சனி, 24 ஆகஸ்ட், 2024

காஃபி வித் கிட்டு - 199 - சண்டீலா கே லட்டு - பரவாயில்லை - [CH]சகடா - அனுஷ்கா - சட்னி சாம்பார் - கெட்டிக்காரத்தனம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மகாகவி பாரதியார் இல்லம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் தகவல் : சண்டீலா கே லட்டு…




ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உணவு பதார்த்தம் பிரபலம் - நம் தமிழகத்தில் கோயில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு போல வடக்கிலும் சில உணவு வகைகள் பிரபலம்.  லக்னோவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிறு கிராமம் சண்டீலா. இங்கே கிடைக்கும் ஒரு லட்டு மிகவும் பிரபலம். அப்படி என்ன சிறப்பு அந்த லட்டுவில் - பத்து நாள் ஆனாலும் கெடாது என்கிறார் என் அலுவலகத்தில் இருக்கும் லக்னோவாசி ஒருவர்.  பூந்தி தேய்த்து அதனை கொஞ்சம் பொடித்து, உருண்டையாக பிடித்து சர்க்கரை பாகு மேலே சேர்க்க உள்ளே இருக்கும் மென்மை போகாமல், சிறு சிறு மண் பானைகளில் வைத்து அதன் மேலே ஒரு துணியும் கட்டி, துணியை கட்டுவதற்கு ஒரு கயிறும் சேர்த்து எடுத்து வருவார்கள். சண்டீலா இரயில் நிலையத்தின் வழி செல்லும் அனைத்து இரயில்களிலும் இந்த சண்டீலா லட்டு விற்பனை ஆகும். அளவில் சிறிய பானைகள் என்பதால் ஜன்னல் வழியாகவே உள்ளே கொடுத்துவிடலாம் என்பதும் ஒரு வகையில் வசதி!  மிகவும் பிரபலம் என்று சமீபத்தில் லக்னோவிலிருந்து திரும்பியபோது வாங்கி வந்தார் இந்த சண்டீலா லட்டுவை! சுவை நன்றாகவே இருந்தது.  இந்த லட்டு குறித்து தேடிய போது கிடைத்த ஒரு ஆங்கில தளம் கீழே! பாருங்களேன். 


Sandila Ke Laddu | A Sweet Dose Of Nostalgia | Rachnakar


******


இந்த வாரத்தின் மனதைத் தொட்ட கவிதை : நம்ம எவ்வளவோ பரவாயில்லை…


முகநூலில் இருக்கும் மத்யமர் குழுவில் கோடாங்கி அவர்கள் எழுதிய கவிதை ஒன்று - மனதைத் தொட்ட கவிதையாக உங்கள் பார்வைக்கு…



மகனும் 

மருமகளும்

வெளிநாட்டில்

வேலையில் 

               இருப்பதால்

வயதான காலத்தில்

வாயிக்கு ருசியாக

வகை வகையா

சோறு

        போட்டுப்பார்க்க

ஆள் இல்லையே

அனாதை

              களைப்போல

வாழ்கிறோமே

                   என்பாள்..! 

பேரன் பேத்திகள்

பேஸ்புக்கில்

                வாட்சப்பில்

வக்கனையாய்ப்பேசி

வயிறுகுலுங்க 

சிரிக்கவைத்தாலும்

கைநிறைய அள்ளி

கன்னத்தைக்கிள்ளி

முத்தமிட 

முடியவில்லையே

என்று சொல்லிப் 

            புலம்புவாள்..!

வெளியுலகம்

தெரியாத 

வெள்ளந்திக்

              கிழவியவள்..!

வெறுமையில்

புழுங்குகிறாள் 

         என நினைத்து

ரிலாக்சேசன்

ட்ரீட்மெண்ட் 

ஒன்றைச்செய்தேன்.

நண்பர் 

வீராச்சாமி ஆசிரியர்

வீட்டுக்கு

என் மனைவியை

அழைத்துக்கொண்டு

                  போனேன்.

விதவிதமான

 டிசைன்களில்

ஷோபா நாற்காலி

சமையலறை

 படுக்கையறை

எல்லாம் இருந்தது.

இருபது வருசமாச்சு

எங்களுக்கு இன்னும்

குழந்தையில்லை

                   என்றார்கள்.

கவலையை

பகிர்ந்துகொண்டோம்

கடவுளைத்

    திட்டினாள் கிழவி..!

அப்படியே

பக்கத்துத்

தெருவில் இருக்கும்

கிருஷ்ணசாமி

வீட்டுக்குப்போனோம்

அவரோட அப்பா

அப்போதும் 

             ஒரு தரகரிடம்

அட சொத்துப்பத்து

ஒன்னும் வேண்டாம்

சொன்னபடி கேக்கிற

பொண்ணா 

        இருந்தா போதும்.

சாதிகூட 

வேண்டாமய்யா

இப்ப அதெல்லாம்

யாரு பாக்கிறா பாரு

பாத்து முடீன்னு

போன்ல 

     பேசீட்டு இருந்தார்.

சின்ன

வயதுத்தோழர்.

செல்வந்தர்

 வீட்டுப்பிள்ளை

             சின்னச்சாமி.

அவர் 

அவரோட

ஒரே ஒரு மகனுக்கு

ஊரெல்லாம் 

பொண்ணுத்

         தேடுகிறார்

 கிடைக்கவில்லை..!

மகன்

கிருஷ்ணசாமி 

இப்போது அவருக்கு

நாற்பது வயதுக் 

                 குழந்தை..!

திரும்பும்போது

கிழவி

கெட்டியாக

          என் கையைப்

பிடித்துக்கொண்டு

மெல்லச்

              சொன்னாள்

நம்ம எவ்வளவோ

          பரவாயில்லை ..!.


******


பழைய நினைப்புடா பேராண்டி : [CH]சகடா – ஆல் இன் ஆல் அழகுராஜா


2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - [CH]சகடா – ஆல் இன் ஆல் அழகுராஜா - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


குஜராத் மாநிலத்தில் சாலைகள் மிகவும் அருமையாக அமைத்திருப்பது மட்டுமல்லாது சீராக பராமரிப்பதும் நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் தவிர மாநில நெடுஞ்சாலைகள் என்ற பெயரில் பல மாவட்ட தலைநகரங்களும் இணைக்கப்பட்டு இருக்கின்றன.  இதனால் வாகனங்கள் சீரான வேகத்தில் சென்று வருகிறது.  இந்த சாலைகளில் பயணம் செய்யும் போது பயணம் விரைவில் முடிய வேண்டும் என்ற எண்ணமே தோன்றுவதில்லை – அப்படியே பயணித்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றியது!


இந்த சாலைகளில், குஜராத் மாநிலத் தலைநகரான காந்திநகரிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  இவை அனைத்தும் இப்படி பிரதான சாலைகளில் மட்டுமே இயங்குகின்றன.  பிரதான சாலையிலிருந்து விலகி, கிராமங்களுக்குள் செல்லும் பேருந்துகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது என்கிறார்கள். அதனால் இங்கே நிறைய மூன்று சக்கர வண்டிகள், பிரதான சாலைகளிலிருந்து கிராமங்களுக்கு பயணிக்கிறது. அப்படி இருக்கும் இந்த மூன்று சக்கர வண்டிகளுக்கு குஜராத்தி மொழியில் “[ch]ச[g]கடா” என்று பெயர் சொல்கிறார்கள்.


இப்படி கிராமங்களுக்குள் பயணம் செல்ல நமது ஊரில் இருக்கும் வசதிகள் போல பேருந்து வசதிகள் இல்லை என்றாலும், இப்படி ஒரு வசதியாவது இருக்கிறதே என்று நினைத்தேன்.  வேறு சில வட இந்திய நகரங்களில் இந்த வசதி கூட இல்லை. உத்திரப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் ஜீப்-ல் 25 முதல் 30 பேர் பயணிப்பதைப் பார்த்திருக்கிறேன்! ஒரு முறை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணமும் செய்திருக்கிறேன் – புளிமூட்டை கணக்காக மனிதர்களை அடைத்து வாகனங்களைச் செலுத்துவார்கள்! அதுவும் கண்மூடித்தனமான வேகத்தில்!


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!


******


இந்த வாரத்தின் தகவல் : அனுஷ்கா



உத்திரப் பிரதேச மாநிலத்தின் Gகாசியாபாத் பகுதியில் இருக்கும் Krishna Institute of Engineering Technology (KIET) மாணவர்களும் பேராசியர்களும் சேர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் புதியதாக ஒரு ரோபோவை உருவாக்கியிருக்கிறார்கள்.  பொதுவாக ரோபோவை உருவாக்க அதிக செலவாகும் என்றாலும் இவர்கள் சுமார் இரண்டு லட்சம் செலவில் இந்த ரோபோவை உருவாக்கி இருக்கிறார்கள். செலவை குறைப்பதற்காகவே ரோபோவை உருவாக்க குப்பைக் கிடங்குகளில் இருக்கும் சில தேவையில்லாத பொருட்களைக் கூட பயன்படுத்தி இருக்கிறார்களாம்.  இந்த ரோபோ என்னென்ன செய்யும், எப்படியெல்லாம் உருவாக்கி இருக்கிறார்கள் போன்ற தகவல்களை வாசிக்க விரும்பினால் இந்தத் தளத்தில் வாசிக்கலாம்!  அது என்ன தலைப்பில் அனுஷ்கா என்று சொல்லி விட்டு, அனுஷ்காவைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று நண்பர்கள் கேட்கலாம்! அதற்குள் நானே சொல்லி விடுகிறேன் - இந்த ரோபோவிற்கு அனுஷ்கா என்று பெயர் வைத்திருக்கிறார்கள் - Artificially Networked Unit for Smart Human Knowledge Assistance என்பதைச் சுருக்கி அனுஷ்கா!  திரைப்பட நடிகை அனுஷ்கா என்று நீங்கள் நினைத்தால் கம்பெனி பொறுப்பல்ல! 🙂



மாணவர்கள் வடிவமைத்த அனுஷ்கா...

******


இந்த வாரத்தின் வெப் சீரிஸ் :  சட்னி சாம்பார்



ராதா மோகன் அவர்களின் இயக்கத்தில் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் ஒரு வெப் சீரிஸ் சட்னி சாம்பார் - யோகி பாபு பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் வெப் சீரிஸ். இது குறித்து நிறைய பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சீரிஸ் ராதா மோகன் அவர்கள் இயக்கியது என்பதுடன் அவரது இயக்குனர் குழுவில் பிரபல எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் புதல்வியும் இருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல். நான் ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்கள் எதிலும் மாதாந்திர சந்தா எல்லாம் கட்டுவதில்லை. பார்ப்பதற்கு எனக்கு நேரமும் இல்லை.  ஆனாலும் இந்த சீரிஸ் குறித்து நிறைய பேர் எழுதியதால், சமீபத்தில் யூவில் தேடியபோது விஜய் டெலிவிஷன் பக்கத்தில் இந்த வெப் சீரிஸின் முதலாம் பகுதி கிடைத்தது.  தூக்கம் வராத ஒரு முன் இரவு வேளையில் முதலாம் பகுதியைப் பார்த்து விட்டேன்.  நன்றாகவே இருக்கிறது. அடுத்தடுத்து இருக்கும் பகுதிகளையும் பார்க்கத் தூண்டும் விதமாகவே இருந்தது என்றாலும் விஜய் டெலிவிஷன் பக்கத்தில் அடுத்த பகுதிகள் இல்லை.  இனிமேல் வரும்வரை காத்திருக்க வேண்டியிருக்கும் போல! முழுவதும் யாரேனும் பார்த்து விட்டீர்களா? அப்படி பார்த்திருந்தாலும் முடிவைச் சொல்லி விடாதீர்கள்! 🙂பிடித்ததா, இல்லையா என்பதை மட்டும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!


******


இந்த வாரத்தின் ரசித்த துணுக்கு :  கெட்டிக்காரத்தனம்



அதிர்ஷ்டமில்லாத கார் என்று ஒரு கோடி மதிப்புள்ள பிரான்டட் காரை 10 லட்சம் ரூபாய்க்கு விற்பதாய் ஒருத்தர் சொல்லவும், அதைத் தான் வாங்கிக் கொள்வதாய்ச் சொல்லி ஐந்து லட்சம் ரூபாயை அட்வான்ஸ் தொகையாக கொடுத்தார் நம்ம ஊரு ராமசாமி.


ஆனால், காரை மறுநாள் டெலிவரி செய்வதாய் சொல்லியிருந்த சிங், டிரைவர் காரைக் கொண்டுவரும் வழியில் ஆக்சிடென்டில் மாட்டி கார் சேதமாகிவிட்டதால், 'இப்போது கார் பழைய நிலையில் இல்லை என்பதால் தரமுடியாது' என்றார்.


"சரி.. பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள்.!" என்று ராமசாமி கேட்க, "என்னால் அது முடியாது. நான் ஏற்கனவே பணத்தை டிரைவரைக் காப்பாற்ற செலவழித்துவிட்டேன்…. நான்தான் சொன்னேனே... இந்தக் கார் ஒரு அதிர்ஷ்டம் கெட்டது என்று.." என்றார் சிங்கு.


கடைசியாய், "சரி.. உடைந்த காரையாவது என்னிடம் தாருங்கள். அதிர்ஷ்டமில்லாத அந்தக் காரை வைத்து ஒரு அதிர்ஷ்டப் போட்டி நடத்திக் கொள்கிறேன்.!" என்றார் ராமசாமி.


"உடைந்த காரை வைத்து எப்படி அதிர்ஷ்டப் போட்டி நடத்துவீர்கள்.?" என்று சிங்கு கேட்க, "அதெல்லாம் முடியும். நீங்கள் அனுப்பிய ஃபோட்டோ இருக்கிறது . அது மட்டும் போதும் என்றார் ராமசாமி. இதை அடுத்து உடைந்த காரை ராமசாமியிடம் ஒப்படைத்தார் சிங்கு.


இதெல்லாம் முடிந்து, ஓரிரு மாதங்கள் கழித்து ஒரு விழாவில் சிங்கு, ராமசாமியை பார்த்தார். என்ன ராமசாமி "அப்புறம் என்ன நடந்தது.? அந்தக் காரை வைத்து என்னதான் செய்தீர்கள் என்று கேட்க,


"உண்மையில் அது மிக அதிர்ஷ்டமான கார். நான் அதை வைத்து ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தேன். சரியாய்ச் சொன்னால் தொண்ணூறு லட்சம் என்று சிரித்த ராமசாமியை ஆச்சரியத்துடன் பார்த்த சிங்கு, எப்படி என்றார்.


"பத்தாயிரம் ரூபாய் சீட்டு வாங்கினால் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு கோடி ரூபாய் கார் பரிசு என்று நீங்கள் அனுப்பிய கார் ஃபோட்டோவை காட்டி 1000 பேர் கொண்ட ஒரு குலுக்கல் போட்டி நடத்தினேன்.


பரிசு கொடுக்கலியா? "யாரும் கண்டுபிடிக்கவில்லையா.?" என்று கேட்டார் சிங்கு.


வெற்றி பெற்றவன் மட்டும் வந்து கார் கேட்டான்... அவனிடம் 'உனக்கு டெலிவரி செய்ய வரும்போது ஆக்சிடென்ட் ஆகிவிட்டது' என்று உடைந்த காரைக் காட்டி எனக்கும் நஷ்டம் என்று கூறினேன். அவனது பத்தாயிரத்துக்கு பதிலாக பத்து லட்சம் தருகிறேன் என்று சொன்னேன். சத்தமில்லாமல் வாங்கிக் கொண்டு போய்விட்டான்.!" என்று சிரித்தார் ராமசாமி.


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

24 ஆகஸ்ட் 2024


31 கருத்துகள்:

  1. கவிதை யதார்த்தம். அனுஷ்கா செய்தியில் ரோபோ செய்யம் வேலைகளை ஒரு சிறு பட்டியலாக தந்திருக்கலாம்.
    கார் விற்பனை பற்றிய துணுக்கு எப்படியெல்லாம் ஏமாற்றலாம், எப்படியெல்லாம் ஏமாறலாம் என்பதை விளக்கியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டியல் தந்திருக்கலாம் - முழுவதும் படிக்க ஏதுவாக சுட்டி தந்திருக்கிறேன்.

      பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  2. லட்டு ஒரு முறை சுவைத்துப் பார்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சுவைத்துப் பாருங்கள் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. வெளிநாட்டு மகன் மருமகள் அக்கவிதை ரசிக்க வைத்தது.

    அனுஷ்காவைப் பார்த்தபின் வேறொன்றும் பார்க்க தோன்றவில்லை என்றாலும் கஷ்ட்டப்பட்டு மற்றவற்றையும் படித்தேன்...  ஹாங்...  அனுஷ்கா எனும் அந்த ரோபோ முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து விட்டேன்.

    சட்னி சாம்பார் முதல் நாளே பார்த்து ரசித்து விட்டேன்.

    கார் விற்பனை - புத்திசாலிகள் எப்படி வேண்டுமானாலும் பிழைத்துக் கொல்வபார்கள்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      ரோபோ அனுஷ்கா - முகம் இன்னும் சிறப்பாக வடிவமைத்து இருக்கலாம் என்பதே எனது எண்ணமும்.

      சட்னி சாம்பார் - முதல் பகுதி மட்டுமே பார்க்க முடிந்தது யூவில். மற்ற பகுதிகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    2. நான் OTT யில் பார்த்தேன்.  Zee 5 OTT 

      நீக்கு
    3. சட்னி சாம்பார் நான் OTT யில் பார்த்தேன்.  Zee 5 OTT 

      நீக்கு
  4. நீங்கள் எழுதித்தான் முதன் முமலில் கேவர் என்ற இனிப்பைச் சுவைத்தேன். சண்டீலீ லக்னோவில் எங்கு கிடைக்கும் எனப் பார்க்கிறேன். கயாவிலிருந்து திரும்பும்கோது லக்னோவில்தான் இரயில் எறுகிறேனா நினைவில்லை. இதுல ஒரே பிரச்சனை, என்ன ஆயில்ல பூந்தி பொரிக்கறாங்க என்பதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Gகேவர் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன். பூந்தி பொரிக்கும் எண்ணெய் - அது குறித்து ஒன்றும் தெரிவதில்லை என்பது கொஞ்சம் பிரச்சனை தான் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. சண்டீலா கே லட்டு - புதுசா இருக்கிறதே. அதுவும் சின்ன சின்ன பானைகளில் விற்கப்படுதுவது ஒரு வேளை அப்படிப் பானைகளில் விற்பதாலும் துணியால் மூடி விற்பதாலும் தான் அது கெடாமல் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஈரப்பதம் லட்டுவை நெருங்காமல் பாதுகாத்து!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சண்டீலா கே லட்டு - புதியது தான் எனக்கும் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. கவிதை நன்று.

    சகடா ஆல் இன் ஆல் அழகு ராஜா நன்றாக நினைவிருக்கிறது வாசித்த நினைவு. சகடா வில் செல்லும் ஆசையும் வருது! பாண்டிச்சேரியில் சகடா தான் கிட்டத்தட்ட ஆனால் மூடி இருக்கும் டெம்போன்னு. நீங்களும் பயணம் செய்திருக்கீங்கன்னு அங்கு கருத்தில் சொல்லியிருக்கீங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      சகடா - குஜராத் பயணத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். பாண்டிச்சேரி டெம்போவிலும் பயணம் செய்ததுண்டு கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. அனுஷ்காவை அந்தாண்டை போய் பார்த்துவிட்டு வந்தேன். நல்லாவே இருக்காங்க!!!!! நிறைய விஷயங்கள் இன்புட் செய்திருக்காங்க அனுஷ்காவை உருவாக்கியவங்க! உழைப்பு தெரிகிறது.

    அனுஷ்காவை பார்த்ததும் எனக்கு நான் எழுதிய கதை - எபியில் வந்தது - நினைவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சி கூட எழுதத் தொடங்கி........

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கதையில் வரும் Humanoid முழுவதும் தயாரானதாக வரும்! ....ஃபிக்ஷன் என்றாலும் சாத்தியமுள்ள ஒன்று.

      கீதா

      நீக்கு
    2. அனுஷ்கா குறித்த தகவல் வாசித்தமைக்கு நன்றி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    3. கதையின் தொடர்ச்சி - முடிந்த போது எழுதுங்கள் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. சட்னி சாம்பார் - யு வில் இருக்கிறதா? ஓகே நோட்டட். நானும் எந்த ஓடிடி தளங்களிலும் இல்லை. Airtel xtreams ஏர்டெல் எண் உள்ளவர்களுக்கு இலவசம். இடையில் அதில் இரு படங்கள் பார்த்தேன். தற்போது அதில் வருவன கூட பார்க்க நேரம் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்னி சாம்பார் - முதல் பகுதி மட்டும் யூவில் இருக்கிறது. மற்ற பகுதிகள் இன்னும் வெளிவரவில்லை கீதா ஜி. வந்தால் தகவல் சொல்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. கார்- சாமர்த்தியம் புத்திசாலித்தனம் இருந்தால் எப்படி வேண்டுமாப்னாலும் பிழைத்துக் கொள்ளலாம் போல!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா இடங்களிலும் சாமர்த்தியம் தேவையானதாகவே இருக்கிறது கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. அழகிய அனுஷ்கா படத்தைப் போட்டுவிட்டு, மாணவர்களின் அனுஷ்கா மெஷினையும் போட்டால், மெஷின் அனுஷ்கா பல்லிளிக்குது. பாவம் மாணவர்களின் ரசனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லிளிக்கும் மெஷின் அனுஷ்கா - ஹாஹா... பாவம் தான் மாணவர்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  11. எல்லா செய்திகளும் சுவை.அருமை.
    விஜி வெங்கடேஷ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி விஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. வாசகம் அருமை.
    நேற்று மனநல மருத்துவர் திருநாவுக்கரசு அவர்கள் பேசிய "குழந்தை வளர்ப்பு " பற்றிய பேச்சை கேட்டேன், மிக அருமையாக பேசினார். அதில் குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவது இல்லை, கேட்ட வார்த்தை பேசுவதை சொன்னார்.

    சண்டீலா கே லட்டு பார்க்கவும் நன்றாக இருக்கிறது.
    மதுரையில் இனிப்பு கடைகளில் கிடைக்கிறது.
    தீபாவளி சமயம் பல இனிப்புகள் வைத்த பெட்டிகளில் இதுவும் இருக்கும்.
    சண்டீலா கே லட்டு சுவை போல இது இருக்குமா என்றால் தெரியாது, நான் சண்டீலா கே லட்டு சுவைத்துப்பார்த்தது இல்லை.

    உண்மையாக கவிதை மனதை தொட்டது.
    அந்த காலத்தில் வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்கள் போனில் முகம் தெரியாமல்தான் பேச வேண்டும். இப்போது பேரக்குழந்தைகளை தொட்டு கொஞ்ச முடியவில்லை என்றாலும் நாள்தோறும் பார்த்து பேச முடிகிறதே அதுவே மகிழ்ச்சிதான்.

    மாணவர்கள் வடிவமைத்த அனுஷ்கா முகம் ஏமாற்றம் அளித்தாலும் மாணவர்கள் ஆசிரியர்கள் முயற்சியை பாராட்ட வேண்டும்.

    சட்னி சாம்பார் முதல் பகுதி பார்த்து விட்டு தேடினேன், கிடைக்கவில்லை நன்றாக இருக்கிறது. நிறைய துண்டு துண்டாக கிடைக்கிறது.

    கெட்டிக்காரத்தனம் படித்தேன், மூளைதான் அவர்களின் மூலதனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகிர்வுகள் குறித்த விரிவான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      சட்னி சாம்பார் முதல் பகுதி மட்டுமே இப்போது இருக்கிறது. மற்ற பகுதிகள் வெளியிட்டால் உங்களுக்கும் தகவல் சொல்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. வாசகம் அருமை.

    நாம் எவ்வளவோ பரவாயில்லை என்று கடைசியில் சொல்லி திருப்திப்பட்டுக் கொள்ளும் அந்தக் கவிதை அருமையாக இருக்கிறது. மனதை தொட்டது.

    சண்டீலா லட்டு என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறது. நன்றாகவும் இருக்கிறது.

    கார் விஷயம் நல்ல கெட்டிக்காரத்தனம். மூளைக்கு இப்படியும் பயன்பாடு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....