அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
சிங்கத்தின் இரைக்காக மட்டுமே மான்கள் படைக்கப்பட்டிருந்தால் அதற்கு வேகமாக ஓடும் கால்களை படைத்திருக்க மாட்டான்… அது போலதான் பிரச்சனைகளை கொடுக்கும் இறைவன் சமாளிக்கும் திறமையும் கொடுத்திருக்கிறான் – துணிந்து செல்வோம்!
*****
கிண்டில் மூலம் வாசிப்பது தொடர்ந்து நடக்கிறது. தினம் தினம் சில பக்கங்களாவது வாசித்து விடுகிறேன் – கிண்டில் வழி! மின்னூல்களை அவ்வப்போது தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு முடிந்த போது படித்து வருகிறேன் – படிக்க வேண்டும் என தரவிறக்கம் செய்த நூல்களின் எண்ணிக்கை சமீபத்தில் 50-ஐத் தொட்டுவிட்டது – பதிவுலக நண்பர்களின் மின்னூல்களையும் சேர்த்து! அப்படிச் சமீபத்தில் பயணம் சம்பந்தமான ஒரு மின்னூலை தரவிறக்கம் செய்து கொண்டேன் – அந்த மின்னூல் – இமாலய ரைடு – அட்வெஞ்சர் பயணக் குறிப்புகள் எனும் மின்னூல். கணேசன் அன்பு என்பவர் எழுதி இருக்கிறார். ஆசிரியர் பற்றிய குறிப்புகளை படிக்கவில்லை – பயணம், அதுவும் இமய மலைக்குப் பயணம் என்ற தலைப்பே இந்த மின்னூலை தரவிறக்கம் செய்து வாசிக்கத் தூண்டியது! கூடவே அவர் தந்திருந்த அறிமுக உரையும்! அந்த அறிமுக உரை கீழே!
இமயமலையின் இதயப்பகுதி போன்ற மணாலி - லே ( லடாக் ) அட்வெஞ்சர் பயணம் குறித்த தொகுப்பு இது. மொத்தம் 13 நாட்கள் பயணம். சிம்லாவில் துவங்கி மணாலி, ஜிஸ்பா, சார்ச்சு, லே, பெங்காங் ஏரி, கர்துங் லா, கார்கில், ஸ்ரீநகர் என அபாயகரமான சாலை வழியாக பயணித்த அனுபவங்கள் வண்ணப் புகைப்படங்களுடன் விவரிக்கப்பட்டிருக்கின்றன. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பயணம் இது. மலைகள், பள்ளத்தாக்குகள், அதி உயர கணவாய்கள் என இயற்கையின் உச்சக்கட்ட படைப்புகளின் வழியேயான பயணம் இது. சுற்றுலாப் பயணத்திற்கும், அட்வெஞ்சர் சுற்றுலாப் பயணத்திற்குமான வேறுபாடு என்னவென்றும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலைகள் வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. மோட்டார் வாகனங்களால் அதிகபட்ச உயரம் சென்றடையக்கூடிய கணவாய் கர்துங் லா. இது போலவே இன்னும் பல அதி உயர கணவாய்களைக் கடந்துபோனது எப்படி என்பதும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
இமயமலை – பல பயணிகளின் உச்சக்கட்ட இலக்கே இமய மலை தான். அதன் பிரம்மாண்டம் இவ்வுலகில் வேறொன்றும் இல்லையே! ”வரலாறு, புராணம் என எதுவாக இருப்பினும் இமயமலையின்றி இந்தத் தேசம் இல்லை – வரலாறு அறிந்த பலருக்கு இமயமலைப் பயணம் ஒரு கனவு! ஆன்மீகம் உணர்ந்தவர்களுக்கோ அது பரவச தரிசனம்!” என்று முன்குறிப்பில் ஆசிரியர் குறிப்பிடுவது போல இமயமலை பலருடைய கனவு இலக்கு! 12 பேர் கொண்ட குழுவாக இமயமலை நோக்கிய பயணத்தில் கிடைத்த அனுபவங்களை இந்த மின்னூல் வழி பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஆசிரியர் கணேசன் அன்பு. 12 பேர் என்று சொன்னதில் உங்களில் பலருக்கும் தெரிந்த ஒரு பிரபலமும் உண்டு – அவர் ஒரு எழுத்தாளர்! அதை மட்டுமே இங்கே நான் சொல்வேன்! யார் எனத் தெரிந்து கொள்ள விரும்பினால் செய்ய வேண்டியது மின்னூலை வாசிப்பது மட்டுமே!
சுமார் 2400 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரந்து விரிந்து வியாபித்துள்ள இமயமலைத் தொடர் பற்றிய நிறைய விஷயங்களை நூல் வழி பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஆசிரியர். ஒரு பயணக் காதலனாக நான் விரும்பிய பல விஷயங்களை இந்த மின்னூலில் காண முடியும் என்ற ஆர்வத்துடனேயே இந்த மின்னூலை தரவிறக்கம் செய்து கொண்டேன். அவர்கள் பயணித்த பாதையைப் படிக்கும் போதே பரவசம் எனக்குள்! அந்த வழித்தடம் இது தான் – சென்னை – சண்டிகர் – சிம்லா – மணாலி – ஜிஸ்பா – சார்ச்சு – லே – பெங்காங் ஏரி – கர்துங்லா – கார்கில் – ஸ்ரீநகர் – சென்னை! இந்தப் பாதையில் மணாலி வரை நான் சென்று வந்திருக்கிறேன்! ஹிமாச்சலப் பிரதேசத்தின் வேறு சில பகுதிகளுக்கும் சென்று வந்தாலும், இன்னமும் கூட ஹிமாச்சலப் பிரதேசம் போகலாமா என்று யாராவது கேட்டால், எனது பதில் – ஆஹா… தாராளமாகப் போகலாம் என்பதாகவே இருக்கும்! அப்படி ஒரு அழகான மாநிலம் ஹிமாச்சலப் பிரதேசம்!
நூலாசிரியர் திரு கணேசன் அன்பு அவர்களும் ஹிமாச்சலப் பிரதேசம் பற்றி தனது கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டு இருக்கிறார் – “கடவுளின் சொந்த தேசம்” என்று கேரளாவை வர்ணித்தவர்கள் ஹிமாச்சல் பிரதேசத்தினை முன்னரே பார்த்திருந்தால் தங்களது கருத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள் என்று!
இந்தப் பயணத்தில் அவர்களுக்குக் கிடைத்த அனுபவங்கள், தங்கிய இடங்கள், அங்கே சந்தித்த மனிதர்கள், இது போன்ற இடங்களுக்குச் செல்லும் போது உண்டாகும் உடல் நிலை பாதிப்புகள் என பலவற்றையும் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். ஒரு டெம்போ ட்ராவலரில் பயணித்தாலும் மணாலியிலிருந்து இரண்டு புல்லட் வாகனங்களையும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு மாற்றி மாற்றி பயணித்த போது கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்து இருக்கிறார். இந்த மலைப் பிரதேசங்களில் இந்திய ராணுவ வீரர்களின் உழைப்பு, அங்கே வரும் பயணிகளுக்கு அவர்கள் செய்யும் உதவி, பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் எனப்படும் BRO-வில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் தொடர் உழைப்பு என பல விஷயங்களை சொல்லி இருக்கிறார். மிகவும் ரசித்துப் படித்த மின்னூல் இந்த இமாலய ரைடு மின்னூல். அவர்கள் சென்று வந்த இடங்கள் பற்றிய தகவல்களை மின்னூல் வழி வாசிப்பதே சிறப்பு.
மலைப்பிரதேசங்களில் நானும் நிறைய பயணித்திருக்கிறேன் என்பதால் இந்தப் பயணத்தில் அவர்கள் பெற்ற அனுபவங்களை, படிக்கும் என்னாலும் உணர முடிந்தது. இதுவரை எனக்கு லே-லடாக் பயணம் வாய்க்கவில்லை. செல்லும் ஆர்வம் உண்டு. பார்க்கலாம் எப்போது எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என! அதுவரை இது போன்ற மின்னூல்களை வாசிப்பதன் மூலமும், அந்த இடங்கள் பற்றிய காணொளிகளைப் பார்ப்பதன் மூலமும் தான் எனது பயண ஆசையைத் தணித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இமாலய ரைடு மின்னூலை அமேசான் தளத்திலிருந்து நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். 73 பக்கங்கள் கொண்ட இந்த மின்னூலின் விலை ரூபாய் 50/-. Kindle Unlimited கணக்கு வைத்திருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். மின்னூலை தரவிறக்கம் செய்து கொள்ள இணைய முகவரி – இமாயல ரைடு.
பதிவில் சொன்ன விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை…
நட்புடன்,
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
இமாலயப் பயணம் - வசீகரமானது. எப்போது வாய்ப்பு கிட்டும் எனத் தெரியவில்லை. ஆனால் என் விருப்பம் ஹரித்வார், ரிஷிகேஸ்....அதற்கும் மேலே. அல்லது பத்ரி, அதற்கும் மேலே
பதிலளிநீக்குஇமாலயப் பயணம் - உங்களுக்கும் அமைய வாழ்த்துகள் நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆவலைத் தூண்டும்படியான விமர்சனம் ஜி ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுடிந்தால் வாசித்துப் பாருங்கள் கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஹாய் வெங்கட் சார்.
பதிலளிநீக்குசமீபத்தில் நான் வாசித்து கொண்டாடிய புத்தகம் இது சார்.
எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
அதுவும் ஷிம்லாவில் இருந்து லே போகவேண்டிய பயண பாதையை யானைகலை உதாரனமாக சொல்லி விலக்கியது செம.
வீட்டில் தம்பிக்கு லே பைக்கில் போகனும்னு ஆசை.
ஆனால் அது கொஞ்சம் ரிஸ்க் என்பதால் கடந்த வருடம் நாங்கள் ஷிம்லா சென்றதால்
அடுத்த வருடம் ஜூலை-ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் ஏதாவது ஒரு மாதத்தில்சென்னை-புது டெல்லி- மணாலி விமானத்தில் சென்று அங்கிருந்து பேருந்தில் லே சென்று அங்கு பைக் வாடகைக்கு எடுத்து நாங்கள்
கர்துங்லா, நூப்ரா மற்றும் பெங்காங் சுற்றி பார்த்து
திருப்பு பயணத்தில் கார்கில் வழியாக ஸ்ரீநகர் வரை பேருந்தில் வந்து அங்கிருந்து டெல்லி வழியாக விமானத்தில் வீடு சேரனும்னு திட்டம் போட்டிருக்கோம் சார்.
சமீபத்தில் இன்னொரு புத்தகம் கூட நான் வாசித்திருந்தேன்
சென்னையில் இருந்து லடாக்
ஒரு சாலைப் பயணம்
இரா.கோகிலா பாபு
பைக் பயணம் - கொஞ்சம் ஆபத்தானது தான். ஆனாலும் செல்பவர்கள் அதிகம் மஹேஷ்.
நீக்குஅடுத்த வருடம் தில்லி வழி அங்கே செல்ல திட்டமிட்டு இருப்பது அறிந்து மகிழ்ச்சி. தில்லி வரும்போது நிச்சயம் சொல்லுங்கள் - சந்திக்கலாம்.
சென்னையில் இருந்து லடாக் - கோகிலா பாபு நூல் - அமேசானில் இருக்கிறதா? தகவல் சொல்லுங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காலை வணக்கம் ஐய்யா.
பதிலளிநீக்குகடந்த நியாயிற்றுக்கிளமை இந்நூலை படித்தேன்.
அட்வென்சர் ரைடு குறித்த அதிசய தகவல்களும் விவரணைகளும் என்னை பரவசத்திற்குள்ளாக்கியது.
நானும் இந்நூல் குறித்து எழுதலாம் என்று எண்ணி இருக்கையில் தாங்கள் முந்திக்கொண்டீர்கள்.
நீங்கள் சொல்லும் தகவல்களுக்கு அப்பால் வழியில் குறுக்கிடும் ஆறுகளில் வாகணங்களை ஓட்டுதல், சுவாசப்பிரச்சணையை கையாளும் முறைகள், அணுபவ யூட்டியூப் வீடியோக்கள், பெட்ரோல் கேண்களை பைக்கில் வைத்து பயனிக்கும் அணுபவம், அங்குள்ள கிராமங்களின் பொருளியல் தேவைகளை நிறைவேற்றும் டிரக்கு லாரிகளின் அணுபவம் என எண்ணற்ற தகவல்களை படித்து வியந்தேன்.
மிக்க மகிழ்ச்சி இந்நூலை அறிமுகம் செய்ததற்கு. இவர்களுடன் பயனித்தது ஒரு எழுத்தாளர் அல்ல, இரு எழுத்தாளர்கள். இருவரும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்.
வணக்கம் அரவிந்த்.
நீக்குஇந்த நூல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
ஒரு எழுத்தாளர் அல்ல -இருவர்! ஆமாம். ஒருவர் மிகவும் பிரபலம் என்று எனக்குத் தோன்றியது!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
உங்கள் விமர்சனம் படிக்கும்போதே ஆசையாக இருக்கிறது இமாலயம் செல்ல வேண்டும் என்று. இரண்டு முறை பத்ரிநாத் சென்றும் சரியாக பெருமாள் சேவை கிடைக்கவில்லை - கணவருக்கு குளிர் ஒத்துக் கொள்ளாததால் அவசரமாக கீழே இறங்கி விட்டோம். மூன்றாவது முறையாகச் செல்ல வாய்ப்புக் கிடைக்குமா தெரியவில்லை.
பதிலளிநீக்குWalking the Himalayas என்ற புத்தகம் படித்திருக்கிறேன். அவரது வீடியோக்களை டிஸ்கவரி சேனலில் பார்த்து ரசித்திருக்கிறேன்.
என் பிள்ளைக்கு இப்படிப் போக வேண்டும் என்று மிகுந்த ஆசை. சமீபத்தில் இந்திய இளம்பெண் ஒருவர் Candida Louis இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை மோட்டார் பைக்கில் போய் வந்த வீடியோ பார்த்தேன். அதேபோல நார்வேயிலிருந்து ஒரு பெண்மணி உலகம் முழுவதும் மோட்டார் பைக்கிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறார். தன் அனுபவங்களை யூட்யூபில் வீடியோவாகப் போட்டிருக்கிறார். பார்க்கும் போது மிகவும் த்ரில்லிங்காக இருந்தது.
பத்ரிநாத் பயணம் - உங்களுக்கு விரைவில் அமையட்டும். எனக்கும் சில பயணங்கள் செல்ல விருப்பம் உண்டு. பார்க்கலாம் எப்போது வாய்ப்பு கிடைக்குமென!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
அருமையான விவரிப்பு... தரவிறக்கம் செய்து வாசிக்க வேண்டும்... நன்றி....
பதிலளிநீக்குமுடிந்த போது தரவிறக்கம் செய்து வாசியுங்கள் தனபாலன். விருவிருப்பான பயணம் மற்றும் தகவல்கள் உண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான விமர்சனம். எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.
நீக்குநல்ல விமர்சனம். இமயமலையில் ஒரு ஆகர்ஷணம் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். இப்படிப்பட்ட அட்வெஞ்சர் பயணங்கள் என்னால் செய்ய முடியாது. அந்த அனுபவங்களை மட்டும் படித்து அறிந்து கொள்ளலாம். அறிமுகத்திற்கு நன்றி.
பதிலளிநீக்குஇமயமலையில் ஒரு ஆகர்ஷணம் இருப்பதை உணர்ந்திருக்கிறேன் - உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
உங்களின் மதிப்புரை நூலை வாசிக்கும் ஆவலைத் தூண்டியது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குநூல் விமர்சனம் மிக அருமை.
மலை பயணம் நன்றாக இருக்கும் பத்ரிநாத், கேதார்நாத, கங்கோத்திரி, யமுனோத்திரி எல்லாம் போய் வந்தோம் மீண்டும் போக ஆசைதான்.
வாசகமும் நூல் அறிமுகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குமலைப் பயணம் - பத்ரி-கேதார் மீண்டும் போக ஆசை - உங்கள் ஆசை நிறைவேறட்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
புத்தக விமர்சனம் அருமை...இது போன்ற இடங்கள் செல்வதற்கான உடல் வலிமை குறைந்துவிட்டவர்களுக்கு இது போன்ற பயண நூல்கள் தான் ஆறுதல் தருவதிய் இருக்கிறது..
பதிலளிநீக்குசெல்ல முடியாதவர்களுக்கு பயண நூல்கள் ஆறுதல் தருவதாய் இருக்கிறது என்பது உண்மை தான் ரமணி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் அருமை. தங்களது இந்த நூல் விமர்சனம் படிக்கும் போதே அருமையாக உள்ளது. பனி படர்ந்த இமயமலை பயணமெல்லாம் போக ஆசைதான். இனி நடக்குமா எனத் தெரியவில்லை. இப்படி புத்தகங்களை வாசித்து ஆவலைத் தணித்துக் கொள்ளத்தான் வேண்டும். அதற்கு வழி வகுக்கிறது தாங்கள் படித்து தந்த நூல் விமர்சனம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇங்கு நேற்று ஒரு கருத்துரை தந்திருந்தேனே. அதைக் காணவில்லை.
அருமையான பயணக்கட்டுரையை குறித்த நூல் விமர்சனத்திற்கு மிக்க நன்றி. இங்கெல்லாம் இனி பயணம் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. எனினும் தாங்கள் அறிமுகபடுத்தியுள்ள புத்தகத்தை வாசித்து மகிழ்ச்சி அடையலாம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குஉங்கள் கருத்துரை வந்திருக்கிறது. தாமதமாகவே வெளியிட முடிந்தது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பயணக் கட்டுரைகள் எழுதுவதில் சிறந்தவரான உங்கள் பார்வையில் விமர்சனம் அருமை.
பதிலளிநீக்கு//பயணக் கட்டுரைகள் எழுதுவதில் சிறந்தவரான// ஆஹா... மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படிக்கும்போதே ஆவல் மீதூறுகிறது. இமயமலைப் பயணங்கள் செய்திருந்தாலும் இங்கெல்லாம் போகவில்லை. முக்கியமாய் ஹிமாசலப் பிரதேசம் போகவில்லை. ஆனால் இனி போக முடியுமானு சந்தேகமே! புத்தகங்கள் மூலம் ஆவலைத் தணித்துக் கொள்ளலாம்.
பதிலளிநீக்குபடிக்கும்போதே ஆவல் - உண்மை தான் கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல அறிமுகம்..
பதிலளிநீக்குபடிக்கும் போதே பரவசம் தரும் புத்தகங்களில் இந்த பயண அனுபவங்களும் உண்டு ..இதுவரை கிண்டில் இலவச தரவிறக்கத்திலேயே 1000 புத்தகம் தாண்டி விட்டது ..தினமும் சில மணி நேரங்கள் என வாசிப்பில் செல்லுகின்றன ...
அதே போல உடலில் வலு இருக்கும் போதே காண வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று ..
இலவச தரவிறக்கத்திலேயே 1000 புத்தகம் - ஆஹா! என்னிடமும் நிறைய மின்னூல்கள் சேர்ந்துவிட்டது. படிக்க வேண்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.
நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
பதிலளிநீக்குஉடனே புத்தகத்தை தரவிறக்கம் செய்து படித்து முடித்து விட்டேன். படிக்க படிக்க மிகவும் பரவசம் அடைந்தேன். பயணம் செல்லுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றூ.
உங்களூடைய பயண கட்டுரைகள் அனைத்தயும் ப்ளாக்கில் படித்து இருக்கிறேன். இப்பொழுது உங்களூடைய மின்னூல்கல்களை தரவிறக்கம் செய்து கொண்டு இருக்கிறேன்.
நன்றி
புதுகை ரவி, நியூதில்லி.
இமாலய ரைடு மின்னூலை நீங்களும் பதிவிறக்கம் செய்து படித்தது அறிந்து மகிழ்ச்சி.
நீக்குஎனது மின்னூல்களையும் தரவிறக்கம் செய்து படிப்பது அறிந்து மகிழ்ச்சி. மின்னூல்கள் பற்றிய தங்களது கருத்துகளையும் சொன்னால் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகை ரவி.