அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட ஆரஞ்சு மிட்டாய் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று
சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி
காசியில் ஜோதிர்லிங்க கோவில்கள்
ஸ்ரீ கர்த்மேஷ்வர் மகாதேவ் மந்திர்
காசி நகரம் எண்ணற்ற பல ஆலயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு பயணத்திலும் காசி நகருக்குச் செல்லும்போதெல்லாம் வழக்கமாக பார்க்க விரும்பும் காசி விஸ்வநாதர் ஆலயம், கால பைரவர் ஆலயம், அன்னபூரணி ஆலயம், காசி விசாலாட்சி ஆலயம் போன்ற ஆலயங்கள் தவிர காளி மாதா ஆலயம், சங்கட் மோச்சன் ஹனுமான் ஆலயம் போன்றவையும் உண்டு. இதைத் தவிர கங்கைக் கரையில் இருக்கும் ஆலயங்கள் கணக்கிலடங்காதவை. காசி நகரில் இருக்கும் எல்லா ஆலயங்களையும் காண வேண்டும் என்றால் இந்த ஒன்பது நாள் பயணமல்ல ஒரு ஆண்டு காலம் அங்கேயே தங்கி இருந்தாலும் கூட பார்த்து முடியாது என்று எனக்குத் தோன்றும். வழக்கம் போல இந்தப் பயணத்திலும் பார்த்த ஆலயங்கள் தவிர, இது வரை பார்க்காத ஆலயங்களை சிலவற்றையும் பார்க்க முடிந்தது. அந்த ஆலயங்கள் குறித்தும் இங்கே உங்களுடன் இந்தப் பயணத் தொடரில் பகிர்ந்து வந்து இருக்கிறேன்.
எத்தனை எத்தனை ஆலயங்கள் காசி மாநகரில்… அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன? அப்படிப் பார்க்க ஆசைப்பட்டால் அது பேராசையாகவே இருக்க முடியும். காசி நகரம் நமக்கு அளிக்கும் வாய்ப்புகள் எண்ணற்றவை. தனக்குள்ளே வைத்திருக்கும் தகவல்களும் பிரமிக்க வைப்பவையே! காசி என்றாலே அங்கே இருக்கும் பலப் பல விஷயங்கள், நமக்கு இது வரை தெரியாத பல விஷயங்கள் தேடித் தேடிச் சென்று பார்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அப்படித்தான் இந்தப் பயணத்திலும் சில ஆலயங்களுக்கு வழி தேடி சென்று வந்திருக்கிறேன். ஆனாலும், இத்தனை நாட்கள் அங்கே இருந்தும் கூட சில ஆலயங்களைக் குறித்த தகவல்கள் தெரிந்திருந்தாலும் அங்கே சென்று அங்கே குடிகொண்டிருக்கும் இறைவனை தரிசித்து வர வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறவில்லை. பலப் பல விஷயங்கள், தகவல்கள் இந்த ஆலயங்களுக்குள் புதைந்து கிடக்கின்றன. அவற்றைக் குறித்து இணையத்தில் இருப்பதை மட்டுமே வைத்து அறிந்து கொள்ள முடியாது. உள்ளூர் வாசிகளிடம், அதிலும் குறிப்பாக முதியவர்களிடம் நிறைய பேச வேண்டியிருக்கும்.
படித்துறைகளில் அமர்ந்து கங்கையின் அழகிய ஓட்டத்தினை கவனித்தபடியே இருந்த நாட்களில் படித்துறைகளில் அமர்ந்து இருக்கும் சில முதியவர்களிடம் பேச்சுக் கொடுக்கவும் முடிந்தது. பெரும்பாலும் சில முதியவர்கள் உடனடியாக பேசிவிடுவதில்லை. நிறைய பேர் காவி உடை தரித்து உடம்பு முழுக்க விபூதி பூசி பெரிய பெரிய தாடியுடனும் நிறைய ருத்ராக்ஷ மாலைகளுடனும் காட்சி அளிப்பார்கள். அவர்களிடம் பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம் இருக்கும். ஏனெனில் இப்படியானவர்களில் பலர் வேடதாரிகள்! உண்மையான பக்தியுடன் இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்தவர்கள் அல்லர்! அவர்களிடம் பேச ஆரம்பித்தால் உடனே ஏதேனும் சொல்ல ஆரம்பித்து, காசு கேட்பவர்களாகவே இருக்கிறார்கள். பத்து பேரிடம் பேசினால் பாதிக்கும் மேலானவர்கள் இப்படியான வேடதாரிகளாகவே இருக்கிறார்கள். உண்மையாகவே பக்தி நோக்கத்துடன் இப்படி சன்யாசியாகத் திரியும் நபர்கள் பெரும்பாலும் பேசுவதில்லை. இந்தப் பயணத்தில் அப்படிப் பேசிப் பார்த்ததில் ஒரு பெரியவர் மட்டும் சில நிமிடங்கள் உண்மையான நோக்கத்துடன் பேசியதோடு, என்னிடம் எந்தவித உதவியும் எதிர்பார்க்கவில்லை.
தேநீர் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டபோதும், “இந்தக் கட்டைக்கு இப்போது அவசியம் இருக்கவில்லை! வேண்டும் என்று தோன்றும் சமயத்தில் இறைவன் மனது வைத்தால் எவரேனும் உங்களைப் போல கேட்டு வாங்கித் தருவார்கள்! பிறகு தேவை என்பதற்காக இப்போதே உங்களிடம் காசும் கேட்க மாட்டேன்” என்று சொல்லி விட்டார். அதன் பிறகு அவரிடமும் என்னிடமும் நீண்ட மௌனம். ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. அப்படியே கங்கையைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தோம். நாங்கள் அப்படி அமர்ந்திருந்த இடம் மணிகர்ணிகா Gகாட். அந்த இடத்தில் ஒரு ஆலயம் உண்டு - ஸ்ரீ ரத்னேஷ்வர் மஹாதேவ் மந்திர் என்று அந்த ஆலயத்திற்குப் பெயர். உலகத்திலேயே அதிகம் படம் எடுக்கப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று எனவும் சொல்லலாம்! பெரும்பாலும் கங்கை நதிக்குள்ளேயே இருக்கும் இந்த ஆலயம். கங்கையில் அதிக அளவில் தண்ணீர் இல்லாத போது மட்டுமே ஆலயத்திற்குள் பிரவேசிக்க முடியும். ஐநூறு வருடங்களுக்கும் மேலாக ஆகிவிட்டது இந்த ஆலயம் நிர்மாணம் செய்து என்று தகவல்கள் உண்டு. ஆலயத்திற்கு இன்னுமொரு விசேஷமும் உண்டு - அந்த ஆலயம் தொடர்ந்து சாய்ந்து கொண்டே இருக்கிறது - கிட்டத்தட்ட ஒன்பது டிகிரி சாய்ந்து இருக்கிறது! பைசா கோபுரத்தினை (நான்கு டிகிரி சாய்வு) விட ஐந்து டிகிரி அதிகமாக சாய்ந்து இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
இந்த ஆலயத்தினை காசி கர்வட் என்றும் கூட அழைப்பதுண்டு - ஹிந்தியில் கர்வட் என்றால் சாய்வது என்றும் திரும்புவது என்றும் பொருளுண்டு. படுக்கையில் படுத்திருக்கும்போது ஒருக்களித்துப் படுப்பதை ஹிந்தியில் ”கர்வட் லேனா” என்றும் சொல்வதுண்டு. இந்தக் கோயில் ஏன் இப்படி சாய்ந்து இருக்கிறது என்பதற்கு ஒரு கதை உண்டு - ராஜா மான்சிங் அவர்களின் ராஜ்ஜியத்தில் பணிபுரிந்த ஒருவர் தனது அன்னை ரத்னா Bபாய் அவர்களின் நினைவாக இந்த ஆலயத்தினை எழுப்பினார் என்றும் ஆலயம் கட்டி முடித்தபின்னர், அந்த நபர், “என் தாய்க்கு நான் பட்டிருந்த கடனை அடைத்துவிட்டேன்” என்று பெருமையுடன் சொன்னாராம். அப்படிச் சொன்ன அடுத்த விநாடி, அவர் கட்டிய கோயில் கர்ப்பகிரஹம் இருக்கும் பகுதி பின்புறமாக சாய்ந்து விட்டதாம் - அப்படி சாய்ந்ததன் மூலம் எவராலும் அவரவர் தாய்க்கு பட்டிருக்கும் கடனை அடைக்கவே முடியாது என்பதை கடவுள் உணர்த்தி விட்டார் என்றும் சொல்கிறார்கள். இப்போதும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ ரத்னேஷ்வர் மஹாதேவ் என்று அழைக்கப்படும் சிவபெருமான் இருக்கும் கர்ப்பக்கிரஹம் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் சூழ்ந்தே இருக்கிறது. கோடைக் காலத்தில் சில மாதங்கள் மட்டுமே அங்கே சென்று வழிபட முடியும்.
இப்படிச் சாய்ந்து இருப்பது ஆரம்பத்தில் இல்லை - பிறகு தான் சாய்ந்து விட்டது. அங்கே விழுந்த ஒரு மின்னல் காரணமாக சிதிலமடைந்தது, அப்போது தான் சாய்ந்தது, இல்லை இல்லை கங்கையின் கரையில் தாழ்வான பகுதியில் கட்டப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தின் கீழே இருப்பது மிருதுவான ஆற்று மணல் இருக்கும் இடம் என்பதால் சாய்ந்து விட்டது என்றும் சொல்கிறார்கள். ஒரு சிலர் கட்டுமானத்திற்கான அஸ்திவாரம் சரியில்லை. பெரும்பாலான ஆலயங்கள் உயர்வான பகுதியில் இருக்கும் போது இது போன்ற சில ஆலயங்கள் மட்டும் தாழ்வான பகுதியில் கட்டுவதற்கான காரணம் இருந்திருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். காரணம் என்னவாக இருந்தாலும் அதனை நாம் முழுவதுமாக தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. அரசாங்கமும் இதற்காக எந்தவித முயற்சியும் எடுக்கப் போவதாகத் தெரியவில்லை. அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டார்கள். இந்தக் கோயில் இப்படி சாய்ந்து கொண்டே போனால் அதிக வருடங்கள் இருக்காது என்று உள்ளூர்வாசிகளுக்கு கவலை - அவர்கள் சில முயற்சிகளை செய்ய வேண்டி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்களாம். ஆனால் இறைவனின் விருப்பம் எப்படி இருக்கப் போகிறதோ? எல்லாம் வல்ல ஈசனே அறிவான் என்பதே நிதர்சனம்.
சமீப நாட்களாக இந்தியா முழுவதிலும் பெய்து கொண்டிருக்கும் பலத்த மழை வாரணாசி நகரையும் விட்டு வைக்கவில்லை. காசி நகரத்தின் பல படித்துறைகள் வெள்ளத்தில் இருக்கின்றன. அதனால் இந்தக் கோயிலும் வெள்ளத்தினால் சூழப்பட்டே இருக்கிறது. நான் சென்றிருந்த டிசம்பர் மாதத்தில் கூட இந்த ரத்னேஷ்வர் மகாதேவ் மந்திர் உள்ளே சென்று வழிபட முடியவில்லை. ஈசன் அதற்கு என்றைக்கு அழைப்பு விடுப்பானோ? ஆனாலும் அந்த ஆலயத்தின் அருகே அமர்ந்து அதனை வெளிப்புறத்திலிருந்து பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். எனக்கும் வேலை இல்லை! எனதருகே அமர்ந்திருந்த அந்த முதியவருக்கும் வேலையில்லை! அவர் ஈசனின் நினைவாகவே காசி நகரத்திலேயே தங்கி விட்டவர்! அதனால் தொடர்ந்து அப்படியே அமர்ந்திருக்கலாம். ஆனால் எனக்கு அப்படியா? கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கே அமர்ந்திருந்த பிறகு அவரை நோக்கி ஒரு சிறு தலையாட்டல்! அவரிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை! அவரது கண்கள் ஸ்ரீ ரத்னேஷ்வர் மஹாதேவ் மந்திர் கோபுரத்தில் நிலைத்து இருந்தது. மேலும் அவரை தொல்லை செய்யாமல் அங்கிருந்து புறப்பட்டு விட்டேன்.
தொடர்ந்து காசி நகரத்தில் இப்படியான அனுபவங்கள் கிடைத்தன. பயணத்தில் மேலும் கிடைத்த அனுபவங்களை இங்கே தொடர்ந்து எழுதுகிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
28 ஆகஸ்ட் 2024
இந்த சாய்ந்த கோபுரத்தை போகிறபோக்கில் காட்டிச் சென்றார், எங்களை அழைத்துப் போனவர். அது நடந்து ஆயிற்று ஐந்து வருடங்கள்! நீங்கள் பலமுறை சென்று வருகிறீர்கள். நல்ல அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கும். எங்களுக்கும் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.
பதிலளிநீக்குபெரும்பாலும் இதனை பலர் கவனிப்பது இல்லை ஸ்ரீராம். உள்ளே செல்ல முடியாது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.
தங்களது காசி மாநகர அனுபவங்களை படித்தறிந்து கொண்டேன். சுவாரஸ்யமான அனுபவங்கள். ஸ்ரீ ரத்னேஷ்வர் மஹாதேவன் கோவிலை பற்றிய கதையும், தகவல்களும் தெரிந்து கொண்டேன். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.
தங்களிடம் பேசிய பெரியவர் உண்மையிலேயே இவ்வுலக வாழ்வில் பற்றில்லாதவர் போலும். பல வேடதாரிகளால், உண்மையில் இறைவன் மேல் பிடித்தமான பற்று வைத்திருக்கும் சில நம்பகமானவர்களையும் நம் மனது நம்ப இயலாமல் போய் விடுகிறது. ஆனால், இது போன்ற சிலரை தற்செயலாக சந்தித்தாலும் அவர்களின் புனிதமான கடவுள் பக்தி நம் நலன்களையும் மேம்படுத்தும். நல்லதையே நடக்க ஆண்டவனிடம் நாமும் பிரார்த்திப்போம். உங்கள் பயண அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. தொடர்கிறேன் சகோதரரே. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
சிறப்பு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குவெங்கட்ஜி, இந்தக் கோயிலைப் பற்றி வாசிக்கும் போது ஆர்வம் மிக்வும் கூடுகிறது., எப்படி இப்படி தண்ணீருக்குள் கட்டியிருப்பாங்க? ஒரு வேளை தண்ணீர் குறைவாக இருந்த காலத்தில் கட்டியிருப்பாங்களோ இல்லை கங்கையின் ஓட்டப் போக்குது திசை மாறி இப்பக்கமாக வந்திருக்குமோ?
பதிலளிநீக்குதண்ணீருக்குள்ளேயே இருந்தால் கோயில் எத்தனை காலம் இருக்கும்? தண்ணீர் குறையும் போது உள்ளே செல்ல எப்படி அங்கு பாசி பிடித்திருக்காதோ? என்றெல்லாம் கேள்விகல் குடைகின்றன. காசி நகரம் என்னை மிகவும் ஈர்த்த நகரம் இப்ப உங்க பதிவுகள் வாசிக்க வாசிக்கக் கூடுகின்றது ஆவல். எப்போது கிடைக்குமோ?
நல்ல தகவல்கள்.
கீதா
எனக்கும் இந்த ஆலயம் குறித்த நிறைய கேள்விகள் உண்டு. பதில் தான் இல்லை கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இன்றைய வாசகம் அருமை.
பதிலளிநீக்குகீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குவாசகம் அருமை . இறைவன் நம்பிக்கையானவரை அனுப்புவார்.
பதிலளிநீக்குபயண அனுபவங்கள், சாய்ந்த கோவில் வரலாறு எல்லாம் அருமை.
எல்லா கோவில்களையும் நம்மால் பார்க்க முடியாதுதான்.
முடிந்தவரை பாருங்கள், ஒவ்வொரு முறை போகும் போதும் பார்க்காத கோவில் பாருங்கள் .
சாதுக்களுக்கு இலக்கணமாக அந்த பெரியவர் இருக்கிறார் தேவை படும் போது இறைவன் அருள்வார் அவருக்கு. அடுத்த வேளைக்கு பொருள் சேர்க்க கூடாது சாதுக்கள்.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குபதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.