அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட வீராங்கனா ராணி லக்ஷ்மிபாய் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
ட்ரெண்டிங் கொண்டாட்டம் - 11 ஆகஸ்ட் 2024:
தெருமுனையில் உள்ள பிள்ளையார் கோவில் அது! அதன் எதிரே பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி மூன்று நாட்கள் பெரிய விநாயகர் சிலை வைத்து கொண்டாட இளைஞர் குழு ஒன்று இன்று வீடு வீடாக வசூல் செய்ய வந்திருந்தனர்!
ஒவ்வொரு வருடமும் விண்ணை பிளக்கும் வகையில் அதிர வைக்கும் பாடல்களோடு சிறப்பாக நிகழும் விழா தான். ஆங்காங்கே குழுவாக அமர்ந்து வெட்டிக் கதை பேசும் இளைஞர்கள் இந்த மாதிரி விழாக்களில் சுறுசுறுப்புடன் ஓடியாடி வேலை செய்வதும், பயபக்தியோடு நெற்றி நிறைய அடுக்கடுக்காக விபூதியும் குங்குமமும் இட்டுக் கொண்டு வெல்க்ரோ வேட்டியும் ஜிகுஜிகு சட்டையுடனும் வலம் வருவார்கள்.
அப்படி கொண்டாடும் விழாவில் ஒலித்திடும் பாடல்களுக்கும் பிள்ளையாருக்கும் துளியும் சம்பந்தமே இருக்காது!! அர்த்தமே இல்லாத வரிகளுடன் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டு பிள்ளையார் ஐயோ பாவமென அங்கு அமர்ந்திருப்பார்! என்ன செய்வது??
காலம் காலமாக மக்களிடையே பக்தியை வளர்க்கவும், வழிபாடுகளைப் பற்றி வளரும் சமுதாயம் அறிந்து கொள்வதற்காகவும் சுற்றமும் நட்பும் கூடி மகிழவும் ஏற்படுத்திய நிகழ்வு இன்று இருக்கும் நிலையை எண்ணி வேதனையாக உள்ளது!
மண்ணால் ஆன விநாயகர் ஆற்றுநீரில் கரைந்து அடுத்த வருடம் திரும்பி வந்து நம் வீட்டில் கொலுவிருப்பார் என்ற நம்பிக்கையும், எண்ணங்களும் மறைந்து இயற்கைக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வண்ணங்களுடன் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸில் உருவாகும் சிலைகளும் அதை கரைப்பதும், அங்கங்கள் சிதைந்து நீரில் மிதப்பதுமாக மாறிவிட்டது...🙁
சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படுத்துவது என்பதை இன்றைய இளைஞர் சமுதாயம் தவறாக புரிந்து கொண்டு இருக்கின்றனர். பக்தி என்பது ஆட்டமும் பாட்டமும் அல்ல! எங்கோ தவிக்கும் ஒரு உயிருக்காகவும் மனம் வருந்தி ஒருநிமிடம் மனம் ஒன்றுபட்டு நமக்கு மேலுள்ள சக்தியை ஆராதனை செய்வதும், தன்னலமற்ற எண்ணத்துடன் எல்லோரும் நலமுடன் இருக்க பிரார்த்தித்துக் கொள்வதும் என புரிய வேண்டும்.
*******
வந்தாள் வரலஷ்மி - 16 ஆகஸ்ட் 2024:
வரங்களை அள்ளித் தரும் வரலக்ஷ்மி இன்று வந்தாள் எங்கள் இல்லம் தேடி! அறிந்த விதத்தில் அவளை அர்ச்சித்து ஆராதனை செய்து மனமார பிரார்த்தித்துக் கொண்டேன். நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்!
அதிகாலையிலேயே மகிழ்வான ஒரு செய்தியுடன் இன்றைய நாள் துவங்கியது! கடந்த சில மாதங்களாக அன்றாடம் ஆன்லைன் வழியே மூன்று வகுப்புகளை அட்டெண்ட் செய்வதாக இங்கு சொல்லியிருந்தேன் அல்லவா! அதில் முதலாவது சமஸ்கிருதம்! டிசம்பரில் அதற்கான பரீட்சை எழுதப் போகிறேன்!
இரண்டாவது ஆதிசங்கரர் அருளிய செளந்தர்யலஹரி! முறையாக அதை ஒரு குருவிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் வகுப்பில் சேர்ந்து கற்று வருகிறேன்! பிழையின்றியும் உச்சரிப்பு சுத்தமாகவும் சொல்ல வேண்டும்!
மூன்றாவதாக பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இவ்வுலகுக்கு சொல்லிய தர்மங்களான ஸ்ரீமத் பகவத்கீதை! அதில் முதல் நிலையான பக்தி யோகத்தை நிறைவு செய்து அதில் தான் இன்று தேர்ச்சி பெற்றுள்ளேன்! அடுத்ததாக புருஷோத்தம யோகத்தை கற்றுக் கொண்டு வருகிறேன்!
ஜெய் ஸ்ரீகிருஷ்ணா!
*******
இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
இன்றைய பதிவில் சொல்லப்பட்ட விஷயங்கள் இரண்டுமே பக்தி சம்பந்தப் பட்டதாய் இருக்கிறது. இளைஞர்கள் பற்றி சொல்லி இருக்கிறீர்கள். அதுவரை பீடி குடித்துக் கொண்டு வெட்டியாய் சுற்றி வரும் சிலருக்கு ஆடிமாதம் வந்தாலே ஆனந்தம்தான், அம்மன் பெயரிலும் இன்ன வேறு தெய்வங்கள் பெயரிலும் வசூல் செய்யலாம். கொடுக்காமலும் இருக்க முடியாது.
பதிலளிநீக்குஇதில் பெரிய பிரச்னை நீங்கள் சொல்லி இருப்பது போல அந்த அலறல் பாடல்கள். பக்தி பாடல்களேயாயினும் அடுத்தவர் காதைக் கிழிக்கும் அளவு இருந்தால் எரிச்சல்தான் வரும்.
பகவத்கீதை முதல் நிலை தேறி இருப்பதற்கு வாழ்த்துகள். மற்ற வகுப்புகளிலும் சேர்ந்திருப்பதற்கு பாராட்டுகள். உபயோகமாய் பொழுதை அர்த்தமுடன் செலவழிக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஆதி முதல் பகுதிக்கு - இன்றைய நிலைன்னு இல்லை......எங்க ஊர்ல நான் சொல்றது நான் அங்கு இருந்தவரை, திண்ணையில் சீட்டாடிக் கொண்டு, குடித்துக் கொண்டு, பஞ்சாயத்து பண்ணிக் கொண்டு இருப்பவங்க கோயில் திருவிழா என்றால் முன்னில் இருப்பாங்க. ஒன்றே ஒன்று அப்ப எல்லாம் பாடல்கள் பக்திப்பாடல்கள் தான்.
பதிலளிநீக்குசென்னையில் இருந்தப்பவும் இதே கதைதான் அம்மன் சீசன், பிள்ளையார் சதுர்த்திக்குன்னு பிரிக்க வருவாங்க, பாடல்கள் அலறும். சினிமாவில் இடம்பெற்ற அம்மன் பாடல்கள், பிள்ளையார் பாடல்கள் என்று. காதைப் பிளக்கும். வீட்டுக்குள் கூடப் பேசிக்கமுடியாது.
பிரிக்க வரப்ப, பைசா கொடுக்காமலும் இருக்க முடியாது எதுக்கு வாங்கறாங்க? உண்மையாவே கோயிலுக்கா என்று கூட நினைக்கத் தோன்றும்.
கீதா
அந்த இளைஞர்களைப் பற்றியும், கொஞ்சம் நடுத்தர வயதுள்ளவங்களைப் பத்தியும் யோசிக்கறப்ப, அவங்களுடைய பின்னணியை ஆராய்ந்தால் நிறைய விஷயங்கள் இருக்கும். சில மனதுக்கு வேதனையாக இருக்கும். நல்ல சிறுபிராயம், வளர்ப்பு, இருந்திருக்காது. இதில் பிழைத்து வரும் இளையவர்கள் சொற்பமே. நாம ரொம்ப Idealistic ஆகப் பேசுகிறோமோ என்று தோன்றும்.
நீக்குகீதா
இரண்டாவது பகுதிக்கு - மனமார்ந்த வாழ்த்துகள்! கீதையில் முதல் நிலை தேர்ச்சி பெற்றதற்கும், இனி வரப் போகும் சமஸ்கிருத தேர்விற்கும்
பதிலளிநீக்குகீதா
இருக்கும் நேரத்தை உபயோகமாக செலவழிப்பது மிக நல்ல விஷயம் ஆதி.nice. keep it up.மும்பையில் கணேஷ் சதுர்த்தி தீபாவளியை விட சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை.இதைப் பற்றி ஓரிரு வரிகளில் எழுதி முடிக்க முடியாது.அது உற்சவம்.பார்க்க ரசிக்க பல உண்டு.
பதிலளிநீக்குகதம்பம் அருமை
பதிலளிநீக்குஇன்றைய இளைய சமூகத்தினரின் பக்தியை பற்றிய தங்களது கருத்தை ஆமோதிக்கிறேன்.
பதிலளிநீக்குவாசகம் அருமை. மற்றவைகளை முகநூலில் படித்தேன்.
பதிலளிநீக்குகற்றுக் கொள்வது மகிழ்ச்சி.
எல்லாவற்றையும் சிறப்பாக செய்வீர்கள் வாழ்த்துகள்.
கடல் நீரில் கரையும் விநாயகர் அடுத்த வருடம் மீண்டும் நம் வீட்டில் அதே நேரத்தில் வந்து இருப்பார் என்ற ஒர் எண்ணத்தோடுதான் இதெல்லாம் செய்கிறார்கள் என்றாலும், அந்த ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ், வர்ணங்கள் எல்லாம் சுற்றுச் சூழலுக்கு ஏராளமான பாதிப்பை உண்டாக்குகிறது என்பது வேதனையான விஷயமே.
பதிலளிநீக்குதுளசிதரன்
தேர்விற்கும், உங்கள் வகுப்புகளுக்கும், வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதுளசிதரன்