சனி, 3 ஆகஸ்ட், 2024

காஃபி வித் கிட்டு - 196 - மக்கன் வாலா தர்பூஸ் - ஹரேலா திருவிழா - டீக்கடைச்சூரியன் - சாவிக் கொத்து - தூற்றும் உலகம் - ப்ளூ ட்ராகன் ஆறு - கதைப்போமா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட ஸ்ரீ கர்த்மேஷ்வர் மகாதேவ் மந்திர் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் உணவு : மக்கன் வாலா தர்பூஸ்…



இனிப்பு, ஐஸ்க்ரீம் என சிலவற்றை நம்மால் விலக்கி வைக்கவே முடிவதில்லை.  அதிலும் சர்க்கரை நோயாளிகள் கூட வீட்டுக்குத் தெரியாமல் வெளியே செல்லும்போது தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை சாப்பிட்டு வந்துவிடுவது வழக்கம் தானே… கட்டுப்படுத்த முடியாத அளவு விருப்பங்கள் என்று வரும்போது இந்த இனிப்பு சாப்பிடுவதும் வந்துவிடுகிறது. இது ஒரு போதை போன்று சிலருக்கு!  தில்லியில் இனிப்புகளுக்கு பஞ்சமே இல்லை! வெளியே சென்றால் ஏதேனும் புதிய வகை இனிப்பு பார்த்தால் சுவைத்துவிட மனது துடிப்பது அடிக்கடி நடக்கும் விஷயம். அதனாலேயே, கடைத்தெருக்களுக்குச் செல்லும்போது குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல நடப்பதுண்டு! இத்தனைக்கும் சர்க்கரைக்கு இது வரை என்னைப் பிடிக்கவில்லை என்றாலும்! சமீபத்தில் அப்படிச் சென்றாலும் கண்களைக் கவர்ந்த ஒரு இனிப்பு தான் மக்கன் வாலா தர்பூஸ்! பார்த்த உடன் சுவைக்கத் தூண்டும் வகையில் இருக்கிறது - பழைய தில்லியின் சாந்த்னி சௌக் பகுதியில் சாய் கார்னர் என்று ஒரு கடை. அங்கே தான் இந்த மக்கன் வாலா தர்பூஸ் எனும் இனிப்பு மிகவும் பிரபலம். வெண்ணையின் உள்ளே தர்பூஸ் பழச்சாறு - கெட்டியாக! நல்ல சுவை தான். முடிந்தால், உங்கள் ஊரில் கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள். இல்லையெனில் உடனே இதைச் சுவைப்பதற்காகவேனும் தில்லிக்கு வாருங்கள்! 🙂


******


இந்த வாரத்தின் தகவல் : ஹரேலா திருவிழா…



நம் ஊரில் ஆடி மாதப் பிறப்பு எவ்வளவு பிரபலமோ அதே போல உத்திராகண்ட் மாநிலத்திலும் சாவன் என அழைக்கப்படும் ஆடி மாதம் மிகவும் பிரபலம்.  ஆடி மாதம் பிறக்கும் சமயம் இந்தப் பகுதிகளில் மழை ஆரம்பித்து விடும்.  அதன் பிறகு உழவு வேலைகள், பயிரிடும் வேலைகள் தொடங்கிவிடும். இந்தச் சமயத்தில் ஒரு மண் பானையில் தானியங்கள் இட்டு ஒரு வாரத்தில் அவை முளைத்த பிறகு நிறைய கொண்டாட்டங்களுடன் தானியங்களை நிலத்தில் பயிரிடத் தொடங்குவார்கள். பானையில் விளைந்த தானியங்களை சின்னச் சின்னதாக எடுத்து காதுகளின் பக்கங்களில் வைத்துக் கொண்டு கொண்டாட்டங்கள் நிறையவே இருக்கும் உத்திராகண்ட் மாநிலத்தில். இந்தக் கொண்டாட்டங்களுக்கு ஹரேலா திருவிழா என்று பெயர்.  ஆடி மாதம் ஆரம்பிக்கும் நாள் சிவன் மற்றும் பார்வதியின் திருமண நாளாகவும் கொண்டாடப்படுவதால் ஊரே கொண்ட்டாட்ட மயமாக இருக்கும்.  இந்த வருடம், சென்ற ஜூலை மாதம் 16-ஆம் தேதி ஹரேலா திருவிழா கொண்டாடப்பட்டது.  நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்கள் உத்திராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அது சமயம் வீட்டில் செய்யப்படும் பதார்த்தங்களை கொண்டு வந்து தந்தார். வித்தியாசமான உணவாக இருந்தது! பூஏ, சிங்கல், Bபடே, கீர் என நிறைய உணவு வகைகள் - கீர் ஒன்று தான் பாயாசம் போல தெரிந்த உணவு! மற்றவை தெரியாது என்றாலும் சுவையாகவே இருந்தது.


******


பழைய நினைப்புடா பேராண்டி : டீக்கடைச்சூரியன்



2011-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - டீக்கடைச்சூரியன் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


தலைநகரில் இருக்கும் நண்பர் அகஸ்டஸ் அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பு “டீக்கடைச்சூரியன்”. தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பினைத் தனது தந்தைக்கு சமர்ப்பணம் செய்துள்ள அவர் இத் தொகுப்பில் 25 கவிதைகளைத் தொகுத்து அளித்துள்ளார்.


முதல் கவிதை – வார்த்தைப்பாடு. அது இப்படித் தொடங்குகிறது…


ஆதியில் வார்த்தை

ஆண்டவனிடம் இருந்தது

அவன் அதை மனிதனில் விதைக்க

முளைத்தது நாக்கு

கர்ப்பத்தோட்டம் தன்

கதவு திறந்து துரத்த

மாபெரும் வெளியில் நின்று

வார்த்தைகளை

வீசி விதைப்பதும் அறுப்பதும்

சிக்கிமுக்கிக்கற்கள் போலுரசித்

தீயில்

காய்ந்து கொள்வதும்

கரிந்து போவதுமாய்

மனிதன் நகர்ந்தான்

ஆதி வார்த்தையிலிருந்து….


இவரது கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதியிருக்கும் “வெங்கட் சாமிநாதன்” ”அகஸ்டஸ் தனக்கென ஒரு மொழியை உருவாக்கிக் கொண்டுள்ளார். அந்த மொழி நமக்குத் தரும் படிமங்கள் அவரது அனுபவம் தந்த சித்திரத்தின் படிமங்கள்” என்று எழுதி இருக்கிறார்.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!


******


இந்த வாரத்தின் தகவல் : சாவிக் கொத்து



சாவிக் கொத்து - ஒவ்வொருவர் வீட்டிலும் சாவிக் கொத்து இல்லாமல் இருப்பதில்லை. அதிலும் சிலருக்கு விதம் விதமாக சாவிக் கொத்து வாங்கி சேர்ப்பது கூட வழக்கமாக இருக்கிறது.  மாமியார் கையிலிருந்து சாவிக் கொத்து மருமகளுக்குச் செல்வது கூட பல வீடுகளில் பிரச்சனைக்குக் காரணமாக இருப்பதுண்டு. இரயில் பயணங்களில் விதம் விதமான சாவிக் கொத்துகளை விற்பனைக்கு எடுத்து வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.  நானும் கூட அப்படியானவர்களிடம் சில சாவிக் கொத்துகளை வாங்கியதுண்டு.  இப்படி இருக்கையில் சமீபத்தில் ஒரு தளத்தில் விற்பனைக்கு வைத்திருந்த சாவிக் கொத்துகளை பார்த்தபோது, இந்த விஷயத்தினை எப்படியெல்லாம் வியாபார யுக்தியாக பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள் என்று தெரிந்தது.  உணவுப் பண்டங்கள் யாருக்குத் தான் பிடிக்காது? சிலருக்கு சமோசா பிடிக்கலாம், சிலருக்கு ஜலேபி/ஜாங்கிரி பிடிக்கலாம். அப்படி பிடித்த உணவையே சாவிக் கொத்தாக ஆக்கிவிட்டால்…. இந்த யோசனையை முன் வைத்து ஆரம்பிக்கப்பட்ட விஷயம் முன்னேறி, இணைய தளம் வழி விற்பனை செய்யும் அளவு வந்திருக்கிறது…  பார்க்க அழகாக இருக்கிறது என்றாலும் விலை தான் கொஞ்சம் தயங்க வைக்கிறது! ஆரம்ப விலையே 180/- அதைத் தவிர ஷிப்பிங்க் கட்டணம் உண்டாம்! விலையைக் கேட்டவுடன் ”அடப் போங்கய்யா நீங்களும் உங்க சாவிக் கொத்தும் என்று தோன்றிவிடும் அல்லவா!” எனக்கும் அப்படித்தான் தோன்றியது.  ஆசைப் பட்டால் இந்த இணைப்பில் வாங்கலாம்!


******


இந்த வாரத்தின் ரசித்த சிறுகதை :  தூற்றும் உலகம்



மேலே உள்ள ஓவியம் பார்த்தீர்களா? எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த ஓவியம்.  இந்த ஓவியத்திற்கு ஒரு கதை/கவிதை எழுதச் சொன்னால் நீங்கள் என்ன எழுதுவீர்கள்? உங்களுக்குத் தோன்றியதை எழுதி அனுப்பினால் எனது பக்கத்தில் வெளியிட நான் ரெடி! இந்த ஓவியமும் அதன் உடனான ஒரு பக்கக் கதையும் சமீபத்தில் முகநூலில் படித்தேன். விஜயா சுப்ரமணியம் என்பவர் எழுதியிருந்த கதை நன்றாகவே இருந்தது.  என்ன கதை என்பதை படிப்பதற்கு முன்னர் ஓவியம் பார்த்து உங்களுக்குத் தோன்றியதை எழுதி விடுங்கள் - பின்னர் மத்தியமர் குழுமத்தில் நீங்கள் இருந்தால் விஜயா சுப்ரமணியம் அவர்கள் எழுதி இருக்கும் கதையை இந்த இணைப்பில் படித்துப் பாருங்கள்! கதை எழுதியவருக்கு நன்றியுடன்! குழுவில் இல்லை என்றால், வேண்டுமெனில் நான் அவரது கதையை தனியே அனுப்புகிறேன்/இங்கே தனிப்பதிவாக பதிவிடுகிறேன்.


******


இந்த வாரத்தின் பயணம் :  ப்ளூ ட்ராகன் ஆறு



சமீபத்தில் பார்த்த தகவல் - பயணம், பார்க்க வேண்டிய இடம் குறித்தான தகவல் - போர்சுகல் நாட்டில் இருக்கும் நீல நிற ட்ராகன் ஆறு!  மேலே இருந்து பறவைப் பார்வையாக பார்க்கும் போது நீல நிறத்தில் ட்ராகன் வடிவத்தில் இருப்பதால் இந்த Odeleite ஆற்றின் பெயராக Blue Dragon River என்பதையே வைத்திருக்கிறார்கள்.  போர்ச்சுகல் நாட்டின் Algarve பகுதியில் இந்த ஆறு இருக்கிறது. சமீப காலங்களில் இந்த ஆற்றின் வடிவம் காரணமாகவும், அதன் வண்ணம் காரணமாகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறி வருகிறது என்பது தகவல்.  நமக்கு இந்தியாவின் உள்ளேயே பார்க்க வேண்டிய இடங்கள் அதிகம் இருப்பதால், இங்கேயெல்லாம் சென்று பார்க்க தோன்றுவதில்லை - இருந்தாலும், படத்தில் பார்க்கலாமே - அதில் தவறொன்றும் இல்லையே! 🙂


******


இந்த வாரத்தின் ரசித்த பாடல் :  கதைப்போமா…



சமீபத்தில் ”ஓ மை கடவுளே” என்ற படத்தில் வருவதாக ஒரு பாடல் கேட்க நேர்ந்தது. சித் ஸ்ரீராம் அவர்களின் குரலில் கதைப்போமா என்ற பாடல். பாடலும், பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதமும் நன்றாக இருந்தது. காட்சிகளும் அழகு. உங்களுக்கும் பாடல் பிடிக்கலாம்! பாருங்களேன்!



மேலே உள்ள காணொளியை பார்ப்பதில் தடங்கல்கள் இருந்தால் யூட்யூப் தளத்திலும் பார்க்கலாம்!


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

3 ஆகஸ்ட் 2024


20 கருத்துகள்:

  1. மக்கன்வாலா தர்பூஸ் கவர்கிறது!

    சாவன் கே ஆனே தோ என்று ஒரு படம்.  இரண்டு பாடல்கள் எனக்கு அதில் பிடிக்கும்.  ஒன்று டைட்டில் ஸாங்.

    அந்தப் பழைய பதிவு நான் இப்போதுதான் பார்த்தேன்.

    சமோசா சாவிக்கொத்து!  :)

    ஓவியக்கதை நல்ல முயற்சி!

    டிராகன் ஆறு தகவல், வியப்பு, சுவாரஸ்யம்.

    மகன்கள் தயவில் கதைப்போமா பாடல் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சித் ஶ்ரீராம் பாடல் மாத்திரம்தான் பிறரால் காப்பியடித்துப் பாட முடியாது. (தங்கள் குரலில்). பாடினால் சித்ஶ்ரீராம் மாதிரியே ருக்கும்.

    கதம்பத்தின் மற்ற பகுதிகளும் நன்று. தர்பூசனியை இனிப்பில் சேர்த்துவிட்டீர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. எல்லா பதிவுகளும் அருமை.சமோசா key chain கொஞ்சம் over.பசிக்கும்போது அதை சிலர் சவைக்கலாம்(சுவைக்க முடியாதே).சிலருக்கு எதையும் வாயில் வைத்து கடிக்கும் வழக்கம் உண்டு!மக்கன் தர்பூசுக்காக Delhi வரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நண்பரே.

      நீக்கு
  4. இன்றைய கதம்பம் சிறப்பாக உள்ளது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. சர்க்கரை நோயாளிகள் கூட வீட்டுக்குத் தெரியாமல் வெளியே செல்லும்போது தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை சாப்பிட்டு வந்துவிடுவது வழக்கம் தானே…//

    ஹாஹாஹாஹாஹா....ஜி எனக்கு வீட்டில் யாரும் எதுவும் சொல்லாட்டாலும் கூட (மகன் இங்கு இல்லை. அவன் என்னை கோபித்துக் கொள்வான் இப்ப அவனுமே சாப்பிட முடியாது!!!) இப்பலாம் சாப்பிடும் எண்ணம் வந்தாலும் திசை திருப்பி விடுகிறேன். மக்கன்வாலா தர்பூஸ் தில்லிக்கு வா வா என்கிறது. வந்தாலும் சாந்தினி சௌக் போக முடியுமா தெரியலை.

    கலர் எதுவும் போட்டிருக்கமாட்டாங்கதானே? தர்பூஸ்ல அது நல்ல கலரா இருக்கணும்னு ஊசி வைச்சு கலர் ஏத்தறாங்கன்னு சென்னை உணவு தரக்கட்டுப்பாட்டு அலுவலர் நிறைய பேரை பிடிச்சிருக்காங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. ஆடிப்பட்டம் தேடி விதை!! ஹரேலா திருவிழா!

    //பூஏ, சிங்கல், Bபடே, // இணையத்தில் பார்த்துவிட வேண்டியதுதான் என்னன்னு

    டீக்கடைச் சூரியன் கண்டிப்பாக வாசித்திருக்க மாட்டேன் 2011 ல் பதிவு. வாசிக்கிறேன்.

    இது சமோசா சாவிக்கொத்து போல! விலை கிட்ட போகவிடலை!

    நான் முகநூலிலேயே இல்லை.
    இப்ப பைக்கில் ஒரு குடும்பமே செல்வது போல அப்ப சைக்கிளில் குடும்பமே செல்லும்! சைக்கிளில் முன் பக்க பாரில் இன்னொரு குழந்தை இருக்கோ என்னவோ!!

    குழந்தையை ஆஸ்பத்திருக்கு அழைத்துச் செல்கிறாரோ என்பது போல் தோன்றுகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. ஓ மை கடவுளே என்று படம் இப்போதுதான் தெரிகிறது.

    கதைப்போமா பாட்டு நல்லாருக்கு . காட்சியும். புதிய இசையமைப்பாளர் என்று தெரிகிறது. அதாவது எனக்குப் புதுச. படமும் 4 வருடம் முந்தைய படம் போல.

    அசோக் செல்வன் நடிப்பு நல்லாருக்கும். முகபாவங்கள் நன்றாக வரும். காமெடி படம் போல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. தர்பூசணியில் அது நல்ல சிவப்பாக இருக்க வேண்டும் என்று ஊசி போடுவது தொடர்கின்றது..

    டீக்கடைகளில் செய்யப்படுகின்ற மோசடிகளை யார் கேட்பது?..

    வீட்டை விட்டு வெளியே சென்றால் எதுவும் சாப்பிடுவதில்லை தற்போது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தர்பூசணியில் ஊசி போடுவது - கொடுமை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  9. வாசகம் அருமை.

    மக்கன்வாலா தர்பூஸ் நன்றாக இருக்கிறது. இனிப்பு கடைகளில் மிக சின்னதாக கிடைக்கும் பால் ஸ்வீட் தர்பூஸ் போல செய்து இருப்பார்கள்.

    ஓ மை கடவுளே பாடலில் இயற்கை காட்சிகள் அருமை.
    கீசெயின் நன்றாக இருக்கிறது, தொன்னை , சமோசா பார்க்க அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....