புதன், 16 செப்டம்பர், 2020

சீந்தில் கொடி கஷாயம் - கலகலப்பான கலப்பு!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

சிங்கத்தின் இரைக்காக மட்டுமே மான்கள் படைக்கப்பட்டிருந்தால் அதற்கு வேகமாக ஓடும் கால்களை படைத்திருக்க மாட்டான்… அது போலதான் பிரச்சனைகளை கொடுக்கும் இறைவன் சமாளிக்கும் திறமையும் கொடுத்திருக்கிறான் – துணிந்து செல்வோம்! 

***** 

படம்: இணையத்திலிருந்து...

இந்த வாரத்தில் நண்பர் ஒருவரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவரது இல்லத்தரசி நண்பர் செய்த விஷயம் பற்றிச் சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்! நண்பர் செய்த கலகலப்பான கலப்பு பற்றிய விஷயம் தான் அது! நண்பரின் இல்லத்தரசிக்கு சற்று உடல் நிலை சரியில்லை என்று குளிர்சாதனப் பெட்டியில் சீந்தில்கொடி கொண்டு தயாரித்த ஒரு கஷாயம் வைத்திருப்பதாகவும், அதனைச் சூடுபடுத்தித் தரச் சொல்லி இருக்கிறார். நண்பர் செய்த வேலையைச் சொல்லி, அவர் வருத்தப்பட, எனக்கும் நண்பருக்கும் சிரிப்பு தாளவில்லை! அப்படி என்ன செய்தார் என்பதைச் சொல்வதற்கு முன்னர் இதே மாதிரி எனக்குத் தெரிந்த ஒருவர் செய்த சில கலப்புகளைப் பற்றிப் பார்க்கலாம்! 

பொங்காத பால்: 

காலை நேரத்திலேயே எழுந்து பாலைக் காய்ச்சி, காஃபி தயாரித்து அருந்துவது அவருடைய வழக்கம்! மனைவியைத் தொந்தரவு செய்யாமல் தானாகவே பாலைக் காய்ச்சி, டிகாக்‌ஷன், சர்க்கரை சேர்த்து காஃபி தயாரித்து குடித்து விடுவார் – தினமும் இப்படி நடக்கும். ஒரு நாள் இப்படி காலையில் வழக்கம் போல, பாலை எடுத்து அடுப்பில் வைத்து கேஸைப் பற்ற வைத்து சில நிமிடங்கள் ஆன பிறகு “டப், டிப்” என்று சப்தம் – பால் கெட்டு விட்டதோ என்று பார்த்தால், அவர் அடுப்பில் வைத்திருந்தது பாலே இல்லை! தோசை மாவு! அதை அடுப்பில் வைத்தால் என்னாகும்! அன்றைக்கு அவர் மனைவியிடம் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை! 

பருப்புப் பொடி சாதம்: 

முன்பெல்லாம் வீடுகளில் பருப்புப் பொடி, எள்ளுப் பொடி, கருவேப்பிலைப் பொடி, என வகைவகையாக பொடிகளை அரைத்து வைத்திருப்பது வழக்கமாக இருந்தது. குழம்பு, ரசம் என வைக்க முடியாத நாட்களில் சாதம் மட்டும் வைத்து, பொடி வகைகளில் ஒன்றைப் போட்டுக் கலந்து, சுட்ட அப்பளத்துடன் சாப்பிட்டு விடுவது வழக்கமாக இருந்தது. இப்போது அந்த மாதிரி பொடிகள் பயன்படுத்துவது குறைந்து விட்டது என்றே நினைக்கிறேன். பெரும்பாலும் மனைவி வெளியூர் செல்ல வேண்டியிருந்தால், இப்படி பொடி வகைகள், வற்றல் குழம்பு என செய்து விட்டுச் சென்று விட்டால், இரண்டு மூன்று நாட்கள் சாதம் மட்டும் வைத்து சமாளித்துக் கொள்ளும் கணவர் உண்டு! பலரை நான் அப்படிச் சந்தித்து இருக்கிறேன். 

அந்த மாதிரி ஒரு சமயம், நண்பரது மனைவி ஏதோ ஒரு விழாவிற்காக வெளியூர் சென்றுவிட, நண்பர் சாதம் வைத்து பருப்புப் பொடியைப் போட்டு சாப்பிட டப்பாவிலிருந்து எடுத்துப் போட்டு, நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்தால் குழகுழவென ஆகியிருக்கிறது! இப்படி இருக்காதே, என்ன தவறு என முகர்ந்து பார்த்தால் அது பருப்புப் பொடியே இல்லை! பருப்புப் பொடி கொஞ்சம் கார சாரமாக இருக்கும் அவர் வீட்டில்! அவர் கலந்ததுவோ மஹா சாதுவாக இருந்தது! வாசனைப் பார்த்த போது தான் தெரிந்திருக்கிறது – பருப்புப் பொடி என நினைத்து கடலை மாவை போட்டு பிசைந்தது! அந்த சாதத்தை சாப்பிடவும் முடியாமல் அப்படியே குப்பைக்குப் போனது அந்த கடலைமாவு சாதம்! வெளியே சொல்ல முடியாது என்பதால் சத்தமில்லாமல் இருந்து விட்டார்! ஆனால் அவர் செய்த ஒரே தவறு – குப்பைக் கூடையில் இருந்ததை வெளியே கொண்டு கொட்டாதது! மாலையில் வீடு திரும்பிய அவரது மனைவி கண்டுபிடித்து விட, பிறகென்ன – அர்ச்சனை தான்! கூடவே “கடலை மாவுக்கும் பருப்புப் பொடிக்கும் வித்தியாசம் தெரியாம இருக்க உங்களக் கட்டிட்டு நான் படற பாடு இருக்கே!” என்ற புலம்பலைக் கேட்க வேண்டியிருந்தது! பல வருடங்கள் ஆனாலும் அதனைச் சொல்லிக் காண்பித்துக் கொண்டே இருக்கிறார் அந்த நபரின் மனைவி! 


சீந்தில் கொடி கஷாயம்:

சரி சமீபத்திய விஷயத்திற்கு வருவோம்! அதாங்க சீந்தில் கொடி கஷாயம்! இந்த சீந்தில் கொடியை ஹிந்தியில் Gகிலோய் என்று சொல்கிறார்கள். இது, சமீபத்திய வருடங்களில் மிகவும் பிரபலமாக ஆகியிருக்கிறது வட இந்தியாவில். குறிப்பாக டெங்கி ஜூரம் வந்த பிறகு! இந்த ஜூரத்தினால் இறங்கிவிடும் Platelet Count-ஐ அதிகரிக்க, சீந்தில்கொடியின் சாறை அருந்துகிறார்கள். மிக விரைவாக Platelet Count-ஐ அதிகரிக்கச் செய்யும் சக்தி இந்த கொடிக்கு உண்டு! அதனால் இங்கே அவ்வப்போது இந்த சீந்தில் கொடியை கஷாயமாக செய்து சாப்பிடுவது வழக்கம். பொடியாகக் கூட கிடைக்கிறது. பல குடியிருப்புகளின் வேலியில் இந்தக் கொடியை வளர்க்கிறார்கள். எங்கள் குடியிருப்பில் கூட நிறைய வளர்ந்திருக்கிறது. இந்தத் தீதுண்மி காலத்திலும் இதனைப் பயன்படுத்துகிறார்கள். சீந்தில் கொடி தகவல் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். 

நண்பர் வீட்டில் சீந்தில் கொடி கஷாயம் ஏற்கனவே செய்திருப்பதைச் சுட வைத்துத் தாருங்கள் எனச் சொல்ல, நண்பரும் பாத்திரத்தினை எடுத்து அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைத்து, கசக்குமே என கொஞ்சம் தேனையும் கலந்து அவரது இல்லத்தரசியிடம் கொடுத்திருக்கிறார். அவர் அதனை அருந்தும் போதே, வாய்க் கசப்பு இருந்தாலும், சீந்தில் கொடி கஷாயத்தினைப் போலவே இல்லையே என சந்தேகம் வந்து கேட்டிருக்கிறார். நண்பரோ, உனக்கு நாக்கு சரியில்லை, குடி என்று சொல்லி, அவர் முழுவதுமாகக் குடித்து முடித்த பிறகும் சந்தேகம். எதை எடுத்து சூடு செய்தீர்கள் எனக் கேட்ட போது பாத்திரத்தைக் காண்பித்து இருக்கிறார்! “அட ராமா, சீந்தில் கொடி கஷாயம் நான் இந்தப் பாத்திரத்தில் வைக்கவே இல்லை! அது பாட்டிலில் இருந்தது! பாத்திரத்தில் இருந்தது புளிக்கரைசல்!” புளி கரைக்கும்போது சற்று அதிகமாகிவிட்டதே என வைத்திருந்தேன்! அதனை எடுத்துச் சூடு செய்து, தேன் வேறு சேர்த்துக் கொடுத்திருக்கிறீர்களே! என்று புலம்பிக் கொண்டிருந்தாராம்! ஹாஹா… நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார் – சீந்தில் கொடியோ, புளிக் கரைசலோ ஆனால் நான் கொடுத்த நாட்டு வைத்திய கஷாயத்தில் உன் உடல்நிலை சரியாகிவிட்டது பார் என்று! அதற்கு நண்பரின் மனைவி சொன்னது – “இது நாட்டு வைத்தியம் இல்லீங்க! காட்டு வைத்தியம்!” 

சின்னச் சின்ன சம்பவங்கள் தான் – ஆனாலும் தெரியாமல் இப்படிச் சில விஷயங்களைச் செய்து விட்டு, அந்த நேரத்தில் கடுப்பாக இருந்தாலும், பின்னர் யோசிக்கும்போது சிரிப்பு தான்! கலகலப்பான கலப்பு தான் இல்லையா? 

பதிவில் சொன்ன விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை… 

நட்புடன், 




வெங்கட் நாகராஜ் 
புது தில்லி.

28 கருத்துகள்:

  1. இந்தக் குழப்பம் பொதுவாக நடப்பதுதான்

    தயிர் என இட்லிமாவு பாத்திரத்தை எடுப்பது. (ஆனா பால்னு எடுத்தது டூ மச்). என் உறவின்ன் சுட சாத்த்தில் நல்லெண்ணெய் ஊற்றி அவசர அவசரமாக ஏதோ நாட்டுமருந்துப் பொடியைக் கலந்தது நினைவுக்கு வருகிறது. கேட்டால் ஐங்காயப்பொடி என நினைத்தேன் என்றான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக நடகும் குழப்பம்! இருக்கலாம்! ஆனாலு ஒவ்வொரு முறையும் இப்படி நடப்பதை ரசிக்கத்தானே வேண்டியிருக்கிறது! சில விஷயங்கள் எத்தனை முறை நடந்தாலும் ரசிக்கக் கூடியவையே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. கலகலப்பு கலப்பு அருமையாக உள்ளது. பொங்காத பாலும், பருப்பு பொடி சாதமும் மனம் விட்டு நகைக்க வைத்தது.

    /பருப்புப் பொடி கொஞ்சம் கார சாரமாக இருக்கும் அவர் வீட்டில்! அவர் கலந்ததுவோ மஹா சாதுவாக இருந்தது!/

    வார்த்தைகளை நகைச்சுவையாக எழுதுவதில் நீங்கள் மிகவும் திறமைசாலி. இவ்வரிகளை ரசித்தேன்.

    இப்படித்தான் வீட்டில் ஒருவர் செய்து வைத்திருப்பதை (சமையல்) கவனியாமல் அதை மற்றொருவர் வேறொன்றாக மாற்றப் போக பயங்கர கலகலப்பு கலப்பு உருவாகிறது. அதில் பெரும்பாலும் ஆண்கள்தான் மாட்டிக் கொள்கிறார்கள்.

    புளிக்கரைசல் சீந்தல் கொடி கஷாயமாக மாறியதும் நகைச்சுவைதான். காலை நேரத்தில் நன்றாக சிரிக்க வைத்து விட்டீர்கள். நமக்கு சிரிப்பு. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் பாடுதான் அவஸ்தை. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பொன்மொழி ஸூப்பர் ஜி
    ஹா.. ஹா.. நானும்கூட சோற்றுக்கு உப்பு என்று நினைத்து சீனியை போட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      உப்பு என்று நினைத்து சீனி! ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. சீந்தில் கொடி கஷாயத்தின் புளிப்பை ரசித்தேன்... சிரித்தேன்...

    ஒரு நாட்டின் நிர்வாகம் எளிது... வீட்டு நிர்வாகம் கடினம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிர்வாகம் - பல சமயங்களில் கடினம் தான் - நாடென்றாலும், வீடென்றாலும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி ஜி.

      நீக்கு
  6. ஹாஹாஹா சிரித்து சிரித்து வயிறு வலிக்குது. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தேனம்மை சகோ.

      நீக்கு
  7. காலை வணக்கம் ஐய்யா.
    இன்றைய பொன்மொழியும் காட்டு வைத்தியமும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் அரவிந்த்.

      பதிவும், வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அருமையான "கல"கலப்பு. பொதுவாக இம்மாதிரித் தவறுகள் எனக்கு நேர்ந்ததில்லை. என்றாலும் மாமியார் பல முறை சர்க்கரைக்குப் பதிலாக உப்பைப் போட்டுக் காஃபி கலந்து கொடுப்பார். இத்தனைக்கும் சர்க்கரை டப்பா காஃபிப் பொடிக்குப் பக்கமாத் தான் இருக்கும். ஆனாலும் ஏனோ அதை எடுக்க மாட்டார். உப்பைக் கண்ணாடி பாட்டிலில் வைத்திருப்பேன். அடையாளம் தெரிய! நினைவாக கண்ணாடி பாட்டிலில் இருந்து எடுத்துப் போட்டுக் கொடுப்பார்! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... இந்த மாதிரி குழப்பங்கள் பிறகு படிக்கும்போது நகைச்சுவை தான். அந்த நேரத்தில் அவஸ்தையாக இருந்தாலும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  9. புளிக்கும் சீந்தில் கஷாயத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போனது ஆச்சரியமே! ஆனால் இவற்றை எல்லாம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல் போட்ட உடனே அருந்துவது நன்மை தரும் என்பது என்னோட தாழ்மையான கருத்து. தேவைக்கு ஏற்றாற்போல் கொஞ்சமாகப் போட்டுக் கொள்ளலாம். தவறாக நினைக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களிடம் நானும் அப்படியே சொல்லி இருக்கிறேன் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வாசகம் அருமை. பதிவு நல்ல நகைச்சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  11. மிகவும் நகைசுவையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. சீந்தில் கொடி கஷாயம் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே (வடக்கில்) அது மிகவும் பிரபலம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. நிறைய பயன்பாடு உண்டு. மாத்திரைகளாகவும் சில நிறுவனங்கள் தயாரித்து விநியோகம் செய்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. அடடா அது புளி தண்ணியா ...

    கலகலப்பு தான் ஆனாலும் கொஞ்சம் பயமா இருக்குதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். புளித்தண்ணியே தான்! இப்போதும் அப்படித் தயாரித்தவரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....