வியாழன், 15 ஆகஸ்ட், 2024

கதம்பம் - எங்கே இருக்கிறது மனிதம் - அக்னி சாட்சி

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட காசி தமிழ் சங்கமம் - விருந்தினர்களுடன் ஒரு பயணம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******




பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

*******

எங்கே இருக்கிறது மனிதம் - 30 ஜூலை 2024:


சமீபகாலங்களில் நாம் செய்திகளில் வாசிக்கும் அல்லது கேட்கும் விஷயங்களை பார்க்கும் போது மனிதத்தன்மை என்பது நம்மிடையே எங்கே இருக்கிறது என்ற கேள்வி வலுவாக எழுகிறது! இன்று காலையில் பண்பலையில் நான் கேட்ட ஒரு விஷயம் தான் என்னை இந்தப் பதிவை எழுத வைத்தது!


திருச்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியொன்றில் நேற்று மாணவர்களிடையே நடந்த அ*டி*த*டி ச*ண்*டை*யின் போது சமரசம் செய்ய வந்த ஆசிரியரை அ*ரி*வா*ளால் சரமாரியாக காயப்படுத்தியுள்ளனர்! அந்த ஆசிரியர் இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்!


இந்தச் செய்தியை கேட்டது முதல் மனம் பதைபதைக்கிறது! நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்? பாடம் சொல்லிக் கொடுக்கும் குருவுக்கே இந்த நிலைமை என்றால் என்ன சொல்வது? இப்போதைய பள்ளி மாணவர்களின் மனப்பாங்கு தான் என்ன? புத்தகங்களைச் சுமந்து வருவதற்கு பதிலாக இவர்கள் என்ன ஏந்தி வந்திருக்கிறார்கள்?


இப்போது வருகின்ற திரைப்படங்களில் கூட அ*டி*யும் ச*ண்*டை*யும் தான் மொத்த கதையே என்பது போல மாறிவருகிறது! ஒன்றிரண்டு சண்டைக்காட்சிகளும், காதல், நகைச்சுவை என்று கலவையாக நாம் பார்த்து ரசித்த திரைப்படங்கள் என்பது வழக்கொழிந்து இப்போதைய கலாச்சாரம் என்பது வெறும் மோதல் மட்டும் தானா?? 


பெரியவர்களுக்கு மதிப்பளிப்பது, அவர்களின் சொல்லை ஏற்று நடப்பது, ஆசிரியருக்கு உண்டான மரியாதையைத் தருவது, அவர் சொல்லுக்கு கட்டுப்படுவது, ஊருடன் ஒத்து வாழ்வது, சக மனிதர்களுடன் சகஜமாக பழகுவது போன்றவை எல்லாம் இப்போது அகராதியிலிருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளா??


தனக்கு பிடித்த நடிகர்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு அவர் பின்பற்றும் ஸ்டைலையும், உடையையும் பார்த்து அதை பின்பற்றி வளரும் இளைஞர் சமுதாயம் இது! இன்று மட்டுமல்ல காலம் காலமாகவும் இப்படித்தான்! 


அப்படிப்பட்ட நடிகர்கள் இனிமேலாவது மனிதத்தன்மையை வளர்க்கும் விதமாக இருக்கும் கதைகளில் நடித்தால் அதைப் பார்க்கும் இளைய தலைமுறையினரின் மனநிலையும்  மாறக்கூடும்! 


*******


அக்னி சாட்சி - 31 ஜூலை 2024:



அன்றாடம் மதியநேரத்தில் ஏதேனும் ஒரு திரைப்படத்தை தேர்ந்தெடுத்து  பார்த்து வருவதாக முன்பே சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்! நான் பார்ப்பது எல்லாமே 80களிலும் 90களிலும் வெளிவந்த திரைப்படங்கள்! அப்படி இன்று நான் பார்த்த திரைப்படம் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த அக்னி சாட்சி! 


பாலசந்தர் சாரின் இயக்கத்தில் சிவகுமார், சரிதா இவர்களின் நடிப்பில் இந்தத் திரைப்படம் வெளிவந்துள்ளது! இதுவரை இதில் இடம்பெறும் ‘கனா காணும் கண்கள் மெல்ல’ என்ற பாடல் மட்டும் தான் பார்த்திருக்கிறேன், அம்மாடி கண்ணம்மா என்ற பாடலை வானொலியில் கேட்டும் இருக்கிறேன்!


உன் நிஜத்தை நேசிக்கிறேன்!

உன் நிழலையோ பூஜிக்கிறேன்!


அதனால் தான் உன் நிழல் விழுந்த நிலத்தின் மண்ணைக் கூட என் நெற்றியில் நீறு போல் திருநீறு போல் இட்டுக் கொள்கிறேன்!


நாட்டிய நாடகங்களை தயாரிக்கும் ஹீரோ சிவக்குமாருக்கும் சரிதாவுக்கும் இடையே மலரும் காதல்! அதன் பிறகான திருமண வாழ்வு என்று கதை நகர்கிறது! நிழலையும் நிஜத்தையும் வித்தியாசம் பார்க்கத் தடுமாறும் கதாப்பாத்திரமாக, தீமை நிகழ்வதைக் கண்டால் பதறித் துடிக்கும் பெண்ணான சரிதாவால் அந்தக் குடும்பத்தில் தொடர்ந்து நிகழும் சம்பவங்கள் தான் மீதிக்கதை! 


பற்கள் கொண்ட சீப்புகள் கடிப்பதில்லை!

பற்கள் இல்லாத செருப்புகள் கடிக்கின்றன!


இந்தப் படத்தில் ஹீரோயின் சரிதா கூறும் புதுக்கவிதைகள் அனைத்தும் கவிஞர் வாலி அவர்களின் ‘பொய்க்கால் குதிரைகள்’ என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன!


இந்தப் படத்தை பார்த்த போது சிவக்குமார் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘பத்ரகாளி’யும் நினைவுக்கு வந்தது! ஏறக்குறைய கதையும் இதே ரகம் தான்! வாய்ப்புக் கிடைத்தால் இந்த இரு திரைப்படங்களையும் பாருங்களேன்!


*******


இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


11 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    கதம்பம் அருமை. நட்புகள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    இப்போதுள்ள படங்கள் ஆரம்பமே பார்க்க சகிக்கவில்லையென்பது உண்மைதான். நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

    நானும் நல்ல கதையம்சம் உள்ள பழைய கால படங்களை விரும்பி பார்ப்பேன். பத்ரகாளி படம் பார்த்திருக்கிறேன். தாங்கள் தந்த தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. இன்றைய வாசகம் சிந்தனை என் மற்றும் என் மகனின் மனதை அப்படியே பிரதிபலிக்கிறது.

    இப்போது வருகின்ற திரைப்படங்களில் கூட அ*டி*யும் ச*ண்*டை*யும் தான் மொத்த கதையே என்பது போல மாறிவருகிறது! //

    உண்மை, ஆதி. சமூகத்தின் மனநிலை ரொம்பவே மாறி வருகிறது. வரம்பை மீறிய யுட்யூப் சானல்கள் மீடியா தாக்கம் என்றும் பல சொல்லலாம். Mass media வால் Mass/Media psychology பாதிப்படைவது உண்மை. அவர்களை அறியாமலேயே இதில் சிக்குபவர்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. பொதுவெளியில் இருக்கும் பிரபலங்கள் மிகவும் பொறுப்புடையவர்களாக இருக்க வேண்டும், அதுவும் தன் பின்னில் பெரிய கூட்டமே அதுவும் இளைய சமுதாயக் கூட்டமே இருக்கு என்பதை மனதில் கொள்ளும் பொறுப்புணர்ச்சி வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அக்னிசாட்சி - படம் சமூக அலவலங்களினால் மனம் கொஞ்சம் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் கதை உளவியல் ரீதியாக மிக அழகாகச் சொல்லியிருப்பார் இயக்குநர் கே பாலச்சந்தர். சரிதா சொல்லும் வரிகள் - கவிஞர் வாலியின் வரிகள் - அனைத்தும் நச். படம் எப்போதோ பார்த்தது முழு படமும் பார்த்த நினைவில்லை. சரிதாவின் நடிப்பு அசாத்தியம்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இன்றைய கதம்பம் சிறப்பாக உள்ளது.

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. பழையபடங்களில் எல்லாம் எம் ஜி ஆர் சிகரெட் குடிக்கமாட்டார். அப்படியான சீன் வந்தாலும் சிறிதாகக் காட்டுவதுதான். குடிப்பது போல் நடிப்பார். அப்படி எல்லாம் நாயகர்கள் இப்போது இல்லை. வன்முறைதான் இயற்கையாக என்று சொல்லி வன்முறைதான் காட்டுகிறார்கள் குழந்தைகலை பாதிக்கத்தான் செய்கிறது. போதாதற்கு போதைக்கு அடிமை. போதை என்று சொல்லும் போது கஞ்சா என்று சொல்வதையும் விட ஏராளமான போதை உள்ள எம் டி ஏ போன்றவற்றை பழக்கிக் கொண்டுவிட்டால் மனிதனின் சித்தம் சிதறிப் போகும் தான்,

    83ல் இறங்கிய படம் அக்னிசாட்சி நல்ல ஒரு படம் அதில் சொல்லப்படும் புதுக்கவிதைகள் நீங்கள் சொல்லியிருபப்து போல் வாலியின் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. புதுமையான கருத்துள்ள புதுமையான படம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  8. /// பெரியவர்களுக்கு மதிப்பளிப்பது, அவர்களின் சொல்லை ஏற்று நடப்பது, ஆசிரியருக்கு உண்டான மரியாதையைத் தருவது, அவர் சொல்லுக்கு கட்டுப்படுவது, ஊருடன் ஒத்து வாழ்வது, சக மனிதர்களுடன் சகஜமாக பழகுவது போன்றவை எல்லாம் இப்போது அகராதியிலிருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளா??///

    அப்படித்தான் ஆகி விட்டது..

    என்றைக்கு சிறு குடும்பம் என்று குடும்ப நலத் திட்டத்தைக் கொண்டு வந்து உறவு முறை களை சிதைத்தார்களோ அன்றைக்கே எல்லாம் மாறி விட்ட்ன...

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
    இளைய சமுதாயம் பள்ளியில் நடந்து கொண்டது படித்து கவலை அளிக்கிறது.
    நீங்கள் பார்த்த இரு படங்களும் நானும் பார்த்து இருக்கிறேன்.
    நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. இந்தக் கால மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி போதைக்கு கலாச்சாரத்தால் சீரழிந்து கொண்டிருக்கின்றனர்.  காலம்தான் காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. அக்னிசாட்சியில் அந்தப் பாடல் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.  நீங்கள் வேறு பத்ரகாளியை நினைவு படுத்தி கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடலையும் நினைவு படுத்தி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....