அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஆறு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு விஷயம் தெரியும் - சினிமா மீது எனக்கு இல்லாத மோகம் - சினிமா பார்க்க வேண்டும் என்ற விருப்பம் ஏனோ எனக்கு அவ்வளவாக இல்லை. எப்போதேனும், வீட்டினரோ, இல்லை நண்பர்களோ ஒரு சினிமா படம் குறித்து ஸ்லாகித்துப் பேசும்போது ”ஓ, இந்தப் படம் பார்க்கலாம் போல இருக்கிறதே, பார்த்து விடலாம்!” என்று நினைத்துக் கொண்டாலும் தலைநகர் தில்லியில் உடனே பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவு - அதுவும் திரையரங்கத்திற்குச் சென்று பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. முன்பு போல இல்லாமல், திரையரங்கத்திற்குச் சென்று மட்டுமே படங்கள் பார்க்க வேண்டிய நிலை இப்போது இல்லையே! வீட்டில் அமர்ந்தபடியே, அலைபேசியிலேயே கூட சில திரைப்படங்களை வெளிவந்த சில நாட்களிலேயே பார்த்து விட முடிகிறது! அப்படி இருந்தும் கூட நான் திரைப்படங்களை பார்ப்பது மிக மிக அரிது. சில சமயங்களில் பரிவை சே. குமார் தனது மனசு தளத்தில் அவர் பார்த்த சினிமாக்கள் குறித்து எழுதும்போது, இந்தப் படம் நன்றாக இருக்கும்போல என நினைத்து, பார்க்கலாம் என்று எண்ணினாலும் பார்ப்பது இல்லை.
ஆனாலும் சில நேரங்களில், குறிப்பாக சனி, ஞாயிறு தினங்களில், நேரம் இருக்கும்போது எப்படியாவது அதனை பயன்படுத்தியே தீர வேண்டும் என்ற நிலை வரும் சமயங்களில் ஏதேனும் ஒரு படத்தினை ஓட்டி ஓட்டி பார்ப்பதுண்டு. அல்லது படக் காட்சிகளை பார்ப்பதுண்டு. அப்படி பார்க்கும்போது இணையத்தில் வந்த ஒரு படம் “ஆரஞ்சு மிட்டாய்”. விஜய் சேதுபதியின் தயாரிப்பில், நடிப்பில் உருவான சுமார் ஒன்றரை மணி நேரம் திரைப்படம் இது! 2015-ஆம் ஆண்டே வெளிவந்ததாம் - இது குறித்து இதுவரை நான் அறிந்திருக்கவில்லை என்பதிலிருந்தே எனது சினிமா குறித்த ஞானம் உங்களுக்குப் புரிந்திருக்கலாம் 🙂பொதுவாகவே அவர் நடித்த, இல்லை இல்லை பங்கு கொண்ட படங்களில் சிலவற்றின் காட்சிகளை நான் பார்த்திருக்கிறேன் - பெரிதாக என்னை அவருடைய நடிப்பு/பங்களிப்பு ஈர்த்ததில்லை. ஒரு வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இந்தப் படத்தினை பார்க்க ஆரம்பித்தேன். ஆனாலும் மிகவும் மெதுவாகச் செல்கிறது திரைப்படம்! பார்க்க நிறையவே பொறுமை வேண்டும் - அதிலும் எங்கே செல்கிறது திரைப்படம், என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மட்டுமே முழு திரைப்படத்தினையும் பார்க்க நேர்ந்தது.
கதை என்று பார்க்கப் போனால் பெரிதாக ஒன்றுமில்லை - ஒரு சிறிய கதை முடிச்சு - தனியாக, மகனை விட்டு விலகி இருக்கும் ஒரு பெரியவர் (விஜய் சேதுபதி) - யாருமில்லாமல் வீட்டில் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறார். உடலில் சில சில பிரச்சனைகள் உண்டு. எப்போதெல்லாம் தனிமை அதிகமாக வாட்டுகிறதோ, அப்போதெல்லாம் அவசர எண் 108-க்கு அழைத்து விடுகிறார்! அவரது வீடு இருக்கும் கிராமம் வண்டிகள் செல்ல முடியாத அளவுக்கு ஒரு கிராமம். அப்படி ஒரு ஆம்புலன்ஸ் வருவதிலிருந்து ஆரம்பிக்கிறது திரைப்படம். தொடர்ந்து அவர் என்னவெல்லாம் செய்கிறார், அப்படி ஆம்புலன்ஸில் வரும் ஓட்டுநரும், அவசர சிகிச்சை தரும் உதவியாளரும் இவருடன் சேர்ந்து என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று போகிறது கதை. ஒரு சில இடங்களில் சில காட்சிகள் மென் நகை புரிய வைத்தாலும் பல காட்சிகளைத் தவிர்த்து ஒன்றரை மணி நேரத்திற்கு இழுக்காமல் அரை மணி நேரத்தில் ஒரு குறும்படமாக எடுத்து வெளியிட்டிருக்கலாம் என்று தோன்றியது. இதற்கிடையே அவசர உதவியாளர் காதல் வேறு! அவருக்கும் பெரியவருக்கும் நிறைய காட்சிகள் - முடிந்தால் படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அது எல்லாம் சரி, படத்திற்கு எதற்காக ஆரஞ்சு மிட்டாய் என்ற பெயர்? அவ்வப்போது விஜய் சேதுபதி, அவர் வைத்திருக்கும் டப்பாவிலிருந்து ஆரஞ்சு மிட்டாய் எடுத்து சாப்பிடுகிறார்! இத்தனைக்கும் அவருக்கு சர்க்கரை வியாதியாம்! அதைத் தவிர வேறு ஒரு விஷயமும் இருப்பதாகத் தெரியவில்லை! முதலிலேயே சொல்லி விடுகிறேன் - நிறைய பொறுமை இருந்தால் இந்தத் திரைப்படத்தினை நீங்களும் பார்க்கலாம்! இப்படியான படங்கள் இலக்கியத் தரம் வாய்ந்தவை என்று ஒரு சிலர் சொல்லக்கூடும் - இலக்கிய ஜல்லி 🙂 அடிக்கும் அளவுக்கு, இலக்கியத்தினை புரிந்து கொள்ளும் திறமையெல்லாம் எனக்கு இல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன் என்பதால் அப்படி எல்லாம் சொல்லப் போவதில்லை. நேரத்தினை போக்க உங்களுக்குத் தேவையிருந்தால் நீங்களும் இந்தப் படத்தினை பார்க்கலாம்! முடிந்தால் பாருங்களேன்! 🙂 படத்தினை இயக்கிய பிஜு விஸ்வநாத் அவர்களுக்கு இது முதல் படமாம்! அந்த விதத்தில் இப்படி ஒரு விஷயத்தினை படமாக எடுத்த தைரியத்தை பாராட்ட வேண்டும்! இன்னும் இது குறித்து தெரிந்து கொள்ள விரும்பினால், முடிந்தால் தமிழ் இந்து இணைய இதழில் வெளிவந்த திரை விமர்சனத்தினையும் நீங்கள் படிக்கலாம்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
27 ஆகஸ்ட் 2024
பார்க்கும் பொறுமை இல்லை. சில சமயங்களில் இலக்கியத்தரம் வாய்ந்த படங்களை விட மசாலா படங்கள் ஈர்த்து விடுகின்றன. இன்னொரு படம் கடைசி விவசாயி மகன்... அதெல்லாமும் பார்க்கும் பொறுமை இல்லை!
பதிலளிநீக்குமசாலா படங்கள் பிடித்திருப்பது சரி தான். எனக்கும் அவார்ட் படங்கள் என எடுப்பவை பிடிப்பதில்லை ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இந்தப்படம் வந்த புதிதில் வீட்டில் பார்த்திருக்கிறேன். சில பல காட்சிகள் என்னை ஈர்த்திருந்தாலும் படம் என்னைக் கவரவில்லை.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஇப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பதே இப்போதுதான் தெரிகிறது ஜி. நானும் திரைப்படம் பார்ப்பது அரிது. பரிவை சே குமார் சொல்வதை, ஸ்ரீராம் சொல்வதை, நம் உறவினர்களும் கூட சிறந்த படம் என்று சொன்னால் மட்டும் குறித்து வைத்ததுண்டு (ஆனால் அப்படி ஏமாந்த படம் விக்ரம் முதல் படம்! ) ஆனால் பார்த்தது இல்லை. மலையாளப் படங்கள் சிலவற்றில் குமார் சொல்வதில் சில குறித்து வைத்தும் பார்க்கவில்லை இதுவரை. ஓடிடி யில் இல்லை. இணையத்தில் கிடைத்தால் பார்க்கலாம் என்று. investigation, thriller என்றால் முதலில் பார்க்க விரும்புவது அதுவாகத்தான் இருக்கும். அப்ப்டி ஒன்றிரண்டு பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
குமார் சொல்லும் சில படங்கள் பார்க்கத் தோன்றும். ஆனாலும் எல்லாமும் பார்க்க முடிவதில்லை என்பதும் நிதர்சனம் தான் கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
சினிமாவுக்குப் பதில் ஏதேனும் இடம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் டக்கென்று அதைப் பற்றிக் கொண்டுகிளம்பி விடுவேன். அத்தனை விருப்பம். ஆனால் அப்படி அமைவதில்லை இப்போதெல்லாம்
பதிலளிநீக்கு//இலக்கிய ஜல்லி 🙂 அடிக்கும் அளவுக்கு, இலக்கியத்தினை புரிந்து கொள்ளும் திறமையெல்லாம் எனக்கு இல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன் என்பதால் அப்படி எல்லாம் சொல்லப் போவதில்லை.//
எனக்கும்! அதனால் இந்தப்படம் என் லிஸ்டில் சேர்க்கவில்லை. நீங்கள் சொல்லியதிலிருந்தே பெரிதாக உணர்வுபூர்வமாகக் கூட எதுவும் இல்லை என்று தெரிகிறது.
என் எதிர்பார்ப்பு இந்த வரியில்
//ஒரு சிறிய கதை முடிச்சு - தனியாக, மகனை விட்டு விலகி இருக்கும் ஒரு பெரியவர் (விஜய் சேதுபதி) - யாருமில்லாமல் வீட்டில் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறார்.//
மகனைப் பிரிந்து இருக்கும் பெரியவர் மகனுக்கும் அவருக்குமான பிணைப்பைச் சொல்லும் ஆரஞ்சுமிட்டாயாக இருக்கும் என்று நினைதால் ....ஹூம்....
கதைக்கும் தலைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
கீதா
உண்மை கீதா ஜி - பயணத்தில் இருக்கும் ஆர்வம் சினிமாவில் எனக்கும் இல்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
சிறப்பான வெளிப்படையான விமர்சனம் ஐயா. நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நாகேந்திர பாரதி ஜி.
நீக்குஅந்தப் படம் பார்க்க வேண்டும் ஐயா
பதிலளிநீக்குமுடிந்த போது பாருங்கள் கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குஎனக்கு கஞ்சி, ரசசாதம் தான் இப்போது பிடிக்கிறது.
ஆரஞ்சு மிட்டாய் படம் பார்த்தேன். பழைய நினைவுகளை நினைத்துப்பார்ப்பது பெரியவர்களுக்கு பிடிக்கும் அதற்கு ஆரஞ்சு மிட்டாய் ஒரு சிம்பாலிக் என்று நினைக்கிறேன், சர்க்கரை நோயாளிகள் கையில் இனிப்பு வைத்து கொள்ள வேண்டும் என்பார்கள் இனிப்பு குறையும் அபாய கட்டத்தில் இனிப்பை சுவைக்கலாம். அவருக்கு பிடித்த ஆரஞ்சு மிட்டாய் வைத்து இருக்கிறார்.
பேச்சு துணைக்கு தவிக்கும் முதியவர்கள் மன நிலையை சொல்கிறது படம்.
இப்போது உள்ள முதியவர் இல்லை போலும், இப்போது உள்ள முதியவர்கள் முதியவர்களாக காட்சி அளிப்பது இல்லை, பலவித பொழுது போக்கில் தனிமையை விரட்டி வாழ்ந்து வருகிறார்கள். இது 70 ம் வருடம் வந்து இருக்க வேண்டிய கதை.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குசினிமா பார்த்த அனுபவப் பதிவின் மீதான தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.
திரைப்பட விமர்சனம் நன்றாக உள்ளது. இந்த பெயரில் திரைப்படம் வந்ததே தெரியாது. எல்லா படங்களும் எல்லோருக்கும் பிடித்தமானவையாக அமையாது. சில படங்கள் சிலருக்குப் பிடிக்கலாம். பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தால் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.