திங்கள், 28 செப்டம்பர், 2020

எங்கிருந்து வந்தாயோ… எதற்காக வந்தாயோ…?

அன்பின் நண்பர்களுக்கு, காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

எளிமை, பொறுமை, இரக்கம் இந்த மூன்றும் தான், ஒரு மனிதனின் மிகப்பெரிய செல்வங்கள். இந்த மூன்றையும் அடையப் பெற்ற ஒருவர், உலகில் வெல்லமுடியாதது எதுவுமில்லை. 

*****




எங்கிருந்து வந்தாயோ… எதற்காக வந்தாயோ? இந்த வரிகள் இரண்டு மூன்று நாட்களாக என் மனதை விட்டு அகலவே இல்லை! இன்னமும் பதில் தெரியாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் – என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன் – எனக்கு நானே புரிந்த அளவு பதிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன் – ஆனால் எதற்காக வந்தார் அந்த அழையா விருந்தாளி என்பது இன்னமும் புரியவில்லை! எதற்காக வந்தார் என்பதும் புரியவில்லை! எந்த வழியாக வந்தார் என்பதும் புரியவில்லை! 

என்னடா இது, காலையிலேயே இப்படி குழப்பறியே என்று நீங்கள் கேட்க நினைக்கலாம்! நினைத்தீர்கள் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இன்னமும் விடை தெரியாமல் தான் திணறிக் கொண்டிருக்கிறேன். ஏன் வந்தார், எதற்கு வந்தார் என்று இன்னமும் புரியவில்லை. புரியாத புதிராகவே இருக்கிறது – பிரச்சனை கொஞ்சம் விசித்திரமானது தான். இதற்கு முன் யாரும் இப்படியான பிரச்சனையைச் சந்தித்து இருப்பார்களா என்பதும் எனக்குத் தெரியாது! இதுவரை இந்த மாதிரி பிரச்சனையை நான் கேள்விப்பட்டதும் இல்லை! 

சரி பீடிகைகள் போதும்! விஷயத்திற்கு வருகிறேன். 

சனிக்கிழமை – மதியம் தூங்கமுடியவில்லை. யாரோ கதவைத் தட்டியோ, ஒலிப்பானை அழுத்தியோ என்னை எழுப்பியபடியே இருந்தார்கள். சரி இதற்கு மேல் படுத்துக் கொண்டிருப்பதில் பலனில்லை என கணினி முன்னர் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்தேன். படித்துக் கொண்டிருந்த ஸ்வாரஸ்யத்தில் நேரம் போனதே தெரியவில்லை. இயற்கையின் அழைப்பு – எழுந்தே ஆகவேண்டும் – மாலை ஆறு மணியும் ஆகிவிட்டது – வேலைகள் சில இருந்தது – அதனையும் முடிக்க வேண்டும் என எழுந்து கழிப்பறையின் விளக்கை ஒளிரவிட்டு உள்ளே செல்ல… 

அங்கே தான் அந்த அழையா விருந்தாளி வந்திருந்தார்! எங்கிருந்து வந்தாயோ? எதற்காக வந்தாயோ? நீ யார்? என்று கேட்கும் அளவுக்கு என் புரிதல் இருந்தது! Indian Toilet Commode பள்ளத்திலிருந்து கன்னங்கரேலென்று இரண்டு கைகளை மட்டும் வெளியே வைத்து, மேலேறி வர முயற்சித்துக் கொண்டிருந்தார் அந்த விருந்தாளி! முகம் போன்று இருந்தது என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது போல இருந்தது. என்ன செய்வதென்றே புரியவில்லை. அசைந்து கொண்டே இருந்ததால், ஏதோ உயிரினம் என்பது மட்டும் புரிந்து கொள்ள முடிந்ததே தவிர அது என்ன, ஏதேனும் பறவையோ அல்லது ஊர்வன இனத்தைச் சேர்ந்ததோ என்று ஒரே குழப்பம். எப்படி வெளியே வரவைப்பது? இல்லை அதற்கு ஜலசமாதி தான் ஒரே வழியா? என்றெல்லாம் குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தேன்! சரி தண்ணீரை கொட்டிப் பார்க்கலாம், குழாய் வழியே வந்திருந்தால் அந்த வழியாகவே வெளியே போகும் என நினைத்து இரண்டு மூன்று பக்கெட் நீரைக் கொட்டினாலும் இரண்டு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தலையைச் சிலுப்பிக் கொண்டு என்னை முறைத்துப் பார்த்தது! 

சரி தண்ணீரைக் கொட்டினால் அது வந்த வழியே போகாது போலும்! வேறென்ன செய்யலாம் என நீண்ட கைப்பிடி உள்ள கழிப்பறை Brush-ஐ வைத்து அதனால் அந்த உயிரினத்தை வெளிக்கொண்டு வரலாம் என முயற்சித்தால் அதுவும் சரிவரவில்லை. அந்த உயிரினத்தினை நாம் காப்பாற்ற நினைத்தாலும் அந்த உயிரினமும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா? அது “ஒப்புக்கொள்ள” மறுத்தது! – “ஏற்கனவே இரண்டு பக்கெட் தண்ணீரை என் தலைமேல் கொட்டிய பாவி இவன்! இப்போது வேறு ஏதோ ஒன்றால் என்னை அழிக்கப் பார்க்கிறான்! குளிரடிக்கிறது! என்னால் இயலவில்லை! என்னால் இவனை எதிர்க்க முடிந்தால் இவனை ஒரு வழி பண்ணிவிடுவேன்” என்று நினைத்ததோ என்னவோ? யாருக்குத் தெரியும்! என் முயற்சிகளை நானும் நிறுத்தவில்லை. ஆனால் எனக்குத் தோல்வி தான் – தோல்வியை ஒப்புக் கொள்வதற்கும் தைரியம் வேண்டும்! 

யாரை அழைப்பது? சனிக்கிழமை மாலை என்பதால் பராமரிப்புப் பணியாளர்களையும் அழைக்க இயலாது – எல்லோரும் வீடு திரும்பியிருப்பார்கள். நாமே தான் முயற்சிக்க வேண்டும் என “சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்” போல மீண்டும் முயற்சி செய்தேன் – பத்து பதினைந்து நிமிடங்கள் ஆகிவிட்டன! என்னால் அந்த அழையா விருந்தாளியை அந்தப் பள்ளத்திலிருந்து வெளிக்கொணர முடியவில்லை! ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்தால் பறந்து போகுமோ என ஜன்னலைத் திறந்து கதவை மூடி வைத்தேன் – ஆனாலும் அதனால் அப்படிச் செய்ய முடியவில்லை –பதட்டத்தில் அந்த இடத்தினை விட்டு வெளியே வரவே இல்லை. வேறு வழியில்லை – ஒரு ஆளாக இந்த அழையா விருந்தாளியை விரட்டும் வேலையைச் செய்து முடிக்க முடியாது எனத் தோன்றிவிட, மேல் வீட்டில் இருக்கும் நண்பரை, அலைபேசி வழி அழைத்தேன் – கொஞ்சம் நகர்ந்தால் கழிப்பறையை விட்டு வீட்டுக்குள் வந்து விடுவாரோ என்ற எண்ணம் தான் – என்னதான் கழிப்பறை கதவை மூடி வைத்தாலும் – வந்து விட்டால்! 

வாசல் கதவைத் திறந்து வைத்து விட்டு, அவர் வரும் வரை கழிப்பறை வாசலிலேயே காத்திருந்தேன் – அவர் வந்ததும் பிரச்சனையைச் சொல்ல, அவரும் வந்து என்னவென்று பார்த்தார் – உடனே அவர் யார் என்பதையும் சொல்லி விட்டார் – “அட! இவர் தானா அந்த அழையா விருந்தாளி? அலுவலகம் பக்கத்திலேயே இருக்கும் மரங்களில் எண்ணமுடியாத அளவில் இருக்கும் இவர்களைப் பார்த்திருந்தாலும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லையே?” என்று நினைத்தபடியே அவரிடம் பேசினேன். இரண்டு பேரும் சேர்ந்து பேசியபிறகு, அவர் நீண்ட குச்சி ஏதேனும் இருக்கிறதா எனக் கேட்க, வீடு துடைக்கும் கம்பி இருந்ததை எடுத்துக் கொடுத்தேன். பள்ளத்தின் அருகே அந்தக் குச்சியை வாகாக வைத்து, சற்றே காத்திருக்க, அந்த விருந்தாளி அந்தக் கம்பியை இருகப் பற்றிக் கொண்டது. ஜன்னல் அருகே கொண்டு சொல்ல, பிடிவாதத்துடன் கம்பியை விடமாட்டேன் என்று ஒரே அடம்! “ஒழுங்கு மரியாதையா கம்பியை விட்டு வெளியே போ! இல்லைன்னா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று அதனுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் நண்பர்! அது கேட்டால் தானே… மீண்டும் தாஜா செய்து, துடைப்பத்தால் அதன் பிடியைத் தளர்த்தி, ஒரு வழியாக வெளியே சுவற்றைப் பிடித்துக் கொண்டது அந்த அழையா விருந்தாளி. மீண்டும் உள்ளே வந்து விடுமோ என்று ஜன்னலையும் உடனே மூடி விட்டோம்! கை கால்களை நன்கு சுத்தம் செய்து கொண்டு, இந்த அழையா விருந்தாளி எப்படி உள்ளே வந்திருப்பார்? எந்த வழி வந்திருப்பார் என்று பேசிக் கொண்டிருந்தோம்! 

விருந்தாளி வெளியே போனாலும், ஏனோ கழிப்பறையை பயன்படுத்த மனதில் தைரியமில்லை! இயற்கை அழைப்பு உபாதையாக இருந்தாலும் சில நிமிடங்கள் வரை உள்ளே சென்று கழிப்பறையை பயன்படுத்த மனதில்லை! வெளியே சென்று விட்டார் என்றாலும் ஏனோ ஒரு உணர்வு – கூடவே இன்னும் யாராவது வந்திருப்பார்களோ? ஒரு வழியாக தைரியத்தினை வரவழைத்துக் கொண்டு One Bathroom வேலையை முடித்தேன்! அடச்சே! இதைக் கூட சொல்லணுமா? என்று நினைக்கலாம்! ஒரு பயத்துடன் தான் அந்த வேலையை முடிக்க முடிந்தது! திடீரென்று உள்ளிருந்து விருந்தாளி கூடவே யாரேனும் வந்திருந்து பறந்து வந்தால்! ஹாஹா… 

எல்லாம் சரி! அந்த அழையா விருந்தாளி யாரென்று சொல்லவே இல்லையே என்று நீங்கள் நினைத்துக் கொண்டது எனக்கும் கேட்கிறது! அந்த விருந்தாளி – ஒரு வௌவால்! எப்படி அங்கே வந்து மாட்டிக் கொண்டது என்பது இப்போது வரை புரியாத புதிர்! வீட்டிற்குள் இருக்கும் கழிப்பறையின் பள்ளத்தில், வௌவால் எப்படி வந்திருக்க முடியும்? மேலே திறந்திருக்கும் குழாய் வழி விழுந்து விட்டதோ? என் வீடு இருப்பதோ முதல் தளம் – இரண்டு மேல் தளங்கள் தாண்டி என் வீடு வரை வந்ததோ? இல்லை கீழே இருந்து குழாய் வழி மேலே வந்ததோ? இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது! கூடவே இன்னும் ஒரு நினைவும் வந்தது? “அது ஏண்டா உனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது? ஏற்கனவே நெய்வேலி வீட்டில் கழிப்பறையில் புகுந்த பாம்பு பற்றி “பாம்பு பீ(பே)தி” என்று பதிவு எழுதி அதனையும் சொல்லி இருக்கிறாயே?” என்ற நினைவு தான் அது! 




என்னவோ போங்க! என்னைச் சுற்றி என்ன நடக்குதுன்னே தெரியலை! இது நடந்து இரண்டு நாட்கள் ஆனாலும் கழிப்பறை செல்லும்போதெல்லாம், வரவேண்டியது வெளியே வராமல், வௌவால் பறந்து வெளி வருமோ என்ற பதட்டத்துடனே தான் இருக்கிறேன்! 

நட்புடன் 



வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

36 கருத்துகள்:

  1. படுபயங்கரமான திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு..

    சமயத்தில் கழிவறைக்குள் பாம்பு வந்திருக்கலாம்.. ஆனால் அதுக்கு ஏதடா கை?.. என்று குழம்பி விட்டேன்...

    என்னமோ அந்த ஜீவன் தப்பித்தது..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்னமோ அந்த ஜீவன் தப்பித்தது// - உண்மை. அதுவும் ஒரு விதத்தில் மகிழ்ச்சி தான் துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. காலை வணக்கம் ஐய்யா.
    கழிவறைக்குழியில் வௌவ்வால் வந்தது விசித்திரம்தான்.
    ஒருவேளை, நெய்வேலியில் எங்கு சென்றது என்று அறிய முடியாத அப்பாம்புதான் இங்கு வௌவ்வால் ரூபத்தில் வந்துவிட்டதோ?
    இருப்பினும் வௌவ்வால் படம் எடுக்காது எனவே பயப்பட வேண்டியதில்லை. அப்படியே படம் எடுத்தாலும் அதை OTT இல் ரிலீஸ் செஞ்சிரலாம்.
    எனக்குதான் இன்னும் கரப்பான் கூட பயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அரவிந்த்.

      விசித்திரமான அனுபவம் தான். பாம்பு வந்திருக்கிறது. பூரான் போன்றவை கூட வரலாம்! ஆனால் வௌவால் - வித்தியாசமான அனுபவம் - எனக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. என்னங்க நீங்க. எளிமை பொறுமை இரக்கம் என்றெல்லாம் சொல்லிக்கிட்டு. இது இருப்பவர்கள் மரியாதை மற்றும் அன்பைப் பெறலாம். உதாரணம்  கக்கன் காமராஜ் ஜீவா நல்லகண்ணு ஆனால் வெற்றியை பெறுவது கடினம். இந்த போட்டி உலகத்தில் மற்றவர்களின் தலை மேல நடப்பவர்கள் தான் வெற்றியை பெறுகிறார்கள். 

    பார்த்து. முதலில் சைனாவில் வவ்வால்கள் தான் கோவிட பரப்பியதாக செய்தி உள்ளது. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  4. ஓ அது வௌவாலாக்கும் நானும் என்னவா இருக்கும்னு யோசிச்சிட்டே வாசிச்சிட்டு வந்தேன் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திருப்பதி மஹேஷ்.

      நீக்கு
  5. உண்மைதான் ஜி அவைகளை வெளியேற்றி விட்டாலும்...

    மீண்டும் உட்காரும்போது அது வந்து விடுமோ ? என்ற பயம் நீங்க இன்னும் 48 நாட்கள் போகணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //48 நாட்கள் போகணும்// - ஹாஹா! ஒரு மண்டலம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. அடக் கடவுளே! எப்படியெல்லாம் பிரச்சனைகள் பறந்து வருகின்றன! 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதம் விதமாக பிரச்சனைகள்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு
  7. ஹாஹாஹா... என்ன மாதிரிலாம் அனுபவம் கிடைக்குது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் சில அனுபவங்கள் - :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. ஆஹா.... பதிவுக்கு மேட்டர் கொடுத்துட்டுப் போயிருக்கு :-) பேர் சொல்லாதது வந்துருந்தால்தான் வம்பு. எப்பப் போனாலும் பயம் புடிச்சுக்கும். முந்தி பார்த்த எதோ ஒரு படத்துலே டாய்லெட்டு பேஸினுள்ளில் முதலைக்குட்டி இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுக்கு மேட்டர் - ஹாஹா. அதற்காகவே வந்ததோ?

      முதலைக் குட்டி - டெரரா இல்ல இருக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  9. எனக்கென்னமோ ஆரம்பத்திலேயே அது வௌவாலாக இருக்குமோனு தோணித்து. வௌவாலுக்கு இத்தனை பயந்திருக்கீங்க! அந்தக் காலத்துப் பெருமாள் கோயில்களில் பிரகாரம் சுற்றுகையில் முகத்தில் வந்து அடித்துவிட்டுப் போகும். மதுரை கூடலழகர் கோயிலில், இம்மையில் நன்மை தருவார் கோயிலில் எல்லாம் இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. என்றாலும் திடீர்னு பார்க்கையில் பயமாகத் தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில்களில் பக்கத்தில் வந்து சென்றிருந்தாலும் இந்த இடத்தில்?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  10. அம்பத்தூரில் எங்க வீட்டுக் குளியலறை, கழிப்பறைக்குழாயில் சுப்புக்குட்டிகள் சுருட்டிக் கொண்டு கிடக்கும். நாம் கொஞ்சம் அசந்து மறந்து குழாயைத் திறக்கப் போனால் தலையைத் தூக்கும்! கவனமாப் போகணும். விளக்கை எல்லாம் போட்டுவிட்டு சப்தம் கொடுத்துக் கொண்டே போவோம். தனிவீடா சப்தம் கொடுத்தால் கேட்பவர் இல்லை அவற்றைத் தவிர!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்தம் கொடுத்துக் கொண்டே போக வேண்டும் - :) தனிவீடுகளில் பிரச்சனை இல்லை தான் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. //அலுவலகம் பக்கத்திலேயே இருக்கும் மரங்களில் எண்ணமுடியாத அளவில் இருக்கும் இவர்களைப் பார்த்திருந்தாலும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லையே?” //

    இந்த வரிகளை படித்தவுடன் தெரிந்து விட்டது வெளவால் என்று ஜன்னல் வழியே வந்து இருக்கும்.
    பூச்சிகளை சாப்பிட மாலை நேரம் வரும் வேகமாய் வந்ததால் உள்ளே விழுந்து விட்டது போலும்.

    திருவெண்காட்டில் இருக்கும் போது இருட்ட ஆரம்பித்தவுடன் பறக்க ஆரம்பித்து விடும்.
    வாசல் விளக்கு போட்டு இருப்பேன் பூச்சிகள் பறக்கும் அப்போது இவைகளுக்கு நல்ல வேட்டை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூச்சிகளை உண்ண வரும் - இருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  12. இந்த மாதிரி அனுபவம் எங்கள் கிராமத்து விட்டில் நடந்து இருக்கின்றது. தேரை என்று சொல்வார்கள். தவக்களையை விட பெரியாதாக இருக்கும்.குளியல் அறை, கழிப்பறை எல்லா இடங்களிலும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  13. கோயில் உலாக்களின்போது பல கோயில் கருவறைகளில் இந்த விருந்தாளிகளை அதிகம் பார்த்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில்களிலும், பழைய கால கட்டிடங்களிலும் நிறைய பார்த்ததுண்டு முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. உங்களுக்கு சனிக்கிழமை வவ்வால் வருகைன்னு
    பஞ்சாங்கத்தில் இருந்திருக்கிறது. ஹாஹா.
    ஸூவாரஸ்யம். ஆனால் பயங்கரமாக
    பயப்படுத்தி விட்டீர்கள். ஜாக்கிரதையாக இருக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பஞ்சாங்கத்தில் - ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  15. பொறுமை மற்றவர் நமக்கு வைக்கும் செக். சோதனை மூலம் இது ஒரு வழி ஆகி விடுகிறது. வௌவால் பயம் என் மாமியார் வீட்டில் எனக்கு ஏற்பட்டது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களூக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. இதென்ன பயணம் என்றாலும் நினைவுக்கு வரும் 'தல'-க்கு வந்த சோதனை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... சோதனை தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. பீதி அளிக்கும் அனுபவம்தான். சென்று வாரம் முதன் முதலாக மொட்டை மாடியில் வவ்வால் குஞ்சு தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். எடுத்து வெளியில் விட்டாலும் தொடர்ந்து 2,3 தினங்கள் இங்கேயே வந்து தூங்கிக் கொண்டிருந்தது. முதலில் தவளையோ என நினைத்தேன். எளிதில் அடையாளம் காண முடிவதில்லை.

    கவனமாக இருக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எளிதில் அடையாளம் காண முடிவதில்லை - உண்மை தான் ராமலக்ஷ்மி.


      //கவனமாக இருக்கவும்// - கவனமாகவே இருக்கிறேன். நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. அழைத்த விருந்தினர் கூட அப்படித்தான்.
    தண்ணீர் தொட்டியில் விழுந்த நாய்...
    நானும் ஒரு பதிவை எழுதியிருக்கலாம்.
    பதிவு அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களையும் எழுதுங்கள் இனியன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....