வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - தம்பதிகள் ஜாக்கிரதை - நாரதரின் சாபம் - பகுதி இருபத்தி ஏழு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட சென்னைக்கு ஒரு பயணம் - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வந்தே பாரத் பயணம்


இரயில் அனுபவங்கள்


காசி தமிழ் சங்கமம்


ஹிந்தி அவஸ்தை


கங்கைக்கரை படகோட்டிகள்


கங்கையில் படகு உலா


கங்கைக்கரை படித்துறைகள்


மேலும் சில படித்துறைகள்


சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி


Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா


புதிய காசி விஸ்வநாத் மந்திர்


சிறிது வயிற்றுக்கும்


கால பைரவர் கோவில்


காசி விஸ்வநாதர் கோயில்


வரம் தரும் வாராஹி கோயில்


மல்லிகார்ஜுன மஹாதேவ் மந்திர்


காசியில் ஜோதிர்லிங்க கோவில்கள்


ஸ்ரீ கர்த்மேஷ்வர் மகாதேவ் மந்திர்


பஞ்ச்க்ரோஷி யாத்ரா


சாரநாத் - சில தகவல்கள்


விருந்தினர்களுடன் ஒரு பயணம்


அயோத்யா ஜி


வீராங்கனா ராணி லக்ஷ்மிபாய்


மகாகவி பாரதியார் இல்லம்


ஸ்ரீ ரத்னேஷ்வர்  மஹாதேவ் மந்திர்



காசி நகரம் தன்னுள்ளே பலப்பல அதிசயங்களையும், விசேஷமான தகவல்களையும் கொண்டது.  சென்ற பகுதியில் சொன்னது போல அனைத்து விஷயங்களையும் நேரடியாக ஒரே ஒரு பயணத்தில் நாம் அனுபவிக்கவோ, நேரில் சென்று பார்த்து ரசிக்கவோ முடியாது.  காசி நகரம் குறித்தும் காசியின் படித்துறைகள் குறித்தும் எத்தனையோ கதைகள் உண்டு.  அப்படி ஒரு கதையையும் வேறு சில விஷயங்களையும் இந்தப் பகுதியில் நாம் காண இருக்கிறோம்.  படித்துறைகள் பற்றிச் சொன்னபோது ”நாரத் Gகாட்” எனும் படித்துறை குறித்தும் நாம் பார்த்தோம்.  நாரதருடைய சம்பந்தப்பட்ட படித்துறை இது.  அந்தப் படித்துறைக்கு ஒரு விசேஷம் உண்டு. அது ஒரு சாபம் குறித்தானது என்று! இந்தப் படித்துறையில் பொதுவாகவே தம்பதிகள் ஸ்னானம் செய்வதில்லை.  தம்பதி சமேதராக  நாரத் Gகாட் படித்துறையில் ஸ்னானம் செய்துவிட்டால் அவர்கள் பிரிந்து விடுவார்கள் - இதற்குக் காரணம் நாரதர் இட்ட சாபம் என்று சொல்கிறார்கள்! அது தான் சாக்கு என தம்பதிகளுக்குள் பிணக்கு இருக்கிறது, அங்கே சென்று தம்பதி ஸமேதராக ஸ்னானம் செய்தால் பிரிந்து விடுவோம் என்று யாரேனும் புறப்படாமல் இருந்தால் சரி!  அது என்ன சாபம் பார்க்கலாம் வாருங்கள்!



தாங்கள் செய்த பாபங்களிலிருந்து விடுபடவும், புண்ணியங்களைத் தேடிக் கொள்ளவும் கங்கை போன்ற புனித நதிகளில் நீராடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அதுவும் வாரணாசி, ப்ரயாக்ராஜ் போன்ற இடங்களில் நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. ஆனால் வாரணாசி நகரில் இருக்கும் நாரத் Gகாட் படித்துறையில் மட்டும் உள்ளூர் வாசிகளும், விஷயம் தெரிந்தவர்களும் ஸ்னானம் செய்வதில்லை - அதுவும் தம்பதி ஸமேதராக ஸ்னானம் செய்வதில்லை. அப்படியே தெரியாமல் தம்பதி ஸமேதராக அந்த படித்துறைக்குச் சென்று ஸ்னானம் செய்ய முற்பட்டால், அங்கே இருக்கும் உள்ளூர்வாசிகளும், பூஜாரிகளும் அப்படிச் செய்ய வேண்டாம் என்று தடுத்துவிடுவார்களாம்.  இதற்கான காரணம் இது தான் என்று நிச்சயமாக எழுதி வைத்திருக்கிறார்களா என்று தெரியாது! ஆனால் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுவது ஒரு விஷயம்.  பிரம்ஹச்சாரியான நாரத முனிவர் இங்கே ஒரு சிவாலயத்தை ஏற்படுத்தியதாகவும், அந்த ஆலயத்திற்கு நாரதேஷ்வர் மந்திர் என்று பெயர் வைத்ததாகவும் சொல்கிறார்கள்.  



பிரம்ஹச்சாரியான நாரதர் இந்த ஆலயத்தினை ஒட்டி அமைத்த படித்துறை என்பதோடு, இந்தப் படித்துறைக்கு அதிபதி அவர்தான் என்பதாலும், அந்தப் படித்துறையில் தம்பதிகள் ஒன்று சேர்ந்து ஸ்னானம் செய்தால் ”பிரிந்து விடக் கடவது” என சாபம் விட்டுவிட்டதாகவும் ஒரு கதை உலவுகிறது.  உள்ளூர்வாசிகளில் சிலர் இந்த படித்துறைக்கு புதியதாக ஒரு பெயர் கூட வைத்திருக்கிறார்கள் - அது “பத்னி முக்த் Gகாட்!”  அன்னியோன்யமாக இருக்கும் தம்பதிகள் கூட தப்பித்தவறி இங்கே ஒன்றாக ஸ்னானம் செய்து புறப்பட்டால், கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குள் சண்டை, சச்சரவுகள் வந்து பிரிந்து போகும் அளவுக்கு இந்த ஸ்னானம் வழிவகுக்கும் என்றும் நம்புகிறார்கள்.  இது கட்டுக்கதையாகவும் இருக்கலாம், சொல்வதற்கில்லை என்றாலும் இது போன்ற நம்பிக்கைகள் குறித்து நாம் பெரிதாக யோசிக்காமல், இங்கே தம்பதி ஸமேதராக ஸ்னானம் செய்யாமல் இருந்து விட்டுப் போவோமே! வாரணாசியில், கங்கையில் குளிக்க படித்துறைகளா இல்லை! ஒரு சில விஷயங்களை அதிகம் ஆராய்ச்சி செய்யாமல் இருப்பதே நல்லது! 


நம்பிக்கைகள் குறித்த இந்தத் தகவலைப் பார்க்கும்போதே அறிவியல் சம்பந்தப்பட்ட ஒரு தகவலையும் இங்கே பார்த்துவிடலாம்!  நீங்கள் வாரணாசிக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்! கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கிறது ஆலயத்தில்! உங்களுக்கோ காசி விஸ்வநாதரை தொட்டுத் தழுவி, அருகே அமர்ந்து தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது - ஆனால் இந்த அளவு கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும் நாளில் இப்படியான ஆசைகள் நிறைவேறுவது சாத்தியமானதா என்ன?  நிச்சயம் சாத்தியம் இல்லை. சில பண்டாக்கள் உங்களை காசு வாங்கிக் கொண்டு அருகே அழைத்துச் செல்லலாம் என்றாலும் கூட ஒரு சில நொடிகள் மட்டுமே கொடுத்த காசுக்கு மதிப்பு! எல்லோரையும் விட சில நொடிகள் அதிகமாக இருந்து விட முடியுமே தவிர அங்கேயே நிமிடக் கணக்கில் நின்று தரிசித்து விட முடியாது. ஆரத்தியில் பங்கேற்க முடியாது. ஆனால் சமீப காலங்களில் ஒரு வித புதிய வசதியை இங்கே ஏற்படுத்தி இருக்கிறார்கள் ஆலய நிர்வாகிகள். அந்த வசதி என்ன? சொல்கிறேன் வாருங்கள்.



காசி விஷ்வநாத் காரிடார் என்று அழைக்கப்படும் ஆலய வளாகத்தின் அருகே ராமேஷ்வர் Bபவன் உள்ளே Durlabh Darshan Kendra என்று ஒரு இடம் இருக்கிறது. அங்கே சென்று 150 கட்டணம் செலுத்தினால் ஒரு அற்புதமான அறிவியல் பூர்வமான அனுபவத்தினை உங்களுக்கு ஏற்படுத்தித் தருகிறார்கள். என்ன அனுபவம்?  காசி நகரின் படித்துறைகள், காசி விஷ்வநாதர் ஆலய வளாகம், காசி விஷ்வநாதரின் கர்பக்கிரஹம் என பல விஷயங்களை உங்கள் கண்ணருகிலேயே கொண்டு வந்து காண்பித்து விடுகிறார்கள். கண்களில் அதற்கான கருவியை மாட்டிக் கொண்டு விட்டால் 3D Virtual Reality Technology மூலம் கர்பக்கிரஹத்தினை 360 டிகிரி கோணத்தில் உங்களால் பார்க்க முடியும்.  என்னதான் அருகே சென்று இறைவனை தரிசிக்க முடிவதில் இருக்கும் ஈர்ப்பு இப்படியான அறிவியல் விஷயங்களில், உபகரணங்களில் இருக்காது என்றாலும், இந்த மாதிரி முயற்சிகள் பாராட்டத்தக்கவையே! நான் நேரடியாகவே காசி விஷ்வநாதரை அருகே இருந்து தரிசனம் செய்து விட்டதால் இந்த வசதியை பயன்படுத்தவில்லை - பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் எனக்குத் தோன்றவில்லை!


புதுமையான பல வசதிகள் வந்தாலும், நேரடியாக ஈசனின் சன்னதியில் நின்று அவனிடம் நம் எண்ணக் குமுறல்களையும், வேண்டுதல்களையும் கொட்டிவிடுவதில் கிடைக்கும் நிம்மதி இப்படியான வசதிகளில் கிடைக்காது என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்.  என்ன இது போன்ற வசதிகள் அதிக நேரம் வரிசையில் நிற்க முடியாதவர்கள், கூட்டத்தில் சிக்கி அவஸ்தைப்பட முடியாதவர்கள் போன்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கக்கூடும்.  நேரடியே சென்ற பிறகும் இது போன்ற வசதியைப் பயன்படுத்துவதற்கு வீட்டிலேயே இருந்து விடலாம் என நினைத்தால், வீட்டிலிருந்தபடியே நேரடியாக காசியில் நடக்கும் பூஜைகள், விழாக்களை நேரடி ஒளிபரப்பாக காசி விஷ்வநாதர் ஆலயத்திலிருந்து எப்போதும் காண வசதிகளும் உண்டு.  அப்படி நீங்கள் தரிசிக்க விரும்பினால் இந்தத் தளத்தினைச் சுட்டி நேரடி ஒளிபரப்பில் காசி விஷ்வநாதரை தரிசிக்கலாம். 


பயணத்தில் கிடைத்த இன்னும் சில அனுபவங்களை வரும் பகுதிகளில் பகிர்ந்து கொள்கிறேன். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

30 ஆகஸ்ட் 2024


24 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள். 

    நாரதர் அப்படி எல்லாம் சாபம் விட்டிருக்கக் கூடியவர் இல்லை!!!!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாபம் விட்டிருக்க வாய்ப்பில்லை என்றே எனக்கும் தோன்றியது ஸ்ரீராம். ஆனாலும் இப்படியான நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. //அருகே இருந்து தரிசனம் செய்து விட்டதால் இந்த வசதியை பயன்படுத்தவில்லை - பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் எனக்குத் தோன்றவில்லை! //

    நல்ல முயற்சிதான் அது.  நீங்கள் நீங்கள் தையும் முயற்சித்துப் பார்த்திருக்கலாம்.  அது எப்படி இருக்கிறது என்று பார்த்திருக்கலாமே..  எப்படியும் நேரடி அனுபவத்தையும் ஏற்கெனவே பெற்று விட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சி செய்திருக்கலாம்... ஆனால் முயற்சி செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை. அடுத்து ஒரு வாய்ப்பு அமைந்தால் பார்த்துவிடலாம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. கல்யாணம் ஆகாத ஆதங்கத்தில் யாரோ கிளப்பி விட்டுவிட்டு நாரதர் மேல் பழி போட்டு விட்டாரோ என்னவோ.3d சமாச்சாரம் சுவாரசியம்.எல்லா புனித ஸ்தலங்களுக்கும் நேரே செல்வது அதன் vibration பெற. போக முடியாதவர்களுக்கு இருக்கவே இருக்கு யூடியூப்.
    விஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரோ கிளப்பிவிட்ட புரளியாக இருக்கலாம் - லாம்! :) யூவில் நேரடி ஒளிபரப்பு வசதி மிகவும் சிறப்பான ஒன்று தான் விஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. காசி பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. இன்றைய வாசகம் அட்டகாசமான ஒன்று ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  7. அது தான் சாக்கு என தம்பதிகளுக்குள் பிணக்கு இருக்கிறது, அங்கே சென்று தம்பதி ஸமேதராக ஸ்னானம் செய்தால் பிரிந்து விடுவோம் என்று யாரேனும் புறப்படாமல் இருந்தால் சரி! //

    சிரித்துவிட்டேன் ஜி!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பாவம் நாரதர்! அப்படி சாபம் கொடுத்திருப்பாரா என்ன? நாரதர் கலகம் நன்மையில் முடியும்னுதானே சொல்வதுண்டு! நீங்க சொல்றாப்ல நாம நம்புகிறோமோ இல்லையோ அதிகம் ஆராயாமல் கடந்துசென்று விடலாம் தான்,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான விஷயங்களை கடந்து விடுவதே நல்லது கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. அப்படியான வசதிகள் முடியாதவர்களுக்கு முதியவர்களுக்கு உதவியாக இருக்கும் நிச்சயமாக.

    நமக்கு இன்னும் வயசாகலைங்கோ!!!! நேரடியாக ஈசன் அருகில் சென்று காண்பதுதான் பிடித்தமான ஒன்று! அது போல படித்துறைகளுக்கும் நேரில் சென்று பிரவாகமாக ஓடும் கங்கையைக் கண்டு கால் நனைத்து ரசித்து அதற்கு எதுவும் ஈடாகாது.

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த வரை நேரிலே தான் பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசையும் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. இன்றைய பதிவின் மூலம் பல தகவல்களை அறிந்து கொண்டேன். நாரதர் சாபம் இடும் அளவுக்கு முன்பு என்ன நடந்ததோ? தம்பதிகளை வாழ்த்துவதுதானே அவரின் நல்ல செயல்களில் ஒன்றாக இருந்திருக்கும். . இருப்பினும் இப்படி யாரோ கதை கட்டி விட்டதை நம்பி அனைவரும் செயல்படும் போது நாமும் அதை ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது. "ஊரோடு ஒத்து வாழ்" என சும்மாவா சொன்னார்கள்.

    தொழிற் நுட்ப வசதியால், இறைவனை நம் கண்ணெதிரே யாருடைய தொந்தரவுகளின்றி பார்க்கும் முறையும் பாராட்டத்தக்கது. நான் தாங்கள் கூறியசுட்டியில் சென்று இறைவனை தரிசித்து வந்தேன். நன்றி. தொடர்ந்து தங்கள் பதிவோடு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      ஊரோடு ஒத்து வாழ் - அதே தான். சில விஷயங்களை நாம் மாற்ற முடியாது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

      நல்லதொரு வசதி இந்த வசதி. தொடர்ந்து பதிவுகளை வாசித்து வருவது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. வாசகம் அருமை. பதிவும் படங்களும் அருமை.

    ”நாரத் Gகாட்” செய்திகள் இப்போதுதான் கேள்வி படுகிறேன்.
    ஏதாவது காரணம் இருக்கும் அங்கு குளிக்கவேண்டாம் என்பதற்கு.
    நீங்கள் சொல்வது போல குளிக்க வேறு இடமா இல்லை ?

    //கண்களில் அதற்கான கருவியை மாட்டிக் கொண்டு விட்டால் 3D Virtual Reality Technology மூலம் கர்பக்கிரஹத்தினை 360 டிகிரி கோணத்தில் உங்களால் பார்க்க முடியும்.//

    இது நல்ல ஏற்பாடுதான்.

    கல்யாணத்திற்கு நேரே போனாலும் இப்போது தாலி கட்டுவதை பார்க்க முடிவது இல்லை, காமிரா, வீடியோ எடுப்பவர்கள், உறவினர்கள் மறைத்து கொள்கிறார்கள்.
    அங்கு உள்ள பெரிய திரையில் தான் திருமணத்தை பார்க்க முடிகிறது.
    திருமணத்திற்கு வர முடியாதவர்களுக்கு அவர்கள் வீட்டிலிருந்து பார்க்க சுட்டி அனுப்பி விடுகிறார்கள்.

    அது போல காசியில் கூட்ட நெரிசலில் இறைவனை சிறிது நேரம் பார்த்தவர்கள் இந்த தொழிற் நுட்ப கருவியை பயன்படுத்தி பார்த்து கொள்ளலாம் மிக அருகில் மகிழ்ச்சியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நாரத் Gகாட் குறித்த தகவல்கள் - உண்மையோ இல்லையோ நம்ப வேண்டியது தான்.

      இப்போதெல்லாம் கல்யாணத்தில் பெரும்பாலானவர்களால் நேரடியாக ஒன்றும் பார்க்க முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....