும் பலர் இருக்க, மேலே வானம், கீழே பூமி என இருந்தாலும், எந்த விதமான தடங்கலும் இல்லாமல் நல்ல உறக்கம். மேலே ஏறி இருக்கும் கணவன் நல்லபடியாகவே கீழே இறங்கி வந்து விடுவான் என்ற நம்பிக்கை – தன் கணவன் மீது இருக்கும் நம்பிக்கை – கடவுள் மீது கூட நம்பிக்கை இல்லாமல் போகலாம்! ஆனால் கட்டின கணவனின் திறமை மீது அவளுக்கு அதீத நம்பிக்கையாக இருக்க வேண்டும்! இதில் கவனிக்க வேண்டிய இன்னுமொரு விஷயம், மேலே ஏறி வேலை பார்க்கும் இருவருமே எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் - குறிப்பாக தலைக்கவசம், இடுப்பில் கட்டப்பட்ட கயிறு என எதுவுமே இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வேலைக்கமர்த்திய ஒப்பந்த நிறுவனமோ, அதனை அமர்த்திய அரசு நிறுவனமோ இதை எல்லாம் கவனிப்பதே இல்லை! மதிய நேரத்தில் வீட்டிலிருந்து கட்டிக் கொண்டு வந்த உணவினை அனைவருமாக அமர்ந்து உண்டு விட்டு மீண்டும் வேலைகளை ஆரம்பிக்கிறார்கள்.
கவலைகள் இல்லாமல் இருக்கப் போவதில்லை! ஆனாலும் எந்தவிதத்திலும் அவற்றை இந்த பணியாளர்கள் வெளிக்காட்டவில்லை! தினம் தினம் வேலை முடிந்து கணவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடக்க, பின்னாலே முந்தாணியை தலையில் போட்டு மூடியவாறே அந்தப் பெண் பின்னால் நடக்கும்போது அவள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி! ”இவன் எனக்கானவன்! என்னையும் என் குழந்தையையும் நன்கு பார்த்துக் கொள்பவன்! எங்களுக்காக கடினமாக உழைப்பவன் என்ற மகிழ்ச்சி அவளது முகத்தில்!” என்றே எனக்குத் தோன்றும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித ஆபத்துகளை சந்திக்க நேரும் என்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறார்கள். “என்ன வாழ்க்கைடா இது?” என்ற புலம்பல் அவர்களிடம் இல்லை! இவர்கள் அதிகம் யோசிப்பதும் இல்லை! அன்றைய பொழுதை நல்லபடியாகக் கடத்த வேண்டும் – எதிர்காலம் பற்றிய எந்தவித கவலையும் அவர்களிடம் இல்லை! அவர்களுக்கும் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. தினம் தினம் அந்த உழைப்பாளிகளைப் பார்க்கும்போதெல்லாம் இந்த எண்ணங்கள் என்னுள் ஓடிக் கொண்டே இருக்கிறது.
எத்தனை வசதிகள் இருந்தாலும் இன்னும் வேண்டும் மேலும் வேண்டும் என்று யோசிக்கும் நபர்கள் ஒரு புறம், எதுவுமே இல்லாமல் இருந்தாலும் மனதில் மகிழ்ச்சியும் தனது உழைப்பில் நம்பிக்கையும் கொண்டு வாழ்க்கையை அதன் போக்கில் நடத்திச் செல்லும் இந்த உழைப்பாளிகள் ஒரு புறம்! பார்க்கும் அத்தனை பேரும் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு சில விஷயங்களை உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். புரிந்து கொள்வதும், புரிந்து கொள்ளாமல் போவதும் நம் கையில் தான் இல்லையா! இன்றைய பதிவின் வழி சொன்ன விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை…
நட்புடன்,
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
இரண்டு முற்றிலும் வெவ்வேறு வகையான வாழ்க்கை முறை. யோசிக்கத்தான் செய்கிறது.
பதிலளிநீக்குவெளில போனா அதைத்தொடாதே, சானிடைசர் போடு, குளி, காயை மஞ்சள், வெந்நீர் போட்டு அலம்பு என்ற முன்ஜாக்கிரதை முறை, எதைப் பற்றியும் கவலைப்படாமல் வைரஸ் சமயத்தலும் வாழ்க்கையை எப்போதும்போல் ஓட்டுவது என வெவ்வேறு குணாதிசயங்கள் இருப்பது போல
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்கு//உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு//
பதிலளிநீக்குஇந்த வரிகளை நான் விபரம் தெரிந்த நாளிலிருந்து அணுதினமும் நினைக்கிறேன் ஜி.
மனம் நினைத்தால் மகிழ்வான வாழ்வே! இது பலருக்கும் இறுதிவரை புரிவதில்லை.
தினமும் நினைக்கும் வரிகள் - மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் அருமை.
பதிவு நன்றாக இருந்தது. உண்மைதான்..! நாளைய வாழ்வை பற்றி பயம் ஏதுமின்றி இருக்கும் சூழ்நிலைகளில் இன்றைய நாள் சந்தோஷமாக கழியும். ஆனால் பெருமான்மையாக இன்றைய நாள் என்பது, நேற்றைய கவலைகள், வருங்கால சிந்தனைகள் பற்றியே பேசிக்கழிப்பதற்காக வந்தது போல் நினைக்கிறோம். இறுதியில் அதுவும் வருந்தும் நாளாகப் போகிறது.
தங்கள் இன்றைய பதிவு நல்ல சிந்தனையான பதிவு. மிக அருமையாக வாழ்வை பற்றி, வாழும் முறைகளைப் பற்றி ஒப்பீடு தந்து பதிவை உருவாக்கியிருக்கிறீர்கள்.படித்து ரசித்தேன். பாராட்டுக்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இன்றைய வாசகம் எனக்கானது!
பதிலளிநீக்குநீங்கள் சொல்லி இருக்கும் இந்த ஒப்பீடு சமீபத்தில்தான் கிட்டத்தட்ட இதே கோணத்தில் எனக்கும் தோன்றியது.
வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் ஐய்யா.
பதிலளிநீக்குநமக்கும் கீழே உள்ளவர் கோடி என்பதில், பணம் நம்மை விட நிறைய வைத்தும் மகிழ முடியாத செல்வந்தர்களும் அடக்கம் என்பதை பலமுறை பார்த்து திகைத்திருக்கிறேன்.
வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை பலர், பல விதங்களில் பல காலமாக சொல்லிச் சென்றிருக்கிரார்கள். அதை அணுபவத்தால் உணர வாழ்க்கையை வாழ்ந்து அணைத்தையும் அணுபவிப்பதே சாத்தியமான வழி.
தங்கள் வாழ்க்கையையும் சமூகத்தையும் குறை கூறுவதற்கான உண்மையான காரணங்கள், துயரங்களின் வெவ்வேறு வகைகள் குறித்த ஒரு செவ்விலக்கியத்தின் நூல் அறிமுகம் விரைவில் வரும்.
அதில் இது குறித்து விரிவாக விவாதிக்கலாம்.
வணக்கம் அரவிந்த்.
நீக்குபதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. நூல் அறிமுகம் - படிக்க ஆவலுடன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கிட்டத்தட்ட பதிவில் சொன்ன முதல் நபர் மாதிரி என்னைய சொல்லிக்கலாம் சார்.
பதிலளிநீக்குஎப்போதும் நான் நமக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுனு எனக்கு நானே சொல்லிக்கொண்டு முன்னுக்கு போகிரேன் சார்.
நல்லதே நடக்கட்டும் மஹேஷ்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்லதொரு வாசகம்.
பதிலளிநீக்குஇன்று வாழும் வாழ்க்கை இறைவன் கொடுத்தது, அவன் பார்த்துக் கொள்வான் என்ற மனதைரியம் எளிய மக்களிடம் இருக்கிறது.
நம்பிக்கைதான் வாழ்க்கையை வாழ வைக்கிறது.
‘நமக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு”
மிகவும் அருமையான பாடல் வரிகள். மனதில் எப்போதும் இருக்க வேண்டும்.
வாசகமும் பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இவ்வாறாகப் பணி செய்வோரைக் கண்டு நான் பரிதாபப்படுவதுண்டு. அதனை நீங்கள் கூறியுள்ள விதம் அருமை.
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
உண்மை. வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிப்போம்
பதிலளிநீக்குவாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிப்போம்! அதே தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி.
ஒப்பீடு - அனைத்திற்கும் மூல காரணம் இதுவே...!
பதிலளிநீக்குஅதுவும் இன்றைக்கு அரசியல் பேசுவோருக்கு அல்வா...! சாப்பிடாமல் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்...!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குநல்லதொரு வாசகம். ஆனால் அது எப்போதும் நினைவில் இருப்பதில்லை. அதான் பிரச்னையே! ஒப்பீடு இல்லாமல் வாழ்பவர்கள் மிகக் குறைவே.போதுமென்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதைப் புரிந்து கொண்டால் போதுமே!
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தொடக்க வாசகம் அருமை. நமது வாழ்க்கை பிறருடன் ஒப்பிடாமல் வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்பதை விளக்கும் அருமையான பதிவு.
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.
நல்லதொரு பதிவு அன்பு வெங்கட்.
பதிலளிநீக்குஎப்பொழுதும் கண்ணதாசன் வரிகள் ஆறுதல் கொடுக்க
மறப்பதில்லை.
இல்லாததைத் தேடி ஓடும் மனதை அடக்க
தாராள சிந்தனை அவசியம்.
தாங்கள் குறிப்பிட்டிருகும் கட்டிடத் தொழிலாளர்களும் அவர்கள் குடும்பமும்
அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கி வர வாழட்டும்.
குறைப்பட்டுக் கொண்டே இருந்தால் வாழ்வு நகர்வது எப்படி.
இன்றே இங்கே இப்போதே
என்று நகர வேண்டும்.
எனக்கு நான் சொல்லிக் கொள்ளும் புத்திமதி.
உணர்வு பூர்வமாக என்னைப் பாதித்தது உங்கள்
பதிவு, நன்றி.
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.
நீக்குஉணர்வு பூர்வமாக என்னைப் பாதித்தது - அடடா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எத்தனை வசதிகள் இருந்தாலும் இன்னும் வேண்டும் மேலும் வேண்டும் என்று யோசிக்கும் நபர்கள் ஒரு புறம், எதுவுமே இல்லாமல் இருந்தாலும் மனதில் மகிழ்ச்சியும் தனது உழைப்பில் நம்பிக்கையும் கொண்டு வாழ்க்கையை அதன் போக்கில் நடத்திச் செல்லும் இந்த உழைப்பாளிகள் ஒரு புறம்!
பதிலளிநீக்குஉண்மை ஐயா
உண்மை
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்கு