அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட தினம் தினம் தில்லி - National Gallery of Modern Art பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று
சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி
காசியில் ஜோதிர்லிங்க கோவில்கள்
ஸ்ரீ கர்த்மேஷ்வர் மகாதேவ் மந்திர்
சென்ற பகுதியில் அயோத்யா குறித்து சில தகவல்கள் பார்த்தோம். மீண்டும் வாரணாசிக்கு திரும்புவோம்! தலைப்பில் வீராங்கனா ராணி லக்ஷ்மிபாய் என்று பார்த்ததும், ஜான்சி கி ராணி என்று அழைக்கப்படும் ராணி லக்ஷ்மிபாய்க்கும் வாரணாசிக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றியிருக்கலாம்! ராணி லக்ஷ்மிபாய் அவர்களின் பிறந்த ஊர் வாரணாசி! வாரணாசி நகரில் அவரின் நினைவாக, அவருக்காக ஒரு நினைவுச் சின்னம் எழுப்பி இருக்கிறார்கள். ஒரு சிறு பூங்கா (மிகச் சிறிய இடம் தான் - அவ்வளவு பெரிய மகாராணி! ஆனால் அவரது நினைவுச் சின்னம் இருக்கும் இடம் மிகச் சிறியது - கண்டுபிடிக்கவும் உங்களுக்கு உள்ளூர் நபர்களின் வழிகாட்டலோ, கூகுள் மேப் துணையோ அவசியம்!) அமைத்து அங்கே அவருக்கு ஒரு சிலையும் வைத்திருக்கிறார்கள். கூடவே ராணி லக்ஷ்மிபாய் குறித்த சில தகவல் பதாகைகளும் இருக்கின்றன. அஸ்ஸி Gகாட் அருகே இருக்கும் சிறு சந்துகள் வழி நடந்தால் ராணி லக்ஷ்மிபாய் ஜன்மஸ்தலி என்று அழைக்கப்படும் இடத்திற்குச் செல்லலாம்!
நான் தங்கியிருந்த பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பொடிநடையாக நடந்து கூகுள் மேப் துணையுடன் அஸ்ஸி Gகாட் வரை சென்று இரண்டு மூன்று நபர்களிடம் கேட்டு ராணி லக்ஷ்மிபாய் ஜன்மஸ்தலி சென்று அடைந்தேன். நான் சென்ற நேரம் அங்கே ஒருவருமே இல்லை. ஒரு ஓரத்தில் இருந்த பொருட்கள் பார்த்தால் யாரோ ஒருவர் இங்கே தங்கியிருப்பதற்கான அடையாளங்கள் இருந்தன. காவலுக்கு இருப்பவராக இருக்கலாம்! ஆனால் அவர் கூட நான் சென்ற சமயத்தில் அங்கே இல்லை. ராணி லக்ஷ்மிபாய் குறித்த சில தகவல்கள் எழுதி இருப்பதோடு, ராணி லக்ஷ்மிபாய் வாழ்க்கையைச் சொல்லும் சில சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்களாக அங்கே அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றை படங்களாக எடுத்துக் கொண்டேன். நுழைவாயிலிலிருந்து பார்க்கும்போதே பிரம்மாண்டமான குதிரை ஒன்று பாயும் சிற்பம் நம் கண்ணுக்கு புலப்படுகிறது. குதிரையின் மீது அமர்ந்து போர் புரிகிறார் ராணி லக்ஷ்மிபாய் - முதுகில் கட்டியிருக்கும் குழந்தை கூட நம் கண்ணுக்கு புலப்படுகிறது! பார்க்கும்போதே போருக்கு அவர் சென்று செய்த வீரதீர பராக்கிரமங்கள் குறித்து படித்த நினைவுகள் மனதுக்குள் வருகின்றன.
இப்படியான ஒரு பேரரசியின் பிறந்த இடம் என்று தெரிந்து அங்கே ஒரு நினைவுச் சின்னத்தினை ஏற்படுத்திய அரசாங்கம், அதனை பராமரிக்கவும், அங்கே தப்பித் தவறி வரும் என்னைப் போன்ற சுற்றுலா பயணிகளுக்கு, அவர் குறித்த தகவல்கள், அவரது பிரமிக்க வைக்கும் வீரதீரச் செயல்கள் என அனைத்தையும் சொல்லும் விதமாக ஒலிப்பேழைகள், ஓவியங்கள் என எத்தனையோ ஏற்பாடுகளை செய்ய முடியும். ஆனால் ஏனோ தானோ என ஒரு இடத்தினை ஏற்படுத்தி, அங்கே சில புடைப்புச் சிற்பங்கள், சிலை என வைத்து விட்டு அதனை பராமரிக்கவோ, தகவல்கள் அளிக்கவோ ஒருவரையும் ஏற்பாடு செய்யாமல் விட்டிருப்பது வேதனைக்குரிய விஷயம். நம் நாட்டில் பழமைக்கும், வரலாற்றிக்கும் அத்தனை மதிப்பு இல்லை என்பது கண்கூடு! உள்ளே யாருமே இல்லை என்பால் சில விஷமிகள் இந்த இடத்தினை தவறாகவும் பயன்படுத்தக் கூடுமே என்று தோன்றியது! வேண்டாதவர்கள் சிலரோ, இல்லை போதையில் இருப்பவர்களோ அங்கே இருக்கும் சிற்பங்களை பாழ்படுத்தவும் கூடும் என்றும் மனதுக்குள் தோன்றி வேதனையை அதிகரித்தது.
ஒன்றிரண்டு படங்களை அங்கே எடுத்தாலும், ஏனோ மனதில் ஒரு வித வேதனை உணர்வு இருந்ததால் அதிகம் படங்கள் எடுக்கவில்லை. ஹிந்தியின் ”சுன்சான் ஜஹா” என்று சொல்வதுண்டு - அதாவது யாருமே இல்லாமல் இருக்கும் இடம்! அப்படித்தான் இருந்தது அந்த இடம்! நான் அங்கே படங்களோ, காணொளியோ எடுக்கவில்லை என்றாலும், இந்தப் பதிவிற்காக இணையத்தில் தேடும்போது ஒரு சிறு காணொளியை யாரோ எடுத்து யூட்யூபில் பகிர்ந்து இருந்தது கிடைத்தது. அதனை கீழே தந்திருக்கிறேன். கீழே உள்ள காணொளியை உங்களால் பார்க்க முடியவில்லை எனில் யூட்யூப் சுட்டியும் காணொளிக்குக் கீழே தந்திருக்கிறேன். அதில் இந்த இடத்தினை நீங்களும் சுற்றிப் பார்க்க முடியும்! காணொளியில் யாரோ ஒருவர் சுவர் ஏறிக் குதிப்பதையும் உங்களால் பார்க்க முடியும்! அதிலிருந்தே அந்த இடம் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள முடியும்! பாருங்களேன்!
ஒரு ஸ்வாரசியமான விஷயமும் இங்கே சொல்லத் தோன்றுகிறது. நமக்கெல்லாம் ராணி லக்ஷ்மிபாய் என்று தெரிந்த அவரது இயற்பெயர் அதாவது அவருக்கு அவரது பெற்றோர்கள் - மோரோபந்த் தாம்பே மற்றும் பாகீரதி சப்ரே/தாம்பே - வைத்த பெயர் என்ன தெரியுமா? அவருக்கு அவரது பெற்றோர்கள் வைத்த பெயர் மணிகர்ணிகா தாம்பே என்பதாம்! அந்தப் பெயரைச் சுருக்கி செல்லமாக மனு என்றும் அழைத்தார்களாம்! அவரது பெயர் கேட்கும்போது வாரணாசியின் பிரதான படித்துறையான மணிகர்ணிகா Gகாட் நினைவுக்கு வருகிறது! ஒரு வேளை அவரது பெயரில் தான் இந்த படித்துறைக்கு பெயர் வைத்தார்களோ என்ற எண்ணமும் வந்தாலும், அவரது பிறப்பிற்கு முன்பிலிருந்தே அந்தப் படித்துறைக்கு இந்தப் பெயர் இருந்திருக்கலாம் என்றும் தோன்றியது! எது எப்படியோ, இந்த இடத்திற்குச் சென்ற பிறகு அவரது இயற்பெயரையும் தெரிந்து கொள்ள முடிந்தது என்பதும் ஒரு பயனுள்ள விஷயம் தானே!
நீங்களும் வாரணாசி பயணிக்க நேர்ந்தால், உங்களுக்கு விருப்பமும் நேரமும் இருந்தால், புகழ்பெற்ற வீர மங்கையான ராணி லக்ஷ்மிபாய் பிறந்த ஊரில் அவருக்கு என ஏற்படுத்தி இருக்கும் நினைவுச் சின்னத்தையும் பார்த்து வரலாம். இந்த வாரணாசி பயணத்தில் கிடைத்த அனுபவங்களை தொடர்ந்து எழுதுகிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
21 ஆகஸ்ட் 2024
ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் என்றே நினைவில் இருக்கிறது. அவரது கணவர் பெயர் இப்போதுதான் அறிகிறேன்! நமக்கு சொல்லப்படும் வரலாறு என்பது இப்படிதான்! கஜினி 17 முறை இந்தியா வந்து தோற்றார் என்று தெரியும். அவ்வளவு முறையும் அவரை யார் திருப்பி அனுப்பியது என்று மனதில் படியும்படி சொல்ல மாட்டார்கள்!
பதிலளிநீக்குநமக்கு சொல்லப்படும் வரலாறு - கேள்விக்குரிய விஷயம் தான். பல சமயங்களில் வரலாற்றுத் தகவல்கள் திரித்துச் சொல்லப்பட்டிருப்பவை என்றே தெரிகிறது. எனக்கும் அங்கே சென்ற பிறகு தான் அவரது கணவர் பெயர், அப்பா-அம்மா தகவல்கள் போன்றவை தெரிந்தன ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆம், அரசாங்கத்தின் அலட்சியம் வேதனை தருகிறது. ராணியின் இயற்பெயரும் இப்போதே அறிகிறேன். படித்து மறந்து விட்டேனோ என்னவோ...
பதிலளிநீக்குஇப்படி பல அலட்சியங்கள் நம் நாட்டில் - புராதனமான விஷயங்களை அவற்றின் பழமைக்கு மட்டுமேனும் பாதுகாக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறோம் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காணொளி பார்த்தேன். உள்ளே நுழைந்து புடைப்புச் சிற்பங்கள் பார்த்தபின் கதவு வழியே உள்ளே செல்ல ஏதோ வழி இருக்கப்போகிறது என்று பார்த்தால், அவ்வளவுதானா அந்த மொத்த இடமுமே?
பதிலளிநீக்குபுடைவை பறக்க அவர் குதிரையில் அமர்ந்திருக்கும் சிற்பம் பார்க்க பூரிப்பாய் இருக்கிறது.
மொத்த இடமே அவ்வளவு தான். இன்னும் அதிகம் கவனம் எடுத்து பல விஷயங்களைச் செய்யலாம்! ஆனால்....
நீக்குசிற்பம் நமக்கும் ஒரு வித வீர உணர்வை உண்டுபண்ணுகிறது இல்லையா ஸ்ரீராம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நிச்சயம் காணவேண்டிய இடம் ஆகஸ்டில் அரை நாளுக்கும் கைறைவான நேரம் வாரணாசியில் இருக்கும் இந்த இடத்திற்குச் செல்ல முயல்கிறேன்.
பதிலளிநீக்குநிச்சயம் பார்க்க வேண்டிய இடம் தான்.
நீக்குஆகஸ்டில் வடக்குப் பக்கம் வருகிறீர்களா? தில்லி வருகை உண்டா நெல்லைத் தமிழன். வந்தால் தகவல் சொல்லுங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை. மன நல மருத்துவர்கள் சொல்வது இதுதான்.
பதிலளிநீக்குஜான்சி ராணி வரலாறு சொல்லும் படங்கள் அருமை.
நீங்கள் சொன்னது போல அரசாங்கம் நிறைய செய்யலாம், மக்களுக்கு அவரை பற்றி தெரிந்து கொள்ள.
காணொளி பார்த்தேன்.
மதில் மேல் ஏறி அந்த பக்கம் போகிறார். குறுக்கு பாதை போலும்.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குபதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
காணொளி - கண்டதற்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இன்றைய வாசகம் சிறப்பு ஜி.
பதிலளிநீக்குநமது நாட்டில் தியாகிகளை மக்களும் மதிப்பதில்லை, அரசும் கௌரவிப்பதில்லை இதுவொரு சாபக்கேடு.
காணொளி கண்டேன் இடம் கேட்க நாதியின்றி கிடக்கிறது.
சாபக்கேடு - சரியாகச் சொன்னீர்கள் கில்லர்ஜி. மதிப்பு, கௌரவம் இரண்டுமே இல்லை என்பது கண்கூடு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் பற்றி படித்திருக்கிறேன். இன்று அவர் பிறந்த இடமான வாரணாசியில் அவரது நினைவு சின்னம் இருப்பிடத்தை பற்றியும், அங்குள்ள சித்திர வரலாறுகளை பற்றியும் தெரிந்து கொண்டேன்.
இருப்பினும், நீங்கள் சொல்வது போல், அரசாங்கம் அவரை கௌரவிக்கும்படியாக அந்த இடத்தை இன்னமும் நன்றாக கவனித்து செய்திருக்கலாம். காணொளியும் பார்த்தேன். தங்களின் நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவும் பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வீராங்கனை ராணி லக்ஷ்மி பாய்...
பதிலளிநீக்குபள்ளியில் விரிவாகப் படித்தது - அந்த நாட்களில்..
இப்போது எப்படியோ தெரியவில்லை..
பள்ளி நாட்களில் படித்தது எனக்கும் நினைவில். இன்றைக்கு புத்தகங்களில் இந்த வரலாறு இருக்கிறதா என்று தெரியவில்லை... மாற்றங்கள் நிறைய வந்துவிட்டனவே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு வட இந்திய ஒளிபரப்பில் ஜான்சி ராணி வரலாறு தினமும் வந்தது..
பதிலளிநீக்குநம்முடைய தொ.கா.க்கள் அந்த மாதிரி எல்லாம் பிழை செய்வதில்லை..
நம் ராணுவத்தில் 'ஜான்சிராணி ரெஜிமென்ட்' என்று ஒன்று இருக்கிறது இல்லை?
நீக்குதொலைக்காட்சி தொடர் - பார்த்த நினைவில்லை. இப்போதைய தொடர்கள் எல்லாம் எப்படி யாரை கெடுக்கலாம், பழி வாங்கலாம் என்ற பாதையில் தான் பயணிக்கின்றன.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.
சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் அமைத்த இராணுவப் படையில் பெண்களுக்கான பிரிவு ராணி ஜான்சி ரெஜிமெண்ட் என்றே அழைக்கப்பட்டது என்பது தகவல். இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
மனதைத் தொட்ட வாசகம்,. ஒவ்வொருவரும் அறிந்து புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்கு