செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

தினம் தினம் தில்லி - National Gallery of Modern Art


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஐந்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


தினம் தினம் தில்லி வரிசையில் பதிவுகள் எழுதி கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. நடுவில் பதிவுகளே எழுதாமல் விட்டதும் நடந்ததே. இந்த வரிசையில் கடைசியாக எழுதியது தினம் தினம் தில்லி - பிரதான் மந்த்ரி சங்க்ரஹாலய் என்கிற பதிவு! இன்றைக்கு தினம் தினம் தில்லி வரிசையில் மீண்டும் ஒரு பதிவினை எழுதி இருக்கிறேன் - படிக்க நீங்களும் தயார் தானே! 



NGMA தளத்திலிருந்து...

தலைநகர் தில்லியின் மிகவும் பிரதானமான வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகவும், பிரபல சுற்றுலா தலமாகவும் இருப்பது இண்டியா கேட் என அழைக்கப்படும் இடம்.  அந்த இண்டியா கேட் அருகிலேயே பெரிதாக ஒரு கட்டிடம் இருக்கிறது - வெளியிலிருந்து பார்க்கும் போது ஏதோ அரண்மனை போன்ற தோற்றமளிக்கும் (ஒரு விதத்தில் அரண்மனையே தான்! தகவல் வரும் பத்திகளில் சொல்கிறேன்) - கண்ணாடியால் ஆன ஒரு மரம் ஒன்றும் கண்களைக் கவரும் விதத்தில் அந்தக் கட்டிடத்தின் வெளியே அமைந்திருக்கும்.  இண்டியா கேட் பகுதிக்கு வரும்போது, ஒருவழிப் பாதையான அந்த பாதையில் சுற்றி வரும்போது நிச்சயம் நீங்களும் கவனித்து இருக்கலாம்! அந்தக் கட்டிடத்தினுள்ளே அமைந்திருப்பது தான் National Gallery of Modern Art! 





நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் நவீன மற்றும் சமகால இந்திய கலைக்கான இந்தியாவின் முதன்மையான கலை நிறுவனமாகும். இந்த அருங்காட்சியகம் 1954 ஆம் ஆண்டு, நவீன இந்திய கலையை மேம்படுத்தும் விதமாகவும் பாதுகாக்கும் நோக்கத்துடனும் நிறுவப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இன்று வரை இந்தியா கலையின் பாதையில் செய்த பயணத்தினை விவரிக்கும் விதமாக பலவித சாட்சிகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது.  NGMA என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் எட்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் மகாராஜாவின் முன்னாள் அரண்மனையான ஜெய்ப்பூர் மாளிகையில் தான் இந்த அருங்காட்சியகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பாரம்பரியக் கட்டமைப்பு, அரண்மனைச் சூழல், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தலைசிறந்த படைப்புகளுக்கு பொருத்தமான பின்னணியை வழங்குகிறது. அது மட்டுமல்லாது வெளிப்புறத்திலும் பரந்து விரிந்திருக்கும் பசுமையான புல்வெளிகள் மற்றும் முற்றங்கள் சிற்பங்கள் நிறைந்த தோட்டமாக காட்சியளிக்கிறது. 2009 இல் கட்டப்பட்ட புதிய பிரிவு புதிய கேலரி தளங்கள், கலைப்பொருட்களுக்கான விற்பனை நிலையம், ஆடிட்டோரியம், ப்ரிவியூ தியேட்டர் மற்றும் நூலகத்துடன் அமைந்துள்ளது.


திங்கள் கிழமை மற்றும் தேசிய விடுமுறை தினங்கள் தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை இந்த அருங்காட்சியகம் திறந்திருக்கும். உள்ளே செல்ல நுழைவுக்கட்டணமும் உண்டு - இந்தியர்களுக்கு 20 ரூபாய், வெளிநாட்டவர்களுக்கு 500 ரூபாய்! (இந்த வேறுபாடு எல்லா இடங்களிலும் இருக்கிறது - இது குறித்து முன்னரும் சில பதிவுகளில் பேசி இருக்கிறோம்).  கண்டிப்பாக படங்கள், காணொளிகள் எடுக்க அனுமதி இல்லை!  நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே பாதுகாப்பு சோதனைகளைச் செய்யும் இடத்திலேயே பெரியதாக எழுதி வைத்திருக்கிறார்கள் - “ரீல்ஸ் எடுப்பது தடை செய்யப்பட்ட பகுதி!” என்று!  ரீல்ஸ் எடுக்கும் நபர்களிடம் நிறையவே பாதிக்கப்பட்டு இருப்பார்கள் போல! அலைபேசிகளை நாம் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டாலும் கேமரா எடுத்துச் செல்ல அனுமதி இல்லை! அலைபேசிகள் வழியும் படங்கள் எடுக்க அனுமதி இல்லை! (சிலர் அப்படியும் எடுக்கிறார்கள் என்றாலும் நாங்கள் எடுக்கவில்லை!) அற்புதமான ஓவியங்கள், சிற்பங்கள், கலைப் பொருட்கள் என மூன்று நான்கு தளங்களில் இங்கே கண்காட்சியாக வைத்திருக்கிறார்கள். அங்கே இருக்கும் ஓவியங்களை ஓவியர் எந்த அர்த்தத்துடன் வரைந்திருக்கிறார் என்பது நமக்கு புரிகிறதோ இல்லையோ, பல எண்ண ஓட்டங்களை நமக்குள்ளும் விதைத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.  



NGMA தளத்திலிருந்து...


NGMA தளத்திலிருந்து...


NGMA தளத்திலிருந்து...


NGMA தளத்திலிருந்து...


NGMA தளத்திலிருந்து...

அவ்வப்போது ஓவிய, சிற்பக் கண்காட்சிகளும் இங்கே நடக்கிறது. நிரந்தரமாக சில ஓவியங்கள், சிற்பங்கள், கலைப்பொருட்கள் கண்காட்சிக்கான இடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும் அவ்வப்போது சில ஓவியர்கள், கலா நிபுணர்கள் தங்களது படைப்புகளை இங்கே காட்சிக்கு வைக்கிறார்கள்.  அங்கே இருந்த பல கலைப்படைப்புகள் மனதைக் கவரும் வண்ணம் இருந்தன.  அவற்றைக் குறித்து வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.  சின்னச் சின்ன, நுணுக்கமான ஓவியங்கள், பிரம்மாண்டமான ஓவியங்கள் என அங்கே இருக்கும் எல்லாவற்றையும் நின்று நிதானித்து பார்த்து வரலாம்.  ஓவியம், கலை, சிற்பம் போன்ற விஷயங்களில் ஆர்வம் இருப்பவர்கள் இங்கே வந்து நீண்ட நேரம் செலவழிக்க, அவர்களுக்கும் பலப் பல புதிய சிந்தனைகள், கற்பனைகள் தோன்றும் என்பதில் சந்தேகமே இல்லை.  ஒரு சில ஓவியங்களை பார்த்தபோது, அந்த ஓவியரின் கலைப் பார்வையும் சிந்தனையும் பிரமிக்க வைக்கும் விதத்தில் இருந்தது.  என்னதான் படங்கள் எடுக்க அனுமதி இல்லை என்றாலும், அடடா படம் எடுக்க முடியவில்லையே என்ற எண்ணமும் தோன்றியது. சில ஓவியங்களின் படங்கள், அருங்காட்சியகத்தின் இணைய தளத்திலிருந்து எடுத்து இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் பார்க்க விரும்பினால் அவர்களது இணையதளத்திலும் பார்க்கலாம். 


அருங்காட்சியகத்தின் உள்ளே படம் எடுக்கவில்லை என்றாலும் வெளியே இருந்த சில கலைப்பொருட்களை படம் எடுத்தோம். அவற்றில் சில படங்களை இங்கே பகிர்ந்து இருக்கிறேன். இன்னும் இருக்கும் படங்கள் ஏதேனும் ஒரு ஞாயிறு அன்று நிழற்பட உலாவாக வெளியிடுகிறேன். தலைநகர் தில்லி வரும் வாய்ப்பு இருப்பவர்கள், முடிந்தால் நேரமெடுத்து இந்த National Galery of Modern Art சென்று அங்கே இருக்கும் ஓவியங்கள், படைப்புகளை பார்த்து ரசிக்கலாம்.  வேறு ஒரு பதிவில் தலைநகர் தில்லி குறித்து, வேறு ஒரு இடம் குறித்து பார்க்கலாம்! காத்திருங்கள்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

20 ஆகஸ்ட் 2024


24 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள். அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. கட்டண வேறுபாடு இருக்க வேண்டியதுதான் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டண வேறுபாடு குறித்த உங்கள் எண்ணங்களைச் சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம். இருக்கலாம் - ஆனால் அதிக வேறுபாடு இருக்கத் தேவையில்லை. சில இடங்களில் பத்து மடங்கு/இருபது மடங்கு கட்டணம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. NGMA என்று பார்த்ததும் பிடித்த பாடல் நினைவுக்கு வந்துவிட YouTube-ல் அதைத் திறந்து கேட்டு விட்டு வந்துவிட்டேன்.

    "நக்மா ஹமாரா"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இப்போது யூவில் கேட்டேன். 1976-இல் வெளிவந்த பண்டல்பாஸ் திரைப்படம்! பார்த்திருக்க வாய்ப்பில்லை! :) பாடலும் கேட்ட நினைவில்லை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    2. இந்தப் படத்தில் இன்னொரு பாடலும் நன்றாய் இருக்கும்,

      'பேமௌஸம் பஹார் கே.... '. 

      உண்மையில் அதுதான் என் அபிமான கிஷோர் பாடல்!

      அதே சமயம் இந்தப் பாடலைக் கேட்கும்போது ஸாகர் படப் பாடலான 'சாகர் கினாரே தில் ஏ புகாரே' வும் ஞாபகம் வரும்!

      நீக்கு
    3. சாகர் கினாரே பாடல் எனக்கும் பிடித்த பாடல். முதல் பாடல் கேட்ட நினைவில்லை ஸ்ரீராம்.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. சுவாரசியமான தகவல்கள். தில்லி எப்போ வருவது, இவைகளைப் பார்ப்பது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வாருங்கள். பார்க்கலாம் நெல்லைத் தமிழன். எந்த ஊரிலும் பார்க்க வேண்டிய இடங்களை ஒரு பயணத்தில் மட்டுமே பார்த்து விட முடியாதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. படங்கள் அழகு. விவரங்களும் தகவல்களும் பார்த்துக் கொண்டேன். இதுவரை பார்த்ததில்லை. அடுத்த முறை செல்லும் போது தங்கும் நாட்களை, மாதத்தைப் பொருத்து திட்டமிடலாம். (வெயில் மாதம்னா வெளியவே போக மாட்டேன்!!!!)

    வெளிநாட்டவர், இந்தியர்களுக்கான கட்டண வேறுபாட்டை நீங்க முன்னர் சில பதிவுகளில் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது. பல நாடுகளில் வெளிநாட்டவருக்குத் தனி கட்டணம் இருப்பதாகத் தெரியவில்லை. சில கீழை நாடுகளில் மட்டும் இருப்பதாகத் தெரிகிறது.

    இதைப் பற்றி மற்றொன்றும் இணையத்தில் வாசித்த நினைவு. அதாவது நம்மூர் கடை வியாபாரிகள் வெளிநாட்டவரிடம் அதிகமாக வாங்கினால் அது அவர்களுக்குத் தெரியவரும் போது அவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தால் காவலர்கள் அந்தக் கடைகளுக்குச் சென்று விசாரித்து, உரிய கட்டணத்தை மட்டும் வாங்க வேண்டும் என்று எச்சரித்து மீதத்தை வாங்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குக் கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொடுத்துவிடுவார்களாம். கூடவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பில்லும் வாங்கிக் கொள்ளச் சொல்வாங்களாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கோடை நாட்களில் இப்படி வெளியே செல்வதில்லை. குளிர் நாட்கள் என்றால் எல்லா வார இறுதிகளிலும் ஏதோ ஒரு இடத்திற்குச் சென்று வரலாம்.

      வெளிநாட்டவர்களுக்கு தனி கட்டணம் - இந்தியாவில் பல இடங்களில் இப்படித்தான். டாலர்களில் பார்க்கும்போது குறைவென்றே தோன்றும் என்று சொல்வதுண்டு. கடைக்காரர்களும் ஆட்டோ/டாக்ஸி நபர்களும் ஏமாற்றுவது வெளிநாட்டவர்களை மட்டுமல்ல, வெளி ஊர்காரர்களையும் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தகவல்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. ஓவியங்களும் விளக்கங்களும் அருமை ஐயா , நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. அருமையான சிற்பங்கள் மேலும் படங்கள். உங்கள் வர்ணனை ரசிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் மற்றும் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. சிறப்பான செய்திகள்.

    அழகான படங்கள்.
    பதிவிற்கு மகிழ்ச்சிவெங்கட்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட செய்திகளும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வாசகம் அருமை.
    ஓவிய படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    அனுமதி கட்டணம் மாறுபடுவது வருத்தம் தான். படம் பிடிக்க கட்டணமும் வெளிநாட்டினருக்கு அதிகம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      அனுமதி கட்டணம், படம் பிடிப்பதற்கான கட்டணம் என இரண்டுமே வெளிநாட்டவர்களுக்கு அதிகம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. விஜி வெங்கடேஷ்21 ஆகஸ்ட், 2024 அன்று 10:13 PM

    ஓவியங்கள் மிக அழகு.உங்கள் விவரமான எழுத்துக்களும்.நாமே போய் வந்தது போல் ஒரு feeling.நன்று நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் உற்சாகமளிக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....