சனி, 17 ஆகஸ்ட், 2024

காஃபி வித் கிட்டு - 198 - ஒலிம்பிக் - ம்யூச்சுவல் ஃபண்ட் - போதையில் மிமிக்ரி - Zangbeto - ஒரு நிமிஷம் - Berrymuch


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அயோத்யா ஜி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் எண்ணம் : ஒலிம்பிக்…



ஒரு வழியாக ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்துவிட்டன.  இந்தியா இந்த முறையும் நம் நாட்டின் மக்கள் தொகைக்கு கொஞ்சமேனும் சம்பந்தம் இருக்கும்படியோ, திறமைகள் உள்ளபடியோ பதக்கப் பட்டியலில் இடம் பெறவில்லை.  விளையாட்டுகளில் கிரிக்கெட்-க்கு கிடைக்கும் ஆதரவும், பணமும் மற்ற விளையாட்டுகளில் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறது இந்த ஒலிம்பிக் போட்டி.  அரசியல் துறையில் பல விளையாட்டுகள் நடப்பதை போல, விளையாட்டுத் துறையில் அரசியல் ரொம்பவே விளையாடுகிறது என்பது கண்கூடு. ஒரு போட்டியாளர் அதிக எடை காரணமாக Disqualify செய்யப்பட்டார் என்றால் இன்னுமொரு போட்டியாளர் அவரது அடையாள அட்டையை தனது தமக்கைக்கு கொடுத்து அதனால் போலீஸ் பிரச்சனையில் மாட்டிக் கொண்டதும் நடந்திருக்கிறது.  விளையாட்டுத் துறையில் நிறையவே மாற்றங்கள் தேவை என்பதையும், அரசியல் ஈடுபாடு இல்லாமல் திறமைக்கு மட்டுமே மதிப்பு தந்து போட்டியாளர்களை அனுப்ப வேண்டிய அவசியத்தையும் பலரும் சொன்னாலும் ஏனோ அரசியல் நிறைய விளையாடுவதால் பதக்க எண்ணிக்கை இன்னும் ஓரிலக்கம், இரண்டிலக்கத்திலேயே இருந்து விடுகிறது என்பது வேதனை தரும் விஷயம்.  இந்த விஷயம் குறித்த தங்களது கருத்துக்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!


******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : ம்யூச்சுவல் ஃபண்ட்…


ம்யூச்சுவல் ஃபண்ட்-களில் முதலீடு செய்வது ஆபத்துகளை உள்ளடக்கியது தான் என்றாலும் அதற்கான சில விளம்பரங்கள் மனதைக் கவரும் விதத்தில் எடுக்கிறார்கள்.  ஆபத்துகளைச் சொல்லும் வரிகள் வேகவேகமாக சொல்லப்படுவதும், கண்ணுக்குத் தெரியாத, பொடிப் பொடி எழுத்துகளில் எழுதி இருப்பதும் நடப்பது தான் என்றாலும், விளம்பரத்தினை ரசிக்கலாம்! முதலீடு செய்யுங்கள் என்று சொல்வதற்கான பதிவு அல்ல என்பதை இங்கே தெளிவுபடுத்துகிறேன். விளம்பரம் பாருங்களேன்!


மேலே உள்ள காணொளி பார்க்க இயலவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழி யூட்யூப் தளத்தில் பார்க்கலாம்!


Helios Balanced Advantage Fund | #HeliosBAF #hertermkeliye #Balancedadvantagefund #mutualfundsahihai (youtube.com)


******


பழைய நினைப்புடா பேராண்டி : போதையில் மிமிக்ரி – பேய் ஜல்....


2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - போதையில் மிமிக்ரி – பேய் ஜல் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


மூன்று ஆட்டோ ஓட்டுனர்கள் – தத்தமது வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி, பேசிக்கொண்டிருந்தார்கள். இரண்டு பேர் கேட்டுக் கொண்டிருக்க, ஒரு ஓட்டுனர் மட்டும் பேசிக் கொண்டிருந்தார். நிற்கும்போதே தள்ளாட்டம் – குரலிலும் தள்ளாட்டம் – போதையின் பிடியில் இருக்கிறார் என்பதைப் பார்க்கும்போதே தெரிந்து கொள்ள முடியும்!


ஏதோ பைரவர் பற்றிய அனுபவத்தினை பேசிக் கொண்டிருந்தார் போலும். நாம வருவது பைரவருக்கு தூரத்திலே இருந்தே தெரிந்துவிடும். நீங்கள் வருவதை நான் தெரிந்து கொண்டுவிட்டேன் என்பதைச் சொல்லும் விதமாக அது குரல் கொடுக்கும் என்று சொல்லி, நாய் மாதிரியே விதம் விதமாக குரைக்க ஆரம்பித்து விட்டார். நடுநடுவே Modulations வேறு!


இவர் இப்படி மிமிக்ரி செய்து கொண்டிருக்க, எதிர் புற Compound சுவரின் உட்புறத்திலிருந்து பதில் குரல் – இது உண்மையான நாயின் குரல்! இப்புறத்திலிருந்து இவரின் பதில்!  ஒரே காமெடியாக இருந்தது.


உள்ளே சரக்கு சென்ற பிறகு என்ன செய்கிறோம் என்பதே பலருக்கும் தெரிவதில்லை!  தள்ளாடியபடி வாகனத்தினை செலுத்தாமல் இருந்தால் சரி! என்ற நினைவுடன் நானும் நகர்ந்தேன்....


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!


******


இந்த வாரத்தின் தகவல் : Zangbeto நடனம்



ஆப்பிரிக்காவில் Zangbeto என்ற பெயரில் ஒரு நடனம் குறித்து சமீபத்தில் தெரிந்து கொண்டேன்.   Zangbeto என்பது ஒரு உடையின் பெயர் - இரண்டு வார்த்தைகளாகப் பிரித்து இதற்கு அர்த்தம் சொல்கிறார்கள் - "Zan" அவர்களது மொழியில் என்றால் இரவு என்றும் "Gbeto" என்றால் வேட்டையாடுபவர் என்றும் அர்த்தமாம்! இந்த நடனத்தின் போது அணிந்து கொள்ளும் உடையானது பனை ஓலைகள், வைக்கோல் போன்றவற்றினைக் கொண்டு தயாரிக்கப்படும் நூல்களால் ஆனது.  இந்த நூல்கள் தலைகீழ் கூம்பு போன்ற வடிவில் உள்ள வெற்று மூங்கில் அமைப்பில் இணைக்கப்படுகின்றன. இப்படியான உடையை அணிந்து நடனம் ஆடுவது அது நகரும் வீடு போல் தோன்றும் என்றும் அதற்கு "இரவு வேட்டைக்காரனின் வீடு" என்றும் பெயர் சொல்கிறார்கள். 


நடனத்தின் போது, ​​இந்த புனித ஆடையை ஆவிகள் அணிந்து கொள்கின்றன என்றும், சில சமயங்களில் இந்த ஆவிகள், மூங்கில் மற்றும் வாழைப்பழ நூல்களால் ஆன ஆடை வேண்டும் என்றும் கேட்குமாம்! அப்படி கேட்பதை கெட்ட சகுனம் என்றோ அல்லது குரூரமான ஆவி வந்திருக்கிறதோ என்றோ நம்புகிறார்கள். ஒரு ஆவி இந்த உடையை அணிந்து ஆப்பிரிக்க மேஜிக் நடனத்தை நிகழ்த்தினால், அது அழிவைக் குறிப்பதாகவும் மற்றும் வூடூ கலாச்சாரத்தின்படி இருளின் தோற்றத்தை உருவாக்குகிறது என்றும் நம்பிக்கையாம்!  யாருமே உள்ளே இல்லாமல் ஆடுவது போல இருக்கிறது இந்த நடனம்!  இணையத்தில் சில காணொளிகள் இருக்கின்றன.  அப்படி ஒரு காணொளி பார்க்க சுட்டி கீழே!


Africa's Most Mysterious Voodoo Practice - Zangbeto (youtube.com)


******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை :  ஒரு நிமிஷம் ... உங்களத்தான்…


முகநூலில் மத்யமர் தளத்தில் படித்து ரசித்த ஒரு கவிதை - இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக உங்கள் பார்வைக்கு! ஒரு பழங்கால வீடு பேசுவதாக இருக்கும் இந்தக் கவிதை எனது தாத்தாவின் வீடு குறித்த நினைவுகள மீட்டுத் தந்தது! படித்துப் பாருங்களேன் - உங்களுக்கும் உங்கள் கிராமத்து வீடும், அதன் நினைவுகளும் மனதுக்குள் மீண்டு வரலாம்!


ஒரு நிமிஷம் ... உங்களத்தான்



சிரிப்பும் கும்மாளமுமாய்

கழிந்த நாட்கள்

ஆயிரம் உண்டு

எனது

நினைவு சரியாக

இருக்குமானால்....

பதினாறு குடும்பங்களுக்கு மேல்

என்னிடம் வாழ்ந்து விட்டு போனார்கள்

எல்லாருமே இன்றும்

நல்ல நிலையில் ...

என் மனசு போல

ஆனால் நான் மட்டும்

தனிமையாக்கப்பட்டேன்.

இப்போ

எனக்கு நானே பேசிக் கொள்கிறேன் ...

சில சமயம் பழசை நினைத்து

சிரிக்கவும்  செய்கிறேன்

விழிகளின் ஓரம் நீர்த்துளி

கசியும்...

கிட்டத்தட்ட இருபத்தாறு குட்டிப் பாப்பாக்களின் பிரசவமும் 

முதல்  அழுகையும் 

என்னுள் தான் ....

ஏழு குமரிகள் பூத்து நின்றது 

முதலில்

எனக்குத் தான் தெரியும்...

பதிமூனு பெருசுகள் 

வயதாகி

எல்லாம் முடிந்து வெளியேறிய போது

நான் அழுதது

யார் அறிவார்?

அவர்கள் பிறந்த கதையும்

நானறிவேன்

அவர்கள் இறந்த கதையும்

நானறிவேன்

தீபாவளி பொங்கல் வந்தால்

எனது தோற்றமே

வேற லெவல்

வாசல் முட்ட கோலமென்ன?

வண்ண விளக்குகளென்ன?

இன்று என் கோலம் என்ன?

ஏதோ

பாகப் பிரிவினையாம் ...

ஒன்றாய் வளர்ந்த

வீட்டில் ஒருவருமே

ஒத்துப் போகலையாம்

நான் இப்போது

நீதிமன்றத்து

கோப்புகளில்

கிடக்கிறேனாம்...

யாரோ ஒரு வக்கீல்

வெத்தலய மடிச்சு

வாய் நிறைய திணிச்சு

சொல்லிவிட்டுப் போனது

இதக்கேட்டு

எனக்குத்தான் ஜீரணிக்க முடியல...

பௌர்ணமியிலாவது

பிழைத்துக் கொள்வேன்...

ஆனால்

அமாவாசைகளில் தான்

முகமற்ற  சிலர்

மதுப் புட்டிகளோடும்

வீச்சரிவாளோடும்

வருவதும் போவதும்

காணச்  சகிக்கலங்க ...

நீங்க கொஞ்சம்

மனசு

வப்பீங்களா?


ரவி... எம்.

31.7.24


******


இந்த வாரத்தின் இணையதளம் :  Berrymuch



தலைநகர் தில்லியில் சில வருடங்களாக பிரபலமாக இருந்த ஒரு கடை Miniso என்பது! பல அழகிய பொருட்கள், வித்தியாசமான பொருட்கள் இந்தக் கடைகளில் கிடைத்துக் கொண்டு இருந்தது. தலைநகரின் இதயம் என்று கருதப்படுகிற கனாட் ப்ளேஸ் பகுதியில் கூட இவர்களது ஒரு கடை இருந்தது - ஆனால் ஏனோ மூடி விட்டார்கள். கரோல் Bபாக் பகுதியிலும் பார்த்திருக்கிறேன். இணையதளமும் இருந்தது.  சமீபத்தில் அதே போல ஒரு இணையதளம் -  Berrymuch - எனும் தளம் அறிமுகம் ஆனது.  வித்தியாசமான பொருட்கள் இதில் கிடைக்கின்றன. அழகான, வித்தியாசமான பொருட்கள் இந்தத் தளத்தில் கிடைக்கின்றன.  விலையும் அதிகம் என்று சொல்ல முடியாது! இதுவரை தளத்திலிருந்து பொருட்களை நான் வாங்கவில்லை என்றாலும், பார்க்கும்போது நன்றாகவே இருக்கிறது! மேலே படத்தில் இருப்பது குழந்தைகளுக்கான ஒரு அழி ரப்பர்! ஒன்றின் விலை 20 ரூபாய்!


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

17 ஆகஸ்ட் 2024

26 கருத்துகள்:

  1. பதக்க விஷயங்கள் சோகம்தான்.


    விளம்பரம் புன்னகைக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதக்கம் - சோகமே! விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. அந்த பழைய பதிவில் தமிழகத்துக்கு பணிமாறுதல் கிடைக்க வாய்ப்பில்லை என்று சொல்லாமல், 'கடினம் முயற்சிக்கிறேன்' என்றே சொல்லி இருந்தீர்கள்.  ஏன், அப்புறம் முயற்சிக்கவில்லையா?

    ஆச்சர்யம்..  வீடு பற்றி நானும் ஒன்று இது போல் எழுதி இரண்டு மாதங்களாக டிராஃப்டில் போட்டு வைத்துள்ளேன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சி செய்திருக்கிறேன். பலன் இல்லை - வாய்ப்புகள் குறைவு ஸ்ரீராம்.

      வீடு குறித்து நீங்கள் எழுதியதும் படிக்க தாருங்களேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. வாசகம் நன்று. ஒன்றே ஒன்று வாசகத்தில் //மிகச் சிறந்த பாதுகாப்பு உண்மை// என்பது யோசிக்க வைக்கிறது. சில இடங்களில் உண்மையைச் சொல்லாமல் இருப்பதே நல்லது என்று தோன்றும் என் தனிப்பட்ட அனுபவங்களில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் குறித்த தங்களது எண்ணங்களைச் சொன்னதில் மகிழ்ச்சி. சில இடங்களில் உண்மை சொல்லாமல் இருப்பதும் நல்லதே கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. இந்தியா இந்த முறையும் நம் நாட்டின் மக்கள் தொகைக்கு கொஞ்சமேனும் சம்பந்தம் இருக்கும்படியோ, திறமைகள் உள்ளபடியோ பதக்கப் பட்டியலில் இடம் பெறவில்லை. விளையாட்டுகளில் கிரிக்கெட்-க்கு கிடைக்கும் ஆதரவும், பணமும் மற்ற விளையாட்டுகளில் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறது இந்த ஒலிம்பிக் போட்டி. //

    இதை அப்படியே டிட்டோ செய்கிறேன், ஜி

    அமெரிக்கா பாருங்க 500, 600 பேரை அனுப்பறாங்க. நம்ம நாட்டுலருந்து போனவங்க எத்தனை பேர்?

    உலக வரைபடத்தில் கண்ணுக்கே தெரியாம தம்மாதுண்டா இருக்கற நாடு கூட தங்கம் வென்று இருக்கிறது!

    இன்னுமொரு போட்டியாளர் அவரது அடையாள அட்டையை தனது தமக்கைக்கு கொடுத்து அதனால் போலீஸ் பிரச்சனையில் மாட்டிக் கொண்டதும் நடந்திருக்கிறது. //

    இது தனிப்பட்ட மற்றும் பொதுவெளி ஒழுக்கம், நேர்மை சார்ந்த விஷயம். நம்ம நாட்டைப் பற்றி எப்படியான எண்ணம் எழும் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒலிம்பிக் வேதனை தான் மிச்சம். இன்னும் நிறைய மாற்றங்கள் தேவை கீதா ஜி. நடப்பது கனவில் தான் முடியும் என்றே தோன்றுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. எப்ப நம்ம நாடு திறமைக்கு மதிப்பு கொடுத்து எல்லாத் துறைகளையும் விளையாட்டுகளையும் ஆதரித்து அரசியல் பண்ணாமல் இருக்கிறதோ அப்போதான் பதக்கக்கனவுகள் நிறைவேறும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திறமைக்கு இங்கே பொதுவாக மதிப்பில்லை கீதா ஜி. Connections முக்கியம் - பிரபலம் ஆவதற்கும், பங்களிப்பதற்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. ஒரு நிமிடம் உங்களைத்தான்.... ரசிக்க சிந்திக்க வைத்தது. காரணம் சில தினங்களுக்கு முன் மனைவியின் தாத்தா வீட்டை கும்பகோணம் அருகில் பார்த்தேன். படங்களைப் பகிர்ந்தபோது அவர்களின் குடும்பத்தில் பலருக்கும் உணர்ச்சிவசப்பட்ட எண்ணங்கள். இப்போதே கொஞ்சம் பெரிய ஓட்டுவீடாகத் தெரிந்தது எனக்கு. அவர்களுக்கோ, மிகப் பிரம்மாண்டமான வீடாக மனதில் தங்கியிருந்தது இப்போது சிறிய வீடாக்க் காட்சியளித்தது.

    கேனடா மற்றும் யுஎஸ் கூட கிரிக்கெட் டீம் வைத்துக்எஒண்டு டி20 உலக்க் கோப்பையில் கலந்துகொண்டன. பல நாடுகளிலும் புலம் பெயர்ந்த இந்தியர்களும் பாகிஸ்தானியர், பங்களாதேஷிகளும்தான் டீமில் இருப்பர். கேனடா அதிகாரிகள், டீமில் ஆங்கிலம் தவிர வேறு சொந்த மொழி பேசினால் அபராதம் விதிப்பராம். நம் நாட்டிலோ மாநில மொழி ஜாதி மத வேறுபாடுகள். அரசியல் தொடர்புகள். அப்புறம் எப்படி பதக்கங்கள் வரும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடு குறித்த தங்களது எண்ணங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத் தமிழன். எனது தாத்தா இருந்த வீடு இன்றைக்கும் மனதில் இருக்கிறது. ஆனால் எங்களிடம் தான் இல்லை! பல கைகள் மாறிவிட்டது.

      பதக்கம் - வாய்ப்பு குறைவு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. விளம்பரம் சிரிப்பை வர வழைத்தது. நல்லா எடுத்திருக்காங்க

    //ஆபத்துகளைச் சொல்லும் வரிகள் வேகவேகமாக சொல்லப்படுவதும், கண்ணுக்குத் தெரியாத, பொடிப் பொடி எழுத்துகளில் எழுதி இருப்பதும் நடப்பது தான்//

    டிட்டோ!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பழைய நினைப்புடா பேராண்டி - உள்ளே இருந்த பைரவோர்ட பதில் உரையாடல் சிரித்துவிட்டேன்.

    பேய் ஜல் - அன்று அர்த்தம் புரிந்திருக்கவில்லை ஆனா இப்ப ஹிந்தியில் அர்த்தம் தெரியும். கொஞ்சம் கொஞ்சம் பேச வருகிறது என்றாலும் தமிழ் பேசுவது போல் சகஜமாக உரையாட வரவில்லை. டக்கென்று திணறி தமிழ் ஆங்கிலம் என்று வருகிறது இடையில்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த மொழியுமே முதலில் கடினமாகத் தெரிந்தாலும், பேசப் பேச வந்துவிடும். தொடர்ந்து பேசுங்கள் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. Zangbeto - நடனம் குறித்து அறிந்திருக்கிறேன் நெருங்கிய உறவினர் ஆப்பிரிக்காவில் இருந்தப்ப ஊரைப் பற்றித் தெரிந்து கொள்ள முனைந்த போது ஆனால் விவரங்களும் பெயரும் மனதில் நிற்கவில்லை. ஆவி நம்பிக்கை என்பது மட்டும் நினைவில் இருந்தது.
    இப்ப மீண்டும் வாசித்துக் கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. வீடு பற்றிய கவிதை அருமை. நானும் இந்த வீடு பற்றி ஒரு பதிவு கதையாக எழுதியிருந்தேன். அந்த வீடு தன்னைப் பற்றியும் அங்கு இருந்தவர்களைப் பற்றியும் இனிய நாட்களைச் சொல்லி தற்போது இடிக்கப்பட புல்டோசரின் கரங்களுக்கு இரையாக என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடு குறித்த உங்கள் கதை - படித்த நினைவில்லையே! பகிர்ந்து கொண்டீர்களா உங்கள் பக்கத்தில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  12. Berrymuch - புதியது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில பொருட்கள் நன்றாக இருக்கின்றன. விலையும் ஓகே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  13. நன்றாக விளையாடுபவர்களை ஊக்கப்படுத்தி அனுப்பி வைக்கலாம்.
    எல்லாவற்றிலும் அரசியல் புகுந்து விளையாடுகிறது.
    வீட்டின் படமும் வீடு கதை சொன்ன கவிதையும் மனம் கனத்து போனது.
    பல வீடுகள் இப்படித்தான் கிடக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....