அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
வலி இல்லாத வாழ்க்கையும் இல்லை. வழி இல்லாத வாழ்க்கையும் இல்லை. வலிகளைக் கடந்து வழிகள் தேடுவோம்.
*****
தோரனும் தோரியும்! தோரன் – கேரளத்திலும், அதனைத் தொட்டடுத்த தமிழக மாவட்டங்களிலும் இருக்கும் மக்களுக்கு தோரன் என்றால் என்னவென்று சொல்ல வேண்டியதில்லை. பொரியல்/கறி என்று நாம் சொல்லும் சப்ஜியை அவர்கள் தோரன் என்று சொல்வது வழக்கம். விதம் விதமாக தோரன் செய்வதுண்டு. நானும் அப்படியான தோரன் நண்பர்களது வீடுகளிலும், கேரள உணவகங்களிலும் சுவைத்ததுண்டு! சரி தோரன் என்ன என்பதைச் சொல்லியாயிற்று! அதென்ன தோரி? தோரனுக்கு ஏதேனும் உறவு முறையாக இருக்குமோ? குழப்பம் எதற்கு உங்களுக்கு? பதிலையும் நானே சொல்லி விடுகிறேன்! உறவு முறைதான் – ஆனால் தோரனுக்கு அல்ல! நமது ஊரில் பீர்க்கங்காய் என்று சொல்கிறோமே அதற்கு உறவு – அக்கா இல்லை தங்கை முறை என்று வைத்துக் கொள்ளலாம்! பீர்க்கங்காய் மாதிரியே இருக்கும் ஆனால் வழவழவென்று தோல் இருக்கும் – வடக்கே இந்த வகை தோரி நிறைய கிடைக்கிறது! அதை வைத்து விதம் விதமாக சப்ஜி செய்வார்கள் – பெரும்பாலும் தர்ரி வாலி சப்ஜி தான்! பீர்க்கங்காய் என்பதை ஆங்கிலத்தில் Ridge Gourd என்று சொல்வது போல, தோரியை Sponge Gourd என்று சொல்கிறார்கள். பெயருக்கு ஏற்றார் போல தோரி மெத்து மெத்தெனவே இருக்கும்!
தோரி சப்ஜியை சப்பாத்தி, பூரி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்ளலாம். சிலர் குறிப்பாக உத்திர பிரதேசத்தினர் சாதத்துடனும் சாப்பிடுகிறார்கள். நான் இதுவரை அப்படிச் சுவைத்ததில்லை! பெரும்பாலும் சப்பாத்தியுடன் தான் நான் சாப்பிடுவது வழக்கம். சரி தோரி தர்ரி வாலி சப்ஜி எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். முதலில் இதற்கு என்ன தேவை என்பதைப் பார்த்து விடலாம்!
தேவையான பொருட்கள்:
தோரி – 250 கிராம்
எண்ணெய் – சிறிதளவு
ஜீரகம் – 2 ஸ்பூன்
வெங்காயம் – 1 பெரியது
தக்காளி – 3
இஞ்சி – சிறு துண்டு
மிளகாய்த் தூள் – ½ ஸ்பூன்
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
கரம் மசாலா – ½ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது – சிறிதளவு (அலங்கரிக்க!) அம்புட்டுதேன்!
எப்படிச் செய்யணும் மாமு?
தோலுடன் தோரி துண்டுகள்...
தோல் சீவப்பட்ட தோரி துண்டுகள்...
தோரியின் தோலைச் சீவி எடுத்து விடுங்கள்! பீர்க்கங்காய் தோலில் துவையல் செய்வது போல இதிலும் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. ஒரு முறை கொஞ்சமாக எடுத்து முயற்சி செய்ய வேண்டும்! நன்றாக இருந்தால் பகிர்ந்து கொள்வேன்! (அப்படி இல்லை என்றால் சொல்ல மாத்தேன் போ! என்று குழந்தை போல அடம் பிடித்து விடலாம்!) சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இஞ்சி, வெங்காயம், தக்காளி மற்றும் தோரி
வெங்காயம், தக்காளி போன்றவற்றையும் நன்கு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இஞ்சியையும் சுத்தம் செய்து, தோலைச் சீவி, சிறு துண்டுகளாகவோ, நீள வாக்கிலோ நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி ஆகிய இரண்டிலும் முக்கால் பங்கு எடுத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் ஜீரகம் மற்றும் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சித் துண்டுகளையும் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளுங்கள்! மீதி கால் பங்கு நறுக்கிய வெங்காயமும், தக்காளியும் இருக்கட்டும்.
இந்த முன் வேலையெல்லாம் முடிந்த பிறகு, அடுப்பில் ஒரு வாணலி வைத்து, சிறிதளவு எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் ஜீரகத்தினைச் சேர்த்து அது ஏண்டா பாவி என்னை எண்ணெய்யில் போட்டுவிட்டாயே என்று சப்தமிட்டவுடன், மீதி இருக்கும் கால் பங்கு பொடியாக நறுக்கிய வெங்காயத்தினை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மீதமிருக்கும் தக்காளி துண்டுகளையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். சற்றே வதங்கியதும், அரைத்து வைத்திருக்கும் வெங்காயம்-தக்காளி-இஞ்சி கலவையையும் சேர்த்து விடுங்கள்.
அவ்வப்போது கலக்கிக் கொண்டே இருக்கவும். பிறகு கொடுத்திருக்கும் அளவு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து கலக்கி, சிறிது நேரம் மூடி வைத்து வேக விடுங்கள். எண்ணெய் பிரிந்து வரும் சமயம் நறுக்கி வைத்திருக்கும் தோரி துண்டுகளையும் சேர்த்து, மிகவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கிவிடுங்கள்! இந்த தோரி இருக்கிறதே சரியான அழுமூஞ்சி சுப்பி! வாணலியில் போட்டு வதக்கினால் கண்ணீர் விட ஆரம்பித்து விடும்! அதனால் அதிக அளவு தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. மூடி போட்டு மூடி வைத்து விடலாம்! மிதமான சூட்டிலேயே நன்கு வெந்து விடும். அவ்வப்போது மூடியை எடுத்து கலக்கி விட்டால் போதும். ஐந்து முதல் எட்டு நிமிடத்தில் தோரி நன்கு வெந்து விடும் என்பதால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை! தண்ணீர் தேவையான அளவு இல்லையென்றால் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள். நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியும் சேர்த்து கரம் மசாலா சேர்த்து ஒன்றிரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும்!
சப்பாத்தி, தோரி சப்ஜி மற்றும் கீரா!
சுவையான தர்ரி வாலி தோரி சப்ஜி தயார்! ரொட்டி, பூரி என இரண்டுடனும் சுவையான தொட்டுக்கை இந்த சப்ஜி!
நீங்களும் உங்கள் பகுதியில் இந்த தோரி கிடைத்தால் செய்து பாருங்கள். அப்படிக் கிடைக்காவிடில் பீர்க்கங்காயிலும் இதே போல செய்யலாம்! செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன்! பதிவில் சொன்ன விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை…
நட்புடன்,
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
இந்த மாதிரிப் பீர்க்கையில் செய்திருக்கேன். தோரி வாங்கினதில்லை. ஆதலால் அதில் செய்ததில்லை. பீர்க்கங்காயிலும் நன்றாக இருக்கும். அதுவும் அப்போல்லாம் எங்க தோட்டத்தில் விளைந்ததாக வேறே இருக்குமா? கேட்கணுமா? சுவைக்கு! நல்லதொரு பகிர்வு. நன்றி.
பதிலளிநீக்குபீர்க்கங்காயிலும் செய்யலாம் தான். இங்கேயும் கிடைக்கிறது. பெரும்பாலும் இப்படியே செய்வதுண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
அட்டகாச சமையல் மன்னன் நீங்கள். அன்பு வெங்கட்.!!!
பதிலளிநீக்குதோரி புரிந்தது. இந்த ஊர் ஸ்க்வாஷ் மாதிரி இருக்கு.
ஜீரகம் கத்துமா தெரியாமல் போச்சே:)
வண்ண வடிவமாகக், கச்சிதமாகச் செய்திருக்கிறீர்கள் .
மஹா தெளிவு.
அழகாக நறுக்கி, மசாலா அரைத்து வறுத்து
தண்ணீர் சேர்த்து வாசனை இங்கேயே வரும்படி செய்திருக்கிறீர்கள்.
அன்பு வாழ்த்துகள். சப்பாத்தி சப்ஜி தெரிகிறது அது என்ன கீரா?
அட்டகாச சமையல் மன்னன் - ஹாஹா.... அப்படியெல்லாம் இல்லை வல்லிம்மா... முடிந்த அளவுக்கு சமைத்து விடலாம்!
நீக்குகீரா - வெள்ளரிக்காயை இங்கே கீரா என்கிறார்கள். சாலட்-ஆக கீரா, வெங்காயம், தக்காளி என அனைத்தும் சாப்பிடலாம்! இங்கே கீரா மட்டும்!
ஆஹா.... வாசனை அங்கே வரை வந்து விட்டதா? :) மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பிரமாதமா இருக்கு வெங்கட் சகோ எழுத்தும் சமையலும். ரொம்ப ரசித்துப் படித்தேன் :)
பதிலளிநீக்குபதிவு ரசிக்கும் விதத்தில் இருந்தது அறிந்து மகிழ்ச்சி தேனம்மை சகோ.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பொன்மொழி அருமை ஜி
பதிலளிநீக்குஅருமையான ரெஸிப்பி.
வாசகமும் குறிப்பும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கில்லெர்ஜீயின் எதுகை மோனை உங்களையும் பிடித்து விட்டது. " தோரன் தோரி" "
பதிலளிநீக்குவலி இல்லாத வாழ்க்கையும் இல்லை. வழி இல்லாத வாழ்க்கையும் இல்லை. வலிகளைக் கடந்து வழிகள் தேடுவோம். " என்று பாணியை மாற்றிவிட்டீர்கள்!
நீங்களே சமையல் குறிப்பு எல்லாம் எழுதி விட்டால் அடுக்களையில் இருப்பவர் எதை எழுத முடியும்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஎதுகை மோனை - கில்லர்ஜி போலவே! :) மகிழ்ச்சி.
நீக்குசமையல் குறிப்புகளுக்கு பஞ்சம் ஏது? ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறதே ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எளிதாக சொல்லித் தருகிறீர்கள்... நன்றி...
பதிலளிநீக்குஎளிதாக இருந்ததா? மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எப்படிச் செய்யணும் மாமூ வும், ராஜா காது கழுதைக் காதும் பல வாரங்களாகக் காணவில்லை.
பதிலளிநீக்குஅழகான செய்முறை, அழகிய படங்கள். இது சுகினி என்று சொல்லப்படும் காயா? இதனை நான் (சுகினி) செளதியில்தான் ஏராளம் பார்த்துள்ளேன். நம்ம ஊர்ல வித வித நிறங்கள்ல சமீபத்துல தட்டுப்படுது.
எப்படிச் செய்யணும் மாமூ - சென்ற வாரம் கூட எழுதி இருந்தேன்! வழக்கம் போல, முழுவ்தும் படிக்கவில்லை போலும்! ஹாஹா...
நீக்குராஜா காது - வெளியே செல்வது மிகவும் குறைவு என்பதால் இந்தப் பகுதியை எழுத முடிவதில்லை நெல்லைத் தமிழன்.
Zucchini அல்ல இது! அதுவும் சமீப காலங்களில் தில்லியில் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அது எப்படி அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டேன் என நினைத்து ஆச்சர்யப்பட்டு போய்ப்பார்த்தேன். வாழைக்காய் திருத்தின படம் பார்த்தவுடன் என் நினைவுக்கு வந்துவிட்டது. நான் குறிப்பிட்ட இரண்டு வாக்கியங்களும் உங்கள் டிரேட் மார்க்காக மனதில் பதிந்துவிட்டது.
நீக்கு//இரண்டு வாக்கியங்களும் உங்கள் டிரேட் மார்க்// நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சுவைக்கத் தூண்டும் ரெஸிபி
பதிலளிநீக்குகுறிப்பு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குசமையல் குறிப்பு படங்களுடன் அருமை.
தோரி கிடைக்காது. பீர்க்கையில் மசாலா இல்லாமல் தோசை, இட்லிக்கு செய்வேன். சின்ன வெங்காயம் போடுவேன். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் அரைத்து விடுவேன்.
உங்கள் குறிப்பு படி பீர்க்கையில் செய்து பார்க்கிறேன்.
வாசகமும் குறிப்பும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குபீர்க்கங்காயில் இப்படிச் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் உண்மை. வழி தெரியாத வலிகளும் வாழ்க்கையில் நடக்கிறது. தோரி subji அருமையாக செய்துள்ளீர்கள். இட்லி, தோசைக்கும் மிகவும் நன்றாக இருக்கும். தேங்காய் அரைத்தால் காரசாரமாக இருக்காது் பீர்க்கையும் அதன் variety தான்.
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குஇட்லி தோசைக்கு இந்த சப்ஜி முயற்சித்ததில்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.
தோரி சுவைத்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு