சனி, 5 செப்டம்பர், 2020

காஃபி வித் கிட்டு – மூப்பும் நரையும் – மானசி சுதீர் – கதை – கிழட்டுப் பனைமரம் – ரத்த பூமி - விளம்பரம்



காஃபி வித் கிட்டு – 83

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய மாலை வணக்கம்.  இன்றைய பதிவினை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


மூப்பும் நரையும் கண்டேன் – கவலை கொண்டேன்! 

அழகாவோம் என்ற எண்ணத்துடன்

அழகு நிலையத்திற்குச் சென்றேன்!

சுந்தர வடிவினன் புன்னகையோடு வரவேற்றான்!

”என் நரைக்கு உன்னிடம் ஏதேனும் உன்னிடம் உண்டோ?” என்றேன்

”ஆஹா உண்டே – அளவு கடந்த மரியாதை!” என்றான்!


இந்த வாரத்தின் ரசித்த பாடல்:


மானசி சுதீர் மற்றும் சுரபி சுதீர் – அம்மாவும் மகளும் சேர்ந்து யூ ட்யூபில் கலக்குகிறார்கள். இரண்டு பேரும் பார்வதி – விநாயகராக பேசிக் கொள்ளும் காணொளி  சமீபத்தில் பார்த்தேன்.  மானசி சுதீர் அவர்கள் அ முதல் ஃ வரை கன்னட எழுத்துகளுக்கான ஒரு பாடலும் பார்த்தேன். கன்னடத்தில் இருந்தாலும் கேட்க நன்றாகவே இருக்கிறது.  இரண்டு பாடல்களும்!  ஒன்றை இங்கே இணைத்திருக்கிறேன்.  இரண்டு காணொளிகளுக்கான சுட்டியும் மேலே தந்திருக்கிறேன். நீங்களும் பாருங்களேன்!


 

 

இந்த வாரத்தின் குட்டிக் கதை – எண்ணம் போல் வாழ்க்கை:

 

வயதான அத்துறவியை காண நீண்ட தூரம் பயணித்து இருவர் வந்திருந்தனர்.

 

துறவி, முதலில் வந்தவரை அழைத்து, என்னை காண வந்ததன் நோக்கம் என்ன என்று கேட்டார்.

 

இந்த ஊருக்கு குடியேறலாம் என்று நினைக்கிறேன். இந்த ஊரு எப்படி, உங்கள் கருத்து என்ன? என்றார்.

 

உன் பழைய ஊர் எப்படி இருந்தது? என கேட்டார் துறவி.

 

அது மட்டமான ஊர், எல்லாரும் ரொம்ப மோசமானவங்க அங்கே! என்றார் அந்த பிரயாணி.

 

இதைக்கேட்ட துறவி, 'இந்த ஊரும் அப்படித்தான். இங்கே வரவேண்டாம்' என்றார்.

 

அவர் சென்ற பிறகு, அடுத்த பிரயாணியும், 'இந்த ஊருக்கு குடியேற நினைக்கிறேன். எப்படி பட்ட ஊரிது?' என்று துறவியிடம் விசாரித்தார்.

 

உன் பழைய ஊர் எப்படி இருந்தது என்று துறவி கேட்டதற்கு, 'அது நல்ல ஊர், நல்ல மனிதர்கள். என் விவசாயத்தை வளர்க்க இந்த ஊருக்கு வரலாமென்று நினைக்கிறேன்' என்றார்.

 

இந்த ஊரும் அப்படித்தான். உனக்கு இந்த ஊர் பிடிக்கும் என்று நம்புகிறேன், என்றார் அந்த துறவி.

 

நம் எண்ணம் போல் தான் நம் வாழ்க்கை.

 

நல்லதே நினைப்போம், நம்பிக்கையுடன் இருப்போம், நல்லதே நடக்கும்.

 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்:

 

இந்த வாரத்தில் நாம் பார்க்கப் போவது ஒரு பங்க்ளாதேஷ் விளம்பரம் – தனது மகள் பள்ளிக்கூடம் செல்ல அனுமதி மறுக்கும் ஒரு தகப்பன் – பிறகு என்ன நடக்கிறது என்பது தான் இந்த விளம்பரம் – நோட்டுப் புத்தகத்திற்கான விளம்பரம் – எவ்வளவு சிறப்பாக இருக்கிறது பாருங்களேன்!


 

 

இந்த வாரத்தின் தகவல் – ரத்த பூமி மின்னூல்:




 

இந்திய நேரப்படி, வரும் புதன் கிழமை மதியம் 12.29 வரை எனது மின்னூல் “ரத்த பூமி”-யை அமேசான் தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  விருப்பம் இருப்பவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! மின்னூலை படிப்பவர்கள் நூல் பற்றிய உங்கள் கருத்துகளையும் மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தால் எனது வலைப்பூவில் பகிர்ந்து கொள்வேன்! தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே.

 

ரத்த பூமி

 

பின்னோக்கிப் பார்க்கலாம்:

 

எனது வலைப்பூவில் இதே நாளில் 2011-ஆம் வருடம் எழுதிய ஒரு பதிவு – வண்ண மயமான கோட்டை. குவாலியரில் இருக்கும் கோட்டை பற்றிய தகவல்கள் அடங்கிய பதிவு அது! அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.

 

பல்வேறு காலகட்டங்களில் இந்தக் கோட்டையினைச் சுற்றி பல மாளிகைகள் கட்டப்பட்டு இருக்கிறது.  அவற்றில் முக்கியமான ஒன்றான ”மன் மந்திர்” 1486 முதல் 1517 வரை உள்ள வருடங்களில் ராஜா மான்சிங் அவர்களால் கட்டப்பட்டுள்ளது. இங்கே வெளிச்சுவற்றில் பதிக்கப்பட்ட ஓடுகள் காலத்தின் பலதரப்பட்ட தாக்குதல்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  எஞ்சியிருக்கும் சில, இவற்றின் அழகை வெளிப்படுத்தி, முழுவதும் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

 

இந்த மாளிகைக்குள்ளே இருக்கும் பெரிய அறைகளில் பெரிய பெரிய இசை மேதைகளிடமிருந்து இசையைக் கற்றுக்கொள்வார்களாம் பெண்கள்.  அப்படிக் கற்றுக்கொள்ளும்போது ஆசிரியர் ஒரு புறம் இருக்க, மறைவிற்குப் பின்புறம் இருப்பார்களாம் பெண்கள்.    அவர்களுக்கு திரைச்சீலைகளாக அமைக்கப்பட்டது எதனால் என்று தெரிந்ததும் அவ்வளவு ஆச்சரியம் எங்களுக்கு.  அத்திரைச் சீலைகள் எல்லாமுமே கற்களால் ஆனவை.  அவ்வளவு மெலிதாகச் செதுக்கப்பட்டு ஆங்காங்கே சிறிய துளைகள் இடப்பட்டு இருந்தன.

 

முழுபதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே.

 

வண்ணமயமானகோட்டை

 

இந்த வாரத்தின் படித்ததில் பிடித்தது – கிழட்டுப் பனைமரம்:

 

”கிழட்டுப் பனைமரம்” என்ற சிறுகதையை சமீபத்தில் அமேசான் தளத்தில் படித்தேன்.  சற்றே நீண்ட சிறுகதை என்றாலும் ஒரு மின்னூல் என்று சொல்லும் அளவிற்கு இல்லாத கதை! அதையும் மின்னூலாக வெளியிட்டு இருக்கிறார் ஆசிரியர்.  பிரதிலிபி தளத்திலும் வாசிக்கக் கிடைக்கிறது.  கதையிலிருந்து ஒன்றிரண்டு வரிகள் இங்கே! முழுக்கதையும் படிக்க ஏதுவாய் பிரதிலிபி தளத்தின் சுட்டியும் கீழே கொடுத்திருக்கிறேன். 

 

வாழ்க்கைதான் எவ்வளவு வேகமானது முடிவதில்லை ஆனால் புரிந்தபின் வாழ நேரம் மீதி இருப்பதில்லை.

 

இறப்பு ஒரு சாதாரண முற்றுப்புள்ளி தான். அதை நினைத்து கவலை இல்லை. ஆனால் அதற்கு முன் நம் வாழ்க்கை பேனா நேர்கோட்டை விட்டு விலகி சில கிறுக்கல்கள் வரைந்த பின்தான் புள்ளி வைத்து நிறுத்துமோ என்ற கேள்வி தான் மனதை ஏதோ  செய்கிறது.


நல்ல சிறுகதை. விருப்பமிருப்பவர்கள் பிரதிலிபி தளத்தில் படிக்கலாம்! பிரதிலிபி தளத்தில் சிறுகதை படிக்க சுட்டி கீழே -

கிழட்டுப் பனைமரம்

 

இந்த வாரத்தின் வாழ்த்துகள்:

 

இன்று ஆசிரியர் தினம்.  எனக்கு கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி.  அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

 

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

 

வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கும் வரை...

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி   

10 கருத்துகள்:

  1. குட்டிக்கதை நல்லதொரு பாடம்.
    காணொளிகள் இயக்கமில்லை.
    ஆசிரியர் தினவாழ்த்துகள் ஜி.
    மின்நூல்கள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் காணொளி யூவில் மட்டும் பார்க்க முடியும் என வருகிறதே. இரண்டாவது காணொளி பார்க்க முடிகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. காஃபி வித் கிட்டு தொகுப்பு நன்றாக உள்ளது. காணொளியில் அம்மாவும் மகளும் அசத்துகிறார்கள். பாடல் அப்புறமாக கேட்டு ரசிக்கிறேன்.

    துறவி கதை நன்றாக உள்ளது. நல்லதை நினைக்க வேண்டுமென வலியுறுத்தும் பாடம்.

    விளம்பர காணொளியும் நன்றாக உள்ளது.
    உங்கள் மின்னூலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பின்னோக்கிச் சென்று படிக்கிறேன்.

    பிரதிலிபி தளத்தில் சென்று "கிழட்டு பனைமரம்" படித்து வந்தேன். நல்லதோர் சிறுகதை.

    ஆசிர்யர் தின வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம், பதிவின் மற்ற பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. குட்டிக்கதை நன்றாக இருக்கிறது.
    காணொளி அருமை.
    குழந்தையின் படிப்பு தொடர்வது மகிழ்ச்சி.
    மின்னூலுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. காணொளிகள் அருமை...

    குட்டிக் கதை மிகவும் பிடித்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அம்மாவும், பெண்ணும் அசத்துகிறார்கள்.கடவுளின் அருமையான பரிசு இவங்களைப் போன்றவர்கள். வண்ணமயமான கோட்டை பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். போனதில்லை. அங்கே சங்கீதம் கற்றுக்கொண்டவர்கள் பற்றிப் படிக்கையில் தூர்தர்ஷனில் பல ஆண்டுகள் முன்னர் வந்த பல்லவி ஜோஷி நடித்த தொடர் ஒன்று நினைவில் வருகிறது. அருமையான தொடர்கள் அவை எல்லாம். இப்போது அப்படிப் பார்க்க முடியலையே என்னும் வருத்தமும் கூடவே வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாவும் பெண்ணும் அசத்துகிறார்கள் - இவர்களது நிறைய காணொளி இருக்கிறது. அவ்வப்போது பார்ப்பதுண்டு. திறமைசாலிகள்.

      பல்லவி ஜோஷி - நல்ல கலைஞர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....