சனி, 10 ஆகஸ்ட், 2024

காஃபி வித் கிட்டு - 197 - ஃபெவிக்விக் - முட்டாளாக இரு - 28 ரூபாய் கேமரா - சுண்டல் - உன்னை அல்லால் - கன்கல்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட சாரநாத் - சில தகவல்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : ஃபெவிக்விக்…



ஒரு சில விளம்பரங்கள் மனதைத் தொடும் விதத்தில் இருக்கும் என்றால், சில விளம்பரங்கள் ரசிக்கும் விதமாக, அதிலும் விளம்பரத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் நடிப்பினால் ரசிக்கும் விதத்தில் இருக்கும். இந்த ஃபெவிக்விக் விளம்பரம் அப்படி ஒன்று.  இதில் கபாடிவாலியாக வரும் மூதாட்டி நடிப்பில் அசத்துகிறார்! பாருங்களேன்.


மேலே இருக்கும் காணொளியை பார்ப்பதில் சிரமம் இருந்தால் இந்தச் சுட்டி வழியாகவும் பார்க்கலாம்!


******


இந்த வாரத்தின் ரசித்த துணுக்கு : முட்டாளாக இரு…


இந்த வாரத்தில் படித்து ரசித்த ஒரு நீதிக்கதை - உங்கள் ரசனைக்காக!



மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது. மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். முதலாமவர் மதத் தலைவர், இரண்டாமவர் வழக்கறிஞர், மூன்றாமவர் இயற்பியலாளர்.


முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 'கடைசியாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என் வினவப்பட்டது.  ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார். மேடை இழுக்கப்பட்டது, மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! ”ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான்” என்றனர். மதத்தலைவர் தப்பிவிட்டார்.


அடுத்ததாக வழக்கறிஞர் அழைத்துவரப்பட்டார். அவரிடமும் அதே கேள்வி - அதற்கு அவர், 'நீதி! நீதி! நீதியே வெல்லும்' என்றார்.  மேடை இழுக்கப்பட்டது, வழக்கறிஞரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! நீதி அவரை காப்பாற்றிவிட்டது. என்றனர்.  வழக்கறிஞரும் தப்பிவிட்டார்.


அடுத்ததாக இயற்பியலாளர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 'கடைசியாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என வினவப்பட்டது. அதற்கு அவர், “எனக்கு ஆண்டவன் பற்றியும் தெரியாது, நீதி பற்றியும் தெரியாது. ஆனால் அங்கே தூக்கு மேடை கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கிறது. அதனால்தான் கயிறு கழுத்தை பதம் பார்க்கவில்லை என்பது எனக்குத் தெரியும்' என்றார்.  உடனே தூக்குமேடையை பரிசீலித்தனர். அங்கே கோளாறு இருந்தது. அதனை சரி செய்தனர். பின்னர் இயற்பியலாளர் தூக்கில் ஏற்றப்பட்டு தலையும் துண்டிக்கப்பட்டது. 


நீதி:-  👉 சில சந்தர்ப்பங்களில் வாய் மூடி இருக்க பழகிக்கொள்! தெரிந்த உண்மைகளையெல்லாம் உளறி கொட்டுவதால் அது உன் கழுத்துக்கே ஆபத்தாகலாம்! சிலவேளை முட்டாளாக இருப்பதுதான்

புத்திசாலித்தனமானது! ✨


******


பழைய நினைப்புடா பேராண்டி : 28 ரூபாய்க்கு காமெரா....


2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - 28 ரூபாய்க்கு காமெரா.... - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


தலைப்பு பார்த்து ஓடோடி வந்தீங்களா?  ஆமாங்க 28 ரூபாய்க்கும் 29 ரூபாய்க்கும் புகைப்படக் கருவி கிடைச்சதுங்க! இப்ப இல்லை....  ஐம்பது அல்லது 60 வருடங்களுக்கு முன்னர் கிடைச்சதுங்க! 


சில மாதங்களுக்கு முன்னர் விளம்பரங்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும், மூக்குத்தூள் - தொடரும் அன்றைய விளம்பரங்கள்.... எனும் தலைப்பிலும்  வெளியிட்ட சில விளம்பரங்களின் தொடர்ச்சியாக இந்த பகுதியில் 1957-ஆம் ஆண்டின் கல்கி தீபாவளி மலரில் வெளிவந்த சில விளம்பரங்கள் பொக்கிஷப் பகிர்வாக.....


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!


******


இந்த வாரத்தின் அறிமுகம் : சுண்டல்


முகநூலில் நானும் இருக்கிறேன் என்ற பெயர் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். எப்போதேனும் சில பதிவுகள் படிப்பதுண்டு. மத்யமர் குழுவில் அப்படி ஒருவரின் பதிவு சமீபத்தில் படிக்கக் கிடைத்தது.  ஸ்ரீனிவாசன் கோபாலகிருஷ்ணன் என்று ஒருவர் அட்டகாசமாக எழுதுகிறார்.  அவரது இற்றைகளுக்கு அவரே படமும் வரைந்து சேர்க்கிறார்.  அப்படி படித்த ஒரு இற்றை கீழே, அவரது கைவண்ணத்தில் உருவான ஓவியத்துடன்!


கொள்ளிடம் கருப்பு கடலை சுண்டல்: 



ஐம்பது அறுபதுகளில் தமிழ்நாடு ரயில் நிலையங்கள் பல அதன் தின்பண்டங்களுக்காக பிரசித்தி பெற்றதாக இருந்தன. உதாரணமாக மணப்பாறை  முறுக்கு, பேரளம் மசால் வடை. இந்த பட்டியலில் கொள்ளிடம் சுண்டலுக்கு தனி இடம் இருந்தது.  வெட்டிவேர் வெள்ளரி பிஞ்சு கூடுதல் பொருட்கள். காவேரியின் பிரிவான கொள்ளிடம் ஆற்று கரையில் அமைந்துள்ள இந்த சின்ன ரயில்வே ஸ்டேஷனில் எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட எல்லா ரயில் வண்டிகளும் நிற்கும்.


கொள்ளிடம் பாலம்  சிதம்பரம் சீர்காழி மார்க்கத்தின் இணைப்பு. இன்று பழைய பாலத்தின் அழகு போய் புதிய பாலம் வந்து விட்டது. தெற்கிலிருந்து வரும் ரயில்கள் இந்த ஸ்டேஷனில் நின்று விட்டு தான் பாலத்தை தாண்டும். மூச்சு இறைக்க வந்த  ஸ்டீம் என்ஜின் தன் தாகத்தை காவேரி நீரால் தணிக்க ஒரு இருபது நிமிடம் இங்கே நிற்கும். பயணிகள் ஏறுவதோ இறங்குவதோ அரிது. அப்போது கார்ட் பெட்டியின் அருகே குள்ளமான உருவம் ஒன்று பெரிய அலுமினியம் தாம்பாளத்தை உயர்த்தி பிடித்தவாறு ஃப்ளாட் பார்மில் என்ஜின் திசையில் புறப்படும்.


அவர் தான் சுப்புடு ஐயர் ( கற்பனை பெயர்). மந்தார இலையில் கட்டப்பட்ட அருமையான கருப்பு கடலை சுண்டல் பொட்டலங்கள் சுமார் எழுபத்தைந்து அதில் இருக்கும். கடுகு தாளித்து தேங்காய் பற்கள் போட்டு செய்யப்பட்ட அது அவர் நடந்து வரும் போதே கமகம என்று வாசனை அடிக்கும். ஃப்ளாட் பார்ம் மிக தாழ்வாகவும் இவர் குள்ளமாக இருந்ததாலும் தட்டை உயர பிடித்தவாறு ஒவ்வொரு கம்பார்ட்மென்ட் முன்னே நிற்பார். ஒரு அணா ஒரு பொட்டலம். அநேகமாக எல்லா பயணிகளும் இதை வாங்குவார்கள். தேவையான பொட்டலங்களை எடுத்து கொண்டு சில்லறையை தட்டில் போட்டு விடுவார்கள். மீதம் சில்லறை வரவேண்டியிருந்தால் தட்டிலிருந்து எடுத்து கொள்வார்கள். இதில் யாரும் ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை. 


இது போல் அவர் ஏழெட்டு பெட்டிகள் முன் நின்று விட்டு என்ஜின் பக்கம் போகும்போது இருப்பது நிமிடங்கள் ஆகிவிடும்.என்ஜின் குழுவிற்கு ஐந்து பொட்டலமும் கார்டுக்கு இரண்டு பொட்டலமும் இலவசம். பெரும்பாலும் எல்லா சுண்டலும் விற்று போய்விடும். அதன் பிறகு தான் பச்சை கொடி காட்டப்பட்டு என்ஜினும் விசிலடித்து ரயில் புறப்படும். ஒரு நாளில் பகலில் எட்டு வண்டிகள் வந்து போகும். அத்தனைக்கும் இந்த சுண்டல் சேவை உண்டு. இந்த வருவாயில் படித்து பெரிய அரசாங்க வேலையில் இருந்த பிள்ளைகள் அழைத்தும் தனக்கு வாழ்வளித்த தொழிலை கடைசிவரை  விடாமல் இருந்தார் சப்புடு அவர்கள். 


அந்த காலம் ஓய்ந்து விட்டாலும் நினைவு மட்டும் ஓயவில்லை.


******


இந்த வாரத்தின் ரசித்த பாடல் :  உன்னை அல்லால்…



சமீபத்தில் கேட்டு ரசித்த ஒரு பாடல் - இராமானுஜர் என்கிற திரைப்படத்திற்காக இளையராஜா அவர்களின் இசையில், குரலில் வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது.  எனக்கு பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடித்திருக்கலாம் - கீழே உள்ள சுட்டி வழி யூட்யூபில் கேட்டுப் பாருங்களேன்…


Sri ramanujar movie song || unnai alaal enge selvean.. #sriramanujar #ilaiyaraja #vaali #newsong (youtube.com)


******


இந்த வாரத்தின் தகவல் :  கன்கல் (Kankhal), ஹரித்வார்



ஹரித்வார் பலரும் அறிந்த இடம் தான். ஆனால் ஹரித்வார் நகரின் அருகிலேயே கன்கல் என்று ஒரு இடம் உண்டு. அங்கே தான் சிவபெருமானின் மாமனாரும், சதி (பார்வதி) தேவியின் தந்தையுமான தக்ஷன் இருந்ததாக இந்த ஊர் குறித்த தகவல்கள் சொல்கின்றன.  இப்போதும் வட இந்தியாவில் இந்த ஊர் ”ஷிவ்ஜி கீ சசுரால் (சசுரால் - மாமனார் வீடு)” என்று வழங்கப்படுகிறது.  இங்கே தக்ஷ மஹாதேவ் மந்திர் என்கிற கோயிலும் உண்டு.  அது தவிர பதீசா என்று இங்கே சொல்லப்படும் சோன்பாப்டி மிகவும் பிரபலம்.  அடுத்த முறை ஹரித்வார் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கங்கல் சென்று வரவேண்டும் என்பதோடு பதீசாவும் உண்டு வரவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்!  🙂ஏதோ நம்மால் முடிந்தது!


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

10 ஆகஸ்ட் 2024


24 கருத்துகள்:

  1. தூக்குத் தண்டனை.... உண்மை எப்போதுமே பிரச்சனைகளைக் கொண்டுவரும்.

    கங்கலில் தரிசனம் முக்கியமா பதீசா முக்கியமா என யோசிக்கவைத்தது.

    பாசஞ்சர் இரயில் நிலையங்கள்... ஶ்ரீரங்கம் பூரி மசால், கோவில்பட்டி கடலைமிட்டாய், கடம்பூர் போளி.... எனப் பல பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் ருசி மாத்திரம் மறைந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. சுவாரஸ்ய கதம்பம்.  இளையராஜா பாடலை ரசித்தேன்.  விளம்பரம் மிகச்சிறிது, அவ்வளவு கவரவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். விளம்பரம் - சிறியதே என்றாலும் சொல்ல வந்த விஷயத்தினை ஸ்வாரஸ்யமாகச் சொல்லி இருப்பதால் எனக்கு பிடித்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. இன்றைய கதம்பம் சிறப்பாக இருக்கிறது

    //சிலவேளை முட்டாளாக இருப்பதுதான் புத்திசாலித்தனமானது//

    உண்மை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. என்னுடைய முதல் கேமரா அக்ஃபா க்ளிக் 3. 1968இல் 40 ரூபாய்க்கு வாங்கியது. orwo 22 உபயோகித்தேன்.பின்னர் orwo 27 கிடைத்தது. அது தான் எப்போதும். இந்த கமெராக்கள் பிளாஸ்டிக் லென்ஸ் உப்யோகித்தவை. ஆகையால் ஷார்ப்னஸ் குறைவு.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் முதல் கேமரா - அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. நீதிக்கதை உண்மையிலேயே பல நேரங்களில் சில உண்மைகள் - ஆபத்து விளைவிக்கும் சில உண்மைகளைச் சொல்லாமல் இருப்பது நல்லது. என்பதை நன்றாக விளக்கிய கதை. அவருக்கே ஆபத்தாக விளைந்தது.

    ஃபெவிக்விக் விளம்பரம் அவ்வளவுதானோ?

    கொள்ளிடம் கருப்புக் கடலை சுண்டல் பகுதியும் சுவை.

    இந்தவாரத் தகவலும் நன்று,

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைகள் பல நேரங்களில் ஆபத்தை விளைவிப்பவை - ஆமாம்.

      விளம்பரம் - அவ்வளவு தான்.

      மற்ற பகுதிகளுக்கான உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. வாசகம் சூப்பர், ஜி

    விளம்பரத்தை விட பாட்டி சூப்பர்!!! அவர் காதணி காலணி எல்லாமே ஃபெவிக்குவிக்கால் ஒட்டப்பட்டவையோ.?

    முட்டாளாக இரு - மிகவும் சரியே வாயை கமுக்குனு வைச்சிருந்திருக்கலாம் அந்த இயற்பியலாளர். நுழலும் தன் வாயால் கெடும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      விளம்பரம் - ஆமாம். ஃபெவிக்குவிக் கொண்டு ஒட்டப்பட்ட பொருட்களையே அவர் வைத்திருக்கிறார் - கண்ணாடி உட்பட!

      முட்டாளாக இருப்பது பல நேரங்களில் நன்மை பயக்கக்கூடியதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. ஹே!!! இன்று என் கருத்தை ப்ளாகர் தடுக்கலை பெரிசுன்னு!!!

    கேமரா 28 ரூ ஆஹா! இப்ப 28k ஆகுது சும்மா இணையத்தில் கேமரா பற்றி மேஞ்சப்ப. அதுக்கு என் மகன் சொன்னான் மொபைல்லயே நல்ல கேமரா வருதே. எதுக்கு கேமரா தனியா வேணுமானு யோசிப்போம்னு. இருந்தாலும் எனக்கு கேமரா மேல் ரொம்பவே காதல். என்னதான் மொபைல் கேமரா வந்தாலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ளாக்கர் - சில தளங்களில் இப்படி ஒன்றிரண்டு வரிகள் வரும்படியே வருகிறது - சில சமயங்களில் மட்டும்! துளசி டீச்சர் பதிவில் ஒன்றிரண்டு முறை இப்படி எனக்கும் வந்தது கீதா ஜி.

      கேமரா - இப்போது அலைபேசிகளிலேயே நல்ல காமிரா வந்துவிட்டது உண்மையே! இரண்டு இரண்டு எடுத்துப் போக வேண்டிய அவசியம் இல்லை என்பதும் ஒரு விதத்தில் வசதியே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. சாத்தூர் வெள்ளரிப் பிஞ்சு, கோயில்பட்டி கடலைமிட்டாய், திருநெல்வேலி அல்வா, திருனெல்வேலி ரயிலில் போளி, ம்ம்ம்ம் நிறைய சாப்பிட்டு ருசித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.

    நாகர்கோவிலில் மீனாட்சிபுரம் சாலையில் ஒரு முடுக்கில் கடலைமிட்டாய் பெரிய தகர டின் சதுர ட்ரேயில் கொட்டி மேலே கொஞ்சம் அரிசி மாவு தூவி வைத்து கட் செய்வாங்க பாருங்க ஃப்ரெஷ்ஷா வாங்கியதுண்டு.

    அது போல எங்க ஊர் நுங்கு சர்பெத் ஆஹா!

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி ஊருக்கென்று இருந்த சில விஷயங்கள் ரசனையானவையே கீதா ஜி. நானும் இப்படி சிலவற்றை சுவைத்திருக்கிறேன். சமீபத்தில் கோயில்பட்டி கடலைமிட்டாய் சுவைத்தேன்.

      நுங்கு சர்பத் - திருவனந்தபுரத்தில் ருசித்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. இளையாராஜா அவர்களின் குரலில் இந்தப் பாடல் கேட்டிருக்கிறேன்.

    கன்கல் பற்றி தகவல் சூப்பர். நோட் செய்து கொண்டுவிட்டேன்!!!

    பதிசா சாப்பிட்டுருக்கிறேன் சூப்பரா இருக்கும் ஆனால் அது கன்கல் ஊர் தயாரிப்பு இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளையராஜாவின் குரலில் இந்தப் பாடல் - எனக்கும் பிடித்திருந்தது கீதா ஜி.

      கன்கல் - செல்ல வேண்டும் என எண்ணம் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. இன்று பதிவில் அனைத்தையும் ரசித்தேன். வாசகம் அருமை. விளம்பர காணொளி அடிக்கடி பார்த்து வியந்த பாட்டி.

    முட்டாளாக இருப்பது சில நேரங்களில் நல்லது.
    இளையராஜா பாடல் மிக அருமை .

    இந்த வாரத்தின் அறிமுகம் : சுண்டல்

    படித்தேன், படம் அருமை. இப்போதும் மாயவரம் ரயிலில் போகும் போது கொள்ளிடம் பக்கம் சுண்டல் தூக்குகளில் கொண்டு வந்து விற்பார்கள்.மாயவர ரயில் நிலையத்தில் குட்டி ஆமவடை, தவளை வடை உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. இளையராஜா குரலில் ராமானுஜர் பாடல் இனிமை!

    1957-ல் நான் பொறக்கல. பொறந்திருந்தா 28 ரூபாய்க்கு ஒரு கேமெரா வாங்கி தெரிஞ்சவங்களை எல்லாம் முகத்த காமிரா, முகத்த காமிரா ன்னு சொல்லி படம் புடிச்சிருப்பேன்.

    சுப்புடு ஐயரின் சுண்டல் வியாபாரம் அமோகம். இப்போதைய ஹைவே மோட்டல்களின் ஓட்டுநர் நடத்துனர்களுக்கு இலவச பிரியாணிக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இவர் தானோ! வரை ஓவியம் அருமை! (ஒரு சந்தேகம். கறுப்பா! கருப்பா! எங்க ஊர் தொல்காப்பியர் கறுப்பு ன்னு சொல்கிறாராம்)

    ('காஃபி வித் கிட்டு' என்பதை 'காஃபி வித் சிட்டு' ன்னு படிச்சிட்டேன். வயசாகுல்லா.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா பத்மநாபன் அண்ணாச்சி - கலக்கறீங்க! உங்கள் பதிவு தான் இங்கே பகிர முடியாமல் இருக்கிறது. ஏதேனும் எழுதி அனுப்புங்க!

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. காஃபி வித் சிட்டு - அது சரி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. சுப்புடு ஐயர் மனதில் நிற்கிறார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்து கண்டு மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....